விநாடி நேர விபரீதங்கள்

விநாடி நேர விபரீதங்கள்-8

வினாடி..8

தாத்தா புறப்பட்டதுதான் தாமதம்,

“ஏண்டா தொடைநடுங்கி ..தாத்தாகிட்ட வசமா மாட்டிவிடப் பாத்தியே! 

 நல்லவேளை கிளம்பிட்டாரு! இல்லேன்னா ஜனா அண்ணாக்கு யாரு பதில் சொல்றது?” 

கண்ணனை மிரட்டிய  கார்த்திக் சாலையில் கண் பதித்தான்.

“ஜனா..ஜனா..ஜனா!”  ஓர் ஆர்வக்கோளாறில் ஜனாவை இவர்களுக்கு அறிமுகப்படுத்தியது தன்னுடைய தவறுதான் என்று கண்ணனுக்குப் புரிய, இதயத்தில் கூரிய வேலொன்றைச் சொருகியது போல் துடித்தான்.

இவர்களை அனுப்பி விட்டு ஜனாவின் கால்களில் விழுந்து கதறியாவது அந்த வீடியோவை அப்லோட் செய்ய வேண்டாமெனத் தடுத்திருக்க வேண்டும். ஆனால்..எங்கே?  இந்த கார்த்திக் தான் இப்படி வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு வந்து விட்டானே!

செய்த உதவியை சொல்லிக் காட்டுகிறான். வாழ்க்கையில் மிக உயர்ந்த விஷயமாகக் கருதிய இவர்கள் நட்பு இப்போது கசக்கிறது. ஆனாலும் அவர்களை உதறிவிட்டுச் செல்லவும் முடியாமல் ஏதோ ஒன்று தடுக்கிறதே! 

பிறப்பால் தர்மதேவனின் அவதாரமாக இருந்தும் கௌரவர் கூட்டத்தில் பாசத்திற்கும், சத்தியத்திற்குமிடையே ஊசலாடிய விதுரரைப் போல நட்புக்கும், மனசாட்சிக்குமிடையே சிக்கிச் சீரழிந்தான்  கண்ணன்.

“டேய்…டேய்..பார்றா ஜனா அண்ணா சொன்னவர் வர்றாரு” 

கூச்சலிட்டான் கோபி.

கேமரா பொஸிஷன் சரியா இருக்கா? லைட்டிங் போதுமா? பரபரத்தார்கள்.

 இதோ அருகில் வந்து விட்டது அந்த அதிசக்தி திறன் கொண்ட விலையுயர்ந்த பைக். அந்த பைக்கில் வந்தவன் முகம் ஹெல்மெட் போட்டிருந்த காரணத்தால் தெளிவாகத் தெரியவில்லை. ஜிம்முக்குப் போய்த் திரண்டு உருண்டிருந்த புஜங்களில் தெரிந்த டாட்டூஸ், கழுத்தில் கனமான  ஸ்டீல் செயின்கள்,வலது மணிக்கட்டில் மல்டி கலரில் கயிறுகள் , மொத்தத்தில் ஜனாவின் பிரதிபிம்பம் போலிருந்தான்.

“வ்ர்ர்ரூரூம்”  சீறிப் பாய்ந்து வந்த பைக் சர்ரென்று பின் சக்கரத்தில் மட்டும் ஓடியது. கண்ணிமைக்கும் நேரத்தில் இருக்கையில் இருந்து முன் சக்கரத்திற்குத் தாவியவன்…அங்கிருந்து திரும்பவும் இருக்கைக்கு தாவினான்..ஹேண்டில் பாரிலிருந்து இரண்டு கைகளையும் எடுத்து விட்டு, சீட்டில்  ஏறி நின்றான். அடுத்து என்ன செய்யப் போகிறான் என்று ஊகிக்க முடியாத வண்ணம் அவனுடைய செயல்பாடுகள் அத்தனை அதிவேகமாக  இருந்தது. கரணம் தப்பினால் மரணம் என்ற இந்த விபரீத விளையாட்டு தேவையா என்று அங்கிருந்தவர்கள் வெறுப்பை உமிழ…மின்னல் வேகத்தில் அந்த இடத்தைக் கடந்தான் .

திறந்த வாய் மூடாமல், கண்ணகல பிரமிப்புடன் அத்தனை நிகழ்வுகளையும் துல்லியமாகப் படம் பிடித்தவர்கள்..அதை அப்போதே ஜனாவுக்கு அனுப்பி வைக்க, அவனிடமிருந்து தம்ஸ் அப் ஸ்மைலி பதிலாக வந்தது.

கண்ணனைத் தவிர மற்ற மூவரும் அந்த பைக்காரன் செய்த சாகசங்கள் பற்றியே பேசியபடி வர, கண்ணன் மனதுக்குள் டீச்சர் வனிதா மணியின் வீடியோ  ரீவைண்டாகிக் கொண்டிருந்தது. ஏனோ ஒரு நொடி டீச்சரின் இடத்தில் அக்கா வெண்மதியை வைத்துப் பார்க்க மனம் அனலில் இட்ட புழுவாகத் துடித்தது.

_____




மாடிப்படியிலிருந்து உருண்டு விழுந்த வனிதாவை ஹாஸ்பிடலில் சேர்த்த பள்ளி நிர்வாகம் அவர்கள் வீட்டுக்கும் தகவல் சொல்ல, அலறியடித்தபடி வந்த தாயும், அண்ணன் சகாதேவனும் வனிதா தன்னினைவற்று மயங்கிக் கிடந்த கோலத்தைப் பார்த்து துடித்தார்கள்.

வலது முழங்காலிலும், இடது கணுக்காலிலும் மல்டிபிள் ஃப்ராக்சர் என்பதால் உடனடியாக ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நல்லவேளையாக தலையில் அடி குறைவாகத்தான் பட்டிருந்தது.

“போன மாசம் இந்நேரம் நிச்சயதார்த்தத்துல அழகோவியமா நடமாடிகிட்டிருந்தாளே! யாரு கண்ணு பட்டதோ தெரியலையே! கல்யாணத்துக்கு இன்னும் இருபது நாள்தான் இருக்கு. எம்மக  இப்படிக் காலொடிஞ்சு கிடக்கிறாளே” 

தலையிலடித்துக் கொண்டு அழுத தாயை சமாளிக்க முடியாமல் தவித்தான் சகாதேவன்.

“இத்தனை பலமா அடிபட்டிருக்கே! எங்கிருந்து,எப்படி வழுக்கி விழுந்திருப்பா”

வனிதாவின் பள்ளிக்குச் சென்று,

போய் பார்த்து வரத் துடித்தது சகாதேவனின் உள்ளம்.

ஆனால் அழுதழுது அரை மயக்கத்தில் இருக்கும் தாயைத் தனியே விட்டுச் செல்லவும் மனமில்லை. 

“அடடா .. மாப்பிள்ளை வீட்டுக்குத் தகவல் சொல்ல மறந்துட்டமே! விஷயம் தெரிஞ்சா எப்படி எடுத்துக்குவாங்களோ? கல்யாணத்தை தள்ளிப் போட சம்மதிப்பாங்களானு தெரியலையே! எதுக்கும் மாப்பிள்ளை வினோத்துக்கு விஷயத்தை சொல்லிடலாம். அவர் பக்குவமா அவங்கம்மாப்பாகிட்ட பேசிடுவாரு”

நம்பிக்கையோடு வினோத்துக்கு ஃபோன் செய்ய முழு ரிங்கும் அடித்து ஓய்ந்தது. நோ ரெஸ்பான்ஸ். ஒரு வேளை ட்ரைவ் செஞ்சுகிட்டிருப்பாராயிருக்கும். திரும்ப ஃபோன் செய்ய, பதிலுக்கு வாட்ஸேப்பில் வீடியோ மெஸேஜ் வந்தது வினோத்திடமிருந்து!

வினோத்திடமிருந்து வந்தது . “விநாடி விபரீதங்கள்” சேனல் மூலமாக ஜனா வெளியிட்ட அதே வீடியோதான். 

அலங்கோலமாக மாடியிலிருந்து வனிதா உருண்டு விழுந்த அந்த வீடியோ அதற்குள் ஆயிரம் பார்வையாளர்களைத் தாண்டியிருந்தது.

வீடியோவைப் பார்த்து உடலும் உள்ளமும் பதறிப்போய், வினோத்துக்கு ஃபோன் செய்தால்…

‘மேரேஜ் கேன்ஸல்டு’ என்ற ஒற்றை வரி மெஸேஜ்  சகாதேவனின் இதயத்துடிப்பையே நிறுத்தி விடப் பார்த்தது.

 செயலற்று நின்றவன் சில நொடிகள், கண்களை மூடித் தியானம் செய்தான். மனதை அடக்கி ஒரு நிலைக்கு கொண்டு வந்தான்.அடுத்து செய்ய வேண்டிய விஷயங்களை மனதுக்குள் வரிசைப்படுத்தினான்.

“மாப்பிள்ளை வீட்டுக்குத் தகவல் சொன்னியா?” தாய் கேட்க,

“ம்ம்..சொல்லிட்டேன். மாப்பிள்ளை வெளியூர் போயிருக்காராம். சீக்கிரம் வர்றதா சொன்னார்.”

எட்டிப் பார்த்த கண்ணீரை மிரட்டி உள்ளே அனுப்பினான்.

“இப்படி  ஒரு பெண் அலங்கோலமாக உருண்டு விழும்போது,காப்பாற்ற முயலாமல், விரசமாக வீடியோ எடுத்தவன் எத்தனை குரூரமான மனம் படைத்தவனாக இருப்பான். அதையும் க்ளோஸப்பில் பலமுறை வருவதுபோல் எடிட் செய்து, அதற்கேற்றாற் போல ஆடியோவும்! 

ஆமாம்…வனிதை என்று வந்ததே! ..வனிதை என்றால் பெண்  என்றும் பொருள் கொள்ளலாம். வனிதா என்றும் சொல்லலாமே!  

அப்படியென்றால்? வனிதாவுக்குத் தெரிந்தவன்தான் வீடியோ எடுத்திருக்கிறானோ?. அதற்குள் ஆடியோ,பி.ஜி.எம் எல்லாம் இணைத்து  சேனலில்  போட்டிருக்கிறான் என்றால் எப்படி சாத்தியம்? இது ஏதோ தானாக நடந்த விபத்தாகத் தோன்றவில்லையே! திட்டமிட்ட சதியாகத் தோன்றுகிறதே”

சகாதேவனின் போலீஸ் மூளை கூர்மையாக யோசித்தது.  சகாதேவனுக்கு காவல்துறை பணிதான் லட்சியமே. ட்ரெயினிங் முடித்து வந்ததுமே முதல் கேசே அவனுக்கு சவால்தான். அது நகரத்தையே உலுக்கிய  காதம்பரி வழக்கு.

ஆபரேஷன் முடிந்து ஐ.சி.யூக்குள் வனிதாவைக் கொண்டு வர, அரைகுறை நினைவில் இருந்த வனிதா, 

“அண்ணா!  வினோத் வந்துட்டாரா?”  கேட்டு விட்டுத் திரும்பவும் மயங்கி விட்டாள்.




இத்தனை வலியிலும் மயக்கத்திலும் கூட வினோத்தின் நினைவில் இருப்பவளிடம், கல்யாணம் நின்று விட்டதை எப்படி சொல்வேன்?

 நேற்று வரை தன் வருங்கால மனைவி என்ற உரிமையில் அவளோடு ஷாப்பிங்,சினிமா, கோயில் என்று சுற்றியவன், இந்த வீடியோவைப் பார்த்ததும்,

“மச்சான்.. இந்த வீடியோ எடுத்தவனைக் கண்டு பிடிச்சு கைய,காலை வாங்கலேன்னா நான் மனுஷனே இல்லை”னு வெகுண்டெழுந்திருந்தால் அவன் மனிதன். 

அதை விடுத்து 

படியில் உருண்டு அடிபட்டிருக்கும் வருங்கால மனைவியின் உடல் நலத்தைக் காட்டிலும், அவள் மானத்தைக் காப்பாற்றுவதைக் காட்டிலும் எவனோ ஒரு புல்லுருவி அனுப்பிய வீடியோவைக் காரணம் காட்டி கல்யாணத்தை நிறுத்திய வினோத்தின் அரைவேக்காட்டுத் தனத்தை என்னென்பது? நினைக்க நினைக்க மனம் வெறுத்துப் போனதுதான் மிச்சம்.

____

கார்த்திக் கூட்டணி வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் வழியில் ஜனாவின் ஃபோன் அவர்களை நிறுத்தியது.

 “பசங்களா..ச்சும்மா பூந்து வெளையாடிட்டீங்கடா! வீடியோ செமையா எடுத்திருக்கீங்க. நாளைக்கு உங்களுக்கெல்லாம் கேஷ் ப்ரைஸ் காத்திருக்கு. வந்து வாங்கிக்கோங்க. அப்படியே அடுத்த அஸைன்மெண்டுக்கும் ரெடியா வாங்க. இதுவும் பைக் வீலிங்தான்…ஆனா வாணவேடிக்கையோட  இன்னும் த்ரில்லிங்கா இருக்கும். 

அப்புறம் உங்க மொத வீடியோ…அட்றா சக்கைனு லைக்குகள் பிச்சுகிட்டுப் போகுது‌. உங்களை எல்லாம் எனக்கு ரொம்ப புடிச்சு போச்சு‌. இனிமே நாம பஞ்சபாண்டவராட்டம் ஒண்ணா இருப்போம் ” கொக்கரித்தான்.

இதைக் கேட்டதும், பாரதப் பிரதமர் கையால் தேசிய விருது வாங்கிய தைப் போல புளகாங்கிதமடைந்த கார்த்திக்..

” பாக்கறதுக்கு முரட்டுத்தனமா இருந்தாலும், ஜனா அண்ணா ரொம்ப நல்லவருடா” என்று சிலாகிக்க, கோபியும்,பார்த்தாவும் ‘ஆமாண்டா’ என ஆமோதிக்க..

“இது எங்கே போய் முடியப் போகுதோ” என  வெறுத்துப் போய் தலையிலடித்துக் கொண்டான் கண்ணன்….தான் தான் அதை முடித்து வைக்கப் போகிறோம் என்பதையறியாமலே!

“வீட்டுக்குப் போனதும் ரோஜாகிட்ட சொல்லி கார்த்திக்கை கண்டிச்சு வைக்க சொல்லணும். அந்த கண்ணன் பய என்னமோ சொல்ல வந்தான் .அதுக்குள்ள இந்த கோபி உள்ள புகுந்து குட்டையக் குழப்பிட்டான். பசங்க நடவடிக்கைகள் ஏதோ சரியில்ல..! பசங்கள  கண்காணிக்கணும்..” மனதுக்குள் பேசியபடி வீட்டுக்கு வந்தவருக்கு வழியில் நடந்த அத்தனையும் மறந்து போகும்படியான சம்பவம் வீட்டில் காத்திருந்தது.

(விபரீதங்கள் தொடரும்)




What’s your Reaction?
+1
1
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!