Serial Stories நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின்

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின்-7 (நிறைவு)

7

சதுரானனப் பண்டிதர்

வெற்றிமாலை சூடி இளவல் கோதண்டராமர் என்ற இராஜாதித்தன் வரப் போகிறான் என்ற நிதர்சனத்தைத் தூளாக்கியது சேவகன் கொண்டு வந்த செய்தி.

“நம் இளவரசர் இராஜாதித்தன் போர்க்களத்தில் கங்க மன்னன் இரண்டாம் பூதுகனால் வஞ்சகமாகக் கொல்லப் பட்டார்!”

எதிர்பாராத அச்செய்தியால் சக்கரவர்த்தி பராந்தக சோழர் தன் தலை வீழ்ந்தது போல்  பதைபதைத்தார். கோக்கிழானடிகள் தேவியோ கடும் மூர்ச்சையுற்றார். தலைமகனை இழந்த தேசம் சொல்லொண்ணாத் துயரத்தில் மூழ்கியது.

அரசர் மெல்ல தன்னைச் சுதாரித்துக் கொண்டு கேட்டார்.

“அரிஞ்சயன்?”

“வருகிறார் அரசே!”

சென்ற மூச்சு திரும்பியது. இருந்தாலும் சென்றவன் சென்றவன் தாமே. அரசாள வேண்டிய தலைமகன் மண்ணாளச் சென்றுவிட்டான்.

“வெள்ளையங்குமரன்?”

“அவருக்கும் பலத்த குருதிப் போக்கு. தேடினோம். கிட்ட வில்லை. எவராவது வைத்திய உதவி செய்திருப்பார்கள். இல்லை அவரே மனம் வெறுத்துச் சென்றிருப்பார் என்பதாய் யூகங்கள் தெரிவிக்கின்றன!” என்றான் சேவகன்.

பராந்தகர் புரிந்து கொண்டார். நண்பன் இல்லாத இடத்தில் நமக்கென்ன வேலையென விரக்தியுற்று நகர்ந்து விட்டானென.

ஆம். குமரன் அவ்வாறு தானிருந்தான்.

கையெல்லாம் செங்குருதி சேறென ஒட்டியிருக்க அளவில் அதைவிட அதிகமான குருதி அவன் மனத்தில் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது.

“ஐயகோ! நண்பனே இராஜாதித்தா! இனி உன்னை எங்கு காண்பேன்? கண்ணும் பொய்த்ததோ? காட்சியும் பொய்த்ததோ? தோள் கொடுப்பேன்.. தொடர்ந்திருப்பேன் என்றன்று உரைத்தேனே! சூழ்ச்சியால் நம் படை அகற்றி உன் உயிரைப் பறித்துச் சென்றனரே! உன்னைக் கவர்ந்தவனை களப்பலி கொள்ளலாம். மனதுக்கு ஆறுதல். ஆனால் மாண்டவன் நீ மீண்டு வருவாயா நண்பா?”

இராஜாதித்தனின் உடல் மீது விழுந்து புரண்டான் வெள்ளையங்குமரன்.

“யாருக்காக இப்போர்? உன் தமக்கை தன் நாடு செல்லவா? இல்லை நீ திருநாடு அலங்கரிக்கவா? உன்னை இழப்பேன் என்றறிந்திருந்தால் உடன் நின்று தடுத்திருப்பேன் என் பிரிய நண்பா! இழப்பின் வலி தன்னை இங்கு பார்! எத்தனை ஆயிரமாயிரம் வீரர்கள்! நம் பக்கமும் எதிரியின் பக்கமும். அவரவருக்கு குடும்பம் உண்டு தானே. போருக்கான வெற்றியை ஒருவன் கொண்டாடும் பொழுது அதன் பின் வீழ்ந்த இவ்வுயிர்களைப் பற்றி யார் கவலை கொள்ளப் போகிறார்கள்? விந்தையான போர்வீரன் அல்லவா நான்? ஹா! உன்னை இழந்த பின் தான் எனக்கே இக்கவலை வருகிறது இராஜாதித்தா! “




“ஆருயிர் நண்பனே! அரச இளம் செல்வனே! நீ இளவரசனாகவா எனக்கு இருந்தாய்.  ஆசானாய், அன்னையாய், தந்தையாய், அன்புத் தோழனாய் அனைத்துமாய் இருந்தவனே! அதற்குள்ளாக அஸ்தமித்து போனது ஏன்?”

வெள்ளையங்குமரனின் மனம் வெறுத்துப் போனது.

“இனி போர் வேண்டாம். போர்க்களம் வேண்டாம். சோழப் படைத் தளபதி என்ற பதவி வேண்டாம். வில் வேண்டாம். இந்த வாள் வேண்டாம். குதிரையும் யானையும் குதித்தாடிச் செல்லட்டும்.”

போர்க்கோலம் களைந்தான். ஒற்றை வேட்டியுடன் வடக்கு நோக்கி நடைபயணமாய்ப் புறப்பட்டான்.

கண்டவர்கள் சக்கரவர்த்திக்குத் தகவல் சொல்ல அவரும் அவனை அவன் போக்கில் விட்டு விடுங்கள் எனப் பதில் அனுப்பினார்.

வெள்ளையங்குமரன் தன் ஆருயிர் நண்பன் மாண்டதால் ரணப்பட்ட தன் மனம் சமனப்பட  அந்த பாதயாத்திரை வேண்டி இருந்தது.

ஒவ்வொரு இடத்திலும் அவன் யாத்திரீகனாய், யாரும் அறியாதவனாய் இருந்ததில் பயணத்தில் பக்குவம் சேர்ந்தது.

“இராஜாதித்தா! உருவாய் உன்னை இழந்தேன். உள்ளுள் உன்னை இழந்திலேன்.”

பலகாத தூரம் பயணித்து நண்பனின் சத்கதிக்காகக் கங்கையில் மூழ்கி எழுந்தவனுக்குப் புதுத்தெளிவு பிறந்திருந்தது.

சோழம்! சோழம் எப்படி இருக்கிறதோ? தனயனை இழந்த தந்தையின் நிலை என்னவோ? இல்லை.. இல்லை.. கங்கையில் மூழ்கி எழுந்தும் நம் கர்மம் விடவில்லை போலவே.

மனமே! கட்டுறு! மறந்தும் போர்க்களம் வேண்டா!

வேகமாய் வெகு வேகமாய் நடந்தான் அவன். பல மாதங்கள் பயணித்து அவன் நின்ற இடம் திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோவில்.

இப்படித் தானே திருநாவலூரில் ஜம்புகேசுவரர் கோவிலை அத்தனை ஆவலாகக் கற்றளியாக்கினான் என் நண்பன். அந்த பலனுக்காகவாவது அவனுக்கு உயிரமுதம் தந்தாரா இறைவன்?

விதி முடிந்தது என்று விலக்க முடிய வில்லை குமரனால். அலைபாய்ந்த அவன் மனத்தை சமன்படுத்த அங்கு வந்து சேர்ந்தார் நிரஞ்சன குரு, திருவொற்றியூர் சிவாகம மடத்து மடாதிபதி.

“குழந்தாய்! வாடும் பயிராய் வதனம் பொலிவிழந்து போனதேன்? கண்ணுக்கு வெகு காலம் பயணித்து வந்தவனைப் போல் தென்படுகிறாய். வாழ்க்கை வஞ்சித்து விட்டதோ? வருத்தம் வேண்டாம். வருவாய் இறைப் பணிக்கு. வல்லவன் அவனிருக்க வருத்தம் ஏனோ உனக்கு? “

வெள்ளையங்குமரன் அவரைக் கண்டதும் நெடுஞ்சாங்கிடையாய் நிலத்தில் வீழ்ந்து எழுந்தான்.

“ஒன்றா இரண்டா பல உயிர்களைக் கொன்ற எனக்கு காலம் என் ஒரே உயிரைப் பறித்துக் கொண்டு வஞ்சம் செய்து விட்டது அருளாளரே!”

“மீண்டும் அவ்வுயிர்களை உருவாக்கி விடு குழந்தாய்! படைப்பவன் கடவுள் தான் என்றாலும் பாதையில் எத்தனை இடர்பாடு? அத்தனை இடர்பாட்டையும் நீக்கி ஒருவனைப் பயணிக்க வைத்து விட்டால் அஃதே ஒரு உயிரை உருவாக்குதல் ஆகும். தாகத்துக்கு நீர் கொடு. தவிப்பனுக்கு கை கொடு. வறியவனுக்குக் கல்வி கொடு. வாலிபனுக்கு வேலை கொடு. கொடுக்கின்ற கை உனதானால் கொள்வதெல்லாம் புண்ணியமே.”

“தங்கள் சித்தத்தைச் சிரமேற்கொண்டு ஏற்கிறேன் அருளாளரே!” குமரன் குனிந்து வணங்கினான்.

“பூர்வாசிரமத்தில் உன் பெயர் பலம் பதவி  இவைகளைக் கூறலாமென்றால் கூறுவாய் குழந்தாய்!”

“மலை நாட்டுத் தலைவன் இராஜசேனனின் மகன் வெள்ளையங்குமரனெனும் நான் ஆயிரம் யானைகளின் பலம் பெற்றிருந்தேன் ஒற்றை நண்பனின் தோள்பலத்தால். அவனை இழந்து திக்கற்றவனானேன். தீரா என் பலமும் இழந்தேன்.”

“உன் நண்பன் யாரெனச் சொல்வாய்! உன்னை நான் அறிந்து கொள்கிறேன்!” நிரஞ்சன குரு மென்மையாய் முறுவலித்தார். தூய வெண்மையாடையில் தேஜஸ்வியாய் மிளிர்ந்த அவர் கண் முன் எவரும் பொய் பேச இயலாது.

வெள்ளையங்குமரன் விடையிறுத்தான்.

“என் உயிர் நண்பன் சோழ இளவரசர் இராஜாதித்தர். தக்கோலம் போரில் அவர் மீதான என் பக்கபலத்தை மடை மாற்றிடச் செய்தனர் எதிரிகள். அவர்களின் வஞ்சக வலையில் சிக்குண்டு யானை மேல் துஞ்சிய தேவராய் மாண்டார். அவருடைய நண்பனும், சேனைத் தளபதியுமாகிய என்னால் அதற்கு மேல் அவ்வாழ்க்கையைத் தொடர எண்ணமில்லை. வடக்கே கங்கை வரை பயணித்து மனதால் துறவறமேற்று திரும்பி இருக்கிறேன்.”

“துறந்து விடு மகனே! அனைத்து வருத்தங்களையும், வேதனைகளையும் துறந்து விடு. மாண்டவர் வாரார். மீண்டவன் நீ உனக்கான வாழ்வைச் செப்பனிட்டுக் கொள். இதோ உன் வாசல்! இம்மடத்தில் சேர்ந்து இதன் தலைமைப் பொறுப்பை ஏற்பாயாக! திருவொற்றியூர் ஆதிசிவனும், இங்கு நானும் உன் சேவைகளுக்காய்க் காத்துக் கொண்டிருக்கிறோம்.”

நிரஞ்சனகுருவின் அழுத்தமான சொற்கள் அவனுள் புகுந்து மாயம் செய்தன.




“திருவொற்றியூர் ஆலயம் பழம் பெருமை கொண்டது குழந்தாய்! இவர் ஆதிபுரீஸ்வரர். இவரைத்  தியாகராஜர், திருவொற்றீஸ்வரர் என்றும் அழைப்பார்கள். இங்கு காளியின் அம்சமான வட்டப்பாறை அம்மன் அருள் புரிகிறாள். அவள் யார் தெரியுமா? கம்பர் இராமாயணம் எழுதும் போது அணையாத் தீபம் ஏந்தியவள். உனக்கும் அருள் செய்வாள். காளி என்றால் கலைகளை வளர்ப்பவள் தானே. உனக்குள் ஒளிந்து கிடக்கும் கலைகளை ஒளிரச் செய்வாள். வா! குழந்தாய்! இந்த வெண்ணிற ஆடையை ஏற்றுக் கொள். உனக்காக இம்மடத்தின் தலைமைபீடம் காத்திருக்கிறது.”

நிரஞ்சன குருவிடம் தீட்சை பெற வெள்ளையங்குமரன் வெண்ணிற ஆடை அணிந்து ஆசனத்தில் அமர்ந்தான்.

“சிவம்! சிவம்! சிவோகம்!” என்ற சிவாகம மடத்து நிரஞ்சன குருவின் பொற்கரங்கள் வெள்ளையங்குமரன் சிரசின் மேல் அமுதமாய் அபிஷேகக் குடத்து நீரை வர்ஷித்தது.

“சுபம் உண்டாகட்டும் குழந்தாய்! இனி நீ இத்துறவு நிலையில் சதுரானன பண்டிதர் என அழைக்கப் படுவாய். உன் கல்வியும் கேள்விஞானமும் இங்குள்ள குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காய்ப் பயன்படட்டும். உன் அளப்பரிய சேவைகள் இனி அந்த ஆதிபுரீசுவருக்காய் இருக்கட்டும். “

மடத்துச் சீடர்கள் வெண்ணிறக் குழந்தைகள் மகிழ்வுடன் கைதட்டி ஆர்ப்பரித்தனர்.

“சதுரானன பண்டிதர் வாழ்க! வாழ்க!”

சேனைத் தளபதியாய் தன் அரசனைக் காக்காதன் மூலம் இழந்த புகழைத் துறவியாய் மறுபிறப்பெடுத்துப் பெற்றிடத் திருக்கோவில் பணிக்காய் ஆதிபுரீசுவரர் நோக்கி  முதல் அடி வைத்தார்  சதுரானன பண்டிதர்.

தூங்கானை மாடக் கருவறையில் இறைவன் ஆதிபுரீசுவரர் வீற்றிருந்தார். தூங்கானை மாடம் என்றால் யானையின் பிருஷ்டப் பாகத்தைப் போன்று அரைவட்ட வடிவில் அமைந்த கருவறையும் அதனைத் தொடர்ந்து நீள்சதுர வடிவில் அமைந்த அர்த்த மண்டபமும் ஆகும்.  தூணில் கண்ட கொற்றவை ஜேஷ்டா தேவியை நினைவு படுத்தினாள். ஓட்டம் ஆரம்பித்தது அவ்வேள்வியின் பலனால் தானே. சதுரானன பண்டிதர் தனக்குள் கூறிக் கொண்டார்.

துறவுக் கோலத்தில் சதுரானன பண்டிதர் இளம் சிறார்களுக்கானத் தன் கல்விச் சேவையைத் தொடர்ந்தார். அறம் பல புரிந்து ஊரெங்கும் புகழ் பெற்றார்.

அன்றைய தினம் சிவகாமம் ஓதி பூசையை முடித்து வெளிவரும் போது அவரைத் தேடி வந்து அடி பணிந்தாள் ஒருத்தி. அவள் தக்கோலி இளமயிலாள்.

“இனி இச்சபையே என் பொற்சபையாயிருக்க அருள் புரிய வேண்டும் சுவாமி!”

சோழ நாட்டுப் படைத்களபதி வெள்ளையங்குமரன் தன் நண்பன் இராஜாதித்தனுக்காய் வீரம் களைந்து துறவு மேற்கொண்டு சதுரானன பண்டிதர் ஆகி விட்டதை அறிந்து தேடி வந்திருந்தாள்.

“நம் பதியிலாருடன் இணைந்து பணியாற்றுக!” சதுரானன பண்டிதர் அருளாசி வழங்கினார்.

பதியிலார் என்பார் ஆடல் மகளிர். சொக்கம், சந்திக்குணிப்பம் என்ற நடன வகைகளை ஆடுபவர். திருப்பதிகத்துக்கு நடனமாடுபவர்.  இளமயிலாள் அகம் மகிழ்ந்தாள்.

இளமயிலாளைக் கண்டபின்பே சதுரானனப் பண்டிதருக்கு திருநாவலூர் சென்றுவர யோசனை உதயமாயிற்று.

ஒருமுறை.. ஒரே ஒருமுறை.. திருநாவலூர் ஜம்புகேசுவரரைத் தரிசித்து தன் நண்பன் கட்டிய கற்றளியை ஸ்பரிசித்து வர வேண்டும் என்ற ஆவல் திருவொற்றியூர் சமுத்திரப் பேரலையாய் அவருள் புகுந்து இம்சித்தது. திருநாவலூர் தன் ஆருயிர்  நண்பன் இராஜாதித்தனால் இராசாதித்த ஈசுவரம் என அழைக்கப்படுவதை அவர் அறிந்தே இருந்தார்.

தொடங்கியது பயணம் இராசாதித்தீசுவரத்துக்கு.

திருமுனைப்பாடி பெண்ணையாற்றங்கரையில் இராஜாதித்தனின் நினைவுகளை நெஞ்சோடு நிறுத்தி அலைபாய விட்டு திருநாவலூர் ஜம்புகேசுவரர் கோவிலுக்குள் நுழைந்தார் சதுரானனப் பண்டிதர்.

கோவிலில் குழுமிய கூட்டம் அந்த இளம் துறவியை அதிசியமாய்ப் பார்த்தது.

“பண்டிதராமே?”

“படைத்தலைவராய் இருந்து பண்டிதர் ஆனாராமே!”

“பாவம்! உறவாய் மிளிர்ந்த உற்ற நண்பன் உயிரிழந்ததும் உடன் துறவறம் பூண்டாராம்!”

“திருவொற்றியூர் சதுரானனர் இவர் தானா?”

“ஆஹா! என்ன தேஜஸ்!”




பலவாறாய் குரல்கள் எழும்பியது அவர் காதில் சற்றும் விழவில்லை. அவர் மன ஓட்டமெல்லாம் இராஜாதித்தன் இங்கிருக்கிறானா என்ற தேடலில் ஆழ்ந்திருந்தது.

இதோ இங்கு தான் அமர்ந்து ஓய்வெடுப்பான்.

இதோ அக்கண்மங்கையும், வல்லானும் மோர்க்கலயத்தைத் தூக்க மாட்டாமல் தூக்கி வருகின்றனர்.

இதோ சக்கரவானன் தன் வாளை கூர் தீட்டுகிறான்.

இதோ இங்கு தான் தலைக்கோலி இளமயிலாள் ஆடல்பயிற்சி செய்வாள். வீரர்களுக்கான நடன சபையும் இதுவே.

இதோ இங்கு தான் இராஜாதித்தன் ஓய்வாக அமர்ந்திருக்கும் பொழுது வைதும்பன் வந்து உளவறிந்தது.

அதன் பின்னர் தானே அந்த தக்கோல அலங்கோலம்.

“இரா..ஜா..தித்..தா!” அபரிமிதமான வருத்தத்துடன் கற்கோவிலின் சுவரைத் தடவிக் கொடுத்த சதுரானன பண்டிதரின் செவிகள் கூர்மையுற்றன.

“வா என் ஆருயிர் தோழா!” என்றது அக்கற்றளி.

கண்ணில் நீர் மல்க அதனைத் தடவிக் கொடுத்தார். நண்பனின் ஸ்பரிசம் பட்டு தொட்ட இடம் எல்லாம் நீர் பூத்தது.

“நீ இருக்கிறாய் இராஜாதித்தா! நீ கட்டிய வீர நாராயண ஏரியும், இக்கோவிலும் உன் புகழை என்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கும்!”

நெஞ்சம் நிறைந்த ஜீவனை கற்றளியாய் சுவரில் நிறைத்த ஜம்புகேசுவரரைச் சாஷ்டாங்கமாக விழுந்து சேவித்தார் சதுரானன பண்டிதர்.

நட்பு என்பது நிலையாகத் தங்கியிருக்கும் இடம் எவ்வித வேறுபாடும் இல்லாது இணைந்திருப்பதே இல்லாமல்  வேறு யாது? வேறில்லை தானே!

சோழ இளவல் இராஜாதித்தனும் மலை நாட்டு வெள்ளையங்குமரனும் என்றும் நட்பில் இணைந்தவரே!

முற்றும்.




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!