Serial Stories uravu solla oruvan உறவு சொல்ல ஒருவன்  

உறவு சொல்ல ஒருவன் – 12

                                             12

ரேச்சலின் குத்தும் பார்வையில் சத்யமித்ரா தனது இடையை சுற்றியிருந்த கிறிஸ்டியனின் கைகளை விலக்க முயல , அவனோ தனது பிடியை இறுக்கமாக்கி அவளை தன்புறம் இழுத்துக்கொண்டு இடது கையை உயர்த்தி ரேச்சலுக்கு ” ஹாய் …” என்றான் .

” என்ன கிறிஸ்டி …லைப் ரொம்ப நல்லா போகுது போல …? ” கிண்டலாக கேட்டாள் அவள் .

” ஆமாம் ரொம்ப நாட்களுக்கு பிறகு மிகவும் அருமையாக …”




” ம் …என்ஜாய் பண்ணு .இத்தோட கொஞ்சம் என்னையும் நினைவில் வைத்துக்கோப்பா …” கெஞ்சல் போல் அவள் கைகளை கும்பிட ,

” உன்னை மறக்க முடியுமா டியர் …” கேலியாக கேட்டு அவள் காதுகளை திருகினான் .

எங்கே இப்போதெல்லாம் என் ஞாபகம் உனக்கு வருவதே இல்லையே …”

இவனென்ன இப்படி என்னை அணைத்துக்கொண்டு அவளை கொஞ்சுகிறான் .எப்படி முடிகிறது…?

.அழுத்தமாக இடையை சுற்றியிருந்த அவன் கரங்கள் சுடத்தொடங்க அவனை உதற முனைந்தாள் .எளிதாக அவளை தடுத்தபடி மேலும் தன் பிடியை இறுக்கிக்கொண்டு …

” இல்லையே இதோ இப்போது கூட உன்னைத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன் .உன் திறமையை , வேகத்தை நினைத்தபடிதான் பறந்து கொண்டிருந்தேன் ” பறப்பது போல் கைகளை ஜாடை காட்டி இறக்கியவனை முறைத்தபடி அவனது பிடியிலிருந்து விலகியிருந்தாள் சத்யமித்ரா .

அவளை நினைத்துக்கொண்டு என்னுடன் பறந்தாயா …? அது தெரியாமல் நான் ஏதோ கற்பனையில் பறந்து கொண்டிருந்தேனே …

” சத்யா …ரேச்சல் ….” என ஏதோ சொல்ல ஆரம்பித்தபடி மீண்டும் அவளை தன் அணைப்பில் இழுத்துக்கொள்ள முயல …

” எதுவாக இருந்தாலும் தொடாமல் தள்ளி நின்று பேசுங்கள் …” சீறினாள் .

வெறித்த பார்வையுடன் கிறிஸ்டியனும் , விநோத பார்வையுடன் ரேச்சலும் அமைதியாக அவளை பார்க்க , சத்யா தன் பார்வையை தூரத்து மலைத்தொடர்களுக்கு மாற்றிக்கொண்டாள் .

விரும்பத்தகாத ஒரு அமைதி அங்கே சூழ , அதை உடைப்பது போல் …

” ஹாய் ப்ரெண்ட்ஸ் ” என்ற கூச்சலுடன் வந்தான் ஒரு இளைஞன் .

அவன் அவ்வளவு நேரமும் அங்கே இருந்தவன்தான் .அங்கிருப்பவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தவன் .அங்கிருந்த டிரைனிகளுக்கு தலைவன் போலிருந்தவன் .

” என்ன கிறிஸ்டி என்னை அறிமுகம் செய்ய மாட்டாயா …? ” அவன் பார்வை சத்யமித்ராவை ஊடுறுவியது .

” இது சத்யமித்ரா .இது கண்ணன் .உங்கள் தமிழ்நாடுதான் …” எளிமையாக அறிமுகத்தை முடிக்க ..

” என்னப்பா இவ்வளவு தானா என் அறிமுகம் …ஹாய் சிஸ்டர் ….” என நீண்ட கைகளை தன் தாய்மொழி கேட்ட சந்தோசத்தில் பற்றி குலுக்கினாள் சத்யா .

” உங்களுக்கு எந்த ஊர் …? “

” திருநெல்வேலி பக்கம் .நீங்க …? “

” அப்பாவுக்கு கோயம்புத்தூர் .அம்மா கும்பகோணம் .நாங்க இருந்த்து சென்னை …”

” ஓ…கும்பகோணத்தில் எங்க சித்தி இருந்தாங்களே .உங்க அம்மா அங்கே எங்கே இருந்தாங்க …? “

தொடர்ந்து இருவரும் தங்கள் பூர்வீகம் பற்றிய ஆராய்தலில் இறங்க ” ஸ்டாப் …ஸ்டாப் ” என இடையில் வந்தாள் ரேச்சல் .




” கிறிஸ்டிக்கு பிரச்சினையில்லை .அவனுக்கு தமிழ் தெரியும் .இல்லையென்றாலும் அவன் சத்யாவை பார்த்துக்கொண்டே பேசாமலேயே இருந்துவிடுவான் .ஆனால் நான் அப்படியில்லையே .என்னை வைத்துக்கொண்டு நீங்கள் புரியாத மொழி பேசினால் எப்படி …? ” என கண்ணனிடம் சிணுங்கினாள் .

” அப்போது நீ கிறிஸ்டி மாதிரி இல்லையா செல்லம் .பார்க்க முடியாத அளவு நான் அவ்வளவு மோசமாகவா இருக்கிறேன் …? ” கண்ணனின் கொஞ்சல் சத்யமித்ராவிற்கு எதையோ உணர்த்த அவள் கிறிஸ்டியனை திரும்பி பார்த்தாள் .அவனோ முன்பு சத்யா பார்த்துக்கொண்டிருந்த மலைத்தொடர்களை பார்த்துக்கொண்டிருந்தான் .

கொஞ்சநேரம் முன்பு மிக அழகாக தெரிந்த அந்த மலைத்தொடர்கள் இப்போது மிக அசிங்கமாக சத்யாவிற்கு தெரிந்தன. அப்படி என்ன கண்றாவி இருக்கு அங்கே …? இப்படி உத்து ..உத்து பார்க்க …

அவன் தன்புறம் திரும்புவானென கொஞ்ச நேரம் அவனை பார்த்தபடி நின்றாள் .அவனோ அந்த எண்ணம் இல்லையென சொல்லாமல் சொன்னபடி தனது பார்வையை வானில் பறக்கும் க்ளைடர்களுக்கு மாற்றியிருந்தான் .

போடா அந்த க்ளைடர்களையே  கட்டிக்கொண்டு அழு …அவனுக்கு வெளிப்படையாக உதட்டால் அழுத்தம் காட்டிவிட்டு திரும்பியவள் அரண்டு போய் பின்வாங்கி நகர்ந்து கிறிஸ்டியன் மேலேயே மோதிக்கொண்டாள் .

அருகில் இவர்களிருவரும் இருப்பதையே மறந்து ஒருவர் தோளில் ஒருவர் கை போட்டு எதிரெதிரே நெருக்கமாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து நின்று மென்குரலில் பேசிக்கொண்டிலுந்தனர் கண்ணனும் , ரேச்சலும் .

அவர்களது நெருக்கத்திற்கு சத்யாவிற்கு தொண்டை உலர்ந்த்து .ஓரக்கண்ணால் கிறிஸ்டியனை பார்க்க , அவன் இவர்களை பார்க்காமல்

” வாங்க கார்டன் ஹவுசிற்கு போகலாம் …” முன்னால் நடந்தான் .

மீண்டும் அவர்களை பார்க்க வேண்டி வந்து விடுமோ ..எனப் பயந்து சத்யா வேகமாக கிறிஸ்டியனின் பின் நடந்தாள் .தங்களது நெருக்கத்தை குறைத்துக் கொள்ளாமல் பின்தொடர்ந்த்து ரேச்சல் – கண்ணன் ஜோடி .

சுற்றிலும் கண்ணாடிகளை பதித்து உள்ளே பல வகை
பூச்செடிகளை அடுக்கி , ஆங்காங்கே அமர்ந்து இளைப்பாற மர பெஞ்சுகள் போடப்பட்டு …அந்த கார்டன் ஹவுஸ் மிக அழகாக இருந்த்து .

” ரேச்சல் இந்த கிளைடரில் சாம்பியன் .நிறைய பந்தயங்களில் கலந்து கொண்டு ஜெயித்திருக்கிறாள் .டேவிட்டிற்கும் , எனக்கும் இந்த பாரா க்ளைடிங்கை அறிமுக படுத்தியவளே அவள்தான் .கூடவே கண்ணனையும் .கண்ணன் அவளுடைய டிரைனர் .எங்களுக்கும் அவன்தான் டிரைனர் …”

ஒருவரோடு ஒருவர் உரசியபடி அந்த காதல் ஜோடி மெல்ல நடந்து வர , முன்பே வந்துவிட்ட கிறிஸ்டியன்  இளம் மஞ்சளில் பெரிய பெரிய இதழ்களுடன் சுற்றிலும்  பூத்திருந்த அந்த மஞ்சள் மலர்களை பார்த்தபடி கூறிக்கொண்டிருந்தான் .

அவனெதிரே அமர்ந்து அவனையே பார்த்தபடி இருந்த சத்யமித்ரா ” சாரி நான் தப்பாக …வேறு மாதிரி நினைத்துவிட்டேன் …” என்றாள் .

” என்ன நினைத்தாய் …? ” பார்வை இப்போது அவள் முகத்திற்கு வந்திருந்த்து .

” அது ..நான் ..வந்து …” தடுமாறியவளை

” சொல்லு …இதையாவது மனது விட்டு சொல்லு …” சொல்லாமல் விடமாட்டேனென்பதை போல் அதட்டினான் .

” நீங்களும் ரேச்சலும் திருமணம் செய்து கொள்ள போவதாக ….” முடிக்காமல் ….

” அப்படி நான் சொன்னேனா …ரேச்சல் சொன்னாளா ? “

” உங்கள் அத்தை …” ஆரம்பித்துவிட்டு உதட்டைக் கடித்து நிறுத்தினாள் .திருமணம் செய்து கொள்ள போகிறவர்களல்லவா சொல்லவேண்டும் .

” உனக்கு மனதின் மெல்லிய உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாதா சத்யா …? ” துயர் தெரிந்த்து அவன் குரலில் .

புரிந்து கொண்டதால்தானே இவ்வளவு பரிதவிப்பு .சத்யா கைவிரல்கள் ஒவ்வொன்றாக மடித்து சொடுக்கெடுக்க தொடங்கினாள் .

” இரண்டு வருடமாக கண்ணனும் , ரேச்சலும் காதலித்துக் கொண்டிருக்கின்றனர் .வீட்டில் சொல்வதற்காக நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் …”

” சீக்கிரம் சொல்லிவிடலாமே …பெரியவர்கள் நிறைய ஆசைகளை வளர்த்துக்கொண்டிருக்கின்றனரே …” கை நகங்களை ஆராய்ந்தபடி கேட்டாள் .

” அப்படி படக்கென்று சொல்லிவிட முடியாது சத்யா .முன்பே டேவிட் விசயத்தில் அவர்கள் ஆசை நிறைவேறாத மனக் காயத்தில் இருக்கிறார்கள் அவர்கள் .இதில் நாம் நிதானமாகத்தான் இருக்க வேண்டும் …”

” நாட்களை கடத்துவதால் அவர்கள் மனதில் நம்பிக்கை உண்டாகிவிடும் கிருஸ் …” தன் இரு கைகளையும் சேர்த்து வைத்து நகங்களை பார்த்தபடி சொன்னாள் சத்யமித்ரா .




தனது பேச்சிற்கு பதிலின்றி போய்விட நிமிர்ந்து பார்த்தவள் அவளையே பார்த்தபடியிருந்த கிறிஸ்டியனின் பார்வையில் …உச்சந்தலையில் ஐஸ் வைத்தது போல் மேனி முழுவதும் சிலிர்க்க உடல் நடுங்கி குளிர்ந்தாள் .

திடீரென சுற்றுப்புறத்தில் குளுமையை உணர்ந்தவள் கைகளை மடக்கி கட்டிக்கொண்டு அவனை பார்க்காது “இங்கே இப்படித்தான் திடீர்னு க்ளைமேட் மாறுமா ..? குளிருது ..” என முணுமுணுத்தாள் .

” எனக்கு சூடாக இருக்குது …தகிக்குது …” அவனோ பார்வையை நகற்றும் வழியைக்காணோம் .

குளிரும் …சூடும் ….என உணர்வுகள் வரையின்றி தாக்கும் இது போன்ற உணர்வுகள் காதலில் மட்டுமே சாத்தியம் .

அந்தக் காதல் பாடத்தின் அரிச்சுவடியை முதன் முதலில் படிக்கும் அந்த இரு இளம்நெஞ்சங்களும் உணர்ந்தும்  …உணராமலும்  விருப்பில்லையென்ற நடிப்போடு தங்கள் காதல் நதியில் நீந்திக்கொண்டிருந்தன.

What’s your Reaction?
+1
2
+1
5
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!