Serial Stories udalena nan uyirena nee

உடலென நான் உயிரென நீ-3

3

” இங்கே கூட லைட் கிடையாதா ? ” சஷிஸாவின் குரல் தடுமாற்றத்துடன் மெலிந்து கேட்க …

” லைட்டெல்லாம் இருக்கிறது. போடத்தான் கூடாது.  பாதுகாப்புக்காகத்தான் …” சொன்னபடி அவன் ஒரு சிறிய மெழுகுவர்த்தியை அறை மூலையில் ஏற்றி வைத்தான் .எதிரே ஏதோ இருக்கிறது என அனுமானிக்கும் வரை ஒளி கிடைத்தது .

” அதோ அங்கே பார்சலில் இட்லி இருக்கிறது. சாப்பிட்டு விட்டு உள்ளே போய் படுத்து தூங்கு .காலையில் மற்றவற்றை பேசலாம் ” சொன்னபடி அங்கே இருந்த சேர்களை நகற்றி விட்டு போர்வையை தரையில் விரித்து படுத்து விட்டான் .

சாப்பிடும் எண்ணமில்லையென்றாலும் அவன் சொல்லுக்கு பயந்து பார்சலை பிரித்த சஷிஸாவிற்கு முதல் கவளம் வாயில் பட்டதும் தான் வயிற்று பசி தெரிந்தது. படபடவென இட்லிகளை பிய்த்து போட்டு சாப்பிட ஆரம்பித்தாள் .

இடை இடையே கீழே படுத்திருப்பவனை எட்டிப் பார்த்துக் கொண்டாள். அவன்தானா இவன் …? அவளது சந்தேகத்தை சுற்றியிருந்த இருள் நிவர்த்திக்கவே இல்லை. இருளிலேயே தடுமாறி உள் அறைக்கு போனவளின் காலினை எதுவோ இடற சிறு அலறலுடன் அவள் விழுந்த இடம் மெத்தென்ற கட்டில். அந்த அலறல் என்னவென்ற விசாரிப்போடு யாரையும் அழைத்து வராததால் , தன் உடலை அழுத்திய அந்த மென்மையில் அமிழ்ந்தி கண்களை மூடிக் கொண்டாள்.ஐந்தே நிமிடங்களில் தூங்கியும் போனாள் .

உச்சந்தலையில் இடிப்பது போன்ற அந்த  மியூசிக்  சத்தத்தில் எரிச்சலுடன் விழிகளை திறந்தாள் சஷிஸா . எந்த முட்டாள் தூங்கும் போது பக்கத்தில் உட்கார்ந்து ஹார்மோனியம் வாசிப்பது ? திகு திகுவென எரிந்த விழிகளை தேய்த்தபடி கண் திறக்க , ஒலித்துக் கொண்டிருந்த போனை அவளருகே கட்டிலில் வைத்து விட்டு ஒரு உருவம் அறையை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தது .

இந்த நடை நிச்சயம் அவனுடையதுதான் …அலட்டல் இல்லாமல் நாண் போல் நிமிர்ந்து இருளில் நடந்த அந்த உருவத்தின் நடையை உள்ளத்தில் வாங்கியபடி முடிவெடுத்தவள் தன்னருகில் பெட்டில் கிடந்து ஒலித்துக் கொண்டிருந்த போனை எடுத்து ஆன் செய்தாள் .

வீடியோ கால் அது .ஆன் செய்ததும் போனில் ரூபா வந்தாள் . ” ஹாய் சஷிஸா எப்படி இருக்கிறாய் ? “




” ரூபா ஆன்ட்டி ” அழுது விட்டாள் சஷிஸா

” இப்படி என்னை விட்டுட்டு போயிட்டீங்களே ….” ரூபா போனில் சமாதானம் சொல்ல முயல அதனைக் கேட்காமல் அழுகையை தொடர்ந்தாள் சஷிஸா .

பட்டென அவள் கையிலிருந்த போன் பிடுங்கப்பட்டது . ” அழாமல் பேசுவதாக இருந்தால் பேசு .இல்லையென்றால் எழுந்து வீட்டை விட்டு வெளியே போ ” கருங்கற்கள் மோதியது போல் ஒலித்தது அவன் குரல் .

கண்களை சுழற்றி சன்னல் வழியாக வெளியே பார்த்த சஷிஸா அங்கே தெரிந்த இருளை பார்த்ததும் இந்நேரம் வெளியே போவது சாத்தியமற்றது என உணர்ந்து சட்டென அழுகையை நிறுத்தினாள் .

” கண்ணை துடை. இந்த தண்ணீரை குடி . தெளிவான மனத்துடன் பேசு …” அடுத்தடுத்த அவனது கட்டளைகளுக்கு பணிந்தவள், லேசான கம்மல் தெரிந்த குரலோடு போனிற்கு திரும்பினாள் .

” ஆன்ட்டி …”

ரூபா அமைதியாக அவளுக்கு போனில் காத்திருந்தாள் .” சாரிம்மா. கணாவை தப்பாக நினைக்காதே .அவன் உன் நன்மைக்காகத்தான் …”

” இ …இவரை உங்களோடு கூட்டிப் போகவில்லையா ஆன்ட்டி ? ” ரூபா மௌனமாக அவளை பார்த்தபடி இருந்தாள் .

“இவரை பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது ஆன்ட்டி ” கணநாதன் அறையை விட்டு வெளியேறி விட்ட தைரியத்தில் மெல்லிய குரலில் பேசினாள் .

இரண்டு நிமிட யோசனைக்கு பின் ரூபா வாய் திறந்தாள் .” நீ என்னை நம்புகிறாய் இல்லையா சஷிஸா ? “

” நிச்சயமாக ஆன்ட்டி. அம்மா …எ…என் அம்மா …உ…உங்களை மட்டும் தான் நம்ப வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள் “

” ம். கணநாதன் என் மகன் சஷிஸா. அவனைத்தான் உனக்கு பாதுகாப்பாக நான் முடிவு செய்திருக்கிறேன் .அதனால்தான் வெளியே அவன் லண்டனுக்கு போவதாக போக்கு காட்டிவிட்டு, சிங்கப்பூர் வரை அவனை கூட்டி வந்துவிட்டு, இந்தியாவிற்கே திருப்பி அனுப்பியிருக்கிறேன். உனக்காக …” திரையில் அவளை ஒற்றை விரலால் சுட்டினாள்.

” நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் ஆன்ட்டி ? “

” நான் லண்டனில். உன் அப்பாவிற்கு சந்தேகம் வரக் கூடாதில்லையா ? அதனால் நான் இங்கே வேலையிலும், என் தோழியின் மகனை கணநாதனின் இடத்தில் வைத்து இங்கே படிக்க வைத்துக் கொண்டுமிருக்கிறேன் . எளிதாக யாராலும் கண்டுபிடிக்க முடியாது “

“அப்படியே என்னையும் அங்கேயே கூட்டிப் போயிருக்கலாமே ஆன்ட்டி ? “

” இல்லைம்மா உன் அப்பா உன்னை தேடுவது முதலில் வெளிநாடுகளில் தான் இருக்கும். அவர் யூகிக்க முடியாத இடத்தில்…அதாவது இந்தியாவில் நம் தமிழ்நாட்டில் ஒரு சிறிய கிராமத்தில் நீ இருக்க வேண்டும் …”

” இங்கே மட்டும் அப்பா என்னைக் கண்டுபிடிக்க மாட்டாரா ஆன்ட்டி ?”

” கண்டுபிடித்து விடுவார் தான். கொஞ்சம் தாமதமாக கண்டுபிடிப்பார். அதற்குள் நீ…” ரூபா தயங்கி நிறுத்தினாள்.

” அதற்குள் நான் …”




” அவருக்கு உபயோகமில்லாதவளாக மாறியிருக்க வேண்டும் “

” புரியவில்லை ஆன்ட்டி “

” நீ உடலால் மனதால் ஒரு சராசரி் இந்திய குடும்ப தலைவியாக மாறியிருக்க வேண்டும் “

சஷிஸா தலைகுனிந்தாள் .” என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள சொல்கிறீர்களா ? ” முணுமுணுப்பாய் கேட்டாள்.

” குழந்தையும் பெற்றுக் கொள்ள சொல்கிறேன் …” அதட்டலாய் உத்தரவாய் ஒலித்தது ரூபாவின் குரல் .




What’s your Reaction?
+1
22
+1
13
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
P Bargavi
P Bargavi
12 days ago

Nice

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!