Serial Stories thanga thamarai malare தங்க தாமரை மலரே

தங்க தாமரை மலரே – 24

24

” விஸ்வா …விஸ்வா எங்கே இருக்கீங்க ? ” பரபரப்போடு ஒலித்த தனது குரல் அந்த விடிகாலை ஏகாந்த பொழுதை சிதைப்பதை உணர்ந்து குரலை மெதுவாக குறைத்தாள் .

” இங்கேதான் இருக்கிறேன் ” விஸ்வேஸ்வரனின் குரல் மென்மையாக ஒலித்தது .

” இங்கேயா …எங்கே ..? ” சுற்று முற்றும் பார்த்தாள்.

” உனக்கு எதிரே …”




கமலினி பரபரப்போடு விழியுயர்த்தி தேட , எதிர்ப்புறமிருந்த இருள் சந்திலிருந்து கையில் போனுடன்  வெளியே வந்தான் விஸ்வேஸ்வரன் .அரை இருளிலும் அவன் பார்வை தீட்சண்யத்தோடு தன்னை துளைப்பதை உணர்ந்தாள் கமலினி .தன்னை நோக்கி நடந்து வருபவனை காதில் ஒட்ட வைத்த போனுடன் செய்வதறியாது பார்த்தபடி இருந்தாள் .

அவளுக்கு முன் வந்து நின்ற விஸ்வேஸ்வரன் அவளை பார்த்தபடி போனை அணைத்து பாக்கெட்டில் போட்டான் . கை நீட்டி அவள் கன்னத்து நீரை தொட்டான் .கேட்டான் .

” ஏன் …? “

கமலினி அவசரமாக கன்னத்தை துடைத்தாள் .எழுந்து நின்றாள் .

” எங்கே போய்விட்டீர்கள் ? எவ்வளவு பயந்து விட்டேன் தெரியுமா ? “

” எங்கேயும் போகவில்லை .இங்கேதான் இருந்தேன் .” எதிரிலிருந்த இருள் சந்தை காட்டினான் .

” நேற்று இரவிலிருந்தா ? “

தலையசைத்து மறுத்தான் .” நேற்று மதியத்திலிருந்து “

கமலினி திகைத்தாள் .” அப்படியென்றால் …”

” நேற்று நீ கடையிலிருந்து கிளம்பியதுமே உன் பின்னாலேயே வந்துவிட்டேன் .அப்போதிருந்து உங்கள் விட்டை பார்த்துக் கொண்டு இங்கேயேதான் இருக்கிறேன “

கமலினிக்கு நா உலர்ந்த்து .” ஏ…ஏன் …? “

விஸ்வேஸ்வரன் பதில் சொல்லவில்லை . அவளை கூர் பார்வையால் தைக்க முனைந்தான். தைக்கப்பட தையலவள் விரும்பவில்லை .தனது பார்வையை திருப்பிக் கொண்டு தெருவில் விழி நடனமிட்டாள் .

” போனை ஏன் அணைத்து வைத்தீர்கள. ? “

” யாருடைய இடையூறும் இருக்கக் கூடாதென்றுதான் “

” முட்டாள்தனம் .முதலில் உங்கள் வீட்டிற்கு போன் செய்து பேசுங்கள் . அங்கே எல்லோரும் கவலையாக இருக்கிறார்கள் “

விஸ்வேஸ்வரன் அசையாமல் நிற்க ” பேசுங்கள் விஸ்வா …” வார்த்தை வலியுறுத்தலோடு விழிகளையும் அவன் முகத்தில் ஊன்ற வேண்டியிருந்த்து அவள் .

பார்வையை நகற்றாது தன்  போனை எடுத்து ஆன் செய்தவன் அம்மாவிடம் பேசினான் .” பயப்படாதீர்கள் அம்மா . ஒரு டயமென்ட் மெர்சென்ட் .ஆப்ரிக்காவில் இருந்து வந்திருந்தார் .அவரோடு பேசியபடியே அவர் அறையிலேயே ஹோட்டலில் தங்கி விட்டேன் .என் போனில் ஏதோ ரிப்பேர் போல்…ஹோட்டலுக்குள் டவர் கிடைக்கவில்லை ்இப்போது வெளியில் வந்து பேசுகறேன் .இன்னும் கொஞ்ச நேரத்தில் வீட்டிற்கு வந்து விடுவேன் “

மேலும் சில சமாதான வார்த்தைகளை அன்னையிடம்  பேசிவிட்டு  போனை அணைத்தான் .

” பொய் …” குற்றம் சாட்டும் பார்வை பார்த்தாள் .

” ஆமாம் பொய் .நான்றிந்த வரையில் அம்மாவிடம் முதன் முதலாக பொய் .அம்மாவிடம் இது வரை எதையும் மறைத்ததில்லை . இப்போதுதான் …” என்று அவள் பக்கம் கை நீட்டி ஒற்றை விரலால் சுட்டினான் .

கமலினி வேகமாக முகம் திருப்பிக் கொண்டாள் .” நீங்கள் வீட்டுக்கு போங்க சார் . “

” சார் …? ” அவனது பார்வையின் தீவிரம் அதிகரித்தது .

” ஆமாம் …இனி சார்தான் …கிளம்புங்க ” கமலினியின் குரல் அழுத்தமாக ஒலித்தது .

” நாம் கொஞ்சம் பேசலாம் கமலினி .வா …” இயல்பாக கை நீட்டி அழைத்தான் .




” என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் ? இது நாங்கள் குடியிருக்கும் தெரு . கொஞ்சம் கொஞ்சமாக விடிந்து கொண்டிருக்கிறது .ஆட்கள் நடமாட ஆரம்பித்து விடுவார்கள் .இப்போது போய் கையை நீட்டிக் கொண்டு நிற்கிறீர்கள் . போங்கள் …எங்கள் வீட்டில் யாரும் பார்க்கும் முன் போய்விடுங்கள் ” படபடத்தாள் .

” இன்னமும் உங்கள் வீட்டில் யாரும் எழுந்து கொண்டாற் போல் தெரியவில்லையே கமலினி .உன் அப்பா இப்போது சற்று முன்தானே வந்தார் ? தூங்கிக் கொண்டுதானே இருப்பார் .நாம் ஒரு பத்து நிமிடம் பேசி விடலாம் “

” அப்படி என்ன இப்போதே எனும் அவசரம் ? கடைக்கு வந்த்தும் பேசிக் கொள்ளலாம் “

” ம்ஹூம் இப்போதே நிறைய நேரம் காத்திருந்துவிட்டேன் . இனியும் முடியாது “

இவனுடன் வாதாடி விரயமாகும் நேரத்தை பேசி கழித்து விடலாம் .எப்படியும் பேசி தீர்க்க வேண்டிய விசயம்தானே இது …என நினைத்த கமலினி வாசல்படியை விட்டு இறங்கி கீழே நின்றாள் .

” ம் ..சீக்கிரம் சொல்லுங்கள் “

” இங்கேயா …?அங்கே போய் பேசலாம் ” அவன் காட்டிய இடம் அவர்கள் தெரு முனையில் இருந்த ஆவின் பால் பூத் .

” அங்கெல்லாம் வர முடியாது . என்னை தெரிந்தவர்கள் இருப்பார்கள் “

” நேற்று மதியம் ஒரு மணிக்கு சாப்பிட்டது கமலினி . பிறகு ஒரு டீ கூட கிடையாது . பச்சை பட்டினி .இப்படியே பேசினேனென்றால் தலை சுற்றி மயக்கடித்து கீழே விழுந்து விடுவேன் . பிறகு நீதான் உங்கள் வீட்டிற்குள் தூக்கிப் போய் எனக்கு வைத்தியம் பார்க்க வேண்டியதாகி விடும் .உனக்கு ஓ.கேவென்றால் எனக்கும் ஓ.கேதான் “

கமலினி பற்களை நறநறத்தாள் .இவனுக்கு வைத்தியம் பார்க்க எனக்கு தலையெழுத்து பார் …” ஹலோ சார் நீங்கள் மட்டுமல்ல .நானும் நேற்று மதியம் சாப்பிட்டதுதான் .பிறகு பச்சை தண்ணீர் பல்லில் படவில்லை .தெரியுமா…? ” படபடத்து விட்டு அவனது விழிகளின் மின்னல்களை கண்டதும் தேவையில்லாத தகவல் கொடுத்து விட்டோமோ என விழித்தாள் .

” சரி வா .அங்கே போய் ஒரு காபி குடித்துக் கொண்டே பேசலாம் ” இயல்பாக அவன் கை கோர்க்க வர துள்ளி விலகினாள் .

” தள்ளி நில்லுங்கள் ” எச்சரித்து விட்டு முன்னால் விடு விடுவென நடந்தாள் .

கால்களை எட்டி வைத்து அவளோடு இணைந்து கொண்டவன. ” நேற்று உன் பின்னாலேயே வந்து உன்னை சமாதானம் செய்யத்தான் வந்தேன் .நீ வெளியே வருவாய்என நினைத்து அங்கேயே உங்கள் வீட்டை பார்த்தபடி இருந்தேன. நீ இப்போதுதான் வராண்டாவிற்கு  வந்தாய் . போனில் ஏதோ பதட்டமாக பேசிக் கொண்டிருந்தாய் . என்னை பற்றியோ என்று நினைத்தே நானே கால் செய்தேன் ,” தன் விளக்கத்தின. பின் அவன் மௌனமானான் .

இது போலொரு விவரிப்பை என்னிடமும் எதிர்பார்க்கிறான் போலும் . இந்த முட்டாள்தனத்திற கு நான் ஆளில்லை . உதட்டை சுளித்து விட்டு வேகமாக முன் நடந்தாள் .

ஆவின் பால் பூத் அருகேயே காபி , டீ போட்டு தரும் சிறு ப்ளாட்பார கடை இருக்கும் . கடையருகே போகாமல் சற்றுத் தள்ளியிருந்த வேப்ப மரத்தடியின் பின்னால் போய் நின்று கொண்டாள் .

” சீக்கிரம் சொல்லுங்கள் ” அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே விஸ்வேஸ்வரன் கடையை நோக்கி போனான் .இரண்டு கண்ணாடி தம்ளர்களில் காபி வாங்கி வந்து அவளுக்கு நீட்டினான்

” ப்ச் எனக்கு வேண்டாம் .பல் கூட தேய்க்கவில்லை “

” பரவாயில்லை இன்று ஒரு நாள் குடி .நல்ல விசயம் பேசும் போது ஸ்வீட்டோடு ஆரம்பிக்கனும் “

” என்ன நல்ல விசயம் ? ” கமலினிக்கு பதில் சொல்லாமல் காபி குடிப்பதில் தீவிரமானான் .

” இந்த காபி குடித்து முடிக்கும் வரைதான் இங்கே இருப்பேன் .பிறகு போய் கொண டே இருப்பேன. ” எச்சரிக்கை போல் சொன்னாள் .விஸ்வேஸ்வரன் பெருமூச்சுடன் பேச ஆரம்பித்தான் .

” கமலினி நேற்று நடந்த்து …”

” பக்கா பொறுக்கித்தனம் ” அவன் முடிக்கும் முன் சீறினாள் .

” தப்புத்தான் ” உடனே தலையாட்டி ஒத்துக் கொண்டான் .

பிறகு கொஞ்சம் நேரம் கையிலிருந்த காபி கிளாசை பார்த்தபடி இருந்தான் .சை …இந்த காபி வேறு கொதித்துக் கொண்டிருக்கிறது . சீக்கிரம் குடிக்க முடியவில்லை .கமலினி கை காபியை வாயால்  ஊதியபடி இருந்தாள் .

” கமலி ஐ திங்க் ஐ ஆம் இன் லவ் வித யூ “விஸ்வேஸவரன் இயல்பாக சொல்ல சுடு காபி பட்டு நாக்கு நுனி எரிந்தது கமலினிக்கு .




” என்ன ? “

” நான் உன்னைக் காதலிக்கறனென நினைக்கிறேன் “

கொதிக்கிற காபியை அப்படியே அவன் முகத்தில் ஊற்றினால் என்ன …கமலியினுள் வேகம் கிளர்ந்த்து .செய்தாலும் செய்து விடுவோமோ என்ற பயம் வர , வந்த ஆத்திரத்தையெல்லாம்  திரட்டி வேகமாக காபி வெளி சிதற டம்ளரை மரத்தடி மேடை மீது வைத்து விட்டு திரும்பி நடக்க தொடங்கினாள்

” யூ வார் ஆல்சோ லவ் வித் மீ கமலி “

கமலினி ஸ்தம்பித்து நிற்க விஸ்வேஸ்வரன் அவள் முன்னால் வந்து நின்றான் .” நீயும் என்னை காதலிக்கிறாய் கமலி ” அழுத்தம் திருத்தமாக சொன்னான் .

” இல்லை …நிச்சயம் இல்லை …” வேகமாக தலையாட்டினாள் .

What’s your Reaction?
+1
32
+1
13
+1
1
+1
2
+1
0
+1
1
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!