Serial Stories கோகுலம் காலனி

கோகுலம் காலனி-2

2

” அம்மா இன்னைக்கு நான் காலேஜிலிருந்து வரும் போது …டீக்கடையில….” ஒரு மாதிரி ராகம் போல் இழுத்து பேசியபடி தன்னை ஓரக் கண்ணால் பார்த்த தங்கை ராகவியை கழுத்தை நெரித்து கொல்லலாம் போன்ற வெறி முரளிக்கு ஏற்பட்டது .

சை பொண்ணா இவ …சரியான ராட்ச்சி . இவளைப் போய் பாவம்டாங்கிறானே அந்த நந்தா …? அவனுக்கு இவளை பத்தி தெரியாது .இவளும்தான் ஆகட்டும் இன்னைக்கு அவன் முன்னாடி எவ்வளவு பவ்யமா நின்னா …? வியர்த்து வழிஞ்சு மூஞ்சியெல்லாம் வெளுத்து கூடப் போச்சே .அப்படியே பயந்து நடுங்கிறவ மாதிரியில்ல நின்னுட்டிருந்தா …அந்த நந்தாவும் உன் தங்கச்சிதானேடா …பாவம் …பயந்துட்டாங்க .பார்த்து பத்திரமா வீட்டுக்கு கூட்டிப் போடாங்கிறான் . பத்தாதற்கு பாக்கெட்ல இருந்து சாகலேட் வேற எடுத்து நீட்டுறான் .

சுவீட் சாப்பிட்டா ஷாக் குறையும்டான்னு அடவைஸ் வேற ….  இதே வேறு யாராவது இப்படி அவன் பைக்கை இடிச்சு தள்ளியிருந்தால் அவுங்களை கிழிச்சு தொங்க விட்டிருப்பானே ….ஏதோ என்னை பார்த்து இவளை விட்டிருக்கிறான் ..சற்று முன் நடந்த டீக்கடை சம்பவத்தை நினைத்தபடி தங்கையை முறைத்தான் முரளி .

” ஏய் வாயை மூடுடி ” 

” முடியாது ” திட்டவட்டமாக அறிவித்தவள் ” அம்மா அண்ணன் இன்னைக்கு அவன் ப்ரெண்ட்ஸோட சேர்ந்து …” என மீண்டும் ஆரம்பித்து விட்டு உச்சந்தலையில் மிக அழுத்தமான கொட்டு ஒன்றை வாங்கினாள் .

ஒரு கணம் மூளை கலங்கியதோ என்ற சந்தேகத்தில் விழுந்து பின் எழுந்து …தெளிந்து தன் உச்சந்தலையை தடவி பார்த்து ” விண் ” என்ற வலியை உணர்ந்து ” அம்மா ” என்று அலறினாள் .

” இந்த வெட்டிப்பய இன்னைக்கு டீக்கடையில் உட்காரந்து …” மேலே பேசும் முன் அவள் வாயை அழுத்தமாக பொத்தினான் முரளி .முடிந்தால் அப்படியே கையை கொஞ்சம் நகர்த்தி தங்கையின் மூக்கையும் சேர்த்து பொத்தி அவள் மூச்சை நிறுத்தும் ஐடியாவும் அவனுக்கிருந்த்து .

” டேய்  என்னடா பண்ற …? பொம்பளை பிள்ளைகிட்ட உன் வீரத்தை காட்டுற …? கையை எடுடா …” செண்பகம் கத்தியபடி உள்ளருந்து வந்து முரளியின் முதுகில் ஒன்று போட்டாள் .அவன் சுரீரென்ற முதுகை பிடித்தபடி ஆ என நெளிய , அவனிடமிருந்து விடுபட்ட தன் வாயை சந்தோசமாக திறந்தாள் ராகவி .

” அம்மா சாயந்தரம் நான் காலேஜிலிருந்து வரும் போது உங்க மகன் டீக்கடையில் கெட்ட பசங்க கூடெல்லாம் சேர்ந்துக்கிட்டு ….” 

” அம்மா இன்னைக்கு இந்த ராட்சஷி அவள் சைக்கிளை  கொண்டு வந்து எதிர்த்த வீட்டுக்காரன் பைக் மேலே ஏற்றி பைக்கை கவிழ்த்தி விட்டுட்டாம்மா …” தங்கையை இடை மறித்து தான் முந்திக் கொண்டான் .

” என்னது எதிர்த்த வீட்டுக்காரன் மேலேயா …? ஏய் ராகவி என்னடி செய்தாய் …? அவர்களுக்கும் நமக்கும் ஆகாதே …அவனிடம் ஏன் வம்பிழுத்தாய் ? ” 

செண்பகத்தின் கவனம் முழுக்க மகள் மீது திரும்பி விட , ராகவி விழித்தாள் .டீக்கடையில் நண்பர்களுடன் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த அண்ணனை தாயிடம் மாட்டி விடும் எண்ணம் அவளுக்கு .ஆனால் நிமிடத்தில் அண்ணன் அம்பை தன் பக்கம் திருப்பி விட்டு விட,  இடுப்பில் பதிந்த கைகளுடன் தன் முன் காளி போசில் நிற்கும் அன்னையை பரிதாபமாக பார்த்தாள் .

அடிப்பாவி கொஞ்ச நேரம் முன்னாடி மூஞ்சு பூராவும் விசம் வழிந்த்து .இப்போது பால் அதுவும் சுத்தமான பசும் பால் வடியுது பாரேன் .எப்படித்தான் இப்படி மூஞ்சியை மாத்திக்கிறாளோ …முரளி மனப் புலம்பலுடன் தன் தாயை பார்க்க  , அவனது கணிப்பு போன்றே மகளின் பசும்பால் வடிந்த பரிதாப முகம் தாயை அசைத்துக் கொண்டிருந்த்து .செண்பகத்தின் இடுப்பை தாங்கியிருந்த கைகள் மெல்ல கீழே இறங்கி விட , அவள் காளியிலிருந்து அம்பிகையாக மாறியிருந்தாள் .

அழாதே என் தங்கமே …என்று செண்பகம்,  கண்ணாம்பாளாகி கண்ணீரும் , கம்பலையுமாக  கணீர் குரலில் வசனம் பேசி தன் மகளை தேற்றும் காட்சியமைப்பு நடக்கும் முன்பு முரளி சுதாரித்துக் கொண்டான் .

” அம்மா நம்ம ராகவிக்கு என்னம்மா தெரியும் ..? அவள் பாவம் சின்னப்பொண்ணு .அந்த நந்தகுமார்தான்மா அவன் பைக்கை ஓரமாக நிறுத்தாமல் ரோட்டு மேலே நிறுத்தியிருந்தான் .அதனால்தான் நம் ராகவி அதனை தெரியாமல் லேசாக இடித்து விட்டாள் ….” 

தங்கையின் மேல் தாய்க்கு வரும் அனுதாப அலையை முரளி விரும்பாததால் , தான் ஆரம்பித்த பிரச்சனையை தானே முடிக்க நினைத்தான் .

” ஓஹோ …ரோட்டில் வண்டியை நிறுத்திட்டு மகாராசா ராஜ்ய பரிபாலனம் செய்து கொண்டிருந்தாராக்கும் …அவன் என் மகளை என்னடா சொன்னான் …? ஏதாவது சண்டை போட்டானா …? மறைக்காமல் சொல்லுங்கடா .அப்படி ஏதாவது செய்திருந்தானால் இன்னைக்கு அவனுக்கு இருக்கு …” புடவை முந்தானையை விரல்களில் முறுக்கியபடி செண்பகம் குட்டி சபதமொன்றை எடுக்க ,முழு சந்திரமுகியாக செண்பகம் மாறும் முன்பு முரளி மீண்டும் இடையிட்டான

இப்படியே விட்டால் செண்பகம் நேராக எதிர் வீட்டிற்குள் காலில் சலங்கை இல்லாமலேயே சல் சல் என மோகினியின் அதிர்வுடன்   நுழைந்து , சுந்தராம்பாளின் கழுத்தை என்றால் கழுத்தையே பிடித்திருப்பாள் .

அதெப்படியடி உன் மகன் என் மகள் மோதுவதற்கென பைக்கை ரோட்டில் நிறுத்தி வைப்பான் …? 




உன் மகள் குருட்டு கழுதையா …? அத்தனை பெரிய வண்டி கண்ணில் படாதா …? நேராக வந்து வண்டி மேலேயே மோதியிருக்கிறாளென்றால் , வேண்டுமென்றே தானே செய்திருக்கிறாள் …? சுந்தராம்பாளின் கையும் வெகு வலிவாக செண்பகத்தின் கழுத்திலேயேதான் பதிந்திருக்கும் .

ஒரு காலத்தில் இரு வீட்டு  பிள்ளைகளும்  சிறுவர்களாக இருந்த போது , எதிர் எதிர் வீட்டுக்கார்ர்களான சுந்தராம்பாளும் , செண்பகமும் நெருங்கிய தோழிகளாகவே இருந்தனர் .சுந்தராம்பாளின் கணவர் நாகராஜனுக்கு மலேசியாவில் வேலை கிடைத்து அவர் அங்கே சென்று மனைவி , மகனுக்கு கணிசமான தொகையை மாதா மாதம் அனுப்ப ஆரம்பிக்கவும் , கணவனின் உழைப்பை சுந்தராம்பாள் கட்டுக்கோப்பாக சேமித்து , திட்டமிட்டு செலவழிக்க ஆரம்பிக்கவும் , படிப்படியாக அவர்கள் பொருளாதாரம் உயர ஆரம்பிக்கவும், ஏதோ ஓர் இனம் புரியாத விரிசல் தோழிகளுக்கடையே உண்டாக ஆரம்பித்தது .

அது சிறிது சிறிதாக வளர்ந்து எதிர் எதிர் வீட்டில் வசித்தாலும், எதிர்படும் போதெல்லாம்  ஒருவருக்கொருவர் முகம் திருப்பி கொள்ளும் அளவு ஒரு வகை விரோதம் இருவருக்குமடையே வளர்ந்திருந்த்து .முன்பு நண்பர்களாக பழகி வந்த முரளியும் , நந்தகுமாரனும் கூட பெற்றவர்கள் பார்க்க தங்கள்  நட்பை தவிர்த்து விட்டனர் .

மூன்று வருடங்களாக அப்பாவுடன் மலேசியா போய் விட்ட நந்தகுமாரன் இப்போது திரும்பி வந்த்தும் முரளியிடம் இயல்பாக பேச ஆரம்பித்திருந்தான் .

” சே …சே .நம்ம செல்லக்குட்டி கூட சண்டை போடுற தைரியம் அவனுக்கு இருக்குதா என்ன …? என்னையும் நம்ம செல்லக்குட்டியையும் பார்த்த நொடியே , அவனே சாரி கேட்டுட்டான்மா .தெரியாமல் பைக்கை ரோட்டில் நிறுத்தி வைச்சுட்டேன்னு மன்னிப்பே கேட்டான்னா பாருங்களேன் …” 

மகனின் விவரித்தலில்  திருப்தியான செண்பகம் அள்ளிச் சொருகியருந்த முன் கொசுவ புடவ்வயை இறக்கி விட்டு ” ம் .எப்போதும் நம் குடும்பத்து மேல அந்தக் குடும்பத்துக்கு ஒரு பயம் இருக்கனும் …” திருபதியுடன் அடுப்படிக்குள் போக , ” உப் ” என பெருமூச்சு விட்டான் முரளி . அதே நொடியில் திரும்பி தங்கையின் கையை முறுக்கி முதுகில் ஒன்று வைத்தான் .

” ஏய் பிசாசே ஏன்டி என்னை அம்மாகிட்ட மாட்டி விட பார்த்த …? ” 

” நீ தப்பு செய்தாய்டா .நான் அதை சொல்லக்கூடாதா …? இன்னைக்கு அப்பா வரட்டும் .அவர்கிட்ட நீ சிகரெட் பிடித்ததை சொல்றேன்  .மகனே நீ இன்னைக்கு தொலைந்தாய்டா …” சீரியல் வில்லிகள் ரேஞ்சுக்கு புருவம் நெரித்து கண்கள் உருட்டி கை சொடுக்கி வஞ்சம் சொன்னாள் .

முரளி விழித்தான் .ஐய்யய்யோ அப்புறம் அப்பா ஒவ்வொரு ஐந்து ருபாய்  நாணயத்திற்கும் கணக்கு கேட்க ஆரம்பித்து விடுவாரே …அப்படி துல்லியமாக கணக்கு காட்ட அவனால் முடியுமா …? தன் இயலாமையை உணர்ந்த முரளி தங்கையை திரும்பி பார்த்தான் .குரலை பஞ்சுப் பொதிக்குள் பொதித்துக் கொண்டான் .

” ராகா குட்டி …நீ என் செல்லம்ல . இதையெல்லாமா அப்பாகிட்ட சொல்வாய் …? சீச்சி வேண்டாம்டா .நான் …உன் அண்ணன் அந்த மாதிரி தப்பெல்லாம் செய்வேனா …? இது அந்த நந்தா பயல் செய்த வேலைடா .அவன்தான் ஏதோ பாரின் சிகரெட்டுன்னு சொல்லி வேண்டாம் வேண்டாங்க வாயில் வச்சு பத்தவும் வச்சிட்டான்டா ….” 

” ம் …அப்படியா …? ” இருக்கலாமோ என்ற யோசனையுடன் நாடியில் ஆட்காட்டி விரல் வைத்து சற்றே தலை சாய்த்து யோசித்த தங்கையின் அழகு தோற்றம் அண்ணனிடம் பாசப் புன்னகையை கொண்டு வந்த்து .தங்கையின் க்யூட் பாவத்தில் அண்ணனாக  அவளை கொஞ்சும் ஆவல் வர , அவள் முகத்தை தன் கையில் ஏந்தியவன் …

” ஆமடா செல்லம் .கெட்ட பையன் நான் இல்லை .அவன்தான்டா .ரொம்ப மோசமானவன் ” 

” யார் முரளி அந்த கெட்டவன் , மோசமானவன் …? ” கேட்ட குரலில் அண்ணன் , தங்கை இருவரும் அலறினர் .ஏனெனில் கேள்வி கேட்டபடி அவர்கள் வீட்டு ஹாலில் நின்றவன் அந்த கெட்ட பையனேதான் .

இவன் ஏன் …எப்படி இங்கே வந்தான் …? முரளி திருதிருக்க , ராகவி துள்ளி எழுந்து சோபாவிற்கு பின்னால் போயிருந்தாள் .அப்படியே குனிந்து இந்த சோபாவிற்கு பின்னால் உட்கார்ந்து மறைந்து கொள்ளலாமா என்று குனிந்து பார்த்தபடியிருந்தாள் .

நந்தகுமார் நிதானமாக ராகவி எழுந்த இடத்தில் வந்து உட்கார்ந்து கொண்டான் . ராகவியின் தேடலை ஓரக் கண்ணிலும் , முரளியின் தவிப்பை நேர் கண்ணிலும் பார்த்தான் …




What’s your Reaction?
+1
26
+1
17
+1
0
+1
3
+1
2
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!