Serial Stories பூம்பாவை

பூம்பாவை-8

 8

பைனூர் மலைப்பாதையில் நன்மாறனின் கார் விரைந்து கொண்டிருந்தது. 

‘இந்த பேச்சிமலைக்கு மட்டும் பேசும் சக்தி இருந்தா தனக்கு என்ன நடக்குதுன்னு சொல்லி இருக்கும். படிப்பு வாசனையே அறியாத ஜனங்க.  என்னமோ காளான்னு சொன்னாரே அந்தப் பெரியவர். அது எந்த அளவுக்கு இவங்க ரத்தத்துல ஊடுருவி இருக்குன்னு தெரியல. அது விஷமா நல்லதான்னு கூட இவங்களுக்குத் தெரியாது. பின்ன எப்படி அத நம்பி சாப்பிடறாங்க? அவர் என்னடான்னா காளானைச் சாப்பிட்டேன். ரத்தம் ஜிவ்வுன்னு ஏறுதுங்கறார். இந்த மாதிரி ஒரு காளான் அதுவும் சாப்பிட கிடைக்குதுன்னா உலகத்தில் ஹீமோகுளோபின் குறைபாடே இருக்காதே. இரத்தக் குறைபாடே வராதே. இந்த ஆராய்ச்சி மட்டும் சக்ஸஸ் ஆனா உலகத்துல நம்பர் ஒன் அதிர்ஷ்டசாலி நான் தான். எத்தனை பேரைக் காப்பாற்றலாம்?’

நன்மாறன் தனக்குள் சொல்லிக் கொண்டே பயணிக்கும் போது தான் அவனது காரை நோக்கி மேலிருந்து மூட்டையாய் விழுந்தான் ஊமையன்.

“ஹேய்..யாரு மேன் நீ?” கத்திக் கொண்டு காரை நிறுத்தியவன் இறங்கி ஓடினான். 

கவிழ்ந்து கிடந்த ஊமையனைத் திருப்பி அவன் நாடித் துடிப்பைப் பார்க்கும் போது ஆள் போய் அரை மணியாயிற்று என்று தெரிந்தது. 

ஓஹ்.. இவன் யார்? எங்கிருந்து வந்தவன்? சரி.. நம்ம ஆஸ்பத்திரிக்குத் தூக்கிப் போகலாம் என நினைத்துத் தூக்கப் போனவன் முன் தபதபவென்று வந்து நின்றாள் பூம்பாவை. 

“ஆ! பேச்சியம்மா… ஐயோ நீ இவனையும் போக்கிட்டியா?”

கையிலிருந்த குத்தீட்டி நன்மாறன் நெஞ்சில் பாய வர அவன் சற்றே நகர்ந்ததில் அவன் இடது  தோளின் சதையைக் கிழித்து நின்றது. பெருக்கெடுத்து நனைந்த ரத்தத்தில்..

“பாவை!” என்று கத்தினான் நன்மாறன்.

ரௌத்திர காளியானாள்.

“என்னடா பாவை? நீ யாரு என்னோட பேரு சொல்றதுக்கு? நான் தான் வனப் பேச்சி. இந்த மலையைக் காக்கற வனப்பேச்சி. உன்னையல்லாம் அன்னிக்கு கார் மோதினப்ப காப்பாத்தினதே தப்பு. செஞ்ச தப்புக்குத் தான் இப்ப குத்தீட்டிய பாய்ச்சினேன். போ! போ! எங்க மலையை விட்டே போ!” ஆங்காரமாய்க் கத்தினாள்.

அத்ற்குள் தன் காரிலிருந்த பர்ஸ்ட் எய்ட் பாக்ஸில் இருந்து பஞ்சு, மருந்து என வைத்தவன்..

“இந்தா.. இந்த துணியைக் கிழித்து கட்டுப்போடு. ப்ளீடிங் ஹெவியா இருக்கு பாரு எனக்கு!”

“ஏண்டா.. எங்க ஆளுங்கள கொன்ன உனக்கு நான் கட்டுப் போடணுமா?” 

“நான் கொன்னேன்னு பார்த்தியா பாவை?”

“இல்ல.. ஆனா இது என்ன?”

“இவன் யாருன்னு எனக்குத் தெரியாது ஏஞ்சல்!”

நன்மாறனின் கண் சொன்ன உண்மையில் சற்றே நெருங்கி வந்து அவன் தோளுக்கு மருந்து வைத்துக் கட்டு கட்டினாள் பூம்பாவை.

“உன் சந்தேகத்துக்கு என்னை கத்தியால் குத்திட்ட. இப்ப என்னை நம்பி வர நோயாளிகளை யார் பார்ப்பா சொல்லு! இங்க பாரு. எவனோ தெரியலை. மலை மேல இருந்து சரியா என் கார் முன்னாடி விழுந்தான். குப்புறக் கிடந்த அவனைத் திருப்பிப் பார்க்கறேன். மூச்சு நின்னு அரை மணி நேரம் ஆகி இருக்கும் போல. இவன் யாருன்னு உனக்குத் தெரியுதா?”

சொன்னவாறே ஊமையனின் முகத்தைத் திருப்பினான்.

“எஞ்சாமி! யாருமத்த இவன் ஊமையன் ஆச்சே. பேச வராது இவனுக்கு. நல்லா மாடு மேய்ப்பான். மேய்ச்சலுக்குத் தான் போயிருப்பான்.”




“ம்ம். இப்ப சொல்லு. இவன் மேல ஒரு நகக் கீறலும் இல்ல.  இதோ பாரு. தலை முடி கருகிக் கிடக்கு. எங்கயோ தீப்பிடிச்சிருக்கு. அதுல தப்பி ஓடி வந்தவன் மலைச்சரிவுன்னு பார்க்காம மேல இருந்து விழுந்துட்டான் அப்படின்னு சொல்லலாம். ஆனா என் டாக்டர் அறிவு இவன் செத்து அரை மணி நேரமாச்சுன்னு சொல்லுது. என்ன செய்ய இப்ப? சொல்லு பாவை. ஏதோ நடக்குது உங்க மலையில. அன்னிக்கு உன் தோழி . இன்னிக்கு இவன்.”

பூம்பாவை மனக்கண்ணில் தன்னை மறந்து  உளறிய கடம்பன் வந்து நின்றான்.

“அவனும் உன்னைச் சொல்லல!”

“எவன்?”

“இல்லல்ல. ஒண்ணுமில்ல. இப்ப இவனைப் பத்தி என்னன்னு சொல்ல?”

“வா! நான் வந்து நடந்ததச் சொல்றேன்.”

“ஆத்தாடி. அன்னிய ஆம்பிளைங்க எங்க குடிக்குள்ள காலெடுத்து வைக்க முடியாது. இப்படிப் பேசறதப் பாத்தாலே கொன்னு போட்டுடுவாங்க.. ஆமா!”

“அப்ப உன் தோழி மயில் அப்படித் தான் செத்தாளா? அவ யாரேனும் அன்னிய ஆம்பிளைகளோட பேசறதப் பார்த்துட்டு.. உங்க ஆளுங்க..”

“அவ அப்படிப்பட்டவ இல்ல. அவள யாரோ தான்..”

“புரியுதா.. அவளை யாரோ தான். இந்த ஊமையன்னு சொன்னியே. இவனையும் யாரோ தான். அப்ப என்னைத் தவிர இன்னொரு  வெளியாள் யாரோ இருக்கான் பாவை. அவன் யாருன்னு பாரு.அவனுக்கு என்ன தேவைன்னு பாரு. அவன் ஏன் உங்க கூட்டத்தைக் குறி வைக்கிறான்னு யோசி. அப்படி என்ன மத்தவங்க கிட்ட இல்லாதது உங்க கிட்ட இருக்கு? இல்ல எல்லோரும் ஏமாளிகளா இருக்கீங்களா? ஹான்..  உங்க மலைக்கு தலைவர் யார்? அவர் கிட்ட என்னைக் கூட்டிப் போ. நான் அவர் கிட்ட சொல்றேன். இப்படி வரிசையா ஒவ்வொருத்தரா செத்துட்டு இருந்தா ஏன் எதுக்குன்னு பார்க்க மாட்டீங்களா நீங்க?”

பூம்பாவை கண்ணில் நீர் குளம் கட்டியது. நன்மாறனின் பேச்சில் தெளித்த உண்மை அவளுக்குப் பெரும் பயத்தைக் கொடுக்க சத்தம் போட்டு அழுதாள். அழுத அவளைத் திரும்பிப் பார்த்தவன் தடுக்க முயலாது திரும்பிக்  காரில் சாய்ந்து நின்றான் நன்மாறன். 

பாவையோ மண்ணில் குத்திட்டு அமர்ந்தவாறு தலையை முட்டி மேல் கவிழ்த்து வெகு நேரம் அழுது கொண்டிருந்தவள் கண்ணீர் வற்றியதும் ஒரு முடிவோடு நிமிர்ந்தாள்.

“எங்க ஐயன் தான் தலைவரு. அவருக்கும் இது எதுவும் புரியல. வனப்பேச்சிக்கான படையல்ல வந்த குத்தம்ன்னு நினைக்கறாரு. சரி. நீரு போயிடும். இந்த ஊமையனை நான் கொண்டு போறேன்.”

பேசிக் கொண்டே எழுந்தவள் கீழே கிடந்த ஊமையனைக் காணாது அதிர்ந்தாள்.

“எங்க போச்சு ? ஹக்க்!” 

தூரத்தில் ஓர்  உருவம் தோள் மேல் ஊமையனைப் போட்டுக் கொண்டுச் சென்றது.

“பாவை.. அது..?”

“எங்க மலைநாட்டுக் காரன் தான். எப்ப வந்துது? என்னத்தக் கேட்டுதுன்னு தெரிலயே!” பாவை யோசனையோடு தூக்கிச் செல்லும் கடம்பனையே பார்த்தபடி நின்றாள்.

“இப்ப நீ அழும் போது தான் இருக்கும். அதுக்கு முன்னாடி யாரும் வரல. வா! நான் உன்னைக் கொண்டு போய் விடறேன்”

“இல்ல.. நான் கெளம்பிக்குவேன். இனி இந்த ஊரை விட்டு வெலகுறது உனக்கு நல்லது துரை!”

“எனக்கான ஏஞ்சல் இங்க தானே இருக்கா!”

“நான் ஏஞ்சல் இல்ல தொரை. வனப்பேச்சி!” 

விலகி உறுதியுடன் கடம்பனை நோக்கி நடந்தாள் பூம்பாவை.

இங்கு இப்படி நடந்து கொண்டிருக்க மலையின் அடர்ந்த இருட்டில் கிசுகிசுப்பாய் குரல்கள் கேட்டன.

“மலைத்தேன் கிடைச்சதும் தேனடையை யாரும் பார்க்காம டிஸ்போஸ் செய்யச் சொன்னாரு டாடி. மடப் பசங்க நீங்க என்னடான்னா தேனடையை மலை மேல இருந்து தள்ளி விட்டு இருக்கீங்க. தேனெடுத்த தேனடைன்னு எவனாவது கண்டு பிடிச்சான்னா என்னடா பண்றது?”

விக்ரம் கத்திக் கொண்டிருந்தான்.

“யாருக்கு தோஸ்து தெரியும்? எல்லாம் படிக்காத தற்குறிங்க. மாடு மேய்க்கப் போனவன் மலை மேல இருந்து விழுந்தான்னு தூக்கிப் போய் புதைச்சுருவாங்க.”

“தீ வேற உண்டாக்கி இருக்கோம்டா!”

“காட்டுத் தீயின்னு கன்னத்துல போட்டுக்குவாங்க!”

“இப்படி தேனெடுக்கறத் தொழில் வச்சுக்கிட்டா எத்தனை தேனடையைப் பதுக்கணுமோன்னு எனக்கு கடுப்பா வருது மச்சான்!  கிடைக்கறது மலைத்தேன் அப்படின்னா பரவாயில்ல. விளையாட்டுக்கு விளையாட்டாவும் ஆச்சு. கொம்புத் தேன் தான் கிடைக்கும்ன்னா ஒரே மாதிரி இருக்காது. கிடைக்கற கொம்பு நம்மளையே தூக்கினாலும் தூக்கிடும் பார்த்துக்க!” 




விக்ரமின் இன்னொரு நண்பன் இடையிட்டுக் கூற..

“வந்துட்டாரு அரிச்சந்தர வீட்டுக்கு அடுத்த வீட்டுக் காரரு! டேய்.. மலைத் தேன் மஜான்னா கொம்புத் தேன் அமௌண்ட் கணக்குல இல்ல பார்த்துக்க. நம்ம சயன்டிஸ்ட் மட்டும் இத வைச்சு ப்ரோடக்ட் தயார் செய்யட்டும். உலகத்துல நம்பர் ஒன் பணக்காரன் நாம தான் டா! இப்ப அடுத்த தேனுக்கு என்ன செய்யலாம்? யாரத் தேடலாம்?”

“கடம்பன் தான்!”

“அவன் சுதாரிச்சுடுவாண்டா!”

“விஸ்கிக்குப் பதில் வேற கொடு! இன்னும் இன்னும் போதையேத்து! வந்துருவான்!”

“அதுக்கு அவனையே தேனடையாக்கிட்டா?”




What’s your Reaction?
+1
6
+1
8
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!