Serial Stories விநாடி நேர விபரீதங்கள்

விநாடி நேர விபரீதங்கள்-12

வினாடி.. 12

“அந்தக் கண்ணன் பய வந்தா வீட்டுக்குள்ளயே விடாதடி வெண்மதி. எனக்கு அவன் பிள்ளையே இல்ல. இல்ல.. இல்ல.. என் கண்ணன் அப்படி பண்ணி இருக்க மாட்டான். யாருடி உனக்குப் போன் பண்ணிச் சொன்ன அந்த போலீஸு? அவனை வரச் சொல்லு. எம் புள்ள ஏப்ப சாப்பையா இருக்கறதால இல்லாத கேஸை எல்லாம் கொண்டாந்து எம் புள்ள தலைல இட்டாறானா அந்தப் போலீஸூ!” கனகம் கண்ணன் மேல் கொண்ட பாசத்தால் மெய்யோ பொய்யோ என அல்லாடினாள். 

வாசலில் கூட்டம் சேர்ந்து விட்டது. 

“ரயில்வே ட்ராக்ல பாம் வச்சானாம்டா!”

“இல்லடா! பாம் வச்சத கண்டுபிடிச்சு அவன் தான் எல்லாரையும் காப்பாத்தினானாம்.”

“பாம் இல்லடா! தண்டவாளம் விரிசல் விட்டிருந்துச்சாம்!”

“நம்ம கண்ணனாடா செஞ்சான். ஒரு நாளில் ஹீரோ ஆகிட்டாண்டா!”

பலவித குரல்கள் கலந்தொலிக்க வெண்மதி எழுந்தாள்.

பக்கத்து வீட்டு, எதிர் வீட்டுப் பெண்கள் அங்கு வந்திருக்க..

“கொஞ்சம் அம்மாவைப் பார்த்துக்கங்க ஆண்ட்டி! நான் போய் கண்ணனைக் கூட்டியாரேன்!”

“அவனைத் தான் நியூஸ் சேனலில் காமிச்சுக்கிட்டே இருக்காங்களே வெண்மதி. போலீஸ் ஸ்டேஷன்ல இருப்பான் போலிருக்குது!”

“ஆமா ஆண்ட்டி. ஆனா பயந்துக்குவான். நான் போய் பக்கத்தில் இருக்கணும்!” சிட்டாகப் பறந்து விட்டாள். 

போலீஸ் ஸ்டேஷன் வாசலில் நுழையும் போதே சகாதேவன் அவளைப் பார்த்து விட்டான். சட்டென்று விரைந்து வெளியில் வந்தவன் வராந்தா பீரோக்களின் மறைவில் அவளை தன் கையணைப்பில் கொண்டு வந்தான்.

“இங்க ஏன் வந்த வெண்மதி? மீடீயா பெர்ஸன்ஸ் நிறைய இருக்காங்க. மீடீயா வெளிச்சம் உன் மேல படறத நான் விரும்பல!”

“என் தம்பி?”

“வருவான். அத்தனை பேர் உசுரைக் காப்பாத்தி இருக்கானே. அதனால மக்கள் பார்வை அவன் மேல திரும்பி இருக்குது. ஆனா அவன் தப்பும் செய்தான்!”

“தப்பா? என்ன.. என்ன செஞ்சான்? எதுவும் பெரிய விஷயமா?”

“பசங்க தங்களை பெரிய ஹீரோவா நினைச்சுக்கறதால வர்ற வினை. சேரக் கூடாத இடத்தில் சேர்ந்து அவங்க சொல்ற வேலையைச் செய்யறது!”

“என் தம்பியா? அப்படி என்ன செய்தான்?” மனம் படபடத்தது வெண்மதிக்கு.

“என் தங்கை வனிதாமணி விழுந்து வாரினது எப்படி நெட்ல ஒளிபரப்பாச்சு தெரியுமா? உன் தம்பியும் அவன் கூட்டாளிங்களும் ஜனாவுக்கு வீடீயோ எடுத்துக் கொடுத்ததால!”

“ஹக்..!” 




“பயப்படாத! நான் இதை இன்னும் வெளியில் சொல்லலை. என் மச்சினனை நானே எப்படி காட்டிக் கொடுப்பேன்.” கண் சிமிட்டினான் சகாதேவன்.

“மச்சினனா? யார்? என் தம்பி கண்ணனா?” வாயைத் திறந்தாள் வெண்மதி.

“க்ளோஸ் திஸ் லிட்டில் மவுத்!” அவள் வாயை தன் கையால் மூடியவன்..

“யெஸ் மதி! மச்சினனே தான். மனைவியின் தம்பியை மச்சினன்னு தானே சொல்வாங்க! கிளம்பு வீட்டுக்கு. உன் தம்பி பேர் கெடாது. அதுக்கு நான் உத்தரவாதம்!”

“ஆனாலும் எனக்காக பார்க்க வேண்டாங்க. உங்க ரூல்ஸ் படி செய்யுங்க. அவனை நல்ல பிள்ளையாக்கி எங்க கிட்ட ஒப்படையுங்க. போதும்.” நகர்ந்த வெண்மதி தான் இன்னும் அவனது வலிய கரங்களுக்குள் நிற்பதை உணர்ந்தாள்.

“ப்ளீஸ்!”

“கிளம்புடா! எப்படி இருந்தாலும் கவர்ன்மெண்ட் ரூல்ஸ் பிரகாரம் குற்றம் செய்யும் சிறுவர்களை நான் ஒப்படைக்க வேண்டியது காதம்பரி ட்ரஸ்ட்டிடம் தான். அங்கு கவுன்சிலிங் முடிஞ்சு தான் இந்த பசங்க அவங்கவங்க வீட்டுக்குப் போவாங்க. வந்துருவான். கிளம்பு. போய் என் மாமியாரைப் பத்திரமா பார்த்துக்க!” 

அப்படியே திருப்பி வந்த ஆட்டோவில் ஏற்றி அனுப்பி விட்டான் சகாதேவன். அவன் மனம் வெண்மதியால் சந்தோஷம் கொண்டிருந்தது.

மெல்ல மெல்ல வனிதாமணிக்கும் சந்தோஷம் கிடைத்து விடும் என்று நம்பினான் அவன். 

“இன்ஸ்பெக்டர் சகாதேவன்!”

“யெஸ். நான் தான். நீங்க?”

“நான் தெய்வநாயகம். இவ என் மக ரோஜாமணி. நான் ஒருதலைப்பாடா அடிச்சுக்கிட்டேன் சார். இவ தான் ஒரே புள்ளைன்னு கார்த்திக்குக்கு செல்லம் கொடுத்துக் கெடுத்துட்டா!”

“ஓ.. கார்த்திக்கின் அம்மாவும், தாத்தாவுமா? அவங்கப்பா?”

“அவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார் சார்!” என்றாள் ரோஜாமணி.

“ஐ சீ.. வெளிநாட்டு சம்பாத்தியம். ஒரே மகன். ஓவர் செல்லம். கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கீங்க. அதன் வினை சேனல் அது இதுன்னு ஒரேநாளில் பாப்புலராகணும்னு  ஆசைப்பட்டு வேண்டாத இன்னும் சொல்லப் போனால் விபரீத வீடீயோக்கள் போடற அளவு வந்திருக்கு.”

“எம் பையனுக்கு எதுவும் தெரியாது சார். எல்லாம் அந்த ஜனா தான்!”

“பார்த்தீங்களாம்மா. இப்பவும் பாசம் உங்க கண்ணை மறைக்குது. உங்க பையனுக்கு எதுவும் தெரியாதுன்னு வச்சுக்கிட்டாலும் அவனுக்கு அந்த ஜனாவைத் தெரியுமேம்மா.”

“ஏய்..ரோஜாமணி. இன்னுமா உன் பிள்ளைய நம்புற? தப்பு பண்ணி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்திருக்கான் அவன். இன்ஸ்பெக்டர் சார்.. நாங்க இப்ப கார்த்திக்கைப் பார்க்கலாமா?”

“முடியாதே சார். அவங்களை காதம்பரி ட்ரஸ்ட்க்கு கூட்டிட்டுப் போய் கவுன்சிலிங் கொடுக்கணும். அதன் பின் அவங்களே வீட்டுக்கு வந்திருவாங்க.”

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே கோபியின் அம்மாவும், பார்த்தாவின் அம்மாவும் ஓடி வந்தார்கள். அவர்களுக்கும் அதே பதிலைச் சொன்னான் சகாதேவன். 

“தூர இருந்து பிள்ளைகளைப் பாருங்கம்மா. ஐஸ்ட் அவே ஃப்ரம் மீடீயா. அண்டர்ஸ்டேண்ட்.” தொப்பியை அணிந்து கொண்டு அவன் நடக்கும் போது தெரிந்த மிடுக்கு அவனது கண்டிப்பை வெளிச்சம் போட்டுக் காட்டியது.




அரசுவும், சந்தானமும் சகாதேவனை நெருங்கினர்.

“சார்.. அந்த ஜனா நாம நினைச்சத விட பயங்கரமானவன் சார்.அவன் சாதா பொறுக்கி இல்ல. இண்டர்நேஷனல் பொறுக்கி.”

“புரியலையே!”

“இந்தப் பசங்களை வைச்சு அவன் ப்ளே பண்ணி இருக்கான் சார். அவன் தண்டவாளத்தை விரிசலையும், கண்ணன் தன் சட்டையைக் கழற்றி ஆட்டிக் கொண்டே ஓடி வருவதையும் இணைத்து வீடீயோ ஆக்கினவன் இறுதியில் என்ன ஆனது அந்த ரயிலுக்கு எனக் கொக்கி இட்டிருக்கிறான். உண்மையில் வி சேவ் த பீப்பிள். ஆனா சம்திங் ராங். எங்கயோ என்னமோ நடக்கப் போகுது சார். ஜனா கமுக்கமா உட்கார்ந்திருக்கான். அதான் பயமா இருக்கு!” என்றார் அரசு.

“ஆமா சார்.. இதப் பாருங்க. அவன் பேங்க அக்கவுண்ட்ல வந்து விழுந்திருக்கும் பெரிய அமௌண்டை. இத்தனை லட்சம் இவனுக்கு யார் கொடுத்தது இப்ப? அனுப்பினவர் பேரு தன்ராஜ்ன்னு இருக்கு. யார் அந்த தன்ராஜ்? எதுக்கு இந்த பணம்? கேள்விகள் தொடருது சார்!”

“அப்ப அவனுக்கு தீவிரவாதி யாருடனும் தொடர்பு இருக்கும்ன்னு சந்தேகப் படறீங்களா?”

“இருக்கலாம் சார். இல்லேன்னா இவ்வளவு தில்லா இங்க வந்து உட்கார்ந்திருக்க மாட்டான். ஏதோ ஒரு சப்போர்ட் சிஸ்டம் இருக்குது!” அரசு ஆணித்தரமாய் சொன்னார்.

“இப்போதைக்கு இவனை இந்த வனிதாமணி வீடீயோ கேஸ்ல பிடிச்சு உள்ளே போடுங்க”

“சார்.. வனிதாமணி உங்க தங்கை. அவங்க பேர் வெளியே வராம..”

“ஸோ வாட்.. பெண்கள் தனக்கு ஒரு தவறு நடந்தால் எதிர்த்து நின்று தட்டிக் கேட்கணும் அரசு சார். நம்மை இப்படி பண்ணிட்டானேன்னு பயந்து ஒடுங்குவதை விட என்னையாடா செய்தாய் அப்படின்னு காளி அவதாரம் எடுத்துட்டா எவனும் தப்பு செய்யவே பயப்படுவான். எப்.ஐ.ஆர் போட்டு கேஸ் ஃபைல் பண்ணுங்க. இந்த வினாடி விபரீதங்கள் சேனலை முடக்குங்க. மார்னிங் இஷ்யூ பேப்பரில் முதல் பக்கத்தில் வர்ற மாதிரி கொடுத்துடுங்க.  ஜனாவின் முகம் மட்டும் பேப்பரில் வந்தால் போதும்.. எந்த பேப்பரிலும், இணையத்திலும் இந்த சிறுவர்கள் முகம் வந்து விடக் கூடாது. கண்ணன் ஹீரோவாய் களமிறங்கி விட்டான். லைம்லைட் வெளிச்சம் அவன் மேல் பட்டு விட்டது. வேறு வழி இல்லை. மற்ற மூவரும் குற்றவாளிகளாய் முகம் காட்டக் கூடாது. அவர்களது எதிர்காலம் பாதிக்கப் படும்.” என்றான் சகாதேவன்

கண்ணன் தலை குனிந்து அமர்ந்திருந்தான். அதில் சேராத இடம் சேர்ந்த குற்ற உணர்ச்சி அதிகம் இருந்தது.

“கண்ணா! ஸ்மைல் ப்ளீஸ்!”

என்றான் அவனை அணைத்த சகாதேவன்.

ப்ளாஷ் லைட் மின்னியது.

“காதம்பரி ட்ரஸ்ட்! குற்றத்தில் ஈடுபட்ட நான்கு சிறுவர்கள் அங்கு வருகிறார்கள். இணையத்தில் வைரல் வீடீயோஸ் அவர்களை அடிக்ட் செய்திருக்கிறது. அதனால் பாழாகும் அவர்களது எதிர்காலத்தை மனதில் கொண்டு கவுன்சிலிங்குக்காக அங்கு அனுப்புகிறேன். கவனம்!”

போனை வைத்தான் சகாதேவன்.

கேட்ட சிறுவர்களின் உறவுகளுக்குச் சந்தேகம் எழுந்தது.

“அதென்னப்பா காதம்பரி ட்ரஸ்ட்? பசங்க நல்லா மாட்டிக்கிட்டாங்களோ?”

“யாரந்த காதம்பரி? இன்னொரு போலீஸா?”

(விபரீதங்கள் தொடரும்)




What’s your Reaction?
+1
1
+1
5
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!