Serial Stories நந்தனின் மீரா

நந்தனின் மீரா-17

17

காலடி ஓசைக்கே
கழைக்கூத்தாடும் மனதை வைத்துக்கொண்டுதான்
நேற்றெல்லாம் சங்கல்பம்
செய்து கொண்டிருந்தேன் ,
உன்னை விட்டு விட போவதாக ….

” என்ன மச்சான் …என்ன பிரச்சினை …? ” நந்தகுமாரின் குரல் கேட்கவும்தான் மீராவிற்கு மூச்சு வந்தது .

” ஏங்க எதுவாக இருந்தாலும் உள்ளே போய் பேசலாம் .வாங்க …” நந்தகுமாருடன் வந்த பிரவீணா கெஞ்சலக கணவனை பார்த்தாள் .

” இந்த சடங்கெல்லாம் நடக்க வேண்டியது நம் வீட்டில் .இங்கே எதற்கு வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள் …? ” முன்பு போல் வேகம் இல்லை .நந்தகுமாரை பார்த்ததும் தொனி மாறிவிட்டது குமரேசனுக்கு .

” அதை உள்ளே வந்து பேசலாமே …” சொன்னபடி உள்ளே நடந்தான் நந்தகுமார் .

வாசல் வழியில் நின்றிருந்த மீராவை  பார்த்து ” இங்கே என்ன வேடிக்கை …? உள்ளே போயேன் ….” எரிந்து விழுந்தான் .

முகம் சுருங்கிய மீரா வேகமாக உள்ளே போனாள் .

” மச்சானுக்கு காபி கொண்டு வா மீரா .இங்கே உட்காருங்கள் மச்சான் …” குமரேசன் அருகிலேயே தானும் அமர்ந்து கொண்டு அவன் முகத்தை உற்று பார்த்தான் .

உள்ளேயிருந்து வந்த திவ்யா ” அப்பா நான்தான் பாட்டி வீட்டிற்கு போவேன்னு ஸ்கூல்ல டீச்சர்கிட்ட கேட்டு இங்கே வந்தேன் .” என்றாள் .

குமரேசன் எச்சில் விழுங்கினான் .




” சொல்லுங்க மச்சான் …வீட்டிற்கு வெளியே நின்று என்னவோ சொல்லிட்டு இருந்தீங்களே …” காபி தம்ளரை எடுத்து குமரேசனுக்கு கொடுத்தபடி கேட்டான் .

” என் பொண்ணு .அவளுக்கு என் வீட்டில் வைத்து விசேசம் செய்து பார்க்க எனக்கு ஆசை இருக்காதா ..? “

” உங்கள் வீட்டில் வைத்து செய்தாலும் தாய்மாமன் முறையில் நானும் , சசிகுமாரும்தான் சீர் செய்ய போகிறோம் .அதை இங்கேயே வைத்து செய்வதில் என்ன இருக்கிறது …? “

” எங்கள் மருமகளுக்காக பத்தாயிரம் ரூபாய்க்கு பட்டுச்சேலை வாங்கியிருக்கிறோம் .மோதிரமும் , வளையலும் வாங்கியிருக்கிறோம் .எங்கள் வீட்டில் வைத்து இதையெல்லாம் செய்து பார்க்க எங்களுக்கு உரிமையில்லையா …? “

” இவ்வளவு செய்யுங்கள் என்று நான் கேட்டேனா …? ” குமரேசன் கோபமாக கேட்டான் .

” நீங்கள் கேட்கவில்லை .அப்படி எதிர்பார்க்கிற ஆள் நீங்கள் இல்லை என்பதும் எனக்கு தெரியும் .நாங்கள் செய்யும் சீரின் அளவை சொன்னது எங்கள் பெருமை பேச இல்லை .எங்கள் மருமகளின் மேல் நாங்கள் வைத்திருக்கும் பாசத்தை காட்ட .ஸ்கூலில் இருந்து அழுதுகொண்டே தனது வலியை சொல்ல பாட்டியிடம் ஓடி வர வேண்டும் என்று அந்தக் குழந்தைக்கு தோன்றியிருக்கிறது .அந்த குழந்தையின் உணர்ச்சியை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் ….”

குமரேசன் வாயடைத்து போனான் …

” எட்டு மணிக்கு போட்டோ ஸ்டுடியோக்காரன் வந்திடுவான் …” தகவல் சொல்லியபடி வந்த குருநாதன் …அங்கிருந்த இக்கட்டான சூழ்நிலையை ஊகித்துக்கொண்டார் .

” வாங்க மாப்பிள்ளை .குழந்தை நல்ல செய்தி சொல்ல பாட்டி வீடு தேடி ஓடி வந்துட்டா .அதுவும் நல்லதுதான் .உங்க வீட்டில் விபரம் சொல்லித்தர , எடுத்து செய்ய பெரியவங்க இல்லையே .இங்கே நாங்க எல்லோருமா ஆளுக்கொரு வேலையா எடுத்து செஞ்சு விசேசத்தை நல்லபடியா முடிச்சிடுறோம் .நீங்களும் பிரவீணாவும் நம்ம , உங்க சொந்தக்காரங்க எல்லோருக்கும் போனில் தகவல் சொல்லிடுறீங்களா …? “

குமரேசனின் தலை தானாக ஆடியது .

மீராவிற்கு ஆச்சரியம் தாளவில்லை .பெரிய பிர்ச்சினையாக இது வெடிக்க போகிறதோ ..என எண்ணி அவள் பயந்து கொண்டிருந்தாள் .அதனை மாமனாரும் , கணவனுமாக சேர்ந்து மிக எளிதாக சமாளித்த விதம் அவளுக்கு ஆச்சரியமூட்டியது .

நான்கு பிள்ளைகள் பிறந்த குடும்பத்தில்   ஒவ்வொரு உறவையும் மனம் நோகாமல் கொண்டு செல்வதென்பது பெரிய கலை .அதனை கற்று தேர்ந்த குடும்பங்கள்தான் இன்றைய விஞ்ஞான யுகத்திலும் சிதையாத உறவுகளுடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

மீரா முட்டைகளை அவிக்க தொடங்கினாள் .பிறகு விருந்தினர்கள் வரவும் அவர்களுக்கு கொடுக்க என ஒரு உடனடி பானத்தை தயாரித்து வைத்தாள் .

” இன்னமும் என்ன செய்கிறாய் …? போ …போய் முகம் கழுவி உடை மாற்று …” சுந்தரி அவளை விரட்டினாள் .

ஹாலில் அடுக்கி இருந்த சீர் தட்டுக்களை சரி பார்த்தாள் .விருந்தினர்கள் ஒவ்வொருவராக வர தொடங்கினர் . தன்னை திருத்திக் கொள்ள தங்கள் அறைக்குள் நுழைய போனவள் …வாசலுக்கு நேராக அடைந்தாற் போல் கிடந்த விருந்தினர்களின் செருப்புகளை பார்த்துவிட்டு …அவற்றை ஒதுக்கி ஓரமாக தள்ள ஆரம்பித்தாள் .

அப்போது அடர் பச்சை நகச்சாயமிட்ட இரு அழகிய வெண்ணிற கால்கள் அவளது கைகளுக்கு நேராக தனது செருப்புகளை விட்டன. அதுதான் ஒதுக்கி வைத்துக்கொண்டிருக்கிறேனே …ஓரமாக போடாமல் திரும்பவும் இப்படி நடுவில் போட்டால் எப்படி …மீராவின் கோபத்தின் அளவை அந்த கால்களின் அழகு குறைத்தது .

என்ன அழகான கால்கள் …ரசனையோடு அந்த பாதங்களுக்குரிய முகத்தை காண நிமிர்ந்தவள் அதிர்ந்தாள் .




இ…இவள் …அ…அந்த …மி…மிருணாளினிதானே ….

இவள் இங்கு வருவாளா …? ஆனால் ஏன் வந்தாள் …? எப்படி வரலாம் …? வெளியே போ என்று சொல்லிவிடலாமா …? அவசரமாக ஒரு தீர்மானத்தை மனதினுள் எடுத்தவள் அதை செயல்படுத்த வாயை திறந்தாள் .

” வாங்க …வாங்க ஏன் அங்கேயே நின்னுட்டீங்க ..? உள்ளே வாங்க .”ஆர்ப்பாட்டமாய் பின்னால் கேட்ட வரவேற்பு குரலில் நொந்து போனாள் மீரா .




What’s your Reaction?
+1
18
+1
27
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
P Bargavi
P Bargavi
14 days ago

Nice

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!