Serial Stories கனவு காணும் நேரங்கள்

கனவு காணும் நேரங்கள்-5

5

******************

“டேய் குமாரு! நாளைக்கி நாளு நல்லா இருக்கு. பொண்ணு பாக்க வரதா, எங்கண்ணன் வீட்டுக்குத் தகவல் சொல்லிட்டேன். அளகா தலைகிலை கத்திரிச்சு, முகத்துல இருக்கற தாடிய எடுத்துட்டு வெள்ளன சீக்கிரம் தயாராயிடு” 

“என்னம்மா நீ! இப்ப  தான் இரண்டு வருஷம் கழிச்சு ஊர்ல இருந்து  வந்திருக்கேன். என் ப்ரெண்ட்ஸைக் கூட பாக்கல. அதுக்குள்ள நீ கல்யாணம், பொண்ணுன்னு கிட்டு! 

“இதோ பார் குமாரு! நீ படிக்கப் போறதுக்கு முன்ன என்ன சொன்னே! நியாபகம் இருக்கா? நான் கிராமத்துப் பொண்ணத்தான் கட்டப் போறேன். அங்க தான் சேவ செய்யப் போறேன், இடியாப்பம் செய்யப் போறேன்னு அளந்த! நானும் உண்மைதான் காட்டியும்னு மாங்குளம் போறப்பஅண்ணன் வீட்டுக்குப் போய்ப் பொண்ணு பேசிட்டு வந்துட்டேன்.”

” யம்மா,யம்மா”அவன் கத்தலைப் பொருட்படுத்தாது பேசிக் கொண்டே போனாள் சிவகாமி. 

” ஏண்டா கத்தறே! பொண்ணு மாநிறமா இருந்தாலும் பாக்க அயகா தான் இருக்கா! நறுவிசா வேல செய்யறா! எட்டு க்ளாசு, ஊர்ல இருக்கற ஸ்கோலுல படிச்சிருக்கா! நீ கூட்டிட்டு வருவியே, எம் ப்ரண்டுக ன்னு பத்து பேர ஒண்ணா! அப்டி கூட்டிட்டு வந்தாலும் சமைக்க அஞ்ச மாட்டா எம் மருமவ! இதுக்கு மேல என்னாடா வோணும், உனக்கு! “

” அம்மா! நான் கிராமத்துப் பொண்ண கட்டப் போறேன்னு சொன்னேன், உண்மை தான்! ஆனா, உங்கண்ணன் பொண்ண பேசிட்டு வான்னு நானா சொன்னேன்? எட்டு க்ளாஸ் படிச்சிருக்கான்னு பெருமையா வேற சொல்றே! 

பட்டிக்காட்ல பொண்ணெடுன்னு சொன்னா, பட்டிக்காடா ஒரு  பொண்ணப் பாத்துட்டு வந்து நிக்கற! ஒரு வார்த்த எங்கிட்ட கேக்கணும், சொல்லணும்னு உனக்குத் தோணலியா? ஏம்பா! நீயும் ஒரு வார்த்தை சொல்லலியா? “

” அதுவரை அங்கு அமர்ந்து மௌனசாட்சியாய், இந்த மகன், அம்மா மோதலை ரசித்துக் கொண்டிருந்தார் பரமசிவம். “அடடா! நம்மால செய்ய முடியாததை, இந்தப் பயல் என்னமா செய்யறான்! என்ன அழகா அம்மாவை எதுத்து வாயாடறான்” என்று ஆனந்தமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தவர், இந்த எதிர்பாராத தாக்குதலில் திடுக்கிட்டார். 

“இப்போது என்ன பதில் சொல்வது? எது சொன்னாலும் இருவரில் ஒருவரிடம் மாட்டிக் கொள்வோமே! தைரியமான மகன் காக்க மாட்டானா?” என்று நினைத்தவர் மனைவியிடம் பாய்ந்தார்.” நான் அப்பவே சொன்னேனே, கேட்டியா? இதுல நான் சொல்றத எம் பையன் மீற மாட்டான்னு சவடால் வேற! இப்ப மவன் கேக்கறான்! நீயே பதில் சொல்லு”

இத்தனை நேரம் பேசாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்ததும் இல்லாமல், இப்போது தன்னையே மகனிடம் மாட்டிவிடும் கணவனை முறைத்தாள் சிவகாமி. 

” அங்க பேசும் போது, நீங்களும் தான கேட்டுட்டு இருந்தீங்க! அப்பவே எம்மவன கேக்காம சொல்லாதேன்னு சொல்லியிருக்கலாமில்ல! “

கணவனிடம் எகிறினாள் சிவகாமி. 

“பேர் பொருத்தம் பார்த்து நமக்கு கல்யாணம் செஞ்சாங்க. அந்தப் பொருத்தம் தவிர, வேறெதுவுமில்ல!” இதற்கு மேல் இங்கிருந்தால் மகனும், மனைவியும் தன்னை மத்தளமாக்கி விடுவார்கள் என்று நைசாக நழுவினார் பரமசிவம். 

” குமாரு,  தேர்த் திருவிளா நடக்கற நேரம்,அதைப் பாக்கற சாக்குல மாங்குளம் போவோம். பொண்ணப் பாரு! பிடிச்சிருந்தா, மேற்கொண்டு பேசுவோம். பிடிக்கலேன்னா தேரப் பாத்துட்டு, வந்து சேருவோம். அப்புறம் எந்தப் பொண்ணப் பாக்குறியோ பாரு!” சமாதானமாகப் பேசியதும் மகன், “ஆங்! இது நியாயம்”என்றவன், திடீரென்று பரபரப்புடன் எதோ நினைவு வந்தவனாக,

” என்ன சொன்னே? என்ன சொன்னே? ஊரு பேரு என்ன? “என்றான். 




இவன் எதுக்கு ஊர்ப் பெயரைக் கேட்டதும் குதிக்கறான்? என்ற சந்தேகத்துடன் 

” மாங்குளம்”என்று சிவகாமி சொன்னதும் ஆனந்திற்கு மகிழ்ச்சி பரவியது.” சே! எப்படி ஊர்ப் பெயரை மறந்து போனேன்.இதோ வரேன் தங்கம்” என்று மகிழ்ச்சியாய் தனக்குள் நினைத்துக் கொண்டு அம்மாவிடம் சாதுவாய்”சரிம்மா” என்றான். 

அவன் வேறு எதோ திட்டம் போடுகிறான் என்று புரிந்து கொள்ளாத சிவகாமி தன் பேச்சைக் கேட்டுக் கொண்டுதான் மகன் ஒத்துக் கொண்டான் என்று நினைத்து மகிழ்ந்தாள். 

 மாங்குளம் என்ற பெயரைக் கேட்டதுமே தன் கூடப் படித்த செல்வகுமாரின் ஞாபகமும் வந்தது. மாமன் வீட்டில் போய் இறங்கியதும் செல்வத்திற்கு போஃன் செய்து எங்கிருக்கிறான் என்று தெரிந்து கொள்ள வேண்டும். 

கிராமம் தான் என்பதால் தங்கத்தைப் பற்றி அவனுக்குத் தெரிந்திருக்கலாம். எதேனும் உறவாகக் கூட இருக்கலாம். யார் கண்டது! எதற்கும் நேரில் போய்ப் பார்க்கலாம். 

வெளி ஆளாக போய்த் தேடுவதை விட, உள்ளூர்க்காரர்களின் உறவினனாகப் போய்ப் பார்ப்பது நல்லது என்று தோன்றியது. உதவிக்கு செல்வமும் இருக்கிறான்.பார்த்துக் கொள்வோம் என ஆனந்த் நினைத்தான். 

மற்றவர்களெல்லாம்

‘ ஆனந்த்’ என்றழைக்கும், பெற்றோர் மட்டும் ‘குமார்’ என்று தான் கூப்பிடுவார்கள். 

லண்டனில் எதேச்சையாக ஊருக்குத் திரும்பும் முன் அறிமுகம் ஆனவன் தான் செல்வகுமார். நெருங்கிய நண்பனின் நண்பனாக அவர்கள் வீட்டு விருந்தின் போதுதான் அறிமுகம் ஆனான். இருவர் பெயரிலும் குமார் என்று இருப்பதை நண்பன் சொல்லும்போது தான் இருவருமே கவனித்தார்கள். அதை ஓர் ஆச்சரியமாகக் குறிப்பிட்டுப் பேசும் போதுதான் இருவரும் நெருக்கமாக  அறிமுகம் செய்து கொண்டார்கள். 

ஏனோ தானோவென்று பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவன், தன் ஊர் மாங்குளம் என்று செல்வகுமார் குறிப்பிட்டதும் சுறுசுறுப்பானான். 

அறிமுகம் ஆனதுமே பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டுக் கேட்பது அநாகரீகம் என்று தோன்றவே, தங்கள் உறவினர்கள் அங்கு இருப்பதாகக் குறிப்பிடவும், “அடடே! அப்படியா? பேர் சொல்லுங்க, தெரிஞ்சவங்களான்னு பாப்போம்” என செல்வம் கேட்டபோது உண்மையாகவே மாமன் பெயர் கூட தெரியாமல் விழித்தவன், “தூரத்து சொந்தம் தான்! சட்னு பெயர் மறந்து போச்சு! அம்மா தான் போய்ட்டு வருவாங்க!” என்று அசடு வழிந்தான் ஆனந்த். 

“அடுத்த வாட்டி அவங்க வரும்போது நீங்களும் வாங்க. மாங்குளம் அழகான மலைக் கிராமம் தான். ஆறு, குறுநில மன்னனாக இருந்த வாணவரையன் கட்டிய சிவன்கோவில், மலை மேல இருக்கற பெருமாள் கோவில், பச்சைப் பசேல்னு வயல்கள், கரும்புத் தோட்டம், மாந்தோப்பு, பம்புசெட் இப்டி நீங்க ரசிக்க நிறைய விஷயம் இருக்கு. அதுவும் தேர்த் திருவிழா போது வந்தீங்கன்னா ஊரே கலகலப்பா இருக்கும். நீங்க வந்ததும் கால் பண்ணுங்க. நான் வந்து கூட்டிட்டுப் போறேன். “என்று கிராமத்துக்காரர்களுக்கே உரிய சகஜமான அழைப்பை ஆனந்துக்குக் கொடுத்திருந்தான் செல்வம். அத்துடன் ஆனந்தின் குணமும், அறிவும், படிப்பும் கிராமத்தின் மேல் அவனுக்கிருந்த ஈடுபாடும் ஆனந்தை தங்கத்துக்கு திருமணம் செய்யலாமே என்ற எண்ணத்தை செல்வத்துக்கு ஏற்படுத்தியது. 

படித்தவனான அவன் வெளிநாட்டுக்கு வந்து ஜாதியைப் பற்றி கேட்பதற்கு தயங்கினான். முதலில் ஊருக்கு வரட்டும். பிறகு பேசிக் கொள்ளலாம் என்று இப்படி இருவருமே நட்பைக் காரணமாகவே ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். 

உடனேயே ஊருக்குப் போய் பெண் பேசலாம் என்று சொல்லிக் கொண்டிருந்த சிவகாமிக்கு புறப்பட முடியாமல் தடங்கல் ஏற்பட்டது. அவளுடைய அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக உதவிக்காகப் போனதில் இரண்டு மாதம் தங்கும்படியாக ஆகிவிட்டது. 

அதற்குள் பிரபல மருத்துவமனையில் வேலைக்குச் சேர வாய்ப்பு கிடைத்ததும், அதைத் தள்ளிப் போட விரும்பாத ஆனந்த் வேலைக்குச் சேர்ந்து விட்டான். 

உடனே விடுமுறை எடுக்க முடியாமல் வேலையில் முழு மூச்சாக ஈடுபட்டான். 

அப்படி, இப்படி என்று ஆறுமாதங்களுக்கு மேல் ஓடிவிட்டது. ஊருக்கு வந்த புதிதில் செல்வம் ஆனந்துக்குப் போஃன் செய்தான். எப்போது வருகிறாய்? என்று அவன் கேட்டபோது தான் புதிதாக வேலையில் சேர்ந்திருப்பதையும், ஆறுமாதத்திற்கு எங்கும் அசைய முடியாமல் இருப்பதையும் வருத்தத்துடன் குறிப்பிட்டான். பின்னர் அவனிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. ஆனந்தும் புதிதாகத் தொழில் தொடங்கும் ஆவலில் வேலையில் இறங்கிவிட்டான். 

முத்தழகியின் அப்பத்தாவுக்கு கவலை வந்து விட்டது. மகன் தங்கவேலுவை நச்சரிக்க ஆரம்பித்தாள். “ஏம்பா! சிவகாமி பையன் வெளிநாட்லேர்ந்து வந்துட்டானா தெரியலையே! ஒரு சங்கதியும் இந்த சிவகாமி சொல்லாம கமுக்கமா இருக்காளே! நம்ம புள்ளய பொண்ணு பாக்க பையனையும் கூட்டியாரேன்னு சொன்னாளே! எப்ப வரான்னு ஒரு போனப் போட்டுக் கேளேம்பா!” என்ற அம்மாவிடம், “ஆத்தா! அவங்களா வந்தாங்க. அவங்களா திரும்ப வாரேன்னு சொல்லிட்டுப் போயிருக்காங்க. நாம போயி அவ்ளோ படிச்ச புள்ளயக் கேட்டா நல்லாருக்குமா? சிவகாமி நம்ம ஊர்க்காரி. அவளுக்கு நம்ம குடும்பம் பிடிச்சுது. அந்தப் பையன் வேணான்டானோ என்னவோ! சீமைக்கு வேற போய்ட்டு வந்திருக்கான். இந்தக் காலத்துப் பசங்க தான் வெள்ளத் தோல கண்டா மயங்கிடறானுங்களே! அங்ஙனயே எதாச்சும் கட்டுக்கிட்டு வந்துட்டானோ என்னவோ! திருவிழா வரப் போவுதில்ல, அதுக்குக் கூப்டறாப்ல கூப்டுவோம். அப்ப வந்தாக்கா, என்ன சங்கதின்னு தெரிஞ்சிடப் போவுது”நிதானமாக யோசனையுடன் தங்கவேலு சொல்லி முடிக்கவும், காத்தாயம்மாள் பெருமூச்செறிந்தார்.

” வலுவுல நல்ல சம்மந்தம் வந்துச்சேன்னு சந்தோசப்பட்டேன். இவன் இல்லேன்னா இன்னொருத்தன். எம் பேத்தி நல்ல கொணத்துக்கு வேற மாப்ள கிடைக்காமலா போப்போறான். இனிமேலா பொறந்து வரப்போறான். எங்கயோ பொறந்திருப்பான்” பேத்தி வருத்தப்பட்டுடக் கூடாதே என்ற கவலை காத்தம்மாளுக்கு. 

இதைக் கேட்டுக் கொண்டிருந்த முத்தழகி,” அப்படியே நடக்கணும் சாமி. திரௌபதியம்மா! இந்த ஆளப் பாக்கறதுக்கு முந்தியே எனக்குப் பிடிக்கல. எப்டியாவது இத நிறுத்திடு! விரதமிருந்து உங் கோவில்ல  பொங்க வைக்கறேன் “என்று வேண்டிக் கொண்டாள். 

அதே நேரத்தில் தங்கத்தின் அண்ணன் செல்வத்தின் சிரித்த முகம் மனதில் வந்து போனது. வெகு நாளைக்குப் பிறகு தங்கத்தைப் பார்ப்பதற்காக, அவள் வீட்டுக்குப் போயிருந்தாள். முத்தழகி வீட்டுக்குள் நுழைவதற்கும், செல்வம் வெளியே வருவதற்கும் சரியாக இருந்தது. ஒரு நொடியில் சட்டென விலகியவன், “சாரிங்க” என்று சொல்லி விட்டு கூடவே, “பாக்காம வந்துட்டேன். மன்னிசுக்குங்க” என்று சொல்லி விட்டு பதிலை எதிர்பார்க்காமல் நடந்தான். 

அவன் பெருந்தன்மையில் கவரப்பட்டவள், அவனை மீண்டும் பார்க்க விரும்பினாள். எதோ ஒரு துணிச்சலில், “உங்க அளவுக்கு சீமைக்கெல்லாம் போய் படிக்கலேன்னாலும் சாரின்னா எங்களுக்கும் அர்த்தம் தெரியும். “என்று சற்று உரக்கவே சொல்லவும், போய்க் கொண்டிருந்த செல்வம் நின்று திரும்பிப் பார்த்தான். ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தவன் ‘பளிச்சென்று’ அவளைப் பார்த்து சிரித்து விட்டுப் போய்விட்டான். 

அந்தச் சிரிப்பில் மயங்கி நின்றிருந்தவளை,” உள்ள வாடி! ஏன் அங்கயே நின்னுகிட்டு இருக்கே” என்று உள்ளே அழைத்துப் போனாள் தங்கம். 




அந்த நினைவுகள் இனிமையாக நிறைந்திருக்க மறுபடி கடவுளை வேண்டிக்கொண்டாள். தங்கத்தின் நிலைமையை நினைத்ததும் மனம் மயங்கியது. 

அப்பத்தா தந்தையிடம் பேசியது கேட்டது முத்தழகிக்கு. 

“ஏந் தம்பி! நம்ம தங்கத்தோட அண்ணன் செல்வம் கூட டாக்டருக்குத் தானே படிச்சுருக்கு.அந்தப் புள்ளயும் நல்ல புள்ளை தானே! இத நம்ம அழகிக்கு பாத்தா என்ன?” 

“இப்ப தான சிவகாமிக்கு போஃனப் போடுன்ன! அதுக்குள்ள மனசு மாறிடுச்சா!” 

“இல்லப்பு! நீதான சொன்ன, அந்தப் புள்ள வேற கல்யாணம் பண்ணிட்டானோ என்னவோன்னு”

” ஆத்தா, அப்படிப் பாத்தா இந்தப் புள்ளயும் தான் சீமைக்குப் போய் வந்திருக்கு. திருவிழா வரைக்கும் பொறுத்திரு ஆத்தா” 

” சே! சே! அந்தப் புள்ள தனியா தானே வந்திருக்கு. “

” தங்கச்சிக்கு இப்டி ஆனதிலிருந்து அவன் முகத்தைப் பாத்த சகிக்கல்ல. பாப்போம் ஆத்தா. அவங்க என்ன நினைக்கறாங்களோ!” என்று கூறிக் கொண்டே வெளியே புறப்பட்டார். 

” ஏன், என் பேத்திக்கு என்னவாம்! உள்ளூர்ல பொண்ணெடுத்தா குறைவோ? அந்தப் புள்ள தங்கத்தையும் நோகாம பாத்துக்குவா. “என்ற ஆத்தாவின் குரல் தொடர்ந்து வந்தது. 

” அதுசரி! உனக்குத்தான் உம் பேத்தி ஒசத்தி. படிச்ச புள்ளைக்கு பட்டணத்துல ஆயிரம் பேர் பொண்ணு குடுக்கக் காத்திருப்பாங்க”என்று மனதில் நினைத்தவாறு வெளியே வந்தார். 

தாயில்லாக் குழந்தையை சிறுவயதிலிருந்து எடுத்த வளர்த்த பாசம் அம்மாவுக்கு அதிகமாகவே இருப்பதை அவர் உணர்ந்திருந்தார், குழந்தைகளைப் பற்றிய எதையும் தாயை ஆலோசிக்காமல் அவர் செய்வதில்லை. 

கேட்டுக் கொண்டிருந்த முத்தழகிக்கு தங்கத்தை நினைத்து அழுகை வந்தது. 

-தொடரும் 




What’s your Reaction?
+1
10
+1
7
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!