பூவே! பூவே! பெண்பூவே!

பூவே! பூவே! பெண்பூவே!-5

5

அலர்

இதழ்கள் நன்றாக விரிந்த நிலை அலர். இந்த நிலையில் தான் பூவில் இருந்து மகரந்தம் பரவுகிறது. பேச்சு வழக்கில் இதை பூ நல்லா மலர்ந்திருச்சு என்கிறோம்

 

“நல்லா மலர்ந்திருச்சு அப்பத்தா!” கயல்விழி குதூகலித்தாள்.

“ஆமா கண்ணு. நான் தான் சொன்னேனே. மொட்டாவே பறிச்சு இப்படி அகலக் கிண்ணத்தில் தண்ணியில் போட்டு வைச்சா குப்புன்னு மலர்ந்துடும் பூவெல்லாம். என்ன வாசனை பாரு. தொடுத்துத் தரேன். தலைக்கு வச்சுகிட்டுப் போவியாம். என்ன..”

“இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரமே போக வேண்டி இருக்கே அப்பத்தா. ஜெயாம்மா கிட்ட ரெண்டு டிபன்பாக்ஸ் கட்டச் சொல்லுங்க. கொஞ்ச நாளா காலேஜ் வரலன்னு நிம்மி கோபமா இருப்பா. டிபனைக் கொடுத்து தாஜா செய்யணும்.”

“போக்கிரிப் பொண்ணு கண்ணு நீ! அந்தப் புள்ள நிம்மி முன்ன இங்கல்லாம் வருமே. இப்ப வரதில்லையே?”

“அவளுக்கு நிறைய உறவு சனம் அப்பத்தா. வீட்டுல வரப்போக இருப்பாங்க. எப்பப்பாரு அத்தை வந்தாங்க , மாமா வந்தாரு, பெரியப்பா வீட்டுக்குப் போனோம். சித்தப்பாவுக்கு கல்யாணம் அப்படின்னு சொல்லிட்டு இருப்பா..ஏன் அப்பத்தா எனக்கு மட்டும் ஒரு உறவு கூட இல்ல. உங்களுக்கு அம்மாவோட கூடப் பொறந்தவங்களத் தெரியும் தானே. முன்னயெல்லாம் வந்தா நீங்க தானே வாசல்ல பேசி அனுப்புவீங்க. அவங்க எங்க இருக்காங்கன்னு தெரியுமா உங்களுக்கு?”

“அதெல்லாம் எதுக்கு கண்ணு? உங்க டாடிக்கு பிடிக்காது விட்டுடு.”

“ஏன் அம்மா பிறந்த வீடு வசதி குறைச்சலா?”

“அவங்களும் வசதி படைச்சவங்க தான் கண்ணு. என்னமோ கோபம்..”

“என்ன கோபம்?”

“அதெதுக்கு கண்ணு உனக்கு?”

“நான் அவங்க பொண்ணு தானே அப்பத்தா. தெரிஞ்சுக்கணும்ன்னு ஆசைப்படறேன். சொல்லுங்களேன். நான் டாடி கிட்ட கேட்க மாட்டேன்.”

கயல்விழி கெஞ்ச.. நான் சொன்னேன்னு சொல்லிப்புடாத கண்ணு என்ற வேண்டுதலுடன் அப்பத்தாவின் பார்வையில் அம்மா சரசுவின் வாழ்க்கை விரிந்தது.

“ஏங்க.. என்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்து இத்தனை வருஷமாச்சு. ஒருநாளாவது என்னைய என் பொறந்த வீட்டுக்கு அனுப்பி இருக்கீங்களா?” வயிற்றில் கயல்விழியோடு பிறந்த வீட்டுச் சீராட்டலுக்கு ஏங்கிப்போய்க் கேட்டாள்.

“என்னத்துக்கு? வாரிட்டு வந்தது பத்தாதுன்னு இன்னும் போய் வாரிட்டு வரதுக்கா?”

“இன்னுமா அத ஞாபகம் வச்சிருக்கீங்க? மறந்துடலாமே!”

“மறக்கவா இவ்வளவு உழைச்சுக் கொட்டறேன் சரசு? ஒரு காசுக்கு வக்கில்லாதவன்னு சொல்லிட்டான்ல உன் அண்ணன். காலச் சக்கரம் சுத்தும் போது மேல இருக்கறது கீழ வரும். கீழ இருக்கறது மேல வரும். அவனுக்குத் தெரியல. என்ன தான் சின்ன வயசுல இருந்து தோஸ்துன்னாலும் வாய்க்கு வந்தத பேசிடலாமா? தங்கச்சி புருஷன்னு ஒரு மரியாதை வேணாம்? உன்னோட மூத்த அண்ணன்களும் அதுக்கு ஒத்து. உங்கம்மா அவங்க தயவுல வாழறப்ப தனியா எப்படி போய் அவங்களை நீ பார்ப்ப? விடு! விடு! நான் தான் உனக்கு எல்லாமே. நடப்பை ஏத்துக்கப் பழகு.”

கைலாசம் திடமாய்ச் சொன்னார்.

“நமக்கு இல்லாட்டாலும் நமக்கு வரப்போற புள்ளைக்காவது உறவு சனம் வேணுமில்ல!”

“என்னடி உறவு? காக்கா உறவு! கூரை மேல சோத்தை விட்டெறிஞ்சா வரக் காக்கா கூட்டம் தானே உறவு. வரும். வரும். நானும் ஒரு நாள் பணக்காரனாவேன். அப்ப தானா வந்து மச்சான்.. மாமான்னு நிற்பானுங்க.”

சரசுவுக்கு மனம் வலித்தது.

“வேண்டாமே. அவங்க என் கூடப் பிறந்தவங்க!*




“அப்ப நான் யாருடி? நான் முக்கியமில்லையா உனக்கு?” கேட்ட கைலாசம் அதன் பின் பிரசவம் வரைக்கும் அவளைத் திரும்பிக் கூடப் பார்க்க வில்லை.

அந்த மனவியாதியே அவளைக் கொண்டு போனது. கயல்விழி பிறந்து சில மாதத்தில் எதற்கெடுத்தாலும் சோர்ந்து போய் படுத்துக் கிடந்தாள். அச்சமயம் தான் அப்பத்தா வேலைக்குச் சேர்ந்தார். அவரின் தாய்மை குணத்தில் கவரப்பட்டு அம்மா என்று வாய் நிறைய அழைத்தாள் சரசு.

பிறந்த வீட்டு அன்னையே தன்னைப் பார்த்துக் கொள்ள வந்தாற்போல் மகிழ்ந்தாள். அப்படியும் வியாதிக்கு மருந்துண்டு . மன வியாதிக்கு மருந்துண்டோ? ஒன்றும் வியாதி இல்லை என்றார்கள். அப்படியும் ஒரு நாள் தூக்கத்திலேயே போய்ச் சேர்ந்தாள் அவள்.

“என்னைப் பத்தி நினைக்கவே இல்லையா அம்மா?” கயல்விழி கண்ணில் நீருடன் கேட்க..

“ஏன் கண்ணு.. உன்னை நினைக்காமயா? உன் பொறுப்பு என் கிட்டன்னு தந்துட்டுப் போனாளே அந்த மகராசி.”

“என்னைப் பிடிக்காதா அவங்களுக்கு?”

“உன்னை ரொம்பப் பிடிக்கும் கண்ணு. நீ அவங்க அம்மா மாதிரி இருக்கன்னு சொல்வாங்க. என்ன செய்ய கண்ணு? ஓரொரு செடி இடம் பேர்த்து நட்டா வேரூன்றி பொழச்சிடும். ஒன்னொன்னு இப்படித் தான் வாடி வதங்கி உசுர விடும். உங்கம்மா வீட்டுப் பறவை கண்ணு. அப்பப்போ அவங்களை அவங்க பொறந்த வீட்டுக்கு அனுப்பி இருந்தா வேண்டிய மூச்சுக் காத்த வரமா வாங்கி இருப்பாங்க. என்ன செய்ய? ஆண் கர்வம் அரசாள பெண் ஜென்மம் மண்ணாண்டுருச்சு!”

“எங்க மாமா.. அதான் எங்க அம்மாவோட அண்ணனுங்களெல்லாம் எங்க இருக்காங்க அப்பத்தா?”

“இருக்காங்க. தங்கச்சி போன ஏக்கத்துலயே பெரியவர் போயிட்டாரு. மத்த ரெண்டு அண்ணனுங்கள்ல ஒருத்தரு வெளிநாட்டுல. ஒருத்தரு இங்க தான் உள்ளுரூல. எட்டிப் பார்க்க விட மாட்டாரு உங்க டாடி.”

“இங்கயா? யாரு அப்பத்தா அவரு? பேரு என்ன?”

“நாயகம்ன்னு பெரிய கட்டடம் கட்டற கம்பெனி வச்சுருக்காங்க!”

“பார்க்கணும் அப்பத்தா. எல்லாரையும் பார்க்கணும். எனக்கு அத்தை மாமா பெரியம்மா சின்னம்மான்னு வீடு நிறைய சொந்தம் வேணும் அப்பத்தா. கடல் மாதிரி வீடு தான் ஆனாலும் கம்முன்னு இருக்கற இந்த வீடு எனக்குப் பிடிக்கல!”

கயல்விழி சொல்லிக் கொண்டிருந்த கடைசி வரியைக் கேட்டுக் கொண்டே வந்த கைலாசம்..

“கடல் மாதிரி வீடுன்னாலும் கம்முன்னு இருக்கற வீடு உனக்கு பிடிக்கலையா? அப்ப.. ஒரு ஃப்ளோர்ல க்ரீச் ஒண்ணு ஆரம்பிச்சுருவோமா? வர்ற பிள்ளைக எல்லாம் குய் முய்ன்னு கத்திட்டு இருக்கும்.?”

“டா..டி! எப்பவும் விளையாட்டு தான் உங்களுக்கு. நான் காலேஜ் கிளம்பறேன்.”

“இரும்மா.. உனக்கு உன் கூடவே பேச்சுத் துணைக்கு இருக்கற மாதிரி உன் வயசுல ஒரு கம்பானியனுக்கு சொல்லி வச்சுருக்கேன். இனி போரடிக்காது.”

“ஐயா.. சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. கண்ணாலம் பண்ற வயசுல கம்பானியன் என்னதுக்கு? நல்ல பையனா பார்க்க ஆரம்பிங்க ஐயா. தன்னால கம்பெனி கிடைச்சுப் போயிடும்.” என்றார் அப்பத்தா.

சட்டென நிமிர்ந்து நன்றியுடன் அப்பத்தாவைப் பார்த்தார் கைலாசம்.

“வீட்டுல ஒரு பெண் இருந்தா அவள் யோசனையே வேற தான் இல்லையாம்மா? நீங்க யோசிக்கற அளவு எனக்கு யோசனை இல்லை. உடனே மாப்பிள்ளை பார்க்கறேன். இந்த கம்பானியனெல்லாம் வேண்டாம். நல்லது சொன்னீங்க. இந்த மாச ரெட்டை சம்பளமா வாங்கிக்கங்க.”

வியாபாரி அல்லவா? ஒவ்வொரு பேச்சையும் பணக்கடனாகவே பார்த்தார் கைலாசம்.

“டாடி.. நானு படிக்கணும் டாடி!”

“இப்பவும் படிச்சுட்டு தானம்மா இருக்க. அது பாட்டுக்கு அது. இது பாட்டுக்கு இது. ப்ரெண்ட்ஸ் சர்க்கிள்ல மாப்பிள்ளை தேடறேன். மாட்டாமலா போவான் உனக்குன்னு இருக்கறவன்?”

“அப்பத்தா! எல்லாம் உங்களால் தான்!” அடிக்குரலில் சொல்லிவிட்டுத் தடதடவென்று லிஃப்டுக்குள் சென்றவள் தன் மாடிக்கு சென்று அறையின் மெத்தையில் விழுந்தாள்.

கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்தது. இருந்திருந்து இப்போது தான் ஒருவன் மேல் மனம் படர்ந்திருக்கிறது. இன்னும் முகம் பார்த்துச் சொல்லக் கூட இல்லை. அதற்குள் மாப்பிள்ளை.. கல்யாணம் என வீட்டில் பேச்சு ஆரம்பித்தால் அவளும் என்ன தான் செய்வாள்.

காலம் காலமாக காதல் செய்பவர்களுக்கே வரும் இக்கட்டு இது. சொல்லவும்.முடியாது. சொல்லிய பின் விளைவுகளை ஏற்கவும் முடியாது.

இரு தலை கொள்ளி எறும்பாகத் தவித்துக் கொண்டே காலம் தள்ள வேண்டியது தான்.

அசோக்! உன் மனதில் நானிருக்கிறேனா இல்லையா? இருந்திருந்தால் இந்நேரம் என்னைத் தேடி வந்திருப்பாயே. அதி புத்திசாலியாயிற்றே நீ! எப்படி என் புதிர்களை விடுவிக்காமல் இருக்கிறாய்?




அவள் மனம் புலம்பியது.

ஆஃப் செய்து வைத்திருந்த அந்த போனை எடுத்துப் பார்த்தாள் ஏதேனும் மெசெஜ் இருக்கிறதாவென.

இருந்தது.

“கண்டேன் கைலாசத்தை!”

அசோக் அனுப்பி இருந்தான்.

“ஹூர்ர்ரே! அப்பாவைக் கண்டு பிடித்து விட்டான். இனி நேரே என்னிடம் வந்து விடுவான். நல்லவேளை நம்மாளு ரொம்ப முட்டாளில்லை. கொஞ்சமே கொஞ்சம் புத்திசாலி தான்!” சொல்லிக் கொண்டு சிரித்தவள் அந்த போனை மறுபடி ஆஃப் செய்து தன் காலேஜ் பைக்குள் போட்டுக் கொண்டு சந்தோஷமாய் காலேஜ் போக வேண்டுமெனக் கிளம்பி வர..

“அடியாத்தீ! வடக்க வாய்க்கால்ல நீர் கொட்டிப் போனா தெற்கே சலசலன்னு சிரிப்போடு வர்றா!” அப்பத்தா அவள் அழுது கொண்டு சென்றதையும், சிரித்த படி வந்ததையும் கேலி செய்ய வெட்கத்துடன் கயல்விழி காலேஜுக்கு ஓடினாள்.

(தொடரும்)




What’s your Reaction?
+1
12
+1
5
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!