Serial Stories என் காதல் ராட்சசி

என் காதல் ராட்சசி-1

1

“என்ன கணக்கெழுதி வைத்திருக்கிறாய்?” சற்குணம் பல்லைக் கடித்தபடி லேப்டாப்பை அவள் பக்கம் திருப்பிக் கேட்க,மகிதா நாக்கை கடித்தாள்.தலைகுனிந்து “சாரி சார்” என்றாள்.

“இந்த சாரியை நான் க்ளைண்ட்சுங்க கிட்ட சொல்ல முடியாது.என்னைக் கிழித்து தொங்க விட்டுடுவாங்க.எல்லோருமே பிக் சாட்ஸ்.தெரியுமில்ல?”

அதுதான் தெரியுமே! அப்படி ஒரு பெரிய க்ளையன்ட்டால்தானே இவள்…தலையை உலுக்கி பழையதை உதறினாள்,”சங்கர் சாரிடம் நான் பேசுகிறேன் சார்”

“ஓ…தப்பும் தவறுமாக எழுதிவிட்டு சமாதானம் செய்யவும் போவாயா?”

மகிதாவிற்கு எரிச்சல் வந்தது. இப்போது இவர் என்னதான் செய்ய சொல்கிறார்?

“வேறு என்ன செய்ய சொல்கிறீர்கள் சார்?”

“அதையும் மேடத்திடமே கேளுங்கள் அப்பா .அவருக்கு எல்லாம் தெரியும் ” என்றபடி உள்ளே வந்தான் ரவீந்தர். மகிதா அவனை கோபமாக பார்த்தாள். 

“ஒருவேளை அடுத்த ட்ரையலோ என்னவோ.. ” அவளது கோபப் பார்வையை கண்டு கொள்ளாமல் தனது குத்தலை தொடர்ந்தான்.




“இஷ்டப்படி பேச வேண்டாம் என்று உங்கள் மகனிடம் சொல்லுங்கள் சார். என் வேலை விபரம் மட்டும் பேச சொல்லுங்கள்” சிறு கத்தலாக உயர்ந்துவிட்ட அவள் குரலுக்கு உதட்டைப் பிதுக்கி அலட்சியமாக அவளை பார்த்தான். 

 சட்டென சற்குணம் இருவர் பக்கமும் கைவீசி சமாதானம் செய்தார்.” ரவி பேசாமல் இரு. மகிதா நான் இன்னமும் இந்த கணக்கை கிளைண்டுக்கு அனுப்பவில்லை .நல்ல வேலையாக நேற்று இரவு ரவீந்தர் ஒருமுறை செக் செய்ததனால் இந்த பிழை தெரிந்தது. இப்போது நீ இதை போய் சரி பண்ணிக் கொண்டு வா. பிறகு நான் ஒரு முறை செக் பண்ணி விட்டு கிளைண்டுக்கு மெயில் பண்ணி விடுகிறேன்”

” ஓகே சார் ” தனது டேபிளில் வந்து அமர்ந்தவளின் மனம் கொதித்துக் கொண்டிருந்தது. என்னிடம் குற்றம் கண்டுபிடிப்பதற்காகவே வேலையை செக் செய்கிறான் போல… ஆனாலும் அவளும் தவறு செய்தாள்தானே இல்லாவிட்டால் இது போன்ற இவனது பேச்சுக்களைக் கேட்கும் நிலை வந்திருக்காது தானே தன்னையே நொந்தபடி செய்த பிழையை திருத்த ஆரம்பித்தாள்.

ஆரம்பத்தில் செய்த பிழை அந்த பைலின் இறுதிவரை விரட்டி வர ஒரு மணி நேரத்திற்கும் மேலாக திருத்தல் வேலை போனது. முடித்து மீண்டும் ஒருமுறை சரிபார்த்துக் கொண்டிருந்தபோது அவள் மேஜை அருகே வந்தான் ரவீந்திரன்.

” என்ன அடுத்த வாய்ப்பு தட்டிப் போயிற்றே என்ற கவலையா?”

கண்களில் நெருப்பு மின்ன அவனை ஏறிட்டவள் “சாருக்காக பார்க்கிறேன்.. இல்லையென்றால்….”

” என்ன செய்வாய்?” திமிராக டேபிள் மேல் சரிந்து நின்றான். சப்பென அவன் மூஞ்சியில் அறையும் உந்துதலை  அடக்கியவள் செய்த வேலையை சேவ் செய்து டாக்குமெண்டில் சேர்த்தாள்.

” சரி பண்ணி விட்டேன் சார். செக் செய்து கொள்ளுங்கள் .எனக்குத் தலை வலிக்கிறது வீட்டிற்கு போகிறேன்,”சற்குணத்திடம் போய் அறிவித்துவிட்டு வெளியேறினாள்.

 சற்குணம் அவளை முறைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தாலும் தடை எதுவும் சொல்லவில்லை .தன் மகனின் சற்று முந்தைய முறையற்ற பேச்சிற்கான சமாதானமாக கூட இந்த மௌனம் இருக்கலாம். 




மகிதாவிற்கு சற்குணத்தின் அலுவலகத்தில் எப்போதும் சிறு உரிமை உண்டு. சற்குணமும் மகிதாவின் அப்பா சுப்ரமணியனும் நண்பர்கள். சுப்பிரமணி படித்துவிட்டு ஆசிரியர் வேலையை தேர்ந்தெடுக்க, சற்குணம் மேலே படித்து ஆடிட்டர் ஆனார்.மகிதா பி.காம் முடித்துவிட்டு சில கோர்ஸ்கள் செய்து கொண்டிருக்க,அக்கவுண்ட்சில் அவளுக்கு இருந்த ஆர்வத்தை பார்த்துவிட்டு தனது அலுவலக வேலைக்கு சேர்த்துக் கொண்டார் சற்குணம்.

சார் என்று சற்குணத்தை அழைத்தாலும் அங்கே வேலை பார்க்கும் மற்ற ஊழியர்களை விட ஒரு படி அதிக உரிமை மகிதாவிற்கு உண்டு.அந்த உரிமைதான் மணம் முடிக்க கேட்ட ரவீந்தரை முடியாதென முகத்திற்கு நேராக அவளை மறுக்க வைத்தது.என்றோ நடந்த அச்செயலுக்கான எதிர் வினைதான் சற்று முன் ரவீந்தர் நடந்து கொண்ட விதம்.

 ஸ்கூட்டியை வீட்டு வாசலில் நிறுத்தியதுமே பக்கத்து வீட்டிற்குள் இருந்து தலை நீட்டிப் பார்த்தாள் விஜயா.” என்ன மகிதா அதற்குள் வந்து விட்டாய் ?”

இருவருக்கும் ஒரே வயதுதான். படிப்பு வேலை வாழ்க்கை என்று எல்லா விஷயத்திலும் மகிதா மேல் ஒருவித போட்டி உண்டு விஜயாவிற்கு. “தலைவலி விஜயா” சொன்னபடி வாசல் காலிங் பெல்லை அழுத்தினாள்.

” கொஞ்ச நேரத்திற்கு முன்னால் ஒரு பெரிய கார் உங்க வீட்டு முன்னாடி நின்னதே.. யாராக இருக்கும்?” கேட்டபடி விஜயா தலைசரித்து யோசிக்க, மகிதாவிற்கு திக்கென்றது.

 பெரிய காரா…! அவள் கண்கள் தன் வீட்டின் முன் நின்ற அப்பாவின் சிறு கார்மேல் பதிந்து மீண்டது.பெரிய கார் வாங்கிய பெருமையை பீத்திக் கொண்டாடியவர்கள் நினைவு வந்தது.

பார்த்துக் கொள்வதாக விஜயாவிற்கு தலையசைத்து விட்டு ,கதவு திறக்கப்பட உள்ளே நுழைந்தாள். கதவை திறந்த சுகந்தி அவளை மேலும் கீழும் பார்த்தாள். “என்ன?”

பதிலுக்கு “என்ன ?”என்றாள்.

 சுகந்தியின் முகம் கடுகடுத்தது “கேள்வி கேட்டால் பதில் சொல்ல மாட்டாயா நீ ?”

“சொல்வதற்கு எதுவும் இல்லை என்று அர்த்தம்” ஹேண்ட் பேக்கை சோபாவில் போட்டுவிட்டு வீட்டின் பின்பக்கம் போய் சிமெண்ட் தொட்டியில் நிரப்பி வைத்திருந்த  ஜில்லென்ற தண்ணீரில் முகம் கழுவினாள்.

கூடவே வந்து நின்ற சுகந்தி மெல்ல கேட்டாள்” உனக்கு தெரியுமா ?”

ஒரு நிமிடம் நிறுத்தியவள், மீண்டும் முகத்தில் சலப் என நீர்த்தெறித்துக் கொண்டாள். “அதனால் தான் சீக்கிரம் வந்தாயா? “அடுத்த கேள்வி .

“எனக்கு ஒன்றும் தெரியாது. தெரிந்து கொள்ளும் அவசியமும் இல்லை” கொடியில் கிடந்த காய்ந்த துண்டை உருவி முகத்தை துடைத்துக் கொண்டு படுக்கையறைக்குள் நுழைந்து கொண்டவள் சட்டென வெளியே வந்து சோபாவில் போட்டிருந்த தனது பேக்கை எடுத்துக்கொண்டு மீண்டும் உள்ளே போய் கதவை பூட்டி கொண்டாள்.

தனக்கு தெரியாமல் தன் பேக் ஆராயப்பட அவள் விரும்பவில்லை.சுகந்தியின் முகத்தில் கோபம் வெளிப்படையாக தெரிந்தது.




உண்மையிலேயே தலை வலிப்பது போல் தோன்ற கட்டிலில் விழுந்து கண்களை இறுக மூடிக் கொண்டாள் மகிதா. மங்கிப்போன இளஞ்சிவப்பு நிற தாவணியும் எண்ணெய் வைத்து  அழுத்தமாக பின்னியிருந்த இரட்டை ஜடையும்,காதில் பிளாஸ்டிக் வளையமுமாக பார்க்கின் பெஞ்சில் உட்கார்ந்து நகம் கடித்துக் கொண்டிருந்த சுகந்தி நினைவிற்கு வந்தாள்.

 அவளுக்கும் இப்போது இங்கே ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பவளுக்கும் எவ்வளவு வித்தியாசம்?

ஒரு தாலி கயிறு பெண்ணின் வாழ்க்கையையே மாற்றி விடுகிறதே கசப்புடன் நினைத்தபடி கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

விஜயா பார்த்ததாக சொன்ன பெரிய கார் நினைவுக்கு வர

வீடு தேடி வரும் அளவு அப்படி என்ன அவசரம்? ஆனால் அவளைத் தேடித்தான் வந்தானா? ம்ஹூம் வந்தது அவனாயிருக்காது.சிம்மாசன ராசா கீழிறங்கி வருவாரா என்ன?வேறு யார்…யோசிக்க…அந்த வீட்டில் எல்லோருமே சிம்மாசன மகாராசாக்கள்தான் என்ற நினைவு வந்தது.

ஒருக்களித்து படுத்தபோது மார்பை உறுத்தியதை வெளியே எடுத்து பார்த்தாள். தாலி செயின். சற்று முன் சுகந்தியை நினைத்தாளே அதேபோல் இந்த தாலி அவள் வாழ்வையும் தான் மாற்றி விட்டது.

நிச்சயம் என்னை பார்க்க வந்திருக்க மாட்டார்கள் .அப்பாவை எதற்காகவோ பார்க்க வந்திருவேண்டும்” ஏதோ ஒரு வகை சமாதானப்படுத்தலோடு தூங்கியே போனாள்.

” விளக்கு வைக்கிற நேரத்துல வீட்டு பொம்பள தூங்கினா வீடு விளங்கிடும்” சுகந்தியின் குரல் கணீரென்று காதுக்குள் ஒலிக்க படக்கென்று விழி திறந்தவள், வெளிப்புறம் மெல்ல இருள் கவிழ்ந்து கொண்டிருப்பதை உணர்ந்து வேகமாக எழுந்து வெளியே வந்தாள்.

 அடுப்படியில் தரையில் உட்கார்ந்து சாவித்திரி மாவை பிசைந்து கொண்டிருந்தார். அடுப்பருகே குழந்தையை இடுப்பில் வைத்து நின்றிருந்த சுகந்தி பொரிந்து கொட்டிக் கொண்டிருந்தாள். “மூச்சு முட்ட அழுற குழந்தைக்கு நாலு மடக்கு பால் ஆத்தி கொடுக்க இந்த வீட்ல ஒரு நாதியில்ல”

குழந்தையை பார்க்காமல் தூங்கிய தனக்கான வசை பாடல்தான் இது என உணர்ந்தவள்,பேசத் துடித்த நாவை அடக்கியபடி,

“என்கிட்ட கொடுங்க அம்மா”  தாயின் கையில் இருந்த மாவை வாங்க முயன்றாள். 

“பரவாயில்லைம்மா நான் முடித்து விட்டேன்” சாவித்திரி பேசினை தன் பக்கமே இழுத்துக் கொண்டார். 

“சரி மாவை பிசைந்து முடித்துவிட்டு நீங்க உள்ளே போய் கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடுங்க.அங்கே உங்களை வேலை பிழிந்து இருப்பார்கள் என்று தெரியும்” ஓரக் கண்ணால் சுகந்தியை பார்த்தபடி சொல்லவும்,  ஆங்காரத்துடன் திரும்பினாள் சுகந்தி.

“இப்போ என்ன சொல்ல வர்ற? உன் அம்மாவை நான்தான் வேலை வாங்குறேன்கிறியா?”

 இல்லை இந்த வயதான காலத்தில் வேலைக்கு அனுப்பாமல் இருந்தாலே போதும் … மனதிற்குள் நினைத்தபடி சப்பாத்தி மாவை உருட்ட ஆரம்பித்தாள் மகிதா.

” அம்மா, மகள் இரண்டு பேரும் வெளியில் இருந்து வந்ததும் ரூமுக்குள் போய் படுத்துக்கொண்டு ரெஸ்ட் எடுக்க தொடங்கி விட்டால் வீட்டு வேலைகளை யார் பார்ப்பதாம்?”

 வீட்டிலேயே இருக்கும் நீதான் நுனி நாக்கு வரை வந்துவிட்ட வார்த்தைகளை அம்மாவின் இறைஞ்சல் பார்வைக்காக அழுத்தி உள்ளே தள்ளினாள். வலுக்கட்டாயமாக தாயின் கையை பிடித்து எழுப்பி அறைக்குள் அனுப்பி விட்டு சப்பாத்தி குருமாவிற்கான வேலைகளில் இறங்கினாள்.

வேலை முடிந்து சுப்பிரமணி வீட்டிற்கு திரும்பிய போது 9 மணி. “என்னப்பா இவ்வளவு நேரம் ஆயிடுச்சு?” தாங்கலோடு கேட்ட மகளை வாஞ்சையாய் பார்த்து புன்னகைத்தார்.

” இன்னைக்கு அடுத்த ஷிப்ட் டீச்சர் வரலைம்மா. அவர் பாடத்தையும் சேர்த்து என்னையே எடுக்கச் சொல்லிட்டாங்க”ஒரு மணி நேர தாமதத்திற்கான காரணத்தை சொன்னார்.

 அரசு பள்ளியில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற அவர் இப்போது அருகில் இருக்கும் டியூசன் சென்டரில் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தோட்டக்கலையில் ஆர்வமுள்ள சாவித்திரி அடுத்த தெருவில் உள்ள நர்சரியில் வேலை பார்க்கிறார்.

ஒன்பதரை மணிக்கு வந்தான் ராஜேந்திரன். “வெளியில் வேலையாக போகும் ஆண்கள் முன்னே பின்னே வீட்டிற்கு வருவது தான். இதோ இப்போது நீங்கள் அலுத்து போய் வரவில்லையா ?இதற்காக என்னை முறைத்தால் நான் என்ன செய்யட்டும்?”

 செருப்பை சுழற்றி விட்டு உள்ளே நுழைந்த கையோடு கணவனிடம் கரகர குரலில் பேசிய சுகந்தியை அயர்ந்து போய் பார்த்தாள் மகிதா. எவ்வளவு சாணக்கியத்தனம்?! இப்படியெல்லாம் புருசனை வளைத்துப் போட்டுக் கொள்ளும் திறமை எனக்கெல்லாம் இல்லையே!




 

What’s your Reaction?
+1
67
+1
32
+1
4
+1
4
+1
2
+1
0
+1
4
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!