Serial Stories பூவே! பூவே! பெண்பூவே!

பூவே! பூவே! பெண்பூவே!-6

 6

வீ

“மிகவும் மலர்ந்த பூக்கள் ஓரிரு நாட்கள் கழித்து வாடும் நிலையில் இருந்தால் வீ. அதாவது வீ என்பதற்கு வீழ்தல் என்பது பொருள்.”

“மிஸ்டர் கைலாசம்! நீங்க அவசியம் எங்க காலேஜ்க்கு கெஸ்ட் லெக்சர் கொடுக்க வரணும். உங்க பொண்ணு கூட எங்க காலேஜ் தான். உங்க பொண்ணுக்காகவாவது..” எனக் கூறுவதற்காகச் சென்றவன் அவர் அன்று ஆபீஸுக்கே வரவில்லை என்றறிந்து ரிசப்ஷனில் கேட்டான்.

“மிஸ்டர் கைலாசம் இன்னிக்கு வரலையா?”

“அவர் பொண்ணு திடீர்னு.. போயிட்டாங்க. நல்லா தான் இருந்தாங்க. அதான் ஆபீஸ் க்ளோஸ் பண்ணப் போறோம்!”

ரிசப்ஷனிஸ்ட் சொன்னதில் அதிர்ந்து விட்டான். ஹோ! போய் விட்டாளா? அதான் ஒரு வாரமா அவளிடமிருந்து பாட்டே வரலையா? இனி பார்க்க முடியாதா?

எப்படி எழுந்தான்? எப்படி காலேஜ் வந்தான் எதுவுமே அவன் ஞாபகத்தில் இல்லை.

வெறித்த பார்வையுடன் மரத்தடியில் அமர்ந்திருந்த அசோக்கை தேவா உலுக்கினான்.

“லாஸ்ட் எக்சாம் நாளைக்குன்னு மூட் அவுட்டா?”‘

“அவளே லாஸ்ட் ஆகிட்டா!”

“எவ?”

“அதான் அந்த புதிரா..!”

“புதிரா?”

“புதிர் போடுவாளே.. நானும் என்னோட ஆளுன்னு சொன்னேனே.. அவ தான்!” சொல்லும் போதே தொண்டை அடைத்தது அவனுக்கு.

“எப்படிடா தெரியும்?”

“தொழிலதிபர் கைலாசம் தேடி அவர் ஆபீஸுக்குப் போனேன். அவரோட பொண்ணு தான் இது.”

“டேய்.. அவளா இருக்காதுடா. எனக்குத் தெரிஞ்சவர் பேரு கூட கைலாசம் தான். ஏன் அவருக்கு கூட ஒரு பொண்ணு இருக்கு. அதுவும் நம்ம காலேஜ் தான். அதனால அவ உன்னோட ஆளுன்னு நான் சொல்லிட முடியுமா?”

கண்ணைத் துடைத்துக் கொண்ட அசோக்..

“அப்படியா? நிறைய கைலாசம் இருக்காங்களா அப்போ?”

“நிறையவான்னு தெரியாது. நான் சொல்ற கைலாசத்துக்கு பீச் ரோட்ல வீடு. வீடா அது. கடலைப் பார்த்தாப்ல நாலடுக்கு மாளிகையாம்!”

“நீலப் போர்வையில் நிழலாடும் கருமை கண்டு நீராடும் பரப்புக்குள் நீந்துமவள் நான் தானே!

“தேவா! கடலைப் பார்த்த வீடுன்னா அந்த கைலாசம் தான். நீலப் போர்வை கடல் தான். நிழலாடும் கருமை மேகம். நீராடும் பரப்புக்குள் நீந்துமவள்னா நீந்தறான்னா.. நீந்தும்ன்னா கடல்ல.. மீன்.. மீன் தான். ஒருவேளை அவ பெயர் மீனாவா? ஏண்டா உனக்குத் தெரியுமா? அந்தக் கைலாசத்தின் பெண் பெயர்?”




தேவா உறைந்து போயிருந்தான். இந்தளவு அந்தப் புதிர்ப்பாட்டு அசோக்கை ஆட்டி வைக்கிறதா?

ஒரு நாள் பார்த்தான் பல நாள் நினைத்தான் என்பது போல நினைவிலேயே குடும்பம் நடத்தி இருப்பான் போல.

“ரிலாக்ஸ் அசோக்.. ரிலாக்ஸ். கைலாசம் பத்தி எனக்கே நேத்து தான் அப்பா சொன்னாரு. அவர் பொண்ணு நம்ம காலேஜ்ல படிக்குதுன்னு தெரிஞ்சு எனக்குத் தெரியுமான்னு கேட்டாரு. பிகர் கூட யாருன்னு தெரியாம உன் கூட கடலை போடற துரதிருஷ்டம் எனக்கு!”

“அடேய்.. சும்மா புலம்பாத! அவ பேரு என்ன?”

“நீ முதல்லருந்து மொத்த பாட்டையும் யோசி. பேரு உனக்கே வந்துடும்.”

“ம்ம்! ஆற்றைச் சிரம்தாங்கி ஆலம் உண்டான் கைலாசம் தான். அவன் விரும்பும் செல்வம் இவள் தான். காற்றாய் வந்து நகர்வேன்னு சொல்லி இருக்கா. ஏற்றத்தில் ஒருபொழுது எனைக்காண நிற்பாயோன்னா ..டேய்.. நம்ம காலேஜ் ரவுண்டானா ஏறி இறங்கி பாதை பிரியும்ல . அங்க காத்திருங்கறா. வா.. போவோம்.” அசோக் பரபரத்தான்.

“ஏற்றம் மிகுந்திருக்க ஏக்கம் மிகுந்தாடும்

மாற்றம் உண்டாமோ ஏமாற்றம் உண்டெனக்கு

காற்றாய் வந்துவிடு கைப்பிடித்துச் சென்றுவிடு

ஊற்றாய் நம்முறவை உன்கட்டம் சொல்லட்டும்”

அசோக்கின் போனில் வந்து விழுந்த மெசேஜைப் பார்த்து அசோக்கை விடத் தேவா துள்ளிக் குதித்தான்.

“நான் சொன்னேன்ல! உன் ஆளு உயிரோட இருக்கா!”

“ஆமா.. அதுவும் இங்கேயே.. நம்ம காலேஜ் ரவுண்டானா கிட்டயே.. கிளம்புடா தேவா! “

“இரு அசோக்.. முதல்ல உன் ஞாபகத்தில் இருப்பவளை வரைஞ்சு காமியேன். அவளைப் பார்க்கும் போது உனக்கே ஒரு அடையாளம் தெரியும்.”

“இப்பவாடா?”

“ம்ம்! இப்ப.. இந்தா பென்சில்.. பேப்பர்!”

சட்டென்று கண்மூடி அந்த அரை வெளிச்சத்தில் தான் பார்த்த உருவத்தை முகமாக வரைந்தான் அசோக். துல்லியமான முகபாவம் வராவிட்டாலும் இந்த சாயலுள்ள பெண்ணைக் கண்டுபிடிப்பது சுலபம் தான்.

“டேய் இவ பாட்டி மாதிரி இருக்காடா!” தேவா கிண்டலடித்தான்.

“ஹேய் டூ மச்! நான் என்ன பாட்டியையா படம் வரைஞ்சிருக்கேன். என் வருங்கால மனைவியையாக்கும்! இருந்திருந்து இன்னைக்குன்னு இப்படி ஒரு அழுது வடியற சட்டை போட்டிருக்கேன்.. ஹான்.. அவ முன்ன எழுதி இருந்தாளே.. கன்னக் கதுகதுப்பில் கட்டங்கள் பூக்குதடா.. தேவா… கண்டு பிடிச்சிட்டேன்..என் கெஸ் சரியா இருந்தா இன்னிக்கு அவளைச் சரியா அடையாளம் சொல்வேன். வாடா! ஏறு வண்டியில!”

பல்ஸர் தன் இன்ஜினை உசுப்பிப் புறப்பட்டது.

“ப்ரின்சி அந்த கெஸ்ட் லெக்சருக்கு ஆளைப் பிடிச்சிட்டியான்னு கேட்பாரேடா! சொல்லிட்டியா? கைலாசம் அப்ஸ்காண்டுன்னு.”

“அந்தக் கைலாசம் அப்ஸ்காண்டானா என்ன.. இப்ப தான் என் மாமனார் கைலாசம் இருக்காருல்ல. அவர் மகளை வச்சே வரச் சொல்லிட மாட்டேன். ஆனா நீ தாண்டா தேவா இன்னும் அவ பேரச் சொல்ல மாட்டேங்கற!”

“கண்டுபிடி மச்சான். கிட்ட வந்துட்ட!” அசோக்கின் முதுகில் தட்டினான் தேவா.

ரவுண்டானா தாண்டியும் வண்டி பறந்தது.

“டேய்.. இங்க தாண்டா உன் ஆளு நிக்கறதா சொன்னா.. நிறுத்துடா அசோக்!”

“தெரியும்டா.. பார்த்துட்டேன்!”

“ஸ்டாப்! ஸ்டாப்! பார்த்துட்டியா! பாத்துமா பேசாம?”

“ம்ம்!”

“ஏண்டா பிடிக்கலையா?”

“ரொம்பப் பிடிச்சிருக்கு!”

“அப்புறமேன்? போய்ப் பேசுடா! பாவம் ஏமாந்தறப் போறா!”

அசோக் ஓரிடத்தில் வண்டியை நிறுத்தியவன் தன் போனை எடுத்து அவளின் பாட்டுக்கு முதல் தடவையாக பதில் பாட்டு எழுதலானான்.

“என்ன எழுதற? உன் பாட்டாச்சு நீயாச்சுன்னா?”

“இல்ல தேவா.. இது அச்சாரப் பாட்டு!”

அனுப்பி விட்டு சிரிப்புடன் போனை அணைத்து வைத்தான்.

“அப்ப எனக்கு அந்தப் பாட்டைச் சொல்ல மாட்ட?”

“நீயும் தான் அவ பேரைச் சொல்ல மாட்டேனுட்ட. ஆனா நானே யோசிச்சு கண்டுபிடிச்சுட்டேன். சொல்லுடா மச்சான். அவ பேரு கயல் தானே? கயல்மீன்!”

“டேய்.. எப்படிடா? எப்படிடா கண்டுபிடிச்ச? மூளைக்காரண்டா நீ! ம்.. யெஸ்.. கயல்விழின்னு சொன்னார் அப்பா.”

“சரி வா.. ப்ரின்சியைப் பார்த்துட்டுப் போகலாம். குடுத்த வேலையை முடிக்காம டேக் டைவர்ஷன்னு வந்துட்டேன்.”

தேவா சிரித்தான்.

“இப்பவும் டேக் டைவர்ஷன் தான் மாப்ள!”

“அவ்வளவா தெரியுது அசடு?” தன் முகத்தைத் துடைத்துக் கொண்டான் அசோக்.

மீண்டும் ரவுண்டானா வழி வந்து ப்ரின்சி அறை செல்லும் போதும் அவனின் ஓரக்கண் பார்வையில் அவள் ஆணியடித்தாற்போல் நின்றிருப்பது தெரிந்தது.

ஏண்டி… இன்னும் போனைப் பார்க்காம நின்றிருக்க? மனம் புலம்பியது. தேவா அறியாது வண்டியின் கண்ணாடி வழி அவளைப் பார்த்தான்.

இப்போது அவள் தோழி அருகில் வந்து விட்டிருந்தாள். இனி போய் விடுவாள்.

“ம்ச்ச்! நிம்மி.. விடேன். நான் வீட்டுக்கு இப்ப வரலை.”

“உன் ட்ரைவர் வந்து காத்திருக்கார் வாடி!”

“காத்திருப்பது எங்களுக்கு பழக்கம் தான் நிம்மி!”

“எங்களுக்குன்னா? நான் ட்ரைவரைச் சொன்னேன்டி. நீ யாருக்காக காத்திருக்க? எனக்காகத் தானே. அதான் நான் வந்துட்டேனே.”

“உனக்காக யாரு.. இல்ல உனக்காகவும் தான். ” உளறியவளைப் பார்த்து

“இன்னிக்கு ஒரு மார்க்கமாத் தான் இருக்க. ஜீன்ஸ் பேண்ட், லூஸ் ஃபிட் ஷர்ட்ன்னு ஆளும் அசத்தலா வந்திருக்க. என்னம்மா கண்ணு.. லவ்வா?”

“நிம்ம்ம்மி! லவ்வா? ஹான்.. லவ்வுன்னா என்ன?” கண்சிமிட்டினாள் கயல்விழி.

அறியாப் பெண்ணின் பார்வையில் அடக்க முடியாது சிரித்த நிம்மி தன் தோழியை இழுத்துக் கொண்டு காரை நோக்கி நகர கண்ணில் துளிர்த்த நீரின் பளபளப்புடன் ப்ரின்சி அறைக்குப் போகும் வழியின் பால்கனியில் இருந்து பார்த்து கொண்டிருந்தான் அசோக்.




“முடியல தானே.. வா.. போய்ப் பேசலாம்!”

“ம்ச்ச்..உள்ள போடா. அவ முதல்ல என் பாட்டைப் பார்க்கட்டும். பாட்டுக்குப் பாட்டெடுத்தேன்.. அதைப் பாதியில விடலாமா?” ஒரு சிறு குறும்புப் பேச்சில் அவளிடமிருந்து தன்னை மீட்டெடுத்து அறைக்குள் சென்றான் அசோக்.

“யெஸ் அசோக்! மிஸ்டர் கைலாசம் என்ன சொன்னார்?” ப்ரின்சி கேட்க

“அந்தத் தொழிலதிபரே தான் வேணுமா சார்? என் கிட்ட இந்த பொறுப்ப விட்டீங்கன்னா..”

“உன் பொறுப்பு அசோக். வர்ற ஃப்ரைடே உன்னோட நாள்! தட்ஸ் ஆல்..”

“யெஸ் வெர்ரி குட் ஃப்ரைடே!’ குறும்பு கொப்பளித்தது அவனிடம்.

(தொடரும்)




What’s your Reaction?
+1
14
+1
6
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!