Serial Stories கனவு காணும் நேரங்கள்

கனவு காணும் நேரங்கள்-2

2

******************

திருச்சியிலிருந்த சேலம் போகும் பாதையில் அமைந்த அழகான கிராமம் தான் மாங்குளம் கிராமம். அந்தக் கிராமத்திற்கு அந்தப் பெயர் வந்த காலத்தில் அந்தப் பகுதியில் மாமரங்கள் நிறைய இருந்திருக்க வேண்டும். 

மரங்களையெல்லாம் வெட்டி நகரங்களை உண்டாக்கிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்திலும் மரங்களை அந்தக் கிராமத்தினர் பராமரித்து வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். 

ஊருக்கு வெளியே இருந்த மரங்களெல்லாம் காலப்போக்கில் சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட்ட போதிலும், ஊருக்குள் இன்னும் ஓரளவுக்குக் காப்பாற்றிக் கொண்டுதான் இருப்பதால், மாங்குளம் தன்பெயரைக் காப்பாற்றிக் கொண்டு வாழ்ந்து வருகிறது. 

இருபத்தைந்து வீதிகளோடு கச்சிதமாக வரையறுக்கப் பட்டுவிட்ட  கிராமத்தில் ஒரு பிள்ளையார் கோவில் ஒன்றும், பெருமாள் கோவில் ஒன்றும் இருந்தன. 

வருடம் முழுதும் வற்றாத ஜீவநதி என்று சொல்ல முடியாது போனாலும், மழைக் காலங்களில் காட்டாறு போல சுழித்தோடும் ஆறு அந்த ஊருக்கு அழகைச் சேர்த்துக் கொண்டிருந்தது. 

ஆற்றங்கரையைத் தாண்டியதும், “ஊருக்கு பெயரைக் கொடுத்தது நாங்கள் தான்” என்று பெருமையுடன் கூறுவது போல் ஓங்கி வளர்ந்த மாமரங்கள். 

“நீங்கள் அகலமாக வளரலாம். ஆனால் உயரத்தில்  எங்களை மிஞ்ச முடியாது” என்பது போல் உயரமான தென்னை மரங்கள். 

அதையடுத்து அழகான சிவன் கோயில் ஒன்று. சிற்றரசன் வாணவராயன் காலத்தியது. அழகான சிற்பங்களையும், சுற்றுச் சுவரில் இருக்கும் கல்வெட்டுகளையும் படிக்கவோ, போற்றவோ அங்கு யாருக்கும் தெரியாது என்றாலும் கோயிலை நன்றாகவே பராமரித்து வந்தார்கள். 

ஆற்றங்கரையைத் தாண்டி கொஞ்ச தூரம் சென்றால் கரும்புத் தோட்டங்கள் ஒருபுறமும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெற்றிலைக் கொடிகள் ஒரு புறமாயும் கண்களுக்கு விருந்தளிக்கும். 

அகத்திச் செடிகளின் மீது பற்றிப் படர்ந்து உயரமாக ஏறி பச்சைப்பசேலென வளர்ந்து நிற்கும்  வெற்றிலையின் இளந்தளிர்கள் தலையாட்டி வந்தவர்களை வரவேற்பது கண்கொள்ளாக் காட்சி தான். 

ஓட்டு வீடுகளும், கூரை வீடுகளும் நிறைந்திருக்கும் கிராமத்து வீடுகளுக்கு நடுவில் உயர்ந்த மாடி வீடுகளும் இல்லாமல் போகவில்லை. என்றாலும் அவரவர் அந்தஸ்துக்குத் தக்கபடி அந்த வீடுகள் அமைந்திருந்தன. 

முக்கியமான நெடுஞ்சாலையின் நடுவில் அமைந்திருந்ததால் ஊருக்குள் எப்போதும் பேருந்துகள் வருவதும் போவதுமாக இருக்கும். என்றாலும் பேருந்து நிலையம் என்ற ஒன்று அந்தக் கிராமத்திற்குக் கிடையாது. 

மூன்று பேருந்து நிறுத்தங்கள் உண்டு. எங்கு இறங்கினாலும் பத்து நிமிடங்களில் ஊருக்குள் எந்த வீதிக்கும் போய்விடலாம். நடக்க முடியாதவர்கள் சைக்கிள், மொபெட் என்று உபயோகித்துக் கொள்வார்கள். 

ஊர் பெரிய மனிதர்கள் சிலர் ஸ்கூட்டரும், ஒன்றிரண்டு பேர் காரும் வைத்திருந்தார்கள். 

அவர்களில் ஒருவர்தான் ராமசாமி.வீதியுலா வரும் தெய்வம் கட்டளைக்காரர் வீட்டு வாசலில் நின்று போவது போல், மாங்குளத்துக்கு வரும் பேருந்துகள் ராமசாமி வீட்டு வாசலில் நின்று தான் போகும். அந்தப் பேருந்து நிலயத்துக்கே ராமசாமி வீட்டு ஸ்டாப் என்று தான் பெயர். 

மாங்குளத்தின் குறிப்பிடத் தக்க வீடுகளில் ஒன்று தான் ராமசாமியின் வீடு. மாடி வைத்து கட்டப்பட்ட வீடுகளில் அதுவும் ஒன்று. 




ஒரு வீதியிலிருந்து, மறு வீதி வரை நீண்ட வீடு. வாசலில் இருபக்கமும் அகலமான திண்ணைகள். அதைத் தாண்டி நீண்ட நடைபாதை அதற்கப்புறம் பெரிய  திறந்தவெளி முற்றம். 

கல்யாண கூடத்தின் நான்கு புறமும் நான்கு விஸ்தாரமான அறைகள். வீட்டின் பின்பகுதியில் மற்ற வசதிகளுக்குக் குறைவில்லாமல் இருக்கும். மாட்டுத் தொழுவத்தில் நான்கைந்து பசுமாடுகள். 

இவரின் ஆஸ்திக்கு ஒரு பையனும், ஆசைக்கு ஒரு பெண்ணும் இருந்தார்கள். 

தான் நன்றாக படிக்க முடியவில்லை என்ற வருத்தம் ராமசாமிக்கு இருந்ததால் பிள்ளைகள் இருவரையும் நன்றாகப் படிக்கவைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

மகன் செல்வகுமார் பள்ளிப்படிப்பை அருகிலுள்ள ஊரில் முடித்ததும், மருத்துவம் படிக்க வேண்டும் என்றான். பெங்களூரு கல்லூரியில் எம். பி. பி. எஸ். படித்து முடித்ததும்

வீட்டுக்கு வந்தவனை ராமசாமி கூப்பிட்டார். 

“செல்வா! டாக்டருக்கு படிக்கணும்னு ஆசைப்பட்டே, படிச்சு முடிச்சுட்டே! இங்ஙனயே ஒரு ஆஸ்பத்திரி கட்டி குடுத்துடவா? அதுக்கு என்னென்ன வேணும்? எப்படிக் கட்டணும்னு சொல்லிட்டினியான்னா வேலய நல்ல நாள் பாத்து துவக்கிடலாம். இல்ல, டவுனு பக்கம் ஆரம்பிக்கலாம்னு நினைக்கிறயா? எதுன்னா சொன்னியான்னா முடிவு பண்ணிக்கிடலாம்”என்றார். 

அருகிலிருந்த பஞ்சவர்ணம்,” நல்லா இருக்கு உங்க பேச்சு! இத்தனை நாள் ‘படிப்பு, படிப்பு’ ன்னு புள்ளய எங்கிட்டருந்து பிரிச்சு வெச்சீங்க! இப்ப படிச்சு முடிச்சதும் டவுனுக்கு ஆஸ்பத்திரி வைக்க அனுப்பறேங்கறீங்க! அதெல்லாம் நான் ஒத்துக்கிட மாட்டேன்! அப்படி எதுனாச்சும் செஞ்சீங்க எம் மவளையும் கூட்டிக்கிட்டு, நான் எம்புள்ளக்கி ஆக்கிப் போட நானும் அவங்கூட டவுனுக்குப் போயிடுவேன். பாத்துக்கிடுங்க”என்றாள் ஆத்திரத்துடன். 

” கோட்டி மாதிரி பேசாத புள்ள! அவ்ளோ படிச்ச புள்ள, இந்தக் கிராமத்துல உக்காந்து வேல பாக்குமா? நாம எதோ வயக்காடு, கழனி, நெல்லுன்னு பொழுத ஓட்டிக்கிட்டு கிடக்கறோம். அது இங்க உக்காந்து என்ன பண்ணும்? அதுவுமில்லாம படிச்ச படிப்புக்கு தொழிலு நல்லா பண்ணாத்தானே அதுக்கும் சந்தோசம்! என்ன செல்வா நான் சொல்றது! “

என்று மகனிடமே வாதத்தை முன் வைத்தார். 

அன்பால் இருவரும் போட்டுக் கொண்டிருந்த செல்லச் சண்டையை ரசித்துக் கொண்டிருந்த மகன் சிரித்தான். 

” நீங்க இரண்டு பேர் சொன்னதும் இப்போதைக்கு இல்ல. “என்று செல்வா சொன்னதும்,” பின்ன என்னப்பு செய்யப் போறே”என்று இருவரும் ஒரே குரலில் கேட்டார்கள். 

“அம்மா! அப்பா! நீங்க நினைக்கற மாதிரி இதோட டாக்டர் படிப்பு முடிஞ்சு போல. எதாவது துறைல சிறப்புப் படிப்பு படிக்கணும். அப்போதான் படிச்சதுக்கு அர்த்தம் இருக்கும். நான் கல்லீரல் சம்மந்தமா சிறப்புப் படிப்பு படிக்கப் போறேன். இந்த ஊர்லயே சேவை செய்யணும்னு விரும்பறேன். நீங்க இரண்டு பேரும் என்ன சொல்றீங்க? ” பெற்றவர்களுக்கு மதிப்பு குடுத்து அவன் ஆலோசனைக் கேட்டதிலேயே மகிழ்ந்து போனார்கள் இருவரும். 

” எங்களுக்கு என்னப்பா தெரியும்? உனக்கு எது நல்லது? எது எதிர்காலத்துக்கு உதவும்னு தோணுதோ அதைச் செய்! நிலங்களை வித்தாவது படிக்க வைக்கறேன். எவ்வளவு செலவானாலும் பரவால்ல” என்றார் ராமசாமி. 

“நான் ரொம்ப குடுத்து வெச்சவன்பா!” என்று நெகிழ்ச்சியுடன் கூறிய செல்வகுமார்  ” ஆனா, இங்க படிக்க முடியாதுப்பா. வெளிநாட்ல படிக்கணும்னு தான் எனக்கு ஆசை”என்று சொன்னதும் பஞ்சவர்ணத்துக்கு சுருக்கென்றிருந்தது. 

” மறுபடியும் மகனை பிரிந்திருக்கணுமா?” என்று கவலை வந்தது. அத்துடன் வேறு ஒரு பயமும் வந்தது அதனை மகனிடம் கேக்கவும் செய்தாள். 

“ஏண்டா, வெள்ளக்காரங்க நாட்ல படிக்கப் போய்ட்டு வரும்போது எந்த வெள்ளக்காரிச்சியையாவது கண்ணாலம் கட்டிட்டு வந்திடுவியா?” 

“அம்மா! அம்மா! நல்ல சந்தேகம் வந்தது உனக்கு. நான் படிக்கப் போறேனா? பொண்ணு தேடப் போறேனா? அதோட நான் நம்ம கிராமத்துல தான் ஆஸ்பத்திரி வைக்கப் போறேன்னு இப்பத் தான சொன்னேன். எந்த வெள்ளக்காரிச்சி இதுக்கு ஒத்துக்கிட்டு நம்ம கிராமத்துக்கு வருவா? நீ அப்டியெல்லாம் பயப்படவே பயப்படாத! 

அதுவுமில்லாம எனக்கப்புறம் பிறந்த என் உடம்பொறப்பு மேல நான் வெச்சிருக்கற பிரியம் உனக்குத் தெரியாதா? இதனால அவ வாழ்க்கைப் பாழாயிடும்னும் எனக்கு ஞாபகம் இருக்கும். “

என்று கூறி அம்மாவுக்கு ஆறுதல் அளித்தான். 

மகனின் ஆத்மார்த்தமான பதிலில் நெகிழ்ச்சியான பஞ்சவர்ணம்,” தெரியுஞ்சாமி! தங்கம்மான்னா உனக்கு எம்புட்டு பிரியமோ, அம்புட்டு ப்ரியம் அந்தப் பிள்ளையும் உம்மேல வெச்சிருக்கு. எங்க காலத்துக்கு பின்பும் உங்க அன்பு இப்படியே இருக்கோணம்.” என்று கூறியவாறு கண்களைத் துடைத்துக் கொண்டாள். 

“ஆமா, தங்கத்தை எங்க காணம்?” தந்தைக் கேட்டதை கேட்டுக் கொண்டே வந்த தங்கம்,” இங்க தாம்பா இருக்கேன். நாளைக்கு அண்ணன் ஊருக்குப் போவுதில்லையா! அதான் அது துணிகளை மடிச்சு வெச்சுகிட்டு இருந்தேன் “

என்று சொன்னாள். 

செல்வத்தை விட ஐந்து வயது சிறியவளான தங்கம் அப்போது ப்ளஸ்டூ முடித்திருந்தாள். 

“ஏம்மா, தங்கம் நீ என்ன படிக்கப் போறே?” என்று செல்வம் கேட்க

” என்னது! அவ படிக்கறதா! அதான் ஸ்கூலு படிச்சு முடிச்சுட்டா  இல்ல! பொம்பள பிள்ளைக்கு இன்னும் என்னாத்துக்கு படிப்பாம்! போதும், போதும் அவ படிச்சது” என்று பஞ்சவர்ணம் சொல்லியதைக் கேட்ட ராமசாமியும், செல்வமும் திடுக்கிட்டு அவளைப் பார்த்தனர். 




“ஏய், என்ன பேசற? உன்னாட்டம் கைநாட்டா இருக்கச் சொல்றயா எம் புள்ளயையும்! ஒரு கண்ணுக்கு வெண்ண, இன்னொரு கண்ணுக்குச் சுண்ணாம்பா! நீ ஆசைப்பட்டதை படிடா தங்கம்”என்று மகளைக் கொஞ்சினார் ராமசாமி. 

“அப்படிச் சொல்லுங்கப்பா! அப்பான்னா அப்பா!” மகள் தகப்பன் கழுத்தைக் கட்டிக் கொண்டாள். 

” அண்ணே! நீ டாக்டருக்குப் படிச்சு நிறைய சம்பாதி! ஒரு டாக்டர் பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கோ. நான் நீங்க இரண்டு பேர்  சம்பாதிக்கறதையும் கணக்கு வழக்கு பாத்துக்கற ஆடிட்டர் படிப்பு படிக்கறேன்”என்றவள்,

” ஏண்ணே, அதுக்கு என்ன படிக்கணும்?” என்று சந்தேகம் கேட்டுக் கொண்டாள். 

” அப்படி ஓர் ஆசையா உனக்கு”என்று சிறிது யோசித்த செல்வம், ” அப்போ சி. ஏ. படி. எனக்கு மட்டுமில்ல. ஊர்ல இருக்கற எல்லா பெரிய மனுஷங்களுக்கும் பாக்கலாம். பாத்து என்னை விட நிறைய சம்பாதிக்கலாம். எந் தங்கச்சிய எல்லாரும் தேடி வருவாங்க.” என்று சிரித்தான். 

“இதோ பாருடா! நீ ஆம்புளப் புள்ள எப்படி வேணா போ. எங்ஙன போய் வேணாப் படி! ஆனா இவள நான் அப்படியெல்லாம் விட முடியாது. நாம இருக்கறது டவுனு கிடையாது. ஒறமுறையெல்லாம் எம் மூஞ்சிலதான் காறித் துப்புவாங்க, “பொண்ணு வளத்து வச்சிருக்கா பாரு” ன்னு. எதோ ஆசைக்குப் படிக்கட்டும். அம்புட்டுதான். பொட்டக்கோழி கூவி ஒண்ணும் பொழுது விடியப் போறதில்ல. இவ சம்பாதிச்சுக் கிளிச்சு ஒண்ணும் எங்களுக்குச் சோறு போடப் போறதில்ல . “

என்று பஞ்சவர்ணம் கண்டிப்பாகப் பேசியதும் தங்கத்துக்கு முகம் சின்னதாக ஆனது. 

 

மகளின் வாடிய முகம் ராமசாமிக்கு வருத்தத்தைக் கொடுத்தது. இருந்தாலும் வேலைக்கு மகளை அனுப்பவதில் அவருக்கு உடன்பாடில்லை. எனவே,

” சரிடா தங்கம். உனக்கு ஆசைக்கு எதுன்னா படி. “

என்று சமரசம் பேசினார். 

இதுவரைக்கும் இதற்காவது ஒத்துக் கொண்டார்களே என்று பெருமூச்செறிந்த தங்கம் எப்படியோ அடம் பிடித்து சென்னைக்கு வந்து சேர்ந்தாள். 

அவளைக் கல்லூரியில் சேர்ப்பதற்காக கணவனுடன் தானும் வந்த பஞ்சவர்ணம் தனியார் விடுதியில் மகளைச் சேர்ப்பதற்குள் பல கண்டிசன்களைப் போட்டாள். 

நாகரீகம் என்ற பெயரில் அறைகுறை ஆடைகளை அணியக் கூடாது. தேவையில்லாமல் ஆண்பிள்ளைகளுடன் பேசிப் பழகி காதல், கத்தரிக்காய் என்று வந்து சேரக் கூடாது. தேவையில்லாம் ஊர் சுற்றிக் கொண்டு இருக்கக் கூடாது. விடுமுறை விட்டால் ஊர் வந்து சேர வேண்டும். இத்தனைக்கும் ஒத்துக் கொண்டு ஒருவழியாய்க் கல்லூரியில் சேர்ந்தாள் தங்கம். 

-தொடரும்




What’s your Reaction?
+1
11
+1
9
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!