Serial Stories நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின்

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின்-3

3

இராஜாதித்த சபதம்

பழையாறைக் கோட்டையின் மேற்புற மாடத்தில் நின்றிருந்தாள் வீரமாதேவி. அவளின் கண்கள் அரண்மனைக்குத் தென்மூலையில் வடிவமைக்கப் பட்டிருந்த தடாகத்தைப் போலவே நிறைந்திருந்தது. பாரமேறிய மனதை பலம்கொண்ட மட்டும் இறக்கத் தான் பிறந்த இடம் வந்திருந்தாள். கணவன் கோவிந்தனின் விட்டேத்தியான மனநிலையும், பெண் மோகமும்  அவள் மனதில் இன்னுமின்னும் பாரமேற்றியது தான் மிச்சம்.

அக்கையாரே! நாடிழந்து நாடி வந்தோமே! நகராது இதையே பிடித்து விடுவோமா என்ற ஆழ்ந்த யோசனையில் இருக்கிறீர்கள் போலிருக்கிறதே. வல்லவரையரும் இல்லாது தாங்கள் இப்படி தனியே யோசனை செய்வதைப் பார்த்தால் விஷயம் அவர் சம்பந்தப் பட்டதாய்த் தான் இருக்குமென ஊகிக்கிறேன்!” வீரமாதேவியின் சகோதரி அனுபமா ஒரு அரசிக்குரிய கம்பீரத்துடனும், சகோதரிக்கே உரிய குறும்புத்தனத்துடனும் கலந்த கலவையாய் வந்து நின்றாள்.

அவள் வார்த்தைகளில் இருந்த கனம் உடலில் இல்லை. மெல்லிய பூங்கொடியாய் பொய்யாய் இடைகொண்டு மின்னல் சிரிப்புடன் மோகினியாய் மனம் மயக்கினாள்.

“அனுபமா! இதிலும் விளையாட்டா உனக்கு? பெண் என்பவள் அரசாள்வது புகுந்த மனையில் தான் இருக்க வேண்டும். எனக்கு அந்த கொடுப்பினை இல்லையே என்ற ஏக்கம் உண்டு என்றாலும் பிறந்த மனையை நானே அபகரிக்க நினைக்கும் அளவு நானொன்றும் கொடும்பாவி இல்லை. இம்மனை நம் சகோதரர்களுக்கு உரியது. அவர்தம் இல்லத்தரசிகள் ஆள வேண்டியது. இங்கு நீயும் சரி நானும் சரி விருந்தாடிச் செல்லும் பறவைகளே. மனதில் இருத்திக் கொள்!”

“கோபம் வேண்டாம் அக்கையாரே. எங்கோ இடி இடிக்க இங்கு வந்து மழை பொழிந்து விட்டேன். மன்னியுங்கள்!”

“மன்னித்தேன்! எங்கோ இடி என்றால் எங்கு இடி இடித்தது? யாரால் இடித்தது என்பதைச் சற்று விளக்கமாகக் கூறு அனுபமா!”

“கூறினால் உங்கள் மனம் வருந்துமே எனப் பார்க்கிறேன்!”

“வருத்தங்கள் தான் என் வாழ்வு என்றாகிப் போனதே! இனி எந்த வருத்தம் வந்து என்னை என்ன செய்ய இயலும்? தயங்காமல் அங்கு இடித்த இடியைப் பற்றிக் கூறம்மா!”

“இடி தான்! இடித்தது வல்லவரையர் கோவிந்தன் அவர் தாம்! பெண்ணென்று எழுதிச் சட்டமிட்டு மாட்டினால் கூட மோகம் தலை தூக்கி விடும் போலவே!”

அதிர்ந்தாள் வீரமாதேவி.

“உனக்கு ஏதாவது ஆபத்து?”

“ஆபத்தா? உங்கள் தமக்கைக்கா? அக்கையாரே! நான் அனுபமா! பித்தாய் ஒரு விரல் கூட என் மேனியேற அனுமதிக்க மாட்டேன். இது அந்தப்புர சேடியர்களிடத்து நான் தெரிந்து கொண்ட தகவல். தேவியான தாங்கள் இருக்கும் இடம் விட்டு எங்கோ போய் இடி இடித்துக் கிடந்தால் இங்கு வந்து நான் மழை பொழிய வேண்டி இருக்கிறது. கொஞ்சம் இறுக்கிப் பிடியுங்கள் அக்கையாரே! மான்யகேடத்தைப் போரிட்டுப் பெற வேண்டும் அல்லவா?”

அனுபமா கொட்டிய மழையில் முழுதும் நனைந்த வீரமாதேவி கொட்டும் நீரினைத் துடைக்கக் கூட இயலாது வெறித்தபடி நின்றிருந்தாள்.

“தேவி! வீரமா தேவி! என்னவாயிற்று? ஏன் கடலளவு துக்கம்? இங்கு நம் அரண்மனையில் உன்னை யாரேனும் ஏதும் சொன்னார்களா? இல்லையே பிறந்த பெண்ணைச் சீராட்டும் வம்சமாயிற்றே நம் வம்சம். உன் கணவன் உன்னுடன் சண்டை இட்டானா? ஏதும் பொய்ப் பிணக்கா? ஊடலா? என்னவென்று சொன்னால் அண்ணன் நானிருக்கிறேன். உன் துயர் துடைப்பது தான் தேவி என் முதல் வேலை.” அப்பக்கம் வந்த இராஜாதித்தன் வீரமாதேவியின் வாடிய நிலை கண்டு வருந்திச் சொற்களை உதித்தான்.




வீரமாதேவி நிமிர்ந்து பார்த்தாள். நெற்றியில் மின்னும் திருநீறுடன் நீண்ட ராஜ அங்கி அணிந்து திண்ணெண்று ஏறிய திமிலொத்த தோள் புடைக்க அண்ட சராசரத்துக்கும் அதிபதி நான் தான் என்ற தோரணையுடன் வீரத் திருமகனாய் நின்றிருந்த இராஜாதித்தனைக் கண்டதும் தடாகம் மலர்ந்த அவள் கண்களில் தாமரை மலர்ந்தது. அதில் மிகுந்த வாத்சல்யம் நிறைந்திருந்தது.

“அண்ணா! தாங்கள் இருக்க எனக்கென்ன கவலை? என் கவலை எல்லாம் எனக்கொரு அண்ணியார் இன்னும் வர வில்லை என்பது தான்.” சோகம் விடுத்துக் குரலில் குழைவைத் தத்தெடுத்துக் கொண்டாள்.

“அண்ணியாரா? யாருக்கு கண்டராதித்தனுக்கா? அரிஞ்சயனுக்கா? இல்லை உத்தம சீலிக்கா?”

“அறிந்தும் அறியாதவர் போல் உரையாடுவதில் தங்களை மிஞ்ச யாரேனும் இனி பிறப்பெடுத்துத் தான் வரவேண்டும். நான் மற்ற இளவல்களைப் பற்றிக் கூற வில்லை. தாங்கள் தானே தலைமகன். தங்களைக் குறித்தே வருந்தினேன்.”

“வீரமாதேவி! திருமணம் புரிந்து நீ என்ன கண்டுவிட்டாய்? வல்லவரையன் உன்னிடம் சுமுகமாக இருக்கிறாரா? உன்னை மீண்டும் மான்யகேடத்தில் அரியணை ஏற்றிய பின்பு தான் எனக்கான வாழ்வு யோசனை எல்லாம்.”

“அண்ணா! அப்படிக் கூற வேண்டாம். நானே தங்கள் வாழ்வின் தடைக்கல்லாய்க் கிடந்து விடுவேனா? கூறுங்கள். இம் எனும்முன் நிறைவேற்றி வைக்கிறேன். சேரநாட்டு செவ்வேள் செல்வியா? கொடும்பாளூர் குலமகளா? இல்லை வைதும்பன் வனிதையா? இல்லை கடம்ப நாட்டு கன்னிகையா இல்லை… நம் எதிரியாய் இருந்தாலும்  இராட்டிர கூட இளநங்கையா? கங்க வம்சமா?”

“நிறுத்து வீரமாதேவி! நிறுத்து! இவை அத்தனையும் விட என் மனம் போர்க்களத்தையே காதலிக்கிறது. என் தினவெடுத்தத் தோள்களின் பசிக்கு இரையாக வாள்களும், வேல்களும் மோதும் வெற்றிச் சப்தமே போத வில்லை. இன்னும் இன்னுமென என் கரங்கள் பரபரக்கின்றன. என் கால்கள் கரியையும் பரியையும் ஆளத் துடிக்கும் போது கன்னியெல்லாம் எம்மூலைக்கு?”

இராஜாதித்தரின் வீரப் பேச்சைக் கண்ட வீரமாதேவி..

“ஆகட்டும்! ஆகட்டும்! போர் போர் என்ற இந்த அறைகூவலும் ஒரு நாள் மாறும். “

“மாறாது தேவி! என்றுமே மாறாது. நாம் வெற்றிக் கனி கொய்யப் பிறந்திருக்கிறோம். வெற்றியே நமது இலக்கு. வீரமே அதற்கு அழகு.”

“ஆஹா.. என்னே உமது வீரம் அண்ணா. உம்மைப் போன்றே உமது ஆருயிர் நண்பருமாமே. எங்கே அவரை இப்பொழுதெல்லாம் உம் கைவளைவில் காண வில்லையே. காற்றாடச் சென்றிருக்கிறாரா இல்லை கடல் தாண்டிச் சென்றிருக்கிறாரா?”

“யார்? குமரனா? கடல் தாண்டி ஈழம் சென்றது நான் மட்டும் தான் தேவி. குமரன் இங்கே கங்க நாட்டுக்குச் சென்றிருக்கிறான். ஈழப்போர் முடித்து வெற்றிக்கனி கொய்து வந்த நான் இன்னும் அவனைக் காணாது அவ்வெற்றியைக் கொண்டாடாது காத்துக் கொண்டிருக்கிறேன்.”

“அவர் உங்கள் நிழலாமே அண்ணா. தங்களுக்குப் பசித்தால் அவர் உணவு உண்பாராம். அவருக்கு உடல் கொதித்தால் தாங்கள் மருந்து உண்பீர்களாம். நகமும் சதையும் போல நீவிர் இருவரும் எனக் காண்பவர்கள் எல்லாம் சொல்லக் கேட்டு உமது நண்பரைக் காண  அபரிமிதமான ஆவல் கொண்டு விட்டேன். எப்படி இருப்பார்? தங்களைப் போலவேயா? நிச்சயம் வீரத்திலும் தீரத்திலும் உருவத்திலும் தங்களை விட ஒருபடி குறை..”

“யாரையும் குறைவென்று சொல்லக்கூடாது தேவி. குமரன் சேர நாட்டவன் ஆயினும் நம் சோழ தேசமே உடம் பொருள் ஆவி என அர்ப்பணித்து வாழ்பவன். அரசாங்க காரியமாகட்டும் அரசனுக்குத் தேவைப்படும் ஆலோசனையாகட்டும் ஏன்? என் தமக்கை நீ துன்பப் படுகிறாய் என்று தெரிந்தாலே உனக்காக உன் நாட்டை மீட்டுத் தர முதல் ஆளாக வந்து நிற்பான் என் உயிர் நண்பன். அவனுக்கு இன்னும் நீ வந்த விஷயம் தெரியவில்லை ஆதலால் அவன் வீரத்தின் மேல் சந்தேகச் சாயை கொள்ளாதே! எனக்காக என் நலனுக்காக உயிரையும் கொடுக்கும் உத்தமமான நண்பன் என் வெள்ளையங்குமரன்!”

நண்பனைப் பற்றிய பெருமிதத்தில் சூரியக் கதிர்கள் பட்ட சிவனின் திருமேனி போல இராஜாதித்தன் முகம் பொன்னென மின்னியது.

வீரமாதேவி அவர்களின் இறுகிய நட்பைக் கண்டு பேச்சிழந்து மயங்கி நின்றாள்.

“வருகிறேன் தேவி. எதற்கும் கலங்காதே. இந்த இராஜாதித்தன் இருக்கிறேன் உன்னை உன் இருப்பிடம் சேர்க்க! அதுவரை பிறந்த வீட்டுச் சீராட்டலைக் குறையின்றி பெற்று மகிழ். கூடப் பிறந்தவளோடு கூடி விளையாடு. தந்தைக்கும் தாய்க்கும் தடையில்லா பாசத்தை வழங்கு. முடிந்த பொழுது இந்த இராஜாதித்தனுக்கும் உன் அன்பை வாரி வழங்கு. ஏற்க சித்தமாய் இருக்கிறேன். அதை விடுத்துச் சாளரமே கண்ணென்று சங்கடத்தில் அமிழ்ந்து விடாதே. ஒரு நாட்டின் அரசியானவள் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? அரசன் தவறு செய்தால் அதைத் தட்டிக் கேட்டுத் திருத்த வேண்டும். அரசன் மக்களின் நேசனாய் இருக்கிறானா எனக் கவனிக்க வேண்டும். அரசவையில் நடக்கும் விஷயங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டும். மொத்தத்தில் அரசனுக்கு அரசியே மதியூக மந்திரி. மற்றவரெல்லாம் அதன் பின் தான்.  அத்தகைய அரசியாய் நீ மாற இப்போதிருந்தே பயிற்சி எடுத்துக் கொள். மான்யகேடம் சென்று அரியணை ஏறும் போது அத்தனை அனுபவமும் உனக்கு அழகாய் கைகொடுக்கும். வருகிறேன் தேவி. கங்க நாட்டில் இருந்து குமரனை வரவேற்கக் கிளம்ப வேண்டும்.”




“ஆகட்டும் அண்ணா! தாங்கள் சொன்னதைச் சிரமேற்கொண்டு ஏற்கிறேன். கொண்டவன் கோபுரம் ஏற வில்லை என வீணே வருந்தி நிற்காமல் கோபுரம் ஏறச்செய்ய என்ன வழியென இனி தேடப் போகிறேன். வழித்துணைக்கு தாங்களும், தங்கள் நண்பரும் இருக்கும் பொழுது மான்யகேடமென்ன மண் முழுவதும் சோழமாகி விடும். சோழம் சோர்ந்து விடா வீரம்! நான் ஒரு சோழச்சி! “

வீரமாதேவியின் வீரப் பேச்சில் நெக்குருகி நின்ற இராஜாதித்தன் அவளை நெருங்கிக்  கையைப் பிடித்தவன்

“உன் வாழ்வை நேர் செய்யும் பொறுப்பை நான் ஏற்கிறேன் தேவி. சற்றே காத்திரு!”

வெளியே புரவியின் குளம்படிகள் ஜதி கொண்டு ஒலிக்க நண்பனைக் காணத் தாவி ஓடினான் இராஜாதித்தன்.

(,தொடரும்)




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!