Serial Stories

வானமழை போல் ஒரு காதல் – 17

17

 

 

 

 

” என்ன விஷயம்  ? “எந்த விதமான உறவு முறையையும் சொல்லி விடாமல் முடிந்த அளவு குரலில் விறைப்பை காட்டியபடி எதிரே நின்ற மருமகனிடம் கேள்வி கேட்டார் ஜெயக்குமார்.

 

அவருடைய அளவு மெனக்கெடல் தேவராஜனுக்கு தேவை இருக்கவில்லை .” வாசுகி இருக்கிறாளா மாமா ? ” அவனுடைய கேள்வி மிக இயல்பாக இருந்தது.

 




” என்ன விசயம் என்று கேட்டேன் ” ஜெயக்குமார் குரலில் அழுத்தத்தை கூட்ட ” உள்ளே போய் பேசலாம் மாமா ” வாசலின் குறுக்காக வைத்திருந்த அவர் கையை சாதாரணமாக எடுத்து விட்டு விட்டு உள்ளே வந்தான் தேவராஜன் .சுவாதீனமாக சோபாவில் அமர்ந்து கொண்டு ” எப்படி இருக்கிறீர்கள் அத்தை ? ” ராஜாத்தியை நலம் விசாரித்தான்.

 

” மாலினியை எங்கே படிக்கிறாளா ? கொழுந்தியாளுக்கும் ஒரு விசாரணை  கொடுத்த பின் தொடர்ந்து அவன் கண்கள் வீட்டினுள் அலைபாய்ந்தது .அதன் தேடலை உணர்ந்த வாசுகியின் பெற்றோர் தேடலுக்கான விளக்கத்தை அவனுக்கு கொடுக்க தயாரில்லை.

 

” வாசுகியை எங்கே ? உள்ளே படுத்திருக்கிறாளா ? ”  இந்த கேள்வியின் போது தேவராஜனின் குரல் மிகவும் இறங்கி இருந்தது. லேசான குற்ற உணர்வு தொனித்தது.

 

” இந்த ஒரு வாரமாகத்தான்  என் மகள் என் மகள் நிம்மதியாக இருக்கிறாள். பாவம் நன்றாக தூங்கி எத்தனை நாட்கள் ஆனதோ ? உள்ளே தூங்கிக் கொண்டிருக்கிறாள் .” அவளை எழுப்பி இங்கே அழைத்து வரப் போவதில்லை என்ற குறிப்பை மருமகனுக்கு காட்டினார் மாமனார்.

 

ஒரு நிமிடம் அமைதியாக இருந்த தேவராஜன் மீண்டும் பேச வாய் திறந்தபோது தொண்டையை லேசாக செறுமிக் கொண்டான் .” பரவாயில்லை மாமா அவள் தூங்கட்டும் .நான் அவளது காலேஜ் அட்மிஷன் பற்றி பேச வந்தேன் .அடுத்த மாதம் அவளுக்கு காலேஜ் ஆரம்பித்துவிடுகிறது. இப்போதுதான் அவள் காலேஜில் போய் ஃபீஸ் கட்டி விட்டு வருகிறேன் .இந்த விபரத்தை சொல்லி அவளை காலேஜுக்கு கிளம்ப தயார் செய்யுங்கள் ” 

 

ஜெயக்குமாரின் முகத்தில் ஆத்திர செம்மை ஏறியது. இவன் மனைவியை சமாதானப்படுத்தி  வீட்டிற்கு அழைத்து போக வரவில்லை. ஏதோ சாக்கு போக்கு சொல்லி அவளை வெறுமனே பார்த்துவிட்டுப் போக வந்திருக்கிறான்.

 

” என் மகளின் படிப்பிற்கு பீஸ் கட்ட எனக்குத் தெரியும் .அது என்னுடைய உரிமையும் கூட . அதனை நான் யாருக்கும் தரமாட்டேன். ஏய் ராஜாத்தி அவரிடம் பீஸ் கட்டிய ரசீதை வாங்கி வை. நாளையே அந்த பணத்தை அவருடைய அக்கௌண்டில் போட்டு விடுகிறேன் ” சொல்லிவிட்டு அதற்கு மேல் அங்கே இருக்க பிடிக்காமல் வீட்டின் பின்புறம் தனது தொழில் கூடத்திற்கு சென்றுவிட்டார் ஜெயக்குமார்.

 

ராஜாத்தி செய்வதறியாது திகைத்து நிற்க அவளை ஏறிட்டுப் பார்த்த தேவராஜன் லேசாக தொண்டையை செறுமியபடி ” கொஞ்சம் குடிக்க தண்ணீர் கொடுங்கள் அத்தை ” என்றான்.

 

இப்போது இவரை வீட்டு மாப்பிள்ளையாக விசேஷமாக உபசரிப்பதா அல்லது வேற்று ஆள் போல் வெறும் தண்ணீர் கொடுத்து அனுப்புவதா ? ராஜாத்தி குழப்பத்துடன் சமையலறைக்குள் போனாள்.




வெறுமையாக வீட்டை ஒரு முறை வலம் வந்த தேவராஜனின் பார்வை வாசுகி படுத்திருந்த அறையின் மேல் நிலைத்தது .அந்த படுக்கை அறை கதவு முழுவதுமாக பூட்டப்பட்டிருக்கவில்லை. லேசாக திறந்திருந்தது .அதன் வழியாக தெரிந்த சுவரை ஒட்டி போடப்பட்டிருந்த கட்டிலின்மேல் வாசுகி படுத்திருப்பதை அறிய முடிந்தது.

 

தேவராஜன் மெல்ல எழுந்து அந்த அறையை நோக்கி சென்றான். அறைக் கதவை தள்ளி உள்ளே செல்ல நினைத்தவன் பிறகு தன் முடிவை மாற்றிக் கொண்டு கதவின் இடைவெளியில் உள்ளே பார்த்தான் . மென் குரலில் அழைத்தான் ”  வாசுகி ” 

 

உள்ளிருந்து எந்த பதிலும் வரவில்லை.

 

” வாசகி நீ தூங்கவில்லை எனக்கு தெரியும் ” 

 

இதற்கும் அவன் எந்த பதிலையும் பெறவில்லை. தேவராஜனின் முகத்தில் வேதனை கோடுகள் மிக லேசாக கதவை நகர்த்தி பார்த்தான். இம்மலாக இருந்த கதவின் வழியாக கட்டிலில் படுத்திருந்த வாசுகியின் பாதங்கள் தெரிந்தன.

 

கூட்டின் மேல் மெத்தென அமர்ந்திருக்கும் புறாக்கள் போன்ற அப்பாதங்களை ஒரு நிமிடம் ரசித்துப் பார்த்தவன் மெல்ல கைநீட்டி பாதங்களை வருடினான் . ” வசு  ‘ உணர்ச்சி பொங்க அழைத்தான்.

 

சட்டென தனது பாதங்களை உள்ளே  இழுத்து சுருக்கிக் கொண்டாள் வாசுகி .” காத்திரு வசு. திரும்ப வருவேன் ” சொல்லிவிட்டு வேகமாக வெளியேறி விட்டான்.

 

 

 

“வாய் பேச்சோடு  நிறுத்திக் கொள்ளுங்கள் .எதுவும் அதிகமாக பேசிவிட வேண்டாம் “எச்சரித்தபடி கணவருக்கு போட வேண்டிய சட்டையை எடுத்து கொடுத்துக்கொண்டிருந்தாள் ராஜாத்தி.

 

” என்னம்மா போருக்கு போகும் கணவனை வழியனுப்பும் மனைவி போல் அப்பாவை வழியனுப்புகிறீர்கள் .என்ன விசயம் ? ” வாசுகி கிண்டலாக கேட்டாள். 

 




” அவர்கள் வியாபார சங்கத்தில் ஏதோ பிரச்சனையாம் .அதற்காக என்று ஓரு கூட்டம் போட்டிருக்கிறார்கள் .அங்கே தான் அப்பா கிளம்பிக் கொண்டிருக்கிறார் ” 

 

 

” என்னப்பா என்ன பிரச்சனை ? ” 

 

” நம் ஊரில் சாலையை அகலப்படுத்துகிறார்களே  பாப்பா .அதற்காக சாலையோர மரங்களை வெட்டுவதற்கு கவர்மெண்ட் பொது ஏலம் விட்டார்கள். அதனை நம் ஊர் மர வியாபாரிகள் சங்கம் தான் ஏலத்தில் எடுத்து இருக்கிறோம் .ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்த விஷயம் இது .அப்போது இதில் சில குழப்பங்கள் நடந்தன. நமது வியாபாரிகள் சங்கமும் நமக்குள்ளேயே இரண்டாக பிரிந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தனர் .அப்போதெல்லாம் நம் மாப்பிள்ளை…”  ஆரம்பித்துவிட்டு நிறுத்திக்கொண்டார் ஜெயக்குமார்.

 

அன்று அந்தப் பிரச்சினையின் போது வியாபாரிகள் சங்கத்தில் தேவராஜன் ஜெயக்குமாருக்கு பக்கபலமாக இருந்தான் .அப்போதுதான் இருவருக்கும் மிகுந்த நெருக்கம் உண்டானது. அதன் தொடர்ச்சியாகத்தான் தேவராஜனை ஜெயக்குமார் வீட்டிற்கு வரவழைத்து பேசியது அதன்பின் இவர்களது திருமணம் போன்ற சம்பவங்கள் நடந்தன.

 

இப்போது இவற்றை எல்லாம் பேசி மக்களின் மனதில் பழையவற்றை கிளற விரும்பாமல் ஜெயக்குமார் வேகமாக கிளம்ப ஆரம்பித்தார்  ” கீதா உன் அம்மாவை அவள் வீட்டிற்கு கூப்பிட்டிருக்கறாள் பாப்பா .நானும் சங்கத்திற்கு போய்விடுவேன் .மாலுவும் பள்ளிக்கு போய்விடுவாள். நீ கதவை பூட்டிக்கொண்டு ஜாக்கிரதையாக ஓய்வெடு ” மகளை பத்திரப்படுத்திவிட்டு கிளம்பினார் ஜெயக்குமார் .அவருடைய மனதிற்குள் சங்கத்தின் பிரச்சனைகள் சுழன்றபடி இருந்தன.

 

சென்ற முறை இந்த பிரச்சனைகள் வந்தபோது முழுக்க முழுக்க தேவராஜன் அவர் பக்கம் பேசினான் மிக சிறிய வயதில் வேகமாக வளர்ந்து வரும் தொழிலதிபர் என்பதினால் தேவராஜனை சங்கத்தில் பகைத்துக்கொள்ள அப்போது யாரும் தயாராக இருக்கவில்லை .எனவே எல்லோருமே ஜெயக்குமாரின் நியாயத்திற்கு தலையாட்டி விட்டனர் .ஆனால் இப்போதோ….

 

” மாமனாருக்கும் மருமகனுக்கும் அவ்வளவாக சினேகம் இல்லையப்பா .இன்று நாம் இரண்டில் ஒன்று அந்த ஜெயக்குமாரை பார்த்துவிட வேண்டும்  ” சங்க கட்டிடத்திற்குள் நுழையும் போதே இந்த வகை பேச்சு ஒன்று ஜெயக்குமாரின் காதில் விழுந்தது .முகம் இறுக உள்ளே போனார் அவர்.

 

அவர் பயந்தாற் போன்றேதான் உள்ளே சூழ்நிலை அமைந்தது .ஒரு குழுவாக பத்து  பேர்வரை சேர்ந்துகொண்டு ஜெயக்குமாருக்கு எதிராக வாதாடிக் கொண்டிருந்தனர் . ” ஆறு மாதங்களுக்கு முன்பு எங்களுக்கு அந்த விஷயம் சரியாக தெரிந்தது .ஆனால் இப்போது நம்மால் முடியாது. நமக்குத் தேவையான மரங்களை மட்டும் வெட்டி எடுத்துக் கொண்டு  மரியாதையாக ஒதுங்கிக் கொள்வோம் .கருவேல மரங்களை பார்ப்பது நம் வேலை கிடையாது ” இப்படி வாதாடி கொண்டிருந்தனர்.

 

ஜெயக்குமார் மீண்டும் மீண்டும் அவர்களுக்கு தாங்கள் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தை நினைவுபடுத்தியும் அதனை அவர்கள் காதில் வாங்குவதாக இல்லை.

 

” யோவ் புத்தி இல்லாமல் நீ கண்டபடி கண்ட வாக்கு கொடுப்பாய் அதற்காக நாங்கள் உழைத்துக் கொட்ட வேண்டுமா ? முடியாதென்றால் என்ன செய்வாய்  ? ” ஜெயக்குமாருக்கு சங்கத்தில் இருக்கும் செல்வாக்கை குறைப்பதற்கு என்றே திட்டமிட்டுக் கொண்டிருந்த கும்பலில் ஒருவன் எகிறிக் கொண்டு முன்னால் வர…

 

 

” ஒரே அறையில் கடைவாய்ப்பல் வரை பெயர்த்து கையில் கொடுப்பேன் ” சூளுரைத்தபடி உள்ளே வந்தான் தேவராஜன். சொல்வதையே தயக்கமின்றி செய்பவனின் தோற்றம் அவனிடம்.

 

மாமனாருக்கும் மருமகனுக்கும் பேச்சுவார்த்தை கிடையாது என்று கேள்வி பட்டிருந்த எதிர்முனை கும்பல்  சங்க கூட்டம் தொடங்கி இவ்வளவு நேரமாக தேவராஜன் வராமல் இருக்கவும் நீ எப்படியும் போ என்று அவன் ஜெயக்குமாரை  சுழட்டி விட்டு விட்டதாகவே நினைத்திருந்தனர் .இப்போதும் திடுமென வந்து  நின்றவனை அதுவும் அரண் போல் மாமனாரின் முன் நின்றபடி இரு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு அவர்களை முறைத்துக்கொண்டு விஸ்வரூப சிவனாக காட்சியளித்தவனை   எதிர்க்கும் துணிவு யாருக்கும் வரவில்லை.

 




“சாலையோர மரங்களை அகற்றுவதோடு அந்த கருவேல மரங்களுக்கும் சேர்த்துதான் நாம் என்ஜினியர் சாரிடம் ஒப்பந்தம் போட்டுள்ளோம் நினைவில் இருக்கிறது தானே ? ” கூட்டத்தைப் பார்த்து முழங்கிவிட்டு  ஜெயக்குமார் பக்கம் திரும்பினான்.

 

”  அந்த அக்ரீமென்ட் எங்கே இருக்கிறது மாமா ? ” 

 

” அது நம் வீட்டில் இருக்கிறது மாப்பிள்ளை ” 

 

” நீங்கள் இங்கே இருப்பவர்களிடம் புத்தியில் உரைக்குமாரு நமது ஒப்பந்தத்தை நினைவுபடுத்தி விட்டு அடுத்த வேலையை  பாருங்கள் .நான் போய் அந்த அக்ரிமெண்ட்டை எடுத்துக்கொண்டு வருகிறேன் ” 

 

ஒழுங்காக பேசுங்கள் என்ற கண்பார்வை எச்சரிக்கையோடு  அங்கிருந்து வீட்டிற்கு கிளம்பினான் தேவராஜன்.




What’s your Reaction?
+1
30
+1
21
+1
1
+1
0
+1
2
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
Priya
Priya
1 month ago

Romba short a mudinjiruchu mam.

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!