Serial Stories கோகுலம் காலனி

கோகுலம் காலனி-21

21

” இல்லை .ரேகா அவள் வீட்டிற்கு வரவில்லை .டார்ஜிலிங் போய்விட்டாள் ” நந்தகுமார் சொல்ல ராகவி அதிர்ந்தாள்.

” என்ன நிஜம்மாகவா …? ” 

” ஆமாம் அன்று அவள் தோழியுடன் போய் தங்கத்தான் அங்கிருந்து கிளம்பினாள் . இதோ இந்த வாரம் அநேகமாக நேற்றோ …இன்றோ என நினைக்கிறேன் அங்கே .வேலையில் சேர்ந்திருப்பாள் …” 

” சொந்தங்களை எல்லாம் விட்டு விட்டு….    ஏன் நந்தா அவள் இப்படி ஒரு முடிவெடுத்தாள் …?” 

” அவளை வேறு என்ன செய்ய சொல்கிறாய் …? இத்தனைக்கும் பிறகு உன் அண்ணனை பார்த்துக் கொண்டு இதே காலனியில் அவளால் இருக்க முடியுமா …? ” 

” இது அவளுக்கு பெரிய கஷ்டம்தான் .ஒரு பெண்ணாக அவளை நினைத்தால் எனக்கு பரிதாபமாக இருக்கிறது .அண்ணன் மேல் கோபம் வருகிறது . இதிலிருந்து அவள் மீண்டு வருவது கடினமென்று தோன்றுகிறது ” 

” இல்லை ராகவி அவள் தைரியமான பெண் . விரைவில் மீண்டு விடுவாள்  ” 

” அன்று அவளிடம் என்ன பேசினீர்கள் .. ? ” 

” அது எதற்கு உனக்கு .முடிந்த விசயம் .விடு …” 

ராகவிக்கு கோபம் வந்தது .ஒரு வாரமாக இவன் இப்படித்தான் பட்டும் படாமல் இருக்கிறான் .இதோ உன் அண்ணனை கொணர்ந்து சேர்த்து விட்டேன் .இனி உனக்கும் எனக்கும் சம்பந்தமில்லை . தள்ளி நில் …என்பது போல் . 

அவனை அப்படி விட ராகவி தயாராக இல்லை .அவளுக்கு அவனிடம் தெரிந்து கொள்ள நிறைய விசயங்கள் இருந்தன .அதெப்படி அவள் கேட்டு ஒன்றை அவன் விடு என மறுக்கலாம் …?

” அப்படியெல்லாம் விட முடியாது .எனக்கு நிச்சயமாக தெரிந்தாக வேண்டும் .சொல்லுங்கள் அன்று அவளிடம் என்ன பேசினீர்கள் ? ” 

” உனக்கு உன் அண்ணனை ரேகா எதனால் பிரிந்தாள்  எனத் தெரிவது முக்கியமா …? அவள் என்னுடன் என்ன பேசினாள் எனத் தெரிவது முக்கியமா ? ” 

நந்தகுமாரின் கேள்வியில் ராகவி திகைத்தாள் .” எனக்கு இரண்டும்தான் முக்கியம் .நீங்கள் பேசியதால்தான் ரேகா அண்ணனை பிரிந்தாளென்று நினைக்கிறேன் . அதனால்தான் கேட்கிறேன் …” நீ இப்போது சொல்லியே ஆக வேண்டுமென உறுதி காட்டி நின்றாள் .

” உன் அண்ணனின் இந்த முடிவை ரேகா ஓரளவு எதிர்பார்த்தே இருந்தாளென்றே நினைக்கிறேன் .ரேகாவின் சின்ன வயதிலேயே அப்பா தவறிவிட்டார் .அவள் வீட்டில் தாத்தா , மாமா , அப்பா , சித்தப்பா என எந்த ஆணும் கிடையாது .பாட்டி , அம்மா எனும் பெண்களிடையினிலேயே வளர்ந்தவள் .பெண் அழைத்தால் ஆண் பின்னாலேயே வந்து விடுவான் எனும் தீவிர நம்பிக்கையுடையவள் . முரளியை பார்த்ததும் பிடித்து விட , அவனை அப்படியே ஆண்களற்ற தங்கள் குடும்பத்திற்கென தூக்கி சென்று விட நினைத்தாள் .ஆனால் போகப் போக முரளி அப்படி குடும்பத்தை விட்டு உடனே ஒரு பெண் பின்னால் வருபவன் கிடையாது என தெரிந்து கொண்டாள் .” 

” தன் முடிவு தவறோ என அவள் உணர ஆரம்பிக்கும் போது முரளியும் அவளும் பழக ஆரம்பித்து பல மாதங்கள் ஆகி விட்டிருந்த்து .இப்போது தனக்கேற்றாற் போல் முரளியை மாற்றிக் கொள்ளலாம் எனத் தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டு தொடர்ந்து முரளியுடன் காதலை தொடர்ந்தாள் .முரளிக்கென வேலை அமைவது தள்ளிப் போய் கொண்டிருக்க அதனால் பலவீனமடைந்திருந்த மனதை தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு , அவனை ஊரை விட்டே போக சம்மதிக்க வைத்துவிட்டாள் .” 




” சீச்சீ எவ்வளவு மோசமான பெண்ணிவள் ? ” ராகவி வெறுப்பை உமிழ ” ம்ஹூம் …” என நந்தகுமார் அவளைக் கண்டித்தான் .

” தப்பு ராகவி .அப்படி படாரென ஒரு பெண்ணை தவறாக பேசி விடக் கூடாது .இதில் ரேகாவின் தவறென்ன இருக்கிறது ..?என்னைக் கேட்டால் அவள் மிகச் சரியான வழியில் போய் கொண்டிருந்தாள் என்பேன் ” 

” விருப்பமில்லாதவனை கூட இழுத்துக் கொண்டு ஊரை விட்டு ஓடுவதுதான் சரியான வழியா …? ” 

” ராகவி என்னைப் பொறுத்த வரை இந்த திருமணம் நின்றதில் நன்மை அடைந்தவர்கள் உன் அண்ணனோ , உன் குடும்பமோ இல்லை .ரேகாதான் பெரிய நன்மை அடைந்தவள் .முரளி அவளுக்கேற்ற துணை கிடையாது .அவள் சிங்கம் போல் தலை நிமிர்ந்து சபையில் நடக்கும் பெண் .அவளது துணையையும் அதே போல் நிமிர்த்தி விடுவாள் .ஆனால் உன் அண்ணன் அப்படி கிடையாது .அவன் நானே தலை நிமிர்ந்து கொள்வேன் என அடம்பிடிக்கும் பேர்வழி .இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டிருந்தார்களானால் இரண்டே மாதங்களில் விவாகரத்து என கோர்ட்டில் வந்து நின்றிருப்பார்கள் …” 

” இது அந்த கிரேட் ரேகாவிற்கு தெரியாதா …? ” ராகவியின் குரலில் எரிச்சல் . இவன் எதற்கு அவளுக்கே சப்போர்ட் செய்கிறான் ..? 

” தெரிந்துதான் இருக்கும் . அவள் கொஞ்சமே கொஞ்சம் தவறான கணிப்பொன்று எடுத்து விட்டாள் .முரளியை கொஞ்ச நாட்களுக்கு அவனது குடும்பத்தை விட்டு பிரித்து தூரமாக கூட்டிப் போய்விட்டால் , அவன் அவளுடன் ஒன்றி விடுவான்  என தப்புக் கணக்கு போட்டு விட்டாள் . அதனால்தான் வீட்டில் சொல்லாமல் வா எனும் நிபந்தனை வைத்தாள் .அவர்கள் திருமணம் செய்து கொள்ள இருந்த இரண்டு நாட்களுக்கு முன்பே திருமண வேலைகள் அது இதுவென சொல்லி அவளருகிலேயே அவனை கூப்பிட்டு வைத்துக் கொண்டு  அவனுக்கு நான் உன் குடும்பமெனும் உணர்வை உண்டாக்க முயன்றாள் . ஆனால் அவளது இத்தனை முயற்சிகளும் நீ முரளி முன்னால் வந்து நின்ற ஒரு நிமிடத்திலேயே தூள் தூளாகிவிட்டது .” 

” அன்று ரூமுக்குள் நீங்கள் இருவரும் என்ன பேசினீர்கள் ..? ” ராகவியின் பார்வை தீவிரமாக அவன் மீது விழுந்து அடமாய் நின்றது .

” தவறாக எதுவும் பேசியிருப்பேனென நினைக்கிறாயா…? ஏன் அதையே திரும்ப திரும்ப கேட்கிறாய் ..? ” 

” இல்லையில்லை அப்படி நினைக்கவில்லை .எனக்கு தெரிய வேண்டும் அவ்வளவுதான் ” ராகவி சமாளிப்பு போல் சொன்னாலும் அதுதான் உண்மை .பூட்டிய அறைக்குள் நந்தகுமார் ஒரு பெண்ணுடன் பேசுகிறான் .அது சரியான பேச்சாக  இருந்தாலுமே அந்த விபரம் முழுவதும் அவளுக்கு தெரிந்தேயாக வேண்டும் .

” குழப்பத்தில் இருந்த ரேகாவிற்கு நான் அவளை உணர்த்தினேன் . முரளி அவளுக்கேற்ற துணையில்லையென எடுத்து சொன்னேன் .இதை விட நல்ல வாழ்வு அவளுக்கு வருமென காத்திருக்க சொன்னேன் . சமாதானமாக பிரிந்து விட வலியுறுத்தினேன் .பொதுவாக ஆண்களை விட பெண்களே தைரியசாலிகள் ராகவி .ஆனால் நம் சமுதாயம்தான்  அவர்களை வீக்கர் செக்ஸ் என்று சொல்லி சொல்லி அடக்கி வைத்திருக்கிறது . இயல்பாகவே தன்னுள்ள போராளியான ரேகாவின் மறைந்து கிடக்கும் இயல்பை உகந்த வார்த்தைகளால் தூண்டி விட்டேன் .அவள் நிமிர்ந்து விட்டாள் .போடா என உன் அண்ணனை ஒதுக்கி விட்டு வெளியேறி விட்டாள் ” 

இவன் எத்தனை பெரிய காரியம் செய்திருக்கிறான் …? இயல்பிலேயே வேகமான குணமுடைய ரேகாவை லேசாக  தூண்டி விட்டிருந்தாலே அவள் என்னை ஏமாற்றினான் அது இதுவென போலீஸ் வரை போய் அவர்கள் குடும்பத்தையே நடுத்தெருவிற்கு இழுத்து விடக் கூடிய அபாயம் இருந்திருந்திருக்கிறது .இருபது நிமிட தனிமை பேச்சில் அதனை மாற்றி , அவளையும் தன் நிமிர செய்து அனுப்பி விட்டானே …

ராகவியின் கண்கள் நந்தகுமாரின் முகத்தை விட்டு நகரவில்லை .இமைக்கவும் இல்லை .அந்த பார்வையைக் கண்டு நந்தகுமார் புருவம் உயர்த்தினான் .

” என்ன …? ” 

” உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் . எப்படி சொல்ல என்றுதான் …” ராகவியின் இதழ்கள் நடுங்கின .

” எனக்கு நன்றியெல்லாம் சொல்வாயா நீ …? ” மெல்ல நடந்து அவளருகே வந்து கொண்டிருந்த நந்தகுமாரை நெஞ்சம் படபடக்க பார்த்தாள் .




” எங்களுக்காக நிறைய செய்திருக்கிறீர்கள் .அதற்காக …” 

” அதற்காக …” மிக அருகே வந்து விட்டவனை அண்ணாந்து பார்த்தாள் .

” ந …நன்றி …” இதழ் நடுங்க சொல்லி முடித்தாள் .

நந்தகுமாரின் ஒற்றை விரல் நீண்டு அவள் இதழ்களை மெல்ல வருடியது .” பயப்படாதே ராகா .ஒன்றும் செய்யமாட்டேன் ” 

ஆசுவாசமாகவோ …ஆறுதலாகவோ ராகவியின் விழிகள் மூடிக்கொள்ள அவளது இமையோரம் தேங்கி நின்றன இரு நீர் முத்துக்கள் .சுதாரித்து கன்னம் துடைத்து அவள் நிமிரந்த போது , நந்தகுமார் தூரமாக தள்ளி நின்றிருந்தான் .

” உனகங்கான விளக்கங்கள் எல்லாமே கொடுத்துவிட்டேன் . நீ போகலாம் ராகவி .” கையசைத்தான் .ஏதோ ஒன்றை விட்டுப் போகும் உணர்வுடன் ராகவி திரும்பி திரும்பி பார்த்தபடி நடந்தாள் .

முரளி வீட்டை விட்டு போனதில் ஒரு நல்ல விசயமும் நடந்திருந்த்து. அது சுந்தராம்பாளும் , செண்பகமும் திரும்பவும் பழையபடி தோழிகள் ஆகி விட்டிருந்த்து.

இன்னார் இங்கே எனும் பேதமில்லாமல் யாருடைய வீட்டிலும் , யாரேனும் சொந்த வீடு போல் சமையல் முதல் மற்ற வேலைகளை இழுத்துப் போட்டு பார்த்துக் கொண்டு , இருபத்தியிரண்டு வருடங்களுக்கு முன் எப்படி நட்பாக இருந்தார்களோ அப்படி இருந்தார்கள் .காலனியே அவர்களது புதிப்பிக்கப்பட்ட நட்பை பார்த்து மூக்கில் விரல் வைத்துக் கொண்டிருந்தது .

” நந்தன் குடும்பத்தோடு போய் மலேசியாவில் செட்டில் ஆகி விடுவோமென்று சொல்லிக் கொண்டிருக்கிறான் செண்பா …” சுந்தராம்பாள் சொல்லிக் கொண்டிருந்ததை கேட்டு ராகவிக்கு திக்கென்றது .

” ஏன் சுந்தரி …ஏன் அப்படி சொல்கிறான் …? ” செண்பகமும் பதறினாள் .

” தெரியவில்லை .முதலில் இங்கேதான் தொழில் தொடங்க போவதாக சொன்னான் .திடீரென்று இப்படி சொல்கிறான் .ம்ம்ம்…நான் என்னென்னவோ நினைத்தேன் …” பெருமூச்சு விட்ட சுந்தராம்பாளின் பார்வை தன் மீது படிவதை ராகவி உணர்ந்தாள் .

” நானும் சொல்லிப் பார்த்துவிட்டேன் .கேட்க மாட்டேனெனகிறான் …” சலித்தபடி வந்தான் முரளி .

” ம் .எங்கள் வீட்டில் அவன் எடுத்ததுதான் முடிவு .சொந்த , பந்த, நட்புக்களை எல்லாம் விட்டு விட்டு கண் காணாத தேசத்தில் போய் கஷ்டப்பட வேண்டுமென்பது எங்கள் தலையெழுத்து போல …” சுந்தராம்பாள் வருந்த , ராகவிக்கு கோபம் வந்தது .அவள் நந்தகுமாரனிடம் பேச முடிவெடுத்தாள் .




What’s your Reaction?
+1
23
+1
13
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!