ramanin mohanam Serial Stories ராமனின் மோகனம்

ராமனின் மோகனம் – 21

21

” ஷிவானி சுபா எல்லோரிடமும் விசாரித்தாயிற்று .அவளுடைய நண்பர்கள் யாரையும் அவள் சந்திக்கவில்லை .ஆனால் சென்னையில் தான் இருக்கிறாள். எங்கே இருக்கிறாள் என்றுதான் தெரியவில்லை ” தோல்வியோடு வந்து நின்ற ராஜலட்சுமியை எரிச்சலாய் பார்த்தான் அபிராமன்.

” நான்… என்னுடைய பதவி …என்று நெஞ்சை நிமிர்த்தி இனி ஒருமுறை பெருமை பேசி விடாதே. அவசரத்திற்கு உதவாத இவற்றால் என்ன பயன் ? ” வெறுப்பை உமிழ்ந்தான்.

” உங்களுக்கு ஏதாவது தெரிந்ததா அப்பா ?” ஆவலுடன் கேட்ட மகனுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார்  ராஜமாணிக்கம். அவரும் அவருடைய செல்வாக்கை பயன்படுத்தி கொண்டு தான் இருக்கிறார் .ஆனால் நிலானியைத்தான்  கண்டுபிடிக்க முடியவில்லை.

” ஐந்து  தலைமுறை பாரம்பரியம் தொழிலதிபர் செல்வந்தர் செல்வாக்கு எல்லாம் ஒரே நாளில் சரிந்து விட்டது ” மிதமிஞ்சிய வெறுப்பை தந்தைக்கும் தந்தான்.

” நம் ஆட்கள் எல்லா இடமும் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள் ராமா. சீக்கிரமே மருமகளை கண்டுபிடித்துவிடலாம் .” தோள் தொட்டு ஆறுதல் சொன்ன சித்தப்பாவின் கையை உதறினான்.

” உங்களையெல்லாம் நம்பி பிரயோஜனம் இல்லை .என் மனைவியை நானே தேடிக் கொள் கிறேன் ” வேகமாக வீட்டை விட்டு வெளியேறினான்




நண்பர்களும் உறவினர்களுமாக தங்கள் தொழில் பதவி வேலை என எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவனுக்காக இரண்டு நாட்களாக இந்த சிறு கிராமத்தில் வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள் .அபிராமன்  எதையும் உணரும் நிலையிலேயே இல்லை .ஏதோ பித்துப் பிடித்தாற் போல் இருந்தான்.

” நீங்கள் முன்பு வைத்திருந்த வாழைத்தோப்பை பற்றி அவளிடம் பேசினீர்கள் தானே தாத்தா ? ஒருவேளை அங்கே போய் இருப்பாளோ ”  எனக் கேட்டபடி வந்து நின்றவனை  என்ன சொல்வது என்று யாருக்கும் புரியவில்லை.

” எதற்கும் அங்கேயும் போய் பார்த்துவிட்டு வருகிறேன் ” போய்விட்டான் .இதோ பக்கத்தில் இருக்கும் வாழைத் தோப்பில் இருப்பவள் இரண்டு நாட்களாக வீட்டிற்கு வராமல் இருப்பாளா ? இந்த சிறு விஷயத்தை உணர்ந்து கொள்ளும் நிலைமையில் அபிராமன் இல்லை என்பதே உண்மை.

எத்தனையோ ஆள்பலமும் பணபலமும் இருந்தும் மனைவியைக் கண்டுபிடிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் அவனுக்கு தன்னை மறந்து புலம்பிக் கொண்டிருந்தான்

சென்னைக்கு நேரடியாகப் போய் திருக்குமரனின் சட்டையை பிடித்து இழுத்து கேட்டு விட்டான் .அவர் ” தெரியாதே ” என்று அலறினார் .மகளை காணோம் என்ற தகவலில் செங்கமலம் மயங்கியே விழுந்துவிட்டாள் .இருவரையும் அப்படியே போட்டுவிட்டு  மனைவியைத் தேடி வெளியேறினான் அபிராமன்.

 ஹைவேவிஸிற்கும் வாழப்பாடிக்குமாக அலைந்து கொண்டிருந்தான். கண்ணில் பட்டவர்களிடமெல்லாம் போட்டோவை காட்டி விசாரித்துக் கொண்டிருந்தான்.

” நிலானி சென்னையில்தான் இருக்கிறாள். அங்கே ..இங்கே.. அவளை பார்த்ததாக தகவல் வருகிறது .ஆனால் நாங்கள் தேடிப் போகும்போது மறைந்துவிடுகிறாள். என்ன எண்ணத்தில் இருக்கிறாள் என்று ஒன்றும் தெரியவில்லை ” ராஜலட்சுமியின் குரலில் ஏதும் செய்ய இயலாத குற்ற உணர்வு தெரிந்தது.

” உன்னுடைய விசாரிப்பில் குறை இருக்காது என்று தெரியுமம்மா .ராமன் அவனுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறான் . நிலானி  காரணத்தோடுதான் மறைந்து கொண்டு இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது .அவளாகவே திரும்ப வருவாள்  என்று நினைக்கிறேன் .பார்க்கலாம் …” ராஜமாணிக்கத்தின் அனுபவ மூளை பேசியது.

” ராமா  டேய்  ராம் இங்கே வாயேன் ” கௌசல்யா வீட்டிற்குள் இருந்து கத்தினாள்.

” ராம் …? அப்படி எதற்கு அழைக்கிறீர்கள் ? அப்படி நிலா மட்டும் தான் அழைப்பாள்… அழைக்க வேண்டும். நீங்கள் என்னை ராமன் என்று கூப்பிடுங்கள் ” என்ற மகனுக்கு சப் என்று  ஒரு அறை கொடுக்கலாமா என்று கௌசல்யாவுக்கு தோன்றியது.

” எப்படி கூப்பிடுறதுங்கிற   பஞ்சாயத்த அப்புறமா வச்சிக்கலாம். இப்போ டிவியை பாரு ” 

கௌசல்யா காட்டிய டிவியில் திருக்குமரன் இருந்தார் .பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறிய படி இருந்தார்.

” இல்லை …எனக்கு தெரியாது …பதில் சொல்ல முடியாது …அடுத்த கேள்விக்கு போங்க…”  இது போன்ற பதில்களை மட்டுமே கொடுத்துக் கொண்டிருந்தவரின் உடல் முழுவதும் வியர்த்துக்கொட்ட கையில் இருந்த துண்டால் துடைத்தபடி மைக்கின் முன்னால் அமர்ந்திருந்தார்.

” இந்த ஆளுக்கு என்னவாம் ? ” அபிராமன் எரிச்சலுடன் கேட்க ” அவரது கட்சி உடைந்துவிடும் நிலைமையில் இருக்கிறதாம் ” சுபத்ரா பதில் சொன்னாள்.

” சரி… அதற்கென்ன …? இருந்துவிட்டுப் போகட்டும் .நான் போய் நிலாவைத் தேடி விட்டு வருகிறேன் ”  மீண்டும் வெளியே போக போன மகனின் சட்டையை பிடித்து இழுத்து உட்கார வைத்தாள் கௌசல்யா.

” டேய் தனியாக வேறு உலகத்திலேயே இருக்காதே .உன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று கவனி. திருக்குமரனின் கட்சி எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக அவரது கட்சியை விட்டு பிரிந்து போய் எதிர் கட்சியில்  சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். சிலர் தனியாக ஒரு கட்சி ஆரம்பித்து அதில் இணைந்து கொண்டிருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்குள் இப்படி அவருடைய கட்சியை விட்டுப் போன எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 12 .இது ஒரு முக்கியமான விஷயமாக உனக்குத் தெரியவில்லையா ? ” 

” அந்த ஆள் உருப்படியாக கட்சியை நடத்தி இருக்கமாட்டார் .இதில் நாம் நினைக்க என்ன இருக்கிறது ? ” 

” கடந்த ஒரு மாதமாகவே  இது போல் அவரது கட்சியை கலைக்க நீயும் முயற்சி செய்து கொண்டிருக்கிறாய் .எம்எல்ஏக்களுக்கு கோடி கோடியாய் பணத்தை கொட்டிக் கொண்டிருக்கிறாய்

. உன்னால் முடியாத அந்த விஷயம்  இந்த இரண்டு நாட்களுக்குள் எப்படி நடக்கிறது ?இது யோசிக்க வேண்டிய விஷயமாக உனக்கு படவில்லையா ? ” ராஜமாணிக்கம் அதட்டினார் .அபிராமன் யோசிக்க ஆரம்பித்தான்.




” இது நான் செய்து முடிக்க நினைத்திருந்த விஷயம.  இப்போது தானாகவே நடந்து கொண்டிருக்கிறது என்றால் …” யோசனையின் முடிவில் அவன் விழிகள் விரிந்தன.

“நிலா ….?  அப்பா இதையெல்லாம் அவள் தான் செய்து கொண்டிருக்கிறாள்  என்கிறீர்களா ? “

” இருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது .நீ உன்னுடைய இந்த பதட்டத்தை குறைத்துக்கொண்டு கொஞ்சம் யோசி .எங்களைவிட உனக்குத்தான் நிலானியை தெரியும் .அவள் செய்யும் சாத்தியங்கள் இருக்கிறதா…? ” 

” என்னைப் பொறுத்தவரையில் நிறையவே இருக்கிறது சார். நிலானி நிறைய வைராக்கியமும் அபி மேல் அளவில்லா காதலும் கொண்ட பெண் .உறுதியும் அன்பும் ஒரு பெண்ணை எந்த அளவிற்கும் துணிய செய்யும் .நிலானி இப்போது அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன் ”  ராஜலட்சுமி சொல்ல அனைவருமே அதனை ஒத்துக் கொண்டனர்.

” ஆனால் எப்படி …? ” என்ற மற்றவர்களின் கேள்விக்கு இப்போது அபிராமனிடம் பதில் இருந்தது.

” அவளுக்கு அப்பா கட்சியின் எம்எல்ஏக்கள் அனைவரும் பழக்கம் .

கட்சிக்குள் திருக்குமரனுக்கு சில எதிரிகள் இருந்ததால் எதற்கும் இருக்கட்டும் என்று மகளுக்கு கட்சியையும் எம்எல்ஏக்களையும் நன்றாகவே அறிமுகம் செய்து வைத்திருந்தார் . தனக்கு பாதகமான நிலை வரும்போது பெண்ணென்ற நிலையை பயன்படுத்தி

மகளையே முதலமைச்சர் பதவியில் பொம்மையாக உட்கார வைத்து தான் பின்னால் நிழல் முதல்வராக செயல்படலாம் என்ற எண்ணம் திருமுருகனுக்கு உண்டு .இந்த எண்ணத்துடன் அடிக்கடி மகளை வருங்கால முதல்வர் அம்மா என்று கட்சிக்குள் சொல்லி பழக்கப்படுத்தி வைத்திருந்தார். என் வாரிசு என்று மகளை சொல்லிக் கொண்டிருந்தார்.

தந்தையைப் பற்றி பெருமையாக ஒரு சமயம் நிலானி என்னிடம் பேசிய போது சொன்ன விபரங்கள் இவை . திருக்குமரனின் குணத்தை வைத்து அவரை  நானாகவே ஊகித்தேன் .அவர் ஏற்படுத்திய பழக்கத்தை இப்போது நிலானி அவளுடைய காரியங்களுக்காக பயன் படுத்திக் கொண்டிருக்கிறாள் என்று நினைக்கிறேன் ” 

” சரிதான். இப்படித்தான் நடந்து இருக்க வேண்டும் .இது உண்மையானால் இன்னும் சில நாட்களில் எல்லா எம்எல்ஏக்களையும் கட்சியை விட்டு  கலைத்துவிட்டு திருக்குமரனின் கட்சியை ஒன்றுமில்லாமல் ஆக்கி விட்டு நிலானி நம்மிடம் திரும்பவும் வருவாள் .நாம் காத்துக் கொண்டிருப்போம் ” ராஜமாணிக்கம் முடித்துவிட்டார்.

மீண்டும் அவர்கள் அனைவரும் நிலானிக்காக அங்கே… அவள் இறுதியாக விடைபெற்றுப் போன அவளது தாத்தா வீட்டிலேயே காத்துக்கொண்டிருக்க தொடங்கினார்கள் .அவர்களது பேச்சினை அடுத்த ஒரு வாரத்தில் அப்படியே எழுத்துக்கு எழுத்து உண்மை ஆக்கினாள் நிலானி.

ஒரே வாரத்தில் திருக்குமரனின் கட்சி துண்டு துண்டாக உடைக்கப்பட்டு ஒரே ஒரு தலைவரும் ஐந்து எம்எல்ஏக்களும் என்ற பரிதாபமான நிலைமையில் நின்றது. தனது கட்சியின் இந்த நிலைமையை பொறுக்கமுடியாமல் கட்சியை கலைத்துவிட்டு திருக்குமரன் தலைமறைவானார்.




பத்தே நாட்களில் தேர்தல் என்றிருந்த நிலையில் தமிழகத்தின் மற்றொரு பெரிய கட்சியும் இப்போது உதயமாகி இருந்த மற்றொரு கட்சியுமாக தேர்தலை சந்தித்தன. அதிரடியான மாற்றம் ஒன்றிற்கு தமிழகம் தயாராகிக் கொண்டிருந்தது.

இந்நிலையில் ஒருநாள் அதிகாலையில் தாத்தா வீட்டு வாசல் படிக்கு வந்து நின்றாள் செங்கமலம்.

” கமலா …” தாத்தா நடுங்கிய குரலுடன் அவளுக்கு கைகளை விரிக்க ” அப்பா ” என்ற கதறலுடன் செங்கமலம் அவரது மடி சாய்ந்து கொண்டாள் .

What’s your Reaction?
+1
5
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!