Serial Stories விநாடி நேர விபரீதங்கள்

விநாடி நேர விபரீதங்கள்-15 (நிறைவு)

இறுதி வினாடி ..15 

பூர்ணிமா அந்தச் சிறுவர்களை உற்றுப் பார்த்தாள். 

‘பயந்திருக்கிறார்கள். வெறுப்பும் ஊடாடுகிறது. ஒருவரையும் கைகாட்ட முடியாமல். உலகத்தின் மீதான் வெறுப்பு.’

பூர்ணிமா உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள். இதுபோல் அவள் பல சிறுவர்களைப் பார்த்திருக்கிறாள்.

அவர்களுக்கு நடுவில் கண்ணன் சற்று வேறு மாதிரித் தெரிந்தான். அவனைப் பற்றி சகாதேவன் அவளுக்கு எல்லாமே சொல்லியிருந்தான்.

“உட்காருங்க” என்றாள் பூர்ணிமா. அவர்கள் அவளைச் சந்தேகமாய்ப் பார்த்துக் கொண்டே அமர்ந்தார்கள்.

“இப்போ உபன்யாசம் ஆரம்பிச்சுடும்” என்று முணுமுணுத்தான் கார்த்திக். கோபியும் பார்த்தாவும் தலையாட்டினார்கள். 

பூர்ணிமா அதைக் கண்டுகொள்ளாமல் ஒரு சில லாமினேட் செய்யப்பட்ட புகைப்படங்களை மேஜைமீது பரப்பினாள்.

 “இவங்களில் யாரை நீங்க சிறந்த திறமைசாலி, வெற்றியாளர், ஆளுமைன்னு நினைக்கறீங்க?” என்று கேட்டாள்.

இதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அந்தப் புகைப்படங்களைப் பார்த்தார்கள்.

“இவர். அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங். பெனிசிலினைக் கண்டுபிடித்தவர்” என்றான் கார்த்திக்.

“எனக்கு பில் கேட்ஸ் பிடிக்கும். தன்னுடைய லட்சியத்திற்காக, தன் உழைப்பை நம்பி, தைரியமாகச் சம்பிரதாயப் படிப்பைத் துறந்தவர். ஆனாலும் ஜெயித்தவர்” என்றான் கோபி.

“சிவா ஐயாதுரை. இ-மெயிலைச் சிறுவயதிலேயே கண்டுபிடித்த இந்தியர்” என்றான் கண்ணன்.

“கல்பனா சாவ்லா. வானம் தொட்ட பெண்” என்றான் பார்த்தா.

சிறிதுநேர மௌனத்திற்குப் பிறகு, “இதை ஏன் நீங்க யாருமே தேர்ந்தெடுக்கல?” என்று கேட்டாள் பூர்ணிமா.

அவள் கையில் இருந்தது ஒரு கண்ணாடி. அதுவும் படங்களுக்கு நடுவில் இருந்தது.

“நீங்க திறமைசாலிகள் இல்லையா? நீங்க வெற்றியடைவீங்கன்னு உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? உங்க லட்சியம் என்னனு நீங்களே உணரலியா?” – படபடவென்று கேட்டாள் பூர்ணிமா.

“சோஷியல் மீடியாவில் சாதிக்கணும்ங்கறதுதான் எங்க லட்சியம். குறுகிய காலத்தில் உலகமே வியந்து பார்க்கிற இளம் இன்ஃப்ளூயன்சர்களா வரணும்ங்கறதுதான்  எங்க லட்சியம். அதைத்தான் உடைச்சுத் தள்ளிட்டீங்களே!” என்றான் கார்த்திக் குரோதமாக.

கலகலவென்று சிரித்தாள் பூர்ணிமா. “நான் நீங்க என்ன செய்யப் போறீங்கன்னு கேட்டா, இன்னொருத்தர் செய்யறதைப் படம்பிடிக்கறதா சொல்றீங்க? உங்க வெற்றி, மற்றவங்களுடைய விபத்தில் இருக்குங்கறது வெட்கமா இல்லை?”

“எல்லாத்தையும் ரிப்போர்ட் செய்யணும் இல்லையா?” என்று கேட்டான் பார்த்தா பலவீனமாக. 

“அதனால் என்ன பயன்? நீங்க வளர்ந்த பிள்ளைங்க, அதனால் கேட்கறேன். நைட் க்ளப்பில் காபரே வெச்சா, பலர் வந்து பார்ப்பாங்க. எல்லாருக்குள்ளும் இருக்கற வக்கிரத்தைத் தீனிபோட்டு வளர்த்து, அதனால் புகழோ பணமோ அடையற அவங்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?”

நால்வரும் தலைகவிழ்ந்தார்கள்.




“தம்பிகளா, விளக்குக்கு வெளிச்சம் வெளியிலிருந்து வராது! விளக்கு தானும் எரிஞ்சு, பிறருக்கும் வெளிச்சம் தரணும். உங்க தன்னம்பிக்கையிலும் உழைப்பிலும்தான் வெற்றி இருக்கு. உபன்னியாசமா இருக்கலாம், ஆனா உண்மை இது.

“நீங்க வெற்றியாளர்கள்னு காட்டினவங்களைப் பாருங்க, பிறருடைய புகழ் வார்த்தைகளுக்காக எதையும் செய்யல, பிறருக்கு எப்படித் தங்களுடைய உழைப்புப் பயன்படும்னு யோசிச்சாங்க. குறைந்தபட்சம் விஞ்ஞானிகள் தாங்கள் உண்மையை அறியணும்னு நினைச்சாங்க. மற்றவர்களுடைய அங்கீகாரத்துக்காகக் காத்திருந்தா, சாதனைகள் நிகழ்த்தப்படாமலே போய்விடும். நமக்குப் போட்டி நாம்தான்! நம்முடைய இலக்கு நமக்குத்தான் தெரியும்! 

“பசித்திரு, தனித்திரு, விழித்திருன்னு சொன்னார் வள்ளலார். ஒன்றைச் சாதிக்கறதுக்கு, அந்தத் துறையில் அதிகமான அறிவை வளர்த்துக்கணும், படிச்சிட்டே இருக்கணும். அதில் மற்றவங்களோடு போட்டி போடறதையோ, அல்லது அவங்களால் கவனம் சிதறுவதையோ தவிர்க்கணும், நம் சாதனைப் பயணம் தடை படாதபடி, அதோடு அதனால் பிறர்க்கு எந்தச் சிறு துன்பமும் வந்துவிடாதபடி விழிப்பா இருக்கணும். இந்த ஃபார்முலாப்படி உழைச்சீங்கன்னா, எந்தத் துறையில் சாதிக்க விரும்பினாலும் தப்பில்லை. மீடியா இன்ஃப்ளூயன்சர்னாலும் சரி!” பூர்ணிமா புன்னகைத்தாள்.

நால்வரும் சிந்தனையில் ஆழ்ந்தார்கள். பிறகு “எங்க பாடப் புத்தகங்களைக் கொண்டுவரச் சொல்ல முடியுமா? இங்கே இருக்கற நாளை வேஸ்ட் பண்ண வேண்டாமே!” என்றான் கண்ணன்.

பூர்ணிமா புன்னகைத்தாள்.

“அதோட என்  காமிராவும் கிடைச்சா, இந்த காதம்பரி நிலையத்தைப் பற்றி ஒரு வீடியோ போடலாம்” – உற்சாகமாக ஆரம்பித்த கார்த்திக்கின் குரல் தேய்ந்தது. “சாரி அக்கா” என்றான்.

“கார்த்திக், நீ வீடியோ எடுக்கறதை நான் தடுக்க மாட்டேன். ஆனா நீங்க எல்லோரும் சுய பரிசோதனை செஞ்சுக்கிட்டு, இந்த நிலையத்தால் மற்றவங்க பயன்பெறணும் என்ற எண்ணம்தான் நீங்க வீடியோ போடக் காரணமான்னு கண்டுபிடிங்க. லைக்ஸ், கமெண்ட்ஸ், சப்ஸ்க்ரைபர்ஸ் என்ற சுழலைவிட்டு வெளியே வாங்க. உங்க மனசாட்சி சரின்னு சொன்னா, நீங்க தாராளமா வீடியோ போடலாம்” என்றாள் பூர்ணிமா.

நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். “எங்க புத்தகங்களை முதலில் வாங்கிக் கொடுங்க. கல்வியும் வயதும் நீங்க சொன்ன பக்குவத்தை எங்களுக்குக் கொடுக்கும்னு நம்பறோம்” என்றான் பார்த்தா.

“அதுவரை, பசித்திரு, தனித்திரு, விழித்திரு” என்றான் கோபி.

“முக்கியமாய் – படித்திரு!” என்றான் கண்ணன்.

எல்லோரும் சிரித்தார்கள்.

==========

 மனு மகேந்திரன் மனுவைக் கலெக்டரிடம் நீட்டினார். “அரசாங்கம் பஸ் வண்டிகளைச் சீர் செய்யறதுக்காக டெண்டர் விட்டிருக்காங்க. அதில் குறிப்பிட்டிருக்கற நிபந்தனைகள் எதுவுமே பூர்த்தியாக்காத ஒரு நிறுவனத்திற்கு டெண்டர் தரப்பட்டிருக்கு.  விதிமுறைகள் எல்லாம் மீறப்பட்டிருக்கு. நீங்க புலன் விசாரிச்சுப் பார்த்துக்கலாம். ஆதாரங்களை என் மனுவில் இணைச்சிருக்கேன்” என்றார்.

அதை வாங்கிக் கொண்ட கலெக்டர் “கண்டிப்பா கவனிக்கறேன்” என்றார்.

“நீங்க கவனிப்பீங்கன்னு எனக்கு நம்பிக்கை இல்லை. ஏன்னா, வெகு ஆழத்துக்குத் துருப்பிடிச்ச அமைப்பு இது! அரசுக்கும் நீதித்துறைக்கும் முறையிட்டுட்டேன். அவங்க எதையாவது செஞ்சா நல்லதுதான். ஆனா, நான் இதை விடப் போறதில்லை. கடைசி வரை பார்த்துடப் போறேன்” என்றார் மகேந்திரன்.

“கடைசி வரைன்னா? என்ன சொல்றீங்க? அதான் தரோவா விசாரிச்சுட்டதா சொல்றீங்களே! போய் அடுத்த வேலையைப் பாருங்க சார். இதுக்கு மேலே நாங்க பார்த்துக்கறோம்” என்றார் கலெக்டர் சலிப்பாக.

“தன்ராஜ், ரத்னவேலு… அப்புறம் யார்?” என்று கேட்டார் மனு மாகேந்திரன்.

கலெக்டர் திடுக்கிட்டாராயினும் “என்ன சார் ஏதேதோ உளர்றீங்க? வேண்டாத விஷயங்களில் தலையிட்டு, உங்க புத்தியே குழம்பிப் போச்சுன்னு நினைக்கறேன். ரெஸ்ட் எடுங்க” என்றார்.

“மாவட்ட ஆட்சியர் அவர்களே! உங்க மாவட்டத்தில் என்ன நடக்குதுன்னு உங்களுக்குத் தெரியும். அது எனக்கும் தெரியும். பஸ் ஓவர்ஆல் கான்ட்ராக்ட் எல்லாம் தன்ராஜ் என்பவருக்குத் தரப்பட்டிருக்கு. அவர் பினாமிதான். உண்மையான ஓனர் மிஸ்டர் ரத்னவேலு, அதுவும் தெரிஞ்சு போச்சு. ஆனா, எப்படி டெண்டர் வாங்கணும், என்னென்ன தில்லுமுல்லுகளைச் செஞ்சு பலகோடி கொள்ளையடிக்கணும்னு சொல்லித் தந்து தன் மேஜர்  பங்கை வாங்கிக்கற எஜமான் வேற ஒருத்தர். அவர்தான் உங்களை மாதிரி ப்யூரோக்ராட்ஸ்க்கும் படியளக்கற எஜமான். அவர் யாருன்னு நான் கண்டுபிடிச்சே தீருவேன் – நீங்க உதவினாலும், இல்லேன்னாலும்!”

அவர் பேசியதை கலெக்டர் கவனித்தாரோ இல்லையோ, சகாதேவன் வெகு கவனத்துடன் கேட்டுக் கொண்டிருந்தான்.




==============

அப்போதுதான் ரோஜாமணி கிளம்பிப் போயிருந்தாள். தெய்வநாயகம் தன் முகத்தில் அரும்பியிருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டு, அவள் பிளாஸ்க்கில் விட்டுவைத்துவிட்டுப் போயிருந்த காப்பியை டம்ளரில் வார்த்தார்.

“தாத்தா!” – கார்த்திக்கின் குரல் கேட்டுத் திடுக்கிட்டார்.

“கார்த்தி! என்னடா இங்கே வந்திருக்க? உன்னைக் காதம்பரி ட்ரஸ்ட்டில் இல்ல விட்டுட்டு வந்தோம்?” என்றார் பதறி.

“அங்கே போரடிக்குது தாத்தா” என்றவாறே உள்ளே வந்து அமர்ந்தான் கார்த்திக்.

“போரடிக்குதா? ஒரு போன் பண்ணியிருந்தா ஏதாவது கேம்ஸ் கொடுத்து விட்டிருப்பேனே! அதோடு போன் வெச்சிருக்கீங்களே, ஏதாவது டவுன்லோட் பண்ண வேண்டியதுதானே! இங்கே ஏண்டா வந்த?” தெய்வநாயகத்துக்குப் பதட்டம் அதிகமாகிக் கொண்டே போனது.

“ஏன் தாத்தா, நான் வீட்டுக்கே வரக் கூடாதா? அந்த அளவுக்கா என்னை வெறுத்துட்டீங்க?” என்று கார்த்திக் கேட்டதும் தெய்வநாயகத்துக்குக் கண்ணீர் மல்கியது. “இல்லடா தங்கம். நீங்க கொஞ்சநாள் அங்கே இருக்கறதுதான் சேஃப்” என்றார். “அதாவது… உங்க மனசு முழுவதுமா மாறி, நீங்க படிப்பில் ஈடுபட…”

“அதுக்கா, இல்லை ஜனாகிட்டருந்து எங்களைப் பாதுகாக்க நினைக்கறீங்களா?”

“ஜ… ஜனா…”

“எங்களை வீடியோ எடுக்கவும் சேனல் ஆரம்பிக்கவும், அப்புறம் ரயில் தண்டவாளத்தைப் பெயர்க்கவும் தூண்டின ராஸ்கல். அவனைத் தெரியாதுன்னுசொல்லிடாதீங்க தாத்தா!” கார்த்திக் எச்சரித்தான்.

தெய்வநாயகம் பெருமூச்சுவிட்டார். “தெரியும்” என்றார். “அந்த ராஸ்கல் உங்களைப் பழிவாங்கப் போறதா சகாதேவன் கிட்ட மிரட்டியிருக்கான். அதான் கொஞ்ச நாளைக்கு நீங்க…”

“கொஞ்ச நாளைக்குன்னா? எதுவரைக்கும் சார்? உங்க ஆளுங்க ஜனாவையும் அந்த மனு மகேந்திரனையும் போடற வரைக்குமா?” என்றவாறே முன்னால் வந்தான் கண்ணன்.

“டேய்! காய்கறிக்காரப் பயலே! என்னடா உளர்ற?”

“அவன் உளறலை. ரயில்வே ஆக்ஸிடெண்ட்டுக்குக் காரணமா யாராவது அப்பாவிப் பசங்களை மாட்டி விடச் சொல்லி நீங்க திட்டம் போட்டுக் கொடுத்தா, உங்க பேரனையே அவன் மாட்டிவிட்டிருக்கான்! இதில் அவங்களைப் பழிவாங்கறதா வேற சொல்றான்! நீங்க அவனைச் சும்மா விடுவீங்களா?” என்றவாறே உள்ளே வந்த சகாதேவனைப் பார்த்து அதிர்ந்தார் தெய்வநாயகம்.

“கவலைப்படாதீங்க! நீங்க அனுப்பிச்ச ஆளுங்க ஜனாவை வெட்டினாங்க. ஆனா அவன் சாகலை. கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் வாக்குமூலம் கொடுத்திட்டிருக்கான்!”

“ஜனா? ஆனா அவனுக்கு…”

“நீங்கதான் இதுக்கெல்லாம் மாஸ்டர் மைண்ட்னு தெரியாது! ரத்னவேலு மூலமா ஜனா நடத்தற சேனல் பற்றித் தெரிஞ்சுக்கிட்டு, நீங்க அதுக்கு ஸ்பான்ஸர் பண்ணி, அதன் மூலம் உங்க திட்டத்தை நடத்திக்க நினைக்கறீங்கன்னும் தெரியாது. 

“ஆனா இந்தப் பசங்களைக் காதம்பரி ட்ரஸ்ட்டுக்கு அனுப்பறதில் உங்க வீட்டில் இருந்தவங்களுக்கு மாறா உங்களுக்கு இருந்த ஆர்வம் என்னை ஆச்சரியப்படுத்திச்சு. அதுக்காக உங்களைப் பாராட்ட நான் மறுபடி உங்க வீட்டுக்குள்ளே வந்தபோது, நீங்க யார்கிட்டயோ போன் பேசிட்டிருந்தீங்க. சரின்னு நான் திரும்பினப்போ, ‘மனு மகேந்திரன்’ என்ற பெயர் அடிபட்டுச்சு. நான் ஆச்சரியப்பட்டேன்னாலும் அதை அப்படியே விட்டுட்டேன்.

“ஆனா ரத்னவேலுவுக்கும் மேலே இன்னொரு எஜமானர் இருக்கறதா மனு மகேந்திரன் சொன்னவுடனே, அவரைத் தனியா சந்திச்சுப் பேசினப்போ, அவர் உங்கமேல சந்தேகப்படறதாகவும், ஆனா அதுக்குச் சரியான ஆதாரங்கள் இல்லைன்னும் சொன்னார். 

“உங்களைக் கண்காணிக்க ஆரம்பிச்சோம். அதுக்கு எது உதவிச்சு தெரியுமா? உங்க பேரன்னே தெரியாம, நீங்க ரத்னவேலு, ஜனா மூலமா இவங்களுக்கு வாங்கிக் கொடுத்த நவீன கண்காணிப்பு மற்றும் ரெகார்டிங் கருவிகள்! நீங்க ஜனாவையும் மனு மகேந்திரனையும் குறி வைக்கறீங்கன்னு புரிஞ்சுக்கிட்டு அவங்களைக் கண்காணிச்சோம். ஆனா ஜனாவுக்கு வெட்டுப்படாம காப்பாற்ற முடியல. மகேந்திரனை உங்க கையாட்கள் நெருங்கும்போது பிடிச்சிட்டோம். அவங்கதான் உங்க விவகாரங்களை முழுசுமா கொட்டிட்டாங்க.

“பெரிய மனுஷன், பரோபகாரி என்ற போர்வையில, நீங்க என்னென்ன செஞ்சிருக்கீங்க! பஸ் ரிப்பேர் கான்டிராக்ட் எடுத்து, மிகக் குறைவா செலவழிச்சு, தாறுமாறா பண்ணிட்டு, கொடுத்த பணத்தைப் பூரா கொள்ளை அடிச்சிருக்கீங்க. அதனால் நம்ம தமிழ்நாட்டில் 40% விபத்துங்க அதிகமாயிருக்கு. அதைத் திசைதிருப்ப ரயில் விபத்தை ஏற்படுத்தப் பார்த்திருக்கீங்க. அதில் அப்பாவிகளான சின்னப் பசங்களை மாட்டிவிடவும் நினைச்சிருக்கீங்க. ஆனா ஜனாவோட சேனலில் சம்பந்தப்பட்ட பசங்களில் உங்க பேரனும் இருப்பான்ங்கறது நீங்க எதிர்பாராதது! நான் சொல்றது சரிதானே?” சகாதேவன் முடித்தான்.




தெய்வநாயகம் மெலிதாகச் சிரித்தார்.

“அந்த ராஸ்கல் ஜனா என் பேரன்னு தெரியாமலே  என் பேரனையும் மற்ற பசங்களையும் பழிவாங்கத் துடிச்சான். அதான் அவனைக் கொல்ல முடிவு செஞ்சு அவன் லாக்கப்பிலிருந்து தப்பிக்க உதவினேன். மனு மகேந்திரனும் என் பக்கத்தில் நெருங்கறார்னு தெரிஞ்சதும் அவரையும் கொல்ல ஆளனுப்பினேன். அவங்க மாட்டிக்கிட்டாங்க, இல்லையா? பரவாயில்லை. அவங்க சாட்சியத்தை உடைச்சு நிரபராதியா, அப்பாவியா, பரோபகாரியா மறுபடி இந்தச் சமூகத்தில் உலாவ என்னால் முடியும். என்னை உன்னால் ஒண்ணும் பண்ண முடியாது.”

“ரொம்ப தேங்க்ஸ் தாத்தா” என்றான் கார்த்திக் கண்ணீருடன்.

“எதுக்குடா? உங்களை ஜனாகிட்டருந்து காப்பாற்றினதுக்கா?”

“இல்லை, இப்படி உண்மை எல்லாத்தையும் ஒத்துக்கிட்டதுக்கு” என்று கார்த்திக் சொல்லும்போதே கோபியும் பார்த்தாவும் காமிராவுடன் ஒளிவிடங்களிலிருந்து வெளிப்பட்டார்கள்.

தெய்வநாயகம் கோபத்துடன் காமிராவைப் பிடுங்கப் பாய்ந்தார். “கஷ்டப்படாதீங்க சார். இந்தக் காட்சி மீடியால லைவ் போயிட்டிருக்கு” என்று லேப்டாப்பைக் காட்டினான் பார்த்தா.

தெய்வநாயகம் திடுக்கிட்டார். “உங்களை மாதிரிப் பெரிய மனுஷங்களைக் கைது செய்தாலும், நீங்க சாட்சியெல்லாம் கலைச்சு வெளியே வந்திடுவீங்களே! அதான் உங்க வாயால் ஒரு கன்ஃபெஷன், உலகம் எல்லாம் பார்க்கும்படியா, முக்கியமா மாஜிஸ்ட்ரேட், போலீஸ் கமிஷனர் இவங்க பார்க்கும்படியா ஒரு லைவ் வீடியோ வாக்குமூலம் வேணும்னு நினைச்சேன். நம்ம சேனல் கேங்க் தான் இருக்காங்களே! நீங்க வாங்கிக் கொடுத்த நவீன கருவிகளும் இருக்கு. உள்ளதை விளக்கிச் சொன்னேன்.  உதவறதா ஒத்துக்கிட்டாங்க” என்றான் சகாதேவன்.

தெய்வநாயகம் சோபாவில் சுருண்டு விழுந்தார்.

“அசத்தீட்டீங்க, பசங்களா! இதுதான்   அசல் ரிப்போர்ட்டிங்! உலகுக்குத் தெரிய வேண்டிய உண்மைகளையும் தகவல்களையும் அளிக்கத்தான் மீடியா இருக்கு, மனிதர்களின் பர்சனல் வாழ்க்கையை எட்டிப் பார்க்க இல்லை. பொய்களைப் பரப்புவதற்கு இல்லை! இதைப் புரிஞ்சுக்கிட்டீங்க, எக்ஸலெண்ட்” என்று மனமாரப் பாராட்டினாள் சகாவோட வந்திருந்த பூர்ணிமா.

“தாங்க்ஸ் அக்கா. ஆனா நாங்க இனி படிப்பிலதான் கவனம் செலுத்தப் போறோம். எங்க கனவு, இயற்பியல் விஞ்ஞானிகளா ஆகறது!” என்றான் கண்ணன்.

“ஆமா, பிரபஞ்ச உண்மைகளைக் கண்டறிஞ்சு, அதனால் உலகுக்கு மேலும் பயன் சேர்க்கறதுதான் இனி எங்க வேலை” என்றான் கோபி.

“செய்திகளையும் தகவல்களையும் மக்களுக்கு அளிக்கற வேலையை மற்ற இன்ஃப்ளூயன்சர்கள் பண்ணட்டும்! எங்க லட்சியம், நானோ பார்ட்டிக்கிள் ஆராய்ச்சி!” என்று உறுதியாய்ச் சொன்னான் பார்த்தா.

கண்ணீரைத் துடைத்துக் கொண்டு தலையாட்டினான் கார்த்திக்.

பூர்ணிமா அவர்களைப் பெருமையுடன் பார்த்தாள்.

“உங்க வேலை உங்களுக்குப் புரிஞ்சு போச்சு. இனி என் வேலையை நான் பார்க்கறேன்” என்றாள்.

ஆம்,  வினாடி நேரம்தான் வாழ்க்கையையே புரட்டிப் போடும். 

காதம்பரி இறந்தும் அவள் பேர் சொல்ல ட்ரஸ்ட் மட்டுமல்ல! தோழியின் இறுதி வார்த்தையை நிலைநாட்ட பாடுபடும் பூர்ணிமா போல் பலருடைய வாழ்வைக் காப்பாற்ற பலராலும் இந்த பூமி சுழன்று கொண்டேயிருக்கிறது தர்மத்தின் அச்சு மாறாமல்.!

(சுபம்)




What’s your Reaction?
+1
5
+1
5
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!