Serial Stories நெஞ்சம் மறக்கவில்லை

நெஞ்சம் மறக்கவில்லை-20

20  

நெஞ்சம் மறப்பதில்லை,,,,,

மேற்கொண்டு ஒரு மாத காலம் ஓடிவிட்டது. ராஜீவும், வசந்தியும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு சுற்றுலா கிளம்பிவிடடார்கள். மாத இறுதியில் அவர்கள் இந்தியாவிற்கு செல்வதாய் இருந்தது. மலரும் அவர்களுடன் சென்று விடலாமா என்று யோசித்து, கடைசி நேரத்தில் அதைக் கைவிட்டாள். எல்லோரும் சென்றுவிட்டதாலும் பெரியம்மா தனியாக இருப்பதாலும் தன்னுடன் இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதாலும், புதிதாய் திருமணம் புரிந்து கொண்டு ஒரு குடும்பமாய் போகும் போது அவர்களுக்கு நடுவில் ஒரு தொந்தரவாய் போவதையும் அவள் விரும்பவில்லை, எனவே யாரிடமும் பேசாமல் தானுன்டு தன் வேலையுண்டு என்று இருந்தாள்.

வேலைக்குள் தன்னைப் புதைத்துக் கொண்டாள். ராஜீவும் ஊருக்குப்போய் விட்டதால், அவனுடைய அலுவல்களையும் ஆனந்தனே சேர்ந்து கவனிப்பது போல் இருக்க, முன்பைப்போல் ஆனந்தன் பேசுவது கூட இல்லை, அவ்வப்போது இவளைக் கண்டு ஏக்கப் பெருமூச்சு விடுவதோடு சரி, கார் ஓட்டுநர் முருகனும் ராஜீவுடன் போய் விட்டதால் மலர் வந்து போக தனி வண்டி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் மகேஷ் மட்டும் அவ்வப்போது காரணமில்லாமல் ஏதேதோ பேசுவான். ஆனால் அவள் கண்டு கொள்ளவே மாட்டாள். ஆனந்தன் கவனியாத நேரம் கண்கள் அவனை நோக்கிச் செல்வதை அவளாலேயே கட்டுப்படுத்த முடியாது. விதியை நொந்து கொள்வதா? சதியை நொந்து கொள்வதா என்ற நிலை அவளிற்கு!

அன்றைய வேலையெல்லாம் முடிந்து போக, புதிதாக மூன்று நிறுவனங்களுக்கு கொள்முதல் விலைப்பட்டியலை தயாரிக்க சம்பந்தமான விவரங்களை எடுத்துக் கொண்டு வெளியே வரவும், அவளின் கார் ஓட்டுநர் ஆனந்தன் அருகிலே நிற்பதையும் கண்டாள்.

மலர் இவருடைய மனைவிக்கு இது பிரசவ நேரமாம். வீட்டிலிருந்து தகவல் வந்திருக்கிறது அவர் கிளம்பபுகிறார்.





அப்படியா? பார்த்து போய் வாருங்கள் என்றாள் மலர்

உன் வேலையெல்லாம் முடிந்து விட்டதா? என்றான்

ஆச்சு…

உனக்கு ஆட்சேபணையில்லைன்னா, நான் அழைத்துப் போகட்டுமா?

மலர் யோசித்தாள் ஆனந்தனுடன் செல்வது ஒரு பக்கம் இதமாய் இருந்தாலும், மெல்ல மெல்ல அவன் பின்னாலேயே செல்கிற இந்த வெக்கங்கெட்ட மனதை அடக்கிட வேண்டும் என்பதற்காகவே இந்த அழைப்பை மறுத்தே தீரவேண்டுமென்ற வெறி அவளுள் எழுந்தது. அதே நேரம் மகேஷ் அந்தப்புறம் செல்ல, நான் மகேஷ் கூட போகிறேன். என்றாள்.

ஏன் என்னுடன் வருவதால் உன் கெளரவம் குறைந்து விடுமா?

குறைவது என் கெளரவம் இல்லை உங்கள் கெளரவம் தான். இத்தனை பெரிய ஆலைக்கு முதலாளி நீங்கள் தங்களிடம் கைகட்டி பணிபுரியும் ஒரு பெண்ணை அழைத்து செல்ல தலையெழுத்தா, யாராவது பார்த்தால் சிரிக்க மாட்டார்களா? இதோ நானும் மகேஷ்ஷிம் இங்கே ஒன்றாய் பணிபுரிபவர்கள் நாங்கள் ஒன்றாய் இணைந்து சென்றால், அந்த பேச்சு எழாதே.நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள.

ஆனந்தன் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை, மகேஷ்ஷை அழைத்து ஆனந்தனை மலரைக் கொண்டு போய் வீட்டில் விடுங்கள் என்று கூறிவிட்டு அடிபட்டவன் போல அவளை நிமிர்ந்து கூட பாராமல் சென்றுவிட்டான். மலருக்கும் அது ஏமாற்றமாய் தான் இருந்தது. ஆனந்தனுடன் தனிமையாய் செல்வது அத்தனை உசிதமாய் படவில்லை. அருகில் மகேஷ் இளித்தபடி நின்றிருந்தான். அடடா இவன் பரவாயில்லை தேவையில்லாமல் பேசுவான் எல்லாவற்றிக்கும் உம் கொட்டிக் கொண்டே போய் விடலாம் என்று அவனுடன் கிளம்பினாள் மலர். மனம் பூராவும் ஆனந்தனின் உருவமே வியாபித்து இருந்தது.

மலர் இரண்டாம் முறையாக மகேஷ் அழைத்த போதுதான் இவள் தெளிந்தாள் என்ன என்பதைப் போல் பார்த்தாள்.

மலர் எனக்கு சுத்திவளைச்சுப் பேசி பழக்கம் இல்லை. இதுபோல் இனிமே சந்தர்ப்பம் வாய்க்குமான்னும் தெரியலை, காரை நிறுத்தியிருந்தான் அப்போது, மெல்ல இருட்டு கவிழத் தொடங்கி இருந்தது. வீடும் இன்னும் கண்கெட்டும் தொலைவுதான் என்பதால் தைரியமாய் அவனைப் பார்த்து கேட்டாள் மலர்,

ஏன் வண்டியை நிறுத்தினீர்கள்?

சொல்கிறேன். மலர் நீங்க இங்கே வந்த நாள் முதலே நான் உங்களைக் காதலிக்க ஆரம்பித்துவிட்டேன். ஆனா அதை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியலை, இன்று நீங்களே என் காரில் வர சம்மதித்த போதுதான் முட்டாள் ஒரு பெண்ணே ஒப்புக் கொண்ட பிறகு உனக்கென்ன என்று தோன்றியது. நானும் உங்களை நேசிக்கிறேன். இனி என்னை ஏற்றுக்கொள்வதில் உங்களுக்கும் தயக்கம் இருக்காது தானே?! இதோ என் அறை இங்கே பக்கத்தில் தான் வாங்க போயிட்டு போகலாம்.

மலர் இதை சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை, தன் செயல் இத்தனை எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்று உணரவில்லை, பயத்தை காட்டிக்கொள்ளாமல் அவனிடம் நைச்சியமாய் பேசத் தொடங்கினாள். மகேஷ் நீங்க….

வேண்டாம் மலர் தயவு செய்து இப்போ பேச வேண்டாம். அறைக்கு கூட வேண்டாம் இங்கே காரிலேயே ஒரேயொரு முத்தம்…. அவன் இருட்டு தந்த தைரியத்தில் அவள் கையைப் பற்றி அவன் புறம் இழுத்தான்.

விடுங்க மகேஷ்….. அவள் உதறியதைப் பொருட்படுத்தாமல் ,,, இனியும் என்ன வெட்கம் மலர்.. என்று பிதற்றினான்.

இப்போ கையை எடுக்கறீங்களா, இல்லை நான் சப்தம் போட்டு ஊரைக் கூட்டவா….




அவன் வேகமாய் அவளின் உதடு நோக்கி குனிய, ஆனந்தன் காரின் வெளிச்சம் அவர்களை தொட்டது. மலரின் கையைப்பற்றியிருந்த மகேஷ்ஷைக் கண்டதும் காரை அவர்கள் அருகில் கொண்டு போய் நிறுத்தினான்,, அவனிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டாள் மலர், தன்னிடம் வந்த ஆனந்தனை நோக்கினாள்.

என்ன மலர் ஏதாவது பிரச்சனையா? இங்கே ஏன் நிற்கிறே?

அதெல்லாம் ஒண்ணுமில்லை, இருட்டுலே இந்த இடம் ரொம்பவும் அழகாய் தெரிந்தது. அதான் கொஞ்சநேரம் வண்டியை நிறுத்தச் சொன்னேன். மகேஷ் போவோமா என்று முன்பக்கம் அமர்ந்து கொண்டாள். மகேஷ்ஷிற்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி, முகம் கொள்ள புன்னகையுடன் வண்டியை எடுத்தான். ஆனந்தனின் இதழில் கசப்பான புன்னகை உருவானது.

நன்றி மலர், சின்னவர் முன்னாடி என்னைக் காட்டிக் கொடுக்காமல் இருந்ததற்கும், உன் விருப்பத்தை மறைமுகமாய் சொன்னதற்கும், நாளைக்கு நான் இதே இடத்தில் காத்திருக்கிறேன். நீ வந்திடு, என்று சொல்லிக்கொண்டே போனவனை நிறுத்தினாள் மலர்.

மிஸ்டர்.மகேஷ், இந்த ரோமியோ விளையாட்டெல்லாம் என்கிட்டே வேணாம். நான் எப்பவும் ஒரே மாதிரி இருப்பேன்னு நினைக்காதீங்க. இன்னைக்கு ஏதோ உங்களுக்கு நல்ல நேரம். இனியொரு முறை இப்படி நடந்தா மரியாதை கெட்டுடும். அதற்குள் வீடும் வந்து விடவே இறங்கினாள் வேகமாய். அவுட்ஹஸின் வாயிலில் ஆனந்தன் நின்றிருந்தது. இவளுக்கு வியப்பைத் தந்தது.

நீங்க என்ன இந்நேரத்தில் !

உன்னைப் பார்க்கத்தான்… உன்னுடன் ஒரு ஐந்து நிமிடம் பேசுவதற்கு எனக்கு அனுமதி கிடைக்குமா?

நான் மகேஷோடு வந்து இறங்கியது. அவனிற்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். அதைப்பற்றி ஏதாவது பேசினால், சூடாய் ஏதாவது கேட்க வேண்டுமென்று நிைன்ததிருந்தாள். ஆனால், ஆனந்தனின் உணர்ச்சிகளைத் துடைத்திருந்த முகம் அவளின் நினைவுகளை பொய்க்கச் செய்தது. மலர் டாக்டரிடம் இருந்து தகவல் வந்தது. உங்கப்பாவிற்கு நாளை மறுநாள் ஆபரேஷன் பண்ணப் போறாங்களாம். இந்தா என் . கைப்பேசி உங்க வீட்டுக்குப் போன் பண்ணி பேசு அவங்களுக்கு கொஞ்சம் ஆறுதலாய் இருக்கும். கைப்பேசியை அவளிடம் தந்துவிட்டு இறங்கி நடந்தவன் இரண்டு எட்டு சென்று நின்றான் மலர்….! ஒரு சின்ன விஷயம். புலிக்கு பயந்துகிட்டு , ஓநாய் குகைக்கிட்டே போய் நுழைஞ்சிடாதே! இதுக்கு மேலே நான் எதுவும் சொல்லத் தேவையில்லை, ஆனந்தன் இறங்கி நடந்து விட்டான். அவனைக் கஷ்டப்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகளில் கூட தானே தோற்றுப்போவதை போல் உணர்ந்தாள் மலர்.

கண்கள் கண்ணீரை மட்டுமல்ல, எல்லா உணர்வையும் பிரதிபலிக்கும். ஆனந்தனின் கண்கள் தான் பார்த்த வரையில் காதலையும், அன்பையும் தவிர, காமத்தையோ, விகாரத்தையோ பிரதிபலித்து பார்த்ததே இல்லையே?! ஆனால், பார்வதி ஆன்ட்டி கூறியதும். நீலாவுடன் ஆனந்தன் பேசியதும் இதையெல்லாம் வைத்துப் பார்த்தால், எந்தவொரு முடிவுக்கும் வர முடியாமல் தவித்தாள் மலர். மறுபடியும் குழப்ப கடலுக்குள் நீந்தினாள். பூஜையறையில் கடவுளைத் தொழுதபடி அமர்ந்திருந்தாள் மலர். தந்தையின் ஆபரேஷன் நல்லபடியாய் நடந்து முடிந்ததாக தாயிடம் பேசியபிறது, தன் வேண்டுதலை நிறைவேற்றிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்க இறைவனைப் பிராத்தித்தாள். எல்லா உதவியையும் செய்தது உங்க சின்ன முதலாளிதான் காலம் முழுக்க நாம அவருக்கு கடமைப்பட்டு
இருக்கோம் என்று அம்மாவின் குரல் இப்போதும் ஒலிப்பதைப் போல் இருந்தது.

யாரோ அழுவது போல் மெல்லிய ஒலி கேட்பது போல் இருந்தது. விளக்கின் திரியைக் குறைத்து வைத்துவிட்டு வெளியே வந்தாள். அடுப்படியில் இருந்து தான் அழுகை சப்தம் கேட்டது எட்டிப் பார்த்தாள். நீலா தான் அழுது கொண்டிருந்தாள். மலருக்குத் துணுக்குற்றது. அவளுடன் பேசுவதற்கு பிடிக்கவில்லையென்றாலும், பாவம் சிறு பெண் ஆசை வார்த்தைகளைக் காட்டி ஏமாற்றி இருப்பான் அவளும் என்ன செய்வாள் இது தான் ஆனந்தனுக்கு கை வந்த கலையாயிற்றே?!

நீலா ஏன் அழறே? என்னாச்சு?




அக்கா ! வெடித்தபடி மலரின் தோளில் சாய்ந்து கொண்டு அழுதாள் அவள் விழிகளில் சிவப்பேறி இருந்தது, அழுகை எதற்குமே தீர்வு கிடையாது எனக்கு என்ன பிரச்சனைன்னு சொன்னாத்தானே என்னால் ஆன உதவிகளை நான் செய்ய முடியும். நீலா மெல்ல மெல்ல நம்பிக்கை பெற்று பேச ஆரம்பித்தாள் அக்கா நான் ஒருத்தரை மனசார விரும்பினேன். கல்யாணத்துக்கு முன்னாடி அவர் எத்தனையோ கெஞ்சியும் வேறயெதுவும் கூடாதுன்னு கண்டிப்பா சொல்லிட்டேன். ஆனா அவர் நான் அவரோட சேர்ந்து எடுத்திட்ட போட்டோவை காட்டி மிரட்டி என்னை…. இன்னைக்கு இரவு முழுக்க அவனோட இருக்கணுமின்னு மிரட்டுறான்.

யாரு? ஆனந்தனா,,,, இத்தனை மட்டமா நடந்துக்கிறார்.

அய்யா அக்கா சின்னவரைப் பத்தி தப்பா பேசாதீங்க. அவரு தங்கம், அவரைப் பத்தி தப்பா சொன்னா நாக்கு அழுகிடும்,

அப்படின்னா நீ இத்தனை நேரம் பேசியது அவரைப் பற்றி இல்லையா?

இல்லைக்கா அன்னைக்கு நைட்டு நானும் அவரும் தனியா தோட்டத்திலே பேசிக்கிட்டு நின்னதை சின்னவர் பார்த்திட்டு என்னை சத்தம் போட்டார்.
அப்போதுதான் நீங்க எங்க இரண்டு பேரையும் பார்த்தீங்க….

அப்படின்னா உன்னை ஏமாத்தின அந்த ஆள் யாரு?

நீலா தன் கையில் உள்ள புத்தகத்தில் இருந்து ஒரு புகைப்படத்தைக் காண்பித்தாள். அதில் மகேஷ் சிரித்தபடி இருந்தான். இவனா மலர் அதிர்ச்சி அடைந்தாலும், வெளியே காட்டிக் கொள்ளவில்லை,

நீலா இவன் எப்படி உனக்குப் பழக்கம்?

எங்க பள்ளிக்கூடத்திற்கு பின்னாடி ஒரு விடுதியிருக்கு, அங்கேதான் இவரு தங்கியிருக்காரு. போற வர்ற வழியிலே பழக்கம் ஏற்பட்டு போச்சு.

இவன்தான் உன் கூட பழகுறான்னு சின்னவருக்கு தெரியுமா?

இல்லைக்கா அவர்கிட்டே பேசிட்டு வரும்போது தான் நான் சின்னவரைப் பார்த்தேன். கண்ணாடிக் கல்லை வைரமின்னு நினைச்சு நான் ஏமாந்திட்டேன். நீலா மறுபடியும் குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

பொறுக்கி! இந்த சின்னப் பெண்ணையும் ஏமாத்திட்டு என்னிடமும் காதல் பாஷை பேசியிருக்கான், இதை இப்படியே விடக்கூடாது என்று மனதிலே நினைத்தவள் ஏன் நீலா? இந்த வயசான காலத்திலே உங்க பாட்டியும் அப்பாவும் உனக்காகத்தானே வாழ்ந்திட்டு இருக்காங்க. அவங்க நம்பிக்கையை பாழ்படுத்தறாமாதிரி நீ நடந்துக்கலாமா?

வயது கோளாறுல தெரியாம தப்பு செய்திட்டு இப்போ விழிக்கிறேன்.

சரி அழாதே! இதை நான் பார்த்துக்கிறேன். அவன் உன்னை எங்கே வரச்சொன்னான்?

அவன் தங்கியிருக்கிற அறைக்கு! இன்று மாலை ஆறுமணிக்கு வரச் சொல்லியிருக்கார். இப்பவே மணி நாலாயிடுச்சு..

மலர் ஒரு முடிவிற்கு வந்தவளாய் சரி கிளம்பு போய்தான் பார்ப்போம் வா. என்று அவனிடம் போக்கா பேசி எல்லா ஆதாரத்தையும் வாங்கிட்டு வந்திடலாம் என்று கூறி நீலாவையும் அழைத்துச் சென்றாள் மலர். ஆனால் மகேஷ் எதற்கும் துணிந்தவன், என்று அப்போது அவள் உணர்ந்திருக்கவில்லை, ஆனால் உணரும் நிலை வந்தபோது காலம் கடந்து போய் இருந்தது.




What’s your Reaction?
+1
13
+1
19
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!