Serial Stories thanga thamarai malare தங்க தாமரை மலரே

தங்க தாமரை மலரே – 36

36

அந்த சமையல் ஆள் மிக இளைஞன் .முந்திய வருடம்தான் கேட்டரிங் முடித்து வந்திருந்தான் .அவனது தந்தை ஸ்வர்ணகமலத்தின் நெடுநாள் ஊழியர் என்பதனால் கடையின் உணவக ஒப்பந்தம் அவனுக்கு கொடுக்கப்பட்டிருந்த்து . அவனும் அதனை திறமையாகவே நடத்தி வந்தான் .மிகச் சுவையான , வகையான உணவு வகைகளை வாடிக்கையாளர்களுக்கு அளித்து வந்தான் .

அன்று கடை முதலாளி தனது தொழில் இடத்திற்குள் வருவதை பார்த்ததும் கண்கள் விரிந்தன அவனுக்கு .இங்கே அவன் ஹோட்டல் ஆரம்பித்த இந்த ஆறு மாதஙகளில் முதலாளி ஒரு முறை கூட இந்தப் பக்கம் வந்த்தில்லை . இன்றோ …அவன் வேகமாக வாயிலுக்கு ஓடி வந்தான் .

” வாங்க சார் …உள்ளே வாங்க சார் … ” தலை குனிந்து வரவேற்றவனை லேசான தலையசைவுடன் ஆமோதித்தபடி உள்ளே வந்தான் விஸ்வேஸ்வரன் .அவனுடன் வேலாயுதமும் , கமலினியும் .மூவருமாக ஒரு டேபிளில் அமர்ந்தனர் .

கை பிடித்து தள்ளு்முள்ளுவில் இருந்தவர்கள் வேலாயுத்த்தை பார்த்ததும் ஏதோ சொல்லி சமாளித்தனர் . ” இதோ இந்த டிசைன் பற்றி கேட்டுக் கொண்டிருந்தேன் அப்பா” விஸ்வேஸ்வரனால்  முறுக்கப்பட்ட தன் கையில் அணிந்திருந்த அன்றைய நாளுக்கான வளையல்களை காட்டி சொன்னாள் கமலினி.

” இது மீனாகாரி நகை அமைப்பு என்று சொல்லிக் கொண்டிருந்தேன் அங்கிள் ” விக்னேஸ்வரனின்  விளக்கத்தின் பின்னால் வேலாயுதத்தின் பார்வை மகளின் கை மீது ஓடியது .அவள் அணிந்திருந்த நகையை கண்டதும்  அவரது கண்கள் விரிந்தன.

” மிகவும் அழகான டிசைன்ஸ். இவற்றை எங்கிருந்து தருவித்தீர்கள் தம்பி ? ” 

” இது வாங்கவில்லை அங்கிள். நானே டிசைன் செய்தது. “

” ஓ… உங்களுக்கு மீனாகாரி டிசைன்ஸ் செய்யத் தெரியுமா ? ” சட்டென குழந்தையின் குதூகலத்திற்கு மாறிவிட்ட தந்தையின் குரலை வாஞ்சையாய் கவனித்தாள் கமலினி.

 ” ஓரளவு அங்கிள். அப்பாவின் நண்பர் ஒருவர் எனக்கு கற்றுத் தந்தார் ” 

” இந்த டிசைன்களின் தாயகம் பாரசீகம் தெரியும் தானே ? ” 




 

” ஆமாம் தாயகம் பாரசீகம். வளர்ந்தது ராஜஸ்தானில் .என்னுடைய மீனா குமாரி டிசைன்களில் பாரசீகத்தின் கலை தாக்கம் அதிகமாக இருக்கும். நான் அப்படித்தான் நகைகளை வடிவமைக்கிறேன் “

தீவிர தொழிலுக்கு மாறி விட்ட ஆண்களின் இந்த பேச்சை கத்தரிக்க கமலினி விரும்பவில்லை. விஸ்வேஸ்வரனின் இயல்பான இந்த பேச்சு அவளுக்குத் தேவை. அவளுடைய கருத்துக்களை மூளையில் ஏற்றும் இந்த அளவிலான அவனது நிதானத்தை அவள் விட விரும்பவில்லை.

” வாங்களேன் ஒரு காபி சாப்பிட்டு கொண்டே பேசுவோம் ” மொட்டை மாடியின் ஒரு ஓரமாக அமைந்திருந்த உணவகத்தை அவள்தான் காட்டினாள் .அதன் எதிரே தான் வேலாயுதத்திற்கான பயிற்சிக் கூடம் விஸ்வேஸ்வரனால் அமைத்துத் தரப்பட்டு இருந்தது .அங்கிருந்துதான் இவர்களை பார்த்து விட்டு வந்திருந்தார் அவர்.

மறுப்பை காட்டிய விஸ்வேஸ்வரனின் கண்களை சந்திக்காமலேயே தந்தையுடன் உணவகத்திற்கு நடந்துவிட்டாள் கமலினி. வேறுவழியின்றி விஸ்வேஸ்வரன் அவர்களை பின் தொடர்ந்தான்.

மூஞ்சியை எப்படி வைத்திருக்கிறான் பார் …மரத்தில் தொங்கும் எதுவோ  ஒன்றைப் போல கமலினி ஓரக்கண்ணால் விஸ்வேஸ்வரனின் இறுகிய முகத்தை பார்த்தபடி முனங்கினாள்.

மணக்க மணக்க அவர்கள் முன் காபி கப்கள் வைக்கப்பட்டன. குனிந்து தன் கப்பை பார்த்த கமலினி யின் கண்கள் விரிந்தன .நுரை பொங்க ஆற்றப் பட்டிருந்த அவள் கோப்பை காப்பியின் மேலே வெண்மை நிறத்தில் கிரீமினால்  இரண்டு இதயங்கள் வரையப்பட்டிருந்தன. கமலியின் பார்வை வேகமாக விக்னேஸ்வரனின் கோப்பைக்கு போனது .அங்கே டிக்காசன் மூலமாக கருப்பாக இரண்டு இதயங்கள் .அதைத் தொட்டு தோரணம் போல் குட்டி குட்டியாக சில இதயங்கள். இவைகளின் நடுவே லவ் என்ற ஒற்றை வார்த்தை.

” லவ் ” நா வளைத்து சத்தமின்றி கமலினி உச்சரித்து பார்க்க அதனை கவனித்த விஸ்வேஸ்வரனின் முகம் கடுத்தது .சட்டென தனது கோப்பையின் அருகே இருந்த ஸ்பூனை எடுத்து காப்பியுனுள் விட்டு கலக்கினான் .இதயங்கள் கலைந்து கரைந்தன .லவ்வும் சேர்ந்துதான்.

கமலினி அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் எவ்வளவு அழகான டிசைன் .இதனை ஒரே ஒரு நிமிட ரசிப்பு இல்லாமல் இப்படி சட்டென்று கலைக்க இவனுக்கு எப்படி மனது வந்தது ? 

” வெளி அழகை பார்த்து ஏமாந்துவிடக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்”  காபி கலக்கிய ஸ்பூனை டேபிள் மேல் போட்டுவிட்டு காபியை உறிய தொடங்கினான்.

” விஷ்வா ” அதட்டியது வேலாயுதம் . ” உங்கள் கவனம் எங்கே இருக்கிறது ? நான் எனாமல் பூச்சு பற்றி பேசிக் கொண்டிருந்தேன் ” அவர் இவ்வளவு நேரமும் இவர்களுக்கு இடையே நடந்த ரகசிய போராட்டத்தை கவனிக்காமல் தனது தொழிலிலேயே இருந்திருந்தார்.

” சாரி அங்கிள் .வேறு ஏதோ தேவையற்ற நினைவுகள். முட்டாள்தனமான அவற்றையெல்லாம் உதறி விட்டேன் .இப்போது நீங்கள் சொல்லுங்கள் ” கமலினியை தவிர்த்து லேசாக திரும்பி வேலாயுதம் பக்கம் பார்த்து அமர்ந்து கொண்டான்.

இது என்ன முரட்டுப் பிடிவாதம்… கமலினிக்கு  சோர்வாக வந்தது .இவனை எப்படி சமாளிக்க …? நெற்றிப் பொட்டை அழுத்தி விட்டபடி நிமிர்ந்து பார்த்தவள் சோகமான முகத்துடன் நின்றிருந்த அந்த சமையல் ஆளை  பார்த்தாள். கரைபட்டுக்கொண்டிருந்த தனது காபி டிசைன்களை பார்த்தபடி நின்றிருந்தான் அவன் . ஆம் வேலாயுதமும் விஸ்வேஸ்வரனும்  தங்கள் காபி கப்களை ஸ்பூனால் கலக்கி விட்டு குடித்துக் கொண்டிருந்தனர் .விஸ்வேஸ்வரனாவது பரவாயில்லை .என்ன டிசைன் என்று ஒரு நிமிடம் பார்த்தான். வேலாயுதம் கப்பை குனிந்து பார்க்காமலேயே ஸ்பூனை விட்டு கலக்கி விட்டார்.

” கட்டியான தங்கம் இருக்கும் இடங்களில் எனாமல் பூசும் போது மிக கவனமாக இருக்க வேண்டும் கொஞ்சம் தவறினாலும் வண்ணங்கள் திரி திரி ஆகி அந்த டிசைனை கெடுத்துவிடும் .அதேபோல் வலை போன்ற லேசான அமைப்புகளின் மீது எனாமல் கோட்டிங் கொடுக்கும்போது….”  இப்படி தொழில் பேசிக்கொண்டிருந்தனர் அவர்கள் இருவரும்.

தனது தொழிலுக்கான பாராட்டுக்காக நிற்பவனை நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தாள் கமலினி . ” ஹாய் அன்பரசு அதுதானே உங்கள் பெயர் ? எப்படி இவ்வளவு அழகாக காபி மேல் டிசைன் போடுகிறீர்கள்.  குடிக்கவே மனம் வரவில்லையே ” 

அன்பரசுவின் முகம் மலர்ந்தது . ” மிகவும் நன்றி மேடம் .கேட்டரிங் படிப்பின் போது இந்த டிசைனை நான் மிகவும் விரும்பி கற்றுக்கொண்டேன். எங்கே எந்த பங்சன்  என்றாலும் இந்த டிசைனுக்கு  மட்டும் காலேஜில் என்னை தான் கூப்பிடுவார்கள். மினிஸ்டர் வீடு திருமண விருந்து ஒன்றில் வந்திருக்கும் விஐபிகளுக்கு காபி மேல் இதுபோல் டிசைன் போடுவதற்காகவே என்னை அழைத்தார்கள். அங்கே அனைவரும் என்னை தேடி வந்து பாராட்டினார்கள்.  ” தனது உழைப்பிற்கான மிகச்சிறிய பாராட்டு எதிர்பார்ப்புத்தான் அந்த இளைஞனிடம்

கமலினி அதனைத் தயங்காமல் செய்தாள். தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்று அன்பரசுவின் கையைப்பற்றி குலுக்கினாள். ”  மிக அருமையான கலை நுணுக்கம் யூ ஆர் கிரேட் ” 

அன்பரசுவின் உதடுகளிலும் பற்கள் முளைத்தன . ” ஐயோ என்ன மேடம் சின்ன விஷயத்திற்கெல்லாம் இவ்வளவு பாராட்டிட்டு ….? ” நாணி கோணினான்.

” திறமை எங்கிருந்தாலும் வாய்விட்டு பாராட்ட வேண்டும். அதில் கஞ்சத்தனமே வைத்துக் கொள்ளக் கூடாது . ” சொன்னபடி அமர்ந்து தனது காபி கப்பை எடுத்து அவைகளின் மேல் இருந்த டிசைன்களை பார்த்தபடி மெல்ல காபியை உறிஞ்சினாள். வெண் இதயம் துளித் துளியாய் கமலினியின் இதழ் தொட்டு அவளும் ஐக்கியமானது.

அவளது இந்த செய்கையில் மேலும் மகிழ்ந்த அன்பரசு சந்தோஷத்துடன் திரும்பிப் போனான் .லேசான துள்ளலுடன் அமைந்த அவனது நடையை புன்னகையுடன் பார்த்தபடி திரும்பிய கமலினி உச்சி சூரியனாய் எதிரே அமர்ந்திருந்தவனை பார்த்தாள்.

இவன் எதற்கு இப்போது பரசுராம அவதாரம் எடுத்திருக்கிறான் ? புரியாமல் குழம்பினான்.”  அவன் நம்மிடம் வேலை பார்க்கும் ஸ்டாப் .அவனுக்கு ஈடாக கை குலுக்குவாயா நீ …? ”  தனது அவதார காரணத்தை லிப்டில் கீழே இறங்கும் போது முணுமுணுத்தான் விஸ்வேஸ்வரன்.

” நான் கூட இங்கே ஸ்டாஃப் தான் சார் .அதை மறந்து விட்டீர்கள் போல. ஒத்த தொழிலாளர்கள் ஒருவருக்கு ஒருவர் பாராட்டிக் கொள்வது இயல்பு தானே ?முதலாளிகள்தான் கண்டுகொள்ளாமல் கலக்கிக் கெடுப்பார்கள் ” கமலினி யின் நக்கலான பதிலில் மீண்டும் சினம் ஏறியது அவன் கண்களில்.

” என்னிடம் மட்டும் கரெக்டாக பதிலுக்கு பதில் பேசிவிடு. வாயாடி உன்னை ….” ஆத்திரம் மிக மீண்டும் அவள் கழுத்தை நெறிக்க வந்த அவன் கை தயங்கி நின்றது .இன்னமும் அவள் கழுத்தில் மிக லேசாக தெரிந்த சிவந்த கை தடங்களில் பார்வை பட்டு நின்றது

” கழுத்தைச் சுற்றி சாலை போட்டுக்கொண்டு நேற்று முழுவதும்  அம்மா சித்தியிடம் சமாளித்தேன் ” கமலினி முனுமுனுக்க கையை மடக்கி லிப்ட் பட்டனில் குத்தினான் அவன் .லிப்ட் கடக் கடக்கெனும்  குலுக்கலுடன் நின்றது. டக் டக் என்ற ஆணவ நடையுடன் லிப்ட்டை விட்டு வெளியேறிப் போனாள்.





அதன் பிறகு நத்தையாக நடந்த ஒரு வாரம் முழுவதும் விஸ்வேஸ்வரன் எப்போதும் இறுக்கமான முகத்துடன் அணுக முடியாதவனாகவே இருந்தான்.

தன்னை ஒரு உயிரினமாக கூட அவன் மதிக்கவில்லை என துயரத்துடன் தெரிவித்தாள் பாரிஜாதம் .இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும் என்ற வேகம் கமலினிக்கு வந்தது.

கடந்த சில  தினங்களில் அவள் முற்றிலும் புதிய விஸ்வேஸ்வரனை  பார்த்திருந்தாள் .இவனை மாற்ற முடியுமா ? என்ற சந்தேகம் இப்போது அவளுக்குள்ளும் வந்திருந்தது. எப்போது , எங்கே வைத்து , அவனை எப்படி அணுகுவது தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.

” ஸ்கேன் பார்க்க சொல்லிவிடலாமா மேடம்? ”  விற்பனை பெண் அவளிடம் கேட்டாள் .தன் கையை திருப்பி மணி பார்த்துவிட்டு ” டைம் ஆகிவிட்டது. சீக்கிரம் ஸ்கேன் பார்த்து அடுக்குங்கள் “உத்தரவிட்டாள் . பின் அவர்கள் வேலையை கண்காணித்தாள்.

ஒவ்வொரு நாளும் கடையை மூடும் முன் அங்கே அலங்காரத்திற்காக ஸ்டாண்டில் ஷோ கேசில் மாட்டி வைத்திருக்கும் நகைகளை ஸ்கேன் செய்து அவற்றின் வெயிட் எடையை சரி பார்த்து திரும்ப அடுக்கிய பின்பே கடையை மூடுவர். மறுநாள் காலை கடையைத் திறக்கும் போதும் இதே ஸ்கேனிங் எல்லா நகைகளுக்கும் இருக்கும் . ஒரு மில்லி தங்கம் கூட தவறாமல் இருப்பதற்காக இந்த ஏற்பாடு.

அந்தந்த தளங்களில் ஸ்கேனிங் பார்க்கப்பட்டு நகைகள் திரும்ப அடுக்கப்பட ,சரோஜா அனைவரையும் அனுப்பி வைக்கும் ஏற்பாடுகளில் இருக்க , கமலினி மெல்ல மாடி ஏறினாள். வேலாயுதம் மாலை 6 மணிக்கு வீட்டிற்கு கிளம்பி விட்டார். பாரிஜாதம் சௌபர்ணிகாவை  அழைக்க வென்று நான்கு மணிக்கே போய்விட்டாள். விஸ்வேஸ்வரன் இன்னமும் வீட்டிற்குப் போகவில்லை. அவன் மேலே வேலை பார்த்துக் கொண்டிருப்பதை கமலினி அறிவாள். 

கடையின் ஆட்டோமேட்டிக் ஷட்டர்கள் மெல்ல இறங்க துவங்கின . இனி அவற்றை மறுநாள் காலை தான் திறக்க முடியும் . கமலினி மொட்டை மாடியை அடைந்தாள். அங்கே புதிதாக அமைத்திருந்த நகை பட்டறையில் விஸ்வேஸ்வரன் வேலை செய்து கொண்டிருந்தான். கடந்த 10 தினங்களாக இரவு பகலாக அவன் அங்கே வேலை பார்த்து கொண்டிருக்கிறான் .திருவானைக்காவல் சிவலிங்கத்திற்கு தங்கக்கவச வேலையை அவன் பார்த்துக்கொண்டிருந்தான் .ஏதோ ஒரு மன வெறியுடன் இந்த வேலையை தான் மட்டுமே செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் அவன் இருப்பதாக வேலாயுதம் சொல்லியிருந்தார்.

இவனுக்கு ஏன் இந்த வெறி ?  நேரம் கடந்த பிறகும் இரவு முழுவதும் உட்கார்ந்து என  முடிக்கும் அளவு அந்த வேலையில் நாட்டமா ?  அல்லது சூழ்ந்திருக்கும் பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கும் மார்க்கமா ?  சிந்தித்தபடி அவன் அறைக்குள் நுழைந்தாள்.

இரண்டாக மடித்து போட்ட வெள்ளை நிற துணி மெத்தை மூட்டையில் அமர்ந்துகொண்டு , முன்னால் இருந்த மர பென்ஞில் தங்க தகடுகளை பரப்பி கைகளில் வைத்திருந்த தங்க ஊசி மூலம்  தகடுகளில்  வடிவங்களை செதுக்கி கொண்டு இருந்தான் விஸ்வேஸ்வரன்.

நுண்மையான  விஷயங்களை கவனிக்க

கண்களில் பொருத்திய லென்ஸுடன் இருந்தான் .இடையூறு வேண்டாம் என்று சட்டையை சுழற்றி வைத்திருந்தான். மிக லேசாக குளிர் பரப்பிக் கொண்டிருந்த குளிர்சாதன கருவியின் கடமையையும்  தாண்டி  அவனது திரண்டிருந்த தேகத்தில் ஆங்காங்கே உருண்டு திரண்ட வியர்வைத் துளிகள் அவனது உழைப்பை சொல்லின.

” விஸ்வா ”  அவளது அழைப்பு காதுகளில் விழுந்தும்  விழாதது போல் விஸ்வேஸ்வரன் குனிந்து தனது வேலையை பார்த்துக் கொண்டிருந்தான்.

அன்று கமலினி ஒரு முடிவு எடுத்தாள் விஸ்வேஸ்வரனின் தாய் ராஜசுலோச்சனாவை நேரடியாக சந்திப்பது என்று.




What’s your Reaction?
+1
25
+1
15
+1
1
+1
2
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!