Serial Stories பூவே! பூவே! பெண்பூவே!

பூவே! பூவே! பெண்பூவே!-2

2

மொட்டு:

அரும்பு சற்று பெரியதாக வளர்ந்த நிலையை மொட்டு எனக் குறிப்பிடுகிறோம். இந்த நிலையில் நறுமணம் உருவாகி இருக்கும்.”

நிலவின் குளுமை நிறைவாய்த் தாலாட்ட நீரின் அலையோசை நீங்காது இசைபாட அசோக்கின் நினைவோடு ஆழ்கடலின் முத்தாக ஆடாது துயில் கொண்டாள் நம் நாயகி கயல்விழி.

கனவில் அசோக் வந்தான். ஆடினான். பாடினான். அவளிடம் உருகி நின்றான். வெட்கம் சூழ்ந்த இரவாயிற்று அவ்விரவு.

சட்டென்று விழித்தவள் முதல் புதிரை எழுதி அனுப்பினாள்.

நீலப் போர்வையில் நிழலாடும் கருமை கண்டு நீராடும் பரப்புக்குள் நீந்துமவள் நான் தானே!

சோர்வற்று சுகமாக்க சொற்புதிர் நானிட்டேன்.

சொந்தமென வந்தவனே சொல்லாய்ந்து கண்டுபிடி!”

 

அந்த இரவின் அந்தகாரத்தில் அசோக்கின் போன் மெசேஜ் வந்த ஒலி எழுப்பியது. அதை அறியாது ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான்.

அவன் முதுநிலை இறுதியாண்டு படிக்கும் மாணவன். காம்பஸ் மூலம் வேலை கிடைத்திருக்க இன்னும் ஆறு மாதங்களே உள்ள படிப்பிலும் டிஸ்டிங்ஷன் அடிக்க தீவிரமாய்ப் படித்துக் கொண்டிருப்பவன்.

நடுவில் இலக்கியக் கூட்டம், நாடகம் என தமிழ்ச் சங்க வேலைகளிலும் தன்னை பிஸியாய் வைத்திருப்பவன். கல்லூரியின் ஆல்ரவுண்டர்.

கல்லூரியின் தாளாளர் முதல் பியூன் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரே ஆள் என்றால் அது அசோக் தான். அனைவரிடமும் நல்ல பெயர் வாங்கி இருந்தான். என்ன தானுண்டு தன் வேலையுண்டு என அனாவசிய அரட்டை பக்கம் போகாமல் இருந்ததால் படிக்கும் ரொம்பப் பேருக்கு இவனை பர்ஸனலாகத் தெரியவில்லை.

பார்த்தவர்களும் ஐயா பெரிய இடம் என ஒதுங்கி விடுவார்கள். அப்படித் தான் நிம்மியும் நினைத்தாள்.

கயல் அவளிடம் அசோக்கின் போன் நம்பரை வாங்கிக் கொடு என்று கேட்ட பொழுது..

“அவனெல்லாம் பெரிய இடம் கயல். நம்ம காலேஜ் ஆல்ரவுண்டர். நம்ம பக்கம் ரவுண்ட் அடிக்கக் கூட மாட்டாரு! என்னதுக்கு அவன் நம்பரப் போய்!”

“சொல்றதச் செய்டி. அவன் ஆல்ரவுண்டர்னா .. நானும் தான் ஆல்ரவுண்டர். எங்க இப்பவே வரியா.. ரவுண்ட் அடிச்சிக் காட்டறேன்!” என்றாள் கயல்விழி குறும்புடன்.

“அடியேய்..அது அந்த ரவுண்ட் இல்லடி.. ஆ..ல்..ரவுண்ட்!”

“ம்ச்ச்.. வச்சுக்கிட்டா வஞ்சனை பண்றோம். எனக்கு விதிச்சது இந்த கார்ல ரவுண்ட் தான் டி !”

கயல்விழியின் குறும்பில் அவள் எதற்காக அசோக்கின் நம்பரைக் கேட்கிறாள் எனக் கேட்பதை விட்டு விடுவாள் நிம்மி.

அது தானே கயலுக்கும் வேண்டும். இல்லையெனில் குடை குடையெனக் குடைந்து குடைவரைக் கோயிலே கட்டி விடுவாள். ஆனாலும் நல்ல பெண். இருக்கின்ற சூழ்நிலைக்கு நிம்மி தன்னுடன் இல்லயென்றால் பைத்தியமே பிடித்திருக்கும் என நினைத்துக் கொண்டாள் கயல்.

இங்கு கயல் அப்படி நினைவுகளில் நீந்திக் கொண்டு போனில் அவன் பார்த்ததற்கான நீல நிற டிக் வந்ததா எனப் பார்த்துக் கொண்டிருக்க..

அசோக்கோ விடிகாலை எழுந்து பீச்சுக்குப் போகும் ரோட்டில் ஜாகிங் செய்து கொண்டிருந்தான்.




ரோட்டோரக் கடைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய்த் திறந்திருக்க இருள் பிரியாத அக்காலையில் நாய்களின் தொல்லை அதிகமாக இருந்தது. பிளாட்பார்ம் வாசிகள் இவற்றின் சப்தத்தைச் சகித்துக் கொண்டு காதுகளை மூடிக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தனர்.

ஓடும் அவனது கால்கள் ஒருநிமிடம் அந்தக் காட்சியைப் பார்த்து தயங்கி நின்றன. தெருவிளக்கின் ஒளியில் ஒரு வாலிபன் மும்முரமாகப் படித்துக் கொண்டிருந்தான். கிட்டே போன அசோக்..

“அண்ணே! என்ன படிப்பு எடுத்திருக்கீங்க?”

“அண்ணனா? நான் தம்பி தான் அண்ணே! பேரு குணா. பார்க்கத் தான் குண்டா இருக்கேன். இப்ப தான் பி ஏ எகனாமிக்ஸ் சேர்ந்திருக்கேன். காலையிலயே படிச்சு வச்சுட்டா அப்புறம் அம்மா எழுந்ததும் வேலைக்கு ஒத்தாசை செய்யலாம்.”

“குணா! என்ன வேலை செய்யறாங்க உங்கம்மா?”

“தள்ளு வண்டில காய்கறி வியாபாரம் அண்ணே! வீதி வீதியா போய் வித்துட்டு வரும்.”

“உங்கப்பா?”

“அவரு பெரிய கவருமெண்ட் செர்வண்ட்”

“பின்ன ஏண்டா இங்க?” பிளாட்பாரம் எனச் சொல்ல முடியாது வார்த்தையை முழுங்கினான் அசோக்.

“ஹா! ஹா! கவருமெண்ட் செர்வண்ட்டுன்னு சொன்னவுடன பெரிய வேலைன்னு நினைச்சுட்டீங்களாக்கும். டாஸ்மார்க்ண்ணே! விடாம குடிச்சு கவர்மெண்டுக்கு சம்பாத்தியத்த கொடுப்பாரு. அதோ அங்க குடிச்சுப்புட்டு விழுந்து கிடக்காரு பாருங்க. அவரு தான்.”

சாலையில் பாதியும் பிளாட்பார்மில் பாதியுமாய் லுங்கி நழுவியது கூடத் தெரியாமல் கிடக்கும் அவன் அப்பாவைக் காண்பித்தான் குணா.

“குடியோடு குடும்பம் நடத்துற எங்கப்பா தாண்ணா எனக்கு இன்ஸ்பிரேஷன். நல்லாப் படிச்சு எங்கம்மாவ உட்கார வச்சு சோறு போடணும்ன்ணா!”

“ஜெயிப்ப குணா. கட்டாயம் ஜெயிப்ப. இரு.. உன் கிட்ட போன் இருக்கா? உன் நம்பர் சொல்லு. உன் படிப்பு சம்பந்தமா உதவி தேவைப்பட்டா கட்டாயம் கூப்பிடு. செய்யறேன். ஒரு மிஸ்டு கால் கொடு. சேவ் பண்ணிக்கறேன்!” என்ற அசோக் தன் போனை பாக்கெட்டில் தேடிப் பார்த்து..

“அடடா! மறந்துட்டு வீட்டுல விட்டுட்டேன் போல. இந்தா என் நம்பர். இதுக்கு மிஸ்டு கால் கொடுத்துரு குணா. நான் பிறகு கூப்பிடறேன். “

“சரி அண்ணா.. உங்க பேரு?”

“அசோக்! அசோக் தெய்வநாயகம்!”

“ஓ.ஓகே அண்ணா!”

“ஹேவ் அ குட் டே குணா!” மீண்டும் ஓடத் துவங்கினான்.

சூரியன் கண்விழித்து இருள் போர்வையை முழுதாய் விலக்க சாலை மரங்களெல்லாம் பூ வைத்து தலையாட்ட நறுமணத்தை நுகர்ந்தபடி ஓடிக் கொண்டே பாடலானான் அசோக்.

சித்திர மேனி தாழம் பூ

சேலை அணியும் ஜாதி பூ

சிற்றிடை மீது வாழை பூ

ஜொலிக்கும் செண்பக பூ

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ

சிவந்த கன்னங்கள் ரோசப்பூ

கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ

சிரிப்பு மல்லிகை பூ..”

பாடியவனின் கண்ணுக்குள் தானாய் வந்து நின்றாள் அவள். சட்டென விதிர்த்தான் அசோக்.




இது.. இவள்.. அன்று ஆடிட்டோரியத்திலிருந்து அவசரமாக வரும்போது பார்த்த பெண் தானே. ஓரிரு நொடிகள் தான் பார்த்திருப்பேன். அதற்கு மேல் பார்க்க அவளின் நிலை அன்று சரியாய் இல்லை. ஆணி மாட்டி சூடிதார் பெரிய கிழிசல் கண்டிருந்தது. உடனே தன் முழுக்கைச் சட்டையை அவளுக்கு அளித்து விட்டு நகர்ந்திருந்தான். ஏன் இப்போது இந்தப் பாட்டுக்கு ஹீரோயினாக இந்தப் பெண்ணை மனம் நினைக்கிறது? ஆசை அறுமின்! மனமே! ஆசை அறுமின்!

உரக்கச் சொன்னவன் தலையை முன்னும் பின்னுமாய் ஆட்டிக் கொண்டான். வியர்வைச் சிதறல்கள் விண்மீனாய்த் தெறித்தன.

ஓட்டத்தை நிறுத்தி விட்டு நிதானமாய் நடந்தவன் கடலைப் பார்த்தவாறு நீண்டதொரு திண்டில் அமர்ந்து கொண்டான்.

என்றுமே அவனது வழக்கம் அது தான். நீல நிறக் கடல் அவனுக்கு அமைதியைத் தரும். அதைப் பார்த்த வாறே அன்றைய வேலைகளை அட்டவணைப் படுத்துவான். திட்டமிட்டுச் செய்யப்படும் எந்தச் செயலும் வெற்றியை நோக்கியே பயணிக்கும். அந்த வகையில் அசோக் எதையும் திட்டமிட்டு செயல்படுத்துபவன்.

திட்டமிடாமல் அவன் மனதில் தானாய்ப் புகுந்தது அவள் மடும் தான். அவள் யாராய் இருப்பாள்? அன்று பெயர் கூட கேட்க வில்லை.

சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யா பூ

அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ

மை விழி ஜாடைகள் முல்லை பூ

மணக்கும் சந்தன பூ

ஹோய்.. டோட்டல் ஃப்ளாட்! என்னடா இது இப்படி அவளை நினைத்தாலே வாய் தன்னால பாட்டு பாடுது.

தன்னைத் தானே கேட்டுக் கொண்டான் அசோக். போனையும் எடுத்து வரலை. எடுத்து வந்திருந்தாலும் ஏதும் பாட்டு கேட்கலாம். நாமளே பாட வேண்டி இருக்கு.

“ஹேய்.. பாருடி எந்த படத்து ஹீரோடி இவரு?” கடந்து ஓடும் இளம்பெண்கள் தன்னைப் பார்த்து கேட்ட கேள்வியைக் கேட்டுத் தனக்குள் சிரித்துக் கொண்டான்.

அரை வெளிச்சத்தில் ஓரிரு நிமிடமே கண்டாலும் அவள் கண்களில் ஹீரோ ஒர்ஷிப்பைக் காணலையே அன்னிக்கு. தனக்கானவன் என்ற உரிமைப் பார்வை.. ஹான்.. அதே தான். அந்த பார்வைக்கு அது தான் அர்த்தம். இப்போது தான் விளங்குகிறது.

யாராய் இருப்பாள்? படிக்க வந்தவளா? யாரையேனும் பார்க்க வந்தவளா? நடத்த வந்தவளா? ஆடிட்டோரிய நாடகம் காண வந்தவளா? குறுக்கே வந்து விட்டாள். என் நெஞ்சில் குடையாய்ச் சாய்ந்து விட்டாள்.

மனம் காவியம் பாடிற்று.

தென்றலைப் போல நடப்பவள்

என்னைத் தழுவ காத்து கிடப்பவள்

செந்தமிழ் நாட்டு திருமகள்

எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள்

சிந்தையில் தாவும் பூங்கிளி

அவள் சொல்லிடும் வார்த்தை தேன்துளி

கடற்கரையின் மணல் காலைச் சூரியனால் பொன்னிறம் பெற்று நிற்க ஆதவன்.என்னும் ஆணின் வரவால் வெட்கப் படும் நிலமகளாள் என அவசரக் கவிதை தோன்ற ஹைக்கூவாய் புனைய முற்பட்டான்.

வெளிச்சக் கதிர்கள்

வெள்ளியாய் மின்னிற்று

மணலில் காலடித் தடங்கள்!’

 


ஹைக்கூவோ என்னவோ தெரியாது எனினும் கண் கண்டதை கவியாக்குதலில் கிடைக்கும் சந்தோஷமே தனி தான். சிரித்துக் கொண்டான்.

அசோக்கின் நினைவினில் ஆடும் பெயர் தெரியாத அவள் என்ன செய்கிறாள்?

நினைத்தவாறே வீட்டை நோக்கித் தன் ஜாகிங்கைத் தொடர்ந்தான் அசோக்.

(தொடரும்)




What’s your Reaction?
+1
6
+1
10
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!