Serial Stories பூவே! பூவே! பெண்பூவே!

பூவே! பூவே! பெண்பூவே!-3

 3

முகை:

முகை என்பது மொட்டு சிறிது சிறிதாக விரியும் நிலையில் இருக்கும் நிலை. அதாவது முகிழ்க்கும் நிலையில் உள்ளதால் முகை என்கிறோம்.”

அங்கு தன் அப்பா கைலாசத்தின் கெடுபிடியில் சிக்கி இருந்தாள் கயல்விழி.

“மொட்டை மாடிக்குப் போகத் தான் லிஃப்ட் இருக்கே கயல்விழி. என்னத்துக்காய் படியேறிப் போன? உன் ஹெல்த் இஷ்யூஸ் உனக்குத் தெரியாதா? டாக்டர் சொன்னது ஞாபகம் இருக்கா இல்லையா? சில்லி கேர்ள்! எங்க உன்னோட அப்பத்தா? உன்னை படியேற விட்டுட்டு என்ன பண்ணிட்டு இருந்தாங்க?” வேகத்தோடு சொல்லிவிட்டு திரும்பிய கைலாசம்

தயங்கியபடி வந்து நின்ற அப்பத்தாவைப் பார்த்து..

“ஏம்மா! உங்களை என்ன பண்ணச் சொன்னேன்? என்ன பண்ணி இருக்கீங்க? பாப்பா கூடயே இருங்கன்னேன். இப்படி படியேற விட்டுருக்கீங்க. அதுவும் நாலு மாடி. இவளுக்காகத் தான் லிஃப்ட் கட்டி வச்சிருக்கு. எந்தளவு வசதியா வச்சுக்கணும்ன்னு நான் நினைக்கறேனோ அந்த அளவு இந்தப் பொண்ணு அதும்படி நடந்துக்கறதே இல்லை. நீங்க தாம்மா கூட இருந்து பார்த்துக்கணும். இப்ப பாருங்க மூச்சிளைப்பு வந்திருச்சு. மருந்து இழுக்க வேண்டியதாயிருச்சு. போய் ஜெயாம்மாட்ட சூடா வெந்நீர் வைச்சு கொண்டாங்க.”

கோபத்தில் கத்தும் கைலாசத்திடம் வெகுநேரம் மொட்டை மாடியில் நின்றதால் கடற்காற்று கயல்விழிக்கு ஒத்துக் கொள்ள வில்லை என்று சொல்லவா முடியும்? கோபத்தில் குணம் மாறிப்போகுமே பெற்றவருக்கு!

கள்ளம் புகுந்த கயலுக்கோ அசோக் மெசெஜ் பார்த்திருப்பானா? யாரு நீ எனக் கேட்டிருப்பானோ என்று பல யோசனை. போனை எடுத்துப் பார்க்க மனம் குறுகுறுத்தது. அப்பா நகர்ந்தால் தானே! இந்த மூச்சிளைப்பால் கல்லூரிக்கும் இன்று போக முடிய வில்லை. நிம்மியிடம் சொல்லலாமென்றால் ஒடிப்போய் அவனிடம் மெசேஜ் வந்துதா பாஸ் எனக் கேட்டு விடுவாள். ஆணியே புடுங்க வேண்டாம்டி கயல் என நினைத்துக் கொண்டாள்.




“என்னடா கண்ணு! இப்ப கொஞ்சம் பரவாயில்லையா? நேத்து அத்தனை நேரம் நின்றுருக்கக் கூடாது நீ! ஊதக் காத்து தான் உனக்கு இப்படி நோவு வந்துருச்சு!”

“உஷ்! அப்பத்தா! கம்முன்னு இருங்க. டாடி கவனிக்கறார்.” கயல் அவரை எச்சரித்தாள்.

“என்னவாம் என்ன சொல்றாங்க உங்க அப்பத்தா? ஊதக் குளிரு உடம்புக்கு ஒத்துக்காதுன்னு சொல்றாங்களா?”

“டா..டி!” வார்த்தை தந்தியடித்தது மகளுக்கு.

“ஆன்னா ஊன்னா மாடிக்குப் போய் அந்தக் கடலையே வெறிச்சுப் பார்க்கறது எனக்குத் தெரியாதுன்னா நினைச்ச கயல்? அப்படி என்னதான் இருக்கு அங்க? ம்ம்!”

சாப்பாட்டு மேஜையில் அமர்ந்து ஹாட்பேக்கில் இருக்கும் இட்லிகளை எடுத்துப் போட்டுக் கொண்ட கைலாசம் கயலிடம் பதிலை எதிர்பார்க்காமல் கிட்சனை நோக்கி குரல் கொடுத்தார்.

“தொட்டுக்க என்ன ஜெயாம்மா? ஒரு குழம்பு, குருமான்னு வைக்கக் கூடாதா? என்னத்துக்கு இந்த நாலு வகை சட்னி? மனுஷன் அவசரத்துக்கு சாப்பிட முடியுதா? விக்கல் தான் வரும்!”

கைலாசம் அப்படித் தான். அவருக்கு கோபம் ஒரு தொடர்கதை. ஒருவரிடம் ஆரம்பிக்கும் கோபம் சங்கிலித் தொடராய்த் தொடர்ந்து அன்றைய நாள் முழுவதும் அகப்படுபவர்கள் மாட்டிக் கொள்வர். ஆக இன்றைய கோபத்தைத் தான் ஆரம்பித்து வைத்து விட்டோம் எனக் கயலுக்குப் புரிந்தது.

சட்டெனத் தானே சமையறைக்குப் போய் அவசர சாம்பார் தயாரித்தாள். ஓய்வு நேரத்தில் ஃபுட் வீடீயோஸ் பார்த்த பயன். தக்காளி, வெங்காயம் வதக்கி வேக வைத்து பருப்புத் தண்ணீருக்குப் பதில் கடலை மாவு கலந்து விட்டு கடுகு வெடிக்க விட்டு, கொத்தமல்லி, கருவேப்பிலை என அலங்கரித்து அவர் கோபத்தைக் குறைக்கக் கொண்டு வந்து மேஜையில் வைத்தாள்.

“அட! என்னடா கண்ணம்மா! அவசர சாம்பார் மணம் ஆளைத் தூக்குதே! யாருடா சொல்லிக் கொடுத்தா? உங்க அப்பத்தாவா? இல்ல ஜெயாம்மாவா?”

சாம்பாரை இட்லியின் மேல் ஊற்றிக் கொண்டவர் அதன் சுவையை வெகுவாகச் சிலாகித்தார்.

“ஆஹா.. ஆஹூம் .. யொம்ப தேஸ்டா ருக்கு!” இட்லியும் சாம்பாரும் கலந்து கட்டி ருசி முன்னிற்கையில் பேச்சு பின்னாடி போயிற்று.

“என்ன டாடி சொல்றீங்க? ரொம்ப டேஸ்டா இருக்கா? ஓகே! ஓகே! இன்னும் கொஞ்சம் எடுத்து வரவா? ஒரு தோசை சூடாய் ஊத்தித் தரட்டுமா?”

“இல்லடாம்மா! இதுவே வயிறு நிறைஞ்சாச்சு. இந்தா.. இத்தனை சட்னியையும் உங்க ஜெயாம்மாவையே சாப்பிடச் சொல்!” மறைந்த கோபம் எட்டிப் பார்த்தது.

“டா..டி! யாரையும் அப்படி சொல்லக் கூடாது!”

“ஓகே தங்கம். இனி ம்ஹூம்!” சொன்னபடி எழுந்தவர்..

“இன்று ரெஸ்ட் எடு. காலேஜே போக வேண்டாம். உனக்கு போரடிக்குமேன்னு தான் காலேஜுக்கே அனுப்பறேன். இல்லன்னா கரஸ்லயே படிச்சுக்கலாம். நீ எங்க கேட்ப?”

கரஸ்ஸா? ஹையோ! அப்புறம் எப்படி அவனைப் பார்க்கறது?

“இல்ல டாடி.. வந்து.. வீடு ரொம்ப போரடிக்குது டாடி.. “

“எது.. வீடு? இந்த முதல் மாடி நமக்குன்னா கீழ்ப்ளோர் முழுக்க லைப்ரரியும் , ஜிம்மும் இருக்கு. மேல்மாடில தியேட்டர் இருக்கு. அதை விட்டா புழக்கத்துக்கு உனக்குன்னு இன்னொரு மாடி. இது அத்தனையும் விட்டு மொட்டை மாடில கடல் பார்க்கற உனக்கு வீடு போரடிக்கும் தான் மகளே! என்ன வேணும்ன்னு சொல்லு. அப்பா கொண்டாந்து நிறுத்தறேன். உனக்காக கடல் மாதிரி வீடு இருக்கும் போது அந்த கடலென்னடா கடல்?”

மனுஷங்க டாடி! எனக்கு வீடு பூரா மனுஷங்க வேணும். ஒரு அப்பத்தாவும் ஒரு ஜெயாம்மாவும் போதாது. நினைத்தவள் அதை வெளியே சொல்ல வில்லை. சொன்னால் மீண்டும் கோபப் படுவார். அது இன்னும் பரவி எதிரில் பார்க்கும் அத்தனை பேரையும் சுடும் ஆதலால் கிட்ட நெருங்கி அவர் கழுத்தைக் கட்டிக் கொண்டு

“ஐ லவ் யூ டாடி!” என்றாள் மென்மையாக.

“விளையாட்டுப் பொண்ணு! சரிடா நான் ஆபீஸுக்குக் கிளம்பறேன். வேளைக்கு சாப்பிட்டுடு என்ன!”

கைலாசம் கிளம்பிப் போனதும் கடும் மௌனம் ஆட்சி செய்தது அங்கே. அந்த மௌனம் தான் கயலுக்கு எதிரி. அதைக் குலைக்க அவளே சத்தம் போட்டுப் பாடுவாள். ஜெயாம்மா நகர்ந்தாலும் இழுத்து வைத்து சமையல் ரெசிபி கேட்பாள். அப்பத்தாவை வம்பிழுப்பாள்.

இன்று எதைச் செய்யவும் மனதில்லை. அவளின் கவனம் முழுவதும் அசோக் தன் மெசெஜைப் பார்த்திருப்பானா என்பதில் இருந்தது. மாடியில் தன் அறைக்குச் சென்று கதவைச் சாற்றிக் கொண்டாள்.

அங்கோ கல்லூரியின் மரத்தடியில் போனை கையில் வைத்தவாறு சாய்ந்திருந்தான் அசோக்.

காலை ஜாகிங் முடித்து வீட்டுக்கு வரும்போது போனில் புதிராய் விழுந்திருக்கும் பாட்டைப் படித்தான். முதலில் ஏதோ ஃபார்வேர்ட் மெசெஜ் என நினைத்தவன் பின்னர் ஊன்றிப் படித்தான்.

நீலப் போர்வையில் நிழலாடும் கருமை கண்டு நீராடும் பரப்புக்குள் நீந்துமவள் நான் தானே!

சோர்வற்று சுகமாக்க சொற்புதிர் நானிட்டேன்.

சொந்தமென வந்தவனே சொல்லாய்ந்து கண்டுபிடி!”

 


நீலப் போர்வையில் யாருப்பா அது? நீந்துமவள்ன்னு இருக்கு. அப்ப ஒரு பொண்ணு தான். ஹையோ.. நீலப் போர்வைன்னா நீலக் கலர் புடவையா? சல்வாரா? அட ஜீன்ஸ் கூட நீலம் தான்.

நிழலாடும் கருமைன்னா நீ கருப்பா இருப்பியா? ஏன் சிவப்பா இருந்தா என்னன்னு புதிர் போட்டுருப்ப?

இல்லல்ல.. யாரோ ஃப்ராங்க் செய்யறாங்க. அடங்கி இரு அசோக்கு. ஏ! புதிர்ப்பெண்ணே! கம்முன்னு உன் வழியைப் பார்த்துட்டு போயிடு. சும்மா கிடந்த சிங்கத்தை உசுப்பி விட்ட ஆபத்து உனக்குத் தான்.

தனக்குள் பேசிக் கொண்டவன் அந்த எண்ணை புதிரா எனச் சேமித்து வைத்தான்.

அசோக்கின் நண்பன் தேவாவின் உறவினர் போலீஸில் தான் இருக்கிறார். ரொம்பத் தொல்லை தரும் எண் என்றால் அவரிடம் சொல்லி விடலாம் என்ற எண்ணமும் அவனுக்குள் வந்தது. எதற்கும் இருக்கட்டுமென்று சேமித்துக் கொண்டான்.

பார்த்துக் கொண்டிருக்கும் போதே அடுத்த புதிர்ப்பாட்டு வந்து விழுந்தது.

ஆற்றைச் சிரம்தாங்கி ஆலம் உண்டுவிட்டான்

வீற்றிருக்கும் இடம்கொண்டான் விரும்பும் செல்வம் நான்!

காற்றாய் வந்திடுவேன் கணப்பொழுதில் நகர்ந்திடுவேன்

ஏற்றத்தில் ஒருபொழுது எனைக்காண நிற்பாயோ?

 

“ஹோ! அடுத்ததா? அப்ப இது தொடர்கதையா? இதோ.. சிங்கம் கிளம்பிடுச்சு. சீண்டாம விடாது. ஞாபகம் வச்சுக்கோ!”

என அசோக் வேகமாக டைப் செய்தான்.

சீண்டலும் சீறலும் சிந்தைக்குப் பரிசே!

கொண்டவன் நீயென்றால் கோபங்கள் பொருட்டிலை!

சிந்தைக்குள் வைத்தேன்! சீக்கிரம் கண்டுபிடி!”

 

“யெஸ்.. இப்பவே உன் நம்பரை போலீஸில் கொடுத்து..”

“ப்ளீஸ் நோ! இது ஜெண்டில்மேன் கேம்! நான் இடும் புதிர்ப்பாட்டால் என்னைக் கண்டுபிடியேன்! ஒவ்வொரு பாட்டும் நான் யாரென ஊகங்களைத் தருதே!”

“பெரிய தமிழ்ப் புலவரோ?”

“உன்னையே நினைத்திருக்கும் தமிழ்ப் பெண்! இனி பாட்டில் மட்டுமே தொடர்பு!”

சட்டென்று ஆஃப்லைனுக்குப் போய் விட்டாள்.

அசோக்குக்கு சுவராஸ்யமாய் இருந்தது.

“நைஸ். நீ யாரென அறிய நான் போலீஸுக்குப் போகப் போவதில்லை. நானே கண்டு பிடிக்கறேன்!”

சிரித்துக் கொண்டே அனுப்பிய இரண்டு பாடலையும் ஊன்றிப் படிக்கலானான்.

புதிராடியவளோ எங்கே அவன் போலீஸுக்குப் போய் விடுவானோ என்ற படபடப்பில் மெசெஜ் அனுப்பிய போனை ஆஃப் செய்து வைத்தாள்.

கண்டறிவானா?

(தொடரும்)




What’s your Reaction?
+1
12
+1
5
+1
1
+1
2
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!