Serial Stories சந்தியா ராகம்

சந்தியா ராகம்-10

10

அன்று இரவு படுக்கையறை வாசலில் நின்றபடி “உள்ளே வந்து படு சந்தியா” என ஜெயசூர்யா அழைக்க கொஞ்சம் அதிர்ந்தாள். என்ன சொல்வது என தெரியாமல் தயங்கியபடி நின்றவளின் அருகே வந்தான். 

 ஒற்றை விரலால் அவள் முகத்திற்கு அடியில் கை கொடுத்து உயர்த்தியவன் “இங்கே பார் சந்தியா, இப்போது உன் மனதில் உண்டாகி இருக்கும் குழப்பங்களை நான் அறிவேன். இந்த நேரத்தில் நீ தனியாக படுப்பது சரியல்ல. உள்ளே வா…”

” இல்லை எனக்கு ஒன்றும் இல்லை. நான் இங்கேயே…”

” மறைக்க நினைக்காதே சந்தியா. சட்டநாதன் கண்டபடி பேசியது, ரவிச்சந்திரனை பார்த்தது, என்னுடைய அணுகுமுறை எல்லாமே உனக்குள் நிச்சயம் பெரிய குழப்பத்தை உண்டாக்கியிருக்கும்” ஜெயசூர்யா சொல்ல சட்டநாதன் ரவிச்சந்திரனை தாண்டி கணவனது அணுகுமுறைதான் சந்தியாவின் மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.

” அப்படி பட்டென்று கைநீட்டி விட்டீர்களே…” ரவுடி போல என்ற வார்த்தைகளை தொண்டைக்குள் அழுத்தி  கொஞ்சம் குறைபாட்டுடனே கேட்டாள்.

“ஏன்டா ரவுடி மாதிரி நடந்து கொள்கிறாய் என்கிறாய்…ம்”

அவள் நினைப்புகளை அவன் முடிக்க உதடுகளை அழுந்த கடித்து மௌனித்தாள்.”பாவம் பஞ்சு போல் மென்மையானவை.அவற்றை ஏன் இப்படி படுத்துகிறாய்?” 

திடுமென அவன் சம்பந்தமில்லாமல் பேசியதில் குழம்பி அவன் முகம் பார்க்க,அவன் கண்கள் தன் இதழ்களில் நிலைத்திருப்பதை உணர்ந்து வேகமாக பற்களை உதடுகளிலிருந்து விடுவித்தாள்.

ஈரம் பளபளத்த இதழ்களை பார்த்தபடி  “இங்கே வா..” என அவள் கைகோர்த்து படுக்கையறைக்குள் அழைத்துப் போய் கட்டிலில் அமர வைத்தவன் தானும் அருகில் அமர்ந்து கொண்டான்.

“பரம்பரையாக தொழில் குடும்பத்தை சேர்ந்தவன் சந்தியா. பள்ளியில் படிக்கும் போதே அம்மாவும் அப்பாவும் பாதுகாப்பு கலைகளையும் சேர்த்தேதான் பயிற்றுவித்தார்கள். துப்பாக்கி ஒன்றிற்கு லைசன்ஸ் கூட வாங்கி வைத்திருக்கிறேன். சொல்லப் போனால் போர்க்களமும்,தொழிற்களமும் ஒன்றுதான்.எதிரிகளை எந்நேரமும் எந்த சூழ்நிலையிலும் சமாளிக்க தெரிய வேண்டும். நிறைய அனுபவங்களை தாண்டித்தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன்.இந்த சட்டநாதனெல்லாம் எனக்கு தூசு. அந்த ஆள் அப்படி உன்னை பேசிய பிறகும் நான் செயல்படாமலேயே இருப்பேன் என்று நீ எதிர்பார்த்தால்…” தோள்களை குலுக்கி கொண்டான்.

” என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை… எனக்காகவா..?” கண்களை அகல விரித்து அவனை நிமிர்ந்து பார்க்க, “ஏன் கூடாதா…?” தன் பார்வையை அவள் கண்களுக்குள் செலுத்தினான்.

 படபடத்த இமைகளுடன் தடுமாறிய சந்தியா பார்வையிலும் அவனை எதிர் கொள்ள தடுமாறி “நான் தூங்க போகிறேன்” கட்டிலில் ஓரமாக படுத்து சுருண்டு கொண்டாள்.

 விரிந்த புன்னகையுடன் ஜெயசூர்யாவும் அருகிலேயே படுக்க சந்தியாவின் உடல் உடன் ஒரு கணம் விரைத்தது. அதை உணர்ந்தான் போல் “பயப்படாதே உன் பக்கமே திரும்ப மாட்டேன். பக்கத்தில் நான் இருக்கிறேன். அவ்வளவுதான். நீ நிம்மதியாக தூங்கு” அவளுக்கு முதுகு காட்டி படுத்தவனிடம் அதன்பிறகு ஆழ்ந்த தூக்கத்திற்கான மூச்சுகள் மட்டுமே கேட்க சந்தியாவிற்குத்தான் வெகு நேரம் உறக்கம் வரவில்லை.

 ஜெயசூர்யாவின் தொழில் திட்டங்கள் அபாரமான வேகத்துடன் இருந்தன. பருப்பு உடைப்பவர்களிடம் வேலைக்கான உத்தரவாதத்தை கொடுத்தவன்,அதன் பிறகு தோப்பு வைத்திருப்பவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினான். கொட்டை மட்டுமல்ல பழங்களையும் தானே வாங்கிக் கொண்டு அவர்களுக்கு உரிய பணத்தை கொடுத்து விடுவதாக உறுதியளித்தான்.

 தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை என்று அலைந்து பருப்புகளை பேரம் பேசி சமயத்தில் கொள்முதல் விலைக்கே விற்க வேண்டிய இக்கட்டான நிலையில் இருந்தவர்கள் ஜெயசூர்யா சொன்ன அருமையான திட்டத்திற்கு உடனே ஒத்துக் கொண்டனர். “அந்த சட்டநாதனும் முதலில் இப்படித்தான் நான் இருக்கிறேன் உங்களுக்கு என்று கடவுள் மாதிரி எங்களிடம் பேசினார். போகப் போக அடிமாட்டு விலைக்கு பருப்புகளை கேட்க ஆரம்பித்தார். எங்களுக்கு வேறு வழியில்லாமல் அவர் பேக்டரிக்கு கொடுத்துக் கொண்டிருந்தோம்”என நிறைய பேர் குறைபட்டனர்.

” அப்படி எதுவும் என் விஷயத்தில் நடக்காது. நாம் அக்ரீமெண்ட் போட்டுக்கொள்ளலாம். என் பேச்சை நான் மீறினேனென்றால் நீங்கள் தாராளமாக கோர்ட்டுக்கு என்னை இழுக்கலாம்” தயாராக வைத்திருந்த அக்ரீமெண்ட்களை அவர்களிடம் காட்ட படித்து பார்த்து அனைவரும் திருப்தியாக கையெழுத்து விட்டு சென்றனர்.




 கூடவே முந்திரி உடைக்கும் பெண்களுக்கு கையுறைகள் அடுப்பு வெப்பம் தாக்காமல் இருக்க மேலுடைகள் முகமூடிகள் என ஏற்பாடு செய்தான். போனில் அவன் பேசப் பேச சென்னையில் இருந்து எல்லா உபகரணங்களும் டாண் டாணென  வந்து நின்றன.

“ஹப்பா எவ்வளவு வேகம்!” வீட்டின் முன்னால் அட்டைப்பெட்டிகளை பிரித்து  கையுறைகளை அணிந்து பார்த்து உற்சாகமாக பேசிக் கொண்டிருந்த பெண்களை நிறைவாய் பார்த்தபடி ஜெயசூர்யாவிடம் சொன்னாள் சந்தியா.

” உனக்காக எனக்காக இந்த தொழில் ஒப்பந்தத்தை இவர்கள் எல்லோரும் ஒத்துக் கொண்டாலும், மனதிற்குள் சிறு நெருடல் அவர்களுக்கு இருக்கத்தான் செய்யும் சந்தியா.அதனை போக்குவதற்கு வேகமான நமது செயல்தான் ஒரே வழி. இதோ இப்போது அவர்கள் முகங்களை பார், முழுக்க முழுக்க நம்மை நம்பி நம் பின்னால் வர தயாராகி விட்டார்கள்”

” உங்களுக்கும் இது லாபம் அப்படித்தானே? இந்த வியாபாரிதான் அவருக்கு லாபம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டாரே”

” நிச்சயம் தொழில் என்பது கொடுத்து பெறுவதுதான் சந்தியா. தொழிலாளிகளுக்கு கொடுப்பதை அவர்கள் மனநிறைவடையும் வகையில் கொடுக்க வேண்டும் என்பதுதான் அதிலுள்ள சூட்சுமம். அதை மட்டும் சரியாக செய்து விட்டோமானால் தொழிலில் நம் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது”

” அது சரி பருப்புகளைத்தான் வாங்கினீர்கள், பழங்களையும் எதற்கு வாங்கிக் கொள்வேன் என்று உறுதியளித்தீர்கள்? பழங்கள் விரைவிலேயே கெட்டுப் போகும் தெரியுமா?” தன் மனதை உறுத்திக் கொண்டிருந்ததை கேட்டாள்.

” பழங்களை வைத்து ஜாம் தயாரிக்கும் ஐடியா வைத்திருக்கிறேன் சந்தியா”

” ஓ அப்படியானால் ஜாம் தொழிற்சாலையும் ஆரம்பிக்க வேண்டுமா?”

” அதுதான் ஐடியா.ஆனால் முந்திரிப்பழ ஜாம் எந்த அளவு விற்பனை இருக்கும் என்று தெரியவில்லை. கொஞ்சம் யோசித்து செய்ய வேண்டும்” 

“ஆனால் அதற்குள் பழங்களை வாங்குவதாக வாக்கு கொடுத்து விட்டீர்களே?”

” இருக்கட்டும் சில நாட்கள் பழங்களை வாங்கி வைத்து அவை கெட்டு போனாலும் நமக்கு பெரிய பாதிப்பு வராது. எல்லாவற்றிற்கும் சேர்த்து லாபம் பார்த்து விடலாம் பயப்படாதே” என்றபடி அவள் கன்னத்தை லேசாக தட்ட சந்தியா முகம் சிவந்தது.

” நான் ஒன்றும் பயப்படவில்லை” அவள் முணுமுணுப்பிற்கு வாய்விட்டு சிரித்தான். 




 தள்ளி நின்று தங்கள் பாதுகாப்பு உபகரணங்களை பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் வீட்டு வராண்டாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த இவர்கள் இருவரையும் அடிக்கடி ஓரக் கண்களால் பார்க்க தவறவில்லை.

 பார்த்தாயா… ஜாடை மாடையாக இவர்களைப் பற்றியும் தங்களுக்குள் பேசி சிரித்துக்கொண்டனர். அதனை உணர்ந்த சந்தியாவின் முகம் இன்னமும் சிவந்தது.

“இதென்ன முகம் முழுவதும் முந்திரி பழுத்து கிடக்கிறது?” அவள் முகச்சிவப்பை ஜெயசூர்யா கிண்டல் செய்ய செல்லமாய் முறைத்தபடி உள்ளே எழுந்து போனாள்.

 ஒரு வாரம் புது தொழிலின் பரபரப்புடன் கழிய ,அன்று தோப்பை ஒரு சுற்று பார்த்துவிட்டு சந்தியா வீட்டிற்குள் நுழைந்தபோது கதிர்வேலன் வேகமாக அவளை கடந்து வெளியேறினான். இவளைப்  பார்த்ததும் அனிச்சையாக தோளில் கிடந்த துண்டினால் வாயை மூடிக்கொண்டான்.

” கதிர் எதற்கு இப்படி முழிக்கிறாய்? ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்?” சந்தியா கேட்க ஒன்றுமில்லை என வாயை திறக்காமல் தலையாட்டி விட்டு வேகமாக ஓட முயன்றான்.

 கையை நீட்டி அவன் கழுத்து துண்டை பற்றி நிறுத்தியவள் “எங்கே போகிறாய் ?திருடன் போல் ஏன் இப்படி ஓடுகிறாய்?” கேட்டவள் அவனிடமிருந்து வந்த ஒரு வித வாசத்தில் மூக்கை சுளித்தாள்.

” ஏய் என்னத்தையடா குடித்து தொலைத்தாய்?” அதட்டினாள்.

” நான் இல்லை உன் அவர்தான்… டேஸ்ட் பார் என்று எனக்கும் கொடுத்தார்” சம்பந்தமில்லாமல் எதையோ உளறி விட்டு  அவள் கையை பற்றி பிரித்துவிட்டு ஓடிவிட்டான்.

 என்ன இவன் ஒரு மாதிரி விசித்திரமாக நடந்து கொண்டிருக்கிறான் என்றெண்ணியபடி உள்ளே நுழைந்தாள். ஜெயசூர்யா முன்னால் இருந்த டீப்பாய் மேல் சில கண்ணாடி புட்டிகள் இருந்தன. அவற்றினுள் வெண்ணிறமாய், பொன்னிறமாய்,கருஞ்சிவப்பாய் என பல நிறங்களில்  திரவங்கள் அசைந்து கொண்டிருந்தன.

 சுண்டுவிரல் நீளம் இருந்த கண்ணாடி கோப்பை ஒன்றில் பாதியளவு அந்த திரவத்தை நிரப்பி வாயில் வைத்து உறிஞ்சிக் கொண்டிருந்தான் ஜெயசூர்யா. “பென்டாஸ்டிக்” கண்களை மூடி ருசித்து சிலாகித்தான். 




What’s your Reaction?
+1
25
+1
21
+1
0
+1
2
+1
1
+1
1
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!