Serial Stories தேவ மல்லிகை பூவே

தேவ மல்லிகை பூவே-10

10

 உதயனும் பாரிஜாதமும் மீண்டும் மல்லிகை பந்தலை அடைந்தபோது அடர் இருளாகி விட்டது.காரிலிருந்து பாரிஜாதம் இறங்க தொடங்கிய போது “காலை கீழே வைத்தால் ஒடித்து விடுவேன்” கர்ஜிப்பாய் கேட்டது ஒரு பெண் குரல். திகைப்பாய் பார்க்க கோபத்தில் நெஞ்சம் ஏறி இறங்க கண்கள் பந்தமாய் எரிய இரண்டு இடுப்பிலும் கை ஊன்றி நின்றிருந்தாள் அத்தை கனகவல்லி.

“ஒரு கல்யாண ஆர்டர் அத்தை.அதை முடித்துவிட்டு அப்படியே கோவிலுக்கு போய்விட்டு வருகிறேன்”

“அப்பன் செத்து முழுசா பத்து நாள் ஆகலை.அதற்குள் கழுதைக்கு ஊர் சுத்த கேக்குதோ?”

” அத்தை…”

“என்னடி குரல உசத்துற?”

“இந்தாம்மா பதினாறு நாள் தீட்டு கழியலையே. அதுக்குள்ள கோவிலுக்கு போகலாமா?” இன்னொரு பெண் கேட்க பாரிஜாதம் விழித்தாள்.

” ஓ இந்த சம்பிரதாயம் எனக்கு தெரியாது. மன்னிச்சிடுங்க”

“ரத்த சம்பந்தம் 16 நாள் காரியம் முடிந்ததற்கு பிறகுதான் வீட்டை விட்டு வெளியில போகணும்ங்கிறதுமா தெரியாது?”

நீங்க எல்லோரும் அப்பாவுக்கு ரத்த சம்பந்தம் கிடையாதா? கேட்கத் துடித்த நாவை அடக்கியபடி தலை குனிந்து நின்றாள் பாரிஜாதம். கனகவல்லி கத்திய கத்தலுக்கு சரசரவென ஆட்கள் கூட ஆரம்பித்தனர்.பதினாறாம் நாள் சாவு தீட்டு கழிக்காமல் பாரிஜாதம் வீட்டை விட்டு வெளியேறியது பெரிய தவறென அனைவராலும் அலசி ஆராய்ந்து தீர்ப்பு கேட்கப்பட்டது.

இதற்கு பரிகாரம் சொல்லும் பொறுப்பு அந்த ஊர் கோவில் பூசாரியிடம் ஒப்படைக்கப்பட அடர்ந்த மீசையை முறுக்கியபடி முன் வந்தார் அவர்.”செத்தவங்க சாமிக்கு சமானம். அவர்களை மதிக்காமல் போனதால அவங்க குடியிருந்த இடத்துக்குள்ள  தீட்டு கழிக்கும் வரை நுழைய விட வேண்டாம்.சாமி கும்பிட்டு படையல் போட்ட பிறகு உள்ளே வரட்டும்”

“ம்ம்…உங்க அப்பா வீட்டுக்குள்ள உன்னை நுழைய விடாமல் வெளியில் நிறுத்தத்தான் இத்தனை பஞ்சாயத்தா?” முணுமுணுப்பான குரல் கேட்க திரும்பிப் பார்த்து உதயனை முறைத்தாள்.

அவன் இவ்வளவு நேரமாக இங்கே நடந்து கொண்டிருக்கும் விஷயங்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் கைகளை கட்டிக்கொண்டு காரில் சாய்ந்து நின்று கொண்டிருந்தான்.




“இப்போது என்ன கோணியை சுற்றிக்கொண்டு அந்த கிணற்றடியில் சுருண்டு கொள்ள போகிறாயா?”

“எனக்கு தெரியும்.நீங்க போங்க”

” அப்படி உன்னை விட்டு போவதானால் இந்த ஊருக்குள் வந்த அன்றே போயிருப்பேன்.வா…” உதயன் பாரிஜாதத்தின் கையை பற்றி இழுத்துக் கொண்டு போன இடம் பாட்டையாவின் வீடு.

“நீ ஏன் இங்கே வந்தாய்?முகம் சுளித்தார் பாட்டையா.

“உங்கள் வீட்டு பெண்தாத்தா.எங்கே போகச் சொல்கிறீர்கள்?”

“ஏன் அவள் அப்பன் வீடு என்ன ஆயிற்று?”

“தீட்டுக் கழிக்க வேண்டும் என்று அங்கே உள்ளே விட மறுக்கிறார்கள்”

பாரிஜாதம் சொல்லாதே என கண் ஜாடைகொண்டிருக்கும் போதே எல்லாவற்றையும் சொல்லி விட்டான்.

“கனகம்”  பாட்டையாவின் குரல் முரமுரத்ததில் நிச்சயம் கோபம் இருந்தது.

” எனக்கு இவள் முகம் பார்க்க பிடிக்காது.என் கண்ணில் படாமல் அப்படி ஓரமாக இருந்து கொள்ள சொல்”

“நான் தாத்தா ?” பவ்யமாக குனிந்து கேட்டான் உதயன்.

“அவள் சொந்தக்காரன்தானே நீ ?அப்படி இருந்து கொள்”

மறு மூளையை காட்டி விட்டு எழுந்து போனார்.

” விருப்பமற்றவர்களின் வீட்டிற்குள் இருந்து கொண்டு அவர்களை தர்ம சங்கடப்படுத்த நான் விரும்புவதில்லை. அதனால் தான் பாட்டையா விடமிருந்து ஒதுங்கி இருந்தேன்”

உதயன் தலையசைத்து மறுத்தான். “இல்லை பாரிஜாதம். நீ சொந்தங்கள்  வேண்டுமென நினைக்கிறாய்.அப்படியானால் அவர்களை விட்டு ஒதுங்கியிருந்தால் சொந்தம் வளராது.அருகிலிருந்து அவர்களுடைய வெறுப்பையும் வேகத்தையும் குறைக்க முயல வேண்டும்”

” சரிதான் என்னை என் சொந்தங்களுடன் சேர்த்து விட்டீர்கள்தானே? இனி உங்கள் வேலையை கவனிக்க போகலாமே?”

” உன் பிரச்சனை முடிந்ததா என்ன? பார்க்கலாம் உன் அப்பாவின் 16ஆம் நாள் காரியத்தில்”

“அதுவரை இருக்கப் போகிறீர்களா என்ன?”

” தாய்மாமன் நான் இல்லாமல் எப்படி?” அமர்த்தலாக சொல்லிப் போனான்.

“இங்கே ஏன் வந்தாய்?” மறுநாள் பாட்டையா வீட்டிற்கு வந்த கனகவல்லி கத்த “நீங்கள் ஏன் வந்தீர்கள் அத்தை?”எதிர் கேள்வி கேட்டாள் பாரிஜாதம்.

” ஏய் என்ன திமிராடி?மூஞ்சிக்கு நேராக கேள்வி கேட்கிறாய் ?”

“அப்பா வீட்டிற்குள் போகக் கூடாது என்றால் நான் வேறு எங்கே போவேன் அத்தை?”

“ஏன் அதுதான் நிறைய படித்திருக்கிறாயே.அப்படியே பட்டணத்து பக்கம் போய் ஏதாவது வேலை தேடிக்கொண்டு அங்கேயே இருந்து கொள்வது தானே?”

கனகவல்லி யோசனை சொல்ல படபடவென்ற கைதட்டல் சத்தத்தோடு  வந்தான் உதயன்.”ஆன்ட்டி நீங்க மைன்ட் வாய்ஸ்னு நினைச்சு சத்தமா பேசிட்டு இருக்கீங்க”




“இங்கே பார் நான் சொன்னது தான் முடிவு.வீட்டை விட்டு  எழுதிக் கொடுத்துவிட்டு சீக்கிரமே போய்விடு” கனகவல்லி மிரட்டினாள்.

” என்னை விரட்ட நினைக்கிறீர்களா அத்தை?சொத்துக்களுக்காகவா ?”

“அதற்காகவும்தான்…அத்தோடு என்னவோ தெரியவில்லை உன் மூஞ்சியை முதலிலிருந்து எங்களுக்கு பிடிக்கவில்லை. அப்படியே உன் அம்மாவின் மூஞ்சி உனக்கு.அவள் போலவே வீடு தங்காமல் வெளியில் திரிகிறாய்.இப்படி போன இடத்தில்தான் உன் அம்மாவை பார்த்து மயங்கி போய் என் அண்ணன் கல்யாணம் முடித்து கூட்டி வந்து விட்டார். அவள் மீது எங்கள் எல்லோருக்குமே வெறுப்பு.இப்போது உன் மீதும்”

“அம்மாவைப் போல் இருப்பதை தவிர நான் வேறு என்ன தவறு செய்தேன் அத்தை?”

” அவளும் தவறு. நீயும் தவறு தான். இத்தனை அழகு குடும்பத்திற்கு ஆகாது.நீ எங்கள் குடும்பத்து பெண் போன்றே இல்லை.எங்களை விட்டு தள்ளி போய்விடு”

” இல்லை அத்தை இது என் அம்மா அப்பா வாழ்ந்த இடம்.இங்கிருந்து நான் போக மாட்டேன்”

குரல் குறைத்து “குட்” என்று அவளை மெச்சினான் உதயன்.

” என் அண்ணனை என்ன செய்வீர்கள் அத்தை?சொத்தில் அவருக்கும் பங்கு உண்டே”

” அவனை எப்படி வழிக்கு கொண்டு வருவதென்று எனக்குத் தெரியும். நீ முதலில் கிளம்பு”

“அதென்ன ஐடியா ஆன்ட்டி?” அக்கறையாக கேட்டான் உதயன்.

” இந்தா பாருப்பா உனக்கும் எங்க குடும்பத்துக்கும் சம்பந்தம் கிடையாது.தேவையில்லாம எங்க வீட்டு விசயத்துல தலையிடாதே. குமரன் என் அண்ணன் மகன் அவனை எப்படி பேசி எங்க கூட வச்சிக்கிறதுன்னு எனக்கு தெரியும்”

” பொண்ணு கொடுக்க போறீங்களோ?” உதயன் யோசனையாக கேட்க கனகவல்லி திகைத்தாள்.

“இவர்களுக்கு மகள் இருக்கிறார்களா?” பாரிஜாதத்திடம் விசாரித்தான்.

“ஆமாம் சுந்தரவேணி”

” ஓ அப்படியே தானா ஆன்ட்டி? பாவம் நீங்கள்…”ரொம்பவும் பரிதாப பட்டான்.

“ஏன் பாரிஜாதம் அந்த சுந்தரவேணி குடும்பத்திற்கு ஏற்ற பெண் தானா? உன் அண்ணனுக்கு தான்மா கேட்கிறார்கள். நீ தானே பதில் சொல்ல வேண்டும்”

கனகவல்லி கோபத்துடன் பெரிய மூச்சுக்கள் விட பாரிஜாதம் உதயனை உள்ளே இழுத்துக் கொண்டு போய்விட்டாள்.”வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டீர்களா?”

” உன் அத்தையின் திட்டம் இதுதானென்பது உங்களுக்கு அதாவது உன் அண்ணனுக்கு தெரியுமா பாரிஜாதம்?”

“ம்…தெரியும். அண்ணனுக்கு சுந்தரவேணியை பிடிக்காது. அவளைப் பார்த்தாலே விலகிப் போவார்”

” ஹப்பா நல்ல செய்தி” பெருமூச்சு விட்டவனை புரியாமல் ஏறிட்டாள்.




” பாவம் குமரன் அவனுக்கும் இங்கே நிறைய கெடுபிடிகள்தான் போலும் .அதனால்தான்…”

” அதனால் தான்…?”

” சொல்கிறேன்.இப்போது எனக்கு வேறு சந்தேகம்.ஒரே அண்ணனின் இரண்டு பிள்ளைகளில் ஆண் பிள்ளையை மட்டும் தங்கள் குடும்பத்திற்குள் சேர்த்துக் கொள்வார்களா உன் அத்தை? காரணம் சொத்துக்களா பாரிஜாதம்? ஆண் பிள்ளைக்கு தான் சொத்து என்பதால் அதனை கைப்பற்றுவதற்காக…”

“அப்படி இல்லை. என்னவோ அப்பாவின் சொந்தங்கள் யாருக்கும் என்னை சிறு வயதில் இருந்தே பிடிக்காது.அதற்கான காரணம் எனக்குபுரியவில்லை”

உதயனுக்கு புரிந்தது. பாரிஜாதத்தின் அபார அழகு இந்த குடும்பத்தினரை அசரடித்து அமர வைத்திருக்கிறது.இத்தனை அழகை கடைசி வரை கட்டி காத்து குடும்பத்திற்குள் கொண்டு செல்ல முடியுமா என்ற பயம் இவர்கள் அனைவரின் மனதினுள்ளும் இருக்கிறது. முன்பு இதே நிலைதான் பாரிஜாதத்தின் தாய் மிருதுளாவிற்கும்.

“பாரிஜாதம் உனக்கு அந்த முத்துக்காளை மேல் ஏதாவது அபிப்பிராயம் இருக்கிறதா?” அவசரமாக கேட்டான் உதயன்.

” நீங்கள் கேட்பது புரியவில்லை”

” ஒருவேளை உங்கள் சொந்தத்தை காப்பாற்ற என்று… அவனை திருமணம்… என்று அப்படி எதுவும் எண்ணம் வைத்திருக்கிறாயா?” தனது இதயம் துடிக்கும் ஓசையை வெளிப்படையாக உணர்ந்தான் உதயன்.

பதிலின்றி அவனை கூர்ந்து பார்த்த பாரிஜாதம் அவன் இதயத்துடிப்பை மேலும் அதிகரித்தாள். “இது நல்ல ஐடியா போல் தெரிகிறதே” தலை சரித்து  தனக்குள் போல் முணுமுணுத்துக் கொண்டவளின்  பின்னந்தலையில் தட்டினான் உதயன்.

“என்ன கண்றாவி நினைப்பு மண்டைக்குள் ஓடுகிறது?” அதட்டினான்.

“சொந்தங்களை பேணிப் பாதுகாக்க வேண்டாமா ?அதற்காக என் அத்தானையே திரு….”சட்டென்று தன் அகன்ற கையால் அவள் வாயை பொத்தி இருந்தான.

” கண்டபடி பேசாதே” வாயோடு மூக்கும் சேர்ந்து பொத்தப்பட பாரிஜாதத்தின் முகத்தில் கண்கள் மனோகரமாய் முறுவலித்தன.அந்த புன்னகையை இனம் கண்டு கொண்ட உதயன் முகம் மென்மையானது.

‘இந்த ஆன்ட்டியுடன் உன்னால் இருக்க முடியுமா பாரு?” தன்மையாக கேட்டவனை ஒற்றை விரலாட்டி கைகளை எடுத்துவிட்டு தள்ளி நிற்குமாறு ஜாடை செய்தாள்.

மனமின்றி கையை எடுத்துக் கொண்டவன் ‘இது போலெல்லாம் நினைத்துக் கூட பார்க்காதே” குரலை செறுமிக் கொண்டான்.

“நான் நினைக்க வேண்டியதில்லை என் அத்தையே அப்படி சிறு நினைப்பு வந்தாலும் என்னை ஒரு வழி பண்ணி விடுவார்கள்” பாரிஜாதம் புன்னகைக்க மனதை அழுத்திய பாரம் அகன்று சத்தமாகவே சிரித்தான் உதயன்.

அந்த சிரிப்பு சத்தம் பக்கத்து அறையில் இருந்த பாட்டையாவின் காதுகளை எட்ட யோசனையோடு புருவங்களை நீவிக்கொண்டார் அவர்.




What’s your Reaction?
+1
38
+1
27
+1
1
+1
1
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!