Serial Stories thanga thamarai malare தங்க தாமரை மலரே

தங்க தாமரை மலரே – 30

30

விரிந்த விழிகள் இமைக்காமல் பார்த்திருந்தவளின் கண் முன் சொடக்கிட்டான் .” என்னாயிற்று கமலி ? ” 

 கமலினி இமைகளை படபடத்து தன் நிலைக்கு திரும்பினாள் . தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள் .தொண்டையை செறுமிக் கொண்டாள் .” தேவதை அது…இதுவென்று உயரத் தூக்கி வைத்து கொண்டாடவும் வேண்டாம் …பிறகு பொம்பளைதானே நீ என்று காலில் போட்டு  மிதிக்கவும்   வேண்டாம் .நாங்களும் உங்களைப் போன்ற சாதாரண மனிதப் பிறவிகள்தான்.எங்களுக்கும் ஆசா பாசங்கள் உண்டு . உணர்வுகள் உண்டு .அதனை நீங்கள் உணர்ந்து கொண்டாலே போதும் …” தலை குனிந்து தன் சேலையின் நுனி திருகியபடி சொன்னாள் .




விஸ்வேஸ்வரன் சேலையை திருகி கொண்டிருந்த அவள் விரலை எடுத்து விட்டான்.”  சரியாகச் சொன்னாய் கமலினி .ஆனால் இதனை நிமிர்ந்து நேராக என் முகம் பார்த்து தைரியமாக சொல். நிமிர்ந்து நில்… துணிந்து செய் இதுதான் ஒவ்வொரு பெண்ணும் பின்பற்றவேண்டிய தாரக மந்திரம் .சரிதானே சகியே ? ” அவனது விளக்கத்தின் முடிவிலான அழைப்பில் திகைத்து விழி விரித்தாள்.

” சகி என்றால் தோழி .நீ எனக்கு தோழி .நான் உனக்கு தோழன் .ஒருவரின் உள் மன உணர்வுகளை மற்றொருவருடன் தயங்காமல் பகிர்ந்து கொள்ளும் அளவிலான ஆழமான நண்பர்கள் நாம் .சரிதானே சகி ? ”  கேட்டதோடு தோழமையின் அடையாளம் போல் கையை நீட்டினான்.

கமலினி தயங்கவே இல்லை .விஸ்வேஸ்வரனது இந்த புது உடன்படிக்கை மறுத்தல் ஏதுமின்றி அவளால் ஒத்துப் போகக் கூடியதாக இருந்தது .அகன்ற அவன் கைகளை பற்றி குலுக்கினாள் .” உங்களுடன் தோழமையாக மட்டுமே இருப்பதில் எனக்கு எந்த அப்ஜெக்ஷனும்  இல்லை சார் ” விஸ்வேஸ்வரனின்  முகம் மலர்ந்தது .

” சரி இன்றிலிருந்து நாம் இருவரும் நண்பர்கள் “உற்சாகத்துடன் காரை எடுத்தான்.

 கமலினியாலும் விஸ்வேஸ்வரனை விட்டு உடனடியாக ஒதுங்க முடியாது .அவனது நட்பும் அவளுக்கு மிகத் தேவை .இந்த ஏற்பாடு அவளுக்கு மிக உகந்ததாக இருக்கவே கமலினியின் உற்சாகத்திற்கும் குறைவில்லை. அடுத்து வந்த இரு நாட்களும் விஸ்வேஸ்வரன் வேலை விபரங்கள் மட்டும் பேசி முதலாளியாக மட்டுமே நடந்து கொள்ள ஆசுவாசப் பெருமூச்சு கமலினி யிடம் .இப்படியே நாட்கள் நகர்ந்து விடாதா ..என்ற அவளது ஏக்கத்தை மூன்றாவது நாளே உடைத்தெறிந்தான் விஸ்வேஸ்வரன்.

” இந்த நயாகரா மாடல் கம்மல் ரொம்ப க்யூட்டாக இருக்கிறது சார் .இது உங்களது டிசைனிங் தானே…?  அழகாக யோசித்திருக்கிறீர்கள் ”  அருவியின் வழிதல் போல் சரம் சரமாக தங்க கோடுகளாக கீழே வழிந்து கொண்டிருந்த அந்த புது மாடல் கம்மலை கையில் எடுத்துப் பார்த்து சிலாகித்துக் கொண்டிருந்தாள் கமலினி .

அப்போதுதான் அது பட்டறையிலிருந்து செய்து முடித்து வந்திருந்தது. அதனை அவள் ஷோகேஸில் அடுக்க வேண்டும் அல்லது மாடலுக்காக அவளே அணிந்து கொள்ள வேண்டும். என்ன செய்யலாம் என யோசித்தபடி பார்த்துக் கொண்டிருந்தவளின் கையிலிருந்த கம்மலை வாங்கி சரோஜாவிடம் கொடுத்தான் .”இதனை முன்னால் ஷோகேஸில் வையுங்கள் மேடம் .” 

” ஏன் சார் புது மாடல் நான் போட்டுக் கொள்ள வேண்டாமா ? ”  கேட்டவளை கண்களுக்குள் பார்த்து மறுப்பாய் தலையசைத்தான்.

”  இல்லை உனக்கு இன்று வேறு வேலை இருக்கிறது. நாளை போட்டுக் கொள் .”

“. என்ன வேலை ..? அப்படியே  இருந்தாலும் புதிய மாடலான  இதனை  இன்றே வேறு யாரையாவது போட்டுக்கொள்ள சொல்லலாமே ” 

” ம்ஹூம் …இதனை  நீ தான் போட்டுக்கொள்ளவேண்டும்” கமலினியின் மனது  அபாய எச்சரிக்கை கொடுத்தது.

”  ஏன் அப்படி…? ”  கொஞ்சம் கோபத்தோடு கேட்டாள் .

”  உன் முகத்தை மனதில் வைத்து தான் நான் இந்தக் கம்மலின் டிசைனை உருவாக்கினேன். அடிக்கடி கற்பாறை போல் முகத்தை வைத்துக் கொள்வாயே…அந்த பாவனையைத்தான் மாடலாக எடுத்துக் கொண்டேன் . அதுபோன்ற ஒரு பாறை  முகத்தில் தங்க அருவி ஒன்று வழிந்தால்  எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து இந்த கம்மலை டிசைன் செய்தேன். இதனை முதன் முதலில் நீ தான் அணிய வேண்டும் ” 




கமலினி்க்கு  போன நிமிடம் வரை இருந்த அந்தக் கம்மலை அணிந்து பார்க்கும் ஆர்வம் வடிந்து போனது. இரண்டு நாட்கள்  ஒழுங்காக இருந்தான் .இன்று திரும்பவும் ஆரம்பித்து விட்டான் .கற்பாறை முகமாமே…?  இவனுக்கு என்ன தெரியும் என்னைப் பற்றி …? வாடிக்கையாளர்களும் கடை ஊழியர்களுமாக கசகசத்து கொண்டிருந்த அந்த இடத்தில் நேரடியாக அவன் முகம் நோக்கி முறைக்க கூட முடியாமல் தவித்தாள் கமலினி.

”  நான் அந்த கம்மலை போட்டுக் கொள்ளவே மாட்டேன் ”  அறிவித்தாள் 

” ரொம்ப நல்லது .அது அங்கேயே  ஷோவிலேயே இருக்கட்டும். யாரும் வாங்காமலா போய் விடப் போகிறார்கள் …? ” 

இத்தனை அழகான கம்மலை அதெப்படி விட்டுப் போவார்கள்?  அவனின் போக்கு போலவே சிந்தித்துவிட்டு தன்னைத் தானே குட்டி கொண்டாள் . ” பெரிய்ய கம்மல் …பெரிய்ய வடிவமைப்பு ..” அவன் காதுபடவே முனுமுனுத்தாள் .

விஸ்வேஸ்வரன் அவனது இடது தோளில் வலது ஆட்காட்டி விரலால் லேசாக எதையோ தள்ளி விட்டுக் கொண்டான் .” என்னவோ தூசு …” அவனது முணுமுணுப்பு .கமலினிக்கு தெளிவானது. அவளது வார்த்தைகளை  ஒற்றை விரலால் தள்ளிவிடுகிறானாம் …. பெரிய இவன் கமலினி பற்களை நற நற தாள் .

” எனக்கு என்ன வேலை…? ”  அவன் என்ன வேலை சொன்னாலும் அதை மறுக்க வேண்டும் என்ற எண்ணத்துடனேயே இந்த கேள்வியை கேட்டாள்.

” என்னுடன் வெளியே வரவேண்டும் ” அவனது பதிலில் மீண்டும் திக்கிட்டாள் .

” எங்கே …? ” 

” மலைக்கோட்டைக்கு .அங்கே நான் அவனை சந்திக்க வேண்டும்…” 

”  யாரை…? ” கமலினியின் வயிற்றினுள் கலவரப் பந்துகள் .

” உன் உட்பியை …”  ஒவ்வொரு எழுத்தையும் தெளிவாகத்தான்  உச்சரித்தான். ஆனாலும் கமலினிக்கு தன் கேட்டல் திறனில் சந்தேகம் வந்தது .

” எங்கே …? ” மீண்டும் கேட்டாள் .

” உனது உட்பியை போன் செய்து வரச்சொல். மலைக்கோட்டையில் நாம் மூவரும் சந்திக்கிறோம் ” இப்போது அதிகாரம் சுமந்து வந்தது அவன் குரல் .

” இல்லை .அதெல்லாம் முடியாது ” 

” ஏன் முடியாது ? உன்னுடைய பீரியட்ஸ் டைம் முடியட்டும் என்று தான் மூன்று நாட்களாக காத்திருந்தேன். இப்போது கோவிலுக்கு போவது உனக்கு எந்த தடையும் இல்லை தானே ? ” கமலினியின் முகத்தில் கூச்சம் வந்தது .ஆனால் அதனை வெளிக்காட்ட முடியாது .இவன் திரும்பவும் சொற்பொழிவாற்ற தொடங்கிவிடுவான்.உதடுகளை அழுந்தக் கடித்து கூச்சத்தை ஒதுக்கி நிமிர்ந்து நின்றாள் .

” இந்த சந்திப்பில் எனக்கு விருப்பம் இல்லை ” 

” அப்படி ஒருவர் …உனக்கு நிச்சயிக்கப்பட்டவர் இருக்கிறார்தானே ?” விஸ்வேஸ்வரனின் துருவல் பார்வையில் ரோசமாக நிமிர்ந்தாள் .

” ஏன் இல்லாமல் …அவர் பெயர் மணிகண்டன் .என் அப்பாவின் நண்பரின் மகன் .வெரி ஸ்வீட் மேன் …” 

” ஹா …அந்த வெல்லக்கட்டியைத்தான் சந்திக்க விரும்புகிறேன் …” 

” நக்கல் செய்கிறீர்களா ? ” 

” இல்லையேம்மா … இனிப்பென்று  நீதானே முன் மொழிந்தாய் .நான் ஜஸ்ட் வழி மொழிந்தேன் .அவ்வளவுதானே …? ” 

கமலினிக்கு டென்சன் ஏறியது .இவன் இப்போதே இந்தப் பேச்சு பேசுகிறானே …இவனை மணிகண்டனை சந்திக்க விட்டால் …அவள் தலை அவசரமாக ஆடியது .

” இல்லை முடியாது .அ…அவர் பெரிய ஆள் .நிறைய வேலை அவருக்கு. உங்களையெல்லாம் சந்திக்க மாட்டார் .” 

” அப்படி  எந்த தேசத்து ராஜா …? ” 

” திரும்பவும் நக்கல் …” 

” இல்லை .மீண்டும் உனது வார்த்தைகளேதான் .ஒரு நட்பு சந்திப்பிற்கு நேரமில்லாதளவு என்ன பெரிய மனிதரென்றுதான் கேட்டேன் ” 




” அவர் உங்களை போல் பணத்தில் பெரியவர் இல்லை .குணத்தில் உயர்ந்தவர் .அதைத்தான் குறிப்பிட்டேன் ” 

” வெல் …அந்தக் குணக்குன்றை நான் சந்திக்க வேண்டுமே …” 

” சொன்னால் புரிந்து கொள்ள மாட்டீர்களா ?  என்ன சொல்லி உங்களை அவருக்கு அறிமுகப்படுத்துவேன் ” 

” உன் நண்பனென்று சொல்லு .சக ஊழியனென்று சொல்லு .இல்லை எப்போதும் பிதற்றிக் கொண்டிருப்பாயே…முதலாளி முதலாளியென்று .அப்படியே கூட சொல்லிக் கொள் .எனது அறிமுகத்தில் எனக்கு அக்கறை இல்லை .அவனது அறிமுகம் தேவை எனக்கு ” 

எஃகென ஒலித்த அவன் குரலில் அவனது உறுதி தெரிய இவன் பின்வாங்கமாட்டானென கமலினிக்கு நிச்சயமாகிவிட அவள் இதழசைத்தாள் .

” சரி ” 

” ம் …வா போகலாம் ” 

” என்ன இப்போதேவா …? அவர் உங்களை போல பெரிய முதலாளி அல்ல .நினைத்த உடனே எழுந்து வருவதற்கு .ஒரு இடத்தில் வேலை பார்க்கிறார் .அந்த வேலை முடிந்த பின்தான் அவரை பார்க்க முடியும் .இன்று மாலை அவரை வரச் சொல்கிறேன்.  அப்போது பார்க்கலாம் . வாருங்கள் மேடம் .என்ன பார்க்கிறீர்கள் …? ” தங்க ஆபரணங்களை வைப்பதும் எடுப்பதுமான பாவனையில் அவனிடம் இது வரை பேசிக் கொண்டிருந்த கமலினி இதுதான் முடிவென பேச்சை முடித்து விட்டு கடைக்குள் நுழைந்த கஸ்டமரிடம் போய் விட , விஸ்வேஸ்வரன்வேறு வழியின்றி மாடி ஏறினான்.

” தேங்காய் , பழம் வாங்கிக் கொள்ளலாம் கமலினி …” காரை நிறுத்தி விட்டு கோவிலுக்குள் நுழைந்த போது அருகிலிருந்த கடைக்கு நடந்தான் விஸ்வேஸ்வரன் .மூன்று மாதங்களுக்கு முன்பு இதே கோவிலுக்கு பர்சில் பணமின்றி வெறும் கற்பூரம் வாங்கி மலையேறியது நினைவு வந்த்து கமலினிக்கு .

இப்போது அவளது பர்சும் நிறைந்திருக்கிறது . சுவாமிக்கென நிறைய வாங்க ஆளும் அருகிலிருக்கிறது .நினைத்து விட்டு தன்னையே கொட்டிக் கொண்டாள் .அவன் அவனது ஏதோ வேண்டுதலுக்காக தேங்காய் , பழம் வாங்குகிறான் .உனக்கென என்ன  தப்பான எண்ணம் …? 

” உள் மனது ஆசை ஏதாவது இருந்தால் சுவாமியிடமாவது அதை தவறாமல் தெரியபபடுத்தி வேண்டிக்கொள் கமலினி . ரொம்ப சக்தி வாய்ந்த தெய்வம் இவர் ” தட்டு நிறைய தேங்காய் , பழங்கள் , மாலையுடன் வந்த விஸ்வேஸ்வரன் சொல்ல , உள்ளுக்குள் ஊசி நுனியாய் ஓர் ஏக்கம் ஆரம்பித்து மனமெங்கும் பரவ தொடங்கியது .

மன ஏக்கம் வெளித் தெரியாமல் இருக்க கால்களுக்கு விரைவு கொடுத்தவளை ” அட ஏன்மா இத்தனை வேகம் …யார் மேல் கோபம் …? ” சீண்டியபடி  பின் தொடர்ந்தான் விஸ்வேஸ்வரன்.

படிகளில் ஏற ஏற கமலினியினுள் அன்று சௌபர்ணிகாவை …பாரிஜாத்த்தை சந்தித்த நினைவு . இதோ …இந்த தெய்வ சந்நிதானத்தில் மனம் லேசாகும் இந்த இயற்கை சூழலில் இவனிடம் பேசி விட்டாலென்ன …? கமலினி அவனை திரும்பிப் பார்க்க அவன்…

” எங்கே உன் ஆள் …? என அவளுக்கு எளிதாக வெறியேற்றிக் கொண்டிருந்தான் .

அவனுடனான வாக்குவாதங்களை தாண்டி …அன்று இங்கே பாரிஜாத்த்தை சந்தித்ததை மணிகண்டன் பேசிவிடுவானோ என்ற பதட்டம் பரவ , கமலினியின் மனம் அலறியது .இல்லை இப்படி பட்டென போட்டு உடைக்கும் விசயமல்ல அது …நிதானமாக நேரம் பார்த்து பக்குவமாக இவனிடம் பேச வேண்டியது …நகம் கடித்து அவள் அவசரமாக யோசித்தாள் .

” அவருக்கு வேலை முடியவே ஏழு மணி ஆகிவிடும் .உங்களுக்கு அவசர வேலையிருந்தால் நாம் சாமி கும்பிட்டு விட்டு கிளம்பலாமா ? ” பவ்யமாக கேட்டாள் .

விஸ்வேஸ்வரன் கையிலிருந்த அர்ச்சனை தட்டுடன் மலையின் பக்கவாட்டு பாறை பகுதிகளுக்கு நகர்ந்து ஒரு பாறையை தேர்ந்தெடுத்து சம்மணமிட்டு அமர்ந்து கொண்டான் . 

” எனக்கு எந்த வேலையும் கிடையாது .நாம் இன்று மணிகண்டனை சந்தித்து பேசி விட்டுத்தான் போகிறோம் ” உறுதியாக அறிவித்தான் .

What’s your Reaction?
+1
20
+1
22
+1
3
+1
2
+1
3
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!