Athikalai Poongatru Serial Stories

அதிகாலை பூங்காற்று-7

7

 

 

“உங்க கையை இப்படி கொடுங்கள்..” ஐயரின் குரலுக்கு உயர தயங்கிய அவளது கையை எடுத்து அய்யனாரின் கை மேல் வைத்தார் அன்னாசிலிங்கம்..
ஐயர் அவர்கள் கை மேல் நீர் வார்த்து மந்திரங்கள் சொல்ல அன்னாசிலிங்கமும், முருகலட்சுமியும் தங்கள் செல்ல மகளை அய்யனாருக்கு சாஸ்திரப்படி தாரை வார்த்துக் கொடுத்தனர்.

தொடர்ந்து மற்ற மண சடங்குகள் தொடர, அவளது கழுத்தில் தாலி செயினை அணிவிக்கும் போது, அவள் பக்கம் கொஞ்சம் அதிகமாகவே சாய்ந்து..
“மூஞ்சியை நேரா திருப்பி வை.. போட்டோ எடுக்கிறாங்கல்ல..” என அதட்டினான் அவன்..

எந்த புது மாப்பிள்ளையாவது இப்போதுதான் தாலி கட்டும் தன் புது மனைவியை இப்படி அதட்டுவானா..? எனக்கென இந்த அய்யனார் சாமிதான் வந்து வாய்க்க வேண்டுமா..? இவன் எப்போதுமே இப்படித்தான் அதட்டலாய், மிரட்டலாய் பேசுவானா..? சாதாரணமாக பேச மாட்டானா..? ஆயிரம் கேள்விகள் கவிதாவின் மனதில்..

இனி அவ “ர்” என்று சொல்ல வேண்டுமோ..? கழுத்தில் தாலி கட்டி விட்டானே.. அப்படியென்றால் அவளது கணவன்தானே.. கணவனை “ன்” போடலாமா..?

பெரிய பெரிய சந்தேகங்களாக அவளுக்கு வந்தது.. மாலை மாற்றும் போது மிக லேசாக அவனை நிமிர்ந்து பார்க்க சிவந்து உருண்டு.. அப்போதும் அவளை முறைத்தபடி இருந்த அவனது விழிகள் அவளை ஆழ்கிணற்றுக்குள் உருட்டி விட்டது… அவளுக்கென்னவோ இந்த ஆழத்திலிருந்து மீண்டு வர முடியுமென தோன்றவில்லை..

அப்போது இனி அவளது வாழ்க்கை முழுவதும் குத்தலும், குதறலுமாக இருக்கும் இந்த அய்யாவுடனும், அந்த ஆத்தாவுடனும்தானா..?

அய்யா என அவள் நினைத்தது அவள் கணவன் அய்யனாரை.. ஆத்தா என பார்த்தது அவனது அக்கா கண்ணாத்தாவை.. அவர்கள் இருவரையுமே அவர்கள் ஊர் மக்கள் பெயரை கொண்டோ, மரியாதையின் பொருட்டோ அய்யா, ஆத்தா என்றே அழைத்தனர்.
கவிதா லேசாக தலை திருப்பி பார்க்க, அங்கே கண்ணாத்தா நின்றிருந்தாள்.. அரக்கு நிற பட்டு புடவையில் தலை நிறைய மல்லியும், கனகாம்பரமும் இருக்க, பூசி குளித்த மஞ்சளில் முகம் பொலிவாய் மின்ன நீள் நாமம் போல் நெற்றியில் இட்டிருந்த சாந்து பொட்டோடு அந்த ஆத்தாளை போன்றே பொலிவாக நின்றிருந்தாள்.

இவர்கள் பெற்றோர்கள் இவர்கள் இருவருக்கும் நன்றாகத்தான் பெயர் வைத்திருக்கிறார்கள்.. ஆத்தா.. அய்யா.. மெலிதாய் தலையிலடித்துக் கொள்ள தோன்றியது கவிதாவிற்கு..

“அக்காவிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ளலாம்..” அய்யனார் கண்ணாத்தாவின் பாதம் பணிய வேறு வழியின்றி கவிதாவும் அவனை பின்பற்றினாள்.. வணங்கி எழுந்தவளின் கண்கள் வைரமாய் மின்னிய கண்ணாத்தாளின் கண்களில் திடுக்கிட்டன.. வினை முடித்த வெற்றி பெருமிதம் தெரிந்தது அதில்..

கவிதா ஓரக் கண்ணில் பார்க்க அருகிருந்த அய்யனாரிடமும் அதே வெற்றி வாகை பாவம்.. கலக்கமாய் அக்கா-தம்பியை பார்த்தவள் மனம் பதறியது.. இந்த அக்கா அன்று மதகின் மறுபுறம் நின்று பேசியபோது இந்த வீட்டுப் பக்கம் வர மாட்டேன் என்றாரே..

அவ்வளவு உறுதியாக சொன்னாரே..? இப்போது எப்படி வந்தார்..? அந்த அளவு இங்கென்ன வேலை அவருக்கு..? ஒரு வேளை அவரது அந்த வேலை நான்தானோ.. இந்த திருமணம் தானோ..?

மீள முடியாத சுழலொன்று அவளை இழுத்து செல்வதாக உணர்ந்தவளின் கண்களின் ஒளி குன்றியது.. தலை சுழன்றது.. கண்கள் சொருக சரிய ஆரம்பித்தவள் இரு வலிய கரங்களால் தாங்கிக் கொள்ளப் பட்டாள்.. பின் பத்திரமாக சுமந்து செல்லபட்டாள்..

கவிதாவிற்கு மீண்டும் நினைவு வந்த போது உள்ளறை படுக்கையில் படுக்க வைக்கப்பட்டிருந்தாள்.. அவசரத்திற்கு மண்டபம் கிடைக்கவில்லையென அவர்கள்.. வீட்டிலேயே திருமணத்தை முடித்து விட்டார் அன்னாசிலிங்கம்.. அத்தனை அவசரம் ஏன் என்ற விடை தெரியா கேள்வி அவளுக்கு..




“அவளுக்கு நிறைய வேலைகள் கொடுத்தீர்களா..?” அதட்டலாய் கேட்டபடி வாசலில் வந்து நின்றான் அய்யனார்..
எப்போதும் அதட்டல்.. எல்லோரிடமும் அதட்டல்.. எண்ணியபடி படுத்திருந்தவளின் உடலிலும் மின்னல் கீற்றாய் படர்ந்தது அவன் குரல்..

“அவளுக்கென்ன வேலை..? அதிகாலை முகூர்த்தமில்லையா.. அதுதான் கொஞ்சம் சீக்கிரம் விழித்தது.. குளித்து தயாரானது எல்லாம் அவளை அலுப்பு படுத்தி விட்டது போல..” முருகலெட்சுமி பவ்யமாய் பதில் சொன்னாள்..
“ம்..” என்ற உறுமலோடு அறையினுள் வந்தவன் உரிமையாக அவள் படுத்திருந்த கட்டிலில் அருகே அமர்ந்தான்..

“குளிர் நீரில் குளித்து காய்ச்சல் வந்துடுச்சோ..?” கை நீட்டி அவளது நெற்றியில் தன் புறங்கையை வைத்து உடல் சூட்டை ஆராய்ந்தான்..

அவனது ஸ்பரிசத்தில் கவிதாவின் உடல் மெல்ல நடுங்க ஆரம்பித்தது.. அருகில் அமர்ந்து.. நின்றிருந்த பிறர் கண்களுக்கு தெரியாத அந்த நடுக்கம் அவளது நெற்றியை தொட்டுக் கொண்டிருந்த அய்யனாருக்கு நன்கு உணர முடிந்தது..

நெற்றியில் தயங்கிய அவன் கை, மெல்ல விலகி பின் சிறு வீம்புடன் மீண்டும் கன்னத்தில் பதிந்தது..

“லேசான சூடு தெரிகிறது..” அவனது கண்டுபிடிப்பு குரலில் கவிதாவின் உடல் மேலும் நடுங்க, கன்னத்திலிருந்து கையால் லேசாக தட்டினான்.. அது பயப்படாதே என்றோ, ஒன்றுமில்லை என்றோ, நான் இருக்கிறேன் என்றோ சொல்வதாக அமைந்திருந்தது.
ஏனோ இந்த தட்டல் கவிதாவினுள் இளஞ்சூடாய் இறங்கி பரவி, இதமாக நிலைத்து நின்றது.. அவள் இப்போது கண்திறந்து அறையை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தவனின் முதுகை பார்த்தாள்.. வாசலுக்கு போனவன் சட்டென திரும்பி மீண்டும் இவளை பார்க்க, கவிதாவின் விழிகள் ஸ்தம்பித்தது நின்று விட்டன.. அவளது விழிகளை ஊடுறுவி பார்த்து விட்டு மெல்லிய தலையசைவு ஒன்றுடன் அவன் வெளியே போய்விட்டான்.. கவிதா வேகமாக மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள்..

“ம்.. இறங்கு..” இப்போதும் அதே அரட்டல் தொனிதான்.. முதன் முதலாக புகுந்த வீட்டிற்குள் நுழைய போகிறாள்.. கணவன் இப்படியா கண்ணை உருட்டி வரவேற்பான்.. மனதினுள் நொந்படி காரிலிருந்து கிழே இறங்கி வீட்டை பார்த்தாள்..

இதோ இந்த வராண்டாவில்.. அதோ அந்த வலது ஓரத்தில் கிடந்த வயர் நாற்காலியில்தான் அன்று அவளும்.. உமாவும் உட்கார்ந்து காத்துக் கொண்டிருந்தனர்.. தனது தோழி உமாவிற்காக நியாயம் கேட்க அவள் அன்று இங்கே வந்திருந்தாள்..

இவனும்.. இவனது அக்காவும் சேர்ந்து உமாவின் அப்பாவின் விளைச்சல் நிலங்களை வாங்கி வைத்துக் கொண்டு தர மறுத்தனர்.. கடனுக்கு அடமானமாக வாங்கிய நிலம்.. கடனை அடைத்த பின்னும் பிணை நீக்கி தர முடியாதென பிடிவாதமாக இருந்தனர் அய்யாவும், ஆத்தாவும்..

உமாவின் குடும்பம் தற்கொலை பேச்சு வரை போய்விட, அவள் அதனை தன் தோழியிடம் சொல்ல, நாமே போய் கேட்டு பார்க்கலாமென இரு இளம்பெண்களுமாக இங்கே கிளம்பி வந்தனர்..

“நீ ஏன் இங்கே வந்தாய்..?” அப்போதும் இவனிடம் இதே அதட்டல்தான்..
“அன்னாசிலிங்கத்தின் பொண்ணுதானே நீ..?” வெங்கல உருளியாக கனைத்து உருண்டு வந்தது கண்ணாத்தாளின் குரல்..

இருவருமாக நியாயம் கேட்டு வந்தவளை விட்டு விட்டு ஒத்தாசைக்கு உடன் வந்தவளை விசாரித்து நின்றிருந்தனர்..

“நா.. நான் இவளுக்காக வந்தேன்.. இவர்கள் நிலத்தை கொடுத்து விடுங்கள்.. பாவம் இவள் அப்பாவும், அம்மாவும்.. தற்கொலைக்கே போய்விட்டனர்..” தோழியின் கையை பிடித்தபடி கவிதா கேட்க உமா கையெடுத்து கும்பிட்டாள்..

“மாடசாமி மகள்தானே நீ..?” அவனது கேள்வி இப்போதுதான் உமாவுக்கு திரும்பியது..
“ஆமாங்கய்யா.. அந்த நிலத்தை வச்சித்தாங்க எங்க வயித்து பொழப்பே ஓடுகிறது.. தயவுசெய்து அதை கொடுத்து விடுங்கய்யா..”

“ம்..” என்று மீசை முறுக்கிய அய்யனாரின் பார்வை இப்போது மீண்டும் கவிதாவிடம் திரும்பியிருந்தது..




“அந்த நிலம் எனக்கு தேவையாயிருக்கே..”

“அப்படி சொல்லாதீங்க.. ம்.. அய்யா.. உங்களுக்கு ஊர் முழுவதும் நிலங்கள் இவர்களுக்கு அப்படி இல்லை.. அந்த ஒரு ஏக்கர் நிலத்தை வைத்துத்தான் இவர்கள் வாழ்க்கை ஓடுகிறது.. மறுக்காமல் கொடுத்து விடுங்கள்..” தயவாய் கேட்டது கவிதா..
அராஜகம் செய்பவன்தான்.. அவனுக்கு இப்படி பணியக் கூடாதுதான்.. ஆனாலும் இப்போது காரியம்தான் முக்கியம்.. காரியம் ஆக வேண்டுமானால் கழுதையானாலும் காலை பிடி என சொல்லியிருக்கிறார்களே.. இப்படி எண்ணமிட்டு நின்றவளை அவன் குரல் தடுத்தது..

“கழுதையாக இருந்தாலும் பரவாயில்லைன்னு நினைச்சுட்ட போல..”
கவிதாவிற்கு திக்கென்றது.. நான் மனதில் நினைத்த பழமொழியை இவன் எப்படி சொல்கிறான்..? திரு திருவென்ற அவள் விழித்தலை அக்காவும் தம்பியுமாக வேடிக்கை பார்க்க, அவளுக்கு கொஞ்சம் கூச்சமானது..

“உமா என் தோழி.. நான் அவளுக்காக உங்களிடம் பேசிப் பார்க்கலாமென வந்தேன்..”
காக்கை வண்ணத்தில் அடர்ந்திருந்த, நுனியில் இளஞ்சிவப்பு நகத்தோடு ஓர் வித வசீகரம் காட்டி தரையில் அழுந்த பதிந்திருந்த அவனது பாதங்களில் பார்வையை பதித்தபடி சொன்னாள் கவிதா..

அவள் பாத பார்வையை உணர்ந்தானோ என்னவோ.. மடித்து கட்டியிருந்த வேட்டியை இறக்கிவிட்டான்.. அது அவனது கரும் பாதங்களின் மேல் வெண் திரையாய் விழுந்தது..
“நாளை வாழை தோப்பில் வந்து என்னை உன் அப்பாவை பார்க்க சொல்லு..” உமாவிற்கான தீர்ப்பை அவன் சொல்ல விட்டு அதிகாரமாக பாதம் அழுத்தி வைத்து உள்ளே போய்விட்டான்.. கண்ணாத்தாள் அவர்களருகே வந்து வாஞ்சையாய் கை நீட்டி கவிதாவின் கன்னம் வருடினாள்..

“உன் அப்பாவை விசாரித்ததாக சொல்லு..”

கவிதாவிற்கு திக்கென்றது.. அப்பாவிடம் சொல்லவா..? இங்கே இப்படி வந்தது மட்டும் அவள் அப்பாவிற்கு தெரிந்தால் அவ்வளவுதான், தென்னந்தோப்பிலிருந்து வீட்டிற்கு கொண்டு வந்து போடப்படும் இளநீரை லாவகமாக தந்தை அரிவாளால் சீவுவது ஏனோ அப்போது கவிதாவிற்கு நினைவில் ஆடியது.. நடுங்கிய கால்களை மறைத்தபடி உமாவின் கையை பற்றி இழுத்துக் கொண்டு வேகமாக வெளியேறினாள்..

வாசல்படிகளை தாண்டியதும் கவிதா திரும்பி பார்க்க வீட்டினுள் நின்றபடி அக்காவும், தம்பியும் இவளை பார்த்து ஏதோ பேசியபடி இருந்தனர்.. அன்றே அவளை திருமணம் முடிக்கும் திட்டத்தை அவர்கள் போட்டு விட்டதாக இதோ இப்போது அவளுக்கு தோன்றியது..

ஆரத்தி எடுத்து முடித்ததும் உயரமான அந்த வாசல் படிகளில் ஏறுகையில் கால் தடுமாறியது அவளுக்கு..

“ம் மெல்ல, எப்போதும் எதிலும் என்ன தடுமாற்றம்..? தினமும் சாப்பிடுவாயா மாட்டயா..?” ஆதரவாக அவளது தோளை அணைத்து தாங்கினாலும், இந்த அதிகார பேச்சு கவிதாவின் மனதினை மிக பாதித்து தோளை வளைத்திருந்த அவனது கையை விலக்கி தள்ள சொன்னது..

வீடு முழுவதும் நிறைந்து இருந்த விருந்தினர்களை பார்த்ததும் மனம் பெரும் சோர்வுற்றது.. விடுபட்டு தனிமைக்கு போக துடித்தது..

“எனக்கு டயர்டாக இருக்கிறது.. ரெஸ்ட் வேண்டும்..” முணுமுணுத்தாள்..
“கொஞ்ச நேரம் இரேம்மா.. விருந்தாட்கள் இருக்கிறார்களே..” கண்ணாத்தாள் தயக்கமாக இவளிடம் சொல்ல..

“பரவாயில்லை அக்கா.. அவள் ஓய்வெடுக்கட்டும்.. மெத்துல ரூமுக்கு கூட்டிட்டு போ..” அய்யனார் சொல்லவும் ஆளை விடுடா சாமி என மாடிக்கு ஓடினாள்..

“முகம் கழுவி, சேலை மாத்திட்டு இங்கன படுத்திரு கண்ணு..” என கண்ணாத்தாள் ஒரு அறையினுள் அவளை விட்டு போனாள்.. அவள் போனதும் கனமான அந்த அறைக் கதவை கஷ்டப்பட்டு இரு கைகளால் நகர்த்தி மூடியவள் தாழ்பாளுக்கான கனத்த இரும்பு சங்கிலி பூட்டோடு பெருந்தாது இருக்க விழித்தாள்.. அதற்கு கதவை இன்னமும் ஒட்டி தள்ள வேண்டியதிருந்து.. கைகள் அதற்கு ஒத்துழைக்க மறுக்க.. சை எப்படியும் போ.. சலித்தபடி கதவை அப்படியே விட்டு விட்டு பாத்ரூமுக்குள் நுழைந்தாள்..




கீழே கசகசவென மனித கூச்சல்கள் கேட்டுக் கொண்டிருக்க, நல்லவேளை அந்த கும்பலிலிருந்து தப்பினேன்.. நிம்மதி பெருமூச்சுடன் கனத்த பட்டு சேலையை மாற்றி, முகம் கழுவி அக்கடா என படுக்கையில் சாய்ந்தவளுக்கு தூக்கம் கண்களை தழுவ உறங்க தொடங்கினாள்..

மீண்டும் அவள் கண் விழித்து பார்த்த போது சுற்றிலும் இருள் இருந்தது.. கசகச பேச்சுக்களெல்லாம் மறைந்து ஒரு வித அமானுஷ்ய அமைதி இருந்தது.. ஐயோ.. நைட் ஆயிடுச்சா.. இவ்வளவு நேரமாகவா உறங்கினேன்.. வேகமாக எழுந்து கொள்ள திரும்பிய போது.. அவளது உறக்கம் கலைந்தற்கான காரணம் தெரிந்தது.. அந்த அறையின் பெரிய கதவு க்ரீச் சத்தத்துடன் நகர்ந்து திறந்து கொண்டிருந்தது..

யார் வருவது.. யோசனையோடு படுத்தபடி பார்த்துக் கொண்டிருந்தவள் அரை இருளில் உள்ளே நுழைந்தவனின் வரி வடிவை உணர்ந்ததும் நெஞ்சம் படபடத்தாள்.. உயர்ந்து.. அகன்ற அந்த பெரிய வாசலை ஆக்ரமித்தபடி, அந்த பெரிய மரக்கதவை வலது கை நான்கு விரல்களால் அலட்சியமாக தள்ளியபடி உள்ளே வந்தான் அய்யனார்..

இவன் இப்போது இங்கே ஏன் வருகிறான்..? படபடத்த அவள் நெஞ்சம் கேட்ட கேள்விக்கு பதில் கேள்வி அவனிடமிருந்து வந்தது..

“அந்த நாராயணசாமி கூட எதற்கு காரில் வந்தாய்..?”




What’s your Reaction?
+1
9
+1
14
+1
0
+1
1
+1
1
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!