Serial Stories நீரோட்டம்

நீரோட்டம்-6

6

அழுது கொண்டிருந்த நவீனாவைக் கையைப் பிடித்து வந்து கட்டிலில் உட்காரவைத்தாள் கஸ்தூரி . “இதோ பார் நவீனா! முதல்ல கண்ணைத் துடை. அழறதால எதுவும் மாறப் போறதில்ல. அவங்க சொல்றதுக்காக உன்னை உன் விருப்பமில்லாம யாருக்காவது கல்யாணம் பண்ணிக் குடுத்துட மாட்டேன்.

அதுவும் அந்த சுந்தருக்குக் கண்டிப்பா பண்ண மாட்டேன். எனக்கே அவனைப் பிடிக்காத போது, உன்ன கல்யாணம் பண்ணிக்கோன்னு எப்படிச் சொல்வேன்.? 

உங்க சித்தப்பாவும் அவங்க கூட சேர்ந்து பேசுவார்னு நான் கனவுல கூட நினைக்கல. ஆனா, அவங்க பசங்களையே கவனிக்காம, ஹாஸ்டல்ல விட்டுட்டாங்க. 

அந்தப் பசங்களும் பாவம், “நீங்க இருக்கறதால தான் பெரிம்மா, லீவுக்காவது வீட்டுக்கு வரோம்”னு சொல்றாங்க. உம் மேல இவங்க பாசம் காட்டுவாங்கன்னு நினைக்கறது நம்ம தப்பு தான். 

அருணும், தீபக்கும் தான் பாவம், நாம இல்லாம ஏங்கிடுவாங்க.” என்று வேதனையுடன் சொன்ன கஸ்தூரி தொடர்ந்து பேசினாள். 

 

“பெண்கள் எப்போதும் தலைநிமிர்ந்து நடக்கப் பழகணும். அதே நேரம் இந்தத் தலைநிமிர்வு தன்மானத்தால் இருக்கணும். தலைக்கனத்தால் கூடாது. கர்வத்தால் இருக்கக் கூடாது. 

உனக்குப் பாதுகாப்பு இல்லாமல் போயிடக் கூடாதுன்னு தான் இத்தனை நாள் இவங்க கூட இருந்தேன். அதுவே இங்கே கேள்விக்குறி ஆனபின்னே நாம இங்கே இருக்கறதுல அர்த்தமில்ல. 

நாளைக்குக் காலையில நீயும் சித்ராவும் முதல்ல சித்ரா வீட்டுக்குப் போய்டுங்க. நான் சித்ரா அம்மா கிட்ட போன்ல பேசறேன். எப்படியும் ஒரு வாரம், பத்து நாள்ல வேற வீடு பாத்துடறேன். நாம அங்க போய்டலாம். ரிசல்ட் வந்ததும் உன்னோட எதிர்காலத்தைப் பத்தி நிதானமா யோசிக்கலாம். 

மூர்த்தி பெரியப்பாவும், சுஷ்மா பெரியம்மாவும் தமிழ்நாட்டுக்கே வரப்போறதா போன் பண்ணாங்க. அவங்களும் வரட்டும். ஒரு நல்ல முடிவா எடுத்துக்கலாம். நீங்க நாளைக் காலைல ஒரு வண்டி வெச்சுட்டுக் கிளம்பிடுங்க”என்று தெளிவாய்க் கூறவும், நவீனா கண்ணைத் துடைத்துக் கொண்டு, “அம்மா! அம்மா! நீதான் எவ்வளவு சீக்கிரமாகவும், தெளிவாகவும் யோசனை பண்றே!”என்று கூறிக்கொண்டே அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டாள். 

“அதானே! நீ எப்றி இவங்களுக்கு மகளா பொறந்தே! அம்மா! நீங்க க்ரேட் மா!”என்றாள் சித்ரா. 

“சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தான் ஒருவரோட திறமையோ, துணிச்சலோ, அவங்களோட குணங்களோ வெளிப்பட காரணமா இருக்கு சித்ரா! நாம ஐந்தறிவு ஜீவன்கள்னு சொல்ற மிருகங்கள், பறவைகள் தன்னோட குட்டிகளைப் பாதுகாக்கறதைப் பாத்திருக்கியா நீ? நம்மைக் கண்டாலே பயந்து ஓடற பறவைகள் கூட, தன்னோட குட்டிகள் பக்கத்துல நாம போனாலே சீறிட்டு வரும். துரத்தித் துரத்திக் கொத்த வரும்”

“ஆமாம்மா! நீங்க சொல்றது உண்மை. கிராமத்துல எங்க வீட்ல பின்னாடி நிறைய காலி இடம் இருக்கும். நாங்கஅங்க தான் விளையாடுவோம். நிறைய மரங்களும் இருக்கும்.

அங்க பன்னீர் மரங்களும் உயரமா இருக்கும். 

அதுல காக்கா கூடு கட்டிட்டாப் போதும். யாரையும் அந்தப் பக்கமே போக விடாது. துரத்தித் துரத்தித் தலையில கொத்த வரும். இத்தனைக்கும் காக்காக் குஞ்சு பாக்கவே அசிங்கமா இருக்கும்”என்று இப்போது முகத்தைச் சுழித்தாள் சித்ரா. 

“சித்ரா, உனக்கும், எனக்கும் தான் அது அசிங்கம். காக்காக்கு அது தன்னோட குஞ்சு. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ன்னு பழமொழியே இருக்கே. கேள்விப்பட்டதில்லையா? என்று கஸ்தூரி கேக்கவும், “அது சரிதான் மா”என்றாள் சித்ரா. 




திடீரென்று அவளுக்கு ஒரு சந்தேகம் வந்தது. “ஏன் நவீ! வந்ததிலிருந்து உன்னோட தம்பிங்களைப் பாக்கவே இல்லையே! என்று சித்ரா கேட்கவும் அதன் காரணங்களால் ஏற்கனவே மனவருத்தத்துடன் இருந்த கஸ்தூரியும், நவீனாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர்கள் முகம் மாறியதைக் கண்ட சித்ரா தப்பாக எதையேனும் கேட்டுவிட்டோமோ என்று நினைத்ததுடன் அதைச் சொல்லவும் செய்தாள். 

தன் ஓர்ப்படி சின்னத்தனமாக நடந்து கொள்வதைத் தான் எப்படி சிறு பெண்ணிடம் பகிர்ந்து கொள்வது என்று சங்கடத்தில் கஸ்தூரி மௌனமாக, நவீனா தான் பேசினாள். 

“சே, சே, அப்படில்லாம் ஒண்ணும் இல்லடி.இதுல மறைக்க என்ன இருக்கு. அப்படிப்பட்ட அதிசயமான விஷயம் ஒண்ணுமில்ல அது. 

நான் இங்க இருக்கற வரைக்கும் அவங்க கூட விளையாடிட்டு பாத்துகிட்டு இருந்தேன். அது அவங்களுக்கு சகஜமா இருந்தது. நான் ஹாஸ்டலுக்கு வந்ததும், அருணும், தீபக்கும் அவங்களுக்குச் சரியா பேச ஆளில்லாததால அம்மா கிட்ட அதிகமா ஒட்ட ஆரம்பிச்சாங்க. 

அவங்களுக்கு குளிப்பாட்டறது, சாப்பாடு குடுக்கறது, அவங்களோட பாடம் படிக்க உதவி பண்றதெல்லாம்  வசதியா இருந்ததால ஏத்துக்கிட்ட சித்திக்கு, அவங்க அம்மாகிட்ட அன்பு காட்டறதும், அவங்க சொன்னா மட்டும் தான் கேப்பேன்னு சொல்றதும் ஏத்துக்க முடியல. 

அவங்களோ சமைக்கறது அம்மாங்கறதால, அவங்க கிட்ட “இது வேணும், அது வேணும்னு”  எதாவது கேப்பாங்க. அம்மாவும் சலிச்சுக்காம செஞ்சு தருவாங்க. 

இப்படி எல்லா விதத்திலும் குழந்தைகளோட தேவையைப் பூர்த்தி செய்ததால அவங்க அம்மாகிட்ட அதிகமான பாசத்தோட இருந்தாங்க. 

இதை சித்திக்கு ஏத்துக்க முடியல. பசங்க கிட்ட சொன்னா அவங்க கேக்கல. அவங்க எப்பவும் இங்கேயே இருக்கறதும், இராத்திரில இங்க தான் படுத்துக்குவோம் ன்னு அடம் பிடிக்கறதும் சித்திக்கு சுத்தமா பிடிக்காமப் போச்சு. 

அம்மா பொறுப்பா செய்யற  வேலைகளை விடவும் மனசில்ல. அதனால அந்தச் சின்னக் குழந்தைகளை லோகல் ஹாஸ்டல்ல சேத்துட்டாங்க. அப்பப்ப அவங்க போய்ப் பாத்துட்டு வருவாங்க. லீவின் போது வேறு வழியில்லாம கூட்டிட்டு வருவாங்க. சிலசமயம் நான் இருப்பேன்.என்று நவீனா சொல்லி முடித்தாள். 

“டி. வி. சீரியல்லாம் பாப்பங்களோ! சரியான வில்லியா இருப்பாங்க போல”என்று சிரித்தாள் சித்ரா. 

“சரி, சரி, ரொம்ப நேரமாச்சு. படுத்துத் தூங்குங்க. காலையில எழுந்திரிச்சி புறப்படற வேலையைப் பாருங்க. நானும் இங்கேயே படுத்துக்கறேன் ”என்று சொல்லிவிட்டு கஸ்தூரியும் அங்கேயே நவீனா கட்டிலில் படுத்துக் கொள்ள, சித்ரா மற்றொன்றில் படுத்துக் கொண்டாள். 

மறுநாள் காலையில் எழுந்ததுமே நவீனா, சித்ராவுடன் ஊருக்குப் போவதை கஸ்தூரி, மைதிலியிடம் கூறிவிட்டாள். பக்கத்திலிருந்த பங்கஜத்தமாளுக்கு ‘சுருக்’கென்றது. 

தங்களால், அதுவும் குறிப்பாக தன் மகனால் தான் இந்த முடிவை கஸ்தூரி எடுத்திருப்பதாக அவள் மனதுக்குப் பட்டது. 

“வயசு வந்த பொண்ண காரணமில்லாம இன்னொருத்தர் வீட்டுக்கு அனுப்பறதாவது! நல்லாத் தான் இருக்கு பொண்ண வளர்க்கற லட்சணம்! “என்று பங்கஜத்தம்மாள் நொடிக்கவும் கஸ்தூரியிடமிருந்து உடனே பதில் வந்தது. 

“ஆமாம்மா! நீங்க சொல்றது உண்மை. அது எவ்வளவு தப்புன்னு நேத்து ராத்திரி புரிஞ்சு போச்சு. ஆனா சித்ரா வீட்ல யாரும் ஆம்பிளைப்பசங்க இல்ல. அதனால இங்க விட அங்க பாதுகாப்பாவே இருப்பா.” கஸ்தூரி சொன்ன ‘வெடுக்’பதிலில் மைதிலியே ஆடிப் போனாள். 

பக்கத்தில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த முரளி தலையைத் தூக்கி ஒருமுறை பார்த்துவிட்டு “இதற்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை”என்கிறமாதிரி தலையைக் குனிந்து கொண்டு விட, கொஞ்ச நேரம் மௌனம் நிலவியது. 

மறுபடி கஸ்தூரியே வாயைத் திறந்து, “நாங்க வேறு வீடு பாத்துட்டு போலாம்னு இருக்கோம். இனிமே நவீனாவை எங்கும் தங்க வைக்க முடியாது.”என்று சொல்லவும், படித்துக் கொண்டு இருந்த பேப்பரை மடித்து டேபிளின் மேல் போட்ட முரளி, “அண்ணி, உங்களுக்கு இங்க என்ன பிரச்சனை?” என்றார். 

 “இத்தனை நாள் என்னையும், நவீனாவையும் பாதுகாத்து வந்தீங்க. அதுக்கு நன்றி தம்பி. நவீனா இந்தக் காலத்துப் பொண்ணு. அவளுக்கு இங்க தங்கறது சரிப்பட்டு வராது. அவள கல்யாணம் பண்ணிக் குடுக்கற வரையில எங்கூட கொஞ்சநாள் சந்தோஷமா வெச்சுக்கணும்னு ஆசைப்படறேன். நீங்க தப்பா நினைக்க வேணாம்”என்று சொல்லவும் முரளி, “உங்க இஷ்டம்”என்று சொல்லிவிட்டார். 

“இனி கொஞ்ச நாளில் வேலையிலிருந்தும் கஸ்தூரி நின்று விடுவாள். ஏற்கனவே அடிக்கடி மூட்டுவலி அது, இதுவென்று வைத்தியம் பார்த்துக் கொள்கிறாள். இனி முன்பு போல வேலை செய்யவும் இவளை எதிர்பார்க்க முடியாது. ஒன்றும் நடக்காத போதே, நேற்றிரவு நடந்ததற்கு இன்று வீட்டை விட்டுப் போகிறேன் என்று சொல்கிறாள். இனி சுந்தரைத் திருமணம் செய்ய நவீனா ஒப்புக் கொள்வாள் என்றும் தோன்றவில்லை.

மனதில் பல எண்ணங்கள் ஓட, “அக்கா, உங்களை நாங்க போகச் சொல்லல. இத்தனை நாள் எங்களுக்குத் தெரிஞ்சு நல்லாதான் பாத்துகிட்டோம். உங்களுக்கு இங்க ஒட்ட முடியலைன்னா போங்க.” என்று கூறிக் கொண்டே கணவனைப் பின்பற்றிச் சென்றுவிட்டாள் மைதிலி. 

பங்கஜத்தம்மாளுக்குத்தான் ஏமாற்றமாக இருந்தது. தன்மகனை யாரும் நினைக்கவில்லையே என்று. எதோ பேச வாயைத் திறந்தவள் பேச்சைக் கேட்கத்தான் அங்கு யாரும் இல்லை. 

இதையெல்லாம் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்த நவீனாவும், சித்ராவும், “சித்ரா, சித்ரா”என்று அவள் அம்மாவின் குரலில் கலைந்தார்கள். 

“நவீ, அம்மா கூப்டறாங்க! நான் என்னன்னு கேட்டு வரேன். உன் துணியெல்லாம் எடுத்து வச்சுக்கோ. ஆத்துல போய்க் குளிச்சிட்டு வரலாம்”என்று சித்ரா சொன்னதும் நவீனா திடுக்கிட்டாள். “என்னது! ஆத்துல குளிக்கறதா? எனக்கு நீச்சலெல்லாம் தெரியாது. அதுவுமில்லாம பொது இடத்திலெல்லாம் குளிச்சு எனக்கு பழக்கமில்லப்பா”என்றாள் அவசரமாக. 




“நீ இன்னிக்கு வந்து குளிச்சுப் பாரு. அப்றம் சொல்வே. பிடிக்கலேன்னா விட்டுடு.”

அது ஒன்றும் நவீனா நினைத்த மாதிரி சினிமாவில் வருவது போல் பொங்கிப் பொங்கி ஓடவில்லை. முழங்கால் அளவு கூட இல்லை. இருந்தாலும் முதலில் இறங்கி நடக்கும் போது சித்ராவின் கையைப் பிடித்துக் கொண்டு தான் இறங்கினாள். பின்பு கையை விட்டு விட்டு நடந்தாள். 

தண்ணீரிலேயே கொஞ்சதூரம் நடந்து ஒரு மறைவான இடத்திற்கு வந்தார்கள். முதலில் இறங்கும் போது ‘ஜில்’லென்றிருந்தது. நேரமாக நேரமாக ஆற்றில் நீராடுவது சுகமாக இருந்தது. 

நவீனாவை எழுப்புவதே பெரிய பாடாகி விட்டது சித்ராவுக்கு. “ஏய், போதும் வாடி! புதுசா குளிக்கற! பாரு, கண்ணெல்லாம் சிவப்பாயிடுச்சி! ஜுரத்துல படுத்தே, அவ்வளவுதான். உங்கம்மா கிட்ட திட்டு வாங்கறனோ இல்லையோ, எங்கம்மா என்னைத் தொலச்சுடுவாங்க”என்று அவளை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்தாள். 

“ப்ளீஸ், ப்ளீஸ் டீ! ஜுரம் வந்தா பாரசிட்டமால் இருக்கவே இருக்கு. ஆத்துல குளிக்கற அனுபவம் எனக்கு அப்றம் எப்போ கிடைக்குமோ”என்று மறுபடி தண்ணியில் இறங்கிய நவீனா, பத்து நிமிடம் கழித்துதான் வெளியே வந்தாள். 

சித்ராவின் அம்மா சமைத்து வைத்திருந்ததைச் சுடச்சுட சாப்பிடவும் அமிர்தமாய் இறங்கியது. 

மூவருமாய் வேலைக்காரி ரங்கத்தையும் சேர்த்துக் கொண்டு பல்லாங்குழி, தாயம் என்று ஆடினார்கள். 

நவீனாவுக்குப் புதுமையாகவும்,ரசிக்கத் தக்கதாகவும் இருந்தது. மூன்று நாள் மூன்றே நிமிஷமாய் ஓடியது. 

நடுநடுவில் கஸ்தூரியிடமும் இந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டாள் நவீனா. 

அதுவும் ஆற்றைப் பற்றி பேசும் போது அவள் குரலில் இருந்த உற்சாகம் கஸ்தூரிக்கு மகிழ்ச்சியைத் தந்தது. 

நாலாவது நாள் கஸ்தூரியிடமிருந்து போன் வந்தது. பேச ஆரம்பித்ததுமே அம்மாவின் குரலில் தெரிந்த உற்சாகம் நவீனாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. 

“என்னம்மா ரொம்ப சந்தோஷமா இருக்கே?”என்று நவீனா கேட்டதும் “நீ இல்லல்ல, அதனால இருக்கும்”என்று சித்ரா சொன்னது கஸ்தூரிக்குக் கேட்டது. 

சிரித்துக் கொண்டே, “உண்மையாவே ஒரு சந்தோஷ சமாசாரம் சொல்லத்தான் கூப்டேன். உங்க பெரியப்பாவும், பெரியம்மாவும் இங்கேயே வந்துடப் போறாங்களாம்.”

“அடடே! அப்டியா? எப்ப வராங்களாம்”என்று மகிழ்ச்சியாய்க் கேட்டாள் நவீனா. 

“ஏற்கனவே தெரிஞ்சவங்கக் கிட்ட சொல்லி வீடு பாத்துட்டாங்க. நாமளும் அங்கேயே வந்து இருக்கணும்னு கண்டிப்பா சொல்லிட்டாங்க. சாமானெல்லாம் கூட வாங்கி வைக்கச் சொல்லிட்டாங்களாம். நான் இன்னிக்கு வீட்டுக்குப் போய் ஆட்களை வெச்சு சுத்தம் பண்ணிட்டு வந்துட்டேன். 

நாளைக்காலைல சாமானெல்லாம் வந்துடுமாம். ஆட்களே எல்லாம் எடுத்து வெச்சுடுவாங்க. நீ போய்க் கொஞ்சம் பாத்துக்கோன்னு சொல்லியிருக்காங்க. 

நான் அட்ரஸ் அனுப்பறேன். நீ நேரா அங்கயே வந்துடு. சாயங்காலம் பால் காச்சிட்டு, இனிமே அங்கேயே இருந்துக்கலாம்.”சொல்லி முடித்த கஸ்தூரியின் குரலில் ஏகத்துக்கும் உற்சாகம் தெரிந்தது. 




What’s your Reaction?
+1
7
+1
9
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!