Serial Stories தங்க தாமரை மலரே

தங்க தாமரை மலரே – 27

27

 “தேவையில்லாததிருட்டு பட்டம் சுமந்து அழக்கூடாதென்ற வைராக்கியத்துடன் பற்களை கடித்து நின்றாயே கமலி..? இங்கே வாடா …உன் மன துக்கத்தை ஆற்றிக்கொள் …”  ஆதுரமாய் கை நீட்டியவனுக்குள் புகுந்து கொள்ள தயங்கவில்லை கமலினி.

இவன் சமாதானத்திற்காக நான் யோசிக்க,எனக்காக இவன் யோசிக்கிறானே …இதழ் சிரிப்போடு கண் நீரும் சேர்ந்து வந்தது அவளுக்கு. அவன் மார்பில் முகத்தை அழுத்திக் கொண்ட போது, இவ்வளவு நேரமாக தலையை அழுத்திக் கொண்டிருந்த பாரம் மறைந்து போனது. விஸ்வேஸ்வரனின் கைகள் அவளை அழுத்தி சுற்றின. அவன் உடலுக்குள் புதைத்துக் கொள்பவை  போல் இறுக்கின.

” எதற்கு இவ்வளவு கோபம்? கொஞ்சம் அமைதிபடுங்கள் ” சமாதானம் போல் அவன் நெஞ்சை நீவி விட்டாள்.

” அவன் …உன்னை …திருடியென்று …என்ன தைரியம் அவனுக்கு? ”  ஆத்திரத்தில் அவன் உடல் சூடேறுவதை கமலினியால் உணர முடிந்தது.

” ஷ் …விடுங்க விஸ்வா. அவன் திருடி விட்டு பழியை போட உடன் வேலை செய்யும் ஆளை தேடினான். நான் அகப்பட்டுக் கொண்டேன் .அவ்வளவுதான் .”

” நீ இங்கே வேலை செய்பவளா …? அப்படி அவன் நினைப்பானா ?  ராஸ்க்க்க்கல் …தப்பு அவன் மேல் இல்லை கமலி, என் மேல்தான். உன்னை சரியாக எல்லோரிடமும் அறிமுகப்படுத்தாமல் போனேன் பார் .அந்த விளைவுதான் இது.  நாளையே  நம் ஊழியர்கள் எல்லோரையும் அழைத்து ….”

விஸ்வேஸ்வரன் பேசிக் கொண்டே போக ,கமலினி மெல்ல அவன் அணைப்பிலிருந்து விடுபட முயன்றாள். முதலில் விட மறுத்தவன் பின் அவளது தொடர் முயற்சியினால்  மெல்ல விடுவித்தான்.

” என்ன ஆயிற்று கமலி? “

” ஏன் ஏதேதோ பேசுகிறீர்கள்…?  தப்பாக பேசாதீர்கள் “

” என்ன தப்பாக பேசுகிறேன்? “

” நான் இங்கே வேலை பார்க்கும் ஊழியை மட்டும் தான் ” அழுத்தமாக உறுதியாக ஒலித்தது கமலினியின் குரல்.

” ஓஹோ” ஆராய்ச்சி பார்வை ஒன்றுடன் தாடை தடவினான் விஸ்வேஸ்வரன்.  ” நீ மிகவும் ப்ரீ டைப்போ கமலினி?  மேல் நாட்டு பாணியில் உன்னை உன் பெற்றோர் வளர்த்து இருக்கிறார்களோ? “

” புரியவில்லை. ஏன் கேட்கிறீர்கள் ? “.

“உனக்கு அவ்வளவாக பழக்கமற்ற மற்றவர்களின் துன்பத்தை நீக்க கட்டியணைத்து ஆறுதல் சொல்கிறாயே அதனால்தான் கேட்டேன். “

 அவன் கேள்வியின் போக்கு புரிபட கமலினி யின் முகம் சிவந்தது .” கண்ட படி பேசாதீர்கள் “.

” உள்ளதை தானேம்மா பேசினேன். இங்கே நடக்காத எதையும் பேசவில்லையே .”




” அ…இ…இது ஜஸ்ட் ஒரு பிரண்ட்ஷிப். அவ்வளவுதான்…. “

” அது… அதையே தான் நானும் கேட்டேன். உன் வளர்ப்பு மேல்நாட்டு பாணியோ . ஆண் பெண் வித்தியாசமின்றி நண்பர்களை கட்டியணைத்து….”  அவனது ரசித்துச் சொல்லப்பட்ட ” கட்டியணைத்து ”  கமலினியினுள்  ரசவாதங்களை தோற்றுவிக்க …

” போதும். நிறுத்துங்கள்…”  கோபபோர்வை அணிந்தாள் .

விஸ்வேஸ்வரன் தோள்களை குலுக்கினான். “உன் வளர்ப்பு எப்படியோ… என் பழக்கம், என் மனதுக்கு பிடித்தவர்களை தவிர மற்றவர்களை சும்மாவேனும் தீண்டுவதற்கு என்னால் முடியாது. என் அம்மா எனக்கு அப்படித்தான் கற்றுக் கொடுத்து இருக்கிறார்கள்.” அர்த்தம் பொதிந்து பேசினான்.

இவன் லட்சணம் தான் தெரியுமே.  அந்த நிகிதாவை ஒரே ஒரு முத்தம் இட முடியாமல் விஸ்வேஸ்வரன் தவித்த காட்சிகள் கமலினியினுள் படமாக ஓடின.  கூடவே அவன் அவள் முகம் பற்றி எளிதாக.. இயல்பாக.. அழகாக ..முத்தமிட்ட  காட்சிகளும். கமலினியின்  உடல்  மின்சாரம் பாய்ந்தது போல் துடித்தது .

” என்னாயிற்று கமலி?  என்ன நினைவுகள்? ”  விஸ்வேஸ்வரன் அவள் தோள்களை இரு கைகளாலும் அழுத்தினான். உன் நினைவை நான் படித்து விட்டேனே என்ற செய்தியை குறும்பாய் தாங்கியிருந்தன அவனது விழிகள் .

அந்த நொடியில் கமலினி தன்னை அவமானமாக உணர்ந்தாள்.  இப்படியா அடுத்த ஆண் ஒருவன் முன்னிலையில் தன் மன நெகிழ்வை வெளிப்படையாக உடலில் காட்டுவது …? ,அவள் அந்நேரம் தன்னையே மிகவும் வெறுத்தாள். தன் ஆழ்மனதை உள்நுழைந்து பார்க்கும் உரிமையை யாருக்கும் தர அவள் தயாராக இல்லை .

“கையை எடுங்கள். சற்றுமுன் பெரிய உத்தமன் போல் பேசினீர்களே .இப்போது உங்களிடம் பணிபுரியும் பெண்ணை தொட்டுத்தொட்டு பேசுகிறீர்களே …இதுதான் உங்கள் அம்மா வளர்த்த லட்சணமா ? “வார்த்தைகளில் முட்களை சொருகி அவன் மேல் எறிந்தாள்.

விக்னேஸ்வரனின் விழிகள் சிவந்தன .” என்னடி சொன்னாய்  ? ”  அவள் தோள்களை அழுந்த பிடித்து உலுக்கினான். உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை அவனது உலுக்களில் அதிர உதடுகள் நடுங்க கமலினி பேச்சு வராமல் பயந்து நின்றாள். அவளது நடுக்கத்தை உணர்ந்த விஸ்வேஸ்வரன் உலுக்கலை நிறுத்தினான்.

 ” ஏன் கமலினி? ஏன் இப்படி நடந்துகொள்கிறாய் ?உன்னை நீ உணரவில்லையா ? ” சலிப்புடன் கேட்டான்.

உதட்டை மடித்து கடித்து தன்னை அடக்கினாள் கமலினி.” நீங்கள் உங்கள் எல்லையை தாண்டுகிறீர்கள் சார் “.

” எல்லை …? எது எனது எல்லை…? “

” நீங்கள் சம்பளம் கொடுக்கும் முதலாளி. நான் உங்கள் பணிப்பெண். அத்தோடு …. முன்பே திருமணம் நிச்சயம் ஆனவள்”  வழக்கமான பழைய டயலாக் என்று அவளது ஆரம்ப வார்த்தைகளை கேட்டுக் கொண்டு இருந்தவன் பேச்சின் முடிவில் அதிர்ந்தான்.

” என்ன சொல்கிறாய்? “

” எனக்கு திருமணம் நிச்சயமாகி விட்டது என்று சொல்கிறேன் ”  கமலினி அமைதியாக பதில் சொன்னாள். ஆனாலும் அவள் குரல் நடுங்கியது .

” பொய் இதனை நான் நம்ப மாட்டேன். ” இப்போது விஸ்வேஸ்வரனின் குரலிலும் நடுக்கம்.

” என்ன செய்யட்டும் நான்? அவரை அறிமுகம் செய்து வைக்கவா ? “

” எந்த குட்டிச்சுவரை? ” கட்டுப்பாடு இழந்து வெடித்தான்.

“தவறாக பேச வேண்டாம் அவர் மிகவும் நல்லவர். எனக்கு வீட்டில் திருமண உறுதி செய்தவர் ”  நிதானமாக சொன்னாள் கமலினி .

இரு கைகளையும் இரு பேன்ட் பாக்கெட்டுக்குள் நுழைத்தபடி கண்களை இறுக மூடி நின்றான் விஸ்வேஸ்வரன்.

” உண்மைதானா…? ” கண்களை திறக்காமலேயே கேட்டான்.




” ஆமாம் ” தெளிவாகச் சொன்னாள் கமலினி.

 இறுகியிருந்த  தாடைகள் அவனது கோப கட்டுப்பாட்டை வெளிக்காட்டியது.

” கெட் அவுட்  …” கர்ஜித்தான் .

முகத்திற்கு நேராக இந்த உடனடி தாக்குதலை எதிர்பார்க்காத கமலினி திகைத்து ”  என்ன …? ” என்றாள்.

” வெளியே போ…”  குரலில் அழுத்தம் கூடியிருந்தது.கமலினி ஸ்தம்பித்து நின்றாள் .

” ஏய் வெளியே போடி ”  உயர்ந்த குரலோடு இரு கைகளாலும் ஓங்கி அந்த கண்ணாடி டேபிள் மேல் அறைந்தான். உடல் வெடவெடக்க கமலினி தயங்கி மெல்ல பின்னால் நகர, சிறுத்தையின் வேகத்துடன் திரும்பியவன் அவள் தோள்களைப் பற்றி இழுத்துக்கொண்டுபோய் அறைக்கு வெளியே தள்ளி கதவை டமார் என மூடினான்.

பெருங்கல் ஒன்று திடுமென முகத்தை தாக்கிய உணர்வில் துடித்துப் போய் அறையின் வெளிப்புறம் சில நொடிகள் நின்றாள் கமலினி .பிறகு உடல் கூசி சுற்றும் முற்றும் யாரும் பார்க்கிறார்களா …என ஆராய்ந்து,  இல்லை என சிறு திருப்திப்பட்டு வேகமாக படிகளில் இறங்கினாள் .அவளது அன்றைய வேலை தளத்திற்கு வந்த பின்னும் வேலையில் மனம் செல்லும் என்று தோன்றவில்லை.  சரோஜாவிடம் கேட்டு லீவ் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு கிளம்பி விட்டாள்.

” கமலி என்னம்மா உடம்பு சரி இல்லையா? ” புவனா பதறினாள்.

கமலினி பதில் சொல்ல வாய் திறக்கும் முன்பே ”  என்ன அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போகிறது ? “கண்களை உருட்டியபடி கேட்டுக் கொண்டு வந்து நின்றாள் கனகம்.  அவளது குத்தல் பார்வையில் தன் தேகம் பொசுங்கும் உணர்வை உணர்ந்தாள் கமலினி .

” தலைவலி சித்தி. அதனால்தான் வந்து விட்டேன் ”  சமாளிப்பாய் சொன்னாள் .

” அதுதான் ஏன் அடிக்கடி தலைவலி வருகிறது என்று கேட்கிறேன்?” கனகம் நகர்வதாக இல்லை.

” இன்று அவளுக்கு தலை குளித்த நாள் கனகம். அதனால் தலைவலி வந்திருக்கலாம்.” புவனா மகளின் உதவிக்கு வந்தாள். அது உண்மையும் கூட .

” சரிதான்…”  அலட்சியத்துடன் கனகம் நகர்ந்தாள்.

“வயிற்று வலி, கைகால் உளைச்சல்….. அம்மா அம்மா எடுத்து கொடுத்ததையே பிடித்துக்கொண்டு சொல்லிவிட்டு , உண்மையிலேயே உடம்பு அப்படித்தானே இருக்கிறது நான் பொய் சொல்லவில்லை தன்னையே சமாதானம் செய்து கொண்டாள்  கமலினி.

” வெந்நீர் போடுகிறேன். குளிக்கிறாயாமா …? வலி கொஞ்சம் குறையும். ” புவனா கேட்க மறுத்தாள்

” கொஞ்சம் படுக்கிறேன் அம்மா ” சொல்லிவிட்டு கட்டிலில் விழுந்தாள்.  கொதிக்கும் மனதிற்கு ஈடாக காந்திய கண்களை இறுக மூடிக்கொண்டாள். மனதின் வேதனை பாதிப்போ என்னவோ அடிவயிற்றில் அவஸ்தை அதிகமாக இருந்தது.

 ஐந்தாவது நிமிடம் அவளது இடைப் பகுதி உடை தளர்த்தப்பட்டு அடிவயிற்றில் குளிர்ச்சியாக எண்ணெய்  தடவப்பட்டது .” விளக்கெண்ணெய் வைத்திருக்கிறேன் கமலிம்மா. கொஞ்சம் வலி குறையும். நிமிடத்தில் சீரகம் தட்டிப்போட்டு கொண்டு வருகிறேன். குடித்துவிட்டு தூங்கு ”  சொல்லிவிட்டு சென்றாள் புவனா.கமலினியின்  கண்கள் கலங்கின .

தாயின் இந்த பாசத்தை விட அவளுக்கு வேறு என்ன வேண்டும் ?  எனக்கு  என் அம்மாவும் அப்பாவும் போதும் .முணுமுணுத்தபடி சுருண்டு கொண்டாள்.

சிறிது நேர தூக்கத்திற்குப் பிறகு அவள் கண்விழித்தபோது….  இல்லை விழிக்க வைக்கப்பட்டபோது, ஆம் சங்கவி அவள் தோள் அடித்து எழுப்பிக் கொண்டிருந்தாள். ” ஏய் கமலினி எழுந்திரு. உன்னை பார்க்க உன் கடையிலிருந்து யாரோ வந்திருக்கிறார்கள் “.

  கமலினி திடுக்கிட்டு எழுந்தாள் .யாராக இருக்கும் ….? அவளுக்கு மனம் படபடத்தது.. ஒருவேளை அவன் தான் வந்துவிட்டானா?  ஒரு நாள் இரவு முழுவதும் அவர்கள் வீட்டின் முன்பே அவன் காத்துநின்ற பொழுதுகள் அவளுக்கு நினைவு வந்தது. பரபரவென எழுந்து அறையை விட்டு வெளியேற போனவள் ஒரு நிமிடம் நின்று கலைந்த தன் தோற்றத்தை சீர் செய்து கொண்டு வெளியே எட்டிப் பார்த்தாள் .

அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தது பாரிஜாதம் .நிம்மதியோ…  ஏமாற்றமோ ஏதோ ஒரு உணர்வு கமலினியை வியாபித்தது. ” வணக்கம். வாருங்கள் எப்போது வந்தீர்கள் மேடம் ? ” வரவேற்றபடி வந்தாள்.

” உடம்பு எப்படி இருக்கிறது கமலினி?  பாரிஜாதத்தின்  குரலில் மறைந்திருந்த பரிதவிப்பை கமலினியால் உணரமுடிந்தது.” உடம்பு நன்றாக இருக்கிறது மேடம்.”  சாதாரண வார்த்தைகளில் சொல்லி விட்டு அபய பார்வையை பாரிஜாத்திற்கு தந்தாள் .

“அந்த திருட்டு விஷயமாக நான் உன் பக்கம் பேசவில்லை என்பதால் என்னை தவறாக நினைத்துக் கொள்ளாதே கமலினி” முட்டையை அடைகாக்கும் கோழி போல் அருகே இருந்த கனகம் கொஞ்சம் அந்தப் பக்கம் நகரவும் பாரிஜாதம் கமலினியின் கைகளை பற்றிக்கொண்டு இறைஞ்சலாய் கேட்டாள்.

“சீச்சி என்ன மேடம் …இதையெல்லாம் நான் தவறாக நினைப்பேனா?   உங்கள் நிலைமை எனக்குத் தெரியாதா என்ன ? ” அவள் கை தட்டி சமாதானப்படுத்தினாள் கமலினி ..

“இவர்கள் யார் கமலினி? ஒரு மாதிரி வித்தியாசமாக தெரிகிறார்களே  ”  முணுமுணுப்பாய் பாரிஜாதம் கேட்டது கனகத்தை பற்றி .

“இவர்கள் என் சித்தப்பாவின் மனைவி.”  வருபவர்கள் எல்லாம் புரிந்து கொள்ளும் அளவு இந்த சித்தி இப்படி அவர்களை வெளிப்படுத்திக் கொள்ளத்தான் வேண்டுமா மனதிற்குள் நினைத்தபடி வெளியே தகவல் தந்தாள் .

” ஓ… இது அவர்களுடைய வீடா? “

“இப்போதிற்கு அப்படித்தான் மேடம் “

 ” எனக்கு புரியவில்லை கமலினி “

“எங்களுடைய இந்த வீடு சித்தப்பாவிடம் அடமானத்தில் இருக்கிறது. இங்கேயே தங்கிக் கொண்டு அதனை மீட்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் நாங்கள் ” சுருக்கமாக விவரித்தாள்.

” சரிதான். உன் சித்தியின் வித்தியாசமான போக்கிற்கு இப்போது காரணம் தெரிகிறது ”  புரிந்துகொண்ட பாரிஜாதத்தின்  கவனிப்பு கமலினிக்கு  சங்கடத்தைக் கொடுத்தது. தன் வீட்டு மனிதர்களை அடுத்தவர்கள் குறை கூற விரும்பாத சங்கடம் .

 பாரிஜாதம் மெல்ல அவள் தோளில் தட்டினாள். ” சரியாகிடும் கமலினி ”  ஆற்றல்களை தேற்றல்களை நான் விரும்புவதில்லை நாவில் துடித்த வார்த்தைகளை பாரிஜாததிற்காக அடக்கிக் கொண்டாள்.”




What’s your Reaction?
+1
18
+1
15
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!