karthikai deepangal Serial Stories

கார்த்திகை தீபங்கள் -29

29

” நல்லவேளை இனிமேல் காருக்காக நாங்கள் ஆண்பிள்ளைங்க யாரையும் எதிர்பார்த்திட்டே இருக்க வேண்டியதில்லை .இனி நாங்க பெண்களாக காரை எடுத்துட்டு எங்களுக்கு தேவையான சாமான்களை நாங்களே வாங்கிக் கொள்வோம் …” சிறு பிள்ளையின் குதூகலத்துடன் சொர்ணத்தாயும் காரை தடவி பார்த்துக் கொண்டிருக்க அனுராதா மனம் நொந்தாள் .முன்பே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காரிலேறி ஆடத்துவங்கியாயிற்று . அவள் எதிர்பார்த்தது போல்  யாருக்குமே இப்படி லட்சக்கணக்கில் பணம் போட்டு பொண்டாட்டிக்கு கார் வாங்கி தந்திருக்கிறானே என்ற சிறு நெருடல் கூட இல்லை .

கலங்கிய கண்களுடன் நின்றிருந்த பூந்தளிரை ” என்னடி கார் ஓட்ட தெரியுமா …தெரியாதா ….? எனக்கு பத்து லட்சம் நட்டமா ்..? ” நக்கலடித்த கணவனை கலங்கிய விழிகளுடன் செல்லாமாய் முறைத்தவள் அவன் கை சாவியை பிடுங்கினாள் .நான்…நீயென எல்லோரும் காருக்குள் நிரம்பிக் கொள்ள பூந்தளிர் மகாராணி பாவனையுடன் காரை எடுத்தாள் .

தங்கரத்த்திலிருந்து இறங்கும் பட்டத்தரசி போல் கோவில் வாசலில் வந்து இறங்கிய தங்கள் மகளை ஆனந்த அதிர்ச்சியுடன் பார்த்தனர் பலவேசமும் , குணவதியும் .

” இந்த கார் எனக்கு பிறந்தநாள் பரிசாக என் புருசன் வாங்கிக் கொடுத்திருக்கிறார் .நீங்களும் என்னை ஆசீர்வாதம் பண்ணுங க ” பாதம் பணிந்த மகளை அணைத்து தூக்கி உச்சி முகர்ந்தார்கள் பெற்றோர் .

” யாருக்கு விசேச பூஜைன்னு நேத்து முகஞ் சுளிச்சீங்களே வாத்யாரய்யா .இதோ உங்கள் மகள் பிறந்தநாளுக்குத்தான் இன்னைக்கு விசேச பூஜைக்கு ஏற்பாடு செய்ய சொன்னேன் .என்ன பண்ணிடலாம் தானே …? ” பொன்னுரங்கத்தின் கேள்வியில் பலவேசம் ” மன்னிச்சிருங்கய்யா …” எனப் பதறிவிட்டார் .

முதல்நாள் அவர் வீட்டு ஆள் ஒருவருக்காக விசேச பூஜை ஒன்று செய்ய வேண்டுமென பொன்னுரங்கம் கூறியதும் , பலவேசம் பக்கத்து ஆட்கள் சலசலக்க துவங்கினர் .அதென்ன …இன்னமும் முழுவதுமாக முடிவடையாத கும்பாபிசேக கோவிலுக்குள. இந்த உயர் சாதி குடும்பத்து ஆட்களுக்கு ஒரு விசேச பூஜை …? இப்படித்தானே இது தொடர்ந்து கொண டே இருக்கும் .அந்த பூஜை நடக்க கூடாதென்ற முடிவுடன்தான் அவர்கள் அந்த காலையில் அங்கே மொத்தமாக கூடியிருந்தனர் .

” என் பிறந்தநாள் பூஜை …ஆரம்பிக்கலாமா …சித்தப்பா …மாமா …நீங்களும் எல்லோரும் வாங்க …” தனது உறவுமுறைகளை பூந்தளிர் அழைக்க , தனது மனதை தான் சொல்லாமலேயே புரிந்து கொண்ட மருமகளை பொன்னுரங்கம் பெருமையாய் பார்த்தார் .

தங்கள் சாதி பெண்ணிற்கான விசேச பூஜையை அவர்கள் எப்படி தடுப்பார்கள் …? அதுவும் அவர்களுக்கும் உரிய கௌரவம் கொடுக்கப்படும் போது …அனைவரும் மகிழ்ச்சியுடன் கோவிலுக்குள் வர , முன் சந்நிதி பிள்ளையாருக்கு விசேச பூஜை செய்யப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது .பூந்தளிர் , தனக்கு கார் வாங்கி தந்த்தை , தன்னை மகளாய் நடத்துவதை …அந்த ஊர் பள்ளிக்கூடத்தில் இனி அவர்கள் சாதி பிள்ளைகளுக்கும் நிறைய இடம் ஒதுக்க போவதை , அவர்களும் பள்ளியில் சரி சமமாக நடத்தப்பட போவதை …இதோ இந்தக் கோவில் அந்த ஊரின் எல்லா சாதியினருக்கும் பொதுவானதாக இருக்க போவதை தனது உறவுகளுக்கு  விளக்கினாள் .மிக மிக மனநிறைவுடன் போன தனது பக்க ஆட்களை பார்த்தபடி நின்றாள் பூந்தளிர் .




” நான் புள்ளி மட்டும்தான் வச்சேன் தாயி . நீ வளைத்து , நெளித்து அழகாக கோலம் போட்டு நிறைவாய் முடித்துவிட்டாய் ….” பொன்னுரங்கம் பாராட்ட …” நீங்கள். காட்டிய வழியில் நான் நடந்தேன் மாமா .அவ்வளவுதான் …” அடக்கமாய் பதில் சொன்னாள் .

” நல்லா வருவ தாயி …” அவள் உச்சந்தலையில் கை வைத்து ஆசீர்வதித்து விட்டு கிளம்பினார் .

” உண்மையிலேயே நீ சாதித்திருக்கிறாய் பூந்தளிர் ….” பாராட்டுதலோடு வந்தான் குமரன் .

” நான் மட்டுமாக இந்த சாதனையை செய்யவில்லை அத்தான் .என் கணவரிலிருந்து என் மாமனார் வரை என் குடும்பத்தவர் அனைவருக்கும் இதில் பங்கிருக்கறது ….”

” ம் …பெண்கள் …நீங்கள் சுலபமாக என் குடும்பமென வேறு பக்கம் போய்விடுகிறீர்களே ….? ” குறைபாடொன்று தெரிந்த்து அவன் குரலில் .

” அதனால்தான் …அந்த ..பிரிதலில் நிறைவு காணும் தன்மை பெண்களிடம் இருப்பதால் தான் இந்த பூமி இப்போதும் சரியாக சுற்றிக் கொண்டிருக்கிறது அத்தான் ….”

சளைக்காமல் பதில் சொன்னவளை கூர்ந்து பார்த்தவன் புன்னகைத்தான் .” சரிதான் பூந்தளிர் .நீ நிறைவை உணர்ந்திருந்தாயானால் அதுவே எனக்கு போதும் . இனி நான் எனக்கான பாதையில் போவேன் ….”

” யாருடன் பேசிக்கொண்டிருக்கிறாய் தளிர் …? இ …இது …இவர் …உன் உறவுக்கார்ர்தானே ….பெயர் கூட ….கு …குமரன்தானே ….? ” நக்கலாக கேட்டபடி வந்தான் குருபரன் .

இவனுக்கு நாங்கள் இருவரும் பேசினாலே மூக்கில் வியர்த்துடுமே …சலிப்பு பார்வை ஒன்றை குமரன் பூந்தளிருக்கு அனுப்ப , அவள் …

” பத்து நிமிசம் என்னை கண்ணில் காண்கலைன்னாலும்  பின்னா லேயே  தேடிட்டு வந்துடுவாரு ….” கணவனின் வருகையை நியாயப்படுத்தினாள் .

” என்னை தெரியாது உங்களுக்கு …? ” குமரன் குருபரனை ஊன்றி பார்க்க …

” தெரியாமலென்ன என் தளிரின் உறவுக்கார்ர் தானே நீங்கள் …? அன்று கூட சென்னைக்கோ எங்கோ வேலை பார்க்க போகப் போவதாக செல்லிக் கொண்டிருந்தீர்களே …? ” என்றதை தொடர்ந்து வந்த ” போகவில்லை ..? ” வார்த்தையை தொண்டைக்குள் விழுங்கினான் .

” ம் …போகத்தான் போகிறேன் .பூந்தளிர் சொன்னது போல் கும்பாபிசேகத்தை முடித்து விட்டு ….” நடந்தான் .

” சொன்னபடி செய்கிற பழக்கம் இவனுக்கு கிடையாதா …? ” என்ற கணவனை முறைத்தாள் பூந்தளிர் .

” அது ஏன் அவரை எப்போது பார்த்தாலும் விரட்டிக் கொண்டே இருக்கிறீர்கள் …? “

” அது …சில பேரோட மூஞ்சியை பார்த்தால் நல்லா மூஞ்சியிலேயே நாலு அப்பு அப்பனும் போலத் தோணும் ்எனக்கு இவனை பார்த்தால் அப்படித்தான் தோணுது …” என்றவன் பூந்தளிரின் பார்வைக்கு தன் இரு கைகளையும் உயர்த்தி சரி …சரியென சரண்டைந்தான் .

” அவனை விடு …நீ உன் காரில் எப்போது என்னை வெளியே கூட்டிப் போக போகிறாய் …? “

” ஏன் …இப்போ கோவிலுக்கு வரும்போது என்  கூட காரில்தானே வந்தீர்கள் …? “

” அத்தனை கும்பலோடா …? ம்ஹூம் …நீயும் , நானும் மட்டும் தனியாக …எப்போது ….எங்கே போகலாம் …? “

” அதெல்லாம் இப்போ இல்லை . கும்பாபிசேகம் முடிந்து பிறகுதான் ….”

” இல்லையில்லை …எனக்கு கொஞ்சம் உன்னோடு பேச வேண்டும் …”

” பேசனுமா …நம்ம வீட்டிலெல்லாம் பேசாமல் என்ன செய்கிறீர்களோ …? “

” ம்க்கும் நம் வீட்டில் நமக்கு தனிமை கிடைப்பதே ராத்திரி மட்டும்தான் .கிடைக்கிற கொஞ்ச நேரத்தையும் பேசி வீணாக்க முட்டாளா நான் …? ” குரலை குறைத்து காதல் பேசிய கணவனின் பேச்சில் உடல் சிலிர்த்தவள் …” சீ …” என்றாள் .

” ஏய்…தளிர் இங்கே வேலை அதுபாட்டுக்கு நடக்கட்டும் .நாம் யாருக்கும் தெரியாமல் நழுவி ஒரு மணி நேரம் மட்டும் வெளியே போய் வந்து விடலாம் ….” இவ்வளவு நேரம் ஊர் பெரிய மனிதனாக அத்தனை பொறுப்பாக காரியங்கள் பார்த்துவிட்டு இப்போது   குழந்தை போல் பிடிவாத்ததை பார் …மனதிற்குள் கணவனை கொஞ்சியபடி மதிய உணவிற்கு பின்னால் அனைவரும் அசரும் நேரம் போய் வந்துவிடலாமென இருவரும் திட்டமிட்டனர் .

சரியாக அவர்கள் பேசி வைத்த நேரத்தில் அனுராதா வந்து  நின்றாள் .”  பூந்தளிர் . உன்னிடம் பேச வேண்டும் …”

” உங்களிடம் பேச எனக்கு ஒன்றும் இல்லை .இப்போது நானும் என் கணவரும் வெளியே போகப் போகிறோம் ….”

” அப்படியா …கீர்த்தனா பற்றி பேசக் கூட உனக்கு ஒன்றுமில்லையா …? “




பூந்தளிருக்கு திக்கென்றது .இவளென்ன இதை சொல்லியே விரட்டிக் கொண்டிருக்கிறாள் …? இன்று இதை முடித்துவிட வேண்டும் .

” சரி வாருங்கள் .என் காரில் போகலாம் …” என அனுராதாவைகொஞ்சம்  கடுப்பேற்றி விட்டே அவளுடன் கிளம்பினாள் .இருவருமாக ஊருக்கு ஒதுக்குபுறமாக இருந்த அந்த பெரிய ஆலமரத்தினடியில் வந்து அமர்ந்தனர் .

” கீர்த்தனாவின் அப்பா யார் பூந்தளிர் …? ” அனுராதா நேரிடையாக விசயத்திற்கு வர பூந்தளிர் அதிர்ந்தாள் .

” என்ன உளறுகிறீர்கள் …? அவள் அப்பா கதிர்வேலன் மச்சான். …”

” ஓ …அப்படியா .இதை நான் மச்சானிடமே கேட்கவா …? கீர்த்தனாவின் அப்பா நீங்களா …என்று கேட்டால் அவர் என்ன பதில் சொல்லுவார் …? ” யோசிப்பது போல் ஒற்றைவிரலால் கன்னத்தை தட்டி பாவனை செய்தாள் .

இல்லை ….இதற்கு இவளை அனுமதிக்ககூடாது .கதிர்வேலனின் மனது ஏற்கெனவே குழம்பிய குட்டை .அவன் பொன்னியின் மீது வைத்திருக்கும் காதலால்தான் , இப்போதுதான் கொஞ்சம் தெளிந்து வந்து கொண்டிருக்கிறான் .இன்னமும் கொஞ்ச நாட்கள் அவர்கள் மூவருமாக தங்கள் குடும்பமென ஒன்றிவிட்டால் பிறகு பயமில்லை . இப்போதே …இவள் இது போல் ஏதாவது வாயை திறந்து வைத்தாளானால் பொன்னியின் வாழ்க்கை திரும்ப கோணலாகிவிடும் .தனக்குள. யோசித்து முடிவெடுத்தவள் குரலில் குழைவை சேர்த்துக் கொண்டு முகத்தை மென்மையாக்கினாள் .

” உங்களுக்கு கீர்த்தனா பற்றி என்ன தெரியும் …? “

” பொன்னிக்கா ரூம் பீரோவிலிருந்து  அவர்களின்  மெடிக்கல் பைலை எடுத்து படித்துவிட்டேன் .அதனால் எனக்கு எல்லாமே தெரியும் …”

அடுத்தவர் அறைக்குள் நுழைந்து அநாகரிகமாக …அனுராதாவை அறைய துடித்த தன் கைகளை இறுக்கி பிடித்துக் கொண்டாள் .

” ஏன் …இப்படி செய்தீர்கள் ..? “

” உங்கள் இருவருக்குள்ளும் ஏதோ ரகசியம் இருக்கிறதென தோன்றியது ்எதற்கும் நோண்டி பார்ப்போமே என பீரோவை தறந்து பார்த்தேன் .ஒரு லட்டு தேடப் போன எனக்கு கூடை கூடையாய் லட்டுகள் கிடைத்தது ….”

” சை …நீயெல்லாம் ஒரு பெண்ணா …? ” ஆவேசமாய் படபடத்து விட்டு , பிறகு நிதானமாகி …

” இந்த விசயமெல்லாம் எனக்கும் தெரியுமென்று கூட பொன்னியக்காவிற்கு தெரியாது .நமக்கு தெரியுமென்றாலே அவர்கள் உடைந்து விடுவார்கள் .அதனால் அனு அக்கா ப்ளீஸ் …நீங்கள் இதனை பற்றி மறந்துவிடுங்கள் …”

” எப்படி …அனு …அக்காவா …நானும் உனக்கு அக்கா என்றெல்லாம் உன் ஞாபகத்தில் இருக்கிறதா …? அந்த அளவு மரியாதை எனக்கு கொடுப்பாயா என்ன ..? “

பல்லை கடித்து ஆத்திரத்தை அடக்கியவள் …” தப்புதான் .இனி உங்களிடம் நான் மிக மரியாதையாக நடந்து கொள்கிறேன்… ” பணிவாக கூறினாள் .

” ம் …இது சரி . அப்படியே அந்த பள்ளிக்கூடத்து கரஸ்பான்டன்ட் போஸ்ட்டை என் பெயருக்கு மாற்றி எழுதி கொடு ….” இட்லி வேண்டாம் தோசை சுடு என்பது போல் சாதாரணமாக கேட்டாள் .

” என்ன கேட்டீர்கள் …? ” தனது தலையை உலுக்கிக் கொண்டாள் .தப்பானவளிடம் உட்கார்ந்து பேசினால் காதில் விழுவது எல்லாமே தப்பு தப்பாகவே இருக்கிறது .




” உன் புருசன் உனக்கு மாற்றி எழுதிக் கொடுத்த அந்த ஸ்கூல் கரஸ்பான்டன்ட் போஸ்ட்டை நீ எனக்கு மாற்றி எழுதிக் கொடுத்து விடு என்று கேட்கிறேன் …” ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தி உச்சரித்து விட்டு பூந்தளிர் அயர்ந்து நிற்கையில் …” மண்டையில் ஏறியதா …? ” எனக் கேட்டாள் .

அவள் கணவன் அவளுக்கு ஆசையாக கொடுத்த பதவி .அதை இவள் கையில் இவ்வளவு எளிதாக தூக்கி கொடுத்து விடுவதா …வெறுப்புடன் அனுராதாவை பார்த்தவள் ” முடியாது …” என அழுத்தமாக அறிவித்தாள் .தொடர்ந்து அந்த இடத்தை விட்டு நகரவும் ஆரம்பித்தாள் .

” அப்போ நான் கதிர்வேலன் மச்சானை பார்த்து பேசுகிறேன் …”

சிறிது தயங்கியவள் பிறகு ” பொன்னியக்காவின் வாழ்வு அவர்கள் கையில் , அவர்கள் சமாளித்து கொள்வார்கள் . நாங்கள எல்லோரும் அவர்களுக்கு துணை நிற்போம் ….”

” ம் …அவர்களுக்காக உன் வாழ்வை விட முடியாதென்கிறாய் .சரிதான் …நான் நாளை முதலில் கதிர்வேல் மச்சான் , பிறகு நம் மாமனார் ….அடுத்து மாமியார் …ஒவ்வொருவராக பார்க்கிறேன் ….” விசம்ம் வழிந்த்து அனுராதாவின் குரலில் .

கதிர்வேலனைத்தான் பொன்னியால் சமாளிக்க முடியும் . வீட்டு பெரிய மனிதர் பொன்னுரங்கத்தை , இன்னமும் பழமையிலிருந்து வெளி வராத சொர்ணத்தாயை …தங்கள் மகனின் வாரிசல்ல எனத் தெரிந்தால் குழந்தையையும் , பொன்னியையும் வீட்டை விட்டே விரட்டி விடுவார்களே …

” ஏன் …இப்படி செய்கிறீர்கள் …? ” பூந்தளிரின் குரல் கரகரத்தது .

அதனை திருப்தியாக கவனித்த அனுராதா ” நான் இந்த வீட்டில் நீ வருவதற்கு முன் படித்த மருமகளென்ற போர்வையில் வீட்டிலும் , வெளியிலும் ராணியாக வலம் வந்தேன். பொன்னி அக்கா , அத்தை எல்லோரும் என்னிடம் ஒரு பயத்துடனேயே பழகி வந்தார்கள் .அந்த பள்ளிக்கூடத்தையும் கையில் வைத்துக்கொண்டு இந்த ஊர்க்கார்ர்களையும் கூட அதட்டி வந்தேன் . ஆனால் நீ வந்த  ஐந்தே மாதங்களில் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிட்டாய் .முதலில் இந்த கீழ்சாதி பெண்ணால் நமக்கென்ன ஆபத்து வரப்போகிறது என உன்னை கவனிக்காமல் விட்டு விட்டேன் .இப்போதோ  நீ என் தலைக்கு மேலே வளர்ந்துவிட்டாய் .இனியும் உன்னை வெட்டாமல் விட்டு விட்டால் …அது எனக்கே ஆபத்தாக முடியும் ்அதனால் என் பாதையிலிருந்து துப்புரவாக விலகி போய்விடு ….”

” வேண்டாம் அனுக்கா .நாம் ஒருவரையொருவர் முறைத்துக் கொள்ளாமல் இனி ஒற்றுமையாக இருக்கலாம் . வீட்டு வேலைகள் , பள்ளியை கூட இருவருமாக சேர்ந்து கவனிக்கலாம் ….” நயமாக பேசினாள் .

” இந்த ஒற்றுமையாக , சேர்ந்து என்கின்ற வார்த்தைகளெல்லாம் எனக்கு ஆகாது .படிப்பறிவில்லாத பொன்னியிடமும் , கீழ்சாதி உன்னிடமும் ஒற்றுமைபட்டு வாழ்ந்து என் காலத்தை நகர்த்த வேண்டிய கட்டாயம் எனக்கில்லை .நான் இப்படித்தான் இருப்பேன் .பள்ளிக்கூடத்தை என்னிடம் ஒப்படைத்து விட்டு நீயும் , உன் பொன்னி அக்காவும் வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டு வீட்டுக்குள் விழுந்து கிடங்க .அப்பன் பேர் தெரியாத அந்த கீர்த்தனாவும் என் பையன்களிடம் பணிந்துதான் போகவேண்டும் .இத்தனை சொத்திற்கும் என் இரண்டு பையன்கள. மட்டும்தானே வாரிசுகள் .நானும் , என் கணவரும் , என் மகன்களும்தான் வரும் வருடங்களில் இந்த ஊரையே ஆளப் போகிறோம் ….” அனுராதாவின் தெளிவான திட்டத்தில் அசந்து போனாள் பூந்தளிர் .

,” பள்ளிக்கூடத்தை உங்களிடம் கொடுக்க என் கணவர் சம்மதிக்க மாட்டார் ….”

” நீ ஏன் அவரிடம் கேட்கிறாய் …? சத்தமில்லாமல் என் பெயருக்கு மாற்றிவிட்டு பிறகு என்னால் பள்ளிக்கூடத்தை நடத்த முடியவில்லை , நான் அந்த அளவு புத்திசாலி கடையாது என்று சொல்லடி . அதெல்லாம் உன் புருசன் நீ சொல்வதையெல்லாம் நம்புவான். அதுதான் நீ தலையை திருப்புகிற பக்கமெல்லாம் ஓடுகிறானே ….”

பூந்தளிர் தன் கைகளை நிதானமாக கட்டிக்கொண்டு அனுராதாவை உற்றுப் பார்த்தாள் .” நான் உங்களை கொஞ்சம் சாதாரணமாக நினைத்துவிட்டேன் . நானே சமாளித்துவிடலாமென நினைத்தேன் .ஆனால் நீங்கள. கொஞ்சம் விவரமானவர்தான் .இந்த பிரச்சினை என் கை மீறி போய்விட்டதால் , நான் என் உதவிக்கு என் கணவரை அழைக்க போகிறேன் ்இனி நீங்கள் அவரிடமே நேரிடையாக பேசக்கொள்ளுங்கள் ….” அழுத்தமாக கூறிவிட்டு தனது போனை எடுத்தாள் .

அவள் போனில் டயல் பட்டனை அழுத்தும் வரைபுன்னகையோடு   பார்த்திருந்தாள்  அனுராதா .பிறகு மெல்ல கேட்டாள் .” உன் கணவரிடம் நான் என்ன பேச பூந்தளிர் …? அந்த உழவன் மகனை பற்றி ஏதாவது பேசட்டுமா …? ” பூந்தளிர் தனது கையிலிருந்த போனை அதிர்ச்சியில் தவறவிட்டாள் .

” நீயும் அந்த உழவன் மகனும் ரொம்ப நாட்களாக பேஸ்புக்கிலேயே காதலித்து வருகிறீர்கள் போலவே …? “

” அபாண்டமாக பேசாதீர்கள் ….” பூந்தளிர் தனை மறந்து கத்தினாள் .

” எதற்கும்மா கத்துற …? நிதானம் ….கூல் ….காதல் சொட்ட கவிதை எழுதியிருக்கான் .உன் பிறந்தநாளுக்கு காதலாகவே கொஞ்சியிருக்கிறான் ….இன்று காலை வரை இரண்டு பேரும் காதல் பேசியிருக்கீங்க …”

” வாய்க்கு வந்தபடி பேசுறதை நிறுத்துங்க …இதெல்லாம் எப்படி தெரியும் உங்களுக்கு …? “

” பொன்னியக்கா பீரோவை நோண்டின மாதிரி உன் போனை நோண்டினேன் . அங்கே மாதிரியே இங்கேயும் பெரிய எதிர்பார்ப்பில்லாமல்தான் பார்த்தேன் . ஆனால் எனக்குஇப்போ  நேரம் நல்லா இருக்கு .அதுதான் பெரிய பெரிய விசயங்களெல்லாம் தானாக மடியில் வந்து விழுது ….”

இவளை போல் மூன்றாந்தர பெண்ணையெல்லாம் அருகில் வைத்திக்கொண்டு தனது மொபைலுக்கு பாஸ்வேர்டு செட் பண்ண தோணாமல் விட்ட முட்டாள்தனத்தை நொந்தாள் பூந்தளிர் .

” உன் அருமை  கணவருக்கு இந்த உழவன் மகனை தெரியுமா …? “

தெரியாது .தெரிய விடவும் கூடாது .குருபரன் மனைவி மேல் அதீத உரிமை வைத்திருப்பவன் . அவளோடு திருமணம் முடிக்கலாமென முன் எப்போதோ லேசாக பேசப்பட்ட  குமரனை இதோ இப்போது சற்று நேரம் முன்பு கூட அடித்து உதைக்கலாமா என யோசித்தவன் .அவள் இது போல் பேஸ்புக்கில் இருப்பதையெல்லாம் விரும்பாதவன் .அங்கே அவளுக்கு இப்படி ஒரு நட்பு இருப்பது தெரிந்தால் அவ்வளவுதான் ்முழுக்க முழுக்க அவளை வெறுத்து ஒதுக்கிவிடுவான் .முன்பு எப்படியோ …இப்போது பூந்தளிருக்கு மனம் முழுவதும் நிறைந்திருப்பது கணவனின் அன்பு மட்டுமே .அதன் சிறு துளியையும் இழக்க அவள் தயாரில்லை .

மரத்து போன மனத்துடன் பொன்னியை ஏறிட்டவள் ” நான் என்ன செய்ய வேண்டும் …? ” என்றாள் .




What’s your Reaction?
+1
18
+1
16
+1
0
+1
2
+1
1
+1
0
+1
9
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!