ramanin mohanam Serial Stories ராமனின் மோகனம்

ராமனின் மோகனம் – 13

13

தோள் தொட்ட லேசான குலுக்களில் உறக்கம் கலைந்து கண்விழித்தாள் நிலானி .” விடியப்போகிறது எழுந்து கொள்ளலாமா  ? ” ரகசியமாய் அவளிடம் கேட்டுக் கொண்டிருந்தாள் அருகில் படுத்து இருந்த தன்யா.

” ஓ …இதோ …” நிலானி வேகமாக எழுந்து கொள்ள மற்ற மூன்று பெண்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டனர் .அவர்கள் ஐவரும் அதே ரூமில் தான் ….தன்னை அபிராமன் அடைத்து வைத்திருந்ததாக நிலானி நம்பியிருந்த அந்த அறையில்தான் தங்கியிருந்தனர் .இன்னொரு டபுள் காட் பெட்டை அங்கே கொண்டு வந்து போட ஏற்பாடு செய்திருந்தான் அபிராமன் .ஐந்து பெண்களும் வரிசையாக அதில் தான் படுத்து தூங்கி இருந்தனர்.

இப்போது ஒருவர் தோளை ஒருவர் தட்டி ஐவருமே அடுத்தடுத்து எழுந்தனர் .வெளியே குளிரில் செல்வதற்கான உடைகளை அறையின் விளக்கை போடாமலேயே அரை இருட்டிலேயே மாற்றிக்கொண்டனர் .விளக்கை  போட்டால் பெரியவர்கள் எழுந்துவிடுவார்கள். அவர்களுக்குத் தெரியாமல் சிறியவர்களாக திட்டமிட்டு போகும் பயணம் இது.

எதிர் அறை அபிராமனுடையது .மெல்ல அறைக் கதவைத் தட்டவும் கதவை திறந்து வந்தவனும் அதிகாலை குளிர் பிரதேசத்திற்கு ஏற்ற உடைகளை அணிந்து இருந்தான்.

” இவளை ஏன் கூட்டி வந்தீர்கள் ? ”  நிலானியை பார்த்து கத்தினான்.

” பாவம் அபி அந்த அக்காவும் இருக்கட்டும் ” 

” நோ …இவள் ஒரு ஏழாம் படை. நம் கூடவும் வந்துவிட்டு நம் அம்மாவிடமும் போட்டுக் கொடுத்து விடுவாள் .இவளை நம்பாதீர்கள் .இவளை உள்ளே  போட்டு பூட்டி விட்டு வாருங்கள்.  நாம் மட்டும் போகலாம்” 

இரக்கம் இல்லாதவன் நிலானி பற்களை நற நறத்தபடி ”  நானும் வருகிறேன் தன்யா ” கெஞ்சலாய் கேட்டாள்.

“இதை அபியிடம் கேள் ” அனன்யா அவளை திருப்பினாள் . தன் முகம் பார்க்காமல் திரும்பி நின்றவனிடம் கெஞ்சி நிற்கும் நிலை நிலானிக்கு பிடிக்கவில்லையானாலும் அவர்களது இந்த அதிகாலை பயணத்தை பிடித்திருந்தது. இந்த புதுவித அதிகாலை பரபரப்பை அவள் இழக்கவிரும்பவில்லை.

” நானும் வருகிறேனே. நான் யாரிடமும் எதுவும் சொல்ல மாட்டேன் .சமர்த்தாக இருப்பேன் ” அவளது குழைவான குரலுக்கு அவனிடம் சலனமில்லை .திரும்பிய முகம் திரும்பியபடியே இருந்தது.

” ப்ளீஸ் ராம் ”  மனமுவந்து வார்த்தை உதிர்த்தாள் அவள். பட்டென்று திரும்பி அவனின் கண்கள் அவள் விழிகளுடன் கலந்தன .

” சரி ” ஒற்றை வார்த்தை சம்மதம் .அனைவரும் உற்சாகத்துடன் இறங்கினர் .” சத்தமில்லாமல் வாருங்கள் ” அடிக்கடி அவர்களை எச்சரித்தபடி முன்னால் நடந்தான் அவன்.




கரும் இருளில் நிழல் உருவாய் தெரிந்த வீட்டின் பர்னிச்சர்கள் திரைச்சீலைகள் நிலானியை சிறிதும் பயமுறுத்தவில்லை .இரண்டு நாட்களுக்கு முன்பும்  இதே போன்ற சூழலில் இருந்த  இந்த வீடு தனக்கு அமானுஷ்யமாக தோன்றியதை விந்தையாக நினைத்துக் கொண்டாள் .மன ஓட்டங்கள் தான் சூழலியலை முடிவு செய்கின்றன போலும் தலையசைத்து தனக்குள் பேசிக் கொண்டாள்.

ஆறு பேருமாக வாசலில் இருந்த ஜீப்பில் ஏறினர் .” உங்க அபி ஜீப் எல்லாம் ஓட்டுவாரா ? நான் அவருக்கு பைக் மட்டும் தான் ஓட்ட தெரியும் என்று நினைத்தேன் ” நிலானியின் கிசுகிசுப்பு ஸ்டியரிங்கை பிடித்து இருந்த அவன் காதுகளுக்கு கேட்டு விட்டதோ ?

” தன்யா ஜீப்பை இப்போது ஸ்டார்ட் செய்தால்  உள்ளே சத்தம் கேட்டு விடும். கொஞ்சம் தூரத்திற்கு ஜீப்பை  உருட்ட வேண்டும்.  உங்க அக்காவை இறங்கி தள்ள சொல்லுங்கள் ” இரக்கமின்றி சொன்னான்.

அடப்பாவி உருப்படியா நீ ? வாய்விட்டே அவனுக்கு சாபங்கள் கொடுத்தபடி நிலானி  இறங்கி ஜீப்பை தள்ள துவங்கினாள். இறக்கமான பாதை என்பதாலோ என்னவோ ஜீப் அவள் தள்ளவும் எளிதாக நகர்ந்தது. சிறிது தூரம் ஜீப் நகர்ந்ததும் அதை ஸ்டார்ட் செய்தவன் ”  ஏறிக்கொள் ” என்றான்.

இத்தனை  அதிகாலையில் அவர்கள் கிளம்பிப் போன இடம் அந்த மலைப் பிரதேசத்தின் ஏரி . பகலில் ஏரியை பார்ப்பதற்கும் இதுபோல் அதிகாலையில் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு என்று அபிராமன்  சொல்லியிருந்ததால் பெண்கள் அனைவரும் அப்படி ஏரியை பார்க்க ஆசைப்பட இந்த மலைப் பிரதேசத்தில் இவ்வளவு அதிகாலையில் வெளியே போகக்கூடாது என பெரியவர்கள் தடைவிதிக்க அபிராமன் அவர்களின் ஆசையை ஏற்று பெரியவர்களுக்கு தெரியாமல் அழைத்துக்கொண்டு வந்து இருக்கிறான் .

புகை மூட்டமாய் பாதையை மறைத்த  பனியை தாண்டி லாவகமாய் அவன் ஜீப்பை செலுத்துவதை வியப்புடன் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் நிலானி.

” எங்க அபி ஃப்ளைட்டே ஓட்டுவாரு தெரியுமா ? ” சற்று முந்தைய அவளது கிண்டலுக்கு பதில் சொன்னால் சுரபி.

” எனக்குத் தெரிந்து பைக்  ஓட்டுவார் அல்லது அம்பாசிடர் ஓட்டுவார் ”  தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை நிலானி விடுவதாயில்லை.

” அந்த அம்பாசிடர் என் தாத்தாவின் பொக்கிஷம். அதனை நாங்கள் எங்கள் சொத்துக்களில் ஒன்றாய் பராமரித்து வருகிறோம் .அதில் வெளியே போக எல்லோரும் ஆசைப்பட்டார்கள் என்றுதான் அன்று  அதனை எடுத்து வந்தேன் .மற்றபடி எனக்கு கார்களில் அவ்வளவாக ஆர்வம் கிடையாது .என்னுடைய ஆர்வமெல்லாம் பைக்குகள் மீது தான் .விதவிதமாக வாங்கி வைத்திருக்கிறேன் ” 

அவனது விளக்கத்திற்கு தலையசைத்துக் கொண்டாள்  நிலானி .பெரிய கோடிஸ்வரன். பைக் என்ன ஃப்ளைட்டே வாங்கி வீட்டு மொட்டை மாடியில் நிறுத்துவான்  என நினைத்துக்கொண்டாள் .கசடின்றி அவள் அறிந்து கொள்ள வந்த அவனது செல்வநிலை அவளை மிரட்டியபடியே இருந்தது.

எங்கள் வீட்டிற்கு வந்து சூட்கேஸ் வாங்கிக் கொண்டு போனார் என்ற அவனது தகவல் இப்போது அவளுக்கு மறுக்க  கூடியதாக இல்லை.  அவளது ஞாபகம் திருக்குமரனுக்கு ஓடியது.

முதல் நாள் டிவியில் தந்தையைக் கண்டதும் ஓடோடி போய் டிவி முன் அமர்ந்தாள் .மேலே ஆன்ட்டெனாவில்  ஏதோ கோளாறு என்று சற்று முன் தான் அதனை சரி செய்திருந்தான்  அபிராமன் .ஆளாளுக்கு ஒவ்வொரு சேனலாக மாற்றிக் கொண்டிருக்க திடுதென் இடைப்பட்ட செய்தி சேனலில் திருக்குமரனின் முகம்.

ஆவலோடு தன்னை பார்க்க ஓடி  வந்த மகளுக்கு நியாயம் செய்யவில்லை திருக்குமரன். ”  என் மகளை யாரோ கடத்திக் கொண்டு போய் வைத்துள்ளனர் .இந்த தேர்தல் நேரத்தில் என்னை பலவீனமாக்க எனது கவனத்தை திசை திருப்ப எனது எதிரிகள் இதனை செய்துள்ளனர் . ஆனால் நான் இதற்கெல்லாம் அஞ்ச மாட்டேன். மக்கள் சேவையே எனது லட்சியம் .மக்களாகிய நீங்கள் தான் எனக்கு முக்கியம் .எனக்கு எனது குடும்பம் இரண்டாம்பட்சம்தான் .முழுமனதுடன் இந்த தேர்தலில் ஈடுபட்டு வெற்றிக்கனியை பறித்து உங்களுக்காக பேச சட்டசபைக்கு போன பின்னால் தான் எனது குடும்பத்தை பற்றியே நான் யோசிப்பேன் . அதுவரை மனைவி மகள் என்ற சிந்தனைகள் எனக்கு கிடையாது ” தொண்டை நரம்புகள் புடைக்க கைகளை ஆட்டி பேசிக் கொண்டிருந்தார் திருக்குமரன்.

பிரமை பிடித்தாற்போல் தந்தையின் பேச்சை கேட்டு அமர்ந்திருந்தாள் நிலானி .அவர் தெரிய ….கிட்டத்தட்ட அவரே கூட என்று அவளது கடத்தலில் சந்தேகம் இருக்கும் போது வெளியே இதோ இப்படி அவர் பேசும் பேச்சுக்கள் நிலானிக்குள் வேப்ப எண்ணையின் விழுவிழுப்பாய் வந்து இறங்கின.

” என்ன ஏதாவது மண்டையில் ஏறியதா ? ”  அருகில் வந்து நின்று நக்கலாக கேட்டவனின் குரல் அவளுக்கு எரிச்சல் மூட்டியது .இவன் பெரிய உத்தமன் மாதிரி அப்பாவை குறை சொல்கிறானே என்று இருந்தது.

” அப்பா பொதுவாழ்க்கையில் இருப்பவர் .அவர் எப்போதும் சூழ்நிலை கைதிதான் .அந்த சூழ்நிலையை அவருக்கு உண்டாக்கியது நீதான் ”  தவறெல்லாம் உன் மேல்தான் ” ஆவேசமாய் கத்தினாள்.

” சரிதான் “அலுப்பாய் தலையசைத்தான் அபிராமன்.

” அப்பாவின் நெடுநாள் கனவு முதல்வராவது .அதனால் அவர் சிறு சிறு தவறுகள் செய்திருக்கலாம் ”  பனியும் குளிரும் கூதலுமாக இருந்த இந்த விடிகாலைப் பொழுது நிலானியின் மனதிற்குள் ஒரு நெகிழ்வை கொடுத்திருந்தது .அன்பின் கதகதப்பை நாடியது அவள் மனம்.




பதிலே சொல்லாமல் ஸ்ட்டியரிங்கை படாரென்று அந்த திருப்பத்தில் வளைத்தான் அபிராமன் .அனைவரும் ஒருபக்கமாக சரிய நிலானியின் மனது படபடத்தது.இவனுக்கு கோபம் வந்தால்தான் வைத்திருக்கும் வாகனத்தில்தானே  காட்டுவான் ?

 ஆனால் உடன் இருந்தவர்கள் ”  வாவ் ” என்று உற்சாக்க்  குரல் எழுப்பினார்கள் .த்ரிலிங்கை விரும்பும் அவர்களது இளவயது மனது இதுபோன்ற பரபரப்பான நிகழ்வுகளை விரும்பியது.

” சூப்பர் அபி ” ” இன்னும் பாஸ்ட்டா போ ” உற்சாகப்படுத்தினர் .

இதுபோன்ற பயணங்கள் எல்லாம் நிலானிக்கும் பழக்கமானவைகள்தான் .எப்போதும் பிப்த்  கியரில் தான் அவளது கார் பறக்கும் .அப்படித்தான் அபிராமனின்  அம்பாசிடரில்  மோதி இருந்தாள .அதற்கான தண்டனையையும் அவனுக்கே கொடுத்தாள். அவள் விரும்பிய திரில்லிங் அவள் தந்தையின் அதிகாரத்திற்கு உரியதாக இருந்தது.

இதோ இப்போது இந்த உற்சாகம் ஏனோ அவளுக்கு ஏற்புடையதாக இல்லை. என்ன இது சிறுபிள்ளைத்தனம் ? கொஞ்சம் தவறினால் என்ன ஆவது  ? என்று எண்ணத் தோன்றியது. தனது மாற்றத்திற்கான காரணம் அவளுக்கு புரியவில்லை.

” கொஞ்சம் மெல்ல போங்க ”  முணுமுணுத்தாள் .அவளது வேண்டுதல் யார் காதிலும் கேட்கவில்லை .ஜூப்பின்  வேகம் இன்னமும் கூடியது .சொன்னால் அதிகமாக செய்வானே …பல்லைக் கடித்துக் கொண்டாள்.

” ஹேய் குட்டீஸ் …உங்க அக்காவிற்கு வேகத்திற்கு பயமாம் . ” கிண்டலிக்க தோதாக எடுத்துக் கொடுக்க ” ஹேய் பயந்தாங்கொள்ளி ” சத்தமிட்டுக் கத்தினர் அனைவரும் .ஜூப் மின்னலென பறந்த்து.

ஏரியின் அருகே ஜீப்பை நிறுத்தி விட்டு இறங்கியவன் ”  ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு என்னோடு வாருங்கள் ” என அவர்களை கைகோர்த்துக்கொண்டு அழைத்துப் போனான்.

” வாவ்  ” ” பென்டாஸ்டிக் ” ” செம ” ” சூப்பர் ” ஆளாளுக்கு அனைவரும் ஏரியைப் பார்த்து கத்த  அவர்களைப் போன்றே நிலானிக்கும் அபிராமனின் தோள்களைப் பற்றிக் கொண்டு குதிக்கவே தோன்றியது .ஏனெனில் எதிரே தென்பட்டுக் கொண்டிருக்கும் ஏரியின் அழகு அப்படி .இரவு நேர குளிரில் ஏரி உறைந்து வெண்பனி துகள்களை மேலே கட்டி கட்டியாக தாங்கிக்கொண்டு அசைந்தாடியபடி காட்சியளித்தது .பனிப்புகை நூலாக ஏரியின் மேலே எழுந்து கொண்டிருந்தது. பார்க்க பரவசமான காட்சி அது.

நிலானி  அப்படியே அங்கேயே புல்தரையில் அமர்ந்து கொண்டாள் .கன்னத்தில் கை தாங்கி பனி ஏரியை ரசிக்கத் துவங்கினாள். அவளையே பின்பற்றினர் அனைவரும். மெல்ல மெல்ல விடியத்துவங்கி வெளிச்சம் வரத் துவங்கியது. சூரியன் கிழக்கில் எழ ஆரம்பிக்க அந்த அதிசயம் நடக்கத் துவங்கியது.

பரிதியின் கை வெப்பம் தாங்காத ஏரி பெண் உடல் உருகி மெல்ல மெல்ல கரையத் துவங்கினாள்.  கண்ணாடி பாலங்களாக மேலே கோர்த்திருந்த பனிக்கட்டிகள் சிறிது சிறிதாக உருகி நீராக மாறின. தன்னை மறந்து அனைவரும் அதனை ரசித்தபடி இருந்தனர்.

” என் அப்பாவை உங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் தெரியுமா ? ” 

சிறியவர்கள் அனைவரும் ஏரியின் அற்புதத்தில் மூழ்கியிருக்க நிலானி இயற்கையை உள்வாங்கியபடி  அபிராமனிடம் மெல்ல விசாரித்தாள்.

அவளது கேள்விக்கு காரணம் இருந்தது. திருக்குமரனின் டிவி பேட்டி முடிந்து நிலானி அப்பாவிற்கு ஆதரவாக பேசி முடித்த அடுத்த நிமிடம் கௌசல்யா தனது போனை எடுத்து எண்களை அழுத்தினாள்.

” என்ன திரு குமரா… பேட்டி எல்லாம் பலமாக கொடுத்து கொண்டிருக்கிறாய் .எல்லாம் நிஜம்தானா ? ” கிண்டலாக கேட்டாள்.

எதிர்முனை பதிலை ” ம் …ம் …”  கொட்டியபடி கேட்டவள் ” இரண்டு நாட்களில் எங்கள் எஸ்டேட்டிற்கு வா .உன்னுடன் பேச வேண்டும் ” உத்தரவு போல் பேசிவிட்டு கட் செய்தாள்.

” அப்பாவிடமா  பேசினீர்கள் ? என்ன சொன்னார் ? என்னிடம் கொடுத்திருக்கலாமே ? நானும் பேசி இருப்பேனே ? ” ஆதங்கத்துடன் கேட்டாள்

” உன் அப்பாதான் நாளை வரப்போகிறாரே.  அப்போது பேசிக் கொள் ” கௌசல்யா சொல்லி முடித்ததும் அனைவரும் அவளை தனித்து விட்டுவிட்டு கலைந்து சென்றனர்.

இவர்களைப் பற்றி நன்கு தெரிந்த பிறகே இவர்களுடன் அப்பா தன்னை அனுப்பி இருக்கிறார் என நிலானிக்கு இப்போது தெளிவாகவே தெரியத் துவங்கியது. அப்பாவின் மேல் எந்த தவறும் இருப்பதாகவே அவளுக்கு தோன்றவில்லை.




அபிராமனிடம் இருந்து அவளது கேள்விக்கு பதில் வரவே இல்லை .” உங்களைத்தான் கேட்கிறேன் ” தோள் தொட்ட அவள் கையை எரிச்சலுடன் தோளாலேயே அசைத்து ஒதுக்கினான்.

” உன் அப்பன் பெருமை பேச நான் இப்போது இங்கு வரவில்லை. வாயை மூடிக் கொண்டு இருந்தால இங்கே இருக்கலாம். இல்லாவிட்டால் இந்தக் குளிரில் விட்டுவிட்டு நாங்கள் போய்க்கொண்டே இருப்போம்.”  அவன் நிச்சயம் சொன்னதை செய்யக் கூடியவன் என்பதால் நிலானி வாயை மூடிக்கொண்டாள். ஆனால் அவள் மனம் பொருமிக் கொண்டுதான் இருந்தது.

அப்பா வரவும் அவருடன் இங்கிருந்து போய் விட வேண்டும் என முடிவு எடுத்தாள .ஆனால் இரண்டு நாட்கள் கழித்து வந்த திருக்குமரன் அந்த முடிவுடன் வரவில்லை .அவர் மகளை நிரந்தரமாக அங்கேயே தங்க வைக்கும் முடிவுடன் வந்திருந்தார்.

” நம் அபி தம்பியை நீ திருமணம் செய்து கொள்ளம்மா ”  மிக எளிதாக தந்தை பேசிய பேச்சில் அதிர்ச்சியின் உச்சத்திற்கு போனாள் நிலானி.

What’s your Reaction?
+1
6
+1
5
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!