Serial Stories விநாடி நேர விபரீதங்கள்

விநாடி நேர விபரீதங்கள் -7

வினாடி..7

“ஜனா அண்ணா! இந்தாங்க வீடீயோ. வெற்றிகரமா முதல் ஷூட் பண்ணிட்டோம்.!”

பார்த்தாவும், கார்த்தியும் சிறிய பென் ட்ரைவை ஜனாவிடம் அளித்தனர். 

கோபி ஆர்வத்துடன் ஜனாவின் ஹேர்ஸ்டைலைப் பார்த்தபடி இருக்க.. ஜனா அந்த பென் ட்ரைவை கம்ப்யூட்டரில் நுழைத்தபடி கேட்டான்.

“எங்கடா அவன் உங்க கூட்டாளி கண்ணன்? அவனை விட்டுட்டு நீங்களெல்லாம் வந்திருக்கீங்க?”

“அவன் சரியான பயந்தாங்கொள்ளி அண்ணா. நாங்க எடுத்த வீடீயோவுக்கு ப்ளான் போட்டது அவன்னாலும் எங்க ஸ்கூலுக்குள்ள நின்னு வீடீயோ எடுத்தது நாங்க தான். அவன் என்னடான்னா வீடீயோவ பார்த்ததும்..

“டேய்.. என்னடா இது? டீச்சரைப் போயா?” அப்படின்னு ஜகா வாங்கறான் அண்ணா.”

“டீச்சரா? டேய்.. இதோ விழறாங்களே! அவங்க டீச்சரா? உங்க க்ளாஸ் டீச்சராடா?” ஜனா கண்கள் விரிய படபடத்தான்.

“ஆமாண்ணா. தலைக்கு குறிவச்சா இவங்க திடீர்னு வந்துட்டாங்க!”

“தலைன்னா?”

“எங்க க்ளாஸ் லீடர் தான் தலை. அவனை எங்களுக்குப் பிடிக்கவே பிடிக்காது.  வனிதா டீச்சர் சட்டுன்னு வந்ததும் எங்களால தடுக்க முடியாம போச்சுண்ணா. இது வேணாம்னா டெலிட் பண்ணிடுங்க.”

“ஏண்டா டெலிட் பண்ணனும்? லட்டு மாதிரி விஷயம் கொடுத்திருக்கீங்க! லவ்லி செல்லம்ஸ்டா நீங்க? சரி.. யாரோட ஐடியாடா இது? வாசல் மிதியடில என்னத்த போட்டீங்க?” ஜனா வீடீயோவை திரும்பத் திரும்ப பார்த்து அறையதிரச் சிரித்தான்.

“ரொம்ப சின்னசின்னக்  கோலிக்குண்டு அண்ணா. நம்ம கண்ணன் தான் ஐடியா மாஸ்டர். ஆனா பாவம்ண்ணா! அந்த வனிதா டீச்சர் ரொம்ப நல்ல டீச்சர்!”

“ம்ஹான்! ப்ச்ச்! பாவம்ல்ல!” ஜனாவின் உதடு பாவமாய் பாவம் காட்டியது. 




கண்ணன் தயங்கித் தயங்கி உள்ளே வந்தான். 

“அதான் அண்ணா சொன்னேன். ஏதாவது பையனைத் தட்டுங்கடான்னா டீச்சர்.. அதுவும் சூப்பரா பாடம் நடத்தறவங்களை விழ வைச்சு.. வேணாண்ணா! இதப் போடாதீங்க! எங்கம்மா சொல்லி இருக்காங்க. பொம்பளப் புள்ளைகள பெத்த தாயா நினைச்சு வணங்கணும்ன்னு!” கண்ணன் அழுகையில் உதடு பிதுக்கினான்.

“டேய்.. பொம்பளையாடா நீ? அழுகற. இந்த மாதிரி “ விநாடி விபரீதங்கள்ன்னு” சேனல் பேரு வச்சிட்டு இப்படி சடன் ஆக்சிடெண்ட்ஸ் தான் எடுக்க முடியும். உங்க பாடமா படிக்க முடியும்? சேனலுக்கேத்த மாதிரி வீடீயோ எடுங்கடா!” ஜனா கத்தினான்.

“வேற எடுக்கலாம் ண்ணா! இது வேணாம்!”

“கண்ணா! சொல்றத கேட்க மாட்டியா. இது இருக்கட்டும்டா. இப்படித் தான் இருக்கணும். இதுக்கு பொருத்தமா ம்யூசிக் சேர்த்து ஏத்த இறக்கத்தோட பேசி வலைப்பதிவு பண்ணிட்டா சும்மா லைக்ஸ் அள்ளும்ல. அதுவும் நீங்க எடுத்த ஆங்கிள்.. சும்மா..சூப்பர்ல!” ஜனாவின் துச்சாதத்தனம் அங்கு வெளிப்பட அதைப் புரிந்து கொள்ளும் அளவு இவர்களுக்கு எட்டவில்லை. விபரீத விளையாட்டில் கால் வைத்து விட்டனர். எங்கெல்லாம் இழுத்துச் செல்லப் போகிறதோ? 

அறியாப் பருவத்தினர் பாவம்!  விளக்கு எனப் பெருந்தீயை நம்பி விழுந்து விட்டனர். சுடரணைய வெளிச்சம் என நம்பி வந்தவர்கள் சூழப் போகும் பெருந்தீயின் முன் என்ன செய்வார்கள்? 

“அண்ணா!”

“கிளம்புங்கடா! அடுத்த ப்ரொஜெக்ட் முத்துப்பேட்டை சிக்னல் கிட்ட!. நம்ம தோஸ்து அங்க வீலிங் பண்ணுவாப்ல. அழகா வீடீயோ எடுக்கணும். என்ன கோபி! ஓகேயா? இந்த கண்ணன் பய பயந்தான்னா ஓரம் கட்டுங்க! . இந்த தடவை உழைப்புக்கேத்த ஊதியமா கேஷ் அமௌண்ட் தரேண்டா உங்களுக்கு என்ன மஜாவா?” சிரிப்புடன் அவர்களை கை குலுக்கி வெளியே அனுப்பினான்.

இரண்டும் கெட்டான் வயது. புத்தி சொல்பவர்களைப் பிடிக்காது. புத்தியைச் செலவழிக்கவும் பிடிக்காது.

“என்னடா கண்ணா! நீ வரலியா? நாங்க அடுத்த ப்ரொஜெக்டுக்கு ரெடி!” கோபி சொல்ல..

“வருவாண்டா. அதெல்லாம் வராம எங்க போவான்? அவங்கம்மாக்கு அப்பப்ப கடன் கொடுக்கறது எங்கம்மா தானே. இல்லன்னா இவங்கக்கா படிச்சுருப்பாங்களா? நான் எங்க கூப்பிடறேனோ வந்து தான் ஆவான்.  என்ன கண்ணா.. கிளம்பலாமா?” கார்த்தி உரிமையுடன் தோளில் கை போட்டு இழுத்தான்.

கூடா நட்பு! இதை என்று கண்ணன் புரிந்து கொள்ளப் போகிறான்? பணத்தை நாம் ஆண்டால் அது நமக்கு அடிமை. பணம் நம்மை ஆண்டால் அதற்கு நாம் அடிமை. இங்கு பணம் படைத்தவன் கார்த்தி. 

“வரேண்டா!”

“அத்த்..து!”

இது தான்.. நல்லவைக்கும் தீயவைக்கும் ஒரே ஒரு நிமிட அவகாசம் தான். நிகழ்வொன்று நடக்க ஒரு நிமிடம்.. ஒரே ஒரு நிமிடம் அவகாசம் போதும். அதைக் காக்க தவறி விட்டான் கண்ணன். இழுத்த இழுப்புக்கு அவன் போக அவனை எங்கே போய் நிறுத்தும் இந்த பொல்லாத விதி?

முத்துப்பேட்டை சிக்னல் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்க நால்வரும் கண்ணகலாது பார்த்துக் கொண்டிருந்தனர். 

கார்த்தியின் கையில் உள்ள போன் அனைத்தையும் காட்சியாக்கிக் கொண்டிருந்தது. எந்தப் பக்கமிருந்து யார் வீலிங் செய்து கொண்டு வரப் போகிறார்கள்?  உன்னிப்பாய் கவனித்துக் கொண்டிருந்தனர்.

போன் அடித்தது.

“டேய் ஜனா அண்ணாடா!”

“எடுடா.. லொகேஷன் மாத்திட்டாரோ?” கோபி பரபரத்தான்.




“என்னண்ணா?”

“அந்த டீச்சர் பேரு என்னடா? என்னவோ சொன்னீங்க மறந்துட்டேன்!”

“வனிதா ண்ணா! வனிதாமணி”

“யெஸ்!”

போனை வைத்த ஜனாவின் உள்ளம் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்திருந்தது. 

“மாட்டினடா சகா! என் இனிய எதிரியே! என்னையா பகைச்சுக்கிட்ட? இப்ப உன் தங்கச்சி வீடீயோ எங்கையில! சும்மா நெட்ல விட்டேன்னு வை. உங்க குடும்பமே லபோதிபோன்னு ஓடி வருவீங்க! அதுலயும் உன் தங்கச்சி மெதுவா தான் வரும். அதான் இப்ப விழுந்து வாரி இருக்கே.” ஜனா பெருங்குரலெடுத்துச் சிரித்தான்.

வனிதாவின் வீடீயோவைப் பார்த்ததுமே கண்டுபிடித்து விட்டான் அது சகாவின் அச்சுப்பிரதியென்று.

சகா.. சகா தேவன் காலேஜில் இவனுக்கு  சீனியர். போதி மரத்து புத்தன் மாதிரி நியாயம் தர்மம் நேர்மைன்னு பேசிக் கொண்டு இருப்பான். எல்லா முறையும் சகாவால் மட்டுமே ஜனா காலேஜில் மாட்டி இருக்கிறான். 

‘என்னிக்காவது ஒரு நாள் என் கையில் வசமா சிக்குவடா நீ! அப்ப வச்சுக்கறேன்னு சகாதேவனிடம் சவால் விட்டோமே. அதைச் செய்ய லட்டு மாதிரி சான்ஸ் கிடைச்சிருக்கு. ஜனா! நீ சிங்கம்டா! இறங்கி அடிடா அவனை!’

தனக்குத் தானே சொல்லிக் கொண்டவன் வெறி கொண்ட வேங்கையாய் பதிவேற்றினான்.

“வனிதைக்குப் பாவம்.. வாசல் சறுக்கலா? வாழ்வுச் சறுக்கலா? வந்தார் விழுந்தார் வலுவிழந்தார்” கேப்ஷன் போட்டு மியூசிக் சேர்த்தான். 

பொருத்தமான இசையுடன் பின்னணியில் இவன் குரல் ஒலிக்க வனிதாமணி வந்தாள்.. சரிந்த வேகத்தில் உடை  நெகிழ்ந்து விலகிப்போக விழுந்தாள். . இணையத்தில் கலந்தாள்.

“டேய் கார்த்தி! என்ன இங்க நிக்கற? என்னடா விஷயம்?” சிக்னலில் தன்னருகே வந்து நின்ற காரைக் கவனிக்காத கார்த்தியைக் குரலால் கவனிக்க வைத்தார் தெய்வநாயகம்.

“தாத்தா! அது வந்து.. சும்மா ப்ரெண்ட்ஸோட..!”

“யாருடா அது? ஓ! கண்ணனா? நீயுமாடா சுத்தற? நல்ல பையன்னு நினைச்சேனே! அட.. கோபியும், பார்த்தாவுமா? சரிதான். நல்லா தான் கூட்டு சேர்ந்திருக்கீங்க!”

“தாத்தா.. வந்து.. நாங்க சும்மா தான்.. அம்மா கிட்ட சொல்லிடாதீங்க!”

பையன்கள் கிட்ட என்னவோ இருக்கு. ஏன் இந்த தடுமாற்றம்? தெய்வநாயகம் மனம் அவர்களின் உடல் மொழியைக் கணக்கிட்டது. 

அவர்கள் கண்களில் தெரிந்த பதட்டத்தைக் குறித்துக் கொண்டார். 

ஏதோ ஒரு தப்பு பண்றானுங்க. அதையும் முதல் தடவையா பண்றானுங்க. அது தப்புன்னு தெரியாமயே பண்றானுங்க.  இது தான் அவரின் கணிப்பாக இருந்தது.

“படிக்க ஒண்ணும் இல்லையா பசங்களா?”

கோபி சுதாரித்துக் கொண்டான்.

“அதுக்குத் தான் இங்க வந்தோம் சார்!”

“சிக்னலுக்கா? படிக்கவா? என்னடா காது குத்துறீங்களா?”

அவரது அனுபவம் நீ கோலத்தில் பாய்ந்தா நான் தடுக்கில் பாய்வேண்டா என்றிருக்க கண்ணன் பயத்துடன் 

“அது வந்து தாத்தா ஜனாண்ணா தான் சிக்னல்ல..”

பார்த்தா சட்டென்று சைக்கிள் பெல்லை அடித்து விட தெய்வநாயகத்துக்கு ஜனா என்ற வார்த்தைக்குப் பின் எதுவும் கேட்க வில்லை.

“யாருடா ஜனா?”




“எங்க ஜனார்த்தனம் சார் தாத்தா!  சிக்னல் சிஸ்டம் ப்ரொஜெக்ட் குடுத்திருக்கார். ரியல் டைம் ப்ரொஜெக்ட். இந்தாருக்கு பாருங்க.. இந்த சிட்சுவேஷனை அப்படியே ப்ரொஜெக்டாய்க் கொண்டு வரணும். நான் , கோபி, பார்த்தா தான் டீம் மேட்ஸ். இவன் இந்தக் கண்ணன் ஒரு கொசுறு. எங்களைப் பார்த்துத் தானே அவன் படிக்கறான். அதான் கூடச் சுத்தறான். நீங்க கிளம்புங்க தாத்தா. நாங்க பின்னாடியே வரோம்!” 

“பார்த்து இருங்க! அவ்வளவு தான்!” 

அவரின் கண் அவர்கள் மேல் பதிந்து விட்டது.

(விபரீதங்கள் தொடரும்)




What’s your Reaction?
+1
3
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!