Serial Stories கோகுலம் காலனி

கோகுலம் காலனி-10

10

” அந்த செடி …இந்த கொடின்னு வாங்கிட்டு வந்து வரிசையாக அடுக்க மட்டும் தெரியுது .அதை என்ன ஏதுன்னு பார்க்கிறது கிடையாது …அந்த வேலையும் என் தலையில் .காலையில் எந்திரிச்சு தண்ணியாவது ஊற்றலாமே …” 

செண்பகத்தில் கத்தலில் ராகவியின் பொழுது நாராசமாக விடிந்தது. முடியாது …முடிந்தால் நீங்கள் ஊற்றுங்கள் …இல்லையென்றால் வாயை மூடுங்கள் .என் செடியை பார்த்துக் கொள்ள எனக்கு தெரியும் .வழக்கமாக பேசும் வசனத்தை இன்றும் பேசுவதால் இந்த அருமையான காலை தூக்கம் பாதிக்கப்படுமோ …விழிகளை இறுக மூடிக் கொண்டு யோசித்தவளின் மூடிய விழிகளுக்குள் நந்தகுமார் வந்து நின்றான் .




அம்மாவை இப்படித்தான் பேசுவாயா …? எழுந்து போய் அவர்கள் சொன்ன வேலையை பார் …மிரட்டினான் .பட்டென கண் விழித்து எழுந்து அமர்ந்து கொண்ட ராகவி , தலையில் கை வைத்துக் கொண்டாள் .” பாவிப்பய நிம்மதியா தூங்க விடுறானா …? ” மனட்சாட்சியாய் தன்னை கேள்வி கேட்ட நந்தகுமாருடன் மானசீகமாய் சண்டையிட்டபடி சொக்கிய விழிகளுடன் வாசலுக்கு நடந்தாள் .

பேசாமல் உள்ளே போய் இன்னுமொரு பத்தே நிமிடங்கள் தூங்குவோமா …சபலத்துடன் நினைத்தவளின் கண்களில் காய்ந்து கிடந்த வாசல் தொட்டி செடிகள் பட , மனத்தை மாற்றிக் கொண்டு , வாசல் குழாயில் டியூப்பை சொருகி தொட்டி செடிகளுக்கு நீர் வார்க்க ஆரம்பித்தாள் .செண்பகம் வாசலுக்கு வந்து எட்டிப் பார்த்து தன் கண்களை தேய்த்து விட்டுக் கொண்டு மகள்தான் என உறுதிப்படுத்திக் கொண்டு உள்ளே போனாள் …” புத்தி வந்தால் சரி ” எனும் முனங்கலுடன்.

உடனேயே தண்ணீர் ட்யூப்பை அம்மா போன திசையில்  தூக்கி எறியும் வேகத்தோடு உயர்ந்த ராகவியின் கைகள் அப்படியே உறைந்து நின்றன…” ஏய் என்ன பண்ண போகிறாய் ..? ” என்ற அதட்டல் கேட்டு .

தூங்கி எழுந்து விட்டேனா …இல்லை இன்னமும் தூங்கிக் கொண்டுதான் இருக்கிறேனா …ராகவி  தன்னை தானே கிள்ளி விட்டுக் கொண்டாள் .கனவில்தானே அவன் அதட்டிக் கொண்டிருந்தான் …என்ற சந்தேகம் அவளுக்கு .

” இங்கே உனக்கு எதிரில்தான் நின்று …நானேதான் பேசிக் கொண்டிருக்கிறேன் …” வீட்டிற்கு வெளியே கேட்ட நந்தகுமாரின் சத்தத்திற்கு எட்டிப் பார்த்து ” ஙே ” என விழித்தாள் .

” ஒரு சின்ன வேலை பார்ப்பதற்கு எதற்கு உனக்கிந்த ஆவேசம் …? ” 

போடா …டேய் …பெரிய இவன் .சொல்ல வந்துட்டான் …ராகவியின் கணகள் கீழே கிடந்த கற்களில் பதிய , நந்தகுமார் முறைத்தான் . 

” ஏய் அடங்குடி .முன்னால் எல்லா செடிகளுக்கும் முடித்து விட்டு , பின்பக்க செடிகளுக்கும் தண்ணீர் ஊற்ற வேண்டும் .ம் …சீக்கிரம் .அப்படியே உன் அண்ணனை வரச் சொல்லு …” 

அவனது அதிகார வேலை ஏவலில் வெகுண்டிருந்தவள்  அண்ணனை பேசியதும் சுதாரித்தாள் .

” எந்நேரமும் அண்ணனிடம் என்ன ரகசிய பேச்சு …? அவனை ஏதோ மிரட்டுகிறீர்களோ …? ” 




” ஆமாம் அவனை மிரட்டி …அவன் பேரில் இருக்கிற ஐம்பது லடச ருபாய் சொத்தை என் பெயருக்கு மாற்ற போகிறேன் .போடி …போ …அவனை கூப்பிடு …” 

” அதென்ன எப்போது பார்த்தாலும் ” டி ” …? ” ராகவி கை டியூபை கீழே எறிந்து விட்டு தன் வீட்டு வாசல் தாண்டி தெருவிற்கு வந்தாள் .வீட்டு காம்பவுண்ட் சுவர் மேல் வைத்திருந்த டேபிள் ரோஜா செடி தொட்டியை ஓரக் கண்ணால் கவனித்து வைத்துக் கொண்டாள் .மண்டை உடையாவிட்டாலும் லேசான பொத்தலாவது விழாது …? மனதிற்குள் கணக்கு போட்டுக் கொண்டாள் .

ஆவேச மூச்சு வாங்கலுடன் தன் முன் வந்து நின்றவளை ஏற இறங்க பார்த்தவன் , ” காலங்கார்த்தாலே பல்லு கூட விளக்காமல் …இப்படி நடுத்தெருவில் வந்து கழுதை சுமக்கும் மூட்டையாக நிற்கிறாயே ..? கூச்சமாக இல்லை  …? ” 

அவனது தெளிவான விவரித்தலின் பின்பே தன்னை உணர்ந்த ராகவி குனிந்து தன் கோலத்தை பார்த்து விட்டு ” ஓவ் ” என்ற அலறலுடன் வீட்டினுள் ஓடினாள் .

உலக அழகியே காலை தூக்கத்திலிருந்து எழுந்த்தும் பார்க்க மட்டக் கேவலமாகவே இருப்பாள் . பார்க்க சுமாராக இருக்கும் நான் …பரிதவிப்புடன் இருந்தவளை காட்டிய  கண்ணாடியும் அதையே சொன்னது .கசங்கிய நைட்டியும் , கலைந்த தலையும் , சுருங்கிய கண்களும் ,வறண்ட முகமுமாக …நீ ஒரு வெகு சாதாரண பெண்ணடி என்றது .

கண்ணாடி காட்டிய தன் தோற்றத்தில் ராகவிக்கு அழுகையே வந்த்து .ஐய்யோ இப்படி ஒரு மட்டமான கோலத்துடனா அவன் முன் நின்றேன் …? என்ன நினைத்திருப்பான் என்னை பற்றி …? அதுதான் சொன்னானே கழுதை சுமக்கும் மூட்டை என்று … ராகவி பொருமும் மனத்துடன்  சன்னல் வழியாக எட்டிப் பார்க்க , நந்தகுமாரும் முரளியும் தோளில் கை போட்டுக் கொண்டு வீட்டை விட்டு தள்ளிப் போய் கொண்டிருந்தனர் .

சற்றே கவனித்து பார்த்த போது நந்தகுமார் முரளியை வலுக்கட்டாயமாக இழுத்து போவது போல் தோன்ற , ராகவியின் பொருமல் மறைந்து சந்தேகம் வரத் துவங்கியது .இந்த நந்தன் என்னவோ செய்கிறான் …

” அவன் ஒரு வேலை சொன்னான்மா .அதை என்னை ஒத்துக் கொள்ள கட்டாயப்படுத்துகிறான் ” முரளி புகார் சொன்னான் .

” ஏனாம் …அவன் சொன்ன வேலையை நீ செய்தே ஆக வேண்டுமென்று என்ன கட்டாயம் …? வா அண்ணா நானே அவனிடம் கேட்கிறேன் …” ராகவி இப்போதே எதிர் வீட்டிற்குள் நுழையும் உத்தேசம் கொண்டாள் .சற்றே உடல் சாய்த்து கண்ணாடியில் , குளித்து முடித்து புது சுடிதார் அணிந்திருந்த தன் தோற்றத்தை திருப்தியாக பார்த்துக் கொண்டாள் .

” விடும்மா .அவன் சொன்னதற்காக நான் அந்த வேலையை செய்யப் போவதில்லை .எனக்கு சரிப்பட்டு வராது என்று அவனிடம் சொல்லி விட்டேன் ” பிரச்சனையை அண்ணனே முடிக்கவும் ராகவிக்கு சப்பென்றானது .

” சரிதான் ” அரை முனங்கலுடன் ஓரக் கண்ணால் எதிர் வீட்டினை அளந்தபடி கல்லூரிக்கு கிளம்பினாள் .வெளிர் மஞ்சள் சுடிதாரில் , அடர் சிவப்பு கொத்துப் பூக்கள் சிதறிக் கிடந்த சுடிதாரில் , பின்னலை மார்பின் மேல் போட்டுக் கொண்டு  பளிச்சென எதிர் வீட்டிலருந்து வெளியே வந்த சுந்தராம்பாள் ராகவிக்கு எரிச்சல் மூட்டினாள் .

வயதுக்கேற்ற டிரஸ்ஸா இந்த அம்மா போடுது …? இதுக்கு மகனோட சப்போர்ட் வேற …சுந்தராம்பாளின் டிரஸ் முன் தனது சுடிதார் மங்கலாகி விட்டது போல் ராகவி உணர்ந்தாள் .வாசல் வேப்பமரத்தில் காக்கா விரட்ட வைத்திருந்த கவண் கண்களில் பட , வேகமாக அதனை எடுத்து கல்லையும் பொருத்தி விட்டாள் . மண்டைக்கு குறி வைக்கலாமா …? நெற்றிக்கா …? யோசித்தபடி இருந்த போது , எதிர் வீட்டு வாசலில் நந்தகுமார் தோன்றினான் .

அவனது பார்வை மிகச் சரியாக கவணேந்தி நின்ற இவள் மீதே பதிந்த்து .முறைத்தது .ராகவி சட்டென தனது இலக்கை மாற்றிக் கொண்டாள் .அம்மாவானால் என்ன …பிள்ளையானால் என்ன …மண்டை உடைய வேண்டும் .அதுதான் அவளது லட்சியம் .ஒரு கண்ணை மூடி குறி வைத்து கவணை இழுத்த போது , சுரீரென அவள் கையை தாக்கியது சிறு கல் ஒன்று .

” ஷ் ” என்ற சத்தத்துடன் கவணை உதறி கையை பார்த்தாள் .சிறு கருங்கல்லை அங்கிருந்து வீசியிருக்கிறான் .பெருவிரல் தோல் நமண்டு விட்டது .விரல்களை உதறியபடி கோபமாக அவனை ஏறிட்டு பார்த்தவளின் விழிகள் கிலியால் விரிந்தன .




நிச்சயமாக முகத்தின் ஒரு பக்க சதை முழுவதையும் பிய்த்துக் கொண்டு போகும் அளவுள்ள பெரிய கருங்கல் ஒன்றை நந்தகுமார் கைகளில் வைத்து பார்த்துக் கொண்டிருந்தான் .

பிறகு அதனை அவளை குறி பார்த்து எறிய தயாரானான் .அநிச்சையாக தன் தலை மேல் இரண்டு கைகளையும் வைத்து மூடியவள் , வேண்டாமென கையாட்டி கெஞ்சினாள் . 

பாவி கொஞ்சம் அசந்தால் முஞ்சியை பேர்த்துடுவான் போலவே …அவன் கல்லை கீழே போடும் வரை தன் தலை மேல் பாதுகாப்பை விலக்கிக் கொள்ளவில்லை அவள் .

கல்லை கீழே போட்டு விட்டு ,நாக்கை துருத்தி ஒற்றை விரலாட்டி ஜாக்கிரதை காட்டினான் அவன் . முச்சு காட்டாமல் காலேஜுக்கு கிளம்பு ஜாடை செய்தான் .முடியாதென நிமிர்ந்து நிற்கும் ஆசைதான் ராகவிக்கு. ஆனால் இருக்கும் சுமாரான மூஞ்சிக்கும் ஆபத்து வந்துவிட்டால் , அடக்கமான பெண்ணாக தலை குனிந்து பவ்யமாக வீட்டை விட்டு வெளியேறினாள் .

” லிப்ட் வேண்டுமா …? ” சுந்தராம்பாள் அவளை உரசியபடி தன் வண்டியை நிறுத்திக் கொண்டு தலை நிமிர்த்தி கெத்தாக கேட்க , ராகவியினுள் மீண்டும் ஒரு தன்மான சிங்கம் விழித்துக் கொள்ள ஆரம்பித்தது .

” எனக்கு கால் இருக்குது .என்னால் நடக்க முடியும் .நடக்க முடியாத வயசாளிகளும் , உடல் ஊனமுற்றவர்களுக்கும்தான் வண்டி தேவைப்படும் …” 

” ஏய் …என்னடி சொன்னாய் …? ” சுந்தராம்பாள் சற்று முன் கை கொண்டிருந்த மென்மையையும் , மேன்மையையும் கை விட்டு , தண்ணீர் வண்டிக்கு குட வரிசை வைத்திருக்கும் பெண்ணாக மாறினாள் .

” உன் அம்மா புத்திதானேடி  உனக்கும் இருக்கும் .ஒரு ஒத்தாசைக்கு கேட்டால் , எடுத்தெரிந்து பேசுகிறாயே …? ” 

” உதவி …ஒத்தாசையெல்லாம் நான் கேட்டேனாக்கும் …? சும்மா எதற்கும் நான் நானென்று என்ன பந்தா …? ” 

” வயசுப்பிள்ளை அடக்க ஒடுக்கமாக இருக்காமல் என்ன வாய் …? உன்னை எப்படி வளர்த்து வைத்திருக்கிறாள் உன் அம்மா …? ” 

” நீங்கள் ரொம்ப உத்தமமாக பிள்ளை வளர்த்து வைத்திருக்கிறீர்களா …? சரியான ப்ராடுப் பயலை பெற்று வைத்துக் கொண்டு … என் அம்மாவை குறை சொல்கிறீர்களா ? ” 

” யாரைடி ப்ராடு என்கிறாய் …? ” 

” உங்கள் அருந்தவப் புதல்வனைத்தான் ” 




சுந்தராம்பாள் – ராகவி சண்டை ஆரம்பித்த போதே நந்தகுமார் ஓடி வந்து இருவரையும் சமாதானப்படுத்த முயல , இரு பெண்களும் இடையில் வந்தவனை தள்ளி விட்டு விட்டு தீவிரமாக சண்டையை தொடர , செண்பகம் வீட்டை விட்டு வெளியே வந்து மகளுடன் சேர்ந்து கொள்ள , தெரு சனங்களும்  ஒவ்வொருவராக வரத் துவங்கினர் .அணி பிரிந்து இரு பக்கமும் பிரிந்து நின்று கொள்ள , சண்டை பெரிதாக வளரத் துவங்கியது .

கிடைத்த வாய்ப்பை விடாமல் அந்த அம்மாவின் பின்னலை பிடித்து இழுத்து விட்டாலென்ன …சந்தோச திட்டமிடல் ஒன்றுடன் ராகவி நேரம் பார்த்துக் கொண்டிருந்தபோது , சற்றே தள்ளி நின்றிருந்த நந்தகுமார் அவள் கண்களில் பட்டான் .ஒளியிழந்த முகத்துடன் , சிறு வேதனையாக இந்த சண்டையை பார்த்துக் கொண்டிருந்தான் அவன் .ஏனோ அவனது இந்த தோற்றம் மனதை பாதிக்க , ராகவி சட்டென தனது வாயாடலை நிறுத்தினாள் .அம்மாவின் கையையும் பிடித்து அழுத்தி தடுத்தாள் .

” போதும்மா …விடுங்க …” 

” அப்பப்பபா …என்ன வாய் …உனக்கு ஒருத்தி மாமியாராக வந்து வாய்க்க போகிறாளே …அவளை நினைத்தால் இப்போதே எனக்கு பரிதாபமாக இருக்கிறது …” சுந்தராம்பாள் தொடர ,

” என் பொண்ணு தேவதைடி .உன்னை போல பிடாரியெல்லாம் என் பொண்ணை பற்றி நினைத்து கூட பார்க்க முடியாது ” செண்பகம் கத்த …

” போதும்மா .உள்ளே வாங்க …” ராகவி செண்பகத்தின் கையை பிடித்திழுத்து போனாள் .அங்கே …நந்தகுமாரும் சுந்தராம்பாளை அப்படியே சொல்லி வீட்டிற்குள் இழுத்துக் கொண்டிருந்தான் .

” இதுக்கெல்லாம் உன் குடும்பம் பதில் சொல்லியே ஆகனும்டி …” சுந்தராம்பாள் எச்சரித்தபடியே மகனின் இழுவைக்கு உள்ளே போனாள் . அந் நேரம் தாயையே மகனின் கண்களும் பிரதிபலித்ததாய் ராகவிக்கு தோன்றியது .

அவள் மனம் மீட்டிய அபஸ்வரம் சரியென்பது போல் மறுநாள் அவர்கள் வீட்டில் அந்த துயரம் நடந்தே விட்டது .அதன் மூலகாரணம் நந்தகுமாரே என்பதில் ராகவிக்கு எள்ளளவு சந்தேகமும் கிடையாது .




What’s your Reaction?
+1
22
+1
13
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!