Serial Stories நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின்

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின்-6

6

யானைமேல் துஞ்சிய தேவர்

திருமுனைப்பாடி நாட்டில் கெடில நதியும், பெண்ணையாறும் ஓடும் திருநாவலூரில் இரு கரைகளுக்கிடையே நிற்கும் ஜம்புநாதேசுவரர் கோவில் கருவறையின் முன்மண்டபம் இராஜாதித்தனின் படை பலத்தால் கற்றளியாக்கப் பட்டுக் கொண்டிருந்தது.

நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாய் வளர்ந்த அக்கோவிலைப் பார்க்கும் பொழுது இராஜாதித்தனுக்கு உற்சாகம் பீறிட்டது.

நாவல் மரங்களூடே அமைந்திருந்த அக்கோவிலின் கருவரையில் ஜம்புகேசுவரரும் அம்பிகை நாவலாம்பிகையும் வீற்றிருக்கக் கருவறையின் முன்மண்டபத்தைக் கற்றளியாக்கல் இராஜாதித்தன் மனதுக்கு பெரும் அமைதியைத் தந்தது. அவ்வேலையில் ஈடுபட்டு இருப்பவர்கள் அதிகம் பேர் அமஞ்சிகளே. அதாவது கூலி இல்லாது தொண்டுக்காக வேலை செய்பவர்கள்.

குடியானவன் போல் எளிய உடையில் அக்கோவிலின் முன்மண்டபத்தில் சாய்ந்திருந்தான் அவன்.  எங்கு எப்போது எத்திசையில் போர் மூளூம் என அவன் மனம் யோசனையில் தடதடத்துக் கொண்டிருந்தது.

சுயம்பிரகாச வல்லானின் மனைவியாகப் போகும் அக்கண்மங்கை தூக்க மாட்டாப் பாரத்துடன் தலைமேல் மோர்க்கலயத்தைத் தூக்கி வந்தாள். இளவரசர் தனித்து யோசனையுடன் அமர்ந்திருப்பதைக் கண்டதும் அவர் ஆயாசம் போக்க பெரும் வாத்சல்யத்துடன் குவளை நிறைய மோர் நிரப்பிக் கொடுத்தாள்.

“மிகவும் வெப்பமுற்ற என் மூளைக்கு மோரூற்றிச் சமன் செய்தாய் மங்கையே.. இனி நீ எனக்கு தங்கையே!”

இராஜாதித்தனின் பரிவான பேச்சில் அக்கண்மங்கை மனம் மகிழ்ந்தாள். பதில் பேசினாளில்லை.

“அட.. என் மங்கை மோர் தருகிறாளா? மங்கை கை பட்டால் பாகலும் ருசிமிகும் இளவரசே!” எனக் கூறியபடி சாரத்தில் இருந்து இறங்கி வந்த வல்லான் கூறினான்.

“வல்லான்! இவளுக்கு?”

“ஆம் இளவரசே! செவிட்டூமை!”

“இத்தனை அழகைக் கொட்டிக் கொடுத்த ஆண்டவன் ஏன் இப்படி வஞ்சம் செய்து விட்டார்?”

“வஞ்சம் செய்ததற்குச் சமன் செய்யவே என்னை மணாளனாய் ஆக்கி விட்டார் இளவரசே!”

கண்கள் கசிந்தன இராஜாதித்தனுக்கு.

“சக்கரவானனுக்கு மட்டுமல்ல நீ மைத்துனர். எனக்கும் நீ மைத்துனனே! நான் அக்கண்மங்கையைத் தங்கையாக ஏற்றுக் கொண்டேன்.”

அப்போது அங்கு வந்த தலைக்கோலி இளமயிலாள் “சத்திரத்தில் வீரர்களுக்காக நாங்கள் நடனமாடும் பொழுது அங்கு  தங்களைத் தேடி வந்த வைதும்பராயரை இங்கு அழைத்து வந்திருக்கிறேன் இளவரசே!” இராஜாதித்தனை வணங்கி மெதுவாய் முணுமுணுத்தாள்.




“இங்கேயா? ஏன் வந்திருக்கிறான்?”

“தாங்கள் தங்கி இருப்பதறிந்து!”

“குமரன் எங்கே?”

“பெண்ணையாற்றங்கரைப் பக்கம் போர் நிலவரம் அறியச் சென்றிருக்கிறார்.”

“ம்ம்! சக்கரவானா! வல்லபா! இருவரும் இங்குள்ள வீரர்களுடன் சற்றே மறைந்து நில்லுங்கள். ஆபத்தென்றால் அரங்கில் குதிக்கத் தயாராய் நில்லுங்கள். உள்சுற்றில் வீரர்கள் குறுவாளொடு கோவில்பணி மேற்கொள்ளட்டும். இளமயில்! நீ போய் வைதும்பராயரை அழைத்து வா! அக்கண்மங்கை! உன் மோர்க்கலயத்துக்கு ஒரு விருந்து வருகிறது. தயாராய் இரு.” என அவரவர்க்கு உரைத்தவன் தன் ராஜ அங்கியையும், தலைப்பாகையும் அணிந்து கொண்டு இடுப்பில் வாளைச் செருகிக் கம்பீரமாய் நின்றான்.

“வாருங்கள் வைதும்பரே! ஓரே நாட்டில் இருந்தும் நாம் சந்திக்க..”

“சந்திக்க வேளை வர வேண்டும் அல்லவா இளவரசே! ஏதோ எங்கள் ஜம்புகேசுவரர் தன்னைக் கற்றளியாக்க எண்ணம் கொண்டு தங்களை வரவழைத்தார் போலிருக்கிறது. இல்லையென்றால் போர் போர் என்று போர்க்களமே கதியென உழன்று கொண்டிருப்பீர்கள்.”

“என்ன செய்ய வைதும்பரே! வீரனாய்ப் பிறந்து விட்டேன்”

வைதும்பன் உற்று நோக்கினான். ஆக நான் வீரனல்ல என்கிறானா இந்தப் பொடியன்?

வைதும்பன் வெகுண்டான். அதைக் காட்டிக் கொள்ளாது முக மலர்ச்சியுடன் “சக்கரவர்த்தியார் நலம்தானே!” என்றான்.

“எழிலுடன் இருக்கிறார். ஆனால் தாங்கள் தாம் இன்னும் வரிப்பணம் கட்டவில்லை சக்கரவர்த்திக்கு.”

“நான் என்றோ தனி நாடு பெற்று விட்டேனே இளவரசே! இனி கொடுப்பதற்கில்லை!”

இறுமாப்புடன் உரைத்து விட்டுச் செல்லும் வைதும்பனின் பின்னால் இராட்டிரகூடர் இருக்கிறானென்று தெளிவறப் புரிந்த இராஜாதித்தன் போர் மேகம் சூழும் நாள் வெகு தூரத்தில் இல்லையென அறிந்து கொண்டான்.

பெண்ணையாற்றங்கரையில் பூரணப் பொன்னிலவு ஒளிர்ந்து கொண்டிருக்க வெள்ளையங்குமரனும் இராஜாதித்தனும் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தனர். எதிரில் அப்பொழுது தான் தன் படைகளுடன் வந்து சேர்ந்த அரிஞ்சய சோழன் அமர்ந்திருந்தான்.

“ஜம்புகேசுவரர் கோவில் திருப்பணி ஓரளவு முடிந்து விட்டதென்றால் இனி இவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன். அரசர் உங்களை உடனே நாடு திரும்ப உத்தரவிட்டார் அண்ணா.”

“எல்லையைக் காக்க எம்மை அனுப்பி விட்டு இப்போது போர் மூளூம் அபாயத்தில் அப்படியே விட்டு விட்டு நாடு திரும்பு என்றால் என்ன பொருள் அரிஞ்சயா? போரிடும் வீரமும், விவேகமும் உன் ஒருவனுக்கு மட்டுமே உரியது என எண்ணி விட்டாரா நம் தந்தை?”

“அப்படி இல்லை அண்ணா! நமக்கு ஆதரவாக வரக் கூடிய பழுவேட்டரையர் தவிர மழவரையர், சம்புவரையர், மிலாடுரையர், கொடும்பாளூரார், நரசிங்க முனையர் யாவரும் ஒத்துழைப்பு தர மறுக்கிறார்கள்.”

“காரணம்?”

‘மழவரையர் மகளைத் தங்களுக்கும், கொடும்பாளூர் இளவரசனை நம் அனுபமாவுக்குமாய் மணவினை எதிர்பார்க்கிறார்கள். அது நடந்தால்  ஒருவேளை நம் பலம் கூடலாம். இல்லையெனில் மாறாக எதிரியின் பலம் கூடலாம். அதனால் தான் நம் தந்தை இப்போரைக் கைவிடக் கூறுகிறார்.”

“மீறினால்?”

“மீறினால் தங்களைக் கைது செய்யவும் உத்தரவிட்டிருக்கிறார்!”

வெள்ளையங்குமரன் இராஜாதித்தனின் நோக்கம் நிறைவேறுமா என்ற வருத்தத்தில் ஆழ்ந்த பொழுது இராட்டிரகூடன் பெண்ணையாற்றங்கரைக்கு அப்பால் தக்கோலம் என்ற ஊரில் போருக்கு அழைப்பதாக தகவல் வந்தது.

ஒற்றறிய வந்த வைதும்பன் போய்ச் சொல்லி இருந்தான். சோழர்களுக்கு சிற்றரசர்களின் ஆதரவு குறைந்திருப்பதை. சக்கரவர்த்தியும் பழையாறையில். இராஜாதித்தனும், அரிஞ்சயனும் மட்டுமே திருநாவலூரில். இதில் இராஜாதித்தனை வென்றாலே சோழம் நம் வசம் தான் என உருவேற்றி இருந்தான்.

சட்டென படை திரட்டி வந்தான் இராட்டிரக்கூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன் என்ற கன்னரத்தேவன்.

“இளவரசே! போருக்கான அறைக்கூவல் விடுத்துவிட்டான் இராட்டிரக்கூடன். அவனுக்கு பக்கபலமாய் வைதும்பரும், வாணர்களும் முக்கியமாய் புதிதாய்ப் பொறுப்பேற்ற கங்க மன்னன் இரண்டாம் பூதுகனும் படை திரட்டி வருகின்றனராம்.” ஒற்றறிந்த வெள்ளையங்குமரன் அவசரச் செய்தி வாசித்தான்.

“அண்ணா! கவலை வேண்டாம். நம் தந்தையும் சிற்றரசர்களிடம் மணவினைக்கு ஒப்புக்கொண்டு அவர்களது ஆதரவையும் பெற்று படை திரட்டி அனுப்புவார். போர் என்று வந்து விட்டால் தேசம் காக்க வீட்டையும் கொடுப்பேன் என்று உரைத்திருந்தார் என்னிடம்.  அனேகமாக இந்தச் செய்தி அவர்களுக்கும் சென்று சேர்ந்திருக்கும். பின்னோடு வந்து விடுவார்கள். இப்போது தாங்கள் தான் யார் எப்படைக்குத் தலைமை எனக் கூற வேண்டும்!” அரிஞ்சயன் பணிவோடு கூறினான்.

தந்தையின் கட்டளையை மீறினால் சிறை பிடிப்பதாகக் கூறினவனும் அவனே. தனயனின் துயருக்குச் சட்டென்று தோள் தருபவனும் அவனே.

“நம் தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை, துணைப்படை மற்றும் வில்லாளி, வாள் வீச்சர், வேளைக்காரப் படை, தாக்குதல் அணி, போர்க்காவல்படை, மருத்துவ அணி, உணவு அணி அனைவருமே தயார் நிலையில் உள்ளனர். இருந்தும்.. நம் முதல் பலியாய்..”

பதட்டத்துடன் ஓடிவந்த சக்கரவானன் அனைத்தையும் அறிந்து வந்து சேதி சொன்னான்.

“என்ன? யார்? பலியா? அதற்குள்ளாகவா?”

இராஜாதித்தன் வெகுண்டெழுந்தான்.

“ஆம் அரசே! போருக்கான எச்சரிக்கை விடுக்க வந்த இராட்டிரகூட ஒற்றன் அம்பெய்து நம் அக்கண்மங்கையை.. பாவம்.. செவிட்டூமை. உதவிக்குக் கூப்பிடக் குரலில்லை”

இராஜாதித்தன் அதிர்ச்சியில் உறைந்தான்.




“போயும் போயும் ஒரு பெண்ணை அதுவும் வாய் பேச இயலாத ஒருத்தியை, நான் தங்கையாக ஏற்றுக் கொண்டவளை.. ஐயகோ! அரிஞ்சயா! குமரா! கிளம்பலாம். இராட்டிர கூடமே நமதிலக்கு. இல்லையேல் வீரம் எதற்கு? வெற்றி நமதே! வீர சோழம் நமதே!” கர்ஜித்தான் இராஜாதித்தன்.

தக்கோலம் போர்க்கோலம் பூண்டது.

சோழப்படைகளுக்கு உதவியாய் பழுவேட்டரையரும், மழவரையர், கொடும்பாளூர் படைகளும் வந்து களமிறங்கின. அந்தப் பக்கம் வாணர்களும், வைதும்பரும், கங்க மன்னன் பூதுகனும், இராட்டிரகூடனும் ஒன்று சேர்ந்திருந்தனர்.

குதிரைகளும் யானைகளும் மோதிக் கொண்டன. வாள்களும் கிடுகுகளும் வன்ம மொழி பேசின. எங்கும்  வில்லில் அம்புகள் சீறிப்பாய்ந்தன. வேல்கள் விரைந்து உயிர்பலி கேட்டன.  குந்தம் என்னும் போர்க்கருவி  கூட்டத்துள் புகுந்து குந்தகம் விளைவித்தது.

சோழர்படை வகுத்த சர்ப்ப வியூகத்திலும்  கருட வியூகத்திலும் இராட்டிர கூடர்கள் திணறினர்.

சர்ப்பம் எவ்வாறு தன்னைத் தாக்கும் எதிரியை தன் நஞ்சினால் கொள்ளுமோ அவ்வாறு எதிரியை ஒரு வட்டத்துக்குள் சிக்க வைத்து தாக்குவது சர்ப்ப வியூகம்.

 கருடன் தன் மூக்கினால் எதிரியை குத்தி கிழிப்பது போல  எதிரியை ஒரு வட்டத்துக்குள் சிறைப்படுத்தி குத்திக் கிழிப்பது கருட வியூகம்.

இன்னும் மகத்தானது சக்கர வியூகம். வட்டத்துக்குள் சுழலும் மரண இயந்திரம். வெவ்வேறு அளவுகளிலான ஏழு வட்டச் சக்கரங்களினால் அமைக்கப் படும் வியூகம் இது. அதில்  மாட்டியோரின் மரணஒலம் நெஞ்சைப் பிளந்தது. சர்ப்ப அம்புக்கு கருட அம்பு  பதில் சொன்னது. நீருக்கு நெருப்பு பதில் சொன்னது.  வில்லுக்கு வில் அம்புக்கு அம்பு என எங்கும் ஓட்டமும் ஓலமுமாய் தக்கோலமே அதிர்ந்து நின்றது. அன்றைய போரின் இறுதியில் இராட்டிர கூடன் பின் வாங்கி விடலாமா என யோசித்தான். அந்தளவு இராஜாதித்தன் கை ஓங்கி இருந்தது.

சீறிப் பாயும் வேங்கையின் தன்மையை ஒத்திருந்த இராஜாதித்தன் குதிரை மீது ஏறிப் போரிட்டான். தன் எதிரில் கண்ட எதிரிகளையெல்லாம் நொடி கூட தாமதிக்காது துவம்சம் செய்தான். மூர்க்கத்தில் அவன் முகம் குணதிசைப் பரிதியாய் வெற்றித் தணலில் ஜொலித்துக் கொண்டிருந்தது.

 அரிஞ்சயன் ஒருதிசையில் தன் வெற்றியை நிலை நிறுத்திப் போனானென்றால் வெள்ளையங்குமரன் வேறொரு திசை. உற்ற நண்பனுக்கு இணையாக உதிக்கின்ற கதிரோனாய் வெம்மை மிகு கோபத்தில் எதிரிகளைக் கொன்று படைகளை விரட்டினான். வாளுக்கு வாள் பேசியது. வில்லுக்கு வில் பேசியது.

சோர்வுறாச் சுழலாய் சுந்தர வீரனாய் வாளைச் சுழற்றி அடித்த இராஜாதித்தனின் கையால் வெட்டுண்டன பல தலைகள்.

எங்கும் மனிதத் தலைகள் உருண்டோடிக் கிடக்க விடிந்தால் சோழருக்கு விடிவுகாலம் என்ற நிலையில் இராஜாதித்தன் தன் யானை மீதேறி வர கங்க மன்னன் பூதுகன் தன் படைத் தலைவனான மன்லரதாவை அழைத்தான்.

“உடனே இராஜாதித்தனை அவன் படையின் பார்வையில் படாது பிரித்து விடு!”

“ஏன் பூதுகா? எதுவும் திட்டம் வைத்திருக்கிறாயா?”

“ஆம்! கன்னரத் தேவரே! வலுவால் வெற்றி கொள்ள இயலாததை வஞ்சகத்தால் தான் வெற்றி கொள்ள வேண்டும். இராஜாதித்தன் என்ற இமயம் சாய்ந்தால் சோழம் வெறும் சோழி தான். பார்த்துக் கொண்டே இருங்கள். இவன் தலை சாய்ந்த பின் சோழத்தை நாம் சோழியாக உருட்டலாம்! உருட்டி விளையாட எதற்கும் பகடைப் பாய் தயாராய் எடுத்து வைக்கக் கூறுங்கள்” என்ற இரண்டாம் பூதுகன் காத்திருக்கும் மன்லரதாவிடம் காதோடு செய்தி சொல்லி உசுப்பி விட்டான்.

உடன் மன்லரதா சமயோசிதமாகக் கூவினான்.

“ஆ! அரிஞ்சயர் மாண்டார்!”

“என்ன…? அரிஞ்சயன் மாண்டானா? என் தம்பியா? என் இளவலா? போர் வேண்டாம் என்று தடுத்த தந்தையை மீறி எனக்காக வந்த என் இளவலை இழந்தேனா?”

வழி நெடுக அவனுடலைத் தேடி வந்த இராஜாதித்தன் கண்ணுக்கு நெஞ்சில் வேல்பாய்ந்து சடலங்களாய்த் தென்பட்டனர் சக்கரமும், சுயம் பிரகாச வல்லானும்.

“குமரன்.. குமரா நீ எங்கே? உன்னையும் தவற விட்டேனோ நான்?

என் இளவலோடு அத்தனை அன்பர்களையும் இழந்தேனா நான்?”

 தன்னிரக்கம் சூழ்ந்த அவ்வேளையில் தன் அம்பாரியின் பின் பதுங்கி மறைந்திருந்த கங்க மன்னன் இரண்டாம் பூதுகனைக் கவனிக்க மறந்தான் இராஜாதித்தன். வஞ்சகன் பூதுகன் எய்த விஷ அம்பு ஆத்திப்பூ அணிந்த இராஜாதித்தன் உயிரைக் குடித்தது. ஆத்திப்பூ அணிந்தவன் அஸ்தமனப் பூவானான்.

“அரிஞ்சயன் மாண்டான் என்ற பொய்யுரைத்த உனக்கு அதகூர், கடியூர் கிராமங்களைத் தருகிறேன்!” என்றான் மன்லரதாவிடம் இரண்டாம் பூதுகன்.

“சோழரை தந்திரமாய் வெற்றி கொண்ட இரண்டாம் பூதுகனான உனக்கு பானாவாசி, மேலவோளா, புரிகிரி, கிசுகாடு, பாகிகாடு இக்கிராமங்களைப் பரிசாகத் தருகிறேன்!” என்றான் கன்னரத் தேவன் உற்சாக மிகுதியில்.

தன் உற்ற நண்பன் இராஜாதித்தன் யானை மேல் துஞ்சிய தேவராய் ஆனார் என  அறியும் போது போர்க்களத்தில் குருதிக் குளத்தில் குற்றுயிராய்க் கிடக்கும் வெள்ளையங்குமரன் என்னவாவான்?

(தொடரும்)




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!