கோகுலம் காலனி

கோகுலம் காலனி-1

அந்தக் காலனி நகரை விட்டு கொஞ்சம் தள்ளி அமைந்திருந்த்து . அதில் முப்பது வீடுகள் வரை இருக்கும் .எல்லாமே தனித்தனி வீடுகள் .அங்கே இருப்பவர்கள் பெரும்பாலும்  நடுத்தரவர்க்கத்தினர் . அங்கே ஒற்றை படுக்கையறை கொண்ட எளிய வீடுகளும் உண்டு .இரட்டை படுக்கையறை கொண்ட சற்று பெரிய வீடுகளும் உண்டு .மூன்று , நான்கென படுக்கையறைகளை கொண்ட சற்று பெரிய பங்களாத்தனமான ஒன்றிரண்டு வீடுகளும் உண்டு .

அந்த ஒரிருவரை தவிர மற்ற அனைவரும் நடுத்தரவர்க்கத்தினரே . அநேகமாக எல்லோர் வீடுகளிலும் ஸ்கூட்டியும் , பைக்கும் , சைக்கிள்களுமே . எப்போதாவது அந்தக் காலனியில்  கண்ணில் படும் கார்கள் சில . அவை குறிப்பிட்ட இரண்டு வீடுகளை சேர்ந்தவை .அப்பர் மிடில்க்ளாஸ் எனும் வகையை சேர்ந்த வீடுகள் அவை .

பொதுவாக பார்க்க போனால் அந்தக் காலனியில் வேலைக்கு செல்பவர்கள் , தொழில் செய்பவர்கள் என பலவகையினர் இருந்தாலும் அனைவரின் வாழ்க்கை தரமும் நடுத்தரமாகவே இருந்த்து . அவரவரின் வாழ்வியல் முறையை தாண்டி அவர்கள் அனைவருக்குமிடையே மெல்லியதாய் ஒரு நட்புணர்வுடன் கூடிய பாசம் இழையோடியபடி இருந்த்து .

சிறிய வீடோ பெரிய வீடோ அனைவரும்   தங்கள் வீட்டை சுற்றி ஒரு குட்டித் தோட்டம் வடிவமைத்து வைத்திருந்தனர் .காய்கறி , பூச்செடிகள் முதல் மாமரம் , கொய்யாமரம் , தென்னை என தங்களுக்கு இருக்கும் இடத்தில் முடிந்தளவு தாவரங்களை நட்டு வைத்து அழகாக பராமரித்து வந்தனர் .காலனியின் நான்கு தெருக்களிலும் அவரவர் வீட்டின் முன்பு எனக் கணக்கிட்டு வேப்பமரம் , அசோக மரம் , அரசமரம் , போன்ற மரங்களை ஒரு ஒழுங்கோடு வரிசையாக வைத்து அந்த காலனியை ஒரு சோலை போல் மாற்றி வைத்திருந்தனர் .

இது போன்ற பராமரிப்புகளால் அந்தக் காலனி வசதி வாய்ந்தவர்கள் குடியிருக்கும் , பங்களாக்கள் நிறைந்திருக்கும் இடம் போல் தோற்றமளித்துக் கொண்டிருந்த்து .இத்தனை அழகான அந்தக் காலனிக்கு ” கோகுலம் காலனி ” என்ற பெயர் மிகப் பொருத்தமாகவே இருந்தது .

கோகுலம்  காலனியில் ஒரு வீட்டில் …

” டேய் முரளி ஏன்டா பாதியிலேயே எழுந்து போகிறாய் …? ” செண்பகம் கத்தினாள் .




” ம்மா ப்ரெண்ட் வெயிட் பண்ணிட்டு இருக்கான்மா .நீங்க சுட்டு வச்சிடுங்க .மீதியை வந்து சாப்பிடுறேன் …” அம்மா சுட்டு வைத்த  பஜ்ஜியை தள்ளி விட்டு எழுந்து கை கழுவி விட்டு அவசரமாக சட்டையை மாட்டிக் கொண்டிருந்த முரளிதரன் மாநிறமாக களையான முகத்துடன் இருந்தான் . இரண்டு  வருடம் முன்பே  கல்லூரியை முடித்து விட்டு இப்போது வரை வேலை தேடும் படலத்தில் இருந்தான் .

அவர்கள் வீட்டின் முன்னாலும் , பின்னாலும்  மட்டும் கொஞ்சம் இடம் விட்டு காம்பவுண்ட் சுவர் எழுப்பியருந்தார்கள் .  அந்த இடங்களில் எல்லா வகை தாவரங்களும் இருந்தன .வீட்டு வாசல் முன்பு அடர்ந்திருந்த வேப்ப மரத்தடியில் நின்ற சைக்கிளையும் , டி.வி.எஸ் பிபடியையும் பார்த்துவிட்டு எதை எடுத்து போவது என்ற யோசனையில் ஒரு நிமிடம் நின்றவன் , பிறகு எதுவும் வேண்டாமென முடிவெடுத்து நடந்தே போகத் தொடங்கினான் .

” முரளி டீக்கடைக்கு வர்றியா …? ” அவனைக் கடந்து போன சைக்கிளில் இருந்த கோபி கால்களை கீழே ஊன்றி நின்று கேட்டான் .அவனுக்கும் முரளி வயதுதான் . அதே காலனியை சேர்ந்தவன்தான் . அந்தக் காலனி பசங்க எல்லோரும் இது போன்ற மாலை நேரங்களில் காலனி ஆரம்பத்தில் இருக்கும்  டீக்கடை ஒன்றில் கூடி அரட்டை அடித்தபடியே டீ குடிப்பது வழக்கம் .

” இல்லைடா .நான் கோவிலுக்கு போகிறேன் .அரை மணி நேரம் கழித்து வருகிறேன் ” கோபியை அனுப்பி விட்டு முரளி போன கோவில் அதே காலனியில் இரண்டாவது தெருவில் இருந்த்து .அது கிருஷ்ணர் கோவில் .நமது காலனி பெயருக்கு ஏற்றவாறு ஒரு கிருஷ்ணர் கோவில் வேண்டுமென முடிவெடுத்து அந!தக் காலனிவாசிகளே தங்களுக்குள் பணம் வசூல் செய்து சிறியதான அந்தக் கோவிலை கட்டிக் கொண்டிருந்தனர் .

கோவிலுக்குள் நுழையும் முன்பு குனிந்து படியை தொட்டு தலையில் ஒற்றிக் கொண்டு உள்ளே நுழைந்தான் முரளி .அங்கொன்றும் இங்கொன்றுமாக மிக்க் குறைந்த ஆட்களே இருந்தனர் .அறிமுகமானவர்களுக்கு தலையசைத்து விட்டு நேராக மூலஸ்தானம் போய் குழலூதி நின்ற கண்ணனையும் , அவனுடன் காதலாய் பிணைந்து நின்ற ராதையையும் வணங்கி விட்டு , மெல்ல கோவிலை வலம் வரத் துவங்கினான் முரளி .

கோவிலின் பின்பக்கம் துளிசிசெடி புதர் போல் அடர்ந்திருந்த இடத்தருகே அவன் போன போது , அவனது தோள்களில் பலமாக ஒரு அடி விழுந்த்து .” டேய் முரளி எப்படி இருக்கிறாய் …? ” 

திரும்பி பார்த்து முதலில் புரியாமல் முகம் சுளித்து பிறகு யோசித்து அடையாளம் தெரிந்து  மலர்ந்தான் முரளி . ” டேய் நந்தா நீயா …? எப்போடா ஊரிலிருந்து வந்தாய் ?  எப்படி இருக்கிறாய் ..? ” 

” இன்னைக்கு காலையில்தான்டா வந்தேன் . உன்னை பார்க்க வரலாமென்று நினைத்துக் கொண்டிருந்தேன் .நீயே எதிரே வந்துவிட்டாய் .சாமி கும்பிட்டாயிற்றா …? போகலாமா …? ” 

” இங்கே கொஞ்ச நேரம் உட்காரலாமென்று நினைத்தேன் .எங்கே கூப்பிடுகிறாயடா …? ” 

” நம்ம டீக் கடைக்குத்தான் .வாடா .நம்ம காலனி ப்ரெண்ட்சை மீட் பண்ணி ரொம்ப நாளாச்சு …” 

” நீ முன்னால் போடா .ஐந்தே நிமிடத்தில் நான் பின்னாலேயே வருகிறேன் …” 

” நோ .இப்பவே வர்ற .வாடா … ” முரளியின் கையை பிடித்து இழுத்து போய் தன் பைக்கில் ஏற்றினான் அவன் .

” ஹாய் ப்ரெண்ட்ஸ் .எல்லோரும் எப்படி இருக்கீங்க ? ” 

” ஏய் யார்டா இது …? ” 

” என்னடா தெரியலையா …? நம்ம நந்தகுமார்டா ” 

” நந்தாவா இது …? அடையாளமே தெரியலைடா ..? ” 




” எப்படி மாறிட்டான்டா …? ” 

” நான் மாறலை ப்ரெண்ட்ஸ் .அப்படியேதான் இருக்கிறேன் .நல்லா செக் பண்ணிக்கோங்க ” வேடிக்கையாக இரு கைகளையும் விரித்து நின்று தன்னை சுற்றி சுற்றி காட்டிய நந்தகுமார் ஆறடி உயரத்தில் , உயரத்திற்கேற்ற பருமனுடன் , சிவந்த நிறத்துடன் , அலை பாயும் அடர்ந்த கேசத்துடன் உடனேயே ஒரு புது தமிழ் படத்தில் ஹீரோவாக ஒப்பந்தம் செய்து விடலாமென்ற நிச்சய தோற்றத்துடன் இருந்தான் .

” படித்து முடித்த கையோடு எங்கேடா ஓடிப் போனாய் ? ” 

” அப்பா கூப்பிட்டார்டா .மலேசியா போனேன் . அங்கே அவரோடு இருந்து கொஞ்ச நாட்கள் பிசினஸ் கற்றுக் கொண்டு இங்கே வந்திருக்கிறேன் ” 

நந்தகுமாரனின் அப்பா மலேசியாவில் இருக்கிறார் .அவர் அங்கிருந்து நிறைய பணம்  சம்பாதித்து அனுப்புவார் .அதனை இங்கே நந்தகுமாரும் அவனது அம்மா சுந்தராம்பாளும் சேர்த்து வைத்து நகைகள் ,வீடு , வாசலென்று மாற்றி வசதியாக இருந்தனர் .நந்தகுமார் அவர்களுக்கு ஒரே பையன் .செலவு வைக்க பெண்ணொருத்தி இல்லாத்ததால் சேமித்த பணம் முழுவதும் கட்டு மேல் கட்டாக சேர்ந்து ஒரு வசதியான மேல் தட்டு வாழ்வை நந்தகுமார் விட்டினருக்கு கொடுத்திருந்த்து .

” நந்தா  மலேசியாவில் எதுவும் படத்தில்ஹீரோவாக  நடித்தாயா …? ” 

” ஏன்டா அப்படி கேட்கிறாய்…? ” 

” அப்படியே சினிமா ஹீரோ போலவே இருக்கிறாய்டா .எப்படிடா இப்படி அழகாக மாறினாய் …? ” 

ஒல்லியாய் ஒட்டடை குச்சி போல்உடலும் ,  வளர்ந்தும் வளராத மீசையோடு , பழுப்பு நிறத்தோடும் எந்நேரமும் பரபரவென கண்களை சுற்றிக் கொண்டிருக்கும் தங்கள் பழைய நண்பனா இவன் …என்ற சந்தேகம் அங்கிருந்த அனைவருக்குமே இருந்த்து .

” கொஞ்சம் சதை போட்டிருக்கேன்டா .அவ்வளவுதான் ….” சொன்னபடி நந்தகுமார் அவனது பாக்கெட்டிலிருந்து எடுத்து பற்ற வைத்த சிகரெட்டை பார்த்து நண்பர்களின் கண்கள் விரிந்தன .

” பாரின் சிகரெட்டுடா …” 

” என்னா ஸ்மெல் பார்த்தியா …? ” ஆளாளுக்கு கிசுகிசுக்க நந்தகுமார் சிகரெட் பாக்கெட்டை அவர்களிடம் நீட்டினான் .” எடுத்துக்கோங்கடா ” 

ஆளாளுக்கு அடித்து பிடித்து சிகரெட்டை உருவினர் .

” டேய் நந்தா இது என்ன பைக்குடா …? சூப்பரா இருக்கே …” டீக்கடை வாசலில் நிறுத்தியிருந்த பைக்கை பார்த்து ஒருவன் கேட்க , நந்தகுமாருடன் எல்லோர் பார்வையும் பைக்கின் மேல் திரும்ப , அதே நேரத்தில் புயல் வேகத்தில் வந்த சைக்கிள் ஒன்று அந்த பைக் மேல் மோதியது .

சைடு ஸ்டேன்ட் போடப்பட்டு சரியாக நிறுத்தப்பட்டிராத நந்தகுமாரின் பைக் அப்படியே சரிந்த்து .சைக்கிளில் மேல் வந்தவள் கால்களை இரு பக்கமும் ஊன்றி தன்னையும் , சைக்கிளையும் நிலை நிறுத்திக் கொள்ள , நந்தகுமாரின் பைக் பக்கத்திலிருந்த சரிவில் பரிதாபமாக சாய்ந்து கிடந்த்து .

” ஏய் யார் அது …? கண்ணை பிடதியில் வைத்திருக்கிறாயா …? ” கத்தியபடி வாசலுக்கு வந்த நந்தகுமார் அந்த சைக்கிள் பெண்ணை கோபமாக பார்த்தான் .அவளோ அவனை பயமாக பார்த்தாள் .

அவள் முகத்தை பார்த்ததும் நந்தகுமாரின் கை பேன்ட் பாக்கெட்டிறகுள் நுழைந்த்து .உள்ளிருந்த பட்டை சாக்லேட்டை மென்மையாக வருடியது .




What’s your Reaction?
+1
20
+1
10
+1
2
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!