ramanin mohanam Serial Stories ராமனின் மோகனம்

ராமனின் மோகனம் – 12

12

” ஒரு வார்த்தை சொல்லவில்லை …என்ன செய்கிறாய் என்று ஒரு போன் இல்லை …ஒரு தகவல் இல்லை… திடீரென்று ஆல் அந்தர்த்தனம் ஆகிவிட்டாய் .உனக்கு எவ்வளவு தைரியம் ,? ” கத்தலாய் கேட்டபடி காதைத்திருகிக் கொண்டிருந்தாள் கௌசல்யா .அவளிடம் காது கொடுத்துக்  கொண்டிருந்தது சாட்சாத் அபிராமன்தான் .அன்னையைவிட குறைந்தது ஒன்னரை அடி உயரம் வளர்ந்து இருந்த அவன் அன்னையின் திருகுகளுக்காக முட்டி மடித்து தன் உயரத்தை குறுக்கி காதுகளை வாகாக கொடுத்துக் கொண்டிருந்தான்.

” ஆ …ஐயோ… அம்மா… வலிக்கிறதே ” கத்தியால் குத்துவது போன்ற ஒரு முக பாவனையை காட்டிக் கொண்டிருந்தான் .இவன்தான் நான்கு நாட்களாக தன்னிடம் அவ்வளவு கடுமையாக நடந்து கொண்ட அதே அபிராமனா ? நிலானிக்கு ஆச்சரியமாக இருந்தது.

” இந்த சூடு போதுமா என்று பாருங்கள் அக்கா ” கிச்சனிலிருந்து துணியை பிடித்துக்கொண்டு புகை எழுந்து கொண்டிருந்த கரண்டியை கொண்டு வந்தாள் சுபத்ரா.

” போதும் …கொண்டா… கௌசல்யா அதை வாங்கிக் கொள்ள , ” இது எதற்கு ? ” அலறினான் அபிராமன்.




” உனக்குத்தாண்டா .சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்த அந்த கால்களில் சூடு வைக்கிறேன் ”  கௌசல்யா சொல்ல , நாங்க ஹெல்ப் பண்ணுகிறோம் என்று ஓடி வந்தார்கள் அந்தப் பெண்கள் …இல்லை சிறுமிகள். எந்த வகையிலும் அவர்களை சேர்க்கலாம். அவர்கள் அன்று தியேட்டரில் பார்த்த அதே பெண்கள்தான் .நிலானி ஓடி வந்து கதவை திறந்து வரவேற்க நேர்ந்ததும் இவர்களைத்தான்.

அபிராமனின் உறவுப் பெண்கள் அண்ணா… அத்தான் என்பது போன்ற உறவு முறை உள்ளவர்கள் அவனை அழைப்பது அபி என்றுதான்.

” காப்பாத்துங்க சித்தி ” அபிராமனின் கத்தலை கை கட்டிக்கொண்டு ஓரமாய் தள்ளி நின்று அலட்சியப்படுத்தினாள்  சுபத்ரா .

” அவனை சோபாவில் தள்ளி உட்கார வையுங்கள். அப்போதான் சூடு வைக்க வசதியாக இருக்கும் ” பிள்ளைகளுக்கு உத்தரவிட்டாள்.

கௌசல்யா கையில் காயும் கரண்டியுடன் நிற்க ,  சுபத்ரா அவர்களுக்கான ஆணைகளை சொல்லியபடி தள்ளி நிற்க, 

நான்கு சிறு பெண்களும் அபிராமனை சோபாவில் சரிக்க முயன்றனர் .அவன் கால்களை அகட்டி தரையில் அழுத்தமாக ஊன்றி அவர்களது முயற்சிகளை எளிதாக முறியடிக்க , அவர்கள் திணறிக் கொண்டிருந்தனர்.

” நானும் வருகிறேன் ”  இந்த வேடிக்கைகளை  பார்த்துக் கொண்டு மனம் இளகி நின்ற நிலானி அவர்களது குடும்ப விளையாட்டில் கலந்துகொள்ள சற்றும் தயங்கவில்லை. இரண்டு கைகளையும் முன்னால் நீட்டியபடி  தள்ளத் தயாராக அபிராமனை நெருங்கினாள்.

” ஏய் இது எங்க குடும்ப விஷயம். நீ தலையிடாதே .தள்ளி போ…”  கண்களை உருட்டி அவளை மிரட்டினான் அபிராமன்.

” அதெல்லாம் இல்ல. அவங்களும் எங்க கட்சிதான். நீங்களும் வாங்கக்கா ” அந்தப் பெண்கள் அவளை தங்களோடு இணைத்துக் கொள்ள நிலானி உற்சாகத்தோடு அபிராமனின் மார்பில் தன் இருகைகளையும் பதித்து அவனை தள்ளினாள் .

அவன் மிகவும் பலமாக அசைக்கமுடியாமல் இருக்க கைகளை மிக அழுத்தி அவனை நெருங்கி தள்ள  அவனது மூச்சு காற்று அவள் உச்சி தொட , சுழற்றி விடப்பட்ட சட்டையின் மேல் பட்டனால் , முடிகளடர்ந்த  அவன் வெற்று மார்பில் அவளது ஒரு கை படிய …அதன் பிறகு வெகுநேரம் அவன் தாக்குப்பிடிக்கவில்லை. சரிந்து சோபாவில் விழுந்தான் .

அவன் கால்களை பற்றி வலது காலை தேர்ந்தெடுத்து பேண்ட்டை சற்று மடித்து விட்டுக்கொண்டு இங்கே என சூடு வைக்க இடம் காட்டினர் பெண்கள்.

கௌசல்யா குறித்த இடத்தருகே கரண்டியை கொண்டு போனாள். 

”  வைத்து விடவா ? இப்போது சூடு வைத்தால் தான் இந்தக் கால்  நமக்குத் தெரியாமல் எங்கேயும் ஊர் சுற்றாது ”  சொன்னபடி கரண்டியை கொண்டு வர அவன் கண்களை இறுக மூடிக் கொண்டான்.

” அம்மா தப்பு தான். இனி இப்படி செய்ய மாட்டேன். என்னை விட்டு விடுங்கள்  ” அவன் கத்த சுபத்ரா பதறி வேகமாக கௌசல்யாவின் கையை பிடிக்க கண்ணிமைக்கும் நேரத்திற்குள் கரண்டி தூரப் போய் விழுந்தது. அவன் காலைப் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் அனைவருமாக கரண்டியை தட்டி விட்டிருந்தனர் .தட்டிய முதல் கை தன்னுடையதுதானோ ? என்ற சந்தேகம் நிலானிக்கு பிறகு எழுந்தது .

” ஐயோ கார்ப்பெட் ”  பதறியபடி  கீழே விழுந்த கரண்டியை ஓடிப்போய் தள்ளி விட்டாள் அவள்.

” நான்கு நாட்களாக பிள்ளையைப் பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லையென்றால் எங்களுக்கு எப்படி இருக்கும் ? ” கௌசல்யாவின்  குரலில்  கரகரப்பு தெரிய அதை உணர்ந்த அபிராமன் அம்மாவின் தோளை தழுவி தன் அருகே அமர்த்திக் கொண்டான்.

” என்னம்மா இது ? நான் சின்ன பிள்ளையா ? எங்கே போகப் போகிறேன் ? இதோ நம் எஸ்டேட்டில் தான் இருந்தேன் .இங்கே நிறைய பிரச்சனைகள் அதனை பார்த்துக்  கொண்டே இருந்ததில் உங்களுக்கு போன் செய்ய நேரமில்லாமல் போனது ” 

” உங்களுக்கெல்லாம் வேலை வந்தால வீட்டு பெண்களை மறந்து விடுவீர்கள் .ஆனால் நாங்கள் எல்லாம் எங்களுக்கு எத்தனை வேலை இருந்தாலும் வெளியே போய் இருக்கும் உங்களை மட்டும் தான் நினைத்துக் கொண்டே இருக்கிறோம்  ” சுபத்ராவின் பேச்சு பெரும்பான்மையான இந்தியப் பெண்களின் மனநிலையை பிரதிபலித்தது.

” ஐய்யோ… அன்னையாரே… சித்தியாரே …தப்புதான் . இனி செய்ய மாட்டேன் .இனி எங்கே இருக்கிறேன்… என்ன செய்கிறேன்… என்று உங்களிடம் தெரிவித்துவிடுகிறேன். போதுமா ? ” அபிராமன் கன்னத்தில் போட்டுக் கொண்டான்ஓரளவு சமாதானமாயினர் அனைவரும். 

” சரி சாப்பிட்டாயா  ? ” கௌசல்யா கேட்க அபிராமன் உதட்டைப் பிதுக்கினான் .

” பச்சைப் பட்டினி. நான்கு நாட்களாக  வெறும் பன்னும் டீயும் தான் எங்க ரெண்டு பேருக்கும் ” . உடனே பதறினர் அன்னையும் , சிற்றன்னையும் .

”  இதை முதலிலேயே சொல்வதற்கு என்ன ? வாங்கக்கா  ஏதாவது சமைக்கலாம் ” அடுப்படிக்குள் வேகமாய் போனவர்களை கனிவுடன் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

” அபி இங்கே எங்களை எங்கே கூட்டிக்கொண்டு போகிறாய் ? இங்கே எந்த இடம் எல்லாம் இருக்கிறது ? ” குதித்தபடி அவனை சூழ்ந்து கொண்டனர் சிறு பெண்கள் .எத்தனை விகல்பம் இல்லாத பழக்கம் …நிலானியை சம்மட்டியால் உச்சந்தலையில் யாரோ மடார் மடார் என அடித்தது போல் இருந்தது. இவனையா  ஷிவானி  அன்று தவறாக நினைத்தாள் ?




தான் செய்த பிழையின் அளவு இப்போது அவளுக்கு புரிந்தது .அபிராமனின் கோபத்தின் காரணமும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாய் தோன்றியது .ஆனால் இவனைப் பற்றி அன்று  ஷிவானி சொன்ன தகவல் அவள் உள்மனதை அரிக்காமல் இல்லை.

” எங்கள் குடும்பம் பெரிய குடும்பம் .அப்பாவும் , சித்தப்பாவும் அதன் தலைவர்கள் .அம்மாவும் சித்தியும் வீட்டுக் தலைவிகள் .அத்தைகள் மூன்று பேர் எல்லோருக்கும் இரண்டு இரண்டு என்று குழந்தைகள் .எல்லோர் வீட்டிலும் எல்லோருக்குமே இரண்டும் பெண் குழந்தைகள் தான். நான் ஒருவன் மட்டுமே இந்தக் குடும்பத்தில் ஆண் பிள்ளை . அதனால் என்னை கொஞ்சம் அதிகமாகவே அனைவரும் கொண்டாடுவார்கள். எங்கள் வீட்டு பெண்களுக்கெல்லாம் எப்போதும் எங்கே சென்றாலும் நான் தான் பாதுகாவலன்.” 

” நீயா … ? ” ஒரே ஒரு வார்த்தை தான். அது அவனை காயப்படுத்தியது நன்றாகவே தெரிந்தது.

வெளியே கூட்டிப் போகச் சொல்லி நச்சரித்த பெண்களை சாப்பிட்டு போகலாம் என அமைதிப்படுத்தி அனுப்பிவிட்டு இவளிடம் விளக்கங்கள் கொடுத்துக் கொண்டிருந்தவனின் முகம் அவளது ஒற்றை வார்த்தை கேள்வியில் சிவந்தது.

” தவறாக பார்க்காதே. நான் அப்படிப்பட்டவன் இல்லை. உன்னை போன்ற மடக் கழுதையின் மிதமிஞ்சிய கற்பனை அது ” சீறினான்.

மடக் கழுதை என்ற வார்த்தை பிரயோகம் நிலானிக்கு கோபத்தை கொடுத்தது . ” என்னிடம் ரொம்பவும் உத்தமனாகத்தான் நடந்து கொண்டாயோ  ? ” அவளது கேள்வியும் சூடாகவே இருந்தது.

” உன்னையெல்லாம் அந்த மாதிரி பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு துளியும் கிடையாது. ஆனாலும் உன் தவறுக்கு தண்டனை தந்தாக வேண்டுமே .அதற்குத்தான் வேறுவழியின்றி….”  அலட்சியமான அவனது தோள் குலுக்கல் நிலானியை  மிகவுமே காயப்படுத்தியது.

 உன்னை தொடுவது எனக்கு பிடிக்கவில்லை என ஒரு அழகான பெண்ணைப் பார்த்து ஆண் சொல்வானானால் அது அவளது பெண்மைக்கான கேலி மட்டுமல்ல தன்னம்பிக்கையும் குலைக்கும் சொல் .நிலானி மிகவுமே காயப்பட்டாள் .

” நீ மிகவும் மோசமானவன் ” குமுறினாள் .” உனக்கு அப்படி இருக்கத் தான் விரும்புகிறேன் ” அலட்சியம் காட்டினான் அவன்.

சூடும் சுவையுமாக விருந்து போல் பரிமாறப்பட்ட உணவு பண்டங்கள் மிகவும் உடலும் மனமும் களைத்திருந்த அந்நேரத்திலும் நிலானிக்கு சுவைக்கவில்லை . ” ஏனம்மா சரியாக சாப்பிடவில்லை ? சுபத்ரா பரிவோடு விசாரிக்க …” உடம்பு சரி இல்லையா ? ” அக்கறை காட்டினாள் கௌசல்யா.

” அவளுக்கு அடிபட்டிருக்கிறது அம்மா .அதனை கவனியுங்கள்”  அபிராமன் தட்டிலிருந்து நிமிராமல் சொன்னான்.

” எங்கே அடிபட்டிருக்கிறது ? ” 

” அங்கே … ” அபிராமனின் கண்கள் நிலானியின் சேலை மூடாத வெற்று இடை பிரதேசத்தில் சுட்டிக்காட்டி அழுந்தப் பதிந்து நிற்க ,  நிலானிக்கு  உடல் சிலிர்த்தது. குருதி வேகமெடுத்தது . அந்த மாதிரி எண்ணம் கிடையாதாம் .இந்த மாதிரி பிடுங்கல் பார்வை மட்டும் பார்ப்பானாம் …அனிச்சையாக சேலையை இழுத்து இடையை மறைத்துக் கொண்டாள்.

” வாம்மா தைலம் தடவி விடுகிறேன் ” கௌசல்யா அவள் கைபற்றி எழுப்பி அழைத்துப் போனாள்.

” என்னை தெரியுமா உங்களுக்கு ? ” இதமாக இடுப்பின் சுளுக்குக்கு தைலம் தடவிக் கொண்டிருந்த கௌசல்யாவிடம் மனம் உறுத்த கேட்டாள் நிலானி.

” தெரியுமே… திருக்குமரனின் மகள் தானே நீ ? ” 

“எங்கள் பையனிடம் இரண்டு முறை வம்பு செய்து அவனை போலீசில் பிடித்துக் கொடுத்தவள்தானே ? ” கேட்டபடி சுடுதண்ணீர் பாத்திரத்துடன் வந்தாள சுபத்ரா .

” அப்படியே லேசாக ஒத்தடம் கொடுத்து விடுங்கள் அக்கா. சீக்கிரம் சரியாகிவிடும்  ” என்றாள்

நிலானியால் நம்ப முடியவில்லை ” என்னைப் பற்றி தெரிந்தும் என்னை எப்படி சகித்துக் கொண்டு இருக்கிறீர்கள்? ” 

” நீ சின்னப் பெண் தானேம்மா ? உனக்கு என்ன விவரம் தெரியும் ?ஏதோ சிறு பிள்ளை போல் விளையாண்டு விட்டாய் .விடு .அதனை நாங்கள் மனதில் வைத்துக் கொள்ளவில்லை .” பெருந்தன்மையான அவர்களது பேச்சு நிலானியன் தன்னம்பிக்கையை பாதித்தது.

” என் அப்பாவைப் பற்றி தெரியுமா ? ” மெல்லிய குரலில் கேட்டாள்.

” உன் அப்பாவின் சொந்த ஊர் எது ? ” 

கௌசல்யாவின் கேள்விக்கு விழித்தாள்

” அதுவும் தெரியாதா ? உன் அப்பாவின் சொந்த ஊர் வாழப்பாடி. எங்களுக்கும் அதுதான் சொந்த ஊர் .ஒரே ஊர்க்காரர் என்ற வகையில் உன் அப்பாவைப் பற்றி சிறுவயது முதலேயே எங்களுக்கு நன்றாக தெரியும் .கட்சியில் சேர்ந்து கொண்டு மீட்டிங் போராட்டம் அது இதுவென்று ஏதாவது குட்டி கலாட்டாவை ஊருக்குள் செய்துகொண்டே இருப்பான் ” 




” ஓ என் அப்பாவின் பெருமைகள் தெரிந்ததனால்தான் என்னை வீட்டிற்குள் வைத்து இருக்கிறீர்கள் போல .நான் நிறைய குழம்பிக்கொண்டிருந்தேன் ” அவளது பேச்சில் கௌசல்யாவும் சுபத்ராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் .சுபத்ரா ஏதோ சொல்ல வாயை திறக்க…

” விடுங்கள் சித்தி. சிலருக்கு உச்சியில் நச்சென்று ஆணி வைத்து அடித்தால்தான் உரை ஏறும் ” நக்கலாக பேசியபடி வந்தான் அபிராமன். கௌசல்யாவும் சுபத்ராவும் அமைதியாக வெளியேறி விட்டனர்.

“என்னைப் பற்றியா பேசுகிறீர்கள் ? நிலானி சந்தேகத்துடன் கேட்டாள் .

”  இல்லையே …அதோ அந்த மரத்தில் தாவுது பார் குரங்கு அதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன் ” ஜன்னல் வழியாக அவன் காட்டிய கருங்குரங்கிற்கு நிலானிக்கு பயங்கர ஆத்திரம் வந்தது .கைகளால் கப்பென்று அவன் கழுத்தை பிடித்து நெறிக்கும் எண்ணத்தில்  அவள் இருந்தபோது…

” அக்கா இங்கே வாருங்கள் ” சுபத்ராவின் கத்தல் அடுப்படியிலிருந்து கேட்க , சிறிது நேரத்திலேயே கௌசல்யாவின் அலறல் கேட்டது ” ராமா ..வாடா இங்கே ” 

இருவரும் பதறியடித்து அங்கே போக சுபத்ராவின் கையில் இருந்தது அபிராமனின் சிகரெட் பெட்டி .அவனுக்குத் தெரியாமல் நிலானி கொண்டு வந்து கிச்சன் குப்பைக்கூடைக்குள் போட்டாளே அது.

” சிகரெட் பிடித்துக் கொண்டு இருக்கிறாயாடா நீ ? “

” ஆமாம் ஆன்ட்டி .டெய்லி ஒரு பாக்கெட்டாவது குடிப்பார் “சமயம் பார்த்து பற்ற வைத்துவிட்டாள் நிலானி.

அன்னையர்கள் இருவரும் மீண்டும் கரண்டியை காய வைக்கும் யோசனையில் இறங்கினர். இந்த முறை அவர்கள் சுட தேர்ந்தெடுத்த  இடம் அபிராமனின் உதடுகளாக இருந்தன .மீண்டும் ஒரு குட்டியான  போர்க்களம் அங்கே உருவாக நெஞ்சம் எங்கும் மகிழ்வு ததும்ப அதனை கன்னத்தில் கை வைத்து ரசித்துக்கொண்டிருந்தாள் நிலானி.

அப்போது ஹாலில் ஓடிக் கொண்டிருந்த டிவியில் நியூஸ் சேனலில் திருக்குமரன் வந்தார் .

” ஹை …அப்பா ” டிவிக்கு ஓடினாள் நிலானி .

What’s your Reaction?
+1
3
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!