Serial Stories

ஓ…வசந்தராஜா…!-14

14

” அஸ்ஸு அவன் இங்கேயே வந்து விட்டான்டி” மண்டபத்தின் பால்கனியில் நின்று அப்போதும் விதார்த்துடன் போனில் பேசிக் கொண்டிருந்த சைந்தவிதான் வசந்த்தை முதலில் பார்த்தது.

 அக்கா சொன்னதை நம்ப முடியாமல் தானும் வந்து எட்டிப் பார்த்த அஸ்வினி அப்போது கூட வேறு ஏதும் நினைக்கவில்லை. “அக்கா விஷ் பண்ணத்தான் வந்திருப்பார். நீ பயப்படாதே” என்று அக்காவை தேற்றிவிட்டு யோசனையுடனே கீழே இறங்கி சென்றாள்.

 அவள் வாசலுக்கு சென்ற சமயம் வசந்த் கொஞ்சம் ஒதுங்கி நின்று போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தான். “இங்கே பார் பிளான் செய்து ஃபாலோ செய்து கொண்டிருக்கும் விஷயத்தை பாதியிலேயே நிறுத்தும் பழக்கம் என்னிடம் கிடையாது” என்று போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான்.

 வசந்தின் அந்த வார்த்தைகளில் அஸ்வதி தயங்கி நின்றாள்.யார் விஷயம் பேசுகிறான்? போனை கட் செய்து விட்டு திரும்பிய வசந்த் அஸ்வதியை பார்த்ததும் முகம் மலர்ந்தான். “ஹாய்” உற்சாகமாக கையாட்டினான்.

 வேகமாக அவன் அருகே சென்ற அஸ்வதி குரலை குறைத்து “உங்களை இங்கே வரவேண்டாம் என்று சொல்லியிருந்தேன்” என்றாள் முறைத்தபடி.

” அட எனக்கு இந்த கல்யாணத்திற்கு அழைப்பு வந்திருக்கிறதுமா. நான் எப்படி வராமல் இருக்க முடியும்?” மந்தகாசமாய் புன்னகைத்தான்.

” பொய். வேண்டுமென்றே நீங்கள் என்னை சீண்டுவதற்காகத்தான்…” அஸ்வதி பேசிக் கொண்டிருக்கும்போதே பின்னால் “வாங்க.. வாங்க… வெல்கம் “என்ற ஆர்ப்பாட்டமான வரவேற்போடு வந்த விதார்த்தின் சத்தத்தில் குழம்பி திரும்பினாள்.

 மேலுதட்டிலும் பற்கள் முளைத்துவிட்டது போல் உற்சாகமாக இருந்தான் விதார்த்.கிட்டத்தட்ட வசந்தத்தை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தான். “ஃபார்மலா ஒரு அழைப்பு விடுத்தேன். அதைக் கூட மதித்து நீங்கள் நேரிலேயே வருவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை சார்.ரொம்ப சந்தோசம்” வசந்தின் கைகளை பற்றி குலுக்கினான்.

” எனக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்களோட கல்யாணமாச்சே வராமல் இருப்பேனா?” என்ற வசந்த் அஸ்வதி பக்கம் திரும்பி கண்களை சிமிட்டினான். 

“ஓரிரு தடவை தொழில் முறையில்  சந்தித்திருக்கிறோம் .அதற்கே என்னை வேண்டப்பட்டவனாக ஏற்றுக் கொண்டதற்கு ரொம்ப நன்றி சார்” பவ்யமாய் குனிந்த விதார்த்தை பார்த்து தலையில் கை வைத்துக் கொண்டாள் அஸ்வதி. அவன் சொல்வது புரியாமல் இந்த அத்தான் வேறு….

 இவர்களது இந்த அறிமுகம் நமக்கு நல்லதா? கெட்டதா? என்று அஸ்வினிக்கு குழப்பம் இருந்து கொண்டே இருந்தது. மேடையில் விதார்த்தின் அருகிலேயே வசந்தை கண்டதும் சைந்தவியின் முகம் பயத்தில் வெளுத்தது.

” என்னடி இது? வேலியில் போற ஓணான் இப்படி வீடேறி வந்து உட்க்கார்ந்து கொண்டிருக்கிறது?”

“அத்தானுக்கு அவர் பழக்கமாம். திருமணத்திற்கு அழைத்திருக்கிறார், அதனால் வந்திருக்கிறார். நீ வேறு எதற்காக ஓணான் அது இதுவென்கிறாய்?” 

சைந்தவியின் பயம் அதிகமானது. “என்ன அவருக்கு பழக்கமா? அப்படியென்றால் என்னைப் பற்றி எல்லாவற்றையும் சொல்லி விடுவாரா?”




 குபுக்கென அஸ்வினியினுள்ளும் ஒரு பயக்குமிழ் எழுந்தது. ஆனால் மேடையில் விதார்த்துடன் பேசிக் கொண்டிருந்த வசந்த் எதற்கோ பளிச்சென சிரிக்க உடனே அக்குமிழ் உடைந்து போனது.

” இல்லை வசந்த் அப்படியெல்லாம் செய்ய மாட்டார்” 

சைந்தவி தங்கையை ஒரு மாதிரி பார்த்தாள்.” என்னடி வர வர அந்த வசந்துக்கு சப்போர்ட் அதிகமாகிக் கொண்டே போகிறது”

“அது…வந்து…இல்லை அக்கா இப்போது வரை அவர் நம்மை ஒன்றும் செய்யவில்லைதானே?”

” அடிப் போடி மணமேடையிலேயே வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறான்.எந்த நேரம் என்ன செய்யப் போகிறானோ என்ற பயத்திலேயே நான் தாலி கட்டிக் கொள்ளவா? ஐயோ கடவுளே ஏன் இந்த சோதனை?”

“புலம்பாதே அக்கா, அப்படியெல்லாம் எதுவும் நடக்காது”

மணமகள் அறையிலிருந்து மேடை ஏறும் வழியில் சரம்சரமாய் தொங்க விட்டிருந்த மலர் சரங்களுக்கு பின்னால் கொஞ்சம் மறைந்து நின்றபடி அக்காவும் தங்கையும் பேசிக் கொண்டிருந்தனர்.

” எது நடக்காது…இந்த திருமணமா?”திடுமென கேட்ட வசந்தின் சத்தத்தில் விதிர்த்து திரும்பினர். இடுப்பில் இரு கைகளையும் வைத்தபடி அக்கா தங்கையை கூர்ந்து பார்த்திருந்தான் அவன்.

மனதில் உறுத்தும் பாரத்துடன் அக்கா திருமணத்திற்கு அமர்வது பிடிக்காமல் அஸ்வதி அவனிடம் பரபரத்தாள்.

“அக்காவிற்கு நீங்கள் அத்தானிடம் எதையாவது உளறி விடுவீர்களோ என்ற பயம். தாலி கட்டிக் கொள்ளும் நேரத்தில் இவ்வளவு பயம் வேண்டாம்தானே? அப்படி எதுவும் நடக்காது என்று சொல்லுங்களேன்”

” ஏன் நடக்கக்கூடாது?” வசந்தின் எதிர்பாராத கேள்வியை நம்ப முடியாமல் பார்த்தாள் அஸ்வினி.பயத்துடன் தங்கையின் கையை இறுகப் பிடித்தாள் சைந்தவி.

“உன்னுடைய அந்த யு ட்யூப் வீடியோவிற்கு வியூஸ் எவ்வளவு?” சைந்தவியிடம் கேட்டான்.

 சைந்தவிக்கு விக்கியது. இருநூறும் முன்னூறும் போய்க்கொண்டிருந்த வியூஸ் அந்த ஒரு வீடியோவிற்கு மட்டும் லட்சத்தை தொட்டு நின்றது.இன்னமும் அடுத்தடுத்த வசந்தின் சமையல் குறிப்புகளை வீடியோவாக்கி பதிவேற்றினால் சைந்தவியின் சேனல் ஒரு நல்ல இடத்தை அடைவது நிச்சயம்.

“நா… நான் அந்த வீடியோவை டெலிட் செய்து விடுகிறேன்” சைந்தவி அவசரமாக சொல்ல, “அந்த ஒரு லட்சம் பார்வையாளர்களை என்ன செய்வது?” என்றான் வசந்த்.

“வசந்த் ப்ளீஸ் இதையெல்லாம் திருமணம் முடிந்ததும் பேசிக் கொள்ளலாமே” அஸ்வினி சொல்ல “ம்…திருமணம் முடிந்ததும்…”என உதட்டை பிதுக்கினான். 

“ஒவ்வொரு நாளும் அந்த வீடியோ டெலிட் செய்யப்படும் என்று எதிர்பார்த்துக் கொண்டே இருந்தேன்” குற்றச்சாட்டுடன் சைந்தவியை பார்த்தான்.

” நான் இப்போதே டெலிட் செய்து விடுகிறேன், அஸ்ஸு என் போனை எங்கே? கொடு” சைந்தவி பரபரக்க…

” அதற்கு முன் விதார்த்திடம் ஒரு வார்த்தை சொல்லி விடலாமே” என்றான் வசந்த்.

 சைந்தவி “ஐயோ” என பதற, “வசந்த் ப்ளீஸ்..” என்றாள் அஸ்வினி. “உம்”என்ற உறுமலோடு அஸ்வினிக்கு ஒற்றை விரல் ஆட்டினான்.

” மூல காரணம் நீதான். உனக்கு பேசும் தகுதி கிடையாது. வாயை மூடு” அடி குரலில் சீறினான்.

” பெண்ணை  கூட்டி வாங்க” மேடை மேலிருந்து அய்யரின் குரல் கேட்க, பெண்களிருவரும் பதட்டத்துடன் அவனைப் பார்க்க, வசந்த் ஒதுங்கி நின்றான்.

” இப்போது போங்க, ஆனால் நாளை காலையில் காலி கட்டுவதற்கு முன்னால் எனக்கு பதில் சொல்லித்தான் தீர வேண்டும்”

இருண்ட முகத்துடன் மேடை ஏறினாள் சைந்தவி. மனம் வெறுத்து அமர்ந்திருந்த அக்காவை பார்த்த அஸ்வினியின் மனம் துடிக்க, முதல் வரிசையில் மலர்ந்த புன்னகையோடு அமர்ந்திருந்த வசந்தை பார்த்து எரிச்சலுற்றாள்.சை என்ன மனிதன் இவன்! இரக்கமற்ற ராட்சசன்!

“உன் அக்காவை கூப்பிடு, பேசி முடித்து விடலாம்” நிச்சயம் முடிந்ததும் வசந்த் சொல்ல,”அக்கா ரொம்ப டயர்டாக இருக்கிறாள். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக் கொள்ளட்டுமே ப்ளீஸ்”இறைஞ்சினாள் அஸ்வதி.

” ஒ…ரெஸ்ட்!இந்த சூழ்நிலையிலும் ஓய்வெடுக்க மனம் வருகிறது பாரேன்!”அநியாய ஆச்சரியம் அவனிடம்.

“வசந்த் உங்கள் சொல்படி நான்தானே பிரதான குற்றவாளி.தண்டனையை எனக்கே கொடுங்கள்”

“இதெல்லாம் பாதிக்கப்பட்ட நான்தானேம்மா முடிவு செய்ய வேண்டும்? எனக்காக முடிவெடுக்கும் உரிமையை உனக்கெப்போது கொடுத்தேன்?”

” உங்களிடம் எனக்கு எந்த உரிமையும் வேண்டாம்.கொஞ்சம் எங்களை நிம்மதியாக இருக்க விடுங்கள்.அது போதும்”




“ம்…ரொம்ப கெஞ்சுகிறாய்.

குற்றவாளிக்கு இந்த பணிவு தேவைதான்.பாரம்மா நான் 

தங்குவதற்கு வெளியே கூட போகவில்லை.இங்கேயே மண்டபத்தில்தான் தங்கப் போகிறேன்.நாளை காலை பேசலாம்.குட்நைட்”

வாம்மா..போம்மா என்ற அவனது இந்த ‘ம்மா’ பேச்சு அஸ்வினிக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.’அஸ்வா’என்று செல்லமாக..வந்து வேறு மாதிரி அழைத்தானே, இப்போது ஏன் இப்படி பேசுகிறான்.அந்த அழைப்பையே நாடிய மனதை அதட்டி அடக்கினாள்.ஒரு நேரம் இழைகிறான்…மறு நேரமே காய்கிறான்.இவனை நம்பி எதை செய்ய…!

அஸ்வினி தன் குழப்பம் மறைத்து, சைந்தவியை சமாதானம் செய்து உறங்க வைத்து விட்டு தூக்கம் பிடிக்காமல் மண்டபத்திற்கு வெளியே நடந்து கொண்டிருந்தாள்.

“ஏய் கல்யாணப் பொண்ணு இவள் இல்லடா…இவள் தங்கச்சி…”

“சரிடா நமக்கு இவள்தான் மாட்டியிருக்கிறாள்.லேசாக கழுத்தில் கீறி விட்டு போய்விடுவோம்”

“ஆமாம் கொலை நடந்த இடத்தில் கல்யாணம் எப்படி நடக்கும்?”

இரவு நேர அமைதியால் கிசு கிசுப்பாய் பேசினாலும் அம் முரட்டுக் குரல்கள் தெளிவாக காதில் கேட்க , அஸ்வதி சுதாரித்து உள்ளே செல்லப் போகும் முன் இருவரால் மறிக்கப்பட்டாள்.கூர்மையான கத்தி இருளிலும் பளபளத்தபடி நொடியில் அவள் கழுத்தை நோக்கி பயணித்தது.




What’s your Reaction?
+1
35
+1
27
+1
1
+1
0
+1
2
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
P Bargavi
P Bargavi
8 days ago

Nice

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!