நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின்

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின்-2

2 

சக்கரம் சுழன்றது

“ஓம் நிசும்பசூதனி காளி அலங்காரி கண்டரூபிணி அகண்டநாயகி ஜேஷ்டா ராஜமாதங்கி சியாமள வராஹி பூர்ணாஹூதி சமர்ப்பயாமி!”

சிவசேகரப் பட்டர் ஒருபுறமும் சக்கர பண்டிதர் ஒருபுறமும் ஒருமித்த குரலில் மந்திர வலு சேர்க்க வேள்வியின் பலனைத் தடுக்க ஹோம குண்டத்தின் எரியும் தீயில் விழுந்து தன்னைத் தானே மாய்த்துக் கொள்ளும் நோக்கத்தோடு தடுப்பை விட்டுக் கோலத்தில் பாய்ந்தான் வாணன்.

வேள்விக்கு ஆகுதி மனிதப் பலியா? ஏற்பாளா தேவி? சக்கரம் சக்கரமே தான் . வேள்வித் தீக்குள் பாய்ந்த வாணனை ஒரு கையால் தலைமேல் தூக்கியபடி மறுகையால் பட்டரின் பூர்ணாஹுதிக்கு நெய்யிட்டார் அவர்.

சுபமாய் முடிந்தது.

“கட்டுங்கள் இவனை! தூக்கிக் கழுவிலேற்றுங்கள் இவனை!” கூக்குரல்கள் எழுந்தன.

வைக்கோல்பிரி கட்டு கனத்த சங்கிலியாய் பின்னப்பட்டு கிடக்கச் சட்டென்று அதை எடுத்து வாணனைக் கட்ட ஆரம்பித்தனர் மக்கள்.

நாடு நமக்கு என்ன செய்தது எனக் கேட்காதே! நாட்டுக்கு நாம் என்ன செய்தோம் எனக் கேள் என்ற அற்புதமான வாக்கியத்தை மெய்ப்பிப்பது போல நாட்டின் நல்வாழ்வைக் குலைக்க வந்த வாணனை நாட்டுக்காக அம்மக்கள் அடித்து இழுத்து கட்டிப் போட்டனர்.

சோழம் மக்களின் ஒற்றுமையில் சுகம் கண்டது.

“ஆ! இவனா? செந்தலையாயிற்றே! இவனைத் தான் அண்டா பொங்கலையும் அடுக்கி வைக்கச் சொன்னேன். அலையலையாய் மக்கள் கூடுமிடத்தில்.. ஐயகோ! உண்ணும் மக்களுக்கு ஏதாவது ஆகி விட்டால்..”  வாயிலை நோக்கி ஓடினான் வல்லான்.

“நிறுத்துங்கள்! விநியோகிப்பதை நிறுத்துங்கள்!”

“கொடுக்க ஆரம்பித்தாயிற்று ஐயா!”

“ஹா.. எத்தனை? எத்தனை பொட்டலங்கள் போயின? பெரியவர்களா? குழந்தைகளா? எவர் உண்டனர்? எவர் எடுத்துக் கொண்டு போயினர்?”

பதட்டம்! பதட்டம்! எங்கு காணினும் பதட்டம்!

நிசும்பசூதனியின் வேள்விக்கான பலியாடாய்க் கட்டிக் கிடந்த வாணன் சத்தம் போட்டுச் சிரித்தான்.

அவன் வாய் முதன்முறையாக வார்த்தைகளை உச்சரித்தது.

“இழப்பின் ருசி இவர்களுக்கும் தெரியட்டும்!”

அதைக் கேட்டதும் வெகுண்டார் சக்கர பண்டிதர்.




“என்னடா கூறினாய்? இழப்பின் ருசியா? என்ன செய்தாய்? அண்டாவில் ஆளறியாது நஞ்சைக் கலந்தாயா?”

“ஆம்! அதற்கென்ன? எங்கள் நாட்டைப் பறித்து எம் உள்ளங்களில் நஞ்சைப் புகுத்தியதே உங்கள் தேசம் போற்றும் சக்கரவர்த்தி தானே. அதைச் சற்றே பகிர்ந்தளித்தேன்.”

அளப்பரிய கோபத்தில் சக்கர பண்டிதர்  நஞ்சைக் கலந்த அவனின் வலது கையை தரையில் வைத்து அதன் மேல் பெரிய திருகுடைய சூலத்தை அழுத்தித் திருக சூடான இரத்தம் பீய்ச்சியடித்தது.

“ஆ!” அலறினான் வாணன்.

“ம்ம்! இக்கை வெறும் பூ மட்டும் போட்டுக் கொண்டிராது. போர்க்களமும் கண்ட கை இது. பூவிற்கு பூவாவேன். பலத்த புயலுக்குப் புயலாவேன். யாரங்கே! இவனை இரும்புச் சங்கிலியால் கட்டி வண்டியேற்றி தலைநகரின் அரச சபைக்கு இட்டுச் செல்லுங்கள்! அன்னை நிசும்பசூதனி அனைவருக்கும் நலத்தை வழங்கட்டும்!”

“சக்கர பண்டிதரே! இவனிட்ட நஞ்சை  உண்டவர்கள் சிலபேர் தான் ஆயினும் அவர்கள்  யாருக்கும் ஒன்றுமில்லை. வரிசையில் முதல் இரு அண்டாக்கள் தான் விநியோகம் ஆகி இருக்கிறது. என்ன செய்ய?

அனைவருமே மரண பயத்தில் கிடக்கிறார்கள் ஐயா. ஊர்த் தலைவர் கிராம வைத்தியரை அழைத்து வரச் சென்றிருக்கிறார். எதற்கும் இருக்கட்டுமென்று உணவு உண்ட முதியவர்களையும் குழந்தைகளையும் வண்டி கட்டி பக்கத்தில் இருக்கும் வைத்திய சாலைக்கு அனுப்பி இருக்கிறோம். நஞ்சு கலந்தவை கலக்காதவை அனைத்தையும் ஒருசேர ஊருக்கு வெளியே சென்று புதைத்தாகி விட்டது. புதிதாய் சமையலும் ஆரம்பித்தாயிற்று. ” என்ற வல்லானை நோக்கியவர்

“நல்லது வல்லான்!. வருத்தம் வேண்டாம். அனைவரும் நலமுடன் திரும்புவார்கள். என் திருஷ்டியில் எந்த சங்கடமும் இல்லை என்றே வருகிறது. அப்படியே நடக்கும்! அப்படியே நடக்கும்!”

வல்லான் சக்கர பண்டிதரை வணங்கி வினயத்துடன் ஒரு கோரிக்கை வைத்தான்.

“தங்களுக்கு மைத்துனனாகப் போகும் சுயம்பிரகாச வல்லானான எனக்கும் உங்கள் வீரத்தைக் கற்றுத் தருவீர்களா? சோழச் சோற்றில் சோழிகள் கூட வீரமாய்த் துடிக்கும் என்றாலும் உங்களளவு வீரமும், விவேகமும் எனக்கும் வேண்டும்!”




“ஆகட்டும் வல்லான்! என்னுடனே வா! ஆனால் என் தங்கை அக்கண்மங்கைக்கு நீ தான் பதில் சொல்ல வேண்டும்.”

சக்கர பண்டிதர் மைத்துனனாய் வரப்போகும் வல்லானிடம் பேசிக் கொண்டிருக்க வாசல் புறமிருந்து விரைந்து வந்த சிவநேசபட்டர் சக்கர பண்டிதரைத் தனித்து உள்ளே அழைத்துச் சென்றார்.

“சக்கரம்! அவசரமான ஓலை என்று அதிகாலை வந்து சேர்ந்ததை தற்பொழுது தான் வந்து தந்து விட்டுப் போகிறாள் என் அகமுடையாள். சடுதியில் பிரித்துப் பாரப்பா! அரச முத்திரை வேறு. எனக்கு கை காலெல்லாம் நடுக்கம் கொள்கிறது.”  வேள்வி நல்லபடியாக முடிந்த நிம்மதி இல்லாமல் அரச கடிதத்தைப் பார்த்ததும் உடல் பதட்டம் கொள்ள ஆரம்பித்தது அவருக்கு.

“முதலில் அமருங்கள் பட்டரே! நேரில் வர முடியாததால் வாழ்த்து கூறி ஓலை அனுப்பி இருக்கலாம். பதட்டம் வேண்டாம். பயமும் வேண்டாம். நம் அரசர் குடிமக்களின் நலம் பேணுபவர். நாட்டுக்கு நன்மை தருவதையே செயலாகக் கொண்டவர். நாடு என்பதென்ன? நாட்டு மக்கள் அனைவரும் தானே. ஆதலால் வீண்பயம் வேண்டாம். வாழ்த்தோலையாக இருக்கும். சற்றமரும். அவிழ்க்கிறேன்.”

ஓலையுடன் சற்றே உள்நகர்ந்து கூட்டம்  இல்லாத இடத்திற்கு நகர்ந்தனர் இருவரும்.

நீள்செவ்வக வடிவத்தில் ஒன்றன் கீழ் ஒன்றாய் வைக்கபட்டு பட்டு நூலால் இறுக்கக் கட்டப்பட்டு அதன் மேல் புலி இலச்சினை பொறிக்கப் பட்டிருந்தது.

சக்கர பண்டிதர் அதனை சக்கரவர்த்தியின் அண்மையென்றே கருதி பயபக்தியோடு பிரித்தார்.

“கவனம்! கவனம்! ஒற்றர்படைத் தகவல்! வாணனின் ஊடுருவல்! வேள்வி சிறக்க வாழ்த்துகள்” சக்கரம் மெதுவாய் வாசிக்க

சிவநேச பட்டர் வெகுவாய் அதிர்ந்தார்.

“வாணனின் ஊடுருவல் என்றால் சக்கரவர்த்திக்கு தெரிந்த தகவலா? இவன் வருவான். வந்து கலகமூட்டுவான் என்று அறிந்திருப்பார் போலவே.”

“ஆம் பட்டரே! அவர் சோழப் பேரரசின் சக்கரவர்த்தி ஆயிற்றே! அறியாமல் இருப்பாரா? அறிந்தும் கூறாமல் இருப்பாரா? என்ன இவ்வோலை நம் கையில் சேரத் தான் தாமதமாயிற்று. இருந்தும் நையப் புடைத்தாயிற்று அவனை.”

“உம் உதவி இல்லாவிட்டால் அவனை எங்களால் என்ன செய்திருக்க முடியும் பண்டிதரே! என்ன இருந்தாலும்  இரகசியப் போர்க்காவல் படை வீரர் அல்லவா தாங்கள்!”

“இங்கு சுவருக்கும் காதிருக்கும் அன்பரே. உங்கள் அனைவரின் முன் நான் வேதம் படித்த பண்டிதரே. அதை மட்டும் சொல்லுங்கள் போதும். சரி! சரி! பிடியுங்கள் இவ்வோலையை. எனக்கு இராஜாங்க விஷயம் காத்திருக்கிறது. இனி நான் மீண்டும்  வரும் வரை இக்கோவில் உமது பொறுப்பு!”

சக்கர பண்டிதர் மறைவில் தன் உடையை மாற்றி கோலத்தை மாற்றி குறுவாளும், குன்றெனத் தலைப்பாகையுமாய் வீரன் சக்கரவாகனாய் குதிரையேறிப் போனான்.

சோழ இளவல் இராசாதித்தனின் சேனைத்தளபதி சேர நாட்டுடையன் வெள்ளையங்குமரன்  தேசத்தின் ஒவ்வொரு சிற்றூரிலும் இரகசியப் போர்க்காவல் படையை நிர்வகித்துக் கொண்டிருந்தான்.  அப்படையில் தான் சக்கர பண்டிதர் என்னும் சக்கரவாகன் படை வீரனாக இருந்தான். அவனுக்கு இளவல் இராஜாதித்தனையும் அவர்தம் நண்பர் வெள்ளையங்குமரனையும் ஒருசேரப் பார்க்க வேண்டும் எனக் கொள்ளை ஆசை. இருவரையும் இன்னும் நேரில் சந்திக்கும் சந்தர்ப்பம் வாய்த்ததில்லை அவனுக்கு.

குதிரை தன் வழியில் தஞ்சை நோக்கி ஓடிக் கொண்டிருந்தது. கூட மைத்துனனாகப் போகும் சுயம்பிரகாச வல்லானும்.

காவிரியன்னை மடி திறந்ததில் காணும் வழியெல்லாம் பசுமை தான். பசுங்கொடிகளும், நெல்வயல்களும் பச்சைப் பரப்பைச் சீதனமாக விரித்துக் காத்திருக்க இயற்கையின் எழில் காணும் வழியெல்லாம் கண் நிறைத்துக் கிடந்தது.

இவை எதிலும் மனம் லயிக்காமல் சோழத்தில் எப்படி வாணனின் ஊடுருவல்? கட்டுக் காவலில் கரை கண்டவர் நாம் என்று சோழர் மார்தட்டிக் கொண்டிருக்க கட்டை உடைத்து உள்நுழைந்தவனை எப்படி கவனிக்காமல் விட்டது போர்க்காவல் படை? நாமும் சந்தேகக் கண் கொண்டிருந்தோம் தான் ஆயினும் வேள்வியில் தன்னைத் தானே அவன் அர்ப்பணித்துக் கொள்ள முயல்கையில் தானே விழித்துக் கொண்டோம்? வாணனை யார் அனுப்பி இருப்பார்கள்? பாண்டியனா? இல்லை இராட்டிர கூடனா? நம் பரகேசரியின் வெற்றியைப் பொறுக்காத பகைவர் குழாம் பாரெங்கும் பரந்து கிடக்கிறதே. அவர்களில் யார் இவனது வில்? அம்பாய் வந்து நைந்து கிடக்கிறான்.

சக்கரம் அறிய வராதது என்னவென்றால்…




தாழைமேட்டில் வேள்வி என்றபோதே அதுவும் சோழர்களின் தெய்வம் ஜேஷ்டாதேவிக்கான வேள்வி என்றபோதே ரகசியப் படை அதன் சாதக பாதக அம்சங்களை அலசி ஆராய்ந்தது. நாலாபுறமும் ஒற்றர் படை நியமிக்கப் பட்டு உள்ளிருந்து புறம் செல்வோரும், புறமிருந்து உள்வருவோரும் அறியாது கவனிக்கப் பட்டனர். காற்று கூட இவர்களின் கதவைத் தட்டி விட்டுத் தான் உள்ளே வர முடியும். அந்தளவு கவனம் வைத்திருந்தனர் இவ்வூரின் மேல். ஏனெனில் இவ்வேள்வியின் பின் மாபெரும் அரசாங்க காரியங்கள் ஆரம்பிக்கப் பட வேண்டியிருந்தன.

இளவரசி வீரமாதேவி  இராட்டிர கூட அரசன் கோவிந்தனோடு நாடிழந்து பிறந்த வீடு திரும்பி இருந்தாள்.  மற்றொரு இளவரசி அனுபமா தேவியோ திருமணத்திற்கு காத்திருந்தாள்.  இளவல் இராசாதித்தன் தன் தமக்கை வீரமாதேவிக்காக இராட்டிர கூடர்களுடன் போரிடச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தான். இத்தனைக்கும் மேலே சக்கரவர்த்தி பராந்தக சோழருக்கு வேறொரு பெருங்கவலை. இவை எல்லாவற்றையும் நிறைவேற்ற அரசர் பெருமானார் செய்யக் கேட்டுக் கொண்டதே  இவ்வரிய வேள்வி. இதற்கு எத்தகைய முன்னேற்பாடுகள், முன்ஜாக்கிரதைகள், முன்தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டிருக்கும்?


அப்படியும் வாணனின் ஊடுருவல் நிகழ்ந்ததென்றால் சின்னமீன் கொண்டு பெரிய மீனைப் பிடிக்கும் திட்டம் தான். வாணன் சின்ன மீனாய் மாட்டிக் கொண்டான்.

அரசாங்கத்தின் பார்வையில் பெரிய மீன் யாரோ? அதைப் பிடிக்க எப்போரோ?

தஞ்சையை நோக்கி சக்கரம் தன் குதிரையைச் செலுத்திக் கொண்டிருக்க அங்கோ கோபத்திலும், ஆற்றாமையிலும் செக்கச் சிவந்த முகத்தோடு அருகில் அமர்ந்திருக்கும் தன் மைந்தன் இராஜாதித்தனை தலை தடவி ஆற்றுப் படுத்திக் கொண்டிருந்தார் பரகேசரி பராந்தகச் சோழர். உடன் பழுவேட்டரையர் கந்தன் அமுதனார். பராந்தகரின் உற்ற நண்பராய் என்றும் பழுவேட்டரையர் இருந்தனர்.

“பழுவேட்டரையரே! நீங்களாவது எடுத்துக் கூறுங்கள். வலை விரித்துக் காத்திருக்கும் வேடனின் வித்தையை. நாமெல்லாம் வேடர்கள். வலையை விரித்தோம். சிக்குவதெற்கென்றே வந்து சிக்கினான் அவ்வாணன். அதைக் கொண்டு பெரும் படையையே வளைத்துப் பிடித்து விட மாட்டோமா என்ன? நம் அனுபவம் இவர்களுக்குப் பாடம்! கோதண்டராமா! கோபம் வேண்டாம். ஆழ்ந்து யோசி! இராட்டிரகூடர்கள் வாணனை எதற்காக அனுப்பி இருப்பார்கள்? வாணனை நாம் வெற்றி கொண்டதால் அவன் இராட்டிரகூடனை உடும்பெனப் பற்றிக் கொண்டான். அவனும் கிடைத்தது கைக்கூலியென வாணனைப் பகடைக் காயாக ஆக்கி நம்மிடம் பகடை உருட்டுகிறான்.”

“அது மட்டுமா செய்கிறான் அரசே! நம் இளவரசி வீரமாதேவியின் வாழ்க்கையையும் நிர்மூலமாக்கி அனுப்பியது அந்த இராட்டிரகூடன் இரண்டாம் கிருஷ்ணன் தானே. அவனை இல்லாமல் செய்து விடத் துடித்துக் கொண்டிருக்கிறேன். துடிக்கும் என் தோள்களுக்கு உத்தரவு கொடுங்கள் தந்தையே!” இராஜாதித்தனின் மறுமொழிக்கு

பழுவேட்டரையர் இடையிட்டார்.

“ஏனிந்த வேகம் இளவலே! வேகம் விவேகமல்ல! வினை முடிக்கும் காலம் வரும். பொறுத்திருப்போம்!”

“பொறுமை! ஹா.. பொறுமை! வினை முடிக்க வரட்டும் என் ஆருயிர் நண்பன். வில்லில் அச்சுதன்! விரைவினில் புயலோன். மலை நாட்டுத் தளபதி வெள்ளையங்குமரன்.. அவன் அருகில் இல்லாது என் கை உடைந்தது போல இருக்கிறது தந்தையே.”

“மகனே! இராஜாதித்தா! நீயும், குமரனும் ஈருடல் ஓருயிராயிற்றே! அறியாது இருப்பேனா? வேகத்தில் நீவிர் காட்டாறு. விவேகத்தில் நானே …

கூறியவாறு இராஜாதித்யனை கூர்ந்து நோக்கிய பராந்தகரின் ஆகிருதி மிக்க தோள்களுடன் இடுங்கிய கண்களும் குவித்த உதடுமேல் குவிந்த மீசையும் சேர்ந்து இசைபடச் சிரித்தன.

சிரிப்பின் பின் சிந்திய அர்த்தமென்ன?

(தொடரும்)




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!