Serial Stories என் காதல் ராட்சசி

என் காதல் ராட்சசி-2

2

சாப்பிட்டு முடித்த உடனேயே அறைக்குள் நுழைந்து கொள்ள போன ராஜேந்திரனை நிறுத்தினார் சுப்பிரமணி.”ராஜா உன் கிட்ட கொஞ்சம் பேசணும் “

“காலையில் பேசலாமே அப்பா.ரொம்ப டயர்டாக இருக்கிறது “




 

“நாளை காலை எனக்கு எட்டு மணிக்கு கிளாஸ் இருக்கிறது. இப்போதே பேச வேண்டும்”

” சரி சொல்லுங்கள்” சலிப்புடன் அமர்ந்தான்.

 “இதை குடித்துட்டு பேசுங்க. கொஞ்சம் தெம்பாக இருக்கும்” சூடான பாலை கொண்டு வந்து கணவனுக்கு கொடுத்தாள் சுகந்தி.

 இந்த பாவனை பரிவில் எரிச்சல் வர அறைக்குள் போக திரும்பிய மகிதாவை அழைத்து நிறுத்தினார் சுப்பிரமணி,”மகிதா இருமமா உன்னிடமும் பேச வேண்டும்”

 உடன் அவள் வயிற்றுக்குள் கலவர பந்துகள் உருளத் துவங்கின.விஜயா பார்த்ததாகச் சொன்ன கார் நினைவிற்கு வர ஒருவித தவிப்புடன் நின்றாள்.

“சுகந்தி இன்று நம் வீட்டிற்கு யாரும் வந்தார்களா?” சுப்ரமணி கேட்க சுகந்தி கண்களை உருட்டினாள்.

” வீடென்று இருந்தால் தினமும் நாலு பேர் வருவார்கள் போவார்கள் யாரை கேட்கிறீர்கள் மாமா?” சுப்ரமணி உதடுகளை உள்ளே மடித்து கடித்து அரை நிமிடம் அப்படியே இருந்தார்.

 பிறகு மகனிடம் திரும்பினார். “இன்று ஆதித்யன் எங்கள் டியூசன் சென்டருக்கு வந்திருந்தார்”ஒரு நொடி திகைத்த ராஜேந்திரன் ஏன் புதிதாக எதுவும் கோர்சில் சேர்ந்திருக்கிறாராமா என்றான்  நக்கலாக.

“ராஜா” சுப்பிரமணி அதட்ட தோள்களை குலுக்கி கொண்டான்.

” அவரை ஏன் மாமா வையுரீங்க?” வேகமாக இருவருக்கும் இடையில் நின்று கொண்டாள் சுகந்தி.

” வையலம்மா ,பேசிக்கிட்டு இருக்கோம். கொஞ்சம் நகர்ந்து நில்” என்றவர்,

“ஆதித்யன் இங்கே நம் வீட்டிற்கும் வந்திருக்கிறார்” என்றார் சுகந்தியை பார்த்தபடி.

“அப்படியா சுகந்தி நீ ஒன்றுமே சொல்லவில்லையே?” ராஜேந்திரன் மனைவியை கேட்க அவள் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டாள்.

“எதை சொல்வது? நம்ம மகிதா அண்ணிக்கு விருப்பம் இல்லாத விஷயத்தை நான் எடுத்து பேச முடியுமா சொல்லுங்க. அவர்களே வெறுத்துப் போய் இருக்கிறார்களே… அப்படித்தானே அண்ணி?” ஆணி சொருகலாய் மகிதாவை பார்த்தாள்.

 மகிதா அப்போது சுகந்தியை பார்க்கவில்லை.அவள் வேறு குழப்பத்தில் இருந்தாள். அவனே வந்தானா? எதற்காக? ஆயிரம் கேள்விகள் அவள் மண்டைக்குள் பிராண்டியபடி இருந்தன.

“சுகந்தி சொல்வதும் சரிதானேப்பா. மகிதாவிற்கு பிடிக்கவில்லை என்றால் நாம் கட்டாயப்படுத்த முடியாதே” மனைவியின் நியாயத்தை கணவன் பேசினான்.




“எது மகிதாவிற்கு பிடிக்கவில்லை?” சுப்ரமணி பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு கேட்டார்.

” அதுதான் அப்பா அங்கே வாழ போவதற்கு அவளுக்கு…”

“ஆதித்யன் எதற்கு வந்தார் என்று தெரியுமா?”

” மகிதாவை கூட்டி போவதற்கு தானே..? இல்லையா வேறு எதற்கு?” ராஜேந்திரன் விழிக்க…

” என்ன மாமா விவாகரத்து கேட்கிறாரா ?”சுகந்தி எவ்வளவோ அடக்க பார்த்தும் வார்த்தைகளில் அவள்  உள்ளத்து துள்ளல் வெளிப்படையாக தெரிந்தது.

சடாரென்று இதயத்தின் மேல் அடி விழுந்தாற் போல் ஓர் உணர்வு மகிதாவிற்கு. இவர்கள் குடும்பத்து தொடர்பே வேண்டாம் என்று ஒதுங்கிதானே இருக்கிறேன். பிறகும் எதற்கு இந்த விரட்டல் ?தொண்டைக்குள் உருண்ட துக்கப்பந்தை எச்சில் விழுங்கி அடக்க முயன்றாள்.

சுப்ரமணி ஒருவித விரத்தியுடன் சுகந்தியை திரும்பி பார்த்தார்.” இது உன்னுடைய ஆசையாம்மா ?”

அவ்வளவுதான் சுகந்தி பெரிய குரல் எடுத்து கத்தவே ஆரம்பித்தாள்.”என்ன பழி பாவம்? பார்த்தீர்களா உங்க அப்பாவை? அப்படிப்பட்டவளா நான் ?”ராஜேந்திரன் மனைவியின் அழுகையில் நிலைகுலைந்து போனான்.

” என்னப்பா யோசித்து பேச மாட்டீர்களா ?சுகி அப்படிப்பட்டவளா?” அப்பாவை சலித்தவன் சுற்றி இருப்பவர்களை பற்றி கவலைப்படாமல் மனைவியை தோளணைத்து சமாதானப்படுத்த தொடங்கினான்.

 மாலை மாலையாக சுகந்தியின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை வேடிக்கை பார்த்தாள் மகிதா. அதெப்படி நினைத்தவுடன் இப்படி கண்ணீர் வடிக்க முடிகிறது ?இதுவெல்லாம் எனக்கு தெரிய மாட்டேனென்கிறதே! லேசான புன்னகை ஒன்றுடன் தங்கள் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

 சாவித்திரியும் பின்னேயே வர சுப்ரமணி தனது இடமான வராண்டாவிற்கு போய்  வயர் கட்டிலில் படுத்துக்கொண்டார்.




வீல் வீல் என்று குழந்தையின் அழுகை சத்தம் கேட்க ,ஐந்து நிமிடம் பொறுத்துப்பார்த்த சாவித்திரி கதவைத் திறந்து வெளியே போனார். அறைக்குள் குழந்தை கத்திக்கொண்டிருக்க ராஜேந்திரன் பின்பக்கத்தில் உட்கார்ந்து சுகந்தியை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான். இருவருக்கும் குழந்தையின் அழுகை காதில் விழவில்லையோ?

 சாவித்திரி குழந்தையை தோளில் போட்டுக்கொண்டு தட்டிக் கொடுத்தபடி வீட்டின் முன்புறம் மெல்ல நடக்க துவங்கினார். இத்தனை கலாட்டாக்களும் முடிந்து மீண்டும் அம்மா வந்து படுத்தபிறகு கண்களை மூடிக்கொண்ட மகிதாவிற்கு அப்போதுதான் நினைவு வந்தது .ஆதித்யன் வந்த விஷயமே இன்னமும் தெரியவில்லை என்பது.

எதற்காக வந்திருப்பான் ?ஒரு வேளை சுகந்தியின் ஆசைப்படி விவாகரத்து கேட்டுத்தானோ? இருக்கட்டுமே கேட்டானானால் கொடுத்துவிட்டு போவது… அலட்சியம் போல் நினைத்துக் கொண்டாலும் மனது மள மளவென்று முறிந்து விழுவதை மகிதாவால் உணர முடிந்தது.




What’s your Reaction?
+1
64
+1
33
+1
3
+1
1
+1
0
+1
1
+1
7
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!