Serial Stories நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின்

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின்-1

 1 

வாணப் பிரவேசம்

தாழைமேடு

“ஓம் ஐம் ப்ரம்ம ஜேஷ்டாய நம:

ஓம் ஐம் ஸ்வர்ண ஜேஷ்டாய நம:”

“ஓம்! ஐம்! ஹ்ரீம்!” என்ற மந்திர உச்சாடனங்களால் ஜேஷ்டாதேவி  என்ற நிசும்பசூதனிக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேள்வியால் அவ்வூரே தகதகத்துக் கொண்டிருந்தது.

சும்பன், நிசும்பன் என்ற அரக்கர்களை அழித்து வெற்றிவாகை சூடியவள் நிசும்பசூதனி. ஓங்கி உயர்ந்தவள்  தன் கரங்களில் பல படைக்கலன்களைக் கொண்டுள்ளார். விரிகுழல் தீச்சுடராய், அசுர சம்ஹாரியாய், சினமிக்க திருமுகமாய்  நின்றிருப்பவள்.

அவள் வலது காதைப் பாருங்கள்.. பிரேத குண்டலம், இடது காதிலோ பெரிய குழை,  உடலில் ஒரு சதை இல்லை.  நீண்டு தொங்கும் மார்பகங்களும் அவற்றின்  கச்சாகப் பாம்பும்.  உடலெங்கும் ஆபரணமாய் மண்டை ஓடுகள்,  அவளின் இடக்கரம் தன் காலின் கீழ் கிடக்கும் அசுரரைக் காட்ட வலது பாதம்  துண்டிக்கப்பட்ட ஒரு தலையின்மீது ஊன்றப்பட்ட நிலையில் உள்ளது. இவள் சத்ரு சம்ஹாரி. வெற்றிக்கு அதிபதி.

அந்தணர்களாகிய வேத விற்பன்னர்கள் அங்கு மாமன்னர் மகாபலம் பொருந்திய சக்கரவர்த்தி பராந்தகச் சோழரின் திருப்பார்வை பட்டு மிகுந்த சந்தோஷத்துடன் வாழ்வை நகர்த்திக் கொண்டிருந்தார்கள்.




“நாளொன்று நகர்ந்தாலும் நம் வேள்வி தடைபடாது நகர்வதற்கு மேன்மை தாங்கிய  நம் சக்கரவர்த்திக்குத் தான் நாம் பெரு நன்றி செலுத்த வேண்டும்!” என்றார் சிவபாதப் பட்டர்.

“ஆம்! சக்கரவர்த்தியின் கருணையே கருணை! நமது மாசற்ற வேள்வியின் பூர்ணாஹுதிக்கு அவரை அழைக்கலாமா? அழைத்தால் வருகை தருவாரா?” கேள்வி எழுப்பியவர் மூர்த்தி சிறிதானவர் தான்.. ஆனால் கீர்த்திமான். சக்கர பண்டிதர்  என்பது பெயர்.

“உமது கீர்த்தி சக்கரவர்த்தியின் அரண்மனை வரை நுழைந்து விட்டது ஓய்! பிறகென்ன? நீர் அழைக்கிறீர் என்றால் மன்னரே வர மாட்டாரா என்ன?” கூட்டத்தில் ஒரு குரல் எழும்பியது.

“அபசாரம்! அபசாரம்! அவர் சக்கரவர்த்தி. நான் வெறும் சக்கரம் தான். இங்குமங்கும் சுற்றும் சக்கரம். வீணாய் வெறும் பொழுதாய் வெற்றிலையாய் ஊண் கொண்ட உயிரிடத்து ஓரிழைப் பாசம் கொண்டு ஒருசாண் வயிற்றிற்காய் உலா வருபவன். அடியேனைப் போய் அவருடன்..”  வினயமாய்க் கைகுவித்துக் கூட்டத்தைப் பார்த்துச் சொன்னார் சக்கர பண்டிதர்.

உண்மையில் அப்பூஜைக்கு, அந்த அற்புத வேள்விக்கு ஆதாரச் சக்கரம் அவரே.  சக்கரமாய்ச் சுழன்று வேள்விக்கான ஸ்ருதியாய் இருப்பவர். ஓரிடத்தும் பலவிடத்தும் உள்ள விஷயஜீவிகளை ஒன்றிணைக்கும் சக்கரம் அவர். அவரவர் பார்வையை அவரவர் வைத்துக் கொண்டு என்ன பயன்? அப்பார்வை பிறருக்குப் பயன்பட வேண்டும் என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டிருப்பவர்.

“அதெல்லாம் இருக்கட்டும் பண்டிதரே! நாம் செய்யும் இத்தகைய அற்புதமான வேள்விக்கு சக்கரவர்த்தி வருகை தராவிட்டாலும் இளவல் கோதண்டராமர் வருகை புரிவாரா?”

“ஆஹா.. வந்தால் நலமாய் இருக்கும். ஆனாலும் உள்ளாலையிலிருந்து  அரச குடும்பம் இல்லாது புறம்படியில் இருந்து வீரர் குழாமாவது வருகை புரியுமா எனப் பாரும்!” கூட்டத்தில் ஒரு குரல் எழுந்தது.

“இது நம் தேவிக்கான வேள்வி. இது சோழர் குலத்துக்கான வேள்வி. இது நம் அனைவர் நலத்துக்கான வேள்வி. இதில் பனங்காட்டுச் சலசலப்பு வேண்டாம். இனி திக்கெட்டும் புலிக்கொடியாய் திசையெங்கும் வில்லொலியாய் நிற்கட்டும் வெற்றியெங்கும்! நீங்கட்டும் தோல்வி முகம்! ஜெய் விஜயீ பவ!” சிவபாதப் பட்டர் உற்சாகக் குரலில் சப்தமிட்டார்.

அக்குரலைப் பின் தொடர்ந்தன எதிர்நிற்போரின் குரல்கள். சின்னஞ்சிறு ஓடை ஆற்றில் கலந்து அது நதியாகிக் கடலில் சேர்ந்து மகா சமுத்திரம் ஆவதைப் போல ஒரு சிற்றொலி பல்கிப் பரவி பல ஒலிகளைத் துணை சேர்த்து பெரும் முழக்கமாய் தாழைமேட்டில் அதிர்வேட்டாய் ஒலிக்க அவ்வொலியில் புகுந்து கலந்தான் வாண வீரன் ஒருவன்.

அவன் பார்வையில் ஊரின் மையத்தில் நடக்கும் வேள்விக் கூடம் தென்படச் சப்தம் இல்லாமல் உள்நுழைந்தான். நாற்திசைகளிலும் ஆளுயர வாழை மரங்கள் குலையோடு ஓங்குதாங்காய்க் கட்டப் பட்டிருக்க அதன் இணைப்புச் சங்கிலியாய் மாவிலைகள் கொத்து கொத்தாகத் தோரணமாய்க் கட்டப்பட்டிருந்தன. மல்லிகை, அரளி, சம்பங்கி, பெரும் சாமந்திப் பூக்கள் மாலைகளாய்த் தொடுக்கப் பட்டு அவையும் சரம் சரமாகத் தொங்க விடப் பட்டிருந்தன.

கமழும் பூமணத்தில் கலந்து மணப்பது போல் குங்கிலியம் கலந்த சாம்பிராணி அவ்விடமெங்கும் மணத்தது. நிசும்பசூதனி வெறித்த விழிகளோடு வீற்றிருக்க அவளைச் சுற்றிலும் வட்ட வடிவிலும் செவ்வக வடிவிலும் முக்கோண வடிவிலுமாய் யாக குண்டங்கள் இருபத்தி ஏழு அமைக்கப் பட்டு ஒவ்வொன்றிலும் சிவாச்சாரியார்கள் உடம்பெங்கும் திருநீறு பூசி  செவ்வாடை அணிந்து அமர்ந்த படி மந்திர உச்சானட ஒலிப் போர்வையில் ஹோமத்தீயில் பசும்நெய்யை ஆஹூதி செய்து கொண்டிருந்தனர். மண்டல நாயகியான தேவி  மனம் மகிழ ஒரு புறம் மேளதாளங்களும், மற்றொரு புறம் வாண வேடிக்கைகளும் நடைபெற பெரும் யானை போன்ற அத்திருவிழாக் கூட்டத்தில் அதன் காதில் நுழைந்த சிறு எறும்பாய் நுழைந்த வாணனைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை.

“சோழச் சக்கரவர்த்திக்கு என்றும் ஜெயம் உண்டாகட்டும். சோழர் குலம் வாழ்க! சோழர் புகழ் ஓங்குக!” கூட்டம் உற்சாகக் குரல் எழுப்பும் போதெல்லாம் அவனும் இணைந்து ஒலி எழுப்புவதால் அவன் மேல் சந்தேகக் கண் யாருக்கும் விழ வில்லை.

மனம் புகுந்து மனிதம் காணும் வழி அங்கு இருக்கும் யாரேனும் ஒருவருக்காவது தெரிந்திருந்தால் வந்த வாணனின் மனம் புகுந்து மனிதம் அற்ற நமனென்று புரிந்திருப்பார்.

வாணர்கள் பராந்தக சோழரின் எதிரிகள். எதிரியின் நுழைவு வேள்விக்கு இடையூறாகுமா?

இராட்டிரக் கூடன் இரண்டாம் கிருஷ்ணனுக்கு வாணர்கள் போரில் உதவியதாலயே சோழச் சக்கரவர்த்தி பராந்தகன் வாணர்கள் மீது பகைமை கொண்டுத் திருவல்லப் போரில் வாணர்களைத் தோற்கடித்தார்.

வாணர்கள் இராட்டிர கூடத்தை அண்டி இருந்தனர். தகுந்த நேரம் வாய்க்கும் பொழுது தடமழிக்கக் காத்திருந்தனர்.

எதிரியை எதிரில் வைக்கக் கூடாது. அருகில் வைத்துக் கொண்டு அன்பொழுகப் பேசி அவனறியாது அவனை அழித்தல் பகையழித்தலின் ஆகிவந்த விதி. பகை முடிக்க வீரமும், வஞ்சகமும் இரு கண்களாய் விளங்கின என்பது உண்மைதான். வீரம் முன் நிற்கும் போது வலியவன் வாகை சூடுகிறான். வஞ்சகம் முன் நிற்கும் போது எளியவனும் எக்களிக்கிறான்.

வலியவன் சோழன் முன் எளியவனாய் பாணன் வஞ்சக வலை விரித்தான். விழுந்து விருந்தாகுமா சோழப் பறவைகள்?

“நாழிகை கடந்ததே ஐயா! நடு நிசி தாண்டிவிட்டது. இன்னும் சில நாழிகைப் பொழுதே பூர்ணாஹுதிக்கு. அரச குடும்பத்துக்காகச் செய்யும் இவ்வேள்வியில் அரச குடும்பத்தில் இருந்து கலந்து கொள்ள எவரும் வர வில்லையே. ஒருவேளை வந்து கொண்டிருக்கின்றனரோ?”

சக்கர பண்டிதர் மற்ற சிவாச்சாரியார்களுடன் மும்முரமாய் பூர்ணாஹுதிக்கான இறுதிக் கட்ட ஏற்பாட்டில் இருக்க சிவநேச பட்டர் தன்னிடம் கேள்வி கேட்டவனை உன்னித்துப் பார்த்துச் சொன்னார்.

“யார் கண்டது? அரசரே கூட இக்கூட்டத்தில் இருக்கலாம். அவையரசர் என்றும் அடக்கமாகத் தான் இருப்பார். வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று என்ன கட்டாயம்?”

செவிப்புலனைத் தீட்டி தீயாய்க் காத்திருந்த வாணன் சற்றே உள்நகர்ந்து சேதி கேட்க ஆயத்தமானான்.

“அரசரா? நம் பராந்தகச் சக்கரவர்த்தி வருகை தந்திருக்கிறாரா? மாறுவேடத்திலா? எங்கே? எங்கே?”

“சற்றே அடங்கும்! அவராய் இருக்கலாம். இல்லை இளவல் முவடி சோழனாய் இருக்கலாம். இல்லை அவர் தம் ஆருயிர் நண்பர் சேர நாட்டு வில்லாளனாய் இருக்கலாம். தலையே தான் தலைகாட்ட வேண்டும் என்றில்லையே. தலை கொண்ட எவரும் தலைகாட்டலாம் என்பதால் சற்றே அமரும் பிள்ளாய்!” என்றார் கேலிபோல.

தீட்டிய செவிக்கு விருந்தே கிடைத்து விட்டது அறியாமல் கேள்வி கேட்டவர் இன்னும் உற்சாகமாகி..

“ஐயா பட்டரே! எனக்கொரு சந்தேகம்! தலை கொண்ட எவரும் தலைகாட்டலாம் என்றீரே! தலை கொண்டவா? தலை கொள்ளவா?”

வாணனின் முகம் கறுத்தது.

“தலை தலையைத் தான் கொள்ளும். கொள்ளத் தானே இப்பூஜை! போய் அமரும்! அமர்ந்து பாரும்!” சிவநேச பட்டர் அழுத்தமாய் வாணனை ஒரு பார்வை பார்த்து விட்டு நகர்ந்தார்.

சோழப் பேரரசில் ஒவ்வொரு நபரும் ஒரு அழுத்தம்மிக்க ஆயுதமோ? சொல்லாலும் பார்வையாலுமே எதிராளியை ஆட்டம் காண வைக்கின்றனரே! நாம் யாருக்கும் அறியாது வந்ததாய் நினைத்துக் கொண்டிருக்கிறோமே. அவ்வாறில்லையோ? அறிந்தும் அறியாதது போலப் பேச்சால் ஆழம் பார்க்கிறார்களோ? வாணன் திகைத்தான்.




அவனுக்கு இடப் பட்டிருந்த கட்டளை அவ்வேள்வியைக் குலைப்பது. வெற்றிக்கான வேள்வி என்பதால் வெற்றி கொண்டது போதாதா என்ற ஆத்திரத்தில் வெறி கொண்ட வேங்கையாய் அவ்வேள்வியைக் கலைக்க அம்பாய் அவனை எய்திருந்தனர் இராட்டிரக் கூடர்.

“வேள்வியைச் சிதைத்து விட்டு வா! விரைவில் உன் நாடு உனக்கே!” வெறியேற்றி அனுப்பி இருந்தனர்.

ஒருபக்கம் பாண்டியனை வென்று மதுரையை வசப்படுத்தி இன்னொரு பக்கம் திருவல்லத்தில் வாணர்களை கங்க மன்னனான இரண்டாம் பிருதிவீபதியின் துணையுடன் தோற்கடித்தாரே அந்த பராந்தகச் சோழர்.. அவருக்குத் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டாம்? கொடுக்காவிடில் வாணனென்ற சொல்லே பெரும் இழுக்காயிற்றே!

பிருதிவீபதி! அடுத்து உன்னைக் களம் காண வருகிறேன். துணையாக நின்றாயோ தோழனாய் நின்றாயோ! வினை முடித்தாய்! நானும் வினை முடிக்கிறேன்!

வாணனின் உள்ளத்தில் கோப வார்த்தைகள் குமுறலாய் வெளிப்பட்டுக் கொண்டிருந்தன. கேட்கச் செவிகள் இருந்தும் கேட்கவியலா மௌனத்துடன் வேளை எதிர்பார்த்து வேலை செய்யக் காத்துக் கொண்டிருந்தான் அவன்.

“இந்தாப்பா! செந்தலையா! அந்த அண்டா பொங்கலைக் கொஞ்சம் நகர்த்துப்பா!” பிரதான சமையல்காரன் வல்லான் உரக்கக் கூப்பிட்டான்.

செந்தலையா? நான் தானா? ஓ! சிவப்பு முண்டாசு கட்டி இருக்கிறேன். என்னைத் தான் வேலை சொன்னார்களா?

வாணன் நிமிர்ந்து பார்த்ததும்..

“என்ன பார்க்கிறீர்! அந்த அண்டாவைச் சற்று நகர்த்தி வாருமய்யா! பூர்ணாஹூதி ஆனதும் அனைவருக்கும் பிரசாதம் விநியோகம் செய்ய வேண்டும் தானே!”

அவனுக்கு வாணன் யாரென்று தெரியவில்லை போலும். வஞ்சகனிடம் வலிய வந்து மாட்டிக் கொண்டான்.

வஞ்சகனும் இது தான் சமயமென்று யாரும் அறியாச் சமயம் இடுப்பு வேட்டி முடிச்சவிழ்த்துப் புட்டியில் இருந்த நஞ்சைக் கலந்தான் விருந்தாய்.

“இதோ! இதோ கொண்டு வந்து விட்டேன்!”

அனைத்து அண்டாக்களுக்கு நடுவில் விஷம் தாங்கிய அண்டாவைத் தன் விருந்தாய் ஆக்கிவிட்டு வேள்வியின் பூரணத்துவத்தைக் குலைக்க உள்ளும் வெளியிலுமாய் நரிமுகம் காட்டினான் வாணன்.

கூட்டம் சலசலத்தது. அரச குடும்பத்தினர் மாறுவேடத்தில் வந்திருக்கிறார்களா? பராந்தகச் சக்கரவர்த்தியா இல்லை அரசியார் கோகிழானடிகள் தேவியா? வதந்தியின் பேருலா வாணனுக்கு உளவாட வசதியாய்ப் போயிற்று. நஞ்சை உணவில் கலந்தவன் அப்படியே நகர்ந்து பிரதான ஹோம குண்டத்தின் முன் நின்று பூர்ணாஹூதியைத் தன் தலையைத் தந்தேனும் தடுக்கும் நோக்கத்தில் உறுதியாய் நின்றான்.

வெற்றிக்கான வேள்வி முடிவு இன்னும் சற்று நாழிகை என்றிருக்கும் நிலையில் வேள்விப் பூர்ணாஹுதியில் விழ இருப்பது விலை உயர்ந்த பட்டா? கனிவகைகளா? இல்லை வாணர் குலத்து வீரனே தானா? யாரறிவார் இக்கேள்விக்கு விடையை.

(தொடரும்)




What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!