Serial Stories ஓ…வசந்தராஜா…!

ஓ…வசந்தராஜா…!-13

13

“அக்கா நான் நல்லவளா ? கெட்டவளா?” கேட்ட தங்கையை புதிராக பார்த்தாள் சைந்தவி.

“என்னடி கேட்கிறாய்?”

“உன்னை விட நான் கெட்டவளா? என்னை விட நீ நல்லவளா?”

“அடியேய் நான் ஏற்கெனவே நொந்து போய் இருக்கிறேன்.நீ வேறு என்னவோ உளறி கடுப்பேற்றுகிறாய்

 ஒரே அறை…மூஞ்சியை பேர்த்தெடுத்துடுவேன் ஜாக்கிரதை”.

“அதில்லைக்கா..அந்த வசந்த் விசயத்தில் நான்தான் உன்னை தூண்டி விட்டு விட்டேனோன்னு ஒரு குற்றவுணர்வு…”.

“எந்த வசந்த்?”

“என்னது…அடப்பாவி,உன் முதலாளி வசந்த்ராஜை மறந்து விட்டாயா?”

“ஓ…அவனா? அதெல்லாம் ஏதோ போன ஜென்மத்தில் நடந்தது போல் இருக்கிறது அஸ்ஸு,அது ஏதோ முட்டாள்தனம்,அதையெல்லாம் நினைத்து பார்க்க கூட நான் விரும்பவில்லை.அவன்தான் இப்போது தொல்லை செய்வதில்லை என்றுவிட்டாயே? பிறகும் ஏன் அவனைப் பற்றிய பேச்சு?” 

நிறைய குழப்பங்களுடன் இருக்கும் சைந்தவியை தானும் வேறு பயமுறுத்த வேண்டாம் என்று நினைத்து வசந்திடம் தொடர்ந்து பேசுவதை சந்திப்பதை அக்காவிடம் சொல்லாமல் விட்டிருந்தாள்தான்..ஆனாலும் அதெப்படி ஒருத்தி முழுதாக அந்த ஆறடி உயர மனிதனை மறந்து போவாள்? மறக்கக் கூடியவனா அவன்?

 அஸ்வினி இப்போது அக்கா வசந்த் சொன்னது போல் வெகுளிதானோ? என்று யோசிக்க தொடங்கினாள். அவள் வெகுளி என்றால் நான் விவரமானவளா? தந்திரமானவளா? அல்லது அவனே சொன்னது போல் கிரிமினலா? அஸ்வினியினுள் மீண்டும் அந்தக் கேள்வி எழுந்தது.

 நான் நல்லவளா? கெட்டவளா?

 இதனை சைந்தவியிடம் மீண்டும் கேட்டு மூஞ்சியை பெயர்த்து எடுத்துக் கொள்ளும் எண்ணம் இல்லாததால் வேறு பேச்சை மாற்றினாள். மறந்தவனை எதற்கு நினைவு படுத்த வேண்டும் என்ற எண்ணமும் அவளிடம் எழுந்தது.

 சைந்தவியோ தன் போக்கில் விதார்த் பற்றி எதையோ புலம்பிக் கொண்டிருக்க, “அக்கா போதும் நிறுத்து. வா நாம் இருவரும் வெளியே போய் வரலாம்” என்று அவளை இழுத்துக் கொண்டு வீட்டை விட்டு கிளம்பினாள்.

 இருவருமாக காபி டே போய் அமர்ந்ததும் மெனு கார்டை அக்காவின் பக்கம் நகர்த்தினாள் “என்ன வேண்டும் என்று சொல் அக்கா”

“ப்ச்  எதையோ ஒன்றை ஆர்டர் பண்ணு. எனக்கு எதுவும் பிடிக்கவில்லை” சைந்தவி விரக்தியாக பேச, “இப்போது பிடிக்கிறதா பாரேன்” குறுஞ் சிரிப்புடன் அஸ்வினி கைகாட்டிய பக்கம் பார்த்த சைந்தவி முதலில் முகம் மலர்ந்து பின் மலர்வை மறைத்துக் கொண்டு தங்கையை முறைத்தாள்.

” எல்லாம் உன்னுடைய திட்டமா?”

” ஏதோ என்னால் முடிந்தது? வாங்க அத்தான்”என்று விதார்த்தை வரவேற்றாள். 

“உன்னோடுதானே பேச வரச் சொன்னாய் அஸ்வினி?”சைந்தவி மேல் பாயத் துடித்த பார்வையை கடினப்பட்டு விதார்த் நிறுத்துவது வெளிப்படையாக தெரிந்தது.

” நீங்களும் நானும் பேசி என்ன ஆகப்போகிறது அத்தான்? உங்கள் மனைவியிடமே பேசுங்கள்”

” நான் ஒன்றும் இவர் மனைவி இல்லை. அதற்கு யார் யாரோ போட்டி போடுகிறார்கள்” சைந்தவி முகத்தை திருப்ப,

“எனக்கும் இவளுக்கு கணவனாகும் எண்ணமில்லை.நிறைய பேர் எனக்கு காத்திருக்கிறார்கள்” விதார்த்தும் மறுபக்கம் முகத்தை திருப்பினான்.

 தலையில் கை வைத்துக் கொண்டாள் அஸ்வினி. “அடுத்த வாரம் உங்கள் திருமணத்தின் போதும் இப்படி ஆளுக்கு ஒரு பக்கம் மூஞ்சியை திருப்பி வைத்துக் கொண்டுதான் தாலி கட்டிக் கொள்வீர்களா?”

” அவர் சொல்கிறார், நினைத்தால் மாமா மகளையே கல்யாணம் செய்து கொள்வாராம்.நீயே கேள் அஸ்வினி” 

” ஏய் நீ தானேடி திரும்பத் திரும்ப மாமா பொண்ணை நினைத்தாயா? விரும்பினாயா? கல்யாணம் பண்ணி கொள்வாயா? என்று கேட்டுக் கொண்டே இருந்தாய்.அதுதான் நினைத்தால் அதைக் கூட செய்வேன் என்றேன்”

” என்ன அத்தான் இது?” அஸ்வினி கேட்க ,”எனக்கு வேறு வேறு வழி தெரியவில்லை அஸ்வினி. மாமா மகள் விஷயம் தெரிந்ததிலிருந்து உன் அக்காவின் தொல்லை தாங்க முடியவில்லை. அதனால் தான் அப்படி பேசினேன்”

” ஏன் இப்படி கேட்டாய் அக்கா?”




” எனக்கு சந்தேகம் வருகிறதில்லையா? கல்யாணத்திற்கு முன்னாலேயே அதை தெளிவுபடுத்த வேண்டியது அவர் கடமை தானே?”

” அதனை கேட்கும் முறையில் கேட்க வேண்டும்.சந்தேக கண்ணோட்டத்துடனே கேட்கக் கூடாது”

“அவ்வளவு தானே! அக்கா எப்படி கேட்க வேண்டும் என்று அத்தானே சொல்லிவிட்டார். இப்போது முறையாக கேள்”

” சரி இப்போது கேட்கிறேன். உங்கள் மாமா மகளை திருமணம் செய்யும் நோக்கத்துடன் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?”

“இல்லை சைது  நான்…” விதார்த் சைந்தவி பக்கம் நாற்காலியை திருப்பி போட்டுக் கொண்டு பேச ஆரம்பிக்க, சைந்தவியும் அவன் அருகே நாற்காலியை நகர்த்தி போட்டுக் கொண்டாள்.

 அஸ்வினி புன்னகைத்தபடி அவர்கள் கவனத்தை கலைக்காமல் மெல்ல டேபிளை விட்டு எழுந்து தள்ளிப் போய் வேறு டேபிளில் அமர்ந்து கொண்டாள். ஐந்து நிமிடங்களில் இருவரும் ஒருவர் கையை ஒருவர் பற்றியபடி முகம் பார்த்து பேசிக் கொள்வதை திருப்தியுடன் பார்த்தபடி இருந்தாள்.

” காபி குடித்தாயிற்றா?” என்ற கேள்வியுடன் திடுமென அவள் அருகே வசந்த் வந்து அமர திடுக்கிட்டாள்.

என்ன இது எங்கே போனாலும் இவனே வந்து நிற்கிறான்! நிஜமா? பிரமையா? கண்களை தேய்த்து விட்டுக் கொண்டாள்.

” ஹலோ நான் இங்கே முழுதாக உன் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். காபி குடிக்கலாமா?” அவன் மெனு கார்டை பிரிக்க, “இங்கே ஏன் வந்தீர்கள்?” அடங்கிய குரலில் இரைந்தாள்.

” காபி சாப்பிட வந்தேன்மா”

” உங்கள் ஹோட்டலில் இல்லாத காபியா? உண்மையைச் சொல்லுங்கள் என்னைத் தானே பாலோ செய்கிறீர்கள்?” கேட்டவுடன் ஒரு பரபரப்பு வந்திருந்தது அஸ்வினிக்கு. இவன் அக்காவையும் அத்தானையும் பார்த்துவிடக் கூடாதே!

” உன்னை ஏன் பாலோ செய்யப் போகிறேன்? இதுபோல் ஒரு காபி ஷாப் ஆரம்பிக்கலாம் என்ற எண்ணம் இருக்கிறது. அதனால் தான் இங்கே…”

 அவன் பேசிக் கொண்டிருக்கும்போதே எழுந்து அவனிடமிருந்து சைந்தவியையும் விதார்த்தையும் மறைத்தாற் போல் இடம் மாறி அமர்ந்தாள்.

” ஆனால் இப்போது உன்னையும் பாலோ செய்யலாம் போல, தவறில்லை…” என்றவனின் முகம் மிக அருகே தெரிய திடுக்கிட்டாள். இவன் எதற்கு இப்படி உரசுவது போல் வருகிறான்? அவனை முறைக்க அவனோ ஒற்றை விரலாட்டி நான் இல்லை நீதான் என்று சைகையிலேயே அவளை சுட்டிக்காட்டினான்.

 அப்போதுதான் தன்னை கவனித்தாள். அவன் அருகே மிக நெருங்கி அமர்ந்திருந்தாள். அவன் காலோடு அவள் கால் உரசியது. இந்த நெருக்கத்தினால் சைந்தவியும் விதார்த்தும் அவன் பார்வையில் இருந்து மறைந்து அஸ்வினி மட்டுமே அவன் கண்களுக்கு தெரிந்தாள்.

” என்ன என்னை பாலோ செய்வீர்களா?” நகர முடியாமல் உடம்பை மட்டும் பின்னால் சாய்த்து அவள் கேட்க அவன் ஆட்காட்டி விரல் நீட்டி அவள் காது கம்மலில் ஒன்றை சுண்டினான்.

” இந்த கம்மல் உன் முகத்திற்கு நன்றாக பொருந்துகிறது. மிக அழகு…” ரசனையாய் தன் முகத்தை மொய்த்த அவன் பார்வையில் இதயம் தடம் புரள்வதாய் உணர்ந்தாள்.

அஸ்வினி இவன் உன்னையும் அக்காவையும் மிரட்டிக் கொண்டிருக்கும் வில்லன் .இவனிடம் நீ சிக்கிக் கொண்டிருக்கிறாய், மறந்துவிடாதே என்று தன் மனதை  தட்டி அவள் பேசிக் கொண்டிருந்த போது, வசந்த் ரகசியம் போல் அவளுக்கு மிக அருகே குனிந்து “உன் அக்காவுடன் வந்தாயா அஸ்வா?” என்றான்.

அடப்பாவி பார்த்து விட்டானா அஸ்வினி பரக்க விழிக்க,”அதோ அங்கே வலது மூலையில் இரண்டாவது டேபிளில் உட்கார்ந்திருப்பது உன் அக்கா போல் தெரியவில்லை?”

 போச்சு பார்த்துட்டான்… மனம் நொந்தவள், “ப்ளீஸ் இங்கிருந்து போங்க” என்றாள்.

” உன் அக்காவுடன் பேசிக் கொண்டிருப்பவர்  அவளுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையா?  வாயேன் போய் அறிமுகமாகி கொள்ளலாம்” எழுந்தவனின் கையை பிடித்து இழுத்து அமர வைத்தாள்.

” ஒன்றும் வேண்டாம் .அவர்களே இப்போதுதான் சண்டை போய் சமாதானமாகிக் கொண்டிருக்கிறார்கள்”சொல்லி விட்டு நாக்கை கடித்தாள்.

” ஆஹா! இரண்டு பேருக்குள் சண்டையா? எதற்கு? சொல்லு… சொல்லு “பரபரத்தவனை கோபமாக முறைத்தாள்.

” அடுத்தவர்கள் சண்டை போட்டால் அதில் உங்களுக்கு இவ்வளவு ஆனந்தமா?”

” ஒரு கியூரியாசிட்டி தான்மா. ஒன்றுமில்லாததற்கெல்லாம் உன் அக்கா மூச்சை பிடித்துக் கொண்டு சண்டை போடுவாளென்று தெரியும். இந்த சண்டை எதற்காக இருக்குமென்று தெரிந்து கொள்ளலாம் என்றுதான்…” பேசிக் கொண்டே போனவன், திடீரென குனிந்து அஸ்வினியின் தலையோடு தலையுரசி “அஸ்வா அவர்கள் கிளம்புகிறார்கள் பாரேன்” என்றான்.

 திரும்பிப் பார்த்தவள் “வெளியே கார்டனில் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருக்கலாம் என்று செல்வார்களாயிருக்கும் போகட்டும்” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே, வசந்த் எழுந்து அவர்கள் பின்னால் போகவும் திடுக்கிட்டு தானும் பின் தொடர்ந்தாள்.

” எங்கே போகிறீர்கள்? நில்லுங்கள்” தானும் பின்தொடர்ந்தாள். 

விதார்த்தும்,சைந்தவியும் கைகள் கோர்த்துக் கொண்டு தோளுரச ஏதோ பேசி சிரித்தபடி

சுற்றிலுமிருந்த கார்டனின் ஓரமான இடத்திற்கு செல்லவும், முன்னால் நடந்த வசந்த் ஏதோ யோசனையுடன் சட்டென நின்றான். அவர்களுக்கு முதுகு காட்டி அஸ்வினியை பார்த்து திரும்பினான்.




” என்ன..?₹ வேகமாக முன் செல்ல முயன்றவளின் முகத்தின் மேல் தன் கை வைத்து மென்மையாய் பின்னால் தள்ளினான். “வேண்டாம் அஸ்வா அங்கே பார்க்காதே”

” ஏனோ ஏற்கெனவே சண்டை போட்டுக் கொண்டிருப்பவர்கள், இப்போது என்ன செய்வார்களோ..?” என்றபடி தனக்கு முன்னால் உயரமும் அகலமுமாக அவர்களை மறைத்து நின்ற வசந்தை முயன்று லேசாக ஒதுக்கி விட்டு எட்டி பார்த்தாள்.

உடன் வெட்கத்தில் முகம் சிவக்க திரும்பிக் கொண்டாள்.சை இந்த அக்காவிற்கு கொஞ்சம் கூட விவஸ்தையே கிடையாது. வெளியிடத்தில் இப்படியா நடந்து கொள்வார்கள்! நான் ஒரு தத்தி, இவனையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு இந்த கண்றாவியெல்லாம் பார்க்கத்தான் வேண்டுமா?

 செய்வதறியாமல் கூச்சத்தில் குறுகி நின்றவளின் தலையை மெல்ல பின்னிருந்து வருடினான் வசந்த். “முடிக்கு என்ன ஹேர் ஆயில் யூஸ் பண்ணுகிறாய் அஸ்வா? நல்ல வாசனையாக இருக்கிறது” அவள் உச்சந்தலையை முகர்ந்தான்.பின்…என்ன அது உச்சந்தலையில் சூடாக…முத்தமிடுகிறானா என்ன?

 மழைக்கால இடிகளை உள்வாங்கியது போல் அவள் உடல் நடுங்க, இரு தோள் பற்றி ஆசுவாசப்படுத்தினான். “ரிலாக்ஸ் அஸ்வா, வா நாம் போகலாம்” அவன் கையணையில் பொம்மை போல் நடந்து பார்க்கிங்கிற்கு வரவும் சாலையில் பேங் என்று ஆரனை அலறவிட்டபடி சென்ற லாரியால் தன்னினைவு மீண்ட அஸ்வதி வேகமாக அவன் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயன்றாள்.

 தோளை வருடியபடி அவள் கைப்பற்றி மீண்டும் “அஸ்வா” என்றவனின் குரலில் இருந்த ஏதோ ஒன்று அஸ்வினியை அசைக்க, அவன் முகம் பார்க்கும் துணிவின்றி வேகமாக தனது ஸ்கூட்டியை எடுத்தாள்.

“ஹேய் பத்திரமா வீட்டிற்கு போய் விடுவாயா? “அவன் கேள்வியை காதில் வாங்காமல் வண்டியை சீற விட்டாள். ஆனால் உடல் முழுவதும் இருந்த நடுக்கம் வசந்த் கேட்ட கேள்வியை நியாயப்படுத்தி விடுமோ என்று பயந்து வேகத்தை குறைத்தாள்.

அவர்கள் அப்பார்ட்மென்டினுள் நுழையும் முன் ஸ்கூட்டியை மெதுவாக்கி திரும்பி பார்க்க, வாசலில் கார் ஒன்று ஊர்ந்து  நின்றது. உள்ளிருந்து எட்டிப் பார்த்த வசந்த் ஓகே என்று கட்டைவிரலை காட்டி விட்டு காரை திருப்பிக் கொண்டு போனான்.

 நான் பத்திரமாக வந்து விட்டேனா என்று பார்க்கத்தான் பின்னால் வந்தானா?மயில் ஒன்று மழைக்காக தோகையை விரித்தாடியது அஸ்வினியின் மனதிற்குள்.அக்காவின் திருமணம் முடியட்டும், பிறகு இதையெல்லாம் யோசிக்கலாம் என்று அவளுக்கே சரியாக புரியாத எதையோ தள்ளிப் போட்டாள்.

” அஸ்ஸு அவர் அப்படியெல்லாம் இல்லைடி. நான்தான் அவரை தப்பாக நினைத்து விட்டேன்” விதார்த்துடன் வீடு திரும்பிய சைந்தவி அஸ்வினியிடம் சொல்ல அக்காவை முறைத்தாள்.

” நான் ஒருத்தி உன் கூட அங்கே வந்தேன் நினைவில் வைத்திருந்தாயா?”

” நீ என்னடி சின்ன பிள்ளையா? வீட்டிற்கு வர தெரியாதா உனக்கு?” என்றவளை “அடிப்பாவி சுயநலவாதி…” என்றாள்.

 சைந்தவியின் திருமண ஏற்பாடுகள் உற்சாகமாக நடக்கத் துவங்க திருமணத்திற்கு முதல் நாள் சைந்தவி திடீரென கேட்டாள்.”அஸ்ஸு அந்த வசந்த்ராஜால் எதுவும் தொல்லை வராதில்லையா?”

” நிச்சயம் அக்கா, அவர் நமக்கு நல்லதை மட்டும்தான் செய்வார்.உன் திருமணம் நடக்கும் பக்கமே திரும்பிப் பார்க்க மாட்டார்” அக்காவிற்கு சொன்ன உறுதியில் தங்கையிடம் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

 அவள் அப்போது வசந்தை அவ்வளவு உறுதியாக நம்பினாள். ஆனால் திருமணத்திற்கு முதல் நாள் மாலையே வசந்த் ராஜ் கல்யாண மண்டபத்திற்கு வந்து நின்றான்.




What’s your Reaction?
+1
42
+1
21
+1
3
+1
0
+1
2
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
P Bargavi
P Bargavi
8 days ago

Nice

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!