Serial Stories கனவு காணும் நேரங்கள்

கனவு காணும் நேரங்கள்-6

 6

*******************

திருவிழாவிற்கு மாமாவிடமிருந்து அழைப்பு வந்தது. சிவகாமியிடம் போஃனில் பேசிய தங்கவேலு, அனைவரும் திருவிழாவுக்குக் கண்டிப்பாக வரவேண்டும் என்று போஃன் செய்தார். 

சிவகாமிக்கு அவர் ஏன் அவசரப்படுகிறார் என்பது புரிந்தது. அவள்தான் அவள் பையனைப் பற்றிச் சொல்லிவிட்டு வந்திருக்கிறாளே. அவளுக்குமே பையனின் திருமணத்தை சீக்கிரம் முடித்து விட வேண்டும் என்ற எண்ணம்தான். 

ஆனந்த் குமாரை சென்னைக்கும், மேல்படிப்புக்கு லண்டனுக்கும் அனுப்பும் போதே அவளுக்குக் கொஞ்சம் பயந்தான். ஆனால் அவன் நல்லபடியாக படிப்பை முடித்துவிட்டு வந்து தொழிலையும் ஆரம்பித்துவிட்டான். கையோடு திருமணத்தை முடித்து விட்டால் நிம்மதி. அந்தப் பெண் முத்தழகியின் சுறுசுறுப்பும், வேலைசெய்யும் விதமும் சிவகாமிக்கு மிகவும் பிடித்து விட்டது. அவள் அதிகம் படிக்கவில்லை என்பது சிவகாமிக்குப் பெரிய விஷயமில்லை. அவளைப் பொறுத்தவரை அது அவளுக்குத் தேவையில்லாத விஷயம் கூட. “ஆனால் இந்தக் குமார் மத்ததெல்லாம் ஒத்துக்கறான். படிக்காததை பெரிய விஷயமா சொல்றானே! கல்யாணம் நடக்குமா?” என்ற பெரிய சந்தேகம் வந்தது. 

ஒருவழியாக மாங்குளத்துக்கு வந்து சேர்ந்தார்கள். இது தங்கத்தின் ஊர் என்பதாலோ என்னவோ ஊரைப் பார்த்ததுமே ஆனந்துக்குப் பிடித்துவிட்டது. காபி, பலகாரத்தை முத்தழகியை விட்டே குடுக்கச் சொன்னாள் அவள் அப்பத்தா. 

” இது அவளே செஞ்சது” என்பதையும் சொல்ல மறக்கவில்லை. அவளுக்கும், தங்கவேலுவுக்கும் ஆனந்தைப் பிடித்துவிட்டது. அவன் பழகும் முறையில் மகிழ்ந்த அப்பத்தா, “என்ன இருந்தாலும் நிறையப் படிச்சாலே அது ஒரு தினுசுதான். அரைகுறைங்க தான் தலைகால் தெரியாம கூத்தாடும்” என்று நினைத்துக் கொண்டாள். 

ஆனந்தின் மனசெல்லாம் தங்கத்தின் வீட்டைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதில் தான் இருந்தது. நண்பனைப் பார்த்து விட்டு வருவதாகச் சொல்லிவிட்டு அவன் கிளம்பினான். 

” இந்த ஊர்ல கூட மாப்ளைக்கு சினேகிதக்காரங்க உண்டா?” தங்க வேலு ஆச்சரியமாகக் கேட்டார். 

“ம், ஆமாம் மாமா. ஆனா ரொம்ப நாள் பழக்கம் கிடையாது. லண்டன்ல எங்கூட படிச்சான். இந்த ஊருக்கு வருவேன்னு சொன்னதும், வீட்டுக்குக் கூப்பிட்டான். போய்ப் பாத்துட்டு வந்துடறேன்.”என்று ஆனந்த் கூறியதும், அப்பத்தாவும், தங்கவேலுவும் ஆச்சரியமடைந்தனர். 

“இந்தூர்ல இருந்துன்னா, அந்தப் பையன் பேரு செந்திலா? “எனத் தங்கவேலு கேக்கவும்,” அட! அவனே தான் “என்றான் ஆனந்த். 

” நான் வேணா அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகவா”என்று கேட்டார் தங்கவேலு. 

” வேண்டாம், வேண்டாம். நாங்க கொஞ்சம் ஆஸ்பத்திரி தொடங்கற பத்தியெல்லாம் பேசணும். எனக்கு இந்தக் கிராமம் பிடிச்சு போச்சு. நானும் அவனும் சேர்ந்து தான் தொழில் தொடங்கறதா இருக்கோம். அதைப் பத்தியெல்லாம் பேசணும். “

என்று கூறிவிட்டு எழுந்தான் ஆனந்த். 

செல்வத்துக்குப் போஃன் செய்துவிட்டு வெளியே வந்தான். தங்கவேலுவும் வெளியே வந்தார். அவரிடம் பேசிவிட்டுத் திரும்புவதற்குள் டூவீலருடன் நின்றிருந்தான் செல்வகுமார். 




” வா செல்வா தம்பி”என்று வரவேற்ற தங்கவேலு,” இது என் தங்கச்சி மவன். நம்ம முத்தழகியக் கட்டப் போறாரு. உன்னோட சினேகிதமா? . நல்லதாப் போச்சு. நீதான் கல்யாணத்தை முன்ன நின்னு நடத்தணும். தம்பிக்கு மாப்பிள்ளைத் தோழணும் நீதான். புரிஞ்சுதா?” என்றார் உரிமையுடன். 

சம்பிரதாயத்திற்காக வாழ்த்துகளைக் கூற கையை நீட்டினான் செல்வம். மாமன் எதிரில் இருக்க ஒன்றும் சொல்லமுடியாமல் பதிலுக்குக் கையை நீட்டினான் ஆனந்த். இருவரின் முகங்களும் மாறியதை தங்கவேலு அறியவில்லை. ஆனால் நண்பர்கள் உணர்ந்து கொண்டார்கள்.காரணம் தான் இருவருக்கும் புரியவில்லை. 

“நீயே கொணாந்து விட்டுடறியாப்பா” என்று செல்வத்தைக் கேட்டுவிட்டு தங்கவேலு உள்ளே போய்விட்டார். 

சிறிது நேரம் மௌனத்தில் கழிந்தது. “வீடு பக்கம்னா நடந்தே போலாமே” என்றான் ஆனந்த். வழியில் எங்காவது தங்கம் இருக்கும் வீதி கண்களில் தட்டுப்படுகிறதா என்று பார்க்கலாமே என்ற எண்ணம் அவனுக்கு. அப்படியே அவளைப் பற்றி எதுவாவது செய்தி கிடைக்குமா என்று கேக்கலாம் என்றும் நினைத்தான். “இவர் தான் மாப்பிள்ளை” என்று சொன்னதும் செல்வத்தின் முகம் மாறிய காரணம் அவனுக்குப் புரியவில்லை. நடந்து போனால் அதை முதலில் கேட்டுக் கொண்டால் பிறகு தங்கத்தைப் பற்றி பேச்செடுக்கலாம் என்று நினைத்தான் ஆனந்த். கைகுலுக்கும் போதும் அதில் சுரத்தில்லாததைக் கவனித்திருந்தான். 

நடந்து போலாமா என்று ஆனந்த் கேட்டது செல்வத்துக்கும் பிடித்தது. “வண்டிய அப்ப இங்கயே வெச்சுட்டுப் போலாம். திரும்ப வரும்போது எடுத்துக்கறேன்” என்று அவசரமாக வண்டியை நிறுத்தி விட்டான். 

எங்கிருக்கிறேன் என்று ஆனந்த் கூறியதுமே, அது முத்தழகி வீடு என்று கண்டுகொண்ட செல்வம் முத்தழகியைப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் ஆர்வமாக வந்தான். உறவினர்கள் வந்திருப்பதால் வெளியே வரவில்லை என்று நினைத்தவனுக்கு ஆனந்த் அவளைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறான் என்பதே சகிக்கமுடியாததாக இருந்தது. 

தங்கத்தை அவனுக்குத் திருமணம் செய்து தரவேண்டும் என்று ஆசையோடு இருந்தான். விதி அவளின் வாழ்க்கையில் விளையாடி விட்டது என்று தான் இருந்தான். அந்த விதி அவன் வாழ்க்கையிலும் விளையாடும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. 

“ஆத்தங்கரையில் உக்காந்து கொஞ்ச நேரம் பேசிட்டு போலாமா?” என்று செல்வம் கேட்டான். எங்க ஊர் பீச், பார்க் எல்லாம் அதுதான் என்று கூறிக் கொண்டே ஊரைப் பற்றி பொதுவாகக் கூற ஆரம்பித்தான் செல்வம். 

பேச்சுவாக்கில் “முத்தழகியைப் பாத்தியா? பேசினியா? எங்கூரு பொண்ணு பிடிச்சிருக்கா?” என்று எதேச்சையாக கேட்பது போல் கேட்டான் செல்வம். 

சட்டென்று அவன் முகத்தைப் பார்த்தான் ஆனந்த். பாம்பின் காலை பாம்பு அறிந்து கொண்டது. சட்டென்று உற்சாகமானான். பழியை நாம் சுமக்காமல் பிரச்சனை தானே திசை திரும்பும் போலிருக்கே என்று மகிழ்ச்சி வந்தது. 

தான் இரண்டு வருடங்களாக ஒரு பெண்ணை விரும்புவதையும், அவளைப் பார்க்கவே இங்கு வந்ததாகவும், முடிந்தால் அவள் பெற்றோர்களைச் சந்தித்து, நிச்சயம் செய்து கொள்ளும் எண்ணத்தோடேயே தன் பெற்றோர்களையும் அழைத்துக் கொண்டு வந்ததையும் ஆனந்த் கூற சட்டென்று ப்ரகாசமான செல்வத்தின் முகம் மறுகணமே இருளடைந்தது. அதை நண்பனுக்குக் காட்டாமல் முகத்தைக் குனிந்து கொண்டான். 

அவனுடைய உற்சாக முகத்தை மட்டும் பார்த்த ஆனந்த், “ஓஹோ! கதை அப்படிப் போகுதா?” என்று கிண்டலடிக்க ஆரம்பித்தான். 

“இல்லப்பா, நான் அவ்வளவு குடுத்து வைக்கல. என் தங்கச்சியை உனக்குக் குடுக்கணும்னு நினைச்சேன். 

துரதிர்ஷ்டமா அது நடக்காம போச்சுன்னு நினைச்சேன். ஆனா எப்படியிருந்தாலும் அவளைக் கல்யாணம் பண்ணியிருக்க  மாட்டேன்னு இப்பப் புரியது. 

சரி, நீ பாக்க வந்த பொண்ணோட விலாசம் வெச்சிருக்கியா? காட்டு. அவங்க வீட்ல போய்ப் பாத்துட்டு, அப்புறம் எங்க வீட்டுக்குப் போலாம்”என்றான் செல்வம். 

ஆனந்த் காட்டிய விலாசத்தைக் கையில் வாங்கிப் பார்த்த செல்வம் அதிர்ந்தான்.” இந்தப் பொண்ணும் உன்னை விரும்பினாளா? “என்று கேட்ட செல்வத்தைப் பார்த்த ஆனந்த்” ஏன் செல்வம், உனக்கு இவங்களைத் தெரியுமா? “என்று கேட்க,

” இந்தக் கிராமத்துல ஏறக்குறைய எல்லோரையுமே எல்லோர்க்கும் தெரிஞ்சிருக்கும். இந்தத் துரதிர்ஷ்டசாலிப் பொண்ணுக்கு உன்னைக் கல்யாணம் பண்ணும் அதிர்ஷ்டம் இல்லப்பா.” என்றவனை அதிர்ச்சியுடன் பார்த்த ஆனந்த், “என்ன சொல்ற செல்வம்? இவங்களை உனக்குத் தெரியுமா? என்னாச்சு இவங்களுக்கு? உயிருக்கு..? “

படபடப்பாய்க் கேட்டவனை தட்டிக் கொடுத்தான் செல்வம்.

” பொண்ணு உசுருக்கு ஒண்ணுமில்ல. செல்லமா வளத்த பொண்ண பணக்காரக்

குடும்பத்திலிருந்து ஒரு மாப்ள வந்தான்னு போன மாசம் அவசரஅவசரமா கல்யாணம் பண்ணிக் குடுத்தாங்க. இவ வாழ்க்கையை நாசமாக்கவே வந்தாப்ல, அவ புருஷன் விபத்துல ஒரே வாரத்துல இறந்துட்டான். பொண்ணு இப்போ அம்மா வீட்ல தான் இருக்கு”சொல்லும் போதே செல்வத்துக்குக் கண்கள் கலங்கின. 

அதிர்ச்சியால் தாக்கப் பட்டவனாக அப்படியே அமர்ந்திருந்தான் ஆனந்த். 

இருவரும் மௌனமாகவே சில நிமிஷங்கள் அமர்ந்திருந்தார்கள். அவ்வளவு சொல்லியும் காத்திருக்கத் துணிவில்லாமல் திருமணம் செய்து கொண்ட தங்கத்தை நினைக்கையில் கோபமும் வெறுப்பும் ஆனந்துக்கு மாறி மாறி ஏற்பட்டன. 

தன் வாழ்க்கையையும் சிதைத்துக் கொண்டு, என் வாழ்க்கையையும் சோகத்தில் தள்ளி விட்டாளே! எவ்வளவு கனவுகளுடன் ஓடி வந்தேன். இனி என் கனவுகளில் என்ன மிச்சம் இருக்கிறது? நான் எதற்காக வாழ வேண்டும்? ஒரே நிமிடத்தில் வாழ்க்கையே அர்த்தமற்றதாக உணர்ந்தான் ஆனந்த். 




ஆனந்த் அவ்வளவு தூரம் நொறுங்கிப் போவான் என்று எதிர்பார்க்காத செல்வம், இப்போது அவனைச் சமாதானப் படுத்தும் பொறுப்பு தன்னுடையது என்று உணர்ந்தான். 

“உன்னோட அதிர்ச்சியை என்னால உணர முடியுது ஆனந்த். வேற வழியில்ல. முத்தழகி நல்ல பொண்ணு. அவளைக் கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இரு” என்றான் தன் மனதை திடப்படுத்திக் கொண்டு. 

“ஏன் செல்வம், என்னைப் பாத்தா அயோக்கியன் மாதிரியா தெரியுது! எனக்கு நான் நினைச்ச பொண்ணு கிடைக்கலங்கறதுக்காக, உங்க இரண்டு பேர் விருப்பத்தையும் பாழ் பண்ணனுமா? நீ முத்தழகியைப் பத்தி பேசும் போதே உன் கண்ணுல ஒரு ஒளி தெரியுது. அந்தப் பொண்ணு என்னைப் பார்த்த பார்வையிலும் விருப்பம் தெரில எனக்கு. தங்கத்தைப் பாக்கற அவசரத்துல அந்தப் பொண்ணுகிட்ட

” பயப்படாதே! நான் வேற பொண்ணைத்தான் விரும்பறேன்” சொல்லத் தோணாம வந்துட்டேன். சரி, நான் இந்த ஊருக்கு வந்த நோக்கம் தான் நிறைவேறல்ல. உங்க விருப்பத்தையாவது உங்க பெத்தவங்க கிட்ட சொல்லி உங்க கல்யாணத்தை முடிச்சுட்டு போறேன்”என்றான் ஆனந்த் சோகம் கப்பிய குரலில். 

” என் மனசுல அமைதியில்லை ஆனந்த். எனக்கு கல்யாணத்துல இப்போ விருப்பமும் இல்ல”என்ற செல்வம்,” நீ தப்பா எடுத்துக்கலேன்னா ஒண்ணு உங்கிட்டக் கேக்கலாமா? “

என்றான் செல்வம். 

” என்னப்பா அப்டி கேக்கப் போறே? சும்மா சொல்லு”

” நீ அந்தப் பொண்ணை உண்மையாகவே நேசிச்சயா?”

கண்கள் கலங்கின ஆனந்திற்கு. கண்களைத் துடைத்தபடி,” அந்தப் பொண்ணு தான் என் வாழ்க்கையேன்னு இருந்தேன். எனக்காகக் காத்திருப்பான்னு நம்பினேன். வாழ்க்கையை விளையாட்டா எடுத்துக்காம லட்சியத்தோடு வாழணும்னு நினைக்கறவன் நான். படிப்பைக் கூட முடிக்காம, வாழ்க்கையில் செட்டில் ஆகாம ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக் குடுன்னா எந்த அப்பா, அம்மா சம்மதிப்பாங்க? அதனால் தான் அவளை விட்டுட்டுப் போனேன். தற்கொலைப் பண்ணிக்கற அளவுக்கு நான் கோழை இல்லை. ஆனால் அவளோட இடத்துல ஒரு பொண்ணை என்னால நினைச்சுக் கூட பார்க்க முடியல”குரலில் கமறலுடன் சொல்லி முடித்தவனைப் பார்த்து,

” அப்போ நீ ஏன் அந்தப் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கக் கேக்கக் கூடாது? “என்றான் செல்வம் ஆர்வத்துடன். 

ஒரு நிமிடம் அதிர்ந்து போய் செல்வத்தைப் பார்த்த ஆனந்த் துள்ளிக் குதித்தபடி அவனை இறுக அணைத்துக் கொண்டான்.” நான் ஒரு மடையன்! எனக்கு இது தோணல பாரு. ரொம்ப தேங்கஸ்டா! “அப்போதே திருமணம் நடந்தது போல உற்சாகக் குரலில் கூறியவன் உடனே,” அவங்க ஒத்துக்கணுமே! முத வாட்டி பண்ணிக்கறேன்னு சொன்னப்பவே ஆயிரம் ஆட்சேபணை சொன்னா! அவங்க அம்மாவைப் பத்தி சொல்லும் போதே லவ் மேரேஜ் அவங்க அம்மாக்கு பிடிக்காதுன்னு சொல்லுவா. இப்போ மறுமணத்துக்கு சம்மதிப்பாங்களா?” என்றான் சந்தேகத்துடன். 

“அந்தப் பொண்ணையும், அவங்க பெற்றோரையும் சம்மதிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு. உங்க வீட்ல சம்மதிப்பாங்களா? “என்று கேட்ட செல்வத்திடம்” உங்க கல்யாணம் முதல்ல நடந்துட்டா, என் பெற்றோரை நான் சமாளிச்சுக்கறேன்”என்றான் ஆனந்த். 

சுறுசுறுப்பாய் எழுந்த செல்வம், “எங்க வீட்டுக்குப் போவோம் வா. அங்க உனக்கு ஒரு பரிசு காத்திருக்கு”என்றவுடன் அது என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்துடன் எழுந்தான் ஆனந்த். 

-தொடரும்




What’s your Reaction?
+1
11
+1
7
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!