Serial Stories

மயங்கினேன் மன்னன் இங்கே-10

10

 

” ஏன் அப்படி சொல்கிறீர்கள் ஐயா …? ” திருமணத்தை நிறுத்த சொன்ன பெரியவரிடம் கன அக்கறையாக விசாரித்தான் திருமலைராயன் .

 

” உங்கள் கல்யாண சீராகத்தானே இந்த தொழிலை தரப் போவதாக தாண்டவர் சொல்கிறார். அந்தக் கல்யாணத்தையே நிறுத்தி விட்டால் ….”

 

” யோவ் என்னய்யா சொல்கிறீர் …? நம்ம ராயர் கல்யாணம்யா .அதை நிறுத்தலாம்னு பேசுவாயா …? ” வேறொருவர் கோபத்துடன் கத்த ,

 

” ராயர்னா மன்னர்தானே. நம்ம ஊர் மன்னராகத்தானே இவரை நினைத்திருக்கிறோம். நமக்கு ஒரு கேடு என்றால் இவர் தனது வாழ்க்கையை கொஞ்சம் விட்டுத் தர மாட்டாரா …? ” துடுக்காய் பேசினான் ஒரு இளைஞன் .

 

” அதுதானே  இந்த பொண்ணு இல்லைன்னு இன்னொரு பொண்ணு. எங்க ராயருக்கு பொண்ணா கிடைக்காது …” வயதான பாட்டி ஒருவர் ஆணியடித்தது போல் பேசியபடி வந்தார் .

 

கசகசவென ஒருவருக்கொருவர் வாதிட்டுக் கொண்டிருந்த கூட்டத்தினரை மீண்டும் கையுயர்த்தி காட்டி அமர்த்தினான் திருமலைராயன். ” மக்களே அமைதியாக இருங்கள். எனக்கு என் சொந்த வாழ்வை விட உங்கள் அனைவரின் வாழ்க்கைதான
மிகவும் முக்கியம். நீங்கள் சரியென்றால் கல்யாணம் செய்து கொள்கிறேன் .இல்லையென்றால் வேண்டாம் …” பாந்தமாக பேசினான் .

 

” திருமலை…” தாண்டவராயர் குரலை உயர்த்தி கர்ஜித்தார் .

 

” யோவ் …எங்க ராயரை பெயர் சொல்லி கூப்பிடுறியா …? ” ஒரு குரல் ஆத்திரமாக கேட்க , தொடர்ந்து ஒரு கும்பல் தாண்டவராயர் மேல் பாய தயாரானது .

 

திருமலைராயன் அவசரமாக நடுவில் வந்து நின்றான் .” மக்களே பொறுமையாக இருங்கள். அவசரப்படாதீர்கள் …” கெஞ்சலாய் கேட்டான் .

 

” என்ன ராயரே. இதெல்லாம் உங்களோட முன் ஏற்பாடா …? சத்தமில்லாமல் உங்க ஆட்களை பின்னால் தூண்டி விட்டுட்டு , இப்போது இங்கே வந்து நல்லவன் போல் நிக்குறீங்களோ …? ” தாண்டவராயரின் கோபம் குறையவில்லை .

 

” நான் ஏன் தூண்டி விட வேண்டும் தாண்டவரே. என் ஊர் மக்கள் அறிவில்லாதவர்கள் இல்லை. அவர்களுக்கு என்னால் முடிந்த அளவு படிப்பறிவிற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். என் ஊரின் இளைய தலைமுறையில் படிக்காத  ஆள்ஒருவர் கூட  கிடையாது .அவர்களுக்கு இருக்கும் அறிவை வைத்து தங்கள் நன்மை , தீமைகளை அவர்களே அறிந்து கொள்கிறார்கள் .நான் செய்ததெல்லாம் அவர்களுக்கு அறிவை அறிமுகம் செய்தது மட்டும்தான் …”

 

தாண்டவராயர் பல்லை கடித்தான் .இவன் ஒரு படித்த முட்டாள் . இவன் படிப்பை நான் உபயோகித்து கொள்ள திட்டமிட்டால் , இவன் அந்த படிப்பை ஊருக்கெல்லாம் விநியோகம்  செய்து என் அடி மடியிலேயே கை வைக்கிறானே …

 

” இப்படி ஊரைக் கூட்டி கல்யாணம் வரை வந்து விட்டு திடீரென நிறுத்துவதுதான் உங்கள் ஊர் நாகரீகமா ..?  இந்த கல்யாணம் மட்டும் நின்றால் நான் சும்மா இருக்கமாட்டேன் .இந்தக் கல்யாணத்திற்காக நான் கோடிக்கணக்கில் பணம் செலவழித்திருக்கிறேன். எந்த விசயத்திலும் நான் நஷ்டப்பட மாட்டேன் . உங்கள் ராயர் மேல் …இந்த ஊர் மேல் கோர்ட்டில் கேஸ் போடுவேன் .உங்கள் எல்லோரையும் கோர்ட் கூண்டில் ஏற்றாமல் விட மாட்டேன் “

 

தாண்டவராயரின் ஆவேசத்தில் அந்த இடத்தில் ஆழ்ந்த மௌனம் நிரம்பியது. சட்டத்தின் பெயர் அந்த அப்பாவி மக்களை கொஞ்சம் பயமுறுத்தவே செய்தது. வெற்றி நிமிர்வுடன் நின்ற தாண்டவராயர் எதிரே நிதானதாக வந்து நின்றான் திருமலைராயன்.

 

” எந்த செக்சனில் என்ன வித கேஸ் போடுவீர்கள் தாண்டவரே ..? ” இடுப்பில் இரு கைகளையும் ஊன்றிக் கொண்டு அரச தோரணையுடன் கேட்டான் .




” எனக்கு தொழில் ஆசையும் , என் மகளுக்கு கல்யாண ஆசையும் காட்டி ஏமாற்றியதாக சொல்வேன் .இந்த தொழிலை ஆறு மாதங்களாக உங்களுக்காக நான் ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் விபரங்களை  காண்பிப்பேன் . அப்போதெல்லாம் பேசாமல் இருந்து விட்டு இப்போது கடைசி நேரத்தில் மணமேடையில் என் மகளை நிறுத்திக் கொண்டு இதனை மறுத்து என்னை ஏமாற்றியதை சொல்வேன் ” கையுயர்த்தி முழங்கினார் தாண்டவராயர் .

 

” உங்கள் ராயரை …அவருக்கு ஆதரவாக வருபவர்களை ஜெயிலில் போடாமல் விட மாட்டேன் ” ஊர் மக்கள் பக்கம் விரல் நீட்டி எச்சரித்தார்.

 

” எங்கள் ராயரை ஜெயிலில் போடுவாயாய்யா நீ …அவர் கிட்ட நெருங்க முடியாது உன்னால். அவருக்கு பதிலாக நாங்க ஆயிரம் பேர் ஜெயிலுக்கு போக தயாராக இருக்கிறோம்யா …வா…பார்த்துடலாம்…” அங்கொன்றும் இங்கொன்றுமாக கேட்ட குரல்கள் ஒன்றாக சேர்ந்து ஒட்டு மொத்த கோசமாக மாறியது .

 

இந்தக் கூட்டத்தின் முன்னால் நின்ற இரு இளைஞர்களை இழுத்து அணைத்துக் கொண்டான் திருமலைராயன். இரு பெரியவர்களின் பாதங்களை குனிந்து வணங்கினான் .அவர்கள் பதறி பின் வாங்கி கை குவித்தனர் .

 

” என் மக்கள் . எனக்காக இவ்வளவு யோசிக்கிறீர்கள் .உங்களுக்கு சிறு கேடு நடக்க நான் விடுவேனா …? பல மாதங்களாகவே எனக்கு உங்கள் அனைவரின் யோசனைதான். நீங்கள் அனைவரும் அமைதியாக இருங்கள் .நம்மை யாரும் எதுவும் செய்து விட முடியாது .” உணர்ச்சி வசப்பட்டு கரகரத்தது திருமலைராயனின் குரல் .

 

நடப்பவற்றை பிரமிப்புடன் பார்த்தபடி நின்ற சஷ்டிக்கு தான் நினைத்தது நடந்து கொண்டிருக்கிறது என்ற பிரக்ஞை சிறிதும் இல்லை. ஊர் மக்களில் ஒருத்தியாக அவளும் ராயருக்காக பரிதவித்துக் கொண்டிருந்தாள் . அவனது நெகிழ்விற்கு பாய்ந்து சென்று அவனை அணைத்து ஆறுதல் அளிக்க தோன்ற , அவள் தன்னிலேயே பயந்து மெல்ல நகர்ந்து ஒரு தூணின் பின்புறம் தன்னை மறைத்துக் கொண்டாள் .

 

” இந்த தொழிலை எனக்காக எப்பொழுது ஆரம்பிக்க நினைத்தீர்கள் தாண்டவரே …? ” திருமலைராயனிடம் இப்போது முந்தைய ராஜ கம்பீரம் திரும்பியிருந்தது .

 

” ஆறு மாதங்களுக்கு முன்னால் .என் மகளை உங்களுக்கு திருமணம் செய்து கொடுக்க எண்ணி உங்கள் பாட்டியிடம் வந்து பேசினேனே …அன்றிலிருந்தே இந்த தொழிலையும் என் பக்கத்து சீராக  உங்களுக்கென ஏற்பாடு செய்துவிட்டேன் “

 

” ஓ …அதற்கான ஆதாரம் எதுவும் வைத்திருக்கிறீர்களா …? “

 

” அ …அதற்கென்ன ஆதாரம் . …? அது எதற்கு …? ” தாண்டவராயரிடம் தடுமாற்றம் .

 

” நிச்சயம் வேண்டும் தாண்டவரே. என் மக்களுக்கு நான் என் தூய்மையை முதலில் நிரூபிக்க வேண்டும் .இது போன்ற ஒரு சுற்றுச் சூழல் மாசு தொழிலை அவர்கள் வாழ்நிலையை பற்றிய கவலையின்றி உங்களோடு சேர்ந்து நானும் செய்யக் கூடுமென  அவர்கள் நினைக்க கூடாதே …”

 

” அதோ அந்த சீர் தட்டில் வைத்திருக்கும் ஒப்பந்த பத்திரம் தான் ஆதாரம். அதிலேயே எல்லா விபரங்களும் இருக்கிறது .ஏய் …தம்பி  நீ நிறைய படித்தவன் தானே …போய் அந்த அக்ரிமென்டை எடுத்து படித்து பாரு. இதனை பத்து நாட்களுக்கு முன்பு உங்கள் ராயர் என் வீட்டிற்கு வரும் போதே காட்டிவிட்டேன் .கல்யாணப் பந்தலில் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார் அப்போது ….”




கிடைத்த சிறு சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக்க தாண்டவராயர் துடிக்க , அந்த இளைஞன் அசையாமல் நின்றான் .” பரவாயில்லை தம்பி. போ…போய் அதனை எடுத்து படி .எல்லோருக்குமாக சத்தமாக படி …” திருமலைராயன் புன்சிரிப்புடன் இளைஞனை அனுப்ப , சஷ்டியினுள் மின்னலாக அந்த நினைவு .வேகமாக தன் அறைக்கு போனாள் .

 

” தொண்ணூறு சதவிகிதம் எங்கள் ராயருக்கும் , பத்து சதவிகிதம் உங்களுக்கும் இந்த தொழில் பங்கென்று இந்த ஒப்பந்தம் சொல்கிறது. இது எங்கள் ராயரின் கையெழுத்தில்லாத வெறும் தாள். இதனை பிசினஸ் அக்ரிமென்ட் என நீங்கள்தான் சொல்லிக் கொள்ள வேண்டும் .” அந்த இளைஞன் அக்ரிமென்டை பிரித்து அனைவர்க்கும் உயர்த்தி காட்டினான் .

 

” நம் ராயர் கையெழுத்து போட்டால்தான் இதற்கு உயிர் வரும். இல்லையென்றால் இது வெறும் காகிதம்தான் ” கத்தலாக அறிவித்தான். 

 

” நான் கேட்டது இந்த அக்ரிமென்ட் இல்லை தாண்டவரே. சுவிட்சரலாந்து நாட்டுடன் நீங்கள் போட்டுக் கொண்டீர்களே அந்த அக்ரிமென்ட் …” திருமலைராயன் கைகளை கட்டிக் கொண்டு நிதானமாக கேட்டான். தாண்டவராயருக்கு வியர்த்தது .

 

”   எதையாவது சொல்லாதீர்கள் .அ …அப்படி ஒன்று இல்லை .”

 

” ஓ …உங்களிடம் இல்லையா …? ஆனால் என்னிடம் இருக்கிறது …” திருமலைராயனின் விழிகள் தேட தொடங்கும் முன் , அந்த ஒப்பந்தத்தோடு அவனருகே வந்து நின்றாள் சஷ்டி .

 

மெச்சுதலான பார்வை ஒன்றுடன் அவளிடமிருந்த அக்ரிமென்டை வாங்கும் போது , லேசாக அவளை பார்த்து கண்களை சிமிட்டினான் திருமலைராயன். சிலீரென மின்னல் உடலில் ஊடுறுவ , வேகமாக நகர்ந்து தள்ளிப் போய் நின்று கொண்டாள் சஷ்டி .

 

ஊர் பெரிய மனிதனா இவன் …? இவ்வளவு நேரமாக ஊர் தலைவனாக பொறுப்போடு பேசியதென்ன …? செய்ததென்ன …? இப்போது ஒரு விடலைப் பையன் போல் பெண்ணை பார்த்து கண்ணடிப்பதென்ன …? இவனை எந்த விதத்தில் சேர்ப்பது …? அவனது கண்ணடிப்பு தன் உடலில் சேர்த்திருந்த நடுங்கல்களை சமாளிக்க தூணின் மேலான லேசான சாய்வு தேவைப்பட்டது சஷ்டிக்கு . 




What’s your Reaction?
+1
22
+1
15
+1
1
+1
1
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!