Serial Stories கனவு காணும் நேரங்கள்

கனவு காணும் நேரங்கள்-7 (நிறைவு)

 7

******************

வாசலில் அழைப்பு மணியைக் கேட்டதும் கதவைத் திறந்தாள் தங்கம். அங்கே அண்ணன் செல்வத்துடன் நின்று கொண்டிருந்த ஆனந்தைப் பார்த்ததும் அதிர்ச்சியும், அழுகையும் சேர்ந்து வந்தது. அழுதவாறே உள்ளே ஓடிவிட்டாள். 

அதற்கு சற்றும் அதிர்ச்சி குறையாமல், திகைத்து நின்றிருந்தவனை சற்று அதட்டியே உள்ளே கூட்டி வந்தான் செல்வம். 

நடந்ததைப் பற்றி சொல்ல ஆரம்பித்தான். “உன்னைப் பாத்ததுமே எனக்குப் பிடிச்சுப் போச்சு. முதல்ல என்னைப் பெத்தவங்க கிட்ட  சொல்லி சம்மதம் வாங்கிட்டு, உங்கிட்ட சொல்ல நினைச்சேன். 

ஆனா அதுக்குள்ள தங்கத்துக்கு மாப்ளய நிச்சயம் பண்ணிட்டாங்க . நடந்த கல்யாணத்தை மாத்த முடியாதேன்னு நான் உங்கிட்ட எதுவும் சொல்லல. நடுவுல நீங்க இரண்டு பேரும் பாத்துகிட்டதையோ, விரும்பினதையோ எங்கிட்ட தங்கம் சொல்லியிருந்தா, நான் எப்பாடு பட்டாவது அப்பவே கல்யாணத்தை நடத்தி வெச்சிருப்பேன். எவ்வளவு அவசரமா, கல்யாணம் ஆச்சோ, அதே வேகத்துல திரும்பி வீட்டுக்கு வந்துட்டா. நாங்க நாலு பேருமே பைத்தியம் பிடிச்ச மாதிரி இருந்தோம். 

முத்தழகி, தங்கத்தோட நெருக்கமான ப்ரெண்ட். அவ இங்க தங்கத்தைப் பார்க்க வரும்போது இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பாத்து விரும்ப ஆரம்பிச்சோம். 

தங்கத்துக்கு இப்டி ஆனவுடனே நாங்க இரண்டு பேருமே நொறுங்கிப் போய்ட்டோம். தங்கத்துக்குக் கிடைக்காத வாழ்வு நமக்கு எதுக்குன்னு வெறுத்துட்டோம். 

தங்கம் இந்த மாதிரி ஆனவுடனே, முத்தழகியத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு என்னால சொல்ல முடியல. உன்னை பண்ணிக்க மாட்டேன்னு முத்தழகியால சொல்ல முடியல. 

 

நீ யாரோ பெண்ணை விரும்பறதா சொன்னப்போ, அடடா! அது நம் தங்கச்சியா இருந்திருக்கக் கூடாதா?ன்னு வருத்தப் பட்டேன். 




அது தங்கம்தான்னு தெரிஞ்சதுமோ, அப்படி வாழ அவளுக்குக் குடுத்து வைக்கலயேன்னு தோணுச்சு. என் தங்கச்சின்னு சொன்னதுக்கப்புறம், நீ எப்படி நடந்துப்பியோன்னு சந்தேகம் வந்தது. சொல்ல முடியாம பரிதாபப் பட்டு நீ அவள கல்யாணம் பண்ணா, அவ ஆயுசுக்கும் நிம்மதியா இருக்க முடியாதேன்னு தோணுச்சு. நீ தேடற பொண்ணு என் தங்கச்சி தான்னும், அவ மேல உண்மையான அன்பு வெச்சிருக்கேன்னு தெரிஞ்சதும் தான் வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தேன். 

நம்ம இரண்டு பேர் திருமணமும் பெரியவங்க சம்மதிப்பாங்களான்னு தெரியாமத்தான் இருக்கு. உன்னோட திருமணம் இன்னுக் கொஞ்சம் கூடுதலான ரிஸ்கோட தான் இருக்கு. நாம எப்படி பேசறோம்ங்கற பொறுத்துத் தான் அவங்க நம்மை ஏத்துக்கறது. 

அம்மாவும், அப்பாவும் வெளிய போயிருக்காங்க. அவங்க வரதுக்குள்ள உன் சாமர்த்தியத்தால தங்கத்த மட்டும் ஒத்துக்க வெச்சுடு. மத்தத நான் பாத்துக்கறேன்”என்று செல்வம் விவரமாக விஷயங்களை எடுத்துக் கூறினான். 

” மாடி அறையில் தங்கம் இருக்கா. போய்ப் பேசு”என்று வழியைக் காட்ட,” எனக்கு ஆசி கூறி அனுப்பு நண்பா”என்று நாடகபாணியில் கூறி வலது கையை மடக்கி, தலை தாழ்த்தி வணக்கம் செலுத்துவது போல் குனிந்தான் ஆனந்த்.

” சென்று வா நண்பா! தங்கத்தின் மனதை வென்று வா. பிறகு அவள் கண்ணில் ஆனந்தக் கண்ணீரைத் தான் பாக்கணும்னு கையைப் பிடிச்சுக் குடுக்கறேன்” என்று செல்வமும் குறும்பாக அவனை அனுப்பினான். 

ஆனந்தை இங்கு பார்த்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாமல் அழுது கொண்டிருந்தாள் தங்கம். ஆனந்துடன் தான் பேசிய பேச்சுகளும், அவன் தன்னைக் காத்திருக்கச் சொன்னதும், அது தன்னால் முடியாமல் போய் தான் இந்த நிலையில் இருப்பதையும், இப்போது ஆனந்தை சந்திக்கச் செய்த விதியையும் எண்ணி எண்ணி குமறிக் கொண்டிருந்தாள் தங்கம். 

சத்தம் போடாமல் உள்ளே வந்த ஆனந்த் சிறிது நேரம் மௌனமாகவே நின்று கொண்டிருந்தான். பின்னர் தன் நேசத்துக்குரியவள் அழுது கொண்டிருப்பதைக் காணச் சகிக்காமல், “தங்கம்” என்று மெதுவாகக் கூப்பிட்டான். 

ஆனந்தின் குரலைக் கேட்டதும் இன்னும் அதிகமாக அழ ஆரம்பித்தாள் தங்கம். 

“இதோ பாரு தங்கம். உங்க அம்மாவும், அப்பாவும் வரதுக்குள்ள பேசிட்டு வரச் சொல்லி உங்கண்ணன் தான் அனுப்பியிருக்கான். அதனால அழுகையை நிறுத்திட்டு நான் பேசறதைக் கேளு. 

இந்த ஜென்மத்துல நாமதான் கணவன் மனைவியா ஆகணும்கறது தான் கடவுளோட தீர்ப்பு. இத மனுஷங்க மாத்த முயற்சி செஞ்சாங்க. அது அவங்களால முடியல. அதனால தான் என்ன விட்டு உன்னால போக முடியல. நாம மறுபடி சந்திச்சிருக்கோம். 

உனக்கு நடந்தது கல்யாணமே கிடையாதுன்னு நினைச்சுக்கோ. அதுவும் அது போன ஜென்ம கணக்கு. அதை இப்போ தீர்த்துட்ட. 

இனிமே நாம வாழப் போறது தான் வாழ்க்கை. உம் மனசுல எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாம இருந்தாத்தான் நான் மத்தவங்க கிட்ட பேச முடியும். 

நான் எதோ தியாகம் செஞ்சு, உன்னை ஏத்துக்கறதாகவும் நீ என்னிக்குமே நினைக்கக் கூடாது. 

இன்று புதிதாய்ப் பிறந்தோம்னு கண்ணைத் தொடச்சிட்டு எழுந்து வா. 

உன்னோட ப்ரெண்ட் முத்தழகி என்னோட மாமா பொண்ணு. அவள பொண்ணு பாக்க வர சாக்குல தான் நான் இப்போ வந்தேன். 

அவளும், உங்கண்ணனும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பறாங்க. நீ, நம்ம திருமணத்துக்குச் சம்மதிச்சாதான் அவங்க திருமணமும் நல்லபடியா முடியும். 

நீ வாயைத் தொறந்து சம்மதம் சொன்னா உங்கண்ணன் ரொம்ப சந்தோஷப் படுவான். “




தெளிவாகவும், விவரமாகவும் ஆனந்த் பேசி முடித்ததும், இதுவரை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த தங்கம் கண்களைத் துடைத்துக் கொண்டு, ஆனந்த்தைப் பார்த்துச் சிரித்தாள். 

” அதிர்ஷ்டம் ஒரு முறைதான் கதவைத் தட்டும்னு சொல்வாங்க. இரண்டாவது முறையும் வேண்டாம்னு சொன்னா, என்னைவிட பையித்தியக்காரி யாரும் இருக்க மாட்டாங்க.” தங்கம் சொல்லி முடிக்கவும், கீழிருந்து, “நண்பா! அம்மா, அப்பா வர சத்தம் கேக்குது” என்று குரல் கொடுத்தான். 

“தங்கம் நான் கீழ போறேன். நீ முகம் கழுவிட்டு ப்ரெஷ்ஷா கீழ வா”என்று சொல்லி விட்டு கீழே போய் ஹாலில் சோபாவின் மீது அமர்ந்து கொண்டான். 

ராமசாமியும், பஞ்சவர்ணமும் உள்ளே வந்ததும் ஆனந்தை அவர்களுக்கு தன் நண்பனாய் அறிமுகம் செய்தான் செல்வம். 

பின்னர் மெதுவாக சென்னையிலேயே இருவருக்கும் அறிமுகம் இருந்ததையும்,

” பெற்றோரைக் கேட்காமல் சம்மதம் சொல்ல மாட்டேன்” என்று தங்கம் தீர்மானமாகச் சொல்லிவிட்டதையும், மேல்படிப்புக்காக லண்டன் போனபோது அங்கு ஆனந்த் அறிமுகம் ஆனதும், இங்கு தங்கத்தை அவன் தேடி வந்ததையும் கூறிக் கொண்டே வந்தவன், இப்போதும் அவன் தங்கத்தைத் திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருப்பதையும் சேர்த்து சொல்லவும் பேசக் கூடத் தோன்றாமல், கண்களில் நீருடன் கையெடுத்துக் கும்பிட்டாள் பஞ்சவர்ணம். 

தாயின் மனதே அவ்வளவு தானே! இந்த வயதில் வாழ்க்கையைத் தொலைத்து விட்டு வாழ்வதைப் பெற்றோர்களால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா? 

தேடிப்பிடித்து மணம் செய்த மகள், தங்களுக்காக அவள் விரும்பியவனைப் பற்றி ஒரு வார்த்தையும் சொல்லாமல் மணம் செய்து கொண்டும், அவசரக் கோலத்தை அள்ளித் தெளித்தால் போல அவள் திருமண வாழ்க்கை முடிந்து  ஒரே வாரத்தில் அவள் வீடு திரும்பியதும் பார்த்துப் பார்த்து புழுங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு கடவுளே வரம் தர வந்தவனவாகவே ஆனந்த் காட்சியளித்தான்.

 

மாடியிலிருந்து மகள் இறங்கி வருவதையும், அவள் முகம் பூரிப்புடன் மகிழ்ச்சியாக இருப்பதையும், சில நாட்களாக பொலிவிழந்திருந்த முகம் இன்று பளிச்சென்று இருப்பதைப் பார்த்து மகிழ்ந்தார்கள். 

அனைவரும் பழைய கதைகளைக் கொஞ்ச நேரம் பேசி மகிழ்ந்தார்கள் பின்னர் அனைவருமாக தங்கத்தை மட்டும் விட்டுவிட்டு முத்தழகியின் வீட்டுக்குச் சென்றார்கள். 

நண்பன் வீட்டுக்குப் போவதாகச் சொல்லி விட்டுப் போன ஆனந்த் இன்னும் திரும்பாததில் அனைவருமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்தார்கள். 

ஆனந்த் முத்தழகியுடன் தனியாகப் பேச விரும்புவதாகச் சொன்னான். 

தானும் இந்தச் சந்தர்ப்பத்தை எதிர் பார்த்துக் காத்திருந்த முத்தழகி ஆனந்திடம் தான் செல்வத்தை விரும்பியதைச் சொல்லிவிட எண்ணினாள். 

சொல்லவும் செய்தாள். 

“நானும் இதைச் சொல்லத்தான் தனியா பேசணும்னு சொன்னேன் முத்தழகி. நானும், தங்கமும் ஏற்கனவே அறிமுகம் ஆனவங்க தான்.” என்று அவளுக்கும் தன் கதையைச் சொன்னான். அவளும், செல்வமும் விரும்புவது தனக்குத் தெரியும் என்று சொல்லி ஆனந்த் சிரிக்க, முகம் சிவந்தாள் முத்தழகி. 

அதற்குள் வெளியில் இருந்தவர்களுக்கு செல்வம் பழைய கதைகளைச் சொல்லி முடித்தான்.

” இவ்வளவு நடந்திருக்கு! நமக்கு ஒண்ணுமே தெரியலையே” என்று ஆளாளுக்குப் புலம்பினார்கள். பல வாக்குவாதங்களுக்குப் பிறகு செல்வம்-முத்தழகி திருமணம் ஒட்டு மொத்தமாய் அனைவராலும் ஒப்புக் கொள்ளப் பட்டது. அவர்கள் திருமணத்திற்குப் பிறகு ஆனந்த்-தங்கம் திருமணம் என்று முடிவு செய்தார்கள். 

செல்வமும், ஆனந்தும் இருவருமாக இணைந்து மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துமனை தொடங்குவதற்குத் திட்டமிட்டார்கள். 

இந்தத் திருமணங்கள் நிச்சயம் ஆனபிறகு ஒங்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் நிம்மதியும், ஆறுதலும் அடைந்தார்கள். 

முத்தழகியின் அப்பத்தாவுக்கு மாப்பிள்ளை மாறினாலும் அவருமே டாக்டராக அமைந்ததில் மகா பெருமை. 

சிவகாமிக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் வருத்தம் இருந்தது. நல்லவேளையாக மகன் வெள்ளைக்காரிச்சியைத் தேர்ந்தெடுக்காததில் மகிழ்ச்சி அடைந்தாள். 




மகன் ஆசைப்பட்டபடி கிராமத்துப் பெண்ணே கிடைத்ததிலும், அவள் முத்தழகியைப் போல் இல்லாமல் கல்லூரியில் சென்று படித்திருப்பதிலும், முத்தழகியை விட பார்க்கவும் அழகாக இருப்பதைக் கணவனிடம் ரகசியமாகச் சொல்லி பெருமைப் பட்டுக் கொண்டாள். பரமசிவத்துக்கோ பிரச்சனை ஏதுமின்றி சம்மந்தம் முடித்ததில் மகிழ்ச்சி. அதுவும் சிவகாமிக்குப் பிடித்ததே அவருக்குச் சந்தோஷம். 

தங்கவேலுவுக்கு உள்ளூர் மாப்பிள்ளை அமைந்ததில் திருப்தி. இனிமேலும்  மகள் பக்கத்திலேயே இருப்பாள் அல்லவா! 

ராமசாமிக்கும், பஞ்சவர்ணத்துக்கும் இரண்டு குழந்தைகளுக்கும் நல்ல சம்மந்தம் கிடைத்ததில் மகிழ்ச்சி. 

இளஞ்சோடிகளுக்கோ தாங்கள் விரும்பினவர்களே துணையாகக் கிடைத்ததில் மகிழ்ச்சி. 

ஊரில் திருவிழாவுக்குக் காப்பு கட்டினார்கள். காப்பு கட்டிய பிறகு ஊர் எல்லையைத் தாண்டக் கூடாது என்பது ஐதீகம். முதல் நாளே தமுக்கடித்து அதைச் சொல்லி விடுவார்கள். 

ஆனந்த் குடும்பத்தினர் கிராமத்திலேயே பதினைந்து தினங்களும் தங்கும்படி ஆகி விட்டது. 

ஊரிலுள்ள நான்கு கோவில்களிலும் தேர்த் திருவிழாவும் உண்டு. பதினைந்து நாட்கள் ஊரே அமர்க்களப்படும். 

எங்கெங்கும் புதிது புதிதான புதுக் கடைகள் முளைத்தன. வளையல் கடைகளிலெல்லாம் பெண்கள் கூட்டம் என்றால், விளையாட்டு மைதானத்தில் ஆண்கள் கூட்டம் கூடியது. 

கபடி, வாலிபால், பலூன் சுடுதல், ஓட்டப்பந்தயம் என்று விளையாட்டுகளுக்கும், போட்டிகளுக்கும் குறைவில்லை. 

பெண்கள் வண்ணவண்ணக் கோலங்கள் போட்டார்கள் . கோலாட்டம், கும்மியாட்டம் ஆடினார்கள். மொத்தத்தில் ஊரே மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியிருந்தது. 

ஒவ்வொரு தேரோட்டமாக நடந்து முடிந்தது. கடைசியாக பெரிய தேரோட்டம், கூத்தாண்டார் தேரோட்டம். மற்ற தேர்களெல்லாம் ஒரே நாளில் முடிந்து விட, இது மட்டும் இரண்டு நாட்கள் நீடிக்கும். 

எந்தப் பிரச்சனையும் இன்றி எல்லா தேரோட்டங்களும் முடிந்தன. பதினைந்து நாட்களும் நேரம் நகர்வது தெரியாமல் ஓடிவிட்டன. 

வந்த விருந்தினர்களுக்கு தடபுடலாக அப்பத்தா விருந்து சமைக்க முத்தழகியும், தங்கமும் உதவி செய்தார்கள். ராமசாமியும், பஞ்சவர்ணமும் அனைவருக்கும் புதுத்துணி வைத்துக் கொடுத்தார்கள். “அடுத்த வருடம் தம்பதிகளாக விழாவைக் கொண்டாடும்” என்று ஆசி கூறினார்கள்” 

கிளம்பவே மனசில்லாமல் ஆனந்த் குடும்பத்தினர் ஊருக்குக் கிளம்பினர். தங்கம் ரகசியமாய்க் கண்களைத் துடைத்துக் கொண்டதைப் பார்த்து முத்தழகி கேலி செய்தாள். “அவரை அழவிட்டல்ல இத்தனை நாள்! கொஞ்சம் நீயும் அழு” இதைக் கேட்ட ஆனந்த்,” செல்வம், பயப்படாதே! இவ கண்களில் நீங்க ஆனந்தக் கண்ணீரைத் தான் பாப்பீங்க” என்று சொல்லவும் எல்லோரும் சிரித்தார்கள். 

எல்லோரும் புறப்பட்டுப் போனதும் ஊரே வெறிச்சிட்ட மாதிரி இருந்தது. 

மறுநாள் இடுப்பில் குடத்தை வைத்துக் கொண்டு மெதுவாக நடந்து கொண்டிருந்தாள் தங்கம். 

” தங்கம், நில்லு! நானும் வரேன்”என்று விரைவாக நடந்து வந்து அவளுடன் சேர்ந்து கொண்டாள் முத்தழகி. இப்போது புடவை கட்டி நடக்க பழகிவிட்டாள். 

“ஏண்டி கள்ளி! கல்லூரியில் படிக்கும் போது இவ்ளோ நடந்திருக்கு! எங்கிட்ட சொல்லவே இல்லையே நீ! இதுல உங்கிட்ட மட்டும் தான் எல்லாம் சொல்லுவேன்னு பெருமை வேற! ” தலையை ஆட்டி, வாயைச் சுழித்தாள் முத்தழகி. 

“போடி நீ வேற! அம்மாவுக்குத் தெரிஞ்சா படிப்பையே நிறுத்திடுவாங்களேன்னு நானே பயந்துட்டு இருந்தேன். இத உங்கிட்ட வேற சொல்லணுமாக்கும்”அவளை மாதிரியே வாயை சுழித்து பழிப்பு காட்டிய தங்கம். 

“நீ மட்டும் என்னவாம். எனக்குத் தெரியாமலேயே, எங்கண்ணனை மயக்கி இருக்கே! நான் லூசு மாதிரி உங்கூடவே இருந்திருக்கேன். அதுக்கும், இதுக்கும் சரியா போச்சு”என்றாள். 

இருவரும் இணைந்து சிரித்தது ஆற்றில் எதிரொலித்தது. 

-முற்றும்




What’s your Reaction?
+1
12
+1
7
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!