Serial Stories விநாடி நேர விபரீதங்கள்

விநாடி நேர விபரீதங்கள்-9

வினாடி…9

வாசலில் கண்ணீரும் கம்பலையுமாய்‌ நின்றிருந்த மனைவியைப் பார்த்து பதறினார் தெய்வநாயகம்.

“இப்ப தானே மாடிப்படியில் இருந்து விழுந்து ஆஸ்பத்திரியில் கிடந்து வந்தே.அதுக்குள்ள இது என்ன கோலம்?”

“நம்ம மல்லிகா மாப்பிளைக்கு..”

அதற்குமேல் சொல்ல முடியாமல் அழ ஆரம்பிக்க… 

மருமகள் தான் உதவிக்கு வந்தாள்.

“அக்கா வீட்டுக்காரருக்கு திடீர்னு நெஞ்சுவலியாம். ஆஸ்பிடலில் சேர்த்திருக்காங்களாம் மாமா. உடனே கிளம்புங்க. உங்க இரண்டு பேருக்கும் டிக்கெட் ஆன்லைனில் எடுத்திட்டேன். இவர் நைட் கிளம்பி வருவாரு.”

தெய்வநாயகத்துக்கு படபடவென்றிருந்தது. மூத்த மகள் மல்லிகாவை கொடுத்த இடம் அப்படியொன்றும் பிரமாதமில்லை. மல்லிகாவின் சாமர்த்தியத்தாலும்‌ அவளுடைய பொறுப்பான பிள்ளைகளாலும் குடும்பம் ஓடுகிறது. மாப்பிள்ளை ரொம்பவே நாசூக்கு பார்ப்பவர். மாமனார் தெய்வ நாயத்தின் உதவியை ஏற்கவே மாட்டார். இருப்பதைக் கொண்டு வாழணும் என்பது அவர் சித்தாந்தம். மிடில்க்ளாஸ் வாழ்க்கை. ஆனால் மிகவும் நல்ல மனிதர். இந்நிலையில் மாப்பிள்ளைக்கும் இதய பிரச்சினையென்றால்….நினைக்கவே பயமாயிருந்தது. மல்லிகாவின் மகன் இப்போது தான் கல்லூரியில் சேர்ந்திருக்கிறான்.

பல்வேறு கவலையில் சிக்கியவருக்கு கார்த்திக் பற்றிய விஷயம் மறந்தே போனது.

“அக்கா வீட்டுக்காரர் எப்படி இருக்காரு அப்பா?”

ரோஜா ஃபோன் செய்தபோது கூட அவர் பதற்ற மனநிலையிலேயே இருந்ததால் ஏதேதோ பேசி முடித்து பின் கொசுறாக “கொஞ்சம் கார்த்திக் மேல் ஒரு கண் வையம்மா” என்றார்.

அவ்வளவுதான் ரோஜாவுக்கு ஆங்காரம் ஆகியது.

“போதும் பா. உங்களுக்கெல்லாம் அக்காவும், அவள் பிள்ளையும் தான் ஒசத்தி. பக்கத்திலேயே இருக்கிறதால் நானும் என் பிள்ளையும் இளக்காரம். எப்ப பாருங்க ஒத்த பிள்ளையை கரிச்சு கொட்டறதே வேலையா போச்சு. இப்ப கூட உங்களால் தான் அவன் பரிட்சையில் மார்க் குறைஞ்சு போச்சு. அம்மாவோட நான் தங்கினதால பிள்ளை டென்ஷனில் சரியா எழுத முடியலை‌. கண்ணை மூடினா கிராண்ட் மாவோட இரத்தம் வழியும் தலை வந்து டிஸ்டர்ப் பண்ணிச்சு. நீங்களும் இல்லையா எனக்கு கவலையா இருந்தது. அது தான் தெரிஞ்சது கூட எழுதலைனு ஒரே அழுகை. அவன் பாசம் உங்களுக்குத் தெரியலையே”

ஆத்திரமாகப்  பேசி ஃபோனை வைக்க தெய்வநாயகத்துக்கு மனம் கசந்து போனது. பிள்ளைகள் வீணாய்ப் போவதற்கு அவர்களது தாய்களே முதல் காரணம். கண்மூடித்தனமான பாசம் எதில் கொண்டு விடப் போகிறதோ?

ரோஜாவுக்கு ஆறவேயில்லை. கோபியின் அம்மாவிடமும் இதைப் பற்றி புலம்ப ரேவதியோ தன் பிள்ளைக்கு திடீரென மறதி பிரச்சினை வந்து விட்டதாகவும் தன்னையே அவனுக்கு மறந்துவிடுவதாகவும் டாக்டரை கன்சல்ட் செய்ய போவதாகவும் ஒரு கதை சொன்னாள்.

பார்த்தாவுக்கு இந்த பிரச்சினையில்லை.இரவெல்லாம் அம்மா பக்கத்தில் உட்கார்ந்து படித்ததாய் அவன் அப்பாவிடம் கதையடித்து தப்பித்து விட்டான்.

எப்படியோ வீட்ல தப்பிச்சிட்டோம். ஸ்கூலில் பிரின்ஸி நம்ம பேரண்ட்ஸை மார்க் எடுக்கலைன்னு காய்ச்சி எடுப்பாங்களே. எங்கப்பா ஒருவழி பண்ணிடுவார்டா .”

பார்த்தா புலம்ப

கார்த்திக்கும் கோபியும் கவலைப்படவில்லை.

‘எங்க மம்மி கிட்டே எதுவும் செல்லுபடியாகாது.அவங்க பிரின்ஸியை வறுத்திடுவாங்க “

கார்த்திக் கான்ஃபிடன்டாய் நெஞ்சை நிமிர்த்த கோபி ஆமோதித்தான்.

“சரிடா அடுத்து நாம் என்ன பண்ண போறோம்?”

“யாரோ செய்றதை ஷூட் செய்யறதில என்ன த்ரில் இருக்கு? நாமே ஏதாச்சும் செய்யணும் டா.”

“மாட்டிக்கிட்டா தோலை உரிச்சிடுவாங்கடா.”

“அதெல்லாம் தெரியாதுடா.இரண்டு வீடியோ போட்டாச்சு.அதுவும் ஸ்கூல் வீடியோவையே யாரும் கண்டுபிடிக்கலை. சேனலும் லைக்ஸ்ல பிச்சு கிட்டு போகுது”




“என்ன செய்யலாம். மூணுபேரும் தற்கொலை செய்யற மாதிரி போடுவோமா? பிரின்ஸியை மாட்டிவிடலாம்..”

பார்த்தா சொல்ல மற்ற இருவரும் விழுந்து புரண்டு சிரிக்க…

அந்நேரம் பள்ளிக்குள் நுழைந்து கொண்டிருந்தான் சகாதேவன்.

எந்த படிக்கட்டில் விழுந்தாள்? யார் வீடியோ எடுத்தது? தவறி விழுந்தாளா விழ வைக்கப்பட்டாளா?

அவன் போலீஸ் மூளைக்குள் ஓடிய பல கேள்விகளுக்கு விடை தேடி வந்தவனுக்கு பள்ளியில் அத்தனை வரவேற்பில்லை.

பிரின்ஸிபால் வீடியோவைப் பார்த்து அதிர்ந்தாலும் பள்ளி மாணவர்களை விட்டுக் கொடுக்கத் தயாரில்லை.

“நீங்க யாரையும் விசாரிக்க கூடாது .அது பள்ளியின் ரேபுடேஷனை பாதிக்கும்.மேலும் இது பள்ளியில் விழுந்த வீடியோ மாதிரி தெரியல. வேறு எங்கோ நடந்த மாதிரி இருக்கு.”

அதற்குமேல் அங்கே விவாதிக்க விரும்பாதவன்

“சரி சார்.நான் கொஞ்சம் ஸ்கூலை சுத்தி பார்த்திட்டு போறேன் .”

அவர் சொல்வது போல் மாணவர்கள் அங்கே கட்டுப்பாடாய்த்தானிருந்தார்கள்.

வனிதா விழுந்த படிக்கட்டு மேற்கு பார்க்க இருந்தது.பள்ளியின் பக்கத்து காம்பவுண்டில் ஒரு அபார்ட்மென்ட் இருந்தது. ஒருவேளை அங்கிருந்து யாரேனும் எடுத்திருப்பார்களோ.

மெல்ல செக்யூரிட்டியிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தான்.

ஒன்றும் தேறவில்லை.

இல்லை..இதை நான் விட முடியாது.என் தங்கையின் வாழ்வும் என் போலீஸ் வேலைக்கான கடமையும் இருக்கிறது. இதை எப்படியாவது கண்டுபிடித்து குற்றவாளிக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பேன்.

சகாதேவன் யோசித்தபடியே வெளியே வந்தவன்…

அந்த திருப்பத்தில் நிற்பவன் யாரது? அவன் முகத்தில் கட்டியிருந்த கைகுட்டையும் ஹெல்மேட்டும் முகத்தை மறைத்தாலும் அந்த உடல்மொழி…

இவன்…ஜனா மாதிரியிருக்கே…!

மாதிரியென்ன ஜனா தான். அவனுக்கு ஸ்கூலருகே என்ன வேலை? ஒருவேளை இது ஜனா வேலையாய் இருக்குமோ? 

அவன் பார்த்த சமயத்தில் ஜனாவும் பார்த்து விட்டான்.

ஓஹோ துப்பறியும் சாம்பு வந்திட்டாரோ..ஹா ஹா..முட்டாள்..நீ தலைகீழா நின்றாலும் கண்டுபிடிக்க முடியாது. எப்படி உன்னை டைவர்ட் பண்றேன் பார்! மனசுக்குள் கறுவிக் கொண்டவன் பைக்கை அரைவட்ட மடித்து திருப்பி அபார்ட்மென்டுக்குள் நுழைந்தான்.அங்கே செக்யூரிட்டியாய் இருப்பது அவனது மாமா பழனி என்பது சகாதேவனுக்குக்குத் தெரியாது

ஓ…இங்கே போகிறான். அப்படியானால் ஜனாதான் இந்த வேலையை செய்திருப்பான்.

பொறுக்கி! இவனெல்லாம் திருந்தவே மாட்டான். என்னோடு பிரச்சினைனா என்கிட்ட மோதணும். அதைவிட்டு ஒரு பெண் பிள்ளையிடம் இவன் புத்தியைக் காட்டிட்டானே. இனி இவனுக்கு பாவம் பார்க்கக் கூடாது‌. இருடா முட்டிக்கு முட்டி தட்டி கம்பி எண்ண வைக்கிறேன். உடனடியாக  விஷயத்தை  தன் நண்பர்கள் அரசுவிடமும், சந்தானத்திடம் சொல்லி உதவி கேட்க வேண்டும்.

வண்டியைத் திருப்பி வேகமாக ஓட்ட எதிரில் வந்த பெண் மீது மழைநீர் வாரியடித்தது.

“ஸாரிங்க..தண்ணி‌ இருக்கிறதை கவனிக்கல.”

வண்டியை விட்டு இறங்க முயல அந்த பெண்ணோ 

 “பரவாயில்லைங்க அடுத்து பெரிய பள்ளம் இருக்கு பாத்துப் போங்க”

என்றபடி நகர்ந்தாள். 

அவள் வெண்மதி.

கொதித்துப் போய்க் கிடந்த அகமும்,புறமும் கொஞ்சம் போல குளிர்ந்தது அந்தக் காவல் துறை அதிகாரிக்கு! 

‘மழைத் தண்ணி வாரியடிச்சதுக்கு இறங்கி ஸாரி கேட்கிறார். பரவாயில்லை..அக்கா தங்கச்சி கூட பொறந்திருப்பார் போல! மனசுக்குள் கண்ணன் வந்தான். தம்பியும் பைக் வாங்கிக் கொடுத்தா இப்படித்தான் ஸாரி கேட்பான்.

ஹூம்..அவனுக்கு ஒரு ஸ்மார்ட் ஃபோன் வாங்கிக் கொடுக்க இத்தனைபாடு பட வேண்டியிருக்கு‌. ஃபோன் இருந்தால் தம்பி புரியாத பாடத்தையெல்லாம் ஈஸியாக படிச்சிடுவான்.’

 அதுக்குத்தான் அவளும் ஓவர் டைம் பார்த்து காசு சேர்க்கிறாள். ஆனால் இன்று இந்த மாதாந்திர தொல்லையால் சீக்கிரமே வந்துவிட்டாள். வயிற்றுவலியும் கால்வலியும் அவளைப் படுத்துகிறது. நல்லா சத்தா சாப்பிடணும் னு போனதடவை டாக்டர் சொன்னார்.அவள் நன்றாக சாப்பிட்டால் தம்பியை எப்படி இன்ஜினீயர் ஆக்குவது? பணம் சேர்த்தால் தான் அவள் கனவு நிஜமாகும்.

யோசித்தபடியே வந்தவள் வீட்டருகே ஜனாவின் பைக்கை பார்த்ததும் எரிச்சலானாள். இதெல்லாம் ஒரு ஜென்மம்..தூ…!

படியேறியவள் இடதுபுற காரிடரில் கண்ணனோடு அவனைப் பார்த்ததும் அதிர்ச்சியானாள். ஜனா கண்ணனின் தோளில் கைபோட்டபடி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான்.

இந்நேரத்தில் வெண்மதியை எதிர்பார்க்காத கண்ணன் திகைத்துப் போனான்.

“என்னக்கா மேலுக்கு முடியலையா? சீக்கிரமே வந்திட்டியே.”

“நான் வர்றது இருக்கட்டும். எத்தனை நாளா இந்த பழக்கம்?”




“எதுக்கா?”

“அந்த வீணாப் போனவனோட சிநேகிதம்?”

“இல்லைக்கா..அது வந்து..”

“இதோ பார் கண்ணா! நீ நல்லவன் இந்த கழுதைகளோட சேர்ந்தே நாசமா‌ போயிடுவே. நானும் அம்மாவும் உன்னை மலைபோல் நம்பியிருக்கோம்.ஸஇவன் சவகாசம் உனக்கு வேணாம்.அம்மாவுக்குத் தெரிஞ்சா தொலைச்சிடும்.”

கண்ணனுக்கு நெஞ்சம் நடுங்கியது.

“ஐயோ அதெல்லாமில்லைக்கா. என் கிட்ட ஃபோன் இருக்கானு கேட்டார். அவ்வளவு தான். நான் கிளம்பறேன் கா. கோபி வீட்டுக்கு போய் இங்கிலீஷ் நோட்ஸ் வாங்கிட்டு வர்றேன்.”

தப்பித்தால் போதும் என வேகமாக சைக்கிளை எடுத்துக் கொண்டு நகர்ந்தான்.

‘அக்கா கிட்ட எதையும் மறைக்க முடியாது. மூஞ்சியைப் பார்த்தே கண்டுபிடிச்சிடும். இந்த பயலுங்க கிட்ட சொன்னா  கேட்க மாட்டாங்க.கார்த்திக் ரொம்ப துடியா நிக்கிறான்.’

 கோபி வீட்டை நோக்கி இவன் கிளம்ப…

அங்கே மற்ற மூவரும் சீரியஸான டிஸ்கஷனில் இருந்தார்கள்.

“ஜனா அண்ணா சொல்றதை மாசத்துக்கு இரண்டு மட்டும் செய்வோம்.மற்றபடி நாம் அட்வென்ச்சரா ஏதாவது செய்யணும் டா. அப்ப தான் நாம் ஃபேமஸ் ஆவோம்.”

“ஆமாண்டா..என்ன செய்யலாம்?”

“கார்த்திக் கைநரம்பை வெட்டலாம் டா!”

“அய்யோ! “

“பேசாம ஏதாவது டவரில் இருந்து குதிப்போமா?”

“அது ஓல்டு மாடல்..”

“அப்ப மலையிலிருந்து கயிறு கட்டி கீழே குதிப்போமா டா? த்ரில்லுக்கு த்ரில்..என்ஜாய் மென்டா இருக்கும்.”

“யார் குதிக்கிறது?”

“கண்ணனை குதிக்க சொல்வோம் டா. நாம ஷூட் பண்ணுவோம்.”

“அவன் தான் ஃபேமஸ் ஆவான். நமக்கென்ன லாபம்?”

‘’யோசிப்போம் டா..”

அவர்கள் மூளையை கசக்கிக் கொண்டிருக்க…

கண்ணன் சைக்கிளை கோபி வீட்டு காம்பவுண்ட் அருகில் நிறுத்தி உள்ளே நுழைய முற்படுகையில்

முரட்டுக் குரலொன்று தடுத்தது.

“தம்பி நில்லு பா. உனக்கு ஜனாவை தெரியுமா?”

(விபரீதங்கள் தொடரும்)




What’s your Reaction?
+1
4
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!