Serial Stories பூவே! பூவே! பெண்பூவே!

பூவே! பூவே! பெண்பூவே!-4

4

மலர்

மொட்டுகள் முழுமையாக விரியும் நிலையை மலர் என்கிறோம். பேச்சுவழக்கில் பூ என்று கூறுகிறோம்.”

 

ஒன்றல்ல! பல தொழில்கள் கைலாசத்துக்கு. அத்தனை விபரங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார். தொழில்களைத் தக்க வைத்துக் கொள்ளும் அளவுக்கு உறவுகளைத் தக்க வைக்கத் தெரியவில்லை. அதனால் தான் மகள் அத்தனை பெரிய வீடிருந்தும் போரடிக்குது எனச் சொன்னாளோ?

வீட்டோடு இருக்கும் ஜெயாம்மாவும், அப்பத்தாவும் போரடித்துப் போய் விட்டனர் போல. நானாவது வெளியில் வந்து இத்தனை பேருடன் பழகுகிறேன். பாவம் அவள். வீடும், வீட்டை விட்டால் காலேஜுமாக. அவள் வயதுப் பெண் யாரையாவது அவளுக்குக் கம்பானியானாக வேலைக்கு அமர்த்துவோமா என்ற யோசனையில் உடனே நல்ல பெண்ணாக இருந்தால் சொல்லுமாறு ஏஜன்சியிடம் சொல்லி வைத்தார்.

அதன் பின் தான் அவருக்குப் பிற வேலைகளில் கவனம் வந்தது.

மனைவி இருந்திருந்தால் இதற்கெல்லாம் வேலையில்லை. அவள் தான் பெண்ணை வளர்க்கும் சிரமமில்லாமல் போய் விட்டாளே. அத்தனை பொறுப்பும் கூடி ஆளத் தெரிந்ததால் சமாளிக்கிறேன் என நினைத்துக் கொண்டார் கைலாசம்.

பணம்! பணம்! அந்த கனமான காகிதத்திற்கு இருக்கும் மதிப்பு தெரிந்து அதை மட்டுமே உறவாகக் கொண்டிருப்பவரிடம் ஆளத் தெரிந்தவர் என்ற இறுமாப்பு இருப்பதில் அதிசயமென்ன? இத்தனைக்கும் அவர் வழியிலும் மனைவி வழியிலும் நிறைய உறவுகள் உண்டு. விலக்கி வைத்தவருக்கு விருப்பம் தோன்றுமா?

அசோக் அடிக்கடி அவனது போனை எடுத்துப் பார்த்துக் கொண்டான். அன்று வந்த பாடல் தான். அதன் பின் எதுவுமே வரவில்லை. நாளையில் இருந்து செமஸ்டர்க்கான ஸ்டடி ஹாலிடே. படிப்பதற்காக இல்லை இந்த புதிரை அவிழ்ப்பதற்கா வரும் நாட்கள் எனப் புரியாத நிலையில் இருந்தான் அவன்.

“என்னடா அசோக்! எப்பப் பார்த்தாலும் போனைப் பார்த்துட்டே இருக்க? எனி திங் இம்பார்டண்ட்?” தேவா கேட்டபொழுது

“நத்திங் டா!” என்று வாய்மொழியாய்ச் சொன்னாலும் நம்பாத தேவா

“சம்திங்! சம்திங்!” என்றான்.

“இல்ல தேவா! அன்னைக்கு ஒரு சம்பவம் நடந்துச்சே! பாவம் அந்தப் பொண்ணு. குறுக்கால தீடீர்னு வந்து என் மேல மோதினதும் இல்லாம அவசரமா நகர்ந்ததில் பின் சுவத்துல இருந்த ஆணி ட்ரெஸைக் கிழிச்சுடுச்சு!”

“ஆமா..நீ கூட உன் சட்டையைக் கழட்டிக் கொடுத்தியே. அது இன்னும் வரலையாக்கும் . அவ ஆட்டையப் போட்டத நினைச்சு கவலைப் பட்டுக்கிட்டு இருக்கியா? போனா போனதுதான் மாமு! விட்டுத்தள்ளு! புதுச்சட்டை வேணும்னா வாங்கி தரேன்!” கண்ணடித்தான் தேவா.

“டேய் போடா! டேய்!” விரட்டினான் அசோக்.




“பின்ன என்னடா யாருன்னே தெரியாத அரை வெளிச்சத்தில் அந்தப் பொண்ணு முகத்தைக் கூட பார்க்க முடியல இந்த லட்சணத்துல அந்த பொண்ண எங்க கண்டுபிடிச்சு எப்படி உன் சட்டையை வாங்கறது? விடுடா போனா போகுது”

“இப்ப நான் அந்த சட்டையைக் கேட்டேனா? நீயே ஏதாவது அஸ்யூம் பண்ணிட்டு பேச வேண்டியது !”

“பின்ன உன் சட்டையைக் கொண்டு போன பொண்ண பத்தி பேசறியா?”

“ஏன் பேச கூடாதா ?”

“டேய் இருட்டில் அவ யாருன்னே சரியா தெரியல டா! எந்த பொண்ணுன்னு எப்படி தெரியும்?”

“இல்லடா தெரியாது தான் ஆனால் சம்திங் டெல்ஸ் மீ அவ தான் என்னோட ஆளுன்னு!”

“ஆஹாங்!”

“முகம் பார்க்காமலேயே காதல்ல மூழ்கிட்டீங்களாக்கும்! பார்த்துடா! அவங்க ஏற்கனவே..”

“ஒண்ணும் இல்லை. அவ நம்ம காலேஜ் ஸ்டூடண்ட் தான். கழுத்தில் ஐடி கார்ட் பார்த்தேன். முகம் தான் சரியா தெரியல!”

“அவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்கியா? அப்ப கண்டு பிடிச்சுடலாம் அசோக்! நீ தான் நல்லா ட்ராயிங் வரைவியே. ஒரு மாதிரி உத்தேசமா அவங்களை வரைஞ்சு கொடு. தேடிப் பார்ப்போம்.”

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அடுத்த பாடல் அசோக்கின் போனில் வந்து ஒளிர்ந்தது.

கொள்ளை இருளகற்றும் கோடி சூர்யப் பிரகாசமே

கள்ளம் புகுந்தவளை கண்டுபிடிக்க மாட்டாயா?

முன்னம் நெஞ்சமர்ந்தேன் முயன்று பின்னடைந்தேன்

கன்னக் கதகதப்பில் கட்டங்கள் பூக்குதடா!”

 

போனில் வந்த மெசெஜை அசோக் காண்பிக்க..

“என்னடா அசோக் இது? பாட்டா? புதிரா?”

“பாட்டுப் புதிர் தேவா. இது வேற ட்ராக். ஒரு பொண்ணு.. பாட்டுலயே புதிர் போடறா. தான் யாருன்னு கண்டு பிடிக்கணுமாம். சம் ஹவ் இன்ரஸ்டிங்! கண்டுபிடிக்கலாம்ன்னு களம் இறங்கிட்டேன்.”

“இந்தப் பொண்ணும் உன்னை லவ் பண்ணுது போலயே!”

“ம்ம்!”

“அப்ப அது? கொஞ்ச நேரம் முன்னாடி சொன்னியே உன்னாளுன்னு!.. டேய்.. டேய்.. கொஞ்சம் இந்தப் பாட்டைப் பாரு.. முன்னம் நெஞ்சமர்ந்தேன் . முயன்று பின்னடைந்தேன்.. அதே தாண்டா. அவளே தான். ஆடிட்டோரிய அரை இருட்டில் உன் நெஞ்சம் சாய்ந்தவளே தான். இரண்டு பேரும் ஒரு ஆள் தான்..!”

“ஹீர்ர்ரே! ஒரே ட்ராக் தான்!” கத்தினான் அசோக்.

“யெஸ்! யெஸ்! நீ நடத்து மாமு!”

“டேய்.. தேவா.. அடுத்த லைனைப் பாருடா! கன்னக் கதகதப்பில் கட்டங்கள் பூக்குதடா! அப்படின்னா? கன்னத்துல கட்டம் போட்டுட்டாளா?”

“ஆமா.. கத்தியை வைச்சுக் கோடிழுத்துட்டா.. போவியா?”

“டேய்.. அப்படியே முதல் ரெண்டு பாட்டையும் பார்த்துருடா. எனக்குப் புரியாதது உனக்கு புரியுதான்னு பார்க்கறேன்.”

“அடேய் மடையா.. உனக்கு உன் காதலி அனுப்பிய பெர்ஸனல் மெசெஜை ஆத்ம நண்பனே ஆனாலும் என்னிடம் காண்பிப்பது முறையா? தர்மமா? அடுக்குமா? அடி கிடைக்குமா? போடா.. நீயே உட்கார்ந்து கண்டு பிடி!”

“எப்படியோ என் இதயம் கவர்ந்தவளும் புதிராய் எதிரில் வருபவளும் ஒருத்தி தான்னு கண்டுபிடிச்சாச்சு. இனி நான் பார்த்துக்கறேன் தேவா. தேங்க்ஸ் அ லாட்!”

மகிழ்ச்சியில் கட்டி அணைத்து விடுவித்தான் நண்பனை.

காலேஜ் மண் அன்று அவளைச் சுமக்காததை அறியாத அவன் அவளைத் தேடி சுற்றுமுற்றும் விழிகளை ஓட்டினான்.

எந்த டிபார்ட்மெண்டாய் இருக்கும்? எந்த வருட பேட்ச்? யூ. ஜி. யா? பி.ஜி.யா?

போவதும் வருவதுமாய் இருந்த பெண்களைப் பார்த்தும் பார்க்காததும் போல் இருந்தவன்..

சே! சே! இது சரிப்படாது. இப்படி பெண்களைப் பார்த்தால் கெட்ட பேர் தான் வரும். பேசாமல் அடுத்த புதிர் வரும் வரைக்கும் நாம நம்ம வேலையைப் பார்ப்போம். க்ளாஸும் இன்னிக்கு இல்லை. லைப்ரேரியாவது போகலாம் எனக் கிளம்பினான்.

“தம்பி! தம்பி! அசோக் தம்பி! கொஞ்சம் நில்லுங்க! உங்களை ப்ரின்சி வரச் சொன்னாரு. உங்க க்ளாஸ்க்கு போனா க்ளாஸே இல்லன்னாங்க. சரி நீங்க கிளம்பிப் போயிருப்பீங்கன்னு வெளியே வந்தா நீங்களே நிக்குறீங்க!” சொன்னபடி பியூன் வேலாயுதம் வந்து நின்றான்.




“ப்ரின்சியா? இதோ வந்துடறேண்ணே!” என்றவன் கூட நடந்த படி..

“நம்ம கலை விழா தான் முடிஞ்சிருச்சே! அப்புறம் எதுக்குண்ணே கூப்பிடறார்?”

“அது தெரிஞ்சா நான் ப்ரின்சியாயிட மாட்டேனா தம்பி.” சிரித்த வேலாயுதம்

“காலேஜ் ஆல்ரவுண்டர் நீயி! உனக்குன்னு ஏதாச்சும் வேலை வச்சுருப்பார். அவரு ரூமுல தான் தம்பி இருப்பாரு. போயிப் பாரு. அப்ப நான் வரட்டா?”

விடைபெற்றுப் போனான்.

“மே ஐ கம் இன் சார்?”

“சொற்சபேசன் , ப்ரின்சிபல் என்ற பெயர் பலகையைத் தள்ளி வைத்த ப்ரின்சிபல்..

“வாப்பா! வாப்பா அசோக்! உனக்காகத் தான் வெயிட்டிங்!”

“சொல்லுங்க சார். நான் என்ன செய்யணும்?”

“நம்ம காலேஜ் கலை விழாவ அருமையா நடத்திக் குடுத்துட்ட! ஹேட்ஸ் ஆஃப் டூ யூ மை பாய்!”

“தேங்க்யூ சார். ஆனால் இது கூட்டு முயற்சி தான்!”

“அதே மாதிரி பிரபலமா இருக்கற தொழில் முனைவரை வைச்சு வாரா வாரம் ஒரு கெஸ்ட் லெக்சர் கொடுக்கலாம்ன்னு ஒரு திட்டம் இருக்குப்பா. நாம பசங்களை எப்பவும் ஒயிட் காலர் ஜாப்புக்கே ரோடு போட்டுத் தரக் கூடாது. சுயதொழில் செய்யவும் ஊக்குவிக்கணும். அதில் சாதனை செஞ்சவங்களைக் கூட்டி வந்து பேசச் சொன்னா தாங்களும் அது போல ஆகணும்ன்னு ஆசைப் படுவாங்க இல்லையா?”

“நல்லது சார். அதுக்கு நான் என்ன செய்யணும்?”

“மாணவத் தலைவனா நீ இருக்கறதால நீ போய் அவரை இன்வைட் செஞ்சா சரியா வரும் அசோக்! அல்ரெடி ஐ செண்ட் அ இ- இன்விடேஷன்.”

“யாருக்கு சார்? யாரை நான் இன்வைட் செய்யணும்? எங்கிருக்கார்? அட்ரஸ்?”

“தொழிலதிபர் கைலாசம். வேடிக்கையா அவரே சிவனோட வீடுன்னு தன்னைச் சொல்லிப்பார்.”

“சிவனோட வீடு.. சிவனின் இருப்பிடம்.. சிவன்னா ஆலகண்டன். ஆலம் உண்டவன்.. ஆற்றைச் சிரம் தாங்கி.. ஆஹா .. கங்கையைத் தலையில் தாங்கி.. அவர் தான். அவரே தான்.”

தன்னை அறியாது புலம்பிய அசோக்கை வியந்து பார்த்தவர்..

“என்னப்பா அசோக்! ஏதேதோ புலம்பற? போய்ப் பார்க்குறியா? அட்ரஸ் தரேன்.!”

“அட்ரஸா? இல்லை சார்.. நானே கண்டுபிடிச்சு போய் இன்வைட் பண்ணிட்டு வரேன்!”

“குட்பாய்! ப்ரொகிராம் இஸ் ஆன் நெக்ஸ்ட் ஃப்ரைடே! சொல்லிடு!”

தலையாட்டி விட்டுத் தன்போக்கில் நடந்து வந்தவனின் மனம் முழுக்க நிறைந்திருந்தது அந்தப் பாட்டு.

ஓ! கைலாசத்தின் மகளா நீ? ப்ரின்சியிடம் கேட்கலாமே.. கைலாசத்தின் மகள் இங்கு படிக்கிறாளாவென்று.

சட்டெனத் திரும்பியவன்..

“சே! சே! என்னைப் பத்தி என்ன நினைப்பார்.. கிறுக்குத் தாண்டா பிடிச்சிருக்கு அசோக்கு!”

தலையைத் தட்டிக் கொண்டான்.

தலைக்குள் நிறைந்திருந்தவளோ அங்கு அடுத்த பாட்டை எழுதிக் கொண்டிருந்தாள்.

(தொடரும்)




What’s your Reaction?
+1
13
+1
8
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!