Serial Stories thanga thamarai malare

தங்க தாமரை மலரே -2

2

அந்த பிரகாஷை பற்றித்தான் லதாவுக்கு நன்றாக தெரியுமே. பிறகும் ஏன் அவன் பின்னால் வருகிறாள் …? “

” அவள் என்ன செய்வாள் …? அவள் இவனை லவ் பண்ண ஆரம்பிக்கும் போது இவனுக்கு கல்யாணம் ஆனது தெரியாதே … “

” ஆமாம் பாவம் லதா. இனிமேல் என்ன செய்வாள் ..? “

” பிரகாஷை விட்டு விட்டு ராஜா கூட போய் விட வேண்டியது தான். “

“ராஜாதான் சாந்தியை லவ் பண்ணுகிறானே. அடுத்த வாரம் இரண்டு பேரும் கல்யாணமும் பண்ணிக்க போறாங்க “

“அதெல்லாம் அந்த கல்யாணம் நடக்காது. சாந்தியோட அம்மாவுக்கு அந்தக் கல்யாணம் பிடிக்கலை . அதை நடக்க விடமாட்டா பாரு ….”

வீட்டின் அருகே வரும் போதே உச்ச ஸ்தாயியில் கேட்க ஆரம்பித்த குரல்கள் படியேறி உள்ளே வர வர அதிகரிக்க, கமலினிக்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போலிருந்தது. அம்மா , அப்பா ,  மகன் , மகள் என்று இப்படி குடும்பத்தோடு உட்கார்ந்து டிவி சீரியல் பார்ப்பார்களா ..? அதுவும் இப்படி டிஸ்கஸ் செய்து கொண்டு …மண்டிய எரிச்சலை முகத்தில் காட்டாமல் மறைத்தபடி வீட்டினுள் நுழைந்தாள்.

டிவி முன் அமர்ந்திருந்த குடும்பம் அவளை திரும்பியும் பார்க்கவில்லை. “பொட்டை பிள்ளை வீட்டுக்கு வர்ற நேரத்தை பாரு …” சித்தி கனகவல்லி  புலம்பினாள் டிவியை பார்த்தபடி . கூடவே கல்லூரியில் இருந்து  முன்பே வந்து டிவி முன் அமர்ந்து முறுக்கை நொறுக்கிக் கொண்டிருந்த தன் மகள் சங்கவியையும் ஒரு பெருமித பார்வை பார்த்துக் கொண்டாள் .

சித்தி  யாரோ அந்த டிவி பெண்களில் ஒருத்தியை  பார்த்து பேசியதாக நினைத்துக் கொண்டு , ஹாலை கடந்து கிச்சனிற்குள் வந்தாள் கமலினி .




” வாம்மா கமலி. காபி போடவா …? ” அடுப்பிலிருந்து திரும்பினாள் புவனா. கமலினியின் அம்மா. ஹாலில் கனகம் இருந்த நிலைக்கும் ,இங்கே புவனா இருந்த இருப்பிற்கும் பார்ப்பவர்கள் உடனே சொல்லி விடுவார்கள் கனகத்தை வீட்டு எஜமானி என்றும் , புவனாவை சமையல்காரி என்றும் .

கொந்தளித்த மனதை அடக்கியபடி அம்மாவை முறைத்தாள் கமலினி.” ஏம்மா விளக்கு வைக்கிற நேரம். முகம் கழுவி பொட்டு வைத்துக் கொள்ள கூடாதா …? “

புவனா புன்னகைத்தபடி காபியை ஆற்றினாள். பின் வாசல் படியில் அமர்ந்து கொண்ட மகளிடம் நீட்டினாள்.” அடுத்தடுத்த வேலையில் மறந்துட்டேன்மா ”  காய்களை வெட்ட ஆரம்பித்தாள்.

அம்மா மறந்திருக்க மாட்டாள்,அம்மாவின் அந்த எளிய அலங்காரமும் சித்தி கனகத்தின் கண்களுக்கு கொடுமையாக தெரியும். ” அலங்கரிச்சு அலங்கரிச்சு இருந்ததெல்லாம் வாரி கொடுத்தாச்சு. இன்னமும் எங்க கிட்டே இருக்கிறதையும் கொண்டு போகவா இந்த அலங்காரம் …?இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்ல …? ” எனக் குத்துவாள்.

அவளுக்கு எந்நேரமும் மஞ்சள் பூசிய முகத்துடன் மகாலட்சுமி களையுடன் இருக்கும் அம்மாவின் மீது , தீராத பொறாமை உண்டு.  அப்பா வேலாயுதம் வேறு அடிக்கடி என் மனைவி லட்சுமி தேவி அவதாரம். அவள் கை ராசிதான் எனக்கு தொட்டது துலங்கி தொழில் இவ்வளவு நன்றாக நடக்கிறது என பார்ப்பவர்களிடமெல்லாம் பெருமையாக சொல்லுவார்.சித்தப்பா குணசீலன் தன் மனைவி கனகத்தை அன்போடு அழைக்கும் வார்த்தைகளே தரித்திரம் , மூதேவி , சனியன் போன்றவைகள்தான் .

கனகமும் அவ் வார்த்தைகளுக்கேற்பவே எப்போதும் விரிந்த கூந்தலும் , வெற்று நொற்றியும் , எண்ணெய் வழியும் மூஞ்சியுமாகவே முகம் கழுவ கூட சோம்பல் பட்டுக் கொண்டு வீட்டை வலம் வந்து கொண்டிருப்பாள்.அப்படிப்பட்டவளுக்கு திருத்தமாக இருக்கும் அம்மாவின் மீது பொறாமை வந்ததில் ஆச்சரியமில்லை .

அம்மா பீன்ஸ் நறுக்கும் லாவகத்தை பார்த்தபடி அமர்ந்திருந்தாள் கமலினி. ஓரத்து நாரை உரித்து விட்டு இன்ஞ் டேப்பால் அளவெடுத்தது போல் ஒன்று போல் கச்சிதமாக பீன்சை வெட்டினாள் புவனா .ஒரு சிறு காரியத்தை கூட எப்படி இது போல் நேர்த்தியாக அம்மாவால் செய்ய முடிகிறது …?கமலினி எப்போதும் போல் தன் அன்னையை வியப்பாக பார்த்தாள் .

பதவியோடு பொறுமையும் நிரம்பியவள் புவனா.இல்லாவிட்டால் அவள் எஜமானியாக வளைய வந்த இதே வீட்டில் சமையல்காரி போல் இருக்க முடியுமா …? கனகத்தின் அலட்சியங்களை தாங்கிக் கொண்டு, இப்படி பேசாமடந்தையாக ….கமலினி அம்மாவை வெறித்தாள். எழுந்து தன் கையிலிருந்த காபி டம்ளரில் பாதி இருந்த காபியை அம்மாவிடம் நீட்டினாள்.

” இனிப்பே இல்லை. சீனி போட்டீர்களா இல்லையா …? நீங்களே குடிங்க …”குரலுயர்த்தி சொல்லி விட்டு பின்பக்கம் பாத்ரூமிற்குள் நுழைந்தாள் .

இரவு எட்டு மணிக்கு வீட்டிற்கு வருபவளுக்கு காபி கிடையாது என இருக்கும் பாலை எடுத்து ப்ரிட்ஜில் வைத்திருப்பாள் கனகம் .இது புவனா அவளுக்கான பங்கு பாலை எடுத்து வைத்திருந்து தன் மகளுக்கு போட்டு தரும் காபி என கமலினி அறிவாள். அதனாலேயே தான் கொஞ்சம் குடித்து விட்டு மீதியை தாயிடம் சேர்ப்பித்தாள் .

தன் தாயை சிறை மீட்பதற்காகவாது தங்கள் நிலைமை சீக்கிரமே மாற வேண்டுமென்று நினைத்தபடி முகத்தோடு வழிந்த கண்ணீரையும் கழுவினாள். இரவு புவனாவும்,கமலினியும் சேர்ந்து தேய்த்து கல்லில் போட்டு எடுத்த சப்பாத்திகள் டைனிங் டேபிளுக்கு போகும் வழியிலேயே மாயமாகின.  டேபிளுக்கு வரும் வரை கூட பொறுமையின்றி பாதி வழியிலேயே தட்டிலிருந்து  பறிக்கப்பட்டு சாப்பிட்டு முடிக்கப்பட்டன .

எஞ்சிய ஐந்து சப்பாத்தி மாவு உருண்டைகளை மகளுக்கு மூன்று ,தனக்கு இரண்டென பிரித்த புவனாவை அதட்டி இருவருமாக இருப்பதை பகிர்ந்து குருமா பாத்திரத்தின் அடியில் ஒட்டிக் கிடந்த குருமாவை சட்டியிலேயே தொட்டு தொட்டு சாப்பிட்டு முடித்து பாத்திரங்களை கழுவி, அடுப்படியை ஒதுக்கி, தங்கள் அறைக்கு வந்து படுத்தனர் .

முன்பு மாடியில் இருந்த அவர்களது பெரிய படுக்கை  அறை இப்போது கீழே இருந்த சிறிய அறைக்கு மாற்றப்பட்டிருந்தது. அறையில் இருந்த ஒற்றைக் கட்டிலை அப்பாவிற்கு கொடுத்து விட்டு அம்மாவும், மகளும் தரையில் பாய் விரித்து படுத்துக் கொள்வர். இன்று வேலாயுத்ததிற்கு இரவு வேலை என்பதால் அவரில்லாமல் இவர்கள் இருவரும் மட்டும் தரையில் படுத்துக் கொண்டனர் .

மெல்ல நகர்ந்து படுத்து அம்மாவின் மேல் கை ,கால்களை போட்டுக் கொண்டாள் கமலினி. தன் மேல் கிடந்த மகளின் கையை வருடிய புவனா ” காபியை அம்மாவிற்காக விட்டுக் கொடுத்தாயாக்கும் ? ” என்றாள்.




கமலினி அம்மாவின் தோளில் முகம் புதைத்துக் கொண்டாள் .”நாம் சீக்கிரமாக இங்கிருந்து போய் விட வேண்டும் அம்மா “.

புவனா ஒரு முழு நிமிடம் மௌனமாக இருந்தாள்.பிறகு நிதானமாக ஆனால் உறுதியாக பேசினாள் .” இது நம் வீடு கமலி. இதனை நாம் மீட்டு இங்கேயே இருக்க வேண்டுமே தவிர , இங்கிருந்து  ஓடக் கூடாது “.

கமலினிக்கு சலிப்பு வந்தது. இதென்ன இந்த முட்டாள்தனமான பிடிவாதம் …அம்மாவிற்கும் …அப்பாவிற்கும் …? இந்த வீட்டை இப்போது சித்தப்பா குணசீலனிடமிருந்து மீட்டு வாங்க வேண்டுமென்றால், ஐம்பது லட்சம் வேண்டும். இல்லாது அவர்களது உரிமையை மட்டும் இந்த வீட்டின் மீது நிறுத்துவது என்றாலும் இருபத்தியைந்து லட்சம் வேண்டும் . இத்தனை பணத்திற்கு இன்றைய நிலைமையில் அவர்கள் எங்கே போவார்கள் …?

இந்த வீடு வேலாயுதம், குணசீலனின் பூர்வீகத்து வீடு. அண்ணன்,தம்பி இருவருக்கும் இதில் சம பங்கு உண்டு. வேலாயுத்ததின் தொழில் நஷ்டமடைந்து அவர் சம்பாதித்து வைத்திருந்த சொத்துக்கள் ஒவ்வொன்றாக விற்று கடன்களை அடைத்து வந்த போது மிஞ்சி நின்றது இந்த வீடும், பத்து லட்ச ரூபாய் கடனும். இந்த பூர்வீகத்து வீட்டை விற்க அண்ணன், தம்பி இருவருக்குமே மனமில்லை .

” உன் கடனுக்கு என் வீட்டை விற்பதா …? ” என குணசீலன் எகிற அப்போது அண்ணன் -தம்பியை சமாதானப்படுத்தினர் சில சொந்தக்கார பெரியவர்கள்.

“டேய் குணசீலா நீ படித்து இப்போது இந்த கவர்ன்மென்ட் உத்தியோகத்தில் இருப்பதற்கு காரணமே உன் அண்ணன் தான் என்பதை மறந்து விட்டாயா …? உன் அண்ணனுக்கு ஒரு கஷ்டமென்றால் இப்படித்தான் அவரை விரட்டுவாயா …? ” என அதட்டினர்.

“என் அப்பா உருவாக்கிய தொழில். அதிலிருந்து வந்த வருமானத்தில் என்னை படிக்க வைத்தார் . என்னவோ இவர் கை காசை போட்டு என்னை படிக்க வைத்தது போல் பேசுகிறீர்களே …” குணசீலன் எகிறினான்.

அப்பா கொடுத்து போனது பத்தடிக்கு பத்து கடையும் , ஒரு குமுட்டி அடுப்பும்தான்.  அதனை வைத்து தொழிலை வளர்த்து கொண்டு வந்தது நான்… என வேலாயுதம் மனதிற்குள் மட்டுமாக நினைத்துக் கொண்டார். ஏனெனில் இப்போது அவர் தோற்று நிற்பவர்.இந்த நேரத்தில் அவரது பேச்சு எதுவும் எடுபடாது .உதட்டைக் கடித்து தலையை குனிந்து கொண்டார்.

” சரியப்பா.அந்த பிரச்சனை இப்போது வேண்டாம் .இப்போது இந்த வீட்டில்  உன் அண்ணனின்  பங்கு அவனுக்கு வேண்டும். ஒன்று இந்த வீட்டை விற்க வேண்டும்.  இல்லாவிட்டால் நீயே வீட்டை எடுத்துக் கொண்டு அவனது பங்கு பணத்தை கொடுத்து விடு …”

” இது நான் பிறந்தவீடு. இதை வெளியாளுக்கு விற்க நான் சம்மதிக்க மாட்டேன் . நானே வாங்குவதாக இருந்தாலும் இப்போது என்னிடம் அந்த அளவு பணமும் இல்லை .நான் என்ன செய்வது …? ” குணசீலன் கை விரிக்க சமாதானம் பேச வந்த பெரியவர்கள் திகைத்தனர்.

பிறகு ஒரு வழியாக குணசீலனிடம் பலவிதங்களில் பேசி …பேசி அவனை கொஞ்சம் கொஞ்சமாக வழிக்கு கொண்டு வந்தனர்.”என் அண்ணனின் மீதமிருக்கிற  கடன் பத்து லட்சத்தை நான் தந்துவிடுகிறேன் .என்னிடம் இப்போது அவ்வளவுதான் பணம் இருக்கிறது .பணம் கொடுத்ததும் வீட்டை அவர் என் பெயருக்கு பத்திரம் முடித்து கொடுத்து விட வேண்டும்  . ” எனக் குண்டை தூக்கிப் போட அனைவரும் அதிர்ந்தனர்.

பிறகு பெரியவர்கள் அனைவருமாக பல நியாயங்கள் பேசி குணசீலனை திட்டியதில் அவன் கொஞ்சம் மனமிரங்கினான்.

“அண்ணன் இந்த வீட்டிலேயே இருந்து கொள்ளலாம். ஐந்து வருடங்களில் இந்த வீட்டின் மதிப்பில் அவரது பங்கான பாதி பணத்தையாவது அதாவது இருபத்தியைந்து லட்சத்தை கொடுத்துவிட்டால் வீட்டில் அவருக்கும் பங்கு வந்துவிடும். இல்லாது ஐம்பது லட்சம் கொடுத்து விட்டால் இந்த வீட்டை அவரது பெயருக்கே பத்திரம் முடித்துக் கொடுத்து விடுவேன். நாளுக்கு நாள் சொத்து மதிப்பு ஏறிக் கொண்டே வரும் இந்நாளில் நான் இப்போது இருக்கும் அதே பண மதிப்பைத்தான் ஐந்து வருடம் கழித்தும் போட்டிருக்கிறேன். அத்தோடு  அண்ணன் குடும்பத்தோடு இங்கே தங்கவும் அனுமதி கொடுத்திருக்கிறேன். என் அண்ணன் மேலுள்ள பாசத்தை இதை விட என்னால் வேறு எப்படி காட்ட முடியும்..? ” என குணசீலன் போலியாய் கண்களை துடைக்க அனைவரும் அயர்ந்தனர்.




ஐம்பது லட்சம் பெறுமான வீட்டை பத்து லட்சத்தற்கு வாங்கி விட முயலும் அவனது சாமர்த்தியத்தை என்ன செய்ய என அனைவரும் விழித்து நின்றபோது ,வேலாயுதம் துணிந்து இந்த முடிவிற்கு சம்மதம் சொன்னார் .ஐந்தே வருடங்களில் இருபத்தியைந்து லட்சமோ …ஐம்பது லட்சமோ கூடக் கொடுத்து வீட்டின் பாதி உரிமையையோ , முழு உரிமையையோ கூடத் தான் வாங்கிக் கொள்வேனென உறுதி சொன்னார்.

இந்த நம்பிக்கை அவருக்கு வரக் காரணம் அவரது மகன் வெற்றிவேலன் .படித்து முடித்து மும்பையில் கிட்டதட்ட ஒரு லட்சத்தை நெருங்கும் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் மகன் பணம் சேர்த்து வைத்து தங்கள் வீட்டை மீட்பானென நநம்பினார். தம்பியின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் .இதோ அவர்கள் மூவரும் சொந்த வீட்டிலேயே வேலைக்காரர்களாக இருந்து வருகின்றனர் .

கண்களை மூடியபடியே தங்கள் நிலைமையை மனதிற்குள் ஓட்டிப் பார்த்த கமலினி அலுப்புடன் மனதை மூடி உறங்க முயன்றாள் .மும்பையில் வெற்றிவேலன் சிக்கனமாக இருந்து பணம் சேர்த்துக் கொண்டிருக்கிறான். இங்கே அப்பாவும் வேலை செய்து பணம் சேர்க்க வேண்டுமென முனைப்போடு இருக்கிறார் . கடந்த ஆறு மாதங்களாக  அவர்கள் மூன்று பேர் சம்பளமும் இப்படித்தான் மிகத் தேவை போக சேமிக்கப்பட்டு வருகிறது .

இந்நிலையில்தான் கமலினி பார்த்து வந்த பதினைந்தாயிரம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த கம்யூட்டர் டிசைனிங் வேலைக்கு ஆபத்து வந்தது .இப்போது அவள் வேறு வேலை தேடிக் கொண்டிருக்கிறாள் .நாளை அந்த நகை கடை வேலை உறுதியான பின் அம்மாவிடம் சொல்லலாம் என நினைத்தபடி உறங்க முயன்றாள் .

மூடிய அவள் இமைகளுக்குள் அன்று மலைக்கோட்டையில் பார்த்த பெண்ணும் ,சிறுமியும் ஏனோ வெகு நேரம் வட்டமடித்தபடி இருந்தனர் .




What’s your Reaction?
+1
15
+1
25
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!