Serial Stories vana malai pol oru kathal

வானமழை போல் ஒரு காதல் – 4

4

” சரியான தேக்கு .பர்மாவில் இருந்து வந்ததாம் .கொஞ்சம் ஈரம் இருக்கிறது .வெட்டிப் போட்டு காய வைத்ததும் …வேலையை ஆரம்பித்து விட வேண்டியது தான் ” ஆர்வத்துடன் கண்கள் மின்ன ஜெயக்குமார் அந்த மரத்தை வருடிக் கொண்டிருந்தார்.

” நீங்களே செய்திட போறீங்களா ? ” ராஜாத்தி கேட்டாள்.

” ஊருக்குள் எத்தனை பேருக்கு விதம்விதமாக கட்டில்கள் செய்து கொடுத்திருக்கிறேன். எனது மகளுக்கு நான் செய்யாமல் வேறு யார் செய்யப் போகிறார்கள் ?  கட்டிலின் இழைப்பு கூட நான் தான் செய்வேன் ” ஜெயக்குமார் சொல்ல  வாசுகிக்கு எரிச்சல் வந்தது.

அவளது பெற்றோர்கள் அவளுக்கு கொடுக்கப் போகும் திருமண சீர் வரை போய்விட்டார்கள். அவனது கடையிலேயே மரம் எடுத்து அவனுக்கே  செய்து கொடுக்க வேண்டுமா ? 

” அவருக்கு அவரே மரம் எடுத்து கொடுப்பாரா ? ” குறை போல் அப்பாவிடம் கேட்டாள்.

” மரம் விற்கும் வியாபாரி அவர் .பொருள் செய்யும் தச்சன் நான். இருவரும் எங்களுக்கு தேவையானவற்றிற்கு வேறு எங்கே  போவோம் ? ” ஜெயக்குமார் நியாயம் பேச இவரிடம் பேசி மீள முடியாது என எழுந்து  வந்து விட்டாள் வாசுகி.




அந்த தேவகுமாரனை  எங்கே பார்ப்பது ? இரண்டு நாட்களாக இந்த யோசனை தான் அவளுக்கு .அவனை பார்க்கும் இடம் தெரியவில்லை .அவனுடைய கடையையும் வீட்டையும் ஜெயக்குமார் அவளுக்கு காட்டிவிட்டார் .நேரடியாக அங்கேயே போகலாம் தான் .ஆனால்  இந்நேரம் அவளைப் பற்றிய விவரங்கள் அங்கே இருப்பவர்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இப்போது அங்கே அவனை சந்திக்க முடியாது .வேறு எங்கே என்று மண்டையை பிய்த்துக் கொண்டிருந்தாள்.  அவனும் தான் கல்யாணம் பேச நிச்சயிக்கப்பட்ட பெண்ணை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறானோ பார் ? அட்லீஸ்ட் போனிலாவது பேசலாம்தானே…?  தேவராஜனை வாய் திறந்து வைதுகொண்டாள்.

இறுதியாக வேறுவழியின்றி அவனுடன் தானே போனில் பேசுவது என்ற முடிவிற்கு வந்தாள். அப்பாவின் போனில் அவனது நம்பரை தேடினாள் .எத்தனையோ தொழில்முறை நம்பர்கள் அப்பாவின் போனில். அப்பாவிற்கு தெரிந்தவர்களில் எத்தனை தேவராஜன்கள் இருப்பார்களோ ? யாரோ ஒருவருடன்  போனில் பேசவா ? தயங்கின வாசுகியின் கைகள் .ஆனால் அவளது தயக்கம் தேவையற்றது என்பது போல் அடுத்து கண்ணில் பட்டது மாப்பிள்ளை தேவராஜன் என்ற நம்பர். அப்பா அவன் நம்பரை அப்படித்தான்  சேமித்து  வைத்திருந்தார்.

அதற்குள் மாப்பிள்ளையா  ? அலட்சியமாக உதட்டை சுளித்துக் கொண்டு அந்த நம்பரை தனது போனில் சேமித்துக் கொண்டாள் வாசுகி.

யாருக்கும் தெரியாமல் மொட்டை மாடியில் வந்து உட்கார்ந்து கொண்டு அந்த நம்பருக்கு போன் செய்தாள். மறுபக்கம் ரிங் போக இவளுக்கு திக்திக்கென்று நெஞ்சம் அடித்துக் கொண்டது . போனை எடுத்ததும் அவனிடம் எப்படி அறிமுகம் செய்து கொள்வது  ? பெயரைச் சொன்னால் தெரியுமா ? நீ யார் என்று கேட்டு விடுவானோ ? என பலவகை குழப்பங்கள் அவள் மனதில் .

அன்று உன் பெயரை அவன் சரியாகச் சொன்னானே … என்று அவள் மனது அவளுக்கு நினைவு படுத்திக் கொண்டிருந்த போதே எதிர்முனை போன் எடுக்கப்பட்டது.

” வாசுகி…”  வேகமாக எதிர்முனையில் கேட்டது அவன் குரல் .வேகமோ… பதட்டமோ ஏதோ ஒன்று அதில்.

இப்படி  அவன் தன்னை போன் நம்பரிலேயே  அறிந்து கொண்டிருப்பான் என எதிர்பார்க்காத வாசுகி மேலே என்ன பேசுவதென திணறினாள் .அதற்குள் அவன் மீண்டும் அழைத்துவிட்டான்… இந்த முறை குரலில் கொஞ்சம் படபடப்பு கூடியிருந்தது.

” வாசுகி என்னம்மா ஏதாவது பிரச்சனையா …? ” பரிவுடன் வந்தது அவன் குரல்.

” இல்லை …ஆமாம்… வந்து …உங்களுடன் கொஞ்சம் பேச வேண்டும் ” 

சில நொடிகள் எதிர்முனை அமைதியாக வாசுகியின்  மனம் படபடத்தது.  இந்த அலைப்பேசி அழைப்பை அவன்  தவறாக எடுத்துக் கொண்டானோ ? 

அப்படி எதுவும் இல்லை என சொன்னது மறுநொடி பிசிரற்று  ஒலித்த அவனது குரல். ” சொல்லும்மா என்ன பேச வேண்டும் ? ” 

” நா…நான் நேரில் பேச வேண்டும் ” 

” ஓ  பேசலாமே. உங்கள் வீட்டு தெருமுனையில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு இன்னும் அரை மணி நேரத்தில் உன்னால் வர முடியுமா ?  நான் அங்கே வந்து விடுகிறேன் ” 

” சரி .நானும் வருகிறேன் ” சொல்லிவிட்டு போனை கட் செய்தாள் . என் போன் நம்பர் அவனுக்குத் தெரிந்திருக்கிறது. சேவ் செய்து வைத்திருக்கிறான் .ஆனால் போனில் பேசவில்லை .அப்படி பேசும் எண்ணம் இல்லையா ?  அல்லது விருப்பம் இல்லையா ? வாசகியின் மனது குடைந்தது.

பக்கத்து தெருவில் இருக்கும் சாரதாவிடம் நோட்ஸ் ஒன்று வாங்கி வருவதாக அம்மாவிடம் சொல்லிவிட்டு வாசுகி தெருமுனை கோவிலுக்கு வந்தாள் . கோவிலுக்கு என்றால் அம்மாவும் தங்கையும் சேர்ந்து கொள்வார்கள் அதனால் இந்த பொய் அவளுக்கு தேவையாய் இருந்தது.

கோவில் அருகே நெருங்கும் போது தனது வாட்சை திருப்பிப் பார்த்தவள் அவனுடன் பேசி வெறுமனே 15 நிமிடங்களே ஆகி இருப்பதை உணர்ந்தாள். அரை மணி நேரம் கழித்து தானே வரச்சொன்னான் ..பறக்காவெட்டி மாதிரி முன்னரே வந்து விட்டேனோ …. இப்படி முந்திரிக்கொட்டை போல் வந்து நிற்கிறாளே என்று நினைத்துக் கொள்வானோ ? தயக்கத்துடன் கோவில் வாசலில் மிதித்தவள் விழிகள் அகன்றன .அவள் உள்ளே வருவதை பார்த்தபடி  அவள்  பார்வையில் படும் இடத்தில் நின்றிருந்தான் தேவராஜன். இவளை பார்த்ததும் மென்மையாக தலையசைத்தான்.

” முதலில் சாமி கும்பிட்டு விடுவோமா  ? ” அருகில் வந்தவளிடம் கேட்டுவிட்டு கோவிலினுள் நடந்தான். அது மிகவும் சிறிய கோவில் தான். வேப்ப மரமும் அரச மரமும் இணைந்து பெரிதாய் படர்ந்திருந்த மரங்களின்  அடிவாரம் பிள்ளையார் கோவிலாக மாறி இருந்தது .புன்னகைத்து அமர்ந்திருந்த பிள்ளையாரை சுற்றி வந்து வணங்கிவிட்டு பின்னாலிருந்த மரத்தடிக்கு வந்தனர். சற்று ஓரமாக பெரிய வேர்கள் வெளித்தெரிந்து கொண்டிருந்த இடத்தில் ஒரு வேரின் மேல் அமர்ந்து கொண்டவன் அவளுக்கு எதிரே இடம் காட்டினான்.

” உட்கார்ந்து சொல் .என்ன விஷயம் ? ” 

” வந்து… நான்.. வந்து…”  வாசுகிக்கு வார்த்தைகள் வரவில்லை .பரிதாபமாக அவனைப் பார்த்தாள்.

” உன்னுடைய நோக்கம் சிறிதாவது தெரிந்தால்தான் நான் உனக்கு உதவ முடியும் .ஏதாவது நீ சொல்லியே ஆகவேண்டும் ” கைகளைக் கட்டிக்கொண்டு வார்த்தைகளில் வலியுறுத்தியவன் அந்நேரம்  அவளுக்கு மிகவும் எரிச்சல் மூட்டினான்.

” நம் கல்யாணம்… இந்தக் கல்யாணம் ..வேண்டாமே… நிறுத்தி விடுங்கள் ” தரையைப் பார்த்துக் கொண்டு வேகமாக சொல்லி முடித்தாள் .அவனிடமிருந்து எந்த பதிலும் வராமல் போக மெல்ல நிமிர்ந்து பார்த்தாள்.




அவள்  அவன் பார்வையை சந்தித்ததும்  ” ஏன் ? ”  என்றான் நிதானமாக.

” நா …நான் மிகவும் சின்ன பெண் .இன்னமும் இரண்டு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ள நினைக்கிறேன் .இது எனக்கு படிக்கும் வயது .நான் மேலே படிக்க வேண்டும்…” 

சற்றுமுன் உணர்வுகளற்று இருந்த அவன் முகத்தில் இப்போது கீற்றாய் புன்னகை தெரிந்தது . ” இதனை உன் அப்பாவிடம் சொல்லி இருக்கலாமே ” 

” சொல்லிவிட்டேனே .அவர் எங்கே கேட்கிறார் ? ” வாசுகி சலித்துக்கொண்டாள்

” என் தோழிகள் எல்லோருமாக சேர்ந்து சென்னை சென்று மேற்படிப்பு படிக்க பேசி வைத்துள்ளோம் .இப்போது நான் மட்டும் திருமணம் என்றால் எப்படி …? ” அவனிடமே நியாயம் கேட்டாள்.

” கஷ்டம்தான்…”  தலையசைத்து அவன் வருந்திய விதத்தில் சிறு போலித்தனத்தை உணர்ந்தவள் ” உங்களுக்கு கிண்டலாக தெரிகிறதா ? ” வேகமாக கேட்டாள்.

” அடடா இவ்வளவு நேரமாக பவ்யமும் பணிவுமாக ஒரு பெண் தலை குனிந்து அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாளே அவளை எங்கே காணோம் ? ” புருவங்களை உயர்த்தி  வெகுவாக ஆச்சரியப்பட்டான் அவன்.

வாசுகி வேகமாக எழுந்து கொண்டாள் ” ஏய் உட்கார் .எங்கே போகிறாய் ? “

” எனக்கு உங்கள் மீது நம்பிக்கை இல்லை ” சொன்னபடி நடந்தவளை பின் தொடர்ந்தான் அவன்.

” என்ன நம்பிக்கை இல்லை ?” 

” நீங்கள் இந்த திருமணத்தை நிறுத்துவீர்கள் என்ற நம்பிக்கை இல்லை ” 

” சந்தேகமே படாதே. கண்டிப்பாக நிறுத்த மாட்டேன் ” உறுதி செய்தவனை முறைத்தாள்.

” உங்களை நம்பி வந்தேன் பாருங்கள் .என்னைச் சொல்ல வேண்டும் .நான் அப்பாவிடமே பேசிக் கொள்கிறேன் ” 

” ஒரு டீ குடித்து விட்டு புத்துணர்வோடு உன் அப்பாவிடம் பேசலாமே ” என்றபடி அவன் கை காட்டிய கடையை பார்த்ததும் ஆச்சரியப்பட்டாள்.கோவிலின் எதிர்ப்புறம் இருந்த சாலையோர டீ கடையை கைகாட்டி கொண்டிருந்தான் அவன்.

” இங்கேயா ? ” 

” இங்கேயே தான் .வா …” அங்கே அழைத்துச் சென்று இரண்டு டீ ஆர்டர் சொன்னவன் ” இப்படி உட்காரலாமா  ? ” என்று கடைக்கு முன்னால் போடப்பட்டிருந்த மர பெஞ்சை காட்ட வாசுகியின் விழிகள் மேலும் விரிந்தன.

“போதும்  கருவிழி தெறித்து வெளியே வந்து விடப் போகிறது ”  கிண்டல் செய்தபடி கண்ணாடி கிளாஸில் வந்த டீயை அவளிடம் கொடுத்தான் .தானும் அவள் அருகிலேயே அமர்ந்து கொண்டான்.

எதிர் பெஞ்சிலும்… ஆங்காங்கே நின்று கொண்டும் டீ குடித்துக்கொண்டிருந்தவர்களை விழிகளால் அளந்து பார்த்தபடி டீயை  உறிஞ்சினாள் வாசுகி.

” இது ஓகே வா ? கேட்டவனை வியப்பாய் பார்த்தாள் .

” பிடித்திருக்கிறது தானே ? ” அவனது கேள்விக்கு வாசகியின் தலை தானாக ஆடியது.

” என்னைத் தானே ? ” அவனது தொடர்ந்த கேள்விக்கு செல்லமாய் முறைத்து இல்லை என்று தலையாட்டினாள் .

” இதோ இப்படி சாலையோர டீக்கடைகளில் டீ குடிப்பது எனக்கு பிடிக்கும் . பெண் பிள்ளைகள் இங்கெல்லாம் வரக் கூடாதென்று அப்பா அழைத்து வர மாட்டார் .  ஆனால் இதெல்லாம்  எப்படி உங்களுக்கு தெரியும் ? ” 

” அன்று  தியேட்டரில் நீயும் உன் தோழிகளும் பேசிக் கொண்டிருந்தீர்கள் .அவர்கள் எல்லோரும் பைவ் ஸ்டார் ஹோட்டலில் டின்னர் சாப்பிட ஆசைப்பட்டு கொண்டிருக்கும் போது நீ எளிமையாக சாலையோர டீக்கடையை விரும்பி கொண்டிருந்தாய் ” 

” நாங்கள் பேசியதை ஒட்டு கேட்டீர்களாக்கும் ? ” முகத்தை சுளித்தாள் .

” முன்னால் உட்கார்ந்திருந்த உங்கள் பக்கத்தில் வந்து காதை வைத்து கேட்க  வேண்டிய அளவிற்கா இருந்தது உங்கள் பேச்சு ?  மிக தாராளமாக உங்களைச் சுற்றி இருந்த ஒரு பத்து பேர் வரை தெளிவாக கேட்டுக் கொண்டிருந்தது ” 

வாசுகி சங்கடத்துடன் தலை குனிந்து கொண்டாள் .” அன்று சும்மா ஜாலியாக காலேஜை கட் செய்துவிட்டு சினிமாவிற்கு வந்தோம் .எப்போதுமே இப்படி எல்லாம் செய்தது இல்லை .அன்று ஒரே ஒருநாள்தான். அதுவும் கூட அம்மா அப்பாவிற்கு தெரிந்தால் அடி பிய்த்து விடுவார்கள் ” தன்னிலை  விளக்கத்தை தான்றியாமலேயே கொடுத்துக் கொண்டிருந்தாள் வாசுகி .

இத்தனை விளக்கம் இப்போது எதற்காகடி அவளது மனச்சாட்சி அவள் தலையில் கொட்டியது.

” ஹேய் பரவாயில்லைடா . இதெல்லாம் பெரிய விசயமா ?  காலேஜில் படிக்கும் போது இதெல்லாம் சகஜம்தானே ?  தவறாக எடுத்துக்கொள்ள இதில் ஒன்றுமில்லை. இதற்காக வருந்திக்கொண்டா நம் திருமணத்தை நிறுத்தச் சொன்னாய் ? ”  அவனது இயல் பேச்சிற்கு முறைத்தாள் .

” இரண்டிற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது ? ” 

” எனக்கு இல்லை . உனக்குத்தான் ஏதோ இருப்பது போல் தெரிகிறது. நான் ஏதோ உன் அந்தரங்கத்தை அறிந்து கொண்டது போல் என்னிடம் கொஞ்சம் பயப்படுகிறாய் என்று நினைக்கிறேன் ” 




” பயமா …? எனக்கா …? நான் யாரிடமும் பயந்ததே கிடையாது ” தைரியமாக நெஞ்சை நிமிர்த்திக் கொண்டாள் வாசுகி.

”  கல்யாணம் செய்துகொள்வதற்கு மட்டும்தான் கொஞ்சம் பயப்படுவாய்  போல…” 

” அதற்கும் தான் எதற்கு பயம்  ? அதெல்லாம் பயப்பட மாட்டேன் ” 

” அப்பாடா உனக்கு வந்த வேலை முடிந்தது .சரி பத்திரமாக வீட்டிற்குப் போ  ”  எழுந்து  கொண்டு அவள் வீட்டிற்குப் போகும் வழியை காட்டினான் .

” ஆனால்… நீங்கள் திருமணத்தை நிறுத்துவதாக சொல்லவே இல்லையே  ” அவள்  அலறலாக கேட்க..

”  நீ தான் திருமணம் முடித்துக் கொள்வதாக சொல்லி விட்டாயே ” தேவராஜன் அவளுக்கே திருப்பினான்.

தன்னைத்தானே நொந்து கொண்ட வாசகி தன் தலையில் கொட்டிக் கொண்டாள். ”  நீங்கள் என்னை ஏமாற்றி விட்டீர்கள் ” குற்றம் சாட்டினாள் .

” வாசுகி இங்கே என்னை பார் ”  தெருவில் நடந்து கொண்டிருந்த அவளை ஓரமாக அழைத்து நிறுத்தினான்.”  உனது மேற்படிப்பு ஆசை தவிர நமது இந்த திருமணத்தை நிறுத்துவதற்கு உனக்கு வேறு எதுவும் காரணம் இருக்கிறதா ? ” 

கூர்மையாய் தன் கண்களுக்குள் விழுந்த அவன் பார்வையை வாங்கிக்கொண்டு மெல்ல தலையசைத்தாள் வாசுகி. ”   இ…இல்லை எனக்கு படிக்க வேண்டும். அவ்வளவுதான் ” 

” அவ்வளவுதானே …சரி விடு .உன் படிப்பிற்கு நம் திருமணம் ஒரு தடையாக இருக்காது .போதுமா ? ” அவனது இந்த உறுதிக்குப் பின்  மறுப்பதற்கு ஏதுமின்றி போய்விட தலையசைத்து ஆமோதித்தாள் வாசுகி.

” குட் .இப்போது நீ கிளம்பு ”  அவன் சொல்லவும் கிளம்பியவள் முன் அவன் கை நீட்டினான் .

” கண்டவன் இல்லை வாசுகி .இப்போதாவது…”  எதிர்பார்ப்போடு நீண்டிருந்த அவன் கையைப் பார்த்ததும் வாசுகியினுள் ஒரு குறும்பு வந்து ஒட்டிக் கொண்டது.

அந்த ” கண்டவனையும் ” கேட்டு விட்டாயா ? மனதிற்குள் சலித்துக் கொண்டு 

செல்லமாக தலையசைத்து அவன் கையை  மறுத்துவிட்டு வேக நடையுடன் தெருவில் இறங்கியவள் நான்கு எட்டு நடந்ததும் அவனைத் திரும்பிப் பார்த்து கட்டைவிரல் ஆட்டி சவால் விட்டு நடந்தாள்.

தேவராஜனின் முகத்தில் புன்னகை பூக்கள் மலர்ந்து சிரித்தன.




What’s your Reaction?
+1
23
+1
9
+1
1
+1
4
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!