Serial Stories விநாடி நேர விபரீதங்கள்

விநாடி நேர விபரீதங்கள்-13

விநாடி – 13

“காதம்பரி “

“ம்மா….ம்மா!”

ஆட்டோவின் சத்தமும், அதில் வந்திறங்கிய காதம்பரியின் குரலையும்  கேட்டு ஸ்வேதா வாசலுக்கு ஓடி வந்தாள்.

“ஏம்ப்பா இன்னிக்கு இவ்ளோ லேட்டு?”

வாசலில் காதம்பரியின் லஞ்ச் பேகை கையில் வைத்திருந்த ஆட்டோ ட்ரைவர்,

“அம்மா..! பாப்பாதான் சொல்ல சொல்லக் கேக்காம..!

“என்னாச்சு பாப்பாக்கு!”

 

காதம்பரியின் அழகு முகம், அழுது வீங்கிய முகமாக இருக்கக் கண்டு பதறினாள் ஸ்வேதா.

“ம்மா..ம்மா..பப்பி பாவம்மா!”

“பப்பியா? யாரது? பப்பிக்கென்னாச்சு?” 

ஆட்டோ ட்ரைவர் மௌனமாக லஞ்ச் பேகை நீட்ட பிறந்து சில நாட்களே ஆகியிருந்த நாய்க்குட்டி ஒன்று லஞ்ச் பேகில் , ஹேண்ட் டவலில் பொதிந்து வைக்கப்பட்டிருந்தது. 

கேள்விக்குறியோடு ஸ்வேதா ட்ரைவரைப் பார்க்க,

“ஸ்கூல்லருந்து கெளம்பறப்பவே மழை தூற ஆரம்பிச்சிடுச்சுங்க. ட்ராஃபிக் வேற. எங்க வண்டிக்கு முன்னால் பைக் சக்கரத்துல மாட்டிக்கிச்சு இந்த நாய்க்குட்டி.  நல்லவேளையா உசுருக்கு ஆபத்தில்ல. கால்லதான் அடி பட்டிருக்கு.  நம்ம பாப்பாதான் அழுது அடம் புடிச்சு அதை வீட்டுக்கு கொணாந்திடுச்சு. டாக்டர் கிட்ட காமிச்சு கட்டுப் போடணும்ங்க!”

சொல்லி விட்டு பேகை கீழே வைத்து விட்டு அவர் கிளம்பியதும் ஓடி வந்து தாயின் இடுப்பைக் கட்டிக்கொண்டு விசும்பினாள் காதம்பரி.

“மா…பப்பிக்கு ரொம்ப வலிக்குது போல. வழியெல்லாம் அழுதுகிட்டே வந்துச்சு‌. இப்பதான் பாவம் தூங்குது. டாக்டர் கிட்ட கூட்டிகிட்டுப் போலாம் ம்மா”

கெஞ்சலாக தாயைப் பார்த்தாள் குழந்தை.

இது எல்.கே.ஜி காதம்பரி

*****

“அப்பா…அப்பா!”

 தந்தையின் வக்கீல் கோட்டைப் பிடித்திழுத்தாள் காதம்பரி.

“சொல்லுடா செல்லம்.”

கோர்ட்டுக்கு கிளம்பும் அவசரத்திலும் மகளை அணைத்து, சத்யமூர்த்தி பாசத்துடன் கேட்க,

“அப்பா ! அடுத்த வாரம் ஸ்கூல்ல டூர் போறோம்.”

“தெரியுமே…பணம் கட்டியாச்சு, புது ட்ரஸ் வாங்கியாச்சு, ஸ்நாக்ஸ் மட்டும் வாங்கணும். வேறென்ன வேணும் என் 

கண்ணம்மாவுக்கு!”




“என்ன வேணும் னு நீங்களே கேளுங்க! எங்கிட்ட கேட்டா, வேலை நடக்காதுன்னு டைரக்டா உங்ககிட்ட வந்துட்டா உங்க தவப்புதல்வி.”

சேலை முந்தானையில் கை துடைத்தபடி கிச்சனிலிருந்து வந்தாள் ஸ்வேதா.

“அதுல என்ன சந்தேகம்?  காதம்பரி நம்ம தவப்புதல்வியேதான். எத்தனை கோயில்கள், எவ்வளவு ப்ரார்த்தனைகளுக்கப்புறம் நமக்கு கிடைச்ச வரமாச்சே!. அவளை கண்ணும் கருத்துமா வளக்கணும்கறதுகாகத்தானே நீ உன்னோட பாங்க் வேலையை ரிஸைன் பண்ணே!

ம்ம்..நீ சொல்லுடா செல்லம்.”

“அப்பா என் ஃப்ரண்ட் பூர்ணிமா இருக்காள்ல. அவளுக்கும் டூர் வரணும்னு ரொம்ப ஆசைப்பா. ஆனா அவங்கப்பாக்கு பாவம் ரொம்பவே குறைச்சலான சம்பளம்தானாம். டூருக்கு போகத் தேவையான பணம் மட்டும் அவங்க மொதலாளி கடன் குடுத்தாராம். நாலு நாள் டூருக்கு போட்டுகிட்டுப் போக பூர்ணிமாகிட்ட நல்ல ட்ரஸ்ஸே இல்லையாம்ப்பா. அதனால் டூருக்கு வரலேங்கறா. எங்கிட்டதான் நிறைய ட்ரஸ் இருக்கில்ல. புதுசா வாங்குன ட்ரஸ்ஸை அவளுக்கு குடுத்தா, அவளும் டூருக்கு வந்து என்ஜாய் பண்ணுவால்ல. பாவம்ப்பா..”

சொல்லும்போதே உதடு பிதுங்கி விழிகள் குளமாயின.

“பூர்ணிமாக்கு புதுசா வாங்கிடலாம்டா. உனக்கு வாங்கினது நீ போட்டுக்கோ”

“தேங்க்ஸ் ப்பா..!”

தந்தையின் கன்னத்தில் முத்தமிட்டுச் சிரித்தாள் ஆறாவது படிக்கும் காதம்பரி.

***”**

கோவையில் ஸ்வேதாவின் அம்மா கால் வழுக்கி விழுந்ததில் இடுப்பெலும்பு உடைந்து உடனடி ஆபரேஷன் செய்தாக வேண்டிய நிலைமை. உதவிக்கு ஸ்வேதா போயே ஆக வேண்டிய கட்டாயம். கணவரையும் மகளையும் விட்டுச் செல்ல மனமின்றி தவித்தாள் ஸ்வேதா. 

“அம்மா நான் ஒண்ணும் சின்னப் பொண்ணில்ல. நான் சமாளிச்சுக்குவேன். பாட்டிக்குத்தான் உங்க உதவி அவசரமா தேவைப்படுது. நீங்க எதையும் யோசிக்காம கிளம்புங்க” 

தாய்க்கு தைரியம் சொன்னதோடு நிற்காமல், தேவையான உடைகளைப் பேக் செய்து கொடுத்து கோவைக்கு அனுப்பி வைத்தாள். 

ஒரு மாதம் கழித்து சென்னை வந்த ஸ்வேதா, படிப்பையும்,பாட்டு வகுப்பையும்  பேலன்ஸ் செய்து கொண்டு,தன்னை விட அசத்தலாக வீட்டையும்  காதம்பரி மெயின்டெய்ன் செய்திருப்பதையும், தினமும் விதவிதமாக தந்தைக்கு சமைத்து தந்ததையும் அறிந்து மகளின் பொறுப்புணர்ச்சியைக் கண்டு பெருமிதப் பட்டாள்.

இது காதம்பரி ப்ளஸ் டூ !

இத்தனை இளகிய மனமும், மென்மையான மனவுணர்வுகளோடும் பொறுப்புணர்வோடும் தன் மகள் இருப்பதை நினைத்து மகிழ்ந்தாலும், இப்போது உலகம் செல்லும் போக்கில் தன் மகளை யாரேனும் ஏமாற்றி விடக் கூடுமோ என்ற அச்சமும் ஸ்வேதாவின் மனதில் அவ்வப்போது எழும்.

ஆனால் மெல்லினமாக இருக்கும் ஸ்வேதா..தேவைப்பட்டால் வல்லினமாகவும் மாறுவாள் என்பது அவள் கல்லூரியில் படிக்கும் போது தெரிய வந்தது.

காதம்பரியின் தோழி பூர்ணிமாவுக்கு கல்லூரிக்கு  போகும் போதும், வரும் போதும் பின்தொடர்ந்து வந்து தொந்தரவு செய்யும் ஒரு  ரோட் சைட் ரோமியோவால் ஏகப்பட்ட மனவுளைச்சல். இதைப் பார்த்து மனம் பொறுக்காத காதம்பரி, ஒருநாள் பூர்ணிமாவைத் தொடர்ந்து 

சென்றவள், பஸ் ஸ்டாப்பிங்கில் பூர்ணிமாவை வம்புக்கிழுத்துக் கொண்டிருந்தவன் கன்னத்தில் பளார் பளாரென்று அறைந்தாள்.

இந்த எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலைந்தவன், தப்பியோட முயற்சிக்க, முன்யோசனையுடன் காதம்பரி ஃபோன் செய்திருந்ததால் தக்க சமயத்தில் வந்த போலீசாரிடம் அவனை ஒப்படைத்தாள்.

“நீ..நீயா இது? காதம்பரிக்குள்ள  இப்படி ஒரு காளிதேவி அவதாரமா?”

பூர்ணிமா ஆச்சர்யப்பட,

“இதை நீயே கூட  செஞ்சிருக்கலாம் பூர்ணிமா. இத்தனை நாள் அவனுக்குப் பயந்து வீணடிச்சிட்டே. இந்த பயம் தான் நமக்கு முதல் எதிரி. பெண்கள் எப்பவுமே  பூ மாதிரி மென்மையா இருக்கணும்கிற அவசியமில்லை. தேவைப்படறப்ப புயலாவும் மாறணும். எப்பவுமே நாம சாந்தலக்ஷ்மினுதான் பேரெடுக்கணுமா? நமக்குள்ளே இருக்கற தைர்யலக்ஷ்மியை இந்த சமுதாயம் பாத்து மிரள வேண்டாமா?

நறுக்குத் தெறித்தாற் போல் அறிவுரை சொன்னாள் காதம்பரி. 

கனிவும்,இரக்கமும், பொறுமையும் மட்டும் காதம்பரியின் இரத்த அணுக்களோடு கலந்திருக்கவில்லை. அநீதி கண்டால் பொங்கியெழும் வீரமும், விவேகமும் கூட கலந்திருக்கிறதென்பதை பூர்ணிமா மூலமாக  உணர்ந்து கொண்ட ஸ்வேதா நிம்மதியானாள்.

ஆனால் அந்த நிம்மதி நீடித்ததா?




கல்லூரிப் படிப்பு முடிந்ததும்  ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த காதம்பரிக்கு,  சிறுவர் சீர்திருத்த பள்ளி நிகழ்ச்சி விழா ஒன்றில் பாட்டு பாடும் வாய்ப்பு கிடைத்தது. அதில் கலந்து கொண்டு வீட்டுக்குத் திரும்பியவளின் முகமே சரியில்லை.

அவளை நார்மலுக்குக் கொண்டு வர..

“என்னடா..உன்னுடைய பாட்டில் பிழை இருக்குன்னு நவீன நக்கீரர் யாராவது குற்றம் கண்டு பிடிச்சாங்களா? இல்ல ..முதல் சரணத்தில் மூணாவது வரில ஸ்ருதி சேரலைன்னு சின்னக் குயில் சித்ரா மாதிரி யாராச்சும் பிழை சொன்னாங்களா?”

சத்யமூர்த்தி சிரிக்க…

“போங்கப்பா! நானே ரொம்ப மனசு நொந்து வந்திருக்கேன்..! மொக்க ஜோக் சொல்லிட்டு நீங்களே சிரிச்சுக்கறீங்க”

கண்களில் நீர் திரள, தந்தையின் மடியில் படுத்துக் கொண்டாள். அவள் மிகுந்த மனவேதனையில் இருந்தால் மட்டுமே இப்படி தந்தையின் மடியில் அடைக்கலம் தேடுவது வழக்கமென்பதால்..அவளே சொல்லட்டும் என்று அமைதி காத்தார்கள் தாயும்,தந்தையும்.

அரைமணி போல மௌனமாகப் படுத்திருந்தவள் எழுந்து போய் முகம் கழுவிக் கொண்டு வந்தாள்.

“அப்பா.. ப்ரோக்ராம் ஆரம்பிக்கறதுக்கு அரைமணி நேரம் முன்னாடியே நானும், பூர்ணிமாவும் அங்க போயிட்டோம். சின்ன, சின்னப் பசங்க ப்பா..அவங்களப் பாத்தா இவங்களா இளம் குற்றவாளிகள்னு ஆச்சர்யப்படற மாதிரி பால் வடியற முகங்கள். கூடப் பொறந்த தம்பிகளைப் பாக்கக் கூடாத இடத்துல பாத்துட்ட மாதிரி அடிவயிறு கலங்கிடுச்சுப்பா.

எங்களைப் பாத்ததும் அக்கா.. அக்கான்னு ஓடி வந்து பேசுறாங்க. அதுல ஒரு பையன் அருண் னு பேர். பூர்ணிமா கையைப் புடிச்சுக்கிட்டு,

‘உங்களைப் பார்த்தா அசப்புல  எங்கக்கா மாதிரியே இருக்கு. அவங்கள காப்பாத்ததான் நான் ஒரு கொலை செய்ய நேர்ந்துச்சு. ஆனா அதைப் புரிஞ்சுக்காம எங்கக்கா என்னை வெறுத்து ஒதுக்கறாங்க’னு கதறி அழுகறான்.

விவரம் கேட்டதுக்கு அவனோட அக்கா யாரோ ஒருத்தன நல்லவன்னு நம்பி காதலிச்சுருக்கா. ஆனா அவனோ தன்னோட கூட்டாளிகளோட சேந்து அவளைப் பாலியல் தொழில் பண்றவங்களுக்கு விக்கப் பாத்திருக்கான். இது தெரிஞ்சதும் அக்காவைக் காப்பாத்த இவன் சண்டை போட, அவன் இவனைக் கத்தியால் குத்த வர, இவன் அந்தக் கத்தியப் புடுங்கி குத்தியிருக்கான். அதனால் அருணை சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிட்டாங்க.

‘இங்கிருந்து வெளில போனாலும் எங்க சனம் என்னை ஏத்துக்க மாட்டாங்க, கூடப் பொறந்தவளே நம்பாதப்ப வேற யாரு நம்பப்போறாங்க’ ன்னு ஒரே அழுகை. இது ஒரு சாம்பிள் தான்ப்பா. அங்க இருக்கற பல பேர் திட்டம் போட்டு குத்தம் பண்ணவங்க இல்ல. அந்த நேரத்துல அவங்க மனசு சொல்றத மூளை செயல்படுத்தியிருக்கு. சில பேருக்கு தவறான சகவாசம். இந்தப் பசங்க மாதிரி இன்னும் நிறையப் பேர் இருக்காங்க. 

அங்க இருந்த மானேஜர் ,

‘ இப்பல்லாம் டீனேஜ் பசங்கள சோஷியல் மீடியா மோகம் ஆட்டிப் படைக்குது.  தப்புன்னு தெரியாமயே நிறைய தப்பு பண்றாங்க! அதனால மத்தவங்களுக்கும் ஏகப்பட்ட துன்பம், துயரம் ஏற்படும்ங்கறத அவங்க உணர்றதேயில்லை’ னு ரொம்ப வருத்தப்பட்டு பேசினார். 

இந்த மாதிரி பசங்களக் கண்டுபிடிச்சு அவங்களுக்காக கவுன்சிலிங் தரலாம்னு நானும், பூர்ணிமாவும் முடிவு பண்ணியிருக்கோம் ப்பா. அதுக்கு உங்க ரெண்டு பேரோட சம்மதமும், ஒத்துழைப்பும் வேணும்ப்பா ” 

பெற்றவர்களிடம் இறைஞ்சினாள்

சினிமாவிலும், சோஷியல் மீடியாக்களிலும் தங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள் மத்தியில்..சமூக மேம்பாட்டுக்காக பாடுபட நினைக்கும் தன் மகளைப் பற்றி நினைத்துப் பெருமைப்பட்டார்கள் பெற்றவர்கள்.

அந்தப் பெருமை ஒன்று தான் இனி வரும் காலத்தில் அவர்களுக்கான மகளின் நினைவுப் பொக்கிஷம் என்பதை அப்போது அவர்கள் அறியவில்லையே!

சீனியர் வக்கீலான தந்தையின் சம்மதத்துடன் கவுன்சிலிங் சென்டருக்கான இடம் ஒன்றைப் பார்த்து விட்டு காதம்பரி டூ வீலரில் வரும் போது நிகழ்ந்தது அந்த விபரீதம்.!

(விபரீதங்கள் தொடரும்)




What’s your Reaction?
+1
4
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!