கனவு காணும் நேரங்கள்

கனவு காணும் நேரங்கள்-1

1

*******************

“அடியே! தங்கம்! நில்லுடி, நானும் வரேன்” 

இடுப்பில் குடத்துடனும், இரட்டைப் பின்னலில் ஒரு பின்னலை ஒரு கையில் சுழற்றியவாறு, குதித்துக் கொண்டு ஆற்றங்கரை நோக்கி விரைந்தவாறு இருந்த தங்கம், குரல் வந்த திசையை நோக்கித் திரும்பினாள். 

புதிதாய்க் கட்ட ஆரம்பித்த  புடவை தடுக்கி விடுமோ என்ற பயத்தில் வலது  கையால்  புடவையைத் தூக்கிப் பிடித்தவாறும், இடது கையால் குடத்தைத் தூக்கிக் கொண்டும் வேகவேகமாக நடந்து வந்து கொண்டிருந்த முத்தழகியைப்  பார்க்க, தங்கத்திற்குச் சிரிப்புத் தாங்கவில்லை.குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க ஆரம்பித்தாள். 

அருகில் வந்ததும் தங்கத்தை முத்தழகி கோபமாக முறைத்தாள். “ஏண்டி, என்னப் பாத்தா கேனச்சியாட்டமா இருக்கா உனக்கு? எதுக்குடி இப்டி சிரிக்கற?” 

கோபமான முத்தழகியின் முகம் சிவந்ததைக் கண்டு தங்கம் இன்னும் பலமாக சிரிக்க ஆரம்பித்தாள். 

சுற்றும் முற்றும் பார்த்தவாறே, “ஷ், போதுண்டி நீ சிரிச்சது. பல்லு சுளுக்கிக்கப் போவுது. அக்கம் பக்கம் நம்ம ஊரு பொம்பளைங்க பாத்தா பொறணி பேசியே எம் மண்டைய உருட்ட ஆரம்பிச்சுடுவாளுங்க. வரும்போதே அப்பத்தா 

” அங்கன இங்கன பராக்குப் பாக்காம வெரசா வந்து சேரு. போனமா, வந்தமான்னு இருக்கணும் . மாப்புள்ள வீட்டாளுங்க கிட்ட வத்தி வெக்கவே நம்மூரு பொம்பளைங்க அலைவாளுங்க. நிச்சியமான கண்ணாலம் நல்லபடியா நடக்கோணம். ஆமா! சொல்லிட்டேன்” ன்னு சொல்லி அனுப்பியிருக்கு. 

எதாவது வம்பு வந்துச்சு, இந்த ஆத்தங்கரைக்கு வாரதையும் நிறுத்திப்புடுவாங்க” என்றாள் முத்தழகி. 

இதுநாள் வரை பாவாடை தாவணி கட்டி பழகியிருந்த முத்தழகிக்கு சமீபத்தில் தான் திருமணம் நிச்சயமாகி இருந்தது. தூரத்துஅத்தை முறைக்காரி. தேர்த் திருவிழாவிற்கு வந்திருந்தவளுக்கு, முத்தழகியைப் பிடித்துவிட்டது.

மறுவாரமே கணவனைக் கூட்டிக் கொண்டு வந்தவள், மகன் மருத்துவ மேற்படிப்புக்காக அயல்நாடு சென்றிருப்பதாகவும், அவனுக்கு பட்டினத்து நவநாகரீகம் பிடிக்காது என்றும், மருத்துவத் தொழிலையே கிராமத்தில் வந்து தான் செய்யப் போவதாகச் சொல்லிக் கொண்டிருப்பதாகவும், அத்துடன் தன் சொல்லை அவன் தட்ட மாட்டான் என்றும்  சொல்லி நிச்சியம் பேசிவிட்டு சென்றாள். மகன் வந்ததும் அவனைக் கூட்டிக்கொண்டு வந்து முறைப்படி நிச்சயதாம்பூலம் மாற்றிக் கொள்வதாகவும் கூறிச் சென்றாள். 




அவ்வளவு தான்! தாயில்லா முத்தழகியின் அப்பத்தாவுக்கு தலைகால் புரியவில்லை. “எம் பேத்தி மா நெறந்தான்னாலும் அதிட்டக்காரி! டாக்டரு மாப்ள கிடைச்சிருக்காரு!” என்று ஆகாயத்திற்கும் பூமிக்கும் குதித்தாள். அத்துடன் முத்தழகிக்கு பல கட்டுப்பாடுகளை விதிக்கவும் தவறவில்லை. 

“ஏண்டி, அழகி! இனிமே பாவட, தாவாணி வேணாம். மாப்ளக்கு அடக்க ஒடுக்கமா இருந்தாத் தான் புடிக்கும் போல இருக்கு. அதனால தான் சிவகாமி இங்ஙன வந்து பொண்ணு தேடறா. நீ புடவ கட்ட கத்துக்கோ. இனிமே சோட்டாளுங்களோட சுத்தறத நிப்பாட்டு. எங்கயும் போனமா, வந்தமான்னு இரு. இப்பிடி நட. அதைக் கத்துக்கோ. இதைக் கத்துக்கோன்னு”என்று ஒரே

அதிகாரந்தான். 

கிராமத்தில் ஆற்றங்கரையோரம் செந்தாழம் பூ கிடைக்கும். அதை ஆட்களை விட்டுப் பறித்துக் கொண்டு வரச் சொல்லி பேத்திக்கு தினமும் பூத்தைத்து விடுவாள். மருதாணியைப் பறித்து, தானே கல்லுரலில் அரைத்து கைகளுக்கு வைப்பாள். 

பழைய நகைகளை அழித்து புது நகைகளைச் செய்யச் சொல்லி மகன் தங்கவேலுவை விரட்டினாள். தாயின் ஆர்ப்பாட்டத்தில் தங்கவேலுவே மலைத்துப் போனார். 

“இன்னும் பையன் வந்து பாக்கலே. பொண்ணு அவன பாக்கல. ஏன், நாமளே புள்ள என்ன? ஏதுன்னு விசாரிக்கலே. அதுக்குள்ள நம்ம புள்ளய இந்த வெரட்டு வெரட்டறயே, ஆத்தா.” என்று தாயிடம் கேட்டார் தங்கவேலு. 

“போடா போ. உனக்கென்ன தெரியும்! வலுவுல வர மாப்புள்ள கசக்குதோ உனக்கு! எம் பேத்தி குணத்துக்கு நல்ல மாப்புள்ள தன்னால வருவான்னு சோசியக்காரன் சொல்லியிருக்காண்டா! சிவகாமி சொல்லு மாற மாட்டா”

” இல்ல ஆத்தா! நம்மூருல நாலு எழுத்து படிச்ச பசங்களே அப்பன் ஆத்தா சொல்லு கேக்காம, தானே கூட படிச்சதுகள கட்டுவேங்குது! சிவகாமி பையன் அசலூரு பெரிய படிப்பு படிச்சுபுட்டு அதுவும் வெளி நாட்டுல படிச்சுபுட்டு கிராமத்துப் பொண்ணக் கட்டுவானா? எதுக்கும் நிதானமா இரு ஆத்தா”

தனம்மாள் ‘தாம்தூம்’ என்று குதிக்க ஆரம்பித்து விட்டாள்.” உம் வாயில நல்லதே வராதா? அவளுக்கு என்னடா குற? கோண எழுத்து படிச்சா தான் புத்தியிருக்குனு அர்த்தமோ! அழகி வேல செய்யற அழகும், பதவிசும், ருசி அறிஞ்சு சமைக்கறதும் டவுனு பொம்பளையாளுங்களுக்கு வருமாடா? நாலு பேரு கூட வந்துட்டா, க்ளப்புல தான சொல்றாங்க! வூட்ல சமைக்கறதும் அந்த டி. வி. பொட்டிய பாத்து பாத்து தானே! 

நம்ம அழகு அம்பது பேருக்கு ஒத்தையா ஒரு மணி நேரத்துல சமைப்பாளே! ஊட்ட வெச்சிருக்குற அழகு தான் என்ன? கைவேல என்ன! போடா போ! பெத்த அப்பனுக்கே அவ அரும தெரியல! “

தாய் போட்ட போட்டில் தங்கவேலு வாயை மூடிக் கொண்டார். அவருக்கு மட்டும் மகள் பெரிய இடத்தில் வாழ்க்கைப் பட்டால் பிடிக்காமல் போகுமா? சரி வருமா என்று ஓர் ஐயம் மட்டும் அவருக்கு வரும்.இருந்தாலும் தாயின் ஆலோசனைப் படி மாடியில்  மாப்பிள்ளையும், பொண்ணும் தங்குவதற்கு சகல வசதிகளுடன் ஓர் அறையைக் கட்ட ஏற்பாடு செய்தார். நகைகளை மாற்றிச் செய்ய ஆசாரியை வரச் சொன்னார். 

“ஆறு வயசுல இருந்து வளக்கற ஆத்தாவுக்கு, பேத்திய பெரிய இடத்துல குடுக்கணும்னு ஆச. உறமுறையாவும் போனதுல தலகால் புரியல.” தனக்குள் நினைத்த தங்கவேலு ஆத்தா நினைக்கற மாதிரி நல்ல படியா நடந்தா, அடுத்த வருட திரௌபதியம்மன் தேர்த்திருவிழாவை தன் செலவில் நடத்துவதாக வேண்டிக் கொண்டார். 

ஊரின்  பரம்பரை பணக்கார  வீட்டுப் பெண் தான் தங்கம். அவளும், முத்தழகியும் சிறுவயதிலிருந்து ஒன்றாகப் படித்தவர்கள்.கிராமத்தில் எட்டு வகுப்புவரை தான் இருந்தது. அதற்கு மேல் படிக்க வேண்டும் என்றால் பக்கத்து ஊருக்குப் போய்த் தான் படிக்க வேண்டும். முத்தழகியை அவள் அப்பத்தா மேல் படிப்பு படிக்க அனுமதிக்கவில்லை. 




முத்தழகியின் தாயார் இறந்தபோது அவளுக்கு வயது ஆறு. நான்கும், இரண்டுமாய் அவளுக்கு அடுத்து தம்பி, தங்கை. மூவரையும் அவள் அப்பத்தா தான் வளர்த்தாள். வீட்டில் அவள் பேச்சுக்கு மறுபேச்சு கிடையாது. எனவே எட்டாம் வகுப்புடன் அவள் படிப்பு நின்று போனது. 

தங்கம் எட்டு வகுப்பு வரை கிராமத்தில் படித்தாள். பிறகு பக்கத்து ஊருக்கு சென்று பள்ளி இறுதி வகுப்பை முடித்தாள். 

பிறகு கல்லூரியில் சேர்வதற்காகச் சென்னை சென்று அங்கு விடுதியில் தங்கி மேற்படிப்பு படிக்க ஆரம்பித்தாள். அங்கு சென்று விடுதியில் தங்க ஆரம்பித்ததும் அவள் பழக்க வழக்கங்கள், சிந்தனைகள் நகர வழக்கமாக மாற ஆரம்பித்தன. 

சென்னையில் இருக்கும்போது ஜீன்ஸ், சுடிதார் என்று போடுவாள். விடுமுறையில் கிராமத்திற்கு வரும்போது மறக்காமல் பாவாடை, தாவணியுடன் தான் வருவாள். 

என்னதான் படிப்புக்குத் தடை சொல்லவில்லை என்ற போதும் அதிகப்படியான சுதந்திரத்தை அவள் தாயார்  அனுமதிக்கமாட்டாள் என்று அவளுக்குத் தெரியும். 

அவள் உடையில் தான் மாற்றம் ஏற்பட்டதே தவிர உள்ளத்தில் மாற்றம் ஏற்படாத காரணத்தால், முத்தழகியிடம் ஏற்பட்ட நட்பும் மாறவில்லை. 

சென்னைத் தோழிகளிடம் பொழுதுபோக்காகப் பழகினாளே தவிர, அவள் ஆத்மார்த்தமாகப் பழகியது முத்தழகியிடம் மட்டுமே. 

முதல் வருடம் பாதி நாட்கள் கிராமத்தில் இருந்தமாதிரியே இருந்தாள். அதுவே அவளை அவள் அறைத் தோழிகளிடமிருந்தும் தள்ளி வைத்தது. 

அவள் அறையில் மீனா, சத்யா என்று இரண்டு பேர் தங்கி இருந்தார்கள். அவர்கள் இவளைப் பார்க்கும் பார்வையில் கேலி இருக்கும். தங்கத்துக்கு முதலில் அது புரியவில்லை. 

பழக்கவழக்கங்கள் கிராமீயத் தனமாக இருந்த போதும், படிப்பில் முதல் மாணவியாகவே இருந்தாள். முதல் மதிப்பெண் வாங்கியபோது வகுப்பே தங்கத்தைத் திரும்பிப் பார்த்தது. 

மெதுவாக அறை மாணவிகளும் நெருங்கினார்கள். தங்கமும் தன்னை மாற்றிக் கொள்ள ஆரம்பித்தாள். ‘ஊரோடு ஒத்து வாழ்’ என்று மாறியவள் சென்னையில் ஓர் ஆடை, கிராமத்தில் ஓர் ஆடை என்று அணிய ஆரம்பித்தாள். 

மூன்றாவது வருடம் வந்தபோது, அவள் கல்லூரியில் ஆண், பெண் என வேறுபாடின்றியும், இயல்பாகவும் பழகக் கற்றுக் கொண்டாள். 

ஊருக்கு வரும்போது முத்தழகியிடம் எல்லாவற்றையும் கூறுவாள். அங்கு ஜீன்ஸ், டி சர்ட் போடுவதைக் கூறும்போது முத்தழகி வாயைப் பிளப்பாள். சுடிதார்களை மட்டும் வீட்டுக்கும் எடுத்து வந்து அணிய ஆரம்பித்தாள். 

ஒருமுறை முத்தழகி வீட்டுக்கு வந்தபோது அவளைத் தன்னுடைய சுடிதாரை அணியச் சொல்லிக் கட்டாயப் படுத்தினாள். 

“ஐயையோ! எங்க அப்பத்தா கண்டுடுச்சுன்னா, கொன்னே போட்டுடும்” என்று அலறியவளை வலுக் கட்டாயப் படுத்தி அணியச் செய்தாள். 

முதலில் மறுத்த முத்தழகி, அணிந்து கொண்ட பின்னர், கண்ணாடியில் பார்த்து விட்டு, “நல்லாத் தான் இருக்கு” என்றதுடன்,”அங்க எல்லாரும் போடுவாங்களா?” என்று கேட்டதைக் கண்டு சிரித்த தங்கம்,” அங்க வயசானவங்கக் கூட ஜீன்ஸ், பேன்ட், முழங்கால் பாவாடை, சுடிதார் எல்லாமும் போடுவாங்க.நீ ஒரு வாட்டி எங்கூட வரியா? சென்னைல இப்ப எல்லா இடமும் எனக்குத் தெரியும். நான் உன்னை எல்லா இடமும் கூட்டிட்டுப் போறேன். பீச், பார்க் எல்லாம் நல்லா இருக்கும்” என்று பேசிக் கொண்டே போனவளை. 

“நிறுத்து, நிறுத்து. பீச்னா? “

என்று தடுத்தாள் முத்தழகி. 

” ஐயோ! பட்டிக்காடு! பட்டிக்காடு”என்று தோழியைப் பரிகசித்த தங்கம் அவள் முகம் வாடுவதைப் பார்த்ததும் தானே சமாதானம் செய்து,

” பீச்னா கடற்கரை. நிறைய தண்ணீ! பிச்சுகிட்டு போகும் காத்து! நிறைய மணல் எல்லாம் இருக்கும். அது மட்டுமில்ல, நிறைய கடைங்க, திங்கறதுக்கு பஜ்ஜி, சுண்டல் இப்டி ஒரு பக்கம் இருக்கும். இன்னொரு பக்கம் பலூன் சுட்டு விளையாடறது இப்டி பொழுதுபோக்கற விளையாட்டுகளும் இருக்கும்”

தங்கம் தோன்றியதையெல்லாம் சொல்லிக் கொண்டே போக, விழிகள் விரிய கேட்டுக் கொண்டிருந்த முத்தழகி,

” நம்மூர் ஆத்தை விட பெரிசா இருக்குமா? கடைங்கல்லாம் நம்மூர் தேர்த் திருவிழாவுல இருக்கற மாதிரி இருக்குமா? என்றாள் எதோ யோசித்தபடி. 

விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள் தங்கம். 

” ஏண்டி, அழகி! நாளைக்கு டாக்டர் மாப்பிள்ளையைக் கட்டிக்கப் போறியே, அவர் கிட்டயும் இப்படியெல்லாம் கேட்டு வைக்காத! உன்ன கல்யாணத்துக்கு முன்ன ரொம்ப மாத்தணும். 

அவரு சென்னைக்குக் கூட்டிட்டு வருவாரோ! இல்ல, பாஃரின் கூட்டிட்டுப் போய்டுவாரோ! நீ இன்னும் சென்னையே பாக்காம இருக்க! நாளைக்கு விமானத்துல பறக்கணும்னா என்ன செய்யப் போறியோ? தெரியலையே! “பாதி கேலியுடனும், பாதி நிஜ வருத்தத்துடனும் தங்கம் சொல்ல, முத்தழகியின் முகம் வருத்தத்தைக் காட்டியது. 

” நீ என்னவோ இப்டி சொல்ற! அப்பத்தா என்னவோ “மாப்ள கிராமத்துப் பொண்ணதான் கட்டப் போறேன். கிராமத்துல தான் சேவை செய்யப் போறேன்னு அவங்கம்மா கிட்ட சொல்லியிருக்காரு அதனால நீ இன்னும் பதவிசா இருக்கக் கத்துக்கோன்னு “என் உயிர எடுக்கறாங்க. எனக்குக் கல்யாணம்னு நினைக்கும் போதே பயமா இருக்குடி”

பேசிக் கொண்டே இருவரும் ஆத்தங்கரைக்கு வந்திருந்தார்கள். குடங்களை மணலில் வைத்து விட்டு அமர்ந்ததும் முத்தழகி, தங்கத்தின் தோளில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள். 

அவளை அணைத்துக் கொண்ட தங்கம் அவளை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல், யோசிக்க ஆரம்பித்தாள். 

-தொடரும்




What’s your Reaction?
+1
12
+1
8
+1
2
+1
1
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!